விநாயகர் சதுர்த்தி
எங்கள் ஏரியாவில் நண்பர் ஒருவர் பணம் வசூல் செய்து விநாயகர் சிலையெல்லாம் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை மிகச் சிறப்பாக நண்பர்கள் மற்றும் அந்த ஏரியா மக்களோடு கொண்டாடினார்கள்.இந்த விழாவின் செலவுத் தொகையை அவரிடம் கேட்ட போது மொத்த செலவு 138000 ஆனதாம்.அவரது தெருவிற்குட்பட்ட பகுதியில் மட்டும் இந்த தொகை.இது ஒவ்வொரு ஏரியாவிற்கும் சிலையின் வடிவம், டெகரேசன் மற்றும் வாணவேடிக்கை இவைகளை பொறுத்து விலை மாறும்.கோவையில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டிருக்கின்றன.(இன்னும் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை).
இவைகளின் ஒட்டு மொத்த மதிப்பினை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.தண்ணீரில் கரைந்து போன தொகையின் மதிப்பை கண்டால் கண்ணீரே வந்து விடும்.தண்ணீரில் கரைவது மட்டுமல்லாமல் சுற்றுப்புறம் மாசு அடைவதும் உண்மைதான்.
இவ்வளவு செலவு பண்ணி நகரை பரபரப்பிற்குள்ளாக்கி, சுற்றுப்புற சூழலையும் மாசுபடுத்தி, மக்களை நெரிசலில் அல்லல்பட வைக்கும் விழாவினை கொஞ்சம் மாற்றி செய்யலாமே..
உங்கள் தெருவில் வசூல் செய்த பணத்தில் சின்னதாய் ஒரு விநாயகர் போதும்.அதுவும் களிமண்ணால் செய்ததாய் இருக்கட்டும்.
அந்த தெருவில் உள்ள பள்ளி (அ) கல்லூரி செல்லும் யாருக்காவது, கல்வி உதவியை அளியுங்கள்.
ஏழைப் பெண்களின் திருமணத்தை நடத்தி வையுங்கள்.
மாற்றுத்திறனாளிகள் யாராவது இருப்பின் அவர்களுக்கு கை கொடுங்கள்.
முடியாமல் இருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவியை அளியுங்கள்.
உங்கள் தெருவினை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
மருத்துவ முகாம் அமைத்து நோய்களை கண்டறிந்து குணமாக்க உதவி புரியுங்கள்.
விநாயகர் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்யுங்கள்.
அரசாங்கம் செய்து தராத வேலைகளை இந்த தொகையில் செய்து கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு ஏரியாவும் செய்தால் ஒட்டு மொத்த ஊரும் நன்றாக மாறிவிடும்.இப்படி எவ்வளவோ செய்யலாம்.
மூன்று நாட்கள் தெய்வமாய் வணங்கிவிட்டு, பின் அதை சித்ரவதை செய்து தண்ணீரில் மூழ்கடிப்பதை எங்ஙனம் ஏற்றுக்கொள்வது.ரசாயன கலவைகளால் குளங்கள் ஏரிகள் ஆறுகள் கடல் மாசு அடைவதையும் தவிர்க்கலாமே.
அடுத்த வருடமாவது சிக்கனத்தை கடைப்பிடியுங்கள்.
ஊர் கூடி தேர் இழுங்கள். நாமும் சுத்தமாவோம்.நாடும் சுத்தமாகும்.
உங்கள் பக்தி என்பது நாட்டின் நலனிலும் இருக்கட்டுமே.