Friday, December 27, 2013

இண்டீரியர் டிசைனிங் – 1

ஹாய்..
அனைவருக்கும் வணக்கம்....
எவ்ளோ நாள் தான் நம்ம பிளாக்ல எல்லாத்தையும் எழுதறது....... (மொக்கையா கவிதை எழுதவதில் இருந்து, பல ஊர்கள் போய் கோவில் குளம்னு சுத்தி படம் பிடிச்சி போட்டது, ஊர் ஊரா போய் சொந்த காசுல சூன்யம் வச்சிகிட்டது, விமர்சனங்கிற பேர்ல ரீலீஸ் ஆகற படத்தை கொத்திக் குதறி, படம் பார்க்க ஆசையா போறவனையும் தடுத்து நிறுத்தற வரைக்கும்), இனி கொஞ்சம் மாத்தி யோசிப்போமே......எங்கெங்கயோ ஊர் ஊரா சுத்தி விதவிதமா சாப்பிட்டு, எத்தனையோ கடைக்கு நாம விளம்பரம் தரோம்ல...புதுசா நம்ம கம்பெனிக்கு விளம்பரம் தருவோமே....
                            KOVAI INTERIOR PEOPLE  இது தான் நம்ம கம்பெனி பேரு.2007 ஃபிப்ரவரி மாதம் நம்ம பிறந்த நாளில் ஆரம்பிச்சது.இன்னிக்கு வரைக்கும் ஆண்டவன் புண்ணியத்தாலும், நல்ல வாடிக்கையாளர்களாலும், முக்கியமா நம்ம டீம் உழைப்பினாலும் நல்லபடியா போய்ட்டு இருக்கு.இனி 2014ல இருந்து ஆரம்பிக்கிற எந்த ஒரு இண்டீரியர் வேலை செஞ்சாலும் அதனோட படங்களை இங்க அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்.
அதுக்கு முன்னாடி இப்ப திண்டுக்கல்லில் பண்ணின ஒரு வீட்டீன் இண்டீரியர் ஒர்க் மற்றும் ஒரு ஷோ ரூம்.






நம்ம பிளாக் பார்த்துட்டு எந்த புண்ணியவானாது அவங்க வீட்டுலயோ அல்லது ஆபிஸ்லயோ இண்டீரியர் பண்ணனும் அப்படின்ன்னு ஒரு என்கொயரி வந்தாலும் எனக்கு சந்தோசமே...
(முதன் முதலா நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்க்கு நன்றி சொல்லிக்கிறேன்.அவர் தான் ஒரு வருசம் முன்னாடியே என்கொயர் பண்ணினாரு...ஆனா வேலை எதுவும் கொடுக்கல.....)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, December 24, 2013

மலரும் நினைவுகள் - எனது கடிதம்

                 புத்தாண்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீட்டினுள் இருந்த பழைய பைகள், பெட்டிகளை ஆராய்ந்த போது கிடைத்த ஒரு கடிதம் தான் இது.வேலை தேடிக்கொண்டு இருந்தபோது என்னவளுக்கு எழுதின கடிதம்.இப்போது இதை இணைந்து இருவரும் படித்த போது ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை.மேலும் எனக்கே ஆச்சர்யம்.. அட...இப்படியெல்லாம் எழுதி இருக்கிறோமா என்று...இது ஒரு மலரும் நினைவுகளே....
                  இந்தக்கடிதம் என்னையும் என் நம்பிக்கையும் சுமந்து கொண்டு உன் மடியில் வந்து விழுகிறது.நம் இருட்டின் முதல் நட்சத்திரம் இன்று முளைத்துவிட்டிருக்கிறது.எந்தத்துறையில் எனக்கு முன்னேற முடியும் என்று நம்பிக்கையிருக்கிறதோ, எந்த்த்துறை நமது லட்சியத்தினை வெகுவிரைவில் ஈடேற்றும் என்று நான் கருதுகிறேனோ அந்தத்துறையில் இன்று காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.

நான் இன்று முளைக்கத் துடிப்பது உனக்காகத்தான்...
கிளை விரிப்பதும், விழுதிறக்கவும் நான் தவிப்பது உனக்காகத்தான்..
நான் விஸ்வரூபம் எடுக்கத்துடிப்பது என் விலாசம் சொல்ல அல்ல
அந்தஸ்து பேதத்தால் தூரமாக்கப்பட்டுவிட்ட உன்னை தொடுவதற்குரிய நீளம் என் கைகளுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்....

             உனக்காக என்னென்னவோ செய்யத் துடிக்கிறேன்..எனக்காக நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...உன்னால் எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லமுடியுமோ அத்தனை காரணங்களையும் சொல்லி காலத்தை நீட்டித்து விடு...இப்போதைய காத்திருப்பின் ஒவ்வொரு நிமிடமும் நமது பொற்காலத்திற்கான அஸ்திவார நிமிடங்கள்...


                  எந்த அந்தஸ்து பேதம் நம் காதலின் கண்களில் இப்போது விரலால் குத்துகிறதோ, அந்த விரல்களே நம் நாளைய மணமாலைகளுக்குப் பூத்தொடுக்கும் என்பது சத்தியமே.

               உன்னைப்பிரிந்து வந்துவிட்ட நான் தான் இப்போது ஆறுதலில்லாத பிரதேசங்களில் அலைந்து கொண்டிருக்கிறேன்..ஆனால் உனக்கு அப்படியில்லை...நீயும் நானும் நடந்து போன நமது தடம் பதிந்த பாதைகள் இன்னும் உன் பாதங்களுக்கு அருகிலேயே இருக்கின்றன...நீயும் நானும் ஒன்றாய்ப் பார்த்த வானமும் இன்னும் உன் தலைக்கு மேல்தான் இருக்கிறது.நீயும் நானும் ஆற்றங்கரை மணல் மேட்டில் ஒருவர் பெயரை ஒருவர் எழுதிப்பார்த்தபோது அவற்றை மனப்பாடம் செய்துகொண்ட நதி இன்னும் நம் பெயரை உச்சரித்துக்கொண்டேதான் ஓடிக்கொண்டிருக்கிறது.


அன்புக்குரியவளே...
              நம் சுவடுகள் உன் அருகில்.....இப்போது கூட நீ தனிமையில் இல்லை..நம் தடயங்களோடுதான் இருக்கிறாய்....
இங்கேயோ உன் நினைவுகளைத்தவிர எதுவும் பக்கத்தில் இல்லை....
               என் ஒவ்வோர் அடியையும் இங்கு அளந்து வைத்துக் கொண்டிருக்கின்றேன்.என் உழைப்பும், என் முயற்சியும், என் முயற்சியிலிருக்கிற தூய்மையும் வெற்றி என்கிற வார்த்தையை மட்டுமே என்னை உச்சரிக்க வைக்கும்.....கூடவே காதலோடு...

                  நான் எந்த மண்ணில் கனவு கண்டேனோ அந்த மண்ணிலேயே நிறைவேறும் நம் காதலின் அடுத்த படி...
நம்பிக்கையோடிரு....நீ ஒன்றும் அசோக வனத்து சீதையல்ல...மிதிலையின் சீதைதான்...வில்லொடிக்க வருவேன் விரைவில்...

ஆனாலும் காதலி....
             உன் ஞாபகங்களின் நெருப்பில் எனது கால்வாசி மேனி கருகிவிட்டது.லட்சியத்திற்காக எந்த ரணத்தையும் ஏற்றுச் சுமக்க நான் சித்தமாயிருக்கிறேன்...உன் கண்கள் எனக்கருகிலேயே இருந்து என்னைக் கவனித்துக் கொள்வதாய் ஒரு பிரமை எப்போதும் எனக்கிருக்கிறது.உன் பார்வைகளின் குளிர்ச்சி என் அடி நெஞ்சில் கிடந்து சில்லிடுகிறது.அந்த ஈர அனுபவத்திலேயே என் வலிகளும் வேதனைகளும் மறந்துவிட்டிருக்கிறது.
நாளைய வெளிச்சத்தினை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன் காதலின் துணையோடு....
            நான் நடக்க நடக்க உனக்கும் எனக்குமான இடைவெளி குறைந்துவிடும்...பிறகு அது மறைந்து விடும்...
அன்பே!
            இந்த காகிதத்தை உன் காதோடு வைத்துக்கேள்...என் மார்புத்துடிப்பு கேட்குமடி உனக்கு.....

கிசு கிசு :எப்படிலாம் எழுதி நம்ம அம்மணியை கரக்ட் பண்ணியிருக்கேன்......1997 ல ஆரம்பிச்ச லவ் 2004ல என்னை பெரும் சோகத்துல ஆழ்த்திடுச்சு....ஆமா...ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம்....ஹிஹிஹிஹி

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்




 நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, December 19, 2013

கோவை மெஸ் - JMS சர்பத், திண்டுக்கல்

                    திண்டுக்கல்லில் பிரியாணி சாப்பிட ஒரு கடைக்கு சென்று கொண்டிருக்கும் போது எதேச்சையாக ஒரு கடையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கலர் கலர் பாட்டில்களைப் பார்க்கவும் அட......... சர்பத் கடை....
              சிறுவயது ஞாபகங்களை கிளற ஆரம்பித்தது.எங்க ஊர் பெட்டிக்கடையில் ஒரு அலுமினிய ட்ரே இருக்கும் அதுல கொஞ்சம் தண்ணி இருக்கும்.பாட்டில்லாம் வரிசையா வச்சி இருப்பாங்க.எலுமிச்சம் பழம் தண்ணில மிதந்துட்டு இருக்கும்.பாக்கெட்ல இருக்கிற காசைத் தடவிப்பார்த்துக்கிட்டே கடைக்காரன் கிட்ட சர்பத் போடச் சொன்னால் போதும் அப்படியே ரொம்ப ரசிச்சு ருசிச்சு செய்வாங்க...ஒரு பெரிய பூப்போட்ட கிளாசை எடுத்து கொஞ்சமா தண்ணீர் ஊத்தி கழுவி வச்சி அதுல அரை எலுமிச்சம் பழத்தை கைல பிழிஞ்சி.....இல்லேனா மரக்கட்டையில் வைச்சு ஒரு அமுக்கு அமுக்கி சாறு ஊத்துவாங்க.அப்புறம் மூணு இல்லன்னா நாலு ஸ்பூன் நன்னாரி சர்பத்தை அளந்து அளந்து  ஊத்தி தெர்மோகோல் பெட்டியில் இருக்கிற பெரிய ஐஸ் கட்டியை கைல எடுத்து கரண்டில ரெண்டு தட்டு தட்டுவாங்க...ஐஸ் உடைஞ்சு தூள் தூளாகும் போது அது தெறித்து நம்ம மூஞ்சில படும் போது செமயா சில்லுனு இருக்கும்.டம்ளரை எச்சில் ஊற பார்த்துகிட்டே இருப்போம். ஐஸை கிளாஸ்ல போட்டு பானைத் தண்ணீர் ஊத்தி கரண்டில ஒரு கலக்கு கலக்கும் போது சில்வர் கரண்டியும் கண்ணாடி கிளாஸும் ஒண்ணு சேர்ந்து ஒரு சவுண்ட் கொடுக்கும் பாரு.... ஒரு லயமா.......ஆகா....அது இன்னும் நம்ம ருசி உணர்வுகளை தூண்டிவிடும்...
                அந்த கிளாஸ்ல வாங்கும் போதே ஆட்டோமேடிக்கா வாய் திறக்க ஆரம்பிச்சிடும்...  ஜில்லுனு கொடுப்பதை வாங்கி கொஞ்ச கொஞ்சமா அதன் சுவையை உணர்ந்து குடிக்கிற போது அந்த நன்னாரி வாசம் நம்ம வாயிலயே நிக்கும்.உள்ளுக்குள் இறங்குற குளிர்ச்சி நமக்கே தெரியும்... ..அம்புட்டு டேஸ்டா இருக்கும்.வெயிலில் அலைந்து திரிந்து வரும் போது சர்பத் கடையைப் பார்த்தா போதும் கால்கள் தன்னாலே அங்கு போகும்.சில்லுனு குடிச்சு தொண்டையை நனைச்சாத்தான் அடுத்த வேலை ஞாபகத்திற்கு வரும்.

            அப்படித்தான் அன்னிக்கு பால்ய கால நினைவுகளை அசைபோட்டபடியே வண்டியை ஓரங்கட்ட சொன்னபோது இருடா.... பிரியாணியை முடிச்சிட்டு வருவோம் அப்புறம் சாப்பிடலாம் என்று சொன்ன நண்பனை ஏறெடுத்து பார்த்துவிட்டு...கண்டிப்பா சாப்பிடனும் மச்சி...என்று சொல்லிவிட்டு அங்க போய் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு சொன்னபடியே வந்து சேர்ந்தோம் சர்பத் கடைக்கு...
JMS  சர்பத் கடை... சின்ன கடை...வரிசையாய் நன்னாரி பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.சொந்த தயாரிப்புதான்.ஒரு பெரியவர்தான் கடைக்கு சொந்தக்காரர்.பேச்சுக்கொடுத்தபடியே சர்பத் போட சொன்னோம்...


சிறுவயதில் நேரில் கண்ட அதே முறை தான்.கொஞ்சமும் மாறவில்லை.எல்லாம்  கலந்து டம்ளரில் தருகிறார்...சுவை அப்படியே இருக்கிறது நன்னாரி சர்பத் கொஞ்சம் கூட மாறவில்லை...விலைவாசி ஏறினாலும் இன்னமும் ஐந்து ரூபாய்க்கு கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.கண்ணாடி பாட்டில் 700 மிலி 43ரூபாய், பிளாஸ்டிக் பாட்டில் 55ரூபாய் என்கிற விலைவாசி போர்டும், சர்பத்துக்கு சக்கரவர்த்தி என்கிற அடைமொழியோடு இருக்கிற போர்டும் சர்பத் கடையை வெளியுலகிற்கு பறை சாற்றுகின்றன.மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கின்றன.ஏழை மற்றும் நடுத்தரமக்கள் விரும்பிக்குடிக்கிற பானமா இருக்கு அங்க..
இதே மாதிரி எலுமிச்சை, நன்னாரியோட சோடா ஊத்தி கொஞ்சம் உப்பு போட்டு குடிச்சா இன்னும் டேஸ்டா இருக்கும்..
திண்டுக்கல்லில் பிரியாணி மட்டுமல்ல இந்த சர்பத் கடையும் ரொம்ப பேமஸ் தான்...கடைவீதிக்கு வாங்க...சர்பத் சாப்பிடுங்க..நன்னாரி உடம்புக்கு குளிர்ச்சி தரும்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்  



இன்னும் கொஞ்சம்...

Monday, December 16, 2013

கோவை மெஸ் - நியூ சென்ட்ரல் சிக்கன் பிரியாணி ஹோட்டல், திருப்பூர்

நியூ சென்ட்ரல் சிக்கன் பிரியாணி ஹோட்டல், திருப்பூர்
            நேற்று நண்பனின் வீட்டு விசேசத்திற்காக திருப்பூர் சென்றிருந்தபோது மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் ஸ்பெசலாய் பிரியாணி ஆர்டர் கொடுத்து இருந்தார்கள்.அதை வாங்கும் பொறுப்பு என்னைச் சேர்ந்ததால் நண்பர்கள் அனைவரும் புடை சூழ அந்த ஹோட்டலுக்கு சென்றிருந்தோம்.காங்கேயம் ரோட்டில் செல்லும் போதே திரும்பின பக்கமெல்லாம் பிரியாணி கடைகள்.காரணம் கேட்ட்தற்கு அங்கு முஸ்லீம் பெருமக்கள் அதிகம் வசிக்கிறார்கள் அதனால் பிரியாணி கடைகள் அதிகம் என்று சொன்னதை கேட்டபடியே வந்ததில் ஒரு கடையின் பெயர் என்னை ஈர்த்தது.பிரியாணி குடோன்.... திருப்பூரில் நூல்களுக்குதான் குடோன் இருக்கும் ஆனால் இங்கு பிரியாணிக்கே குடோன் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்..
       அந்தக்கடையைத் தாண்டி அருகில் இருக்கிறது சென்ட்ரல் பிரியாணி...சின்ன கடைதான்...பாழடைந்த பில்டிங் போல இருக்கிறது.ஆனால் உள்ளே பரந்து விரிந்து இருக்கிறது.

          காரை விட்டு இறங்கியபோது நம்மை வரவேற்கும் விதமாக பிரியாணி அண்டாவை கரண்டியால் தட்டியபடி மாஸ்டர் புன்னகைத்தார்.அண்டாவில் நிரம்பி இருந்த சிக்கன் பிரியாணியின் மனம் மூக்கைத்துளைத்தது.வாசமே நம்மை நேசம் கொள்கிறதே என்று எண்ணுகையில் அது நமக்கானது இல்லை என்று சொல்லி தனியாக ஆர்டர் செய்த மட்டன் பிரியாணி இதோ இங்கிருக்கிறது என்று ஒரு பிளேட்டில் சாம்பிளாக சிறிது வைத்தார் கடை உரிமையாளர்...
மணம் நாசியைத்துளைக்க, கை அனிச்சையாக தட்டு நோக்கி பரபரத்தது.கொஞ்சம் எடுத்து வாயில் இட ஆகா...என்ன சுவை.....ப்ரியாணி மணமும் சுவையும் ஒரு சேர இறங்க மிகவும் சுவையாயிருந்தது.இன்னும் சாப்பிட ஆசைதான்.... வீட்டில் பந்தியில் வைத்தபின் நிறைய சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று மனதை தேத்தியபடி கைகளை கழுவிக்கொண்டோம்...


          அந்நேரத்திலும் சுவை நரம்புகளை மீட்டியபடி சிக்கன் லெக் பீஸ் கொதிக்கும் எண்ணையில் நீந்திக்கொண்டிருக்க, வெந்த நிறம் அடைந்தவுடன், எடுத்து தட்டில் போட உடனடியாக உள்ளே ஒரு கஸ்டமருக்கு ஓடிப்போனது.அதைப்பார்த்தபடியே ஜொள்ளிட்டு நிற்க, வண்டியில் ஏற்றியாச்சு பிரியாணி என குரல் வரவே கிளம்பினோம்....
                வண்டியில் இருக்கும் பிரியாணி அவ்வப்போது நானும் இருக்கிறேன் என்று தட்டினை திறந்து திறந்து தன் வாசத்தினை வெளியேற்றிக்கொண்டிருந்தது திருப்பூரின் சாலைவசதிகளால்....பிரியாணி மணம் மூக்கினைத் துளைத்தபடியே இருந்ததால் கவனம் சிதறும் வாய்ப்பு அதிகமிருப்பதாகவே தோன்றவே மெதுவாய் வண்டியினை ஓட்டியபடியே வந்து சேர்ந்தோம் நண்பரின் வீட்டிற்கு....முதல் வேளையாக இறக்கி வைத்ததும் பந்தியில் இடம் தேடி அமர்ந்தோம்...பிரியாணியின் வருகைக்காக வேண்டி...


            சுடச்சுடச் இலையில் வந்த பிரியாணியினை ரசித்து ருசித்து சாப்பிட சீக்கிரம் காலியாகிப்போக, மீண்டும் நிரம்பியது நண்பனின் உபயத்தால்...
பிரியாணி உதிரி உதிரியாக இருக்கிறது.சீரக சம்பாதான்.ஒவ்வொரு அரிசியிலும் சுவை ஏறியிருக்கிறது.மட்டன் நன்றாக வெந்து பஞ்சு போல் இருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது..போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதைப்போல நிறைய சாப்பிட்டுவிட்டோமே என்ற திருப்தி வந்ததால் கை கழுவ ஆரம்பித்தோம்...சுவையோ சுவை.... இன்னமும் பிரியாணியின் வாசனை கோவை வரும் வரையில் இருக்கிறது...


                சென்ட்ரல் பிரியாணிக்கடை...சின்ன கடை போல் தான் தோற்றமளிக்கிறது.முதலிலேயே பிரியாணி வாசனை நம்மை வரவேற்கிறது.விலை குறைவாக இருக்கிறது.அனைத்தும்...பிரியாணி சாப்பிட்டு பார்த்ததில் சுவை நன்று..

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, December 12, 2013

கரம் - 12 (12.12.13)

புத்தககண்காட்சி 
கடந்த வாரம் கோவையில் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.மிகக்குறைந்த அளவே ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.புத்தகவிற்பனை மிக மந்தமாக இருந்தது என்று சொல்லலாம்.வரவேற்பின்றி தூங்கி வழிந்தன ஸ்டால்களும் கூடவே விற்பனையாளர்களும்.ஸ்டால் போட்ட காசுக்காவது புத்தகம்லாம் வித்திருக்குமா என்பது சந்தேகமே.நான் மூணு மணி வாக்குல உள்ளே நுழைந்தேன்.உலக சினிமா ரசிகன் கூட வந்ததினால் தள்ளுபடி விலையில சுஜாதா புக், ஜெயமோகன் புக் வாங்கிட்டு வந்தேன்.உள்ளே ஒரு சுத்து சுத்திட்டு வந்ததால் சூடா டீ சாப்பிடலாமே அப்படின்னு வெளியே இருக்கிற கேண்டீன்ல டீ சாப்பிட்டா அதுவும் ஆறிக்கிடக்குது...புத்தக கண்காட்சி போலவே....


******************************
ஒரு ஸ்டால்ல சுஜாதா எழுதின புக் பார்த்தேன்.புத்தக அட்டைப்படத் தலைப்பே ரொம்பத் தப்பா இருந்துச்சு.எப்படி இவ்ளோ பெரிய மிஸ்டேக் பண்ணி இருப்பாங்க அப்படின்னு யோசிச்சுகிட்டே ஒரு கிளிக் கிளிக்கிட்டேன்.
புத்தகத்தோட பேரு ஒரு பிராயாணம், ஒரு கொலை, 
ஆனா உள்பக்கம் சரியா பிரிண்ட் பண்ணி இருக்காங்க ஒரு பிரயாணம் ஒரு கொலை அப்படின்னு...கூடவே சுஜாதா எழுதின முதல் நாடகம்னு சின்ன குறிப்பு வேற.எப்படி அட்டைப்படத்தினை கோட்டை விட்டாங்க பதிப்பகத்தார்?


*************************************
கரூர்ல சிக்கன் வாங்க ஒரு கடைக்கு சென்றிருந்தபோது கடையில ஒரு கிரைண்டர் மாதிரி இருந்துச்சு.எவ்ளோ கறி வேணும்னு கடைக்காரர் கேட்க, ஒரு கிலோ ன்னு சொல்ல, உடனே உயிரோட இருந்த பிராய்லர் கோழி ஒண்ணை பிடிச்சி கழுத்த முறிச்சி சுடுதண்ணியில் போட்டு கொஞ்ச நேரம் அப்படி இப்படி திருப்பி அதை எடுத்து கிரைண்டர்ல போட்டு ஆன் பண்ணவும், பயந்தே போயிட்டேன்..கோழியை அரைச்சு மாவா கொடுத்திருவாரோ அப்படின்னு.... ஆனா கொஞ்ச நேரத்துல வெளிய எடுத்து பார்த்தா கோழி டிரஸ் இல்லாம இருக்கு.......ஆச்சரியப்பட்டு கிரைண்டருக்குள்ள எட்டிப்பார்த்தா கல்லுக்குப்பதிலா நீட்ட நீட்டமா ரப்பர் புஷ் நிறைய இருக்கு.கோழி இறகை பிடுங்கறதுக்காக பண்ணின மெசினாம்...ரெண்டு நிமிசத்துல சீக்கிரம் வேலையாகுது.மணிக்கணக்கா உட்கார்ந்து பிடுங்க தேவையில்ல.இப்படி பண்றது தோலோட கறி வாங்குறவங்களுக்கு மட்டும் தானாம்.அதுக்கப்புறம் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச முடிகளை லைட்டா பொசுக்கி மஞ்சள் போட்டு தேய்ச்சு கழுவி வெட்டி கொடுத்தாங்க...அப்புறமென்ன....அடுத்து சமையல் தான்...



*******************************
சிங்கப்பூர் கலவரம்
சிங்கப்பூரில் கலவரம் என்று நண்பன் அங்கிருந்து சொல்லும் போது கொஞ்சம் அதிசயமும் ஆச்சர்யமும் பட்டேன்.கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கிற ஊரில் எப்படி இப்படி நேர்ந்தது என்பதை நினைக்கும் போது தான் ஆச்சர்யமாகிறது.


டேக்கா என்று சொல்லப்படும் லிட்டில் இந்தியாவில் கடந்த முறை சென்ற போது கலவரம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பொது மைதானத்தில் அமர்ந்து பேசி இருக்கிறோம்.சனி ஞாயிறு மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அந்த மைதானத்தில்  ஆங்காங்கே கூடி மது குடிப்பது வழக்கம்.அங்கு குவியும் தமிழர்கள் அனைவரும் கடின உழைப்பு தொழிலாளிகள். நண்பர்களோடு சேர்ந்து அரட்டை மற்றும் மது குடிப்பது வழக்கம்.இது எப்பவும் இருப்பதுதான்.தன் கண்முன்னே சக தொழிலாளி ஒருவர் இறந்ததைப் பார்த்தவுடன், போதையில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செஞ்ச கண்மூடித்தனமாக செயல் தான் இது.40 வருடமாக எந்த கலவரமும் இல்லாத சிங்கப்பூரில் இந்நிகழ்வு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.இது நாள் வரை அனுபவித்து வந்த சலுகைகள் இனி குறையலாம்.இந்த கலவரம் ஏற்பட்டதால் இனி சனி ஞாயிறு அந்த பகுதிகளில் மது விற்பனை கிடையாதாம்.கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் 10ஆண்டு சிறைத்தண்டனை 8 கேன் ( சவுக்கடி ) நிச்சயமாம்.
நாடு விட்டு நாடு பொழைக்கபோன இடத்துல நாமதான் சூதானமா நடந்துக்கனும்.அதை விட்டுட்டு வம்பு வழக்குன்னு போயிட்டா நம்மள நம்பி இருக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்றது.

**********************************
12.12.1950
இந்த நாளை யாராலும் மறக்க முடியாது.ஏன்னா சூப்பர் ஸ்டாரோட பிறந்தநாள்.சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்து இன்னமும் அவரின் ரசிகனாக இருப்பதில் கொஞ்சம் பெருமிதம் தான்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா...நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.



நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, December 9, 2013

சினிமா - மெமரிஸ் - (Memories - 2013) - மலையாளம் - விமர்சனம்

சமீபத்தில் கோழிக்கோடு கேரளா போயிருந்த போது அங்கிருந்து நிறைய படங்கள் வாங்கிவந்தேன்.எல்லாம் பார்த்தபின் அதில் ரொம்ப பிடிச்ச படம் மெமரிஸ்.ப்ருத்விராஜ் நடிச்ச சூப்பரான திரில்லர் மூவி.படம் பார்க்க பார்க்க செம இண்ட்ரஸ்ட்டிங்காக இருக்கு.

குற்றவாளிகளை பிடிக்கப்போய் அதில் தன் குடும்பத்தினை இழந்து  அவர்கள் ஞாபகமாகவே எப்பவும் குடிபோதையிலேயே இருக்கிற ஒரு போலீஸ் அதிகாரி.வேலைக்கு போகாம லீவ் போட்டுட்டு குடிக்கிற ஆசாமி.அந்த ஊர்ல ரெண்டு கொலை ஒரே மாதிரியா நடக்குது.காவல் துறையால் அதைக்கண்டுபிடிக்கமுடியல.அதனால இந்தப்பொறுப்பு கள்ளுகுடியன் என்று செல்லமா அழைக்கப்படும் ப்ருத்விக்கு வருது.அதுக்குள்ள தொடர்ச்சியா இன்னொரு கொலை நடக்குது.இப்படி எல்லா கொலைகளும் ஒருத்தரால் மட்டுமே செய்யப்படுகிறது என்பதை அவர் எப்படி ட்ரிங்க்ஸ் அடித்துக்கொண்டே கொலையாளியை கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை.

ப்ருத்வி எப்பவும் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருப்பாரு.போலீஸ்னா கொஞ்சம் மிடுக்கு இருக்கும்.ஆனா இந்தப்படத்துல லேசா டிரிம் பண்ணின முகத்தோட படம் புல்லா குடிகார வேடத்துல வருவாரு.அவர் கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்கிற ஸ்டைலே ரொம்ப வித்தியாசமா இருக்கும்.எப்பவும் மப்போடு பேசுகிற மேனரிசம் செமயா இருக்கு.நாலு கொலைகளுக்குண்டான காரணத்தினை கண்டுபிடிச்சி அடுத்து தன் தம்பிதான் அடுத்த டார்கெட் என தெரிந்து குற்றவாளியை நெருங்கிய பின்னர் கொலைகாரன்கிட்ட எப்படி தம்பியை காப்பாத்தறார், அதே சமயம் தன் மனைவி குழந்தைக்கு ஏற்பட்ட கதி தன் தம்பிக்கும் ஏற்பட கூடாதுன்னு பழைய ஞாபகத்தினை நினைச்சி கொலைகாரனை டேலண்டா கொல்றதுதான் படத்தோட முடிவு.

படம் ரொம்ப நல்லா விறுவிறுப்பாக இருக்கு.யார் கொலையாளி என்பதை கிளைமாக்ஸ் வரை கண்டுபிடிக்கும் காட்சிகள் நன்றாக இருக்கு.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும்தான்.கெளரவ வேடத்தில் மேக்னா ராஜ் நடித்து இருக்கிறார்.


நடிப்பு :
ப்ருத்விராஜ்
விஜயராகவன்
மேக்னாராஜ்
சுரேஷ் கிருஷ்ணா

இயக்கம் : 
ஜீத் ஜோசப்

பார்க்கவேண்டிய  படம்.  

நேசங்களுடன்
ஜீவானந்தம்


 

இன்னும் கொஞ்சம்...

Thursday, December 5, 2013

கோவை மெஸ் - ஒரிஜினல் ராவுத்தர் பிரியாணி, திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்த போது அந்த ஊர் முழுக்க ஒரு பிரியாணி கடைக்காக ஒரே விளம்பரம்...எங்க பார்த்தாலும் ஒரிஜினல் ராவுத்தர் பிரியாணி கடை , ஒரிஜினல் ராவுத்தர் பிரியாணி கடை அப்படின்னு திண்டுக்கல்லில் திரும்புன பக்கம்லாம் போஸ்டர் அடிச்சி ஒட்டியிருக்காங்க.இதைப்பார்த்தவுடன் சரி அவரு எப்படித்தான் இருப்பாரு அவரையும் ஒரு கை பார்த்துடலாமே அப்படின்னு அந்தப்பக்கம் போனது ஒரு மாலை வேளை...


புது ஹோட்டலுக்கு உண்டான அமளி துமளி என்றெல்லாம் இல்லை.மிக அமைதியாக இருக்கிறது.கொஞ்சம் பிரமாண்டமான போர்டில் குல்லா போட்ட பெரியவர் சீரியல் செட் வெளிச்சத்தில் மின்னுவதற்கு இன்னும் குறைவான நேரமே இருந்தது.
ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே இண்டீரியர் அமைப்பு மிக அருமையாக இருக்கிறது.முதலில் பெரிய ஹால் இருக்கிறது.அதனை ஒட்டி தனியாக ஏசி ரூம் வேறு இருக்கிறது.ஏசி ரூமினுள் அமர்ந்தவுடன் பசும் வாழை இலை நம்முன்னே ஆக்ரமித்தது.என்னவென கேட்க உடனடியாக ஒருவர் நோட்டும் பேனாவுமாய் நிற்க, மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தோம்.

                                                                             (ஃபிளாஷ் அடித்த போட்டோ ) 





மட்டன் பிரியாணி அடுத்த நிமிடத்தில் சூடாய் அந்த பசும் வாழை இலையில் வழுக்கிக்கொண்டு விழுந்தது இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்களின் பசிக்கு இரையாகப்போவது தெரியாமலே.சூடான ஆவி பறக்க, பிரியாணி மணம் நாசியைத்துளைக்க, கை தன்னிச்சையாக பிரியாணியின் ஒரு விள்ளல் எடுத்து வாய்க்கு கொண்டுபோக சுவைத்ததில் செம டேஸ்ட்...ஆஹா என்ன சுவை...இந்த ஹோட்டல் பிரியாணி சுவை வேறு மாதிரியாக இருக்கிறது.திண்டுக்கல்லில் இருக்கிற மற்ற பிரபல பிரியாணி கடைகளில் இருக்கிற டேஸ்ட் வேறு மாதிரி.இது ஒருவகையான டேஸ்டில் மிக நன்றாக இருக்கிறது.சீக்கிரம் காலியானது கூட தெரியவில்லை.மீண்டும் இன்னொரு கால் பிளேட் கொண்டுவரச்சொல்லி அதையும் காலி பண்ணினோம்.சைடு டிஷ் வேறு என்ன இருக்கிறது என்று கேட்டு சிக்கன் லாலிபாப் ஆர்டர் பண்ணினோம்.அதுவும் சும்மா கொழுகொழுவென, சிவந்த நிறத்தில் மணத்தோடு நம்முன்னே வர, சுவைத்ததில் சீக்கிரம் இளைத்துப்போனது.மட்டன் கோலா உருண்டை மட்டும் அப்படி ஒன்றும் டேஸ்ட் இல்லை.  

நல்ல சுவை, விலை திண்டுக்கல்லில் இருக்கிற அத்தனை பிரியாணி கடைகளிலும் இருக்கிற ஒரே ரேட் தான்.பிரியாணி நன்றாக இருக்கிறது.அந்தப்பக்கம் போனிங்கன்னா சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.அப்புறம் கோவைக்கு நம் வீட்டம்மணிக்கு தேவையான பிரியாணி பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
இந்த ஹோட்டல் நகராட்சி ஆபிஸ்க்கு பின்புறம் இருக்கிறது.இதன் அடுத்த தெருவில்தான் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியும் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

update :
இதன் அருகிலே தலப்பாக்கட்டி பிரியாணி வந்துவிட்டதால் இதன் கடை மூடுவிழா கண்டுவிட்டது வெகு விரைவிலே....
  
இன்னும் கொஞ்சம்...

Saturday, November 30, 2013

KOVAI BLOGGERS ASSOCIATION - I ST ANNIVERSARY

கோவையில் இருக்கின்ற ஒரு சில பதிவர்களின் முயற்சியால் KOVAI BLOGGERS ASSOCIATION ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு ஒரு வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.இந்த ஒரு வருட காலத்தில் எங்களால் முடிந்த அளவிற்கு சில சேவைகளை செய்து இருக்கின்றோம்.

உலக புவி ஈர்ப்பு தினத்தில் புவி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ROBERT BOSCH நிறுவனம் மற்றும் ப்ரூக்பீல்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 வயது முதல்  10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளோம்.
இந்த  நிகழ்வில் தேசியவிருது பெற்ற ஓவியர் திரு ஜீவானந்தம் அவர்கள் நடுவராக பங்கேற்று பரிசினை வழங்கினார்.தோழி சரளா அவர்கள் பல விழிப்புணர்வு கருத்துக்களை கவிதையாக  வழங்கினார்.தோழி எழில் அவர்களும் தன் கருத்துக்களை பட்டியலிட்டார்.



கோவை உக்கடம் டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் உள்ள 150 ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரவு உணவு வழங்கி சிறப்பித்தோம்.இந்நிகழ்வில் எழில் (நிகழ்காலம்), கோவை மு சரளா (பெண் எனும் புதுமை), அகிலா (சின்ன சின்ன சிதறல்கள் ), உலகசினிமா ரசிகன்,  கலாகுமரன் (இனியவை கூறல் ), ஆனந்த் (கோவை ஆவி ), வெண்பா சுஜாதா, பேஸ்புக் நண்பர் பிரசாந்த், மற்றும் திருச்சியில் பணிபுரியும் தலைமைக்காவலர் திரு முருகானந்தம் அவர்கள் தலைமையிலும் டான் பாஸ்கோ இல்ல நிர்வாகி தலைமையிலும் திருநங்கை சங்கீதா அவர்கள் தயாரித்த சுவைமிகுந்த இரவு நேர உணவை வழங்கி சிறப்பித்தோம். 

கோவை குப்பக்கோனாம்புதூரைச் சார்ந்த திரு மகேஸ்வரன் என்பவர் பிப்ரவரி மாதம்  பேருந்து விபத்தில் சிக்கி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவரின் மருத்துவ செலவுக்காக மாதா மாதம் சிறுதொகை அளிக்கப்பட்டது.

நம் அமைப்பு ஈரநெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆதரவற்றோர்க்கான மனநோய் காப்பகத்தில் அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கோவைப்பதிவர்கள் அமைப்பைச் சார்ந்த கலாகுமரன், அகிலா மற்றும், சரளா ஆகியோர் கலந்து கொண்டனர்.




கோவை உக்கடம் சரகத்திற்குட்டப்பட்ட முஸ்லீம் மஜீத் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இஸ்மாயில் என்பவரின் மூலம் அவர்கள் சமூகத்தில் இருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு திருமண நிதியுதவி அளிக்கப்பட்டது.

அதே போல் டெல்லி தமிழ்க்குடில் அமைப்பால் அரியலூர் மாவட்டம் சிலம்பூரில் தோற்றுவிக்கப்பட்ட பொது நூலக கட்டுமான பணிக்கு நம் அமைப்பின் மூலம் நன்கொடை அளிக்கப்பட்டது.


அதே போல் இன்று கோவை PSG  மருத்துவமனையில் இருதய வால்வு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தினம் என்கிற 65 வயது பெண்மணிக்கு A + ரத்தம்  4 யூனிட்  ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மிக நலமாக இருக்கிறார்.

மேற்கொண்ட நிகழ்வுகள் அனைத்திலும் பங்கேற்று, போதுமான செயல்திறனையும், நிதியுதவியையும் அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி...

இனி வரும் வருடமும் இது போன்று எங்களால் முடிந்த சேவைகளை தொடர்வோம் என்ற நம்பிக்கையில்

ஜீவானந்தம்
கலாகுமரன்
கோவை மு.சரளா
எழில் அருள்
அகிலா
பாஸ்கரன்
ஆனந்த் விஜயராகவன்
லக்‌ஷ்மணன் ஃபேஸ்புக்
ஜெகதீஸ்குமார் ஃபேஸ்புக்
பிரசாந்த் ஃபேஸ்புக்
அன்பழகன் ஃபேஸ்புக்
வெண்பா சுஜாதா ஃபேஸ்புக்

KOVAI BLOGGERS ASSOCIATION - Regd No :370/2012 . இந்தியாவின் முதல் வலைப்பதிவர்களுக்கான சங்கம் தோற்றுவித்தது  நம் கோவையில் தான்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Friday, November 22, 2013

பயணம் – சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம் ( SIRUMALAI, DINDIGUL )

      திண்டுக்கல்லில் இருந்த போது சிறுமலை என்கிற கோடைவாசஸ்தலத்தினை பற்றி கேட்டறிந்தபோது என்றாவது ஒரு நாள் அங்கு போகவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.திண்டுக்கல்லில் இருந்து 25 கிமீ தொலைவில் இருக்கிற ஒரு மலைகிராமம் தான் சிறுமலை. அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாத ஒரு கோடை வாசஸ்தலம்.மூலிகைக்கும், முக்கனிகளுள் முக்கியத்துவம் பெற்ற பலா, வாழை இவைகள் அதிகம் விளையக்கூடிய இடம்.ஆனால் மூலிகைகளின் பயன்பாடு பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத ஊர்.காட்டெருமை மற்றும் பலவித உயிரினங்கள் வாழ்கின்ற ஒரு காடு.ஆரம்பத்தில் இலங்கையில் இருந்து வந்த விடுதலைப்புலிகள் இங்கு ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட இடம் என்றும் கேள்விப்பட்டதினால் சிறுமலை மீது மோகம் வந்தது.சென்றுதான் பார்ப்போமே என்று........ அப்படித்தான் அந்த திருநாள் வந்தது.திண்டுக்கல்லில் அடித்த வெயில் காரணமாக ஒரு பகல் வேளை சிங்கம் சீறிப்பாய்ந்தது சிறுமலை ரோட்டில்...

        வனத்துறை செக்போஸ்ட் தாண்டி சிறிது தூரம் செல்கையில் மலைப்பாதை ஆரம்பிக்கின்றன.வளைந்து வளைந்து செல்லும் பாதை, இருபுறமும் இயற்கை பச்சைப்பசேலென்று...மொத்தம் பதினெட்டு ஹேர்பின் பெண்டுகள் இருக்கின்றன.ஒவ்வொன்றையும் கடக்கும் போது கொஞ்சம் திகிலிடுகிறது.சற்றே குறுகலான ஒரு வழிப்பாதை.எதிரில் வண்டிகள் வந்துவிட்டால் கொஞ்சம் சிரமம் தான்.ஆனாலும் அதிக வாகன நெருக்கடி இல்லாமல் மலைப்பாதை கொஞ்சம் ஃபிரியாகத்தான் இருக்கிறது.






           பதினெட்டு ஹேர்பின் வளைவுகளை கடந்தபின் சிறுமலை என்கிற சிற்றூர் நம்மை வரவேற்கிறது.பசுமையும் கொஞ்சம் இதமான குளிரும் நம்மைப்பரவுகிறது.இங்கே சுற்றிப்பார்க்க எதுவும் இல்லை என்பதே இதன் சிறப்பம்சம்.ஒரே ஒரு போட் ஹவுஸ் இருக்கிறது.அதுவும் ஆள் அரவமின்றி படகுகள் தரையிலே நீந்திக்கொண்டிருக்கின்றன.
பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது படகுகள்..ஒருவேளை கோடை விடுமுறையில் செயல்படுமோ என்று தெரியவில்லை.


             கொஞ்ச  நேரம் அங்கும் இங்கும் உலாவியதில் கண்டுகொண்ட விஷயம் என்னவெனில் அருகே உள்ள தோட்டத்தில் வாழைமரங்களும் பலா மரங்களும் அதிகமாய் இருக்கின்றன.சுற்றியதில் ஏற்பட்ட களைப்பை நீக்க டீ சாப்பிட சென்றோம்.ஒரே ஒரு நீண்ட தெரு இருக்கிறது.இருபுறமும் கிராமத்திற்கே உண்டான வகையில் கடைகள்.மொத்தம் இரண்டோ அல்லது மூன்று ஓட்டல்கள் மட்டுமே இருக்கின்றன.இரவு உணவு வேண்டும் என்றால் முன்பே சொல்லிவைத்தால் தான் ஏற்பாடு செய்வார்கள்.இல்லையேல் 7.30 மணிக்குள் இழுத்து பூட்டிவிடுவார்கள்.விவரங்களை கேட்டப்படியே சூடாய் டீ குடிக்க குளிருக்கு இதமாய் இருந்தது.

           சிறுமலையில் மிகப்பிரசித்தம் சிறுமலைப்பழம் எனப்படும் வாழை.அந்த பழம் மிக டேஸ்டாக இருக்கும் என்பதினால் அந்த பழம் வாங்கி சாப்பிட்டோம்.ஒரு தார் போட இரண்டு வருடம் எடுக்குமாம்.அதனால்தான் இந்த டேஸ்ட் என்றனர் வியாபாரிகள்.அதுபோலவே ஒரு பழத்தின் விலையும் அதிகமாகவே இருக்கிறது.
           தங்க விடுதிகள் என்பது சுத்தமாக இல்லை.பெரும் பெரும் முதலாளிகள் இங்கே தங்குவதற்காக தன் சொந்த இடத்தில் கெஸ்ட் ஹவுஸ் கட்டி வைத்திருக்கின்றனர்.தெரிந்தவர்கள் என்றால் அவர்களிடம் சொல்லி முன்கூட்டியே அனுமதி வாங்கி அவர்களின் விடுதிகளில் தங்கலாம்.அங்கே சென்றபின் தங்க இடம் தேடினால் கிடைப்பது குதிரைக்கொம்பே.அப்படியும் இருக்கிற ஓரிரு கெஸ்ட் ஹவுஸில் தங்க இடம் கிடைத்தால் பாக்கியமே.
              ஐந்து மணி நேரம் அங்கு செலவிட்டபின் மலைப்பாதையில் திரும்பி வரும் போது ஏகப்பட்ட காட்டெருமைகள், குடியிருப்புக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.ஒரு வளைவினுள் திரும்பிய போது ஒரு பெரிய காட்டெருமை பள்ளத்தில் இருந்து ரோட்டிற்கு வர கொஞ்சம் பயந்தே போனோம்..ஆனால் அது அழகாய் என் கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு தன் வேலையைப்பார்க்க ஆரம்பித்தது.

சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாததால் சோர்ந்து இருக்கிறது இந்த சிறுமலை. இயற்கையை ரசிப்பவர்கள் கண்டிப்பாய் விரும்புவர்.ஒரு நாள் பயணத்திற்கு ஏற்றது.
திண்டுக்கல்லில் இருந்து மினிபஸ் செல்கிறது.சிறுமலைப்பழம் வாங்க வேண்டுமெனில் திண்டுக்கல்லில் தனி மார்க்கெட்டே இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...