நான் எப்பொழுதும் கோவையில் மீன் வாங்குவதில்லை.பல வருடங்களுக்கே முன்பே வாங்குவதை நிறுத்திவிட்டேன்.எப்பொழுதாவது உறவினர்கள் நண்பர்கள் வருகையின் போது அவர்களின் விருப்பத்திற்கேற்ப மீன் வாங்குவது வருடத்திற்கு ஓரிரு முறை மட்டுமே.அதுவும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி துறையில் சனிக்கிழமை அன்று பிரஷ்ஷாக ( அதுவும் ஓரிரு நாட்கள் பழையது தான் சாத்தனூர் அணையில் இருந்து வருவது ) வரும் டேம் பாறை மீன் மட்டுமே வாங்குவது.அது கொஞ்சம் நன்றாக இருக்கும்.ஆனால் கேரளா மற்றும் தூத்துக்குடியில் இருந்து வருபவை பெரும்பாலும் பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னர் பிடிபட்டவை.கேரள மத்தி மீன் மட்டும் ஒரு சில நாட்களில் கொஞ்சம் பிரஷ்ஷானது போல வரும்.அதுவும் பெரும்பாலான நாட்களில் சொதப்பி விடும்.
குளிரூட்டப்பட்ட வண்டிகளில் ஐஸ்பெட்டியில் மீன்களை வைத்து இருப்பதினால் நன்கு கெட்டியாக இருக்கும்.அது கோவை வந்து மார்க்கெட்டில் தரம் பிரித்து சில்லறை விற்பனைக்கு வரும் போது கொஞ்சம் இளகி இருக்கும்.அதுவரையில் ஐஸ்கட்டிகளோடு இருக்கும். மீன்கடையில் எடை போட்டு வெட்டி வீட்டிற்கு வந்து தண்ணீரில் கழுவினால் போதும் மீன் சதை அப்படியே உடையும்.கடையில் வெட்டும் போதே கொஞ்சம் நேக்காக வெட்டி அனுப்பி விடுவர்.
இங்கு மீன் வெட்டுபவர்களும் சரியில்லை.விண்வெளிக்கு ராக்கெட் விடுவதை போல் மீனை வெட்டித் தருவர்.வாங்கும் ஒரு கிலோ மீனில் 400 கிராம் காலி ஆகிவிடும்.மீன் தலையை கன்னா பின்னா வென்று வெட்டுபவர்களை கண்டால் கோபம் தலைக்கேறும்.விதியே என்று நொந்து கொண்டு வீட்டிற்கு வந்து சுத்தம் செய்ய கழுவினால் மீன் சதை வேறு தானாக உதிரும்.மீனின் நாற்றமும் பாசான் நாற்றத்தைப் போல ஒரு மாதிரி வாடை அடிக்கும்.வட்டவடிவ துண்டுகள் போடப்பட்ட மீன்களில் முட்கள் தனியாய் வரும்.
நெத்திலி சங்கரா போன்ற மீன்களில் முட்கள் வேறு தனியாய் பிரிந்து பூரான் போன்று இருக்கும். எத்தனை நாள் பழசான மீனோ என்று எண்ணியபடியே மீனில் மசாலாக்கள் சேர்த்து குழம்பும் பொரிச்சதுமாக சாப்பிட்டு விடுவது.துணைக்கு வேறு தமிழக அரசு சப்போர்ட் செய்வதால் பசி ருசி அறியாது என்பதை போல காலி ஆகி விடும்.காசு கொடுத்து வாங்கிய பண்டம் அல்லவா.நீண்ட நாட்கள் ஆன மீனை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இங்கு வாங்குவதை தவிர்த்து விடுகிறேன்.அதுமட்டுமல்ல நமது ஊரில் காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்டு துள்ள துள்ள வரும் ஜிலேபி, கெண்டை, அவுரி மீன்களையே சாப்பிட்டு வளர்ந்தவனுக்கு இங்கிருக்கும் மீன்கள் ஏனோ பிடிப்பதில்லை.நாங்களே ஆற்றில் தூண்டில் போட்டோ, வலை விரித்தோ, கைகளிலோ மற்றும் இரவு நேரத்தில் மீன் வேட்டைக்கு சென்று பிடித்து விட்டு வரும் மீன்கள் எப்போதும் ருசியாகவே இருந்திருக்கின்றன.
இறந்த மீனின் செவுளை பார்த்தால் ரத்தச்சிகப்பில் இருக்கும்.ஆனால் இங்கு வரும் மீன்களோ நிறமற்ற செவுள்களாக இருக்கிறது.அந்த அளவுக்கு நாட்பட்டதாக இருக்கிறது.கடல் மற்றும் ஆறு இருக்கும் ஊரில் இருப்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.மிகவும் பிரெஷ்ஷான மீன்களை உண்டு வாழ்கின்றனர்.
மற்ற ஊர்களில் உள்ளவர்கள் எங்கிருந்தோ வரும் மீன்களை சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.பார்மலின் எனும் ஒரு திரவத்தை வேறு தெளித்து விடுகிறார்கள்.சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற ஏழு டன் மீனில் பார்மலின் தெளித்திருப்பதை கண்ட அதிகாரிகள் அதை கண்டுபிடித்து அழித்திருக்கின்றனர்.இங்கேயும் அது இருக்கலாம்.உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.மீனில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன.அதற்கு ஆசைப்பட்டு உடலுக்கு தீங்கு தரும் பழைய மீன்களை சாப்பிட்டு வருகிறோம்.