Tuesday, October 29, 2013

மலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999

சந்தித்த நாள் - 29.10.1999 - 29.10.2013


இந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...

பொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம்  ரொம்ப அருமை ..

இது ஒரு மீள் பதிவுதான்.ஞாபகார்த்தமா இருக்கட்டுமே அப்படின்னு இன்னிக்கு  இந்த பதிவு... சந்தித்த நாள் 


இதே மாதிரி இன்னொன்ணு கூட கிறுக்கியிருந்தேன்....இம்ப்ரஸ் பண்ண...

இஞ்சினீரியங் பயிலும்
என்னவளுக்கு
இதயத்தினை
இரும்பாய் படைத்துவிட்டான்
இறைவன்...
அதனால்தான் என்னவோ
இளகவில்லை
இன்னும்........

அந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும்.வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான்.சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...

எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி...

அப்புறம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

புத்தாடை உடுத்தி ஜாலியா இருங்க...பார்த்து பட்டாசு வெடிங்க...
கவனம்...பக்கத்துல எப்பவும் ஒரு வாளி தண்ணீர் இருக்கட்டும்.அதே மாதிரி உடல் நலம் குன்றியவர்கள் முதியவர்கள், கர்ப்பிணிகள் இருந்தால் அந்த ஏரியாவில் அதிகம் வெடி வெடிக்காதீங்க...
நல்லபடியா கொண்டாடுங்க...

ஸ்வீட்ஸ் அளவா சாப்பிடுங்க...அதிகமா சாப்பிட்டு ஏதாவது வயித்துல கடா முடா பிரச்சினை வந்தால் தீபாவளி லேகியம் செஞ்சு சாப்பிடுங்க...
இஞ்சி, ஊறவைத்த தனியா மற்றும் சீரகம்  எல்லாவற்றையும் அரைச்சு வெல்லம் சேர்த்து கடாயில் கிளறி நெய் சேர்த்து லேகியம் பதம் வந்தவுடன் ஆறவச்சிடுங்க..அப்புறம் சாப்பிடுங்க...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, October 24, 2013

கோவை மெஸ் - ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோபாலபுரம், கோவை

ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம்
பரபரப்பான கோவையின் கலெக்டர் ஆபிஸ் ரோடு...அலைந்து திரிந்ததினால் என்னவோ பயங்கரமா பசி எடுக்கவே, பக்கத்துல இருக்கிற சி.எஸ் மீல்ஸ் பார்த்தேன்.ஆஹா...இது சைவமாச்சே....நமக்கு கட்டுப்படியாகாதே அப்படின்னு நினைச்சபோதுதான் திடீர் ஃபிளாஷ்......அந்த ஹோட்டல் பக்கத்துல இருக்கிற சந்துல ஒரு நான்வெஜ் ஹோட்டல் இருக்கு ரொம்ப நல்லா இருக்கும்னு எப்பவோ எங்கேயோ கேட்ட ஞாபகம்.அந்த சந்துக்குள்ள போனா எல்லா சுவத்திலயும் சினிமா பட போஸ்டரா ஒட்டி இருக்கு.எம்ஜியார் முதல் இன்றைய சிவகார்த்தியேன் வரைக்கும் போஸ்டரில் இருக்காங்க.அப்புறம் தான் தெரிஞ்சது இந்த ஏரியா சினிமா விநியோகதஸ்கர்கள் இருக்கிற ஏரியா கோபாலபுரம் ஆச்சே.....என்று.சினிமா ஏரியா மட்டுமல்ல, கோர்ட் அருகில் இருப்பதால் என்னவோ அந்த தெரு முழுக்க ஏகப்பட்ட ஜெராக்ஸ் கடைகள், வக்கீல் ஆபீஸ்கள்.பார்த்துக்கிட்டே வந்ததில் பல போர்டுகளின் நடுவே ஹோட்டல் போர்டு கண்ணுக்கு புலப்பட்டது.


பார்த்தவுடன் சந்தோசமாய் வயிறு சிரித்தது.ஹோட்டல் மாடி மீது முதல் புளோரில் இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் 41 வது ஆண்டுகள் என போர்டு தெரிந்ததும்  ரொம்ப ஆச்சரியத்துடன் இவ்ளோ வருசமா எனக் கேட்டுக்கொண்டே எங்களுக்கான இடத்தினில் அமர்ந்து கொண்டோம்.

தலைவாழை இலை போட்டு தண்ணீர் தெளிச்சவுடன் என்ன இருக்கு என்று கேட்டவுடன், இருங்க வாரேன் அப்படின்னு வேக வேகமா உள்ளே ஓடிப்போனார் சர்வர்...என்னடா எதுவுமோ சொல்லாம போறாரே அப்படின்னு நினைச்சு முடிக்கங்குள்ள மனுசன் ஒரு தட்டோட வந்தார்..டிஸ்பிளே தட்டாம்..அதுல எல்லா வெரைட்டியும் இருக்கு.மட்டன் சுக்கா, மீன் வறுவல், மீன் குழம்பு,வஞ்சிரம், காடை வறுவல், சிக்கன் சாப்ஸ், மட்டன் சாப்ஸ் இப்படி நிறைய..கூட ஒரு வார்த்தையும் சொன்னார்...இப்போ புரட்டாசி மாசம் அதனால இந்த தட்டு சைஸ் சின்னதா இருக்கு இல்லேனா இன்னும் பெருசா இருக்கும்னு சொல்லி எங்களோட வாயில் உமிழ்நீரை சுரக்க வச்சார்.

அயிட்டங்களைப்பார்த்ததும் அதிகமாகி போன பசி உணர்வுகளை கட்டுப்படுத்த உடனடியாக மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன், மீன் இதல்லாம் கொண்டு வரச்சொன்னோம்.
சாப்பாடு போட்டுவிட்டு எல்லாவகை குழம்பினையும் கொடுத்தாரு சாம்பாரைத்தவிர.எல்லாம் செம டேஸ்ட்.கொஞ்ச கொஞ்சமாய் ஊத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே மட்டன் சுக்கா வருவல் மணத்தோட வருது.சின்ன சின்ன பீஸா நல்லா வெந்து செம டேஸ்ட்.அப்படியே வீட்டுல செய்யுற மாதிரியே இருக்கு.காரம் எல்லாம் அளவாய் செம டேஸ்ட்ல இருக்கு.ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டதில் சீக்கிரமே காலியாகிப்போச்சு.அப்புறம் பெப்பர் சிக்கன்.இதைப்பத்தி அதிகம் சொல்லவேணாம்.இதுவும் செம டேஸ்ட்தான்.குடைமிளகாய் போட்டு சைனீஸ் ஸ்டைலில் இருந்தது.


குழம்பு மீன் கொண்டு வந்ததில் அது இன்னும் தனி டேஸ்ட்.மீன் குழம்பு சாப்பிட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கு.ரெண்டு தடவை மீன் குழம்பு கேட்டு வாங்கி சாப்பிட்டேனா பார்த்துக்குங்களேன்.அம்புட்டு டேஸ்ட்.அதுவும் மீன் சூப்பர்.வீட்டில செஞ்சு சாப்பிடற மாதிரியே இருக்கு.
எல்லாத்தையும் சாப்பிட்டுக்கிட்டே அப்பப்ப சர்வர்கிட்ட பேச்சு கொடுத்ததில் இந்த ஹோட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் தான் அதிகமாம்.கோர்ட்ல வேலை செய்யுற பியூன் , டவாலி முதல் வக்கீல் நீதிபதி வரைக்கும் இங்க சாப்பிட வருவாங்களாம்.அதுபோலவே காவல்துறை நண்பர்களும்.கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்யுற அதிகாரிகள் வரை இங்க தான் சாப்பிட வருவாங்களாம்.அதேமாதிரி கேஸ் நடத்துவறங்களும் வாய்தா வாங்க வர்றவங்களும் இங்க வருவாங்களாம்.சனி ஞாயிறு மட்டும் அரசு அதிகாரிகளை பார்க்க முடியாது.ஆனா பார்சல் மட்டும் போகுமாம் என உபரித்தகவல்களை சொல்லி முடிக்கவும் நாங்கள் சாப்பிட்டு விட்டு பெருமூச்சு விடவும் சரியாக இருந்தது.



விலை கோவைக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு.ஆனா ருசி அதிகமா இருக்கு.சாப்பாடுன்னா அன்லிமிட்தான் ஒரு வெட்டு வெட்டலாம்.இன்னும் நிறைய அயிட்டம் அங்க இருந்தாலும் சாப்பிட வயித்துல இடம் இல்லாம போயிருச்சு.மீண்டும் அந்த கடைக்கு போகனும்கிற பசியை ஏற்படுத்தி விட்டது ஹோட்டலின் சுவை.புரட்டாசி முடியட்டும் இன்னும் அதிகமான மெனுக்களை மீண்டும் ஒரு வாய் சாரி கை பார்க்கணும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, October 19, 2013

பயணம் - அதிசயம் தீம்பார்க், மதுரை

                    ஆயுத பூஜை விடுமுறை தினங்களில் எங்காவது போலாமே அப்படின்னு ஒரு இடத்துக்கு போனது மதுரையில் இருக்கிற அதிசயம் தீம் பார்க். திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் அதிசயம் தீம் பார்க்கின் ஒன்றிரண்டு விளம்பர போர்டுகள், இதைக் கண்டவுடன் இன்னும் இதயத்துடிப்பும் ஆவலும் அதிகமானது.மதுரையின் நுழைவாயிலான பரவை என்கிற ஊர் வந்தவுடன் கொஞ்ச தூரத்தில் அதிசயம் தீம் பார்க்கினை அடைந்தோம்.ஆரவாரமின்றி பரபரப்பின்றி இருந்த கார் பார்க்கிங்கில் சில பல கார்கள் தத்தம் உறவினர்களை உள்ளே அனுப்பிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.நாங்களும் ஓரமாய் நிறுத்திவிட்டு உள்ளே செல்ல ஆயத்தமானோம்.

           
         தீம்பார்க்கின் உள்ளே நுழையும் குழந்தைகளை சிறுவர்களைபெரியவர்களை கவரும் (மிரட்டும்) வண்ணம் ஒரு கொரில்லா குரங்கு சிலை நம்மை வரவேற்கிறது.அடுத்தபக்கம் தீம்பார்க்கின் ஒட்டு மொத்த மினியேச்சர் மாடல் ஒரு கண்ணாடி பேழைக்குள் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

  நெரிசலே இல்லாத டிக்கட் கவுண்டரில் எங்களுக்குண்டான டிக்கெட்டை பெற்றுக்கொண்டு (ரூ 500 பெரியவங்களுக்குரூ 300 குழந்தைகளுக்கு உள்ளே  நுழைந்தோம்
              
                      பலத்த ஆச்சரியத்துடன் வந்த எனக்கு அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. வெறிச்சோடிக்கிடந்த தீம்பார்க் என் ஆவலை ஆயுட்குறைவாக்கியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்களின் தலை மட்டுப்பட ஆரம்பித்தது.பரந்து விரிந்து கலர்புல்லாய் காட்சியளித்த வாட்டர் கேம்ஸ்கள் ஒரு சில ஆட்களால் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தது.சுத்தி முத்தி பார்த்தாலும் இருநூறுக்கும் குறைவான ஆட்களே மையம் கொண்டிருந்தனர்.




            
                 ஒவ்வொரு விளையாட்டிலும் பெயரளவுக்கு மட்டுமே தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.அதிலும் ரப்பர் டூயுப்களை இட்டு சந்தோசத்தினை அனுபவித்துக்கொண்டிருந்தனர். அடிக்கிற வெயிலில் தண்ணீரின் குளுமை மாறி சுடு நீராய் ஆரம்பித்து சீக்கிரம் ஆவியாகிக் கொண்டிருந்தது இருக்கின்ற கொஞ்சநஞ்ச தண்ணீரும்.மேலிலிருந்து கீழ் சறுக்கி வரும் விளையாட்டினை கொண்டாட ஒவ்வொருவரும் ரப்பர் ட்யூப்கள்ரப்பர் பேடுகள் சுமந்து கொண்டு மேலேறிக்கொண்டிருந்தனர்.தீம்பார்க்கின் வேலையாட்கள் இருவர் ஒவ்வொரு இடங்களிலும் இருக்கிற கொஞ்ச தண்ணீரிலும் வலை போட்டு பிடித்துக்கொண்டிருந்தனர் சேர்ந்துவிட்ட மிதந்த குப்பைகளை...


   
பெரிய பெரிய தீம்பார்க்குக்களில் வீகா லேண்ட்பிளாக் தண்டர் போன்றவைகளில் விளையாண்ட அனுபவம் இருப்பதால் என்னவோ இங்கு இந்த நிகழ்வுகளைக்கண்டதும் மனம் வாடிப்போனது. எதிர்பார்ப்பில் வந்த எனக்கு கொஞ்சம்...கொஞ்சமல்ல ..நிறைய ஏமாற்றமே.அதிலும் அம்மணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இல்லாமல் போனது மிக வருத்தமே.....
               வந்ததுக்காக கொடுத்த காசுக்காக நாமும் தண்ணீரில் இறங்குவோம் என்றெண்ணி லாக்கர் வாங்கி அதில் துணிமணிகளை பொதித்துவிட்டு நீச்சல் டிரஸ்ஸில் (சத்தியமா டூ பீஸ் தான்.....) செயற்கை அலை வரும் வேவ் குளத்தில் நீராட ஆரம்பித்தேன்.அங்கும் குறைவான தண்ணீரே...அடிக்கிற வெயிலுக்கு இதமாய் இருக்கட்டுமே என்று நீர்யானையாய் தண்ணீரில் மூழ்கியும் மூழ்காமலும் கிடந்தேன்.வருவதும் போவதுமாக இருந்த அம்மணிகளை ரசித்தவாறே தண்ணீரில் தவளையாய் கிடந்தேன்

       
பசிக்கிற நேரம் வரவும் ஈரத்துடனே சாப்பாட்டு இடத்திற்கு செல்லஅங்கே வெஜிடபிள் பிரியாணியுடன் ஓடு உரிக்காத முட்டையுடன் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தனர்.(விலைக்குத்தான்) எங்கள் பங்கிற்கு வாங்கிக்கொண்டு டேபிளை அடைந்தோம்.முட்டையை உரித்து அதை வெஜிடபிள் பிரியாணியில் வைத்து அசைவ பிரியாணியாய் சாப்பிட ஆரம்பித்தோம்.


           
தண்ணீர் குறைவான காரணத்தினால் அதிகமாய் விளையாட வாட்டர் கேம்ஸ்களில் ஈடுபாடு இல்லாததால் ட்ரை கேம்ஸ் ஆட கிளம்பினோம்.ராட்டினம்கப்பல்ஸ்விங் இது போன்று நிறைய இருக்கின்றன.இயங்குகின்ற விளையாட்டு சாதனங்களை விட பழுது பட்டிருக்கிற சாதனங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.எது ஓடக்கூடியதோ அதிலே அனைவரும் பயணித்தோம். பாதுகாப்பு என்பது கொஞ்சம் கேள்விக்குறியாக இருக்கிறது அனைத்து விளையாட்டு சாதனங்களிலும்.ஆனாலும் ரசிக்க வைக்கிறது ஒரு சில விளையாட்டுக்கள்.








இருக்கிற விளையாட்டுக்களை விளையாண்டு விட்டு திரிலியம் என்கிற போர்டு பார்த்து அங்கே சென்றோம்.மினி தியேட்டர் அது. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பார்த்த 6டி, 7டி காட்சிகளை இங்கு 2டியில் காட்ட மனம் இன்னும் பாதிப்படைந்தது.ஆனாலும் ரசிக்க வைத்தது ஒரு சில காட்சிகள்.புதிதாய் காண்பவர்களுக்கு இது ஒரு அதிசயமே..

அடுத்து போனது போட் ஹவுஸ்...இதிலும் ஒரு சில போட்கள் உதவாக்கரையாக கரை மேல் இருந்தது அதிசயமே..அங்கிருந்த நீந்தக்கூடிய போட்களில் மிதிப்பவைஸ்டீரியங் போன்ற ஏதாவது ஒன்று உடைந்திருந்தது அதிசயமே..ஆனாலும் போட் எடுத்துக்கொண்டு நீர் மேல் பயணித்தோம் ஆபத்தில்லாமல்.ஏனெனில் மூன்றடிக்கும் குறைவான ஆழமே இருப்பது அதிசயமே...

 மொத்தத்தில் இது அனைத்தும் அதிசயமே..புதிதாய் வருபவர்களுக்கு மட்டும் இது அதிசயம்.குழந்தைகள் நீரில் விளையாட எப்போதுமே ஆசைப்படுவார்கள்.அந்த மாதிரி வரும் குழந்தைகளுக்கு  இந்த இடம் அதிசயமே.குடும்பத்துடன் வந்து விடுமுறையை கொண்டாட வருபவர்கள் திரும்பி இனி வருவது அதிசயமே..அதே மாதிரி தள்ளிக்கொண்டு, கரக்ட் பண்ணிக்கொண்டு வரும் நபர்களுக்கு இது ஆகச்சிறந்த அதிசயம்.(ஏன்னா மக்கள் யாரும் இருக்க மாட்டாங்க) பாதுகாப்பு வசதிகள் என்பது குறைவுதான்.விருப்பம் இருப்பவர்கள் சென்று வாருங்கள்.
               தண்ணீரில் திரில் ரைடு செல்பவர்கள் தத்தம் நலன் காப்பது முக்கியம்.வளைந்து வளைந்து செல்லும் அனைத்து வாட்டர் கேமிலும் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது.சறுக்கிவிழும் பகுதியில் ஆங்காங்கே ஜாயிண்ட் செய்த பிளாஸ்டிக் போர்டுகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன.ஆட்களுக்கும் சேதாரம் ஏற்படுவது அடிக்கடி நிகழ்கிறது.
                     ஒரு வாட்டர் கேமில் மேலிருந்து ட்யூபில் வைத்து தள்ளிவிடுவார்கள் அது வழுக்கிக்கொண்டு வளைந்து வளைந்து வரும். ரொம்ப திரில்லிங்காக இருக்கும்.ஆனால் அந்த விளையாட்டினை பார்க்க நமக்கு படுபயங்கரமாக இருக்கிறது.அன்னிக்கு அப்படித்தான் ஒரு வாலிபர் மேலிருந்து ட்யூபில் அமர்ந்து வருகிறார்.இங்கிருந்து பார்த்தா வளைந்து வளைந்து வரும் அந்த கேமில் முதலில் ட்யூப் மட்டும் தான் வருது.ஆளைக்காணோம்.சற்று நேரத்தில் தவழ்ந்தபடி அந்த வளைவுகளில் தவ்வி தவ்வி வந்து தண்ணீர் குளத்தினுள் விழுகிறார்.அதற்குள் மேலிருந்து இன்னொருவர் வந்து அவர்மேல் விழுந்த காட்சி காமெடியாக இருந்தாலும் ஆபத்தாக இருக்கிறது.
              இது போன்ற இடங்களில் முதலுதவி பெட்டி அவசியம்.ஆனால் அது இருப்பதை காணமுடிவதில்லை. அதுபோலவே ரப்பர் ட்யூப்களும் பஞ்சராகி கிடக்கின்றன.அதற்கு மட்டும் உடனடி முதலுதவி அளிக்கப்படுகிறது. ஆம்....அதைத் தைப்பதற்கென்றே ஒரு குழு மரத்தடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.மனுசங்களுக்கு மட்டும் இல்லை மருத்துவக்குழு

          
மொத்தத்தில் காசுக்கு பிடிச்ச கேடு......விலை கூட அதிகம்தான்.பராமரிப்பு கூட அதிசயமாக நடக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, October 15, 2013

கோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை

தாஸ் லாட்ஜ் கேண்டீன்
கோவையில நஞ்சப்பா ரோடு உப்பிலிபாளையம் ஏரியா அப்படின்னாலே மோட்டார் பம்பு உதிரி பாகங்கள் எலக்ட்ரிகல் சாமான்கள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் தான் ஞாபகத்துல வரும்.ஆனா அங்கயும் ஒரு ஹோட்டலோட புரோட்டா ஞாபகத்துக்கு வரும்.அதுதான் தாஸ் லாட்ஜ் கேண்டீன்.
கிட்டத்தட்ட ரொம்ப வருசமா இருக்கு இந்த கடை.சின்ன கடை தான்.டீ பஜ்ஜிக்காக ஆரம்பித்த கடை இன்று ஒரு ஹோட்டலாக உருவெடுத்து இருக்கிறது.உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடம் குறைவுதான்.ஆனால் அதைப்பொருட்படுத்தாமல் நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு செல்லும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம்.காலையில் இருந்து இரவு வரைக்கும் ஓயாமல் வியாபாரம் நடக்கும் இடம்.
காலையில் டீ காபி டிஃபன், போண்டா பஜ்ஜி வகைகளுடன் ஆரம்பிக்கிற இந்த கடை இரவு வரை நீடிக்கிறது.மதியம் விதவிதமான பலவகை சாதங்களுடன் பொட்டலமாக கட்டி விற்கின்றனர்.தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம் என நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன.
அதே மாதிரி எண்ணெய் பலகாரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி, உளுந்து வடை, மசால் வடை, முட்டைப்போண்டா, மிளகாய் பஜ்ஜி, என ஏகத்துக்கும் இருக்கிறது.பலகாரங்களின் தட்டு காலியாக காலியாக அனைத்து வகைகளும் அவ்வப்போது பக்கத்துலயே இருக்கும் போண்டா மாஸ்டரின் கண்ணும் கருத்துமான கைவண்ணத்தில் சூடாக நிரம்பிக்கொண்டே இருக்கும்.
மதியவேளைக்கு ஒரு பொட்டலம் சாப்பாடு வாங்கிக் கொண்டு கூட ஏதாவது ஒரு பலகாரத்தினை வாங்கிகொண்டு இருக்கிற இடத்தில் அமர்ந்தோ நின்று கொண்டோ சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.அனைத்து சாப்பாடுகள் வெளியில் தயாராகி இங்கு விற்பனைக்கு மட்டும் வருகின்றன அதுவும் சூடாக...
சாயந்திர வேளையில் இங்கு தயாராகும் புரோட்டாக்கள் செம டேஸ்டாக இருக்கும்.மாலை 4 மணி முதல் புரோட்டா விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.சுடச்சுட புரோட்டா சாப்பிடனுமா இந்த கடைக்கு போங்க.குருமா, முட்டைமசால், சிக்கன் குருமா என எல்லாம் இருக்கிறது புரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள...



இட வசதிமட்டும் தான் இல்லை.ஆனால் கூட்டம் அதைப்பத்தி கவலைப்படுவதாக இல்லை.நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு தட்டினை ...இடத்தினை காலி செய்கின்றனர்.
பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் சேட்டன்கள் அதிகம் இங்கு குவிவதைப் பார்க்கலாம்.குறைந்த விலை, செமத்தியான டேஸ்ட் இருப்பதால் கூட்டம் எப்பவும் இருக்கிறது.அதுமட்டுமல்ல அந்த ஏரியாவில் இருக்கிற அத்துணை கடைக்காரர்களும் ஆபத்பாந்தவனாய் இருக்கிறது இந்த கடை.அந்த ஏரியாவில் புகழ்பெற்ற கடை இது ஒன்றுதான்.

நேசங்களுடன்
ஜீவான்ந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, October 12, 2013

பயணம் - கொடைக்கானல்...ஒரு பார்வை

திண்டுக்கல்லில் இருக்கும் போது தீடீர்னு ஒரு யோசனை..இவ்ளோ தூரம் வந்திருக்கோமே......கொடைக்கானல் வேற இங்க பக்கத்துல தானே இருக்கு ஏன் போகக்கூடாது அப்படின்னு.நாம என்ன ஹனிமூன் கப்பிள்ஸா...ரொம்ப நாள் முன்னாடியே ரூம்லாம் புக் பண்ணிட்டு போறதுக்கு......சரி கிளம்புவோம்..அப்படின்னு கூட திண்டுக்கல் நண்பர்களையும் இழுத்துப் போட்டுக்கிட்டு கிளம்பினேன்.மாலை 4 மணி ஆயிடுச்சு வத்தலகுண்டு போகவே.மலை ஏறதுக்குள்ள இருட்டிடும் அதனால இங்கயே எல்லாத்தையும் முடிச்சிட்டு போயிடுவோம்னு நம்ம கடைக்கு போய் சாப்பிட்டுவிட்டு வேணுங்கிறத பார்சல் வாங்கிட்டு மலை ஏற ஆரம்பித்தோம்..அந்த மாலை வேளையிலும் பசுமை இன்னும் மாறாமல் இருந்தது.


வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் இருமருங்கிலும் அடர்ந்த பசுமை வரவேற்றது எங்களின் வருகையை...குளிர் காற்று மெலிதாய் வீச ஆரம்பிக்க வெகு விரைவிலேயே பெருமாள் மலை அடைந்து விட்டோம்.. ஆனாலும் இருட்டாகி விட்டது.குளிருக்கு ஏத்த போர்வையை உள்ளே போர்த்தி இருந்ததால் அதிகம் குளிர் தெரியவில்லை.பனி படர்ந்த இரவினில் இனி எங்கேயும் சுத்த முடியாது என்பதால் நண்பரின் காட்டேஜ்க்கு குடியேறினோம்.
இரவின் குளிரில் மித கதகதப்பாய் உணர்ந்தோம்.நடு நிசி இரவு வரை நீண்ட எங்களின் முந்தைய வரலாறுகளை உணர்ந்து உருவகித்து பேசி உண்டு களித்தோம்.அப்படியே தூங்கிப்போனோம்.
காலை சுள்ளென்று சூரியன் விழிக்க நாங்கள் உடனடியாக உதித்துக் கொண்டோம்.அந்த காலை வேளையிலும் உடலினை சுறுசுறுப்பாக வைத்திருக்க கைவசம் கொண்டிருந்த மருந்தினை ஒரு லார்ஜ் விழுங்கிக்கொண்டோம்.குளிருக்கு பழக்கமாகிப்போனது உடலும் மனசும்.
நேற்றைய மகிழ்ச்சியினை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொண்டு குளித்துவிட்டு கிளம்ப ஆரம்பித்தோம்.
                சுற்றுலாப்பயணிகள் வந்து சேராமல் துடைத்து வைத்தது போல கொடைக்கானல் ரோடுகள் இருக்க,சுற்றும் முற்றும் வேடிக்கைப்பார்த்தபடியே அதில் பயணித்தோம்.
கொடைக்கானல் வந்ததுக்காக ஒரு சிறு சுற்றுலாவாக மட்டும் பார்ப்போம் என்றெண்ணி போனது போட் ஹவுஸ்...
அமைதியாய் பச்சைப்பசேலென்று குளம் இருக்க வாக்கிங் செல்பவர்கள் இயற்கையை ரசித்து சுத்தமான காற்றினை சுவாசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.இன்னும் வியாபாரத்தினை துவக்காமல் இழுத்துப் போர்த்தியபடி கடைகள் இருக்க நாங்கள் முன்கூட்டியே வந்து விட்டதை எண்ணி ஆச்சர்யப்பட்டோம்.

அந்த காலை வேளையிலும் குதிரைகளும் அதன் உரிமையாளர்களும் இன்றைய வரும்படிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.கூடவே தள்ளுவண்டிக் கடைக்காரரும்....பொழுது போகாமலிருக்க தினத்தந்தியை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்..

அந்த இடத்தில் நம் வருகையினைப் பார்த்தவுடன் குதிரைகளுக்கும் அங்கிருந்த ஜாக்கிகளுக்கும் அப்படி ஒரு சந்தோசம்  தெரிந்தது அவர்களது முகத்தில்.முதல் போணியாய் நான் ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து தேசிங்கு ராஜாவாய் அமர்ந்தேன்.குதிரை முன்னும் பின்னும் போக ......இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வெயிட் தாங்காமல் அலறிவிடுமோ என்றெண்ணி, ஒரு வாயில்லா ஜீவனை வதைத்த பாவத்திற்கு ஆளாக வேண்டாமே என்று உடனே இறங்கிவிட்டேன்.அந்த சைக்கிள் கேப்பிலும் என் வரலாறினைப் பதித்துக் கொண்டேன் புகைப்படங்களாய்...

அப்புறம் அங்கிருந்த ஒரு கடையில் குளிருக்கு சூடாய் டீ சாப்பிட ஆரம்பிக்கையில் கடந்து சென்ற ஒரு காலேஜ் டூர் பஸ்ஸின் அம்மணிகளின் சத்தம் எங்கள் காதைப்பிளந்தது.ரசித்துக்கொண்டே ருசிக்கையில் எங்களை தாண்டிச் சென்ற ஒரு வட இந்திய ஹனிமூன் கப்பிள்ஸின் பாவனைகள் நேற்றைய இரவின் மிச்சங்களை இன்றும் தொடர்வதற்கான அறிகுறிகளை அவர்களின் நெருக்கத்தில் கண்டோம். அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே இளம் சூடான புகை வெளியேறிக் கொண்டிருந்தது டீ டம்ளரிலிருந்து மட்டுமல்ல....
             மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தோம்.திரும்ப திண்டுக்கல் செல்ல ஆயத்தமானோம்.கிளம்பி வருகையில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவியின் அருகே அம்மணிகள் வரிசை கட்டி ரசித்துக்கொண்டிருக்க ஆட்டோமேட்டிக்காய் வண்டி நின்றது.இறங்கி அருவியை ரசித்துவிட்டு (?) நம் வரலாறுக்காக புகைப்படங்களை எடுத்து விட்டு கீழிறங்கினோம்.

வரும் வழியில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இது மன்மதன் அம்பு பாறை என நண்பன் சொல்லவே...காரணம் கேட்க இந்த இடத்தில் தான் மன்மதன் அம்பு படம் சூட்டிங்க் எடுத்தார்கள் என்றான்.
அங்கயும் ஒரு சில போட்டோக்களை எடுத்துவிட்டு திண்டுக்கல் வந்தடைந்தோம்.மீண்டும் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே இந்த பயணம் இருந்தது.ஏனெனில் பார்க்கவேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...