நேற்று செ.சி.வானம் படம் பார்த்து விட்டு வெளியே வரும் போதும் மழை தூறிக்கொண்டிருந்தது.மழைக்கு இதமாய் நாவுக்கு காரமாய் சாப்பிடத் தோணியதால் தியேட்டரில் இருந்து யூ டர்ன் அடித்து மெயின்ரோட்டில் உள்ள கொக்கரக்கோ போனோம்.புதிதாக ஆரம்பித்த கிளை இது.பல வருடங்களுக்கு முன்னால் கவுண்டம்பாளையத்தில் நன்கு சக்கை போடு போட ஹோட்டல் இது.அப்பவே கிரில் தந்தூரி என மிக அருமையான சுவையில் கிடைக்கும்.இடையில் பார்ட்னர்ஷிப் பிரச்சினை காரணமாக கவுண்டம்பாளையத்தில் இருந்து வெளியேறியது.அதற்கு பின் கொக்கரக்கோ சிவானந்தா காலனியில் இன்னொரு கிளையை ஆரம்பித்தது.பின் சில வருடம் கழித்து, கவுண்டம்பாளையத்தில் மிக நேர்த்தியாய் தனது மூன்றாவது கிளையை ஆரம்பித்தது.ஹோட்டல் நல்ல இண்ட்ரீயர் அமைப்புடன் விசாலமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் நிறைய டேபிள்கள் காலியாக இருந்தது.மழைக்கு யாரும் ஒதுங்க வில்லை போல.சாப்பிட வருபவர்களை விட அங்கே வேலை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.நாங்களும் ஒரு டேபிளை ஆக்ரமித்து அமர்ந்தோம்.
மெனுகார்டு புக் வடிவில் வர, தந்துவிட்டு வெயிட்டர் காத்திருந்தார் ஆர்டர் வேண்டி...நாங்களும் கொஞ்சம் பத்து நிமிடம் கழித்து வாருங்கள், புக்கை முடித்துவிட்டு கூப்பிடுகிறோம் என சொல்ல அவரும் அங்கிருந்து நகர்ந்தார்.பின் ஆர்டராய் சிக்கன் விங்ஸ், கிரில், சிக்கன் டைனமைட் என பிடித்ததை சொன்னோம்.ஒவ்வொன்றும் சூடாக வந்து சேர்ந்தது.கிரில் சிக்கன் நல்ல காரம்.மழைக்கு ஆஃப்டாக இருந்தது.நன்கு மசாலாக்கள் தூவி இன்னும் காரமாக இருந்தது.மயோனிஸ் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கிறது.அடுத்து எப்பவும் பிடித்த அயிட்டம் சிக்கன் விங்க்ஸ்.எப்பொழுது கொக்கரக்கோவின் எந்த கிளைக்கு சென்றாலும் மறக்காமல் அதை ஆர்டர் செய்வது சிக்கன் விங்க்ஸ் தான்.அந்தளவிற்கு அதன் சுவை பிடிக்கும்.அதை ஒவ்வொன்றாய் எடுத்து சின்ன சின்ன எலும்புகளை பிரித்து பின் கறியை சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம்.
அதைப்போலவே சிக்கன் டைனமைட்டும் செம டேஸ்ட்.போன்லெஸ்.பட்டரில் வறுத்தெடுத்திருப்பார்கள் போல.நல்ல சுவை.மெதுவாய் உள்ளிறங்குகிறது.அதற்கப்புறம் நூடுல்ஸ், பட்டர் நான், பரோட்டா என எல்லாம் வரிசையாய் வந்தது.பன் பரோட்டோ மட்டும் ஏமாற்றிவிட்டது.பன் மாதிரி சின்னதாய் இருக்கும் என பார்த்தால் நார்மல் புரோட்டாவை அடித்து துவைத்து கொண்டு வந்து பொசுபொசுவென வைக்கிறார்கள்.சுவையும் சரியில்லை.சைஸும் சரியில்லை.
பட்டர் சிக்கன் கிரேவி நல்ல சுவை.கிரில் மட்டும் சரியான காரம்.அதேபோல் மிக்ஸ்ட் நூடுல்ஸ் இல் வந்த இறால், மீன், சிக்கன் துண்டுகள் அதே போல் கொஞ்சம் காரம். குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கிவிட்டனர்.பெரியவர்களுக்கு ஓகே ரகம்.நன்றாகவே இருக்கிறது.
காரசாரமா சாப்பிடறவங்களுக்கு இது ஓகே தான்.எதிரில் வேற தமிழக அரசு கடை இருக்கிறது.அதனால் கூட ஒருவேளை காரம் கூடியிருக்கலாம்.
எப்பவும் போல விலை கோவைக்கு ஏற்ற மாதிரி தான் இருக்கிறது.
எப்பவாது இந்தப்பக்கம் வந்தீங்கன்னா கவுண்டம்பாளையம் கிளையிலும் சாப்பிட்டுப் பாருங்கள்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்