Friday, July 31, 2015

கோவை மெஸ் - மங்களவிலாஸ், புதிய பேருந்து நிலையம் எதிரில், சேலம் - 4

                              திருப்பத்தூரில் இருந்து சேலம் வந்தபோது சாப்பிடலாம்னு வண்டியை ஓரம் கட்டின இடம் சேலம் பஸ் ஸ்டாண்ட்.பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்க்க ஒவ்வொரு சந்துலயும் ஏதாவது ஹோட்டல் இருக்கும்.ஒரு சில ஹோட்டல்களில் தான் நல்ல காரஞ் சாரமா இருக்கும்.ஏற்கனவே சேலம் கொஞ்சம் ஹாட்டான இடம்..அடிக்கிற வெயிலுக்கு நல்லா காரஞ்சாரமா சாப்பிட்டா மூக்குல தண்ணீ வரும்.....அப்படிப்பட்ட காரஞ்சாரமான ஹோட்டல் தான் இந்த மங்களவிலாஸ்.சேலத்துல மொத்தம் ஐந்து கிளைகள் வச்சிருக்காங்க... நாங்க போனது செல்வி மெஸ் இருக்கிற சந்தில்...செல்வி மெஸ்ஸில் ஏற்கனவே சாப்பிட்ட அனுபவம் இருப்பதாலும், மங்களவிலாஸில் டேஸ்ட் கொஞ்சம் கூடுதலாய் இருப்பதாலும் மீண்டும் மங்களவிலாஸ் கடைக்கே சென்றோம்....
ஒரே ஒரு ஒத்த போஸ்ட்..அதுல ஏகப்பட்ட போர்டு போட்ட மங்களவிலாஸ் ஹோட்டல் நம்மை வரவேற்கிறது.
                     உள்ளே நுழைந்ததும் சாம்பிராணி மணம் மணக்க மணக்க சாப்பிடும் ஹால் இருக்க, ஒரு ஒரமாய் டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்தோம்.சர்வர் வாழை இலை போடவும், பிரியாணியும், நாட்டுக்கோழி சுக்கா வருவலும், ஏற்கனவே இந்த ஹோட்டலில் மிக டேஸ்டாக குடல் ஃப்ரை சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் குடல் ஃப்ரையும் சொல்ல, ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.
                        பிரியாணி எப்பவும் போலதான்.சீரகசம்பா அரிசியில் மட்டன் துண்டுகள் நன்றாக பஞ்சு போல மென்மையாக வெந்து இருக்க, சாப்பிடவும் சுவையாக இருந்தது.சுக்கா குழம்பினை கொஞ்சம் தொட்டு பிரியாணியோடு சாப்பிட செம டேஸ்ட் தான்..என்ன திண்டுக்கல்லில் தருவது போல் கத்திரிக்காய், மட்டன் எலும்பு துண்டுகள் போட்ட தாழ்ச்சா தருவதில்லை. வெறும் தயிர் வெங்காயம் மட்டும்தான்..ஆனால் சுக்கா குழம்போடு பிரட்டி சாப்பிட பிரியாணி ஏகத்திற்கும் இறங்குகிறது உள்ளே...
நாட்டுக்கோழி சுக்கா...நன்கு கெட்டியான மசாலா சேர்த்த குழம்புடன் சுக்கா செம டேஸ்ட்...பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரோ சூப்பர்....
அடுத்து குடல் ஃப்ரை...
                      சான்சே இல்லை....இப்படி ஒரு டேஸ்ட் இருக்குமா என்றால் அது இந்த குடல் ஃப்ரை டேஸ்ட்தான்...குடல் தோசைக்கல்லில் போட்டு நன்கு வறுத்து மசாலாவெல்லாம் சுண்டவைத்து பெப்பரும் காரமும் நன்கு கலந்து சூடாய் சாப்பிட ......செம டேஸ்ட்...கூட அந்த கறிவேப்பிலை... ஆஹா...செம பொருத்தம்...குடல் கறி என்றாலே கொஞ்சம் குடலின் ஒரு வித வாசம் வீசும்...அந்த மணம் கொஞ்சம் கூட இல்லை..நன்கு மசாலா சுண்ட வைத்தது சாப்பிட சாப்பிட ஏ..ஒன்...குடலின் ஒவ்வொரு துண்டும் செம டேஸ்ட்...நன்றாக இருக்கிறது குடல் ஃப்ரை....என்ன...அளவுதான் குறைவாக இருக்கிறது...ஆனால் டேஸ்ட்...செம...
                    இதெல்லாம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் சாதம் வாங்கி ரசம் ஊற்றி சாப்பிட்டால் அமிர்தம் தான்...நன்கு ஹெவியாய் சாப்பிட்டு இருந்தால் நன்கு ஜீரணமாகும்.அதுவும் ரசம் செம டேஸ்ட்...எக்ஸ்ட்ரா ஒரு கிளாஸ் வாங்கி குடித்துவிட்டுதான் இலையை விட்டு.... இடத்தினை விட்டு..... எழுந்திரிச்சேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
                இந்த ஹோட்டலில் நாட்டுக்கோழி மட்டும் தான் உபயோகப்படுத்துகிறார்கள். பிராய்லர் கிடையாது.அதனால்தான் விலையும் சற்று கூடுதல்.
                    சாப்பாடு சாப்பிட்டால் விதவிதமான குழம்பு வகைகள் உண்டு..அவை அனைத்தும் ரொம்ப கெட்டியாய் மிக சுவையாய் இருக்கும்.அவ்வளவு டேஸ்ட்...

அந்தப்பக்கம் போனால் கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க...
குடல் ஃப்ரையும், அந்த ரசமும் சான்சே இல்ல.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Tuesday, July 28, 2015

கண்ணீர் அஞ்சலி

மரணத்தை வென்றது யாருமில்லை...
அதற்கு நீயும் விலக்கில்லை....
பாரதத்தாயின் தவப்புதல்வனே.....
உனது ஆன்மா சாந்தியடையட்டும்......

ஆழ்ந்த இரங்கல்கள்.....
இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 22, 2015

கோவை மெஸ் - சேட் டீக்கடை, மூணு ரோடு,சூரமங்கலம் மெயின்ரோடு, சேலம்.

                            சேலம் மூணு ரோடு..கோவையில் இருந்து வருகிற பேருந்துகள் இந்த வழியாகத்தான் பஸ் ஸ்டாண்ட்க்குச் செல்லும்.அப்படித்தான் நானும் வந்து இறங்கினேன் இங்கு.இறங்கிய நேரம் என்னவோ மாலை நேரம்.கோவையில் இருந்து மூன்று மணி நேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது ஒரு மாதிரியாயிருக்க ஆதலால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பக்கத்திலிருந்த டீக்கடைக்கு சென்றேன்.ரொம்ப சாதாரண டீக்கடை.பெரிதாக பேக்கரி போன்று ஆடம்பரமில்லாத கடை. கடைக்குள்ளும் நுழையவில்லை.ரோட்டில் இருந்தபடியே டீ ஆர்டர் பண்ணினேன்.நமக்கு தேவை டீ தானே..கடை எப்படி இருந்தால் என்ன  என்கிற மனோ பாவத்துடன் ஒரு டீ சொன்னேன்.மாஸ்டரும் டீ தயாரிப்பதில் மும்முரமாய் இருக்க நானோ வெளியே ரோட்டை வேடிக்கைப்பார்த்தபடி இருந்தபோது, சாப்....சாய் ரெடி என குரல் கேட்க,  அட... சேட்டுக்கடை !.. என்றபடியே வாங்கி டீ சூடான டீயை பருக,  குடித்துப்பார்த்ததில் டீ செம டேஸ்ட்.ஏலக்காய் மணம் தூக்க டீயும் நல்ல திக்காக இருக்க செம டேஸ்ட்.ஒரு சாதாரண டீ தான்..இதை இவ்வளவு டேஸ்டாக போட முடியுமா என்று ஆச்சர்யப்பட்டு கடைக்குள் நுழைய, கடையின் டேபிளில் ஏகப்பட்ட வெரைட்டியான பலகாரங்கள்...

                                              எல்லாம் அவங்க ஊர் பலகாரம் போல.அத்தனையும் அந்த இடத்திலேயே செய்கிறார்கள்.கொழுக்கட்டை வடிவில் ஒரு இனிப்பு பலகாரம், அப்பளம் போன்று ஒரு மொறு மொறு கார பலகாரம், ரவா லட்டுகளில் இரண்டு வகை , மிக்சர் என தட்டுக்களில் பரப்பி வைத்து இருந்தனர்.டீயும் செம டேஸ்டாக இருக்க, சூடாய் குடித்துக்கொண்டே அப்பளம் ஒன்றை எடுத்துக்கொறிக்க, அதுவும் செம டேஸ்ட்.கொஞ்சம் கொஞ்சமாய் அப்பளம் கொறித்து, ஒவ்வொரு மிடக்காய் டீயும் கலந்து சாப்பிட ஆஹா...செம டேஸ்ட்....





                         டீ சாப்பிட்டு முடித்தவுடன் அந்த கொழுக்கட்டை இனிப்பு பலகாரத்தினை சாப்பிட்டு பார்க்க, உள்ளே தேங்காய் சேர்த்து சுவையாக செய்திருந்தனர்.நன்றாக இருக்கிறது சாப்பிட.டீயும் பலகாரமும் சாப்பிட்டுவிட்டு, அடுத்த தெருவில் இருக்கும் நாங்கள் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் இந்த கடையைப்பத்தி சொன்ன போது, அவர்களும் நாங்களும் அங்கு தான் டீ குடித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஒரே கோரஸாய் சொன்னார்கள்..ஒரு வாரம் அங்கு நம் ஆட்கள் வேலை செய்தபோது அந்த கடையில் தான் காலை மாலை இருவேளையும் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் என்பது எக்ஸ்ட்ரா தகவல்..
டீ அவ்ளோ அருமை.ஏலக்காய் மணம் வீச மிடக்கு மிடக்காய் குடிக்க ஆஹா...அருமை...
இந்தக்கடைக்கு போர்டெல்லாம் இல்லை.கடை பேரு என்னவென்று எழுதட்டும் என கேட்க, சேட்டான்கடை என்று எழுதுங்கள் என்று சொன்னார் கடைக்காரர்.போட்டோவில் இருப்பவர்கள் தான் டீக்கடைக்கு சொந்தக்காரர்கள்...
மூணுரோட்டில் இருக்கிறது இந்த போர்டில்லாத சேட்டான் கடை...(கடைக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் வேற இருக்கு...அங்க கூட போயிருக்கலாம் தான்..ஆனா வேலை முக்கியமாச்சே.....வேலை முடித்துவிட்டு திரும்பி வரும் போது அந்த டாஸ்மாக்கில் தான் நம்ம பகார்டி வாங்கினேன் என்பது வேற விசயம் )

நேசங்களுடன் 
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, July 2, 2015

கோவை மெஸ் - திருமூர்த்தி டீ ஸ்டால், இட்லி கடை, அவினாசி

                கோவையில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், என்னுடன் பயணித்த நண்பர் ஒருவருடன் பொதுவாய் அரசியல் முதல் சாப்பாடு வரை அலசியபடி வந்து கொண்டிருக்க லேசாய்ப்பசி எடுக்க ஆரம்பித்தது.அப்போது தான் அவர் சொன்னார், அவினாசியில் ஒரு ஹோட்டல் இருக்கிறது ஆனால் சைவம் மட்டும் தான்...இட்லி, தோசை இது மட்டும் தான் கிடைக்கும்.இட்லி குருமா அவ்வளவு டேஸ்டாக இருக்கும் என சொல்ல, காலை நேர உணவை இங்கு முடித்து கொள்ளலாம் என பைபாஸில் வந்து கொண்டு இருந்த நாங்கள் அவினாசிக்கு வண்டியை ஓரங்கட்ட ஆரம்பித்தோம்.
                    அவினாசியில் இன்னும் பரபரப்படையாத காலைப்பொழுது..மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.பி.எஸ் என் எல் ஆபிஸ் எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு ரோட்டை கடந்து அந்த ஹோட்டலுக்கு வந்தோம். ஹோட்டல் என்கிற அமைப்பே இல்லை.ஒரு டீக்கடை தான்.ஓடு போட்ட சின்ன வீடு...முன்புறம் டீ பாய்லர்...ஆனால் அந்த ஹோட்டல் முன்பு வித விதமான கார்களின் வரிசை.

ஆச்சர்யமாகி கடைக்குள் பார்த்தால் உள்ளே நான்கு பெஞ்ச் போடப்பட்டிருக்கிறது. காலையிலிலேயே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. இரண்டு சீட் மட்டும் காலியாக இருக்க, நாங்கள் அமர்ந்து கொண்டோம்...ஒரு பத்து நிமிட்த்திற்குள்....வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, கடையின் ஓனர் இலை அனைவருக்கும் வைத்தார்.பின் தண்ணீர்.பின் ஆளுக்கு இரண்டிரண்டு இட்லி.பின் சட்னி , சாம்பார்..அதாவது குருமா...


ஒரு பந்தியில் எப்படி பரிமாறுவார்களோ அப்படி அனைவருக்கும் வரிசையாய் பரிமாறிக்கொண்டிருந்தார்..
இட்லிக்கு அந்த குருமா செம....அரைத்துவிட்ட தேங்காயுடன் சோம்பு பட்டை வாசத்துடன் மிக மிக செம டேஸ்ட் உடன்...இட்லிக்கு ஏதுவாக அந்த குருமா...இட்லியும் சாப்டாக இருக்க, இரண்டும் ஒரு சில நொடிகளில் இலையை விட்டு காணாமல் போய்விட்டிருந்தது.அடுத்த சில நிமிடங்களில் ஆவி பறக்க தோசை ஒவ்வொன்றாய் இலையில் வைத்து விட்டு பின் சட்னி சாம்பார் என வரிசைகட்டி வர, ஒருத்தரே தான் அத்தனையும் பரிமாறுகிறார்.
தோசைக்கும் அதே குருமா தான்...இரண்டும் செம காம்பினேசன்.சாப்பிட்டுக் கொண்டிருக்க அதற்குள் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கிறது.காத்திருக்க ஆரம்பிக்கின்றனர்.முதல் பந்தி முடிந்தவுடன் அடுத்த பந்தி ஆரம்பிக்கிறது.சில நிமிடங்களில் மீண்டும் நிறைகிறது அந்த நான்கு பென்ச்கள்.மீண்டும் அதே வரிசையாய் பரிமாறப்பட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.


நாங்கள் இரண்டு இட்லி இரண்டு தோசை சாப்பிட்டு விட்டு பொறுமையாய் வெளியேறினோம்.நல்ல சுவை, சுடச்சுட தோசை...சூடான குருமா..நன்றாக இருக்கிறது.
குருமா சாப்பிட்டவுடன் உடனே சொன்னேன்..இந்த மாதிரி தான் என் அம்மா குருமா வைப்பார்கள் என்று....
கடையை விட்டு வெளியேற வரிசையாய் நிறைய கார்கள் வருகின்றன அவர் கடைக்கு ஒரு கெளரவத்தினை அளிக்கின்றன.

நண்பர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அங்கு சாப்பிட்டு வருகிறாராம்.டேஸ்ட் அப்படியே தான் இருக்கிறது எனவும், ஒரு சில முகூர்த்த தினங்களில் அரைமணி நேரம் கூட காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவாராம்.கார்களின் வரிசை நிறுத்தக்கூட இடம் இருக்காதாம்...

அவினாசி போனா சாப்பிட்டு பாருங்க...செம டேஸ்ட்...

பி எஸ் என் எல் ஆபிஸ் அருகில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...