Friday, September 28, 2012

கோவை மெஸ்: மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, காந்திபுரம்

மதுரை அம்மா மெஸ்:கோவை
காந்திபுரத்துல இருக்கும் போது நம்ம நண்பர் போன் போட்டு நாக்குலாம் செத்து போச்சு.கொஞ்சம் கூட சுறு சுறுன்னு இல்ல.எங்காவது போய் நல்லா காரஞ்சாரமா சாப்பிடலாமா அப்படின்னு கேட்க....ஒரே சந்தோசம் நமக்கு......அட...ஆடு தானா வந்து சிக்குதே அப்படின்னு..
சரி வா மச்சி போலாம் அப்படின்னு போன ஹோட்டல் மதுரை அம்மா மெஸ்.காந்திபுரம் பவர் ஹவுஸ் ரோட்டில் இருக்கிறது.சின்ன ஹோட்டல் தான்.உள்ளே நுழையும் போதே மணம் மூக்கை துளைக்கிறது.
 
  
வந்த சர்வர் ஆட்டுல இருக்கிற அத்தனை உருப்படியையும் ஒவ்வொண்ணா சொல்ல சொல்ல நமக்கோ எச்சில் ஊறுது...ஆனா நம்ம கூட வந்தவரோட கை அப்பப்ப தானா அவரோட பாக்கெட்டை தடவி பார்க்க ஆரம்பித்தது. சரி பயபுள்ள பயப்படுது போல அப்படின்னு நினைச்சி சும்மா லைட்டா ஆர்டர் பண்ணினேன்.
மட்டன் கோலா உருண்டை, மட்டன் சுக்கா, குடல், வஞ்சிரம் மீன், அப்புறம் முக்கியமா சாப்பாடு...
 
மட்டன் சுக்கா நல்லா இருக்கு நிறைய எண்ணையோடு.சுவை கொஞ்சம் பரவாயில்லை. குடல் கறி....ரொம்ப அருமை.கொஞ்சம் கூட அந்த வாசனை இல்லாமல்... மிக அருமையாக....வதக்கிய வெங்காயத்துடன் மசாலா மட்டுமே சேர்த்து ரொம்ப நன்றாக இருந்தது.மிக ட்ரையாக இருக்கிறது.அருமை..
 
கோலா உருண்டை நன்றாக இருந்தது.மிக நைசாச அரைத்து ரொம்ப சுவையுடன் இருக்கிறது. அப்புறம் நம்ம பேவரைட் வஞ்சிரம் செமையா இருந்தது.சுட சுட சாப்பிட்டதில் ரொம்ப சுவை வஞ்சிரம் மீன் சைசில் சின்னதாக இருந்தாலும் சுவையிலும் விலையிலும் மிக அதிகமாக இருக்கிறது.கொஞ்சம் கூட சிவப்பு கலர் சேர்த்தாமல் வீட்டில் சமைத்தது போல மீன் இருக்கிறது.அப்புறம் சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட குடல் சாறு, நாட்டுகோழி குழம்பு, மட்டன் குழம்பு என வரிசையா கலந்து கட்டி அடிச்சோம்.(என்னென்ன குழம்பு இருக்கு முதலிலேயே கேளுங்க..அப்போதான் ஒவ்வொண்ணா வெளில வரும்...)
கடைசியா ரசம், நல்ல கெட்டி தயிரு என சாப்பிட்டதில் வயிறு விண்ணுனு புடைக்க ஆரம்பிச்சிடுச்சு.
அப்புறம் பக்கத்து டேபிளில் ஆர்டர் செஞ்ச நாட்டுக்கோழி பெப்பர் வறுவல் வாசனை இங்க மூக்கை துளைக்கவே அந்த பக்கம் பார்த்தா பயபுள்ள சும்மா நாட்டுக்கோழியோடு போராடிகிட்டு இருக்கான்.ரொம்ப சுவை போல...
சரி நாமளும் ஒண்ணு ஆர்டர் பண்ணுவோமா என்ற எண்ணத்தில் நண்பனை பார்க்க....அவன் கை பர்சு மேலயே இருக்க சரி..எதுக்கு இன்னிக்கு ரொம்ம்ப.........இந்த ஆட்டை இன்னொரு நாள் பலி போடுவோம் என்றெண்ணி...இருக்கிறத வச்சி...நல்ல காரசாரமா சாப்பிட்டோம்..கரண்டு வேற இல்ல..செமயா வேர்த்துப் போச்சி.....எப்படியோ நல்லா வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.
இரண்டு பேருக்கு 454 ரூபாய் ஆச்சு..

அப்புறம் சாப்பிட்டு விட்டு வெளிய வரும் போது அம்மணிகள் கும்பலா வர..அடடா.... சான்ஸ் போச்சே அப்படின்னு நினைப்பதிற்குள் அனைவரும் பக்கத்துல இருக்கிற ஆச்சி மெஸ் இல் புகுந்துட்டாங்க......புரட்டாசி மாசம் போல்...

இந்த கடை பவர்ஹவுஸ் அருகில் இருக்கிறது.அருகிலேயே ஆச்சி மெஸ் சைவ உணவு ஹோட்டல் இருக்கிறது.
ஈரல், மூளை, குடல், நாட்டுக்கோழி வறுவல்,நெத்திலி மீன், காடை, என எல்லா ஜீவராசிகளோட பார்ட்ஸ்ம் இருக்கு...

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 26, 2012

ஒகேனக்கல் - தருமபுரி மாவட்டம் - பயணம் - 2


ஒகேனக்கல் - தருமபுரி - பயணம் 
டிக்கெட் வாங்கி கொண்டு தொங்குபாலம் சென்றோம்.பாலத்தில் இருந்து பார்க்க மிக அம்சமாய்...ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நிறைய அருவிகள்...அதைவிட அம்மணிகள்... எவ்ளோ அழகா இருக்கு அருவிகள்..ரசிக்க ரசிக்க மனம் விலகவே இல்லை. பாலம் கடந்து மெயின் அருவிக்கு செல்ல நிறைய பாறைகள் கல்வெட்டுகளாய்.... காதலர்களின் பெயர் பொறித்ததினால்......அப்படியே வழி சொல்லும் அம்புகுறிகள்...தட்டு தடுமாறி  (இது வந்து அந்த தட்டு தடுமாறி இல்ல...பாறைகளின் இடையில் செல்லும் போது ஏற்படும் தட்டு தடுமாறி... இல்லேனா நம்மளை வேற மாதிரி நினைச்சிடுவாங்க...) செல்கையில் அம்மணிகளின்  சாரி அருவிகளின்  அழகில் அதிசயத்து போனோம்...என்ன அழகு.. என்ன குளிர்ச்சி...சும்மா....சில்லுனு ..இப்படி ...நிறைய...
 

மெயின் அருவி செல்லும் வழியெங்கும் திடீர்கடைகள்..மீன் மிக பிரதான உணவாய்.... 
கைக்கெட்டும் தூரத்தில் வெள்ளமென பாய்ந்து வரும் அருவிகளை ரசித்த படி சினி பால்ஸ் மெயின் அருவி சென்றோம்..சினி பால்ஸ் இல்  குளிக்க ஐந்து ரூபாய்.உயரமா நின்னு பார்க்க மூணு ரூபாய் என நிறைய பேரு அங்கங்க பணம் வாங்குறாங்க.நாங்களும் விதிவிலக்கு இல்லை என்பதால்  குளிக்க டோக்கன் வாங்கிட்டு உள் நுழைந்தோம். மரங்களுக்கு இடையில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
முதலில் அருவிகள் கொட்டுகிற இடத்திற்கு சென்று விட்டு பின்னர் குளிக்கலாம் என்று மெயின் அருவிக்கு சென்றோம்...நீண்ட கால்வாய் போல இருக்கிறது..ஆங்காங்கே அருவிகள் கொட்டுகிறது.மிக ரம்மியமாக இருக்கிறது.இந்த பக்கம் தமிழ்நாடு பார்டர், அந்த பக்கம் கர்நாடகா பார்டர் என அழகாய் பிரிந்து இருக்கிறது.
சமதளத்தில் வருகிற வெள்ளம் பாறைகளுக்கு இடையே பிளந்து ஓ வென கொட்டுகிறது.இதன் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்.அவ்ளோ அருமையாக இருக்கிறது.கொட்டும் அருவியை எவ்வளவு நேரம் ரசித்தாலும் அலுக்கவில்லை.. அம்மணிகளை போல.....
சரி...குளிக்கலாம் என்று சினி பால்ஸ் வந்தோம்..வரும்போது காலியாக இருந்த அந்த அருவி கொட்டுகிற இடத்தில் அம்மணிகள் நாலு பேரு இருக்க ....கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது....ரசிக்க ஒரு கூட்டம்...பார்க்க ஒரு கூட்டம்....குளிக்க ஒரு கூட்டம் என முண்டியடித்தது..
அப்போ தான் ஒரு பாடல் நம்ம சிற்றறிவுக்கு எட்டுச்சு..
தேவதை குளித்த
துளிகளை எல்லாம்
தீர்த்தம் என்றே
நான் குடிப்பேன்...
ஒருவேளை..இந்த மாதிரி காட்சியை பார்த்து தான் வைரமுத்துவும் எழுதி இருப்பாரோ... ஒரு டவுட்டு...
அப்புறம் ரொம்ப நேரம் அம்மணிகளும் நல்லா படம் காட்டவும்..ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு இருந்தது...அம்மணிகளின் நீராடலை சமாளிக்க முடியாமல் கூட வந்தவர்களின் கண்ணீர் அருவியோடு கலந்து சென்று கொண்டு இருந்தது.எப்படியோ கஷ்டப்பட்டு அம்மணிகளை அருவியில் இருந்து வெளியேற்றி....ஏகப்பட்ட ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டி கொண்டனர்(....ம்ம்ம்...போச்சே...வடை...போச்சே...)
அப்புறம் நேரம் ஆக ஆக அம்மணிகளின் சாரி அருவிகளின் அழகில் பசியை மறந்து விடுவோம்  என்றெண்ணி அங்கிருந்து விலக ஆரம்பித்தோம்... கொஞ்சம் கூட விலக மனமில்லாமல்..
வரும் வழியில் எல்லாம் ஆங்காங்கே கொட்டுகிற அருவியின் அழகை பருகியவாறே...அவ்வப்போது அம்மணிகளையும்...
 
 
எப்படியோ மனசை கட்டுப்படுத்தி அருவிக்கூட்டத்தில் இருந்து வெளியில் வர மீன் குழம்பு வாசம் ஆங்காங்கே வர பசியின் முகம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
மீன் சமைக்கும் இடத்திற்கு செல்ல ரெடியாகி கொண்டு இருந்தது மனம்.பாவைகளை பார்வையால் ருசித்த தெம்பில் எப்படியோ சமைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எல்லாம் ரெடியாக இருக்க, அனைவரும் வட்ட மேஜை மாநாட்டை கூட்ட, பாக்கு மட்டை தட்டில் மீன் வறுவல் வைக்கவும்....உடனடியாய் காணாமல் போய் கொண்டு இருந்தது...
 
 
மீனின் ருசியில் வயிறு அதி பயங்கரமாய் கபளீகரம் செய்து கொண்டு இருந்தது...அப்புறம் சாதம், மீன் குழம்பு, ரசம் என கலந்து கட்டி அடிக்க சமையல் பாத்திரம் தன் எடையை இழக்க ஆரம்பித்தது....எல்லாம் முடிந்து.... மனம் நிறைய மகிழ்ச்சியுடன், வயிறு நிறைந்த திருப்தியுடன் கிளம்பினோம்...
இங்கே இருக்கும் பெண்கள் சுற்றுலா வர்ற அனைவருக்கும் சமையல் செய்து தருவது ஒரு குடிசைத் தொழிலாக இருக்கிறது.நன்றாக சமைத்து தருகிறார்கள்.உப்பு, காரம், அளவாய் இட்டு மிக சுவையுடன் இருக்கிறது.நாங்கள் ஆறு பேர் சாப்பிட சாதம், குழம்பு, ரசம், வறுவல், செய்ய 500 ரூபாய்..மீன் நாங்களே வாங்கி கொடுத்து விட்டோம்.மூணு கிலோ கெழுத்தி மீன் 300 ரூபாய். மொத்தம் 800 ரூபாய்.அப்புறம் பாக்கு மட்டை, தண்ணீர் என ஒரு 60 ரூபாய்..அவ்ளோதான்.சாப்பிட இட வசதி இருக்கிறது.
நல்ல சுவையான உணவு கிடைக்கும்.எங்களுக்கு சமையல் செய்த அம்மணி பெயர் சங்கீதா. போன் நம்பர் 9047478177.அவங்களும் அவங்க அம்மாவும் ரொம்ப வருசமா இங்க இருக்காங்களாம்.நீங்கள் அங்கே சென்றால் கண்டிப்பாக இவங்களுக்கு ஒரு நல்ல ஆர்டர் தரணும்.
குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்கும் போது பார்த்து கவனமாக வாங்கவும்.டூப்ளிகேட் நிறைய இருக்கு.சொந்த காசுல சூன்யம் வச்சிக்காதீங்க...
அப்புறம்...
திரும்பி செல்லும் போது வண்டியில் இறங்கிய கேரள அம்மணிகளை கண்டதும் மீண்டும் அருவிக்கே செல்ல மனம் துடித்தது...எண்ட குருவாயூரப்பா.....மறுபடியுமா....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Saturday, September 22, 2012

ஒகேனக்கல்,தருமபுரி மாவட்டம் - பயணம் 1

ஜோலார்பேட்டையில் ஒரு வேலை காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு கிளம்ப வேண்டியதாகி விட்டது.கோவையில் இருந்து காலை வண்டியில் கிளம்பினோம் நானும் நம்ம டிரைவரும்.போற வழியில் நம்ம நண்பர்களை பிக்கப் செய்து கிட்டு சேலம் வழியா தொப்பூர் தாண்டி செல்லும் போது எதேச்சையா நம்ம பயபுள்ள ஒருத்தன் ஒகேனக்கல் பத்தி பேச்சை எடுக்க, சரி அங்க போலாம் அப்படின்னு உடனே முடிவு எடுத்து முதலில் வந்த இடது ரோட்டில் திருப்பினோம்.(ஒரு டவுட்டுக்கு அங்க இருந்த பொட்டிகடையில் விசாரித்து பெங்களுர் சாலையில் இருந்து உள் நுழைந்தோம்.தொப்பூர்ல இருந்து 10 கி.மீ இடைவெளியில் இடது புறம் ஒரு பாதை பிரிகிறது.) ஜருகு என்கிற ஊர் வழியே சென்று அச்சனஹள்ளி அடைந்து பென்னாகரம் சென்றோம்.
கிட்டதட்ட 60 கிலோ மீட்டர் இருக்கும்.தருமபுரி போய் பென்னாகரம் வழியாக செல்ல வேண்டிய ஒகேனக்கலுக்கு குறுக்கு பாதையில் பயணித்து விரைவில் பென்னாகரம் சென்று அடைந்தோம்.பென்னாகரம் செல்லும் வரைக்கும் ஆங்காங்கே நிறைய... மலைப்பாதைகள் தான்.மலைகள் தான்.பசுமைத்தோல் போர்த்திய மலையாய்...
இறங்கியும் ஏறியும் செல்ல வேண்டி வந்தது.வழி நெடுக நிறைய புளிய மரங்கள்.மலைப்பாதையில் நிறைய கருவேலம் மரங்கள்...
பென்னாகரத்தில் இருந்து 17 கி,மீ ஒகேனக்கலுக்கு.சம தளத்தில் பாதி தூரம் சென்றவுடன் செக் போஸ்ட் வரவேற்கிறது.வண்டி நம்பரை எழுதி விட்டு டோக்கன் வாங்கி கொண்டு மலைப்பாதையில் பயணித்தோம்.முடிவில் இந்தியாவின் நயாகரா விற்கு வந்து சேர்ந்தோம்...
இறங்கியவுடன் கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது...மீன்,சாப்பாடு சமையல் செய்யவும், பரிசலில் செல்லவும் ...

இருங்க சொல்கிறோம் என்று சொல்லியபடியே நழுவ...கடைசி வரைக்கும் எங்களிடம் போராடி மீன் மார்க்கெட் வரை வந்து தனக்கான ஆர்டரை பெற்றுக்கொண்ட ஒரு அம்மணி ரொம்ப சந்தோசத்தில் ....
அருவிக்கு செல்லும் வழியில் நிறைய துணி கடைகள்.ஏகப்பட்ட மீன் கடைகள்.நிறைய சாப்பாட்டு கூடங்கள், சமையல் செய்யும் இடம் என....


மீன் மார்க்கெட் .....ரொம்ப பெரிதில்லை..ஒவ்வொரு கடையும்  கலர் கலர் குடையுடன்  கொஞ்சம் கொஞ்சம் பெரிய மீன்களுடன்...கெழுத்தி, ஆரான், கட்லா, ரோகு என குறிப்பிட்ட சில வகைகள் மட்டுமே.


 ஆங்காங்கே மசாலா பொடியில் பிரட்டிவைக்கப்பட்ட மீன் துண்டுகள் வாடிக்கையாளரை எதிர்பார்த்து கருவாடாய் காய்ந்து கொண்டிருந்தது...
அதேமாதிரி சமைத்த உணவுகளை சாப்பிட நிறைய இடங்கள்..நம்ம ஜாதிக்கார பயலுங்க தான் அதிகம்...நீரிலும் ...நிலத்திலும்... தள்ளாடியபடியே...
.உள்ளே செல்ல செல்ல ஒருவித மணம் நாசியை துளைக்கிறது.சுவையான வாசத்துடன் மீன்கள் கொதித்து கொண்டு இருக்கின்றன நிறைய இடங்களில்..

நாங்கள் கெழுத்தி மீன் மூன்று கிலோ வாங்கி அந்த அம்மணியிடம் கொடுத்துவிட்டு அருவியை காண சென்றோம்...
சீகக்காய், எண்ணெய்  தடவிய திறந்த மார்புகளுடன் ஆண்களும் , தலை விரிகோலமாக பெண்களும் ஆங்காங்கே...மரங்களுக்கு,  பாறைகளுக்கு  இடையில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.அருவிகள் பாய்ந்தோடும் அழகினை ரசித்தபடியே முன்னேறினோம்.
 

அப்புறம் எப்பவும் போல அம்மணிகள் வருகையினால் (மூணு ஸ்டேட் வேற.... கேரளா, தமிழ்நாடு, கர்னாடகா ) மனம் அருவியை விட செம..சில்லுனு இருக்கு..
பாவைகளை
பார்த்ததும்
பரவசமாகி
பஞ்சாகி
போனது
மனசு.........அட கவிதை.....
கன்னியரை கண்டால் கவிதையும் கொட்டுகிறதே அருவி மாதிரி...
பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்...அந்த பாட்டை பாடியபடியே....
பாறைக் கூட்டங்களில் ஆங்காங்கே அம்பு குறி வழி சொல்ல  மெயின் அருவியை  நோக்கி சென்றோம்..

இன்னும் இருக்குங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, September 18, 2012

பேஸ்புக் கவிதைகள்

கடந்த ஒரு வாரமாகவே எங்கும் ஊர் சுத்த போகல.ஏன்னா ......ஒரு வேலை வெட்டியும் இல்ல.. என்ன பண்றது அப்படின்னு நினைச்சு ஃபேஸ் புக்கில் கிறுக்கியவை ...இதுவும் நல்லா வந்து இருக்குன்னு சொல்றாங்க நிறைய பேரு...

கன்னி அவளின்
கண நேரப்
பார்வையால்
பரிதவித்துப் போய்
பற்றிக் கொள்கிறேன்
காதல்
எனும் மரத்தை

புலம்பல்
தவிப்பு
அவஸ்தை
இம்சை
இவை நான்கும்
ஒரு சேர
உணருகின்றேன்
உன்னை 
கண்ட பின்பு தான்...

நித்திரையிலும்
நீங்காத
உன் 
நினைவுகள்
உளறுகின்றேன்
உறக்கத்திலும்
உன்
பெயரையே...

உன்னோடு 
இருந்த 
ஓரிரு
நாட்களிலும் 
என்னுள்
ஏற்பட்ட 
மாற்றங்கள்
எண்ணிலடங்காதவை


நெஞ்சத்து 
நினைவுகளில்
நீறு பூத்த
நெருப்பாய்
நீங்காமல்
அவளின்
ஞாபகங்கள்......

அவளின்
அருகாமையை 
அருகில் 
இல்லாத போது தான் 
அறிய முடிகிறது....

கொஞ்சம் கூட
கனக்கவில்லை
மனது...
கன்னியவள்
நினைவுகளை
சுமந்து இருந்தாலும்..


இதழ்களில்
இதமாய்
முத்தமிடும் போது
இமைக்க
மறந்திட்ட
விழிகள்
சொல்லும்
வார்த்தை
இன்னும்.........கொஞ்சம்...


இரு ஜோடி விழிகளின்
பார்வையில்
இதயங்கள் பேசினாலும்
அதரங்கள்
அசையவில்லை
ஆயினும்
மௌனத்தை கலைத்தோம்
சூழ்நிலை உணர்ந்து....


மங்கை அவள்
மடிமீது
தலை வைத்து
படுத்ததில்
மறந்து போனது
என்
கடந்த 
கால நினைவுகள்....

நெஞ்சத்து 
நினைவுகள்
நகர மறுக்கின்றன
நங்கூரமாய் 
அவள் 
இருப்பதால்

உன் 
செவ்விதழ்களில்
செந்தேன் 
மட்டுமல்ல
இன்னிசையும்
இனிதாய் வரும் என
உன் 
உச்சரிப்பில்
உணர்ந்து கொண்டேன்...

சந்தித்த பொழுதில்
கண்ட மகிழ்ச்சி
பிரிவின் போது
கனத்த பாரமாய்....

வழி நெடுக தென்படும்
பெயர்ப்பலகைகளில்
உன் பெயரையே
பொருத்தி பார்க்கிறேன்
விழிகள் காணும்
திரை உருவங்களில்
உன் முகத்தையே
பார்க்கிறேன்..
எங்கும் எப்போதும்
உன் நினைவால்....
 
எனக்குள்   இருக்கும்
கவிஞனின்  உறக்கம்
கலைத்த  பெருமை
உனக்கே  வாய்க்கட்டும்  ............நன்றி.....அவளுக்கு........

 கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..
நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...