Thursday, May 31, 2012

கோவை பதிவர்கள் சந்திப்பு - 31.5.2012



இன்று ( 31.5.2012) எப்படியோ ஒருவழியாக கோவை பதிவர்களின் சிறு பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்று விட்டது.எதிர்பார்க்கவில்லை இத்தனை பேர் வருவார்கள் என்று.( மொத்தம் 19 பேருங்க )
  கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள கார்டனில் சந்திக்க ஏற்பாடு முடிவு செய்யப்பட்டு இருந்தது.முதலில் சங்கவி வர அடுத்து நான் ஆஜரானேன்.அடுத்து எனக்கு  ஒரு போன் கால் வர அது மனசாட்சி (என்னோட மனசாட்சி இல்லீங்கோ) எந்த இடம் என்று விசாரித்து விட்டு எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டு விட்டு தானும் அங்கு தான் உள்ளதாக சொன்னது.அப்புறம் என்னை பார்த்து விட்டு, என்னை எழுந்திருக்க சொல்ல, அப்புறம் உட்கார சொல்ல, இப்படி திரும்பு,  அப்படி திரும்பு என ட்ரில் மாஸ்டர் வேலை எல்லாம் செய்ய சொல்லி விட்டு தன் முகத்தை காட்டியது மனசாட்சி. (என்னா ஒரு வில்லத்தனம்). அதன் பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். சந்தன சிதறல் சேகர், சாமியின் மன அலைகள் பழனி கந்தசாமி, கலா குமரன் ,மரவளம் வின்சென்ட், மூலிகை குப்புசாமி  என பழம் பெரும் பதிவர்கள் (ஹி ஹி ஹி மூத்த பதிவர்கள்) வந்தனர்.
             (சேகர், மனசாட்சி, சங்கவி, பழனி கந்தசாமி )
அடுத்து தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், கோவை மு சரளா (பெண் எனும் புதுமை) கோவை சக்தி, வீடு சுரேஷ் குமார், இரவு வானம் சுரேஷ் என இளம் பதிவர்கள் வருகை புரிந்தனர். விஜி ராம், உலக சினிமா ரசிகன், அகிலா, மு ராமநாதன் இவர்களும் இடையில் வந்து கலந்து கொண்டனர்.
         (கோவை சக்தி, சேகர், கலாகுமரன், பழனி கந்தசாமி )
 
     (வின்சென்ட் , குப்புசாமி, விஜி ராம் இவர்களுடன் சங்கவி )
கொஞ்ச நேரத்தில் இடம் மாற்றம் செய்து அனைவரும் உட்கார்ந்து கொள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸின்  தித்திக்கும் மைசூர்பா சுவையுடன் அறிமுக படலம் இனிதே நடந்தேறியது.
ஒவ்வொருவரும் தத்தம் வலைத்தளம், பதிவு பற்றி அறிமுகம் கொடுத்தனர்.ஒரு சில ஆலோசனைகள், கருத்துக்கள், ஆக்கபூர்வ செயல்கள் பற்றி தீவிரமாக விவாதித்து கொண்டனர்.இடையில் பிஸ்கட், குளிர்பானம் வழங்கி சிறப்பித்தனர்.(அந்த மகராசன் யாருப்பா...ரொம்ப நன்றி )
(இயற்கை சரியான முறையில் ஒத்துழைக்காததால் சரியான முறையில் புகைப்படம் எடுக்க முடியவில்லை)

இனிதே இன்முகத்துடன் அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என கூறி அனைவரும் பிரிந்து சென்றோம்.

இந்த சந்திப்பு சிறப்பாக நடக்க உதவி புரிந்தவர்கள்
சங்கவி
சம்பத்
கோவைநேரம்
வீடு சுரேஷ்குமார்
மற்றும் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களும்...

இன்னிக்கு நடந்த இந்த சந்திப்பு ஒரு ட்ரைலர் தான்...ஜூன் 10 அன்று தான் மெயின் பிக்சர்....

கண்டிப்பாக கோவை பதிவர்கள் அனைவரும் கலந்து கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள்.

கிசுகிசு:ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை மற்றும் மாலையில் வாக்கிங் செல்பவர்கள் தான் அதிகம். அதிலும் அம்மணிகள் இருக்காங்களே.ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியா இதமா...பதமா..வித விதமா....அவங்க தங்களோட உடம்பை குறைக்கிறாங்களோ இல்லையோ....பார்க்கிற நம்ம மனசை குறைச்சு விடுவாங்க...இங்க நம்ம பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் போது அப்பப்ப கொஞ்சம் நம்மாளுங்க இளைப்பாரலுக்கு திரும்பி திரும்பி பார்த்து கொண்டே....மனசை தேத்திக் கொண்டே ......
அப்புறம் ஒரே ஒரு அம்மணி மட்டும் டவுசர் டி ஷர்ட் லாம் போட்டு காதுல ஹெட் போன் மாட்டிகிட்டு ரொம்ப தீவிரமா வாக்கிங் போய்ட்டு இருந்தாங்க..நாங்க ஆரம்பிக்கிறதில் இருந்து முடியற வரை நாலு ரவுண்டு போனாங்க. இதை இவங்க கிட்டா சொன்னா ......எல்லாரும் கரக்டா சொல்றாங்க...நாங்களும் தானே எண்ணிகிட்டு இருந்தோம் அப்படின்னு.........(கணக்குல புலி போல) அடப்பாவிகளா..... விளங்கிடும்......

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, May 28, 2012

முக்கொம்பு - சுற்றுலா தளம் - திருச்சி


முக்கொம்பு

திருச்சி அருகில் இருக்கிற ஒரு சுற்றுலா தளம் தான் இது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறாக இங்கு பிரிந்து செல்வதால் முக்கொம்பு என்று பெயர்.காவிரி ஆற்றின் குறுக்கே மேலணை என்ற அணை கட்டப்பட்டு இருக்கிறது. நீர் நிலையுடன் கூடிய ஒரு பொழுது போக்கு இடம்.காசு செலவில்லாமல் பொழுது போக்க கூடிய இடம்.அதனால தான் என்னவோ அதிக காதலர்கள் (இவங்க மட்டுமா...) கூடும் இடமா இருக்கு போல.சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் இடமாக இது இருக்கிறது.இரண்டு ஆறுகளுக்கு இடையில் பூங்கா வேற இருக்கிறது. இந்த பூங்காவில் இளவட்ட கல் ஒன்று இருக்கின்றது என நினைக்கிறேன். சிறுவயதில் கண்டு இருக்கிறேன்.இப்போ எங்கேனு தெரியல.அணையின் மறுபக்கம் வாத்தலை என்ற ஊர் இருக்கிறது. ஓடும் ஆற்றின் அழகை அணையில் நடந்து செல்லும் போது ரசிக்கலாம்.

நிறைய மரங்கள் பசுமையுடன் ..அதுவும் நம்ம முன்னோர்களுடன்.நம்மள விட இவங்க தான் அதிகமா இருக்காங்க.அப்புறம் கட்டுசோறு கட்டி இங்க வந்து சாப்பிடற ஆளுகளை இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு..ஆனாலும் இதுவும் ஒரு அனுபவமே..



திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முக்கொம்பு இருக்கிறது இருபது கிலோமீட்டர் இருக்கும்.நல்ல அருமையான சுற்றுலா தளம்..

கிசுகிசு: எங்க குலதெய்வ கோவில் முக்கொம்பு பக்கத்துல தான் இருக்கு.எப்போலாம் கோவிலுக்கு போறோமோ அப்போலாம் கண்டிப்பா போய்ட்டு வருவோம்.அப்புறம் திருச்சில இருந்த போது நண்பர்களுடன் வந்து சென்றது எல்லாம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.போன வாரம் திருச்சி செல்லுபோது ஒரு விசிட் விட்டேன் எதுக்குன்னா...ஒரு பதிவு தேத்த...
ஏன்னா.....இன்னிக்கு நான் ஒரு பதிவர் (.....?) ஹி..ஹி ஹி ......அதான் ஒரு பதிவ போட்டுட்டேன்...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 







இன்னும் கொஞ்சம்...

Friday, May 25, 2012

ஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி- கரூர்



       கரூர்ல இப்போ ஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி நடை பெற்று கொண்டு இருக்கு.நான் எதேச்சையா அந்த பக்கம் போனவன் எப்படி ஆடுறாங்க அப்படின்னு பார்க்கலாம்னு உள்ளே நுழைந்தேன்.இரவு நேரத்தில் விளக்கொளியில் பளபள வென்று மின்னி கொண்டு இருந்தது அரங்கம்.கொஞ்ச நேரத்தில் எந்தெந்த டீம் ஆடப் போகுதுன்னு அறிவிச்சாங்க. பார்த்தா நம்ம அம்மணிகள் ஆடுற ஆட்டம் .செகந்திராபாத் அணியும் நம்ம தமிழ்நாடு ரயில்வே அணியும் மோதுச்சு...அட...இருந்து பார்த்துட்டு தான் போகணும் அப்படிங்கிற அளவுக்கு அம்மணிகள்..எல்லாம் உயரமான அம்மணிகளா இருக்காங்க.அதுவும் செகந்திராபாத் அம்மணிகள் இருக்கே .ம்ம்ம்ம் .நல்லா செம கலர்ல இருக்காங்க..செம..செம...மேட்ச் ஆரம்பிச்சதும் இவங்களோட அதிரடி ஆட்டமும் தொடங்குச்சு..அவங்க ஆடின ஆட்டம் இருக்கே.
         ஆரம்பத்துல அம்மணிகள ரசிச்ச பார்வை இப்போ ஆட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சது.அவ்ளோ விறுவிறுப்பு.எப்படி புள்ளிகளை கொடுக்கிறாங்க அப்படின்னு தெரியல.ஒவ்வொரு தடவையும் பாயிண்ட் வேறுபடுது.ஆனா ரொம்ப நல்லா ஆடுறாங்க.





கடைசியில் தமிழ்நாடு அணி அதிக புள்ளிகளை பெற்று இருந்தது..இன்னொரு தடவை கண்டிப்பா பார்க்கணும் அப்படிங்கிற ஆவலை தூண்டி விட்டாங்க அம்மணிகள்.. அதுக்கப்புறம் அவரச வேலை இருந்ததனால் வெளிய வந்துட்டேன்(ஹி.ஹி.ஹி..அடுத்து ஆண்களுக்கான மேட்ச்..எவன் இருப்பான்...)

கிசுகிசு: இரவு நேரம் ஆதலால் போட்டோ சரியான கிளாரிட்டி இல்ல.அம்மணிகளை ஜூம் பண்ண முடியலை.

நேசங்களுடன்
ஜீவானந்தம் 



இன்னும் கொஞ்சம்...

Monday, May 21, 2012

கோவை மெஸ் - ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா - ஸ்வீட் ஸ்டால் , கணபதி


கணபதி டூ கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் ஒரு சில பலகார கடைகள் இருக்கின்றன.அனைத்தும் குறைந்த விலையில் கார மற்றும் இனிப்பு வகைகள் செய்கிற கடைகள்.நிறைய கடைகள் இருந்தாலும் ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா என்கிற ஒரு கடை நல்ல சுவையுடன் இருக்கிறது.அங்கு காரம் மற்றும் இனிப்பு வகைகள் கிடைக்கின்றன.
இவர்களே அனைத்தும் செய்கின்றனர்.காரம் விலை 120 , இனிப்பு வகை 120, மற்றும் பால் சம்பந்த பட்ட இனிப்பு வகை 200 என்ற விலையில் இருக்கிறது.ரொம்ப விலை குறைவாக அதே சமயம் மிகவும் சுவையுடன் இருக்கிற கடை.எப்போதும் நல்ல விற்பனை.





அனைத்து வகை இனிப்புகள் மற்றும் கார வகைகள் இங்கு கிடைக்கின்றது.நல்ல சுவையுடன் இருப்பது தனித்தன்மை.மற்ற பிரபல கடைகளோடு ஒப்பிட முடியாது.ஆனால் குறைந்த விலையில் நிறைந்த சுவை.நல்ல தரமும் கூட.நான் கிட்ட தட்ட பத்து வருடங்களாக இங்கு வாங்கி வருகிறேன்.நல்ல சுவை இங்கு இருப்பதே காரணம்.
கணபதி பாரதிநகர் தாண்டி ராமகிருஷ்ணா மில் இருக்கிறது.அங்கு இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் இக்கடைகள் இருக்கின்றன.ரொம்ப ஸ்பெஷல் என்னவென்றால் கை முறுக்கு, சீடை, ஓம பொடி இங்கு நல்ல சுவையுடன் கிடைக்கும்.அதே மாதிரி பூந்தி  லட்டு நல்ல சுவையுடன் இருக்கும்.
கணபதி  ஒரு இன்டஸ்ட்ரி ஏரியா.அதுவும் இந்த கடை இருக்கிற இடத்துல நிறைய இரும்பு பட்டறைகள் இருக்கு.இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை ..அப்படின்னு ஒரு வட்டார வழக்கு மொழி இருக்கு.ஆனா இங்கு இருக்கிற கடைகள் கொடுக்கிற சுவையால் இங்கு மக்கள் மொய்க்கிற மாதிரி  இருக்கு.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Sunday, May 20, 2012

கோவை மெஸ் - கொக்கரக்கோ - கவுண்டம்பாளையம்


கொக்கரக்கோ--சேவக் கோழி கூவுற பாஷையிலே ஒரு ஹோட்டல்...
இந்த ஹோட்டல் நம்ம ஏரியாவுல  (கவுண்டம்பாளையம்) இருக்கு.ரொம்ப பேமஸ் ஆன ஹோட்டல்.சிக்கன் மட்டுமே கிடைக்கிற ஹோட்டல்.
இங்கு தந்தூரி சிக்கன் ரொம்ப பேமஸ்.ரொம்ப சுவையா இருக்கும்.நான் போனது வெள்ளிக்கிழமை அன்று.ஆனா அன்னிக்குத்தான் நம்ம அம்மணிகள் கூட்டம் அதிகமா இருக்கு(இப்போலாம் யாரும் வெள்ளிகிழமை விரதம் இருக்கிறது கிடையாது போல).கடையில  உரிச்ச கோழிகள் தொங்கிட்டு இருக்கு.அதை வாங்க உரிக்காத கோழிகள்.(அட நம்ம அம்மணிகள் தான் ).எவ்ளோ பேரு....எல்லாரும் குடும்பத்துடன் வந்து இருக்காங்க.ஆள் ஆளுக்கு இஷ்டம் போல ஆர்டர்.அப்புறம் இப்போ கொஞ்சம் விலை ஏத்தி இருக்காங்க.ஆனாலும் அதே சுவை.தந்தூரி, கிரில் சிக்கன் இங்கு எப்போதும் கிடைப்பது உறுதி.அதே போல் இப்போது புதிதாய் அறியாலி சிக்கன் ( கிரீன் சிக்கன் ) என்று அறிமுக படுத்தி இருக்கிறார்கள்.அங்க இருக்கிற வேலை ஆட்கள் அனைவரும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்.அதனால் அவர்களின் மொழியில் ஒரு வகை தந்தூரி சிக்கன்.பச்சை பசேல் என்று.நிறம் மட்டுமே பச்சை.அதுவும் சாப்பிட்டு பார்த்தோம் சுமார் தான்.ஆனால் தந்தூரி சிக்கன் ரொம்ப சுவை..




 
இப்போ தந்தூரி சிக்கன் விலை 240 என இருக்கிறது.சமீபத்தில் தான் விலை ஏத்தி இருக்கிறார்கள்.ஆயினும் இங்கு இரவு நேரம் எப்போதும் செம கூட்டம்.பார்சல் மற்றும் சாப்பிடுவர்களின் எண்ணிக்கை இரவில் மட்டுமே அதிகமாக இருக்கிறது..அதுவும் அம்மணிகளின் கூட்டம் சொல்லவே வேணாம்.இங்கு பிரியாணிலாம் அவ்ளோ டேஸ்ட் இருக்காது.தந்தூரி மட்டும் நன்றாக இருக்கும்.அனைத்து வகை சைனீஸ் உணவுகள் கிடைக்கும்.AC ரெஸ்டாரன்ட் இருக்கிறது.
இதன் இன்னொரு கிளை R.S.புரத்தில் இருக்கிறது.

நேசங்களுடன்  
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, May 18, 2012

கரம் - பல்சுவை செய்திகள் அறிமுகம்


வணக்கம் ...
இந்த பதிவுலகில் நிறைய பேர் சிறு சிறு செய்திகளை, அனுபவங்களை தொகுத்து வழங்கி அதுக்கு ஒரு பேரும் வச்சி வாரா வாரம் பதிவா தந்துகிட்டு இருக்காங்க..
உதாரணத்துக்கு....

கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா

உண்மைத்தமிழனின் இட்லி தோசை பொங்கல் வடை சாம்பார்

ஜாக்கியின் சாண்ட்விச் அண்ட் நான்வெஜ்

அப்புறம் இன்னும்  பல பேரு....
அஞ்சறைப் பெட்டி, கதம்பம், மொறு மொறு மிக்சர்  இப்படி...
சுவையா தன்னோட பதிவுகளில் எழுதிகிட்டு வர்றாங்க.அதனால நமக்கும் ஒரு ஆசை.

கரூர்ல தான் நான் பொறந்து வளர்ந்து படிச்சது எல்லாம்.படிக்கும் போது  கரம் சாப்பிடுவேன்.இப்பவும் எனது ஊருக்கு போனால் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.கரூர் மாவட்டத்தில் இது ரொம்ப பேமஸ். பொரி கூட பல வகை சட்னிகளுடன் வெங்காயம், பீட்ரூட், கேரட், மிக்சர், தட்டுவடை  முட்டை இதெல்லாம் போட்டு கலக்கி தருவாங்க.அவ்ளோ சுவையா இருக்கும்.கருர்ல இருக்கிற அனைத்து சந்து பொந்து களிலும் யாராவது ஒருத்தர் கரம் போட்டுக்கிட்டு இருப்பாங்க.அவ்ளோ பேமஸ்.

அதனால தான் கரம் போன்ற சுவையான விஷயங்களை உங்ககிட்ட பகிர்ந்துகிறேன்.சுவைத்து ஆதரவு தரும் படி கேட்டு கொள்கிறேன்.

முதல்  கரம் :
நம்ம ஊருல அண்ணாதுரை அப்படின்னு ஒருத்தர் இருக்காருங்க.கிராமத்துல இருக்கிற எங்க வயல்களில்   கூட மாட வேலை செய்வாருங்க. ஒருநாளு இவர்க்கு போன் வந்தபோது செல் போனை திருப்பி திருப்பி நம்பர் சொல்லிட்டு இருந்தார்.என்னன்னு இவர் கிட்ட இருக்கிற போனை பார்த்தேன்.இவரோட போன் நம்பரை எழுதி போன்ல வச்சி அதை சொல்லிட்டு இருந்தாரு.
எப்படி....


கேட்டதுக்கு நம்பரை ஞாபகம் வச்சிக்க முடியலையாம்.எப்பூடி....
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை  பதிவர் சந்திப்பு :
நம்ம ஏரியா பக்கம் இருக்கிற பதிவர்களை இனம் காண்கிற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.அதனால் கோவையில் உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

நமது பதிவர் தளமாய் கோவை பதிவர்கள் இருக்கிறது. கண்டிப்பாக வரவேற்கிறோம்..

-------------------------------------------------------------------------------------------------------------

இனி  அடுத்த கரத்துக்கு மேட்டர யோசிக்கணும்...இருங்க வாரேன்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, May 17, 2012

கோவை மெஸ் - R.R ஸ்வீட் ஸ்டால் - சின்ன போண்டா கடை, கோவை

R.R ஸ்வீட் ஸ்டால், சின்ன போண்டா கடை..
ஒருநாள் எதேச்சையாய் தினமலர் பேப்பர் படிக்கும் போது ஒரு கடையை பத்தி எழுதி இருந்தாங்க.ரொம்ப நல்லா இருக்கு அப்படின்னு வேற..சரி இன்னிக்கு பார்த்துடுவோம்னு டவுன்ஹால் பக்கம் செல்லும் போது வைசியாள் வீதி போனேன்.கடை எந்த பக்கம் இருக்குன்னு வேற தெரியல..அப்புறம் எப்படியோ கண்டு பிடிச்சாச்சு.

ஒரு சின்ன கடைதான்.ஆனால் அவ்ளோ கூட்டம்....வருவதும் போவதுமாக...கொஞ்சம் இடம் கிடைத்தவுடன் உள்ளே நுழைந்தோம். கனிவான உபசரிப்பு. உள்ளே நுழைகையில் சுட சுட எண்ணையில் போண்டா பொரிந்து கொண்டு இருந்தன.
சரி போண்டா எடுக்கட்டும் என காத்திராமல் தயிர் போண்டாவை வாங்கினோம்.கொஞ்சம் பூந்தி தூவி கொடுத்தனர்.சாப்பிட்டதில் அவ்ளோ அருமை.போண்டா முழுவதுமாக தயிரில் ஊறி இருக்க புளிப்பு சுவை மிதமாய் இருக்க ஆகா..என்ன ருசி....அருமை.

இதை சாப்பிட்டு முடிக்கவும் சுட சுட போண்டா (இரண்டு வகை போண்டா-ஜவ்வரிசி போண்டா, கார போண்டா என) தட்டில் வைத்து கொஞ்சம் தக்காளி சட்னியுடன் கொடுத்தனர்....நல்ல முறுக்கேறி மொறு மொறு தோற்றத்தில் வெள்ளையும் சிகப்புமாய் ...ஆனால்..உள்ளே அவ்ளோ சாப்ட்..கொஞ்சம் பிய்த்து சட்டினியில் தொட்டு சாப்பிட அருமை..தக்காளி சட்னி அவ்ளோ டேஸ்டா இருக்கு..
அப்புறம் நிறைய வகை முறுக்குகள், தட்டு வடை, தேங்காய் லட்டு, சுண்டல், பருப்பு உருண்டை என நிறைய வகைகள்.அனைத்தும் இவர்களாகவே தயார் செய்து விற்கிறார்களாம்.சுண்டல் சாப்பிட்டு பார்த்த போது மாங்காயின் சுவை அதில் இருந்தது.ஒருவேளை மாங்காய் சுண்டல் இருக்குமோ.

 

 


நிறைய பேர் பார்சல் வாங்கி செல்கின்றனர்.இங்கு மதியம் 12 மணிக்கு கொழுக்கட்டை கிடைக்குமாம்.ஆனால் ஒரு மணி நேரத்தில் அனைத்தும் தீர்ந்து விடுமாம்.இன்னொரு நாள் போய் கொழுக்கட்டை ஆசையை தீர்த்து கொள்ள வேண்டும்.நான் புகைப்படம் எடுப்பதை கண்ட அவர்கள் பிரஸ் காரரா (நம்மளையும் நம்புறாங்கப்பா) என்று விசாரித்து அனைத்து விவரங்களும் சொன்னனர்.
விலையும் குறைவுதான்.மனசும் (பசியும்) நிறைவுதான்.போண்டா ஒரு பிளேட் ஏழு ரூபாய், தயிர் போண்டா பத்து ரூபாய்.மொத்தத்தில் பர்சுக்கு / வயிற்றுக்கு கேடு விளைவிக்காத ஒரு கடை..
நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...

Wednesday, May 16, 2012

கோவை மண்ணின் பதிவர்களே...வாருங்கள்


வணக்கம்...



      தமிழ் நாட்டுல இருக்கிற எல்லா முக்கியமான நகரங்களில் எல்லாம் பதிவர் சந்திப்பு நடத்தறாங்க.நம்ம கொங்கு நாட்டுல இதுவரைக்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.நான் வேற புதுசு...நம்ம ஊருல  பழம் தின்னு கொட்டை போட்ட பதிவர்களாம் நிறைய பேரு இருக்காங்க..அவங்களோடு ஒண்ணு சேர்கிற முயற்சியாய் அப்படியே இளம் பதிவர்களையும் (அதுதாங்க யூத் பதிவர்கள்  மாதிரி ) இனம் காண்கிற முயற்சியாய் கோவையில் விரைவில் பதிவர்கள் சந்திப்பு நடத்தலாம் என்று தீர்மானித்து உள்ளோம்.

அதனால் கோவையை  சுற்றி  உள்ள  பதிவர்கள்,  முக நூல் நண்பர்கள் , ட்வீட் டர் நண்பர்கள் அனைவரும் விரைவில் ஒரு நாள் சந்திக்கலாம். ஆலோசிக்கலாம்.

பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

கோவையில் உள்ள  பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

விரைவில் சந்திப்போம்...

தொடர்புக்கு

தமிழ் பேரண்ட்ஸ் சம்பத் - 99655 77404

சங்கவி  சதீஷ் - 9843060707

கோவை நேரம் ஜீவா - 98944 01474


நன்றி
கோவை பதிவர்கள் குழுமம்..




நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 15, 2012

கோவை மெஸ் - தென்றல் ஹோட்டல் - துடியலூர், கோவை

தென்றல் ஹோட்டல் - துடியலூர்


இது நல்ல விஸ்தாரமாக, கார் பார்க்கிங், ஏ சி, மற்றும்  கார்டன் ரெஸ்டாரன்ட் ஆக இருக்கிறது.பெரிய ஸ்க்ரீன் வேறு இருக்கிறது.அதில் கிரிக்கெட் மற்றும் கேபிள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள்.மேலும் குழந்தைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல், போன்றவை இருக்கின்றன. போன ஐபிஎல் மேட்ச் அப்போ புதுசா ஆரம்பிச்ச ஹோட்டல் என்பதால் அப்போ ஐபிஎல் மேட்ச் காண அங்கு செல்வோம்.






       கிரிக்கெட் ஆர்வத்தில் அதிகமா டேஸ்ட் பார்க்கலை.அதில்லாமல் நம்ம சுட்டிக்கு ஊஞ்சல், சறுக்கு இருக்கிறதால் அவங்களுக்கு இங்க போக விருப்பம்.அடிக்கடி போவோம்..ஆனா அதிகமா சாப்பிட மாட்டோம்.சும்மா எதாவது ட்ரை சிக்கன் அயிட்டம் (அதுவும் சுமார் ரகம்தான்) மட்டும் சாப்பிட்டு விட்டு மேட்ச் பார்த்து விட்டு வருவோம். மேட்ச் பார்க்கணும், அதே சமயத்தில் சுட்டியின் விளையாட்டு ஆர்வம் இதுக்காக என்னவெல்லாம் சகிச்சிக்க வேண்டி இருக்கு பாருங்க.
     இப்போ போனவாரம் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம்.மதியம் ஆதலால் மீல்ஸ் மற்றும் மட்டன் வறுவல் ஆர்டர் பண்ணினோம்.ஸ்பெஷல் மீல்ஸ் இருக்குன்னு சொல்லி அதை கொடுத்தாங்க...சுத்தம்...அப்படி ஒண்ணும் பெருசா இல்லீங்க.ஒரே ஒரு சப்பாத்தி அப்புறம் மீல்ஸ், மீன் குழம்பு, மட்டன், சிக்கன், குழம்பு, ரசம், தயிர் இவ்ளோ தாங்க.ஒரு சுவையும் சரியில்லை.மட்டன் ரொம்ப மோசமா இருந்துச்சு.மசாலாவோட ஒரு அஞ்சு பீஸ் இருக்குமுங்க...அதுக்கு எம்மாம் ரேட்டு தெரியுமா...ஆரம்பத்தில இருந்த சுவை கூட இப்ப இல்லைங்க.
      நம்ம நண்பர் கேட்டாரு இந்த இரண்டு மீல்ஸ்க்கும் என்ன வித்தியாசம் என்று , நான் சொன்னேன், சின்ன சின்ன கப்புல பொரியல் அப்புறம் எல்லா குழம்பும் வச்சி ஒரு பெரிய தட்டுல கொடுத்தாங்கன்னா அது ஸ்பெசல் மீல்ஸ். சாப்பிட சாப்பிட குழம்பு ஒவ்வொண்ணா கொண்டு வந்து தட்டுல ஊத்தினாங்க என்றால் அது சாதா மீல்ஸ் அப்படின்னு..

மெனு கார்ட் பார்த்தா எல்லா அயிட்டமும் இருக்கும்.சைனீஸ், தந்தூரி இப்படி...எல்லாம் நல்லா இருக்குமா அப்படின்னு கேட்டால் சந்தேகமே.விலையும் அதிகமா தான் இருக்கு. இன்னொன்ணுங்க  நான் எப்போலாம் போறேனோ அப்போல்லாம் இதுவரைக்கும் இந்த ஹோட்டல் நிரம்பி பார்த்ததில்லீங்க.
ஒரு  சில ஹோட்டல் அட்மாஸ்பியரில் அடிச்சிக்க முடியாது.ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாரா இருக்கும்.அதே சமயத்துல சிம்பிளா இருக்கிற ஹோட்டல் தூள் பரத்தும்.இது முதல் வகை...
நேசங்களுடன்  
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, May 12, 2012

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் , மேட்டுப்பாளையம்.


ஸ்ரீ பத்ரகாளியம்மன்  கோவில் , மேட்டுப்பாளையம்.

கோவை மாவட்டத்துல மேட்டுப்பாளையத்தில் இருக்கிற ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோவில் இது.ஊட்டி செல்லும் வழியில் மே.பா. பேருந்து நிலையம் ஒட்டி இடது ஓரமாக கோவிலுக்கு சாலை செல்கிறது.ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் இருக்கிறது.
பவானி நதி ஓரமாக இக்கோவில் அமைந்து உள்ளது.

நம்ம கம்பெனி வளர்ச்சிக்காக வருடா வருடம் இக்கோவிலுக்கு கிடா வெட்டுவோம்.இந்த முறையும் ஞாயிறு அன்னிக்கு கிடா, சமையல் பொருள்களுடன் கோவிலில் ஆஜராகி விட்டோம்.கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கிடா வெட்டி கொண்டு புக் பண்ணி இருந்த ஹாலுக்கு சென்று சமையலை ஆரம்பித்தோம்.


மட்டன் வறுவல், சிக்கன் வறுவல், சாப்பாடு, ரசம் என அசத்தி விட்டாங்க.
இடையிடையே தலைக்கறி,  குடல், வறுவல் என அங்க அங்க செல்லும்.
எல்லாம் முடிந்த பின் வந்து சாப்பிட்டு விட்டு அனைவரும் கிளம்பி விடுவோம்.

ஒரு சின்ன பிக்னிக் மாதிரி ரொம்ப அருமையாக இருக்கும்.அப்படியே அம்மனை வேண்டியது போல இருக்கும்.இங்க பவானி ஆறு இருக்கிறதால் குளிக்க நல்ல இதமாக இருக்கும்.அப்புறம் புதிதாக போறவங்க, ஆத்துக்கு குளிக்க போறவங்க தக்க துணையுடன் போவது நல்லது.ஆற்றில் பாறைகள், சுழல்கள் இருக்கின்றன.கவனத்துடன் குளிக்க வேண்டியது அவசியம்.
நிறைய  தோப்புகள் இருக்கின்றன.இங்கும் இடவசதியுடன் சமைத்து சாப்பிட இடம் கிடைக்கும்.நம்மள மாதிரி குடிமகன்களுக்கு ஏற்ற இடம்.
எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதும். அனைத்து ஹால்களும் புக் ஆகி இருக்கும். கிட்ட தட்ட ஆடு, கோழி பலி இடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.













கண்டிப்பாக அனைவரும் செல்லவேண்டிய கோவில் இது.இயற்கையை விரும்புகிறவர்கள் செல்லலாம்.ஒரு நாள் நல்ல கறி சோறு ஆக்கி குடும்பத்தோட, நண்பர்களோட தின்னுட்டு வரணுமா கண்டிப்பா போகலாம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம் 


இன்னும் கொஞ்சம்...