Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Sunday, March 11, 2018

சமையல் - துப்பதிட்டு அல்லது எண்ணெயிட்டு.. படுகர் இன இனிப்பு வகை. நீலகிரி மாவட்டம்.DHUPPATHITTU - SWEET - PADUGAR SPECIAL


இனிப்பு பலகாரம்-துப்பதிட்டு அல்லது எண்ணெயிட்டு:
                 சமீபத்தில் நீலகிரியின் மலைப்பிரதேசங்களில் ஒன்றான கோத்தகிரிக்கு சென்றிருந்தேன்.அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொதுமுடி என்கிற ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு நண்பரின் அழைப்பின் பேரில் அங்கு போய் இருந்தேன்.சுற்றிலும் தேயிலைக்காடுகள்.இயற்கை அன்னை பசுமை போர்வை போர்த்தியிருந்தாலும், ஆங்காங்கே மழை இன்மை காரணமாக போர்வையில் கிழிந்து இருக்கும் பொத்தல்கள் போல காடுகள் வறண்டு கிடந்தன கான்கீரீட் காடுகள் நிறைய ஆக்கிரமித்து இருக்கின்றன.
         இருந்தாலும் நீலகிரிக்கே உண்டான மிதமான குளிரும், கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாகவே வெப்பநிலையும் இருக்கின்றன.
            படுகர் இன கோவில் திருவிழாவானது ஒவ்வொரு ஊருக்கும் பிப்ரவரி இறுதியில் இருந்து ஆரம்பிக்கிறது.மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை ஒவ்வொரு ஊரிலும்  மிக சிறப்பாக நடைபெறுகிறது.
           படுகர் இன விசேசங்களில் மிகவும் தவறாமல் இடம்பிடிப்பது உருளை மற்றும் மொச்சை கொட்டை குழம்பும், இனிப்பு வகைகளில் துப்பதிட்டு அல்லது எண்ணையிட்டு என அழைக்கப்படும் ஒரு வகை இனிப்பு பலகாரம்.இவை இரண்டும் இல்லாத விழாக்கள், விசேஷங்கள் நடைபெறுவதில்லை.


         மைதா மாவு மற்றும் சர்க்கரை  கொஞ்சம் சோடா உப்பு சேர்த்து இந்த பலகாரம் தயாரிக்கப்படுகிறது. துப்பம் என்றால் நெய்.நெய்யில் பொரித்து எடுப்பதால் துப்பதிட்டு என்று பெயர்.இப்பொழுது நெய்க்கு பதிலாக எண்ணையில் பொரிப்பதால் எண்ணையிட்டு என்றும் அழைக்கின்றனர்.
               மூன்று பங்கு மைதா மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து, கூட கொஞ்சம் சோடா உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து பூரி மாவு பதத்தில் பிசைகின்றனர்.இந்த மாவு பிசையும் பதத்தில் தான் இந்த பலகாரத்தின் மென்மை இருக்கிறது.நன்கு பிசைந்து ஊறவைக்கின்றனர்.பின்னர் தேவையான அளவில் உருண்டை பிடித்து கையினாலே தட்டி அகலமாக்கி அப்படியே எண்ணையில் பொரிக்கின்றனர்.பூரி போல் உப்பி வருகிறது,இருபுறமும் பதமாய் வெந்தபின் எடுத்து தட்டில் போடுகின்றனர்.



               இந்த பலகாரத்தினை சுட சுட பிய்க்கும் போது பறக்கும் ஆவியில் ஒளிந்திருக்கும் வெந்த மாவின் வாசம் நம் நாசியை தொடுகிறது.உள்ளே மென்மையாய் இருக்கிறது.சுவைக்கும் போது இனிப்பு சுவையோடு மிக சாப்ட்டாய் உள்ளிறங்குகிறது.மைதாவிற்கே உண்டான இழுவைத் தன்மை இந்த பலகாரத்தில் குறைவாக இருக்கிறது.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கிறது.மொச்சை கொட்டை குழம்போடு இதனை சேர்த்து சாப்பிடும் போது கூடுதலாக இன்னொரு சுவை கிடைக்கிறது.இனிப்பும் காரமும் இணைந்து புதியதொரு சுவையை தருகிறது.ஊருக்கு வரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் இந்த பலகாரத்தினை தந்து உபசரிக்கின்றனர்.
                வேறு எங்கும் கிடைக்காத இந்த இனிப்பு வகை படுகர் இன மக்களிடையே மிக பிரசித்தம்.இந்த முறை  எங்களுக்கு சுவைக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 21, 2016

சமையல் - அசைவம் - ஆட்டுத் தலைக்கறி குழம்பு

                  எங்க ஊர்ல ஏதாவது விசேசத்தின் போது கிடா வெட்டும் போது ஆட்டோட தலைய மட்டும் பொசுக்குற வேலை நம்மளுது.வாயில குச்சியை குத்தி தலைய நெருப்புல வாட்டி முடியை சுரண்டி கிளீன் பண்ணனும்.தலையை பொசுக்கிட்டு இருக்கும் போதே காது மடல் நல்லா வெந்து இருக்கும்.அதை பிய்த்து அப்படியே சாப்பிடுவது செம டேஸ்டாக இருக்கும்.நன்கு பொசுக்கின தலையை மஞ்சள் தடவி நன்றாக அலசி கொடுத்தால் போதும்.மிக பதுவுசாய் வெட்டி துண்டு போடுவாங்க.மூளைய மட்டும் நொங்கு வெட்டற மாதிரி சிந்தாம சிதறாம ஒரு இலைல தருவாங்க.அதை தோசைக்கல்லில் போட்டு உப்பும் மிளகும் போட்டு பிரட்டினால் சுவையான மூளை ஃப்ரை ரெடி...இப்போ தலைக்கறி குழம்பு எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தலைக்கறி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
தேங்காய் - ஒரு மூடி
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
மல்லித்தூள் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, கசகசா - சிறிதளவு
கொத்தமல்லி புதினா தழை - சிறிது
தேவையான உப்பு
கொஞ்சம் எண்ணைய்

செய்முறை :
முதலில் குக்கரில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி பின் தலைக்கறியை நன்கு வதக்கி  சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை விட்டு வேக வைத்துக்கொள்ளவும்

வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சீரகம் போட்டு வதக்கி, சின்ன வெங்காயம், தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பின் அரைக்கும் போது மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய்  கசகசா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் அரைத்த வைத்த மசாலா சேர்த்து கொஞ்சம் கொதி வந்தவுடன் வெந்த தலைக்கறியை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும், பின் தேங்காய்  விழுதினை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், கொத்தமல்லி புதினா தழை தூவி இறக்கவும்.
டேஸ்ட் கூடுதலாக வேண்டுமெனில் சிறிதளவு மட்டன் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.கெட்டியாக கெட்டியாக குழம்பு டேஸ்டாக இருக்கும்.
கொதிக்கிற குழம்பில் மூளையை போட்டு எடுத்தாலே மூளை வெந்து விடும்.அதுவும் மிக சுவையாக இருக்கும்..








இட்லிக்கு தலைக்கறி குழம்பு மிக அருமையாக இருக்கும்.குடல் குழம்பை போலவே டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

தலைக்கறி ஃப்ரை வேண்டுமென்றால்
வாணலியில் எண்ணைய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் குழம்பிலிருந்து தலைக்கறித் துண்டுகளை சேர்த்து கொஞ்சம் மிளகுப்பொடி தூவி நன்கு பிரட்டினால் போதும்.சுவையான தலைக்கறி ஃப்ரை ரெடி....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, June 17, 2016

சமையல் - அசைவம் - வாத்துக்கறி குழம்பு

எங்க ஊர் கரூர்...காவிரியும் அமராவதியும் ஓடற ஊர்.காவிரியின் ஓரப்பகுதிகளில் நன்செய் புன்செய் வயல்கள் உண்டு.அதனாலேயே இங்க வாத்துகள் அதிகம்.வாத்து வளர்ப்பவர்களும் அதிகம்.காவிரியின் ஓரமாக உள்ள வயல்களில் வாத்துக்கள் எப்போதும் மேய்ஞ்சிட்டு இருக்கும்.நெல் அறுத்த வயல்களில் தண்ணீர் இருக்கும் போது வாத்துகள் மேய்ஞ்சிட்டு இருக்கும்.சிறுவயதில் வயல்காட்டில் வாத்துக்களை துரத்தி விளையாடுவோம்.மேஞ்சிட்டு இருக்கும் போதே வாத்து முட்டை போட்டுடும்.அதை மேய்க்கறவங்களுக்கு தெரியாம எடுத்துவந்து வீட்டில் அவிச்சோ ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம்...

சாப்பிட்ட பத்தாவது நிமிசத்தில் நம்ம வீட்ல கண்டுபிடிச்சிருவாங்க....வாத்து முட்டை தின்றிருக்கான் என்று...அவ்ளோ கவிச்சி அடிக்கும்.அப்படி கவிச்சி அடிச்சாலும் அதுல ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கு.சளிக்கு ரொம்ப நல்லது.
வாத்துக்கறின்னாலே கொஞ்சம் கவிச்சி அடிக்கும்னு சொல்வாங்க.ஆனாலும் அதன் சுவையில் சூப்பராக இருக்கும்.
வாத்தினை கோழி வெட்டுவது போல் அதன் கழுத்தை அறுக்ககூடாது.திருகி போடனும்.பின் அதை நன்கு கொதிக்க வைத்த குண்டாவில் போட்டு முக்கனும்.பிறகு அதன் இறகை பிய்த்து எடுக்கவேண்டும்.பிறகு கொஞ்ச நேரம் நெருப்பில் வாட்டி மிச்சமிருக்கிற சிறு சிறு முடிகளை பொசுக்க வேண்டும்.பின் மஞ்சள் போட்டு நன்கு கழுவி வெட்ட ஆயத்தமாகனும்.ரத்தம் வேஸ்டாகாமல் வெட்டி துண்டுகள் போடனும்.

ஒரு சிலர் கறியை நன்கு கழுவி விடுவர்.இருந்தாலும் டேஸ்ட் இருக்கும்.ஆனால் ரத்தத்தோடு சமைக்கிற வாத்துக்கறி இன்னும் டேஸ்டாக இருக்கும்.

செய்முறை:

வேண்டிய பொருட்கள்:
வாத்து -  1 (நல்லா  மஞ்சள் போட்டு கிளீன் பண்ண கறி )
சி - வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது
பூண்டு - 10 பல்
இஞ்சி - கொஞ்சம்
பட்டை, கிராம்பு, - 2 எண்ணம்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி - தேவையான அளவு

செய்முறை :
முதலில் வாத்தினை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.( வாத்தினை அதன் ரத்தத்தோடு சமைப்பது நல்ல ருசியை தரும்  )
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.பின் அதை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.தேங்காயை  துருவி நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.பூண்டு, இஞ்சி அரைத்துக்கொள்ளவும்.தக்காளி அரிந்து கொள்ளவும்.




குக்கரில் எண்ணைய் விட்டு இஞ்சி பூண்டு விழுதை நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.பின்பு சுத்தம் செய்த வாத்தினை போட்டு நன்கு வதக்க வேண்டும்.இரண்டு டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து வதக்கவும்.வாத்திலிருந்து எண்ணைய் நிறைய பிரியும்.அவ்வாறு பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.பிறகு அரிந்து வைத்திருக்கிற தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.



நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கிற தேங்காய், வெங்காய கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து தேவையான  உப்பு சேர்த்து குக்கர் மூடி போட்டு எட்டு முதல் பத்து விசில் வரை விடவும்.(புளி வேண்டுமென்பவர்கள் கொஞ்சம் கரைச்சு ஊத்திக்கொள்ளலாம்)
பின் விசில் இறங்கியவுடன் கொத்தமல்லி தழை போட்டு மூடிவிடவும்.சுவையான  வாத்துக்குழம்பு தயார்.குக்கரில் வேண்டாம் என்பவர்கள் அரை மணி நேரம் வாணலியில் கொதிக்க வைத்தால் சுவையான குழம்பு ரெடி....
இதையே கொஞ்சம் சுண்ட வைத்தால் வாத்து வறுவல் ரெடி...

குழம்பில் என்னதான் மஞ்சளும் மிளகாயும் சேர்த்தினாலும், குழம்பின் நிறம் கொஞ்சம் கருப்பாகவே இருக்கும்.அதுதான் வாத்துக்கறியின் சுவை....
காலையில் சூடாய் இட்லிக்கு சாப்பிட்டால் செமயாக இருக்கும்.வாத்துக்கறி கொஞ்சம் எலும்பாகத்தான் இருக்கும்.ஆனால் சாப்பிட சூப்பராக இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, April 2, 2015

சமையல் – இனிப்பு - பப்பாளி அல்வா (PAPAYA HALWA)

                         இப்போ பப்பாளி சீசன் போல...எங்க பார்த்தாலும் பப்பாளி பழங்களா தெரியுது.எங்க கிராமத்துல ஒவ்வொரு வீட்டின் புழக்கடையிலும் ஒண்ணு ரெண்டு பப்பாளி மரங்கள் இருக்கும்.காசு கொடுத்து வாங்கி தின்ற பழக்கம் இல்லை இதுவரைக்கும்.வீட்டு மரங்களில் பழுக்கின்ற பழங்களை எங்கள் தேவைக்கு போக மீதி அக்கம்பக்கத்து வீட்டினருக்கு கொடுத்து விடுவோம். மரத்திலேயே பழுத்து இருப்பதால் நல்ல ருசியும் மணமும் இருக்கும் ஆனால் இப்போது நகரத்தில் விற்கிற காய்கள் அனைத்தும் கல் வைத்து பழுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றதால் சாப்பிட பிடிப்பதில்லை.

                         அப்படி ஊருக்கு சென்றிருந்த போது கொண்டு வந்திருந்த பழங்களில் செய்த பதார்த்தம் தான் இந்த அல்வா. இதுவரைக்கும் எங்கேயும் சாப்பிட்டதில்லை.புதிதாய் முயற்சித்து பார்ப்போமே என்றதில் நல்ல ரிசல்ட்.நம்ம அம்மணிக்கும் சந்தோசம்... சுவை நன்றாக வந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:
பப்பாளி  - 1 பழம்
சர்க்கரை – கால்கிலோ
நெய் – 200 மிலி
முந்திரி – சிறிதளவு
பாதாம் – சிறிதளவு
ஏலப்பொடி - சிறிதளவு

செய்முறை:
ப்ப்பாளி பழத்தினை தோல் சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
அடுப்பினை பற்றவைத்து வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரைத்த பப்பாளி விழுதினை விட்டு வதக்க வேண்டும்.
பச்சை வாசம் போகும்போது சர்க்கரையை கொட்டி கிளறவேண்டும்.
ஏலக்காய் பொடி தூவவேண்டும்
நன்கு வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு வதக்கி நன்கு வெந்தபின் வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது கொஞ்சம் நெய்யில் முந்திரி பாதாம் பருப்புகளை வறுத்து அல்வாவுடன் சேர்த்து கிளறவும்.







 

சுவையான சூப்பரான அல்வா ரெடி....
சூடாகவோ ஆறவைத்தோ சாப்பிட செமையாக இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 23, 2014

சமையல் - அசைவம் - மீன் முட்டைப் பொரியல்

மீன் முட்டைப் பொரியல்
             இந்த வார ஞாயிற்றுக்கிழமை எனது பால்ய கால நினைவுகளோடு கரூரில் நிஜமாகவே கழிந்தது.நண்பகல் நேரம் மீன் பிடிப்பதற்காக புஞ்சைப்புகளூர் காவிரி ஆற்றுக்கு சென்றோம்.தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் ஆற்றின் ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி ஓடிக் கொண்டிருக்கிறது.மற்ற இடங்கள் சகாரா பாலைவனம் போல இருக்கிறது.தண்ணீர் தேங்கிய இடங்கள் கொஞ்சம் ஆழத்துடன் இருக்கவும் கவனமாய் இறங்கினோம்.



மீனவர்களின் வலைக்கு தப்பிய ஒரு சில மீன்கள் எங்கள் கைகளில் அகப்பட காத்துக்கொண்டிருந்தன.தண்ணீரில் வலையை சுற்றிக்கட்டிவிட்டு புதர்களில் கைகளால் மீன்களை பிடிக்க ஆரம்பித்தோம்.எங்களின் கைகளில் சில மீன்கள் மாட்டின.தப்பிச்சென்ற பல மீன்கள் வலையில் மாட்டின.இரண்டு தண்ணீர் பாம்புகள் கூட அகப்பட்டு பரிதாபமாய் உயிர்விட்டன.

பிடிபட்டவை அனைத்தும் கெண்டை மற்றும் ஜிலேபி மீன்களே...அதில் கெண்டை மீன்கள் மட்டுமே கொழுத்துக்கிடந்தன.இப்படியாய் நான்கு கிலோவுக்கும் மேலே பிடித்துவிட்டு கிளிஞ்சல்கள் உதவியால் செதில்களை நீக்கி குடல் அசுத்தங்களை எடுக்கும்போது தான் கெண்டை மீன்கள் அனைத்தும் செனை பிடித்திருப்பது தெரிந்தது.கவனமாய் மீன்முட்டைகளை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டோம் பொரியல் செய்வதற்காக…..



கிட்டத்தட்ட அரைக் கிலோவிற்கும் மேலாக மீன் மூட்டை இருக்கும்.அதை பத்திரப் படுத்தியவுடன் மீன்களை அலசி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
இனி மீன் முட்டைப்பொரியல் செய்வதைப் பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 200 கிராம் - பொடியாய் நறுக்கியது
பூண்டு –  10 பற்கள் - பொடியாய் நறுக்கியது
மஞ்சள்தூள் – சிறிதளவு
பச்சைமிளகாய் – இரண்டு மட்டும்
எண்ணைய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை :
முதலில் எண்ணைய் விட்டு வெங்காயம், பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.பின் மீன் முட்டையை போட்டு அடிபிடிக்காமல் கிளறவேண்டும்.நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.பின் தேங்காய் துருவலை தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.கொத்தமல்லி. புதினா தழை இருந்தால் தூவிவிடலாம்.சாப்பிட மிக டேஸ்டாக இருக்கும்




இந்த மீன் சினை கடைகளில் எங்குமே கிடைக்காது,ஆற்றிலோ கடலிலோ ஃபிரஷாக பிடிக்கப்படும் மீன்கள் கருவுற்றிருந்தால் மட்டுமே மீன் சினை கிடைக்கும்.அதை மேற்சொன்ன வகையில் செய்து சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, March 28, 2014

சமையல் - சைவம் - வெண்டைக்காய் ஃப்ரை ( Lady Finger Fry )

வெண்டைக்காய் ஃப்ரை
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வெஜ் மெனு...வெண்டைக்காய் ன்னாலே நம்ம வீட்டுல அலர்ஜி...எப்பவாது மட்டுமே புளிக்குழம்புல வெண்டைக்காய் இடம்பிடிக்கும்.அதே மாதிரித்தான் பொரியலும்..... தீபாவளி பொங்கல் மாதிரிதான் எப்பவாவது.....அதிகமா செய்யமாட்டாங்க.....ஏன்னா அதுல இருக்குற வழவழப்புதான்.....ஒரு நாள் பக்கத்து வீட்டு அம்மணி நம்ம வாண்டுக்கு வெண்டைக்காய் ஃப்ரை கொடுத்துவிட்டாங்க.சைக்கிள் கேப்ல நானும் சாப்பிட்டுப்பார்த்தேன்...செம டேஸ்டா இருந்துச்சு...உடனே எப்படி செய்யறதுன்னு கேட்டு அடுத்த நாளே அதே மாதிரி பண்ணிப் பார்த்ததில் இன்னும் செம டேஸ்ட்.அடிக்கடி  ஃப்ரை செஞ்சு கொடுக்கிறதால் நம்ம வீட்டு வாண்டுக்கு ரொம்ப பிடித்த மெனு ஆகிப்போச்சு........வாரத்துல மூணு தடவை இது மாதிரி பண்ணித் தந்திடனும்.

எப்படி செய்வது ?
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 10
மிளகுத்தூள் - கொஞ்சம்
உப்பு – கொஞ்சம்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை
வெண்டைக்காயை கழுவி துணியில் துடைத்துக்கொள்ள வேண்டும்.பின் அதில் காம்புப்பகுதியை வெட்டிவிடவேண்டும்.வெண்டைக்காயின் அனைத்துப்பகுதிகளிலும்  நீளவாக்கில் கத்தியினால் கீறிக்கொள்ள வேண்டும்

உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கீறிய உள்பகுதிகளில் தடவ வேண்டும்.வெண்டைக்காயைச் சுற்றிலும் தடவ வேண்டும்.
பின்னர் வாணலியில் அனைத்து வெண்டைக்காயையும் வைத்து கொஞ்சம் எண்ணைய் தடவி வேக விடவேண்டும்.அவ்வப்போது திருப்பி விட வேண்டும்.வெண்டைக்காய் நன்கு வதங்கியவுடன் எடுத்துவிட வேண்டும்...
சுவையான வெண்டைக்காய் ஃப்ரை ரெடி....




உப்பு மிளகுடன், மிளகாய்ப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். (வெறும் மிளகு, உப்பு இருந்தாலே போதும் செம டேஸ்டாக இருக்கும்).நான் வெள்ளை மிளகு, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து இருக்கிறேன்) தோசைக்கல்லில் வதக்கினாலும் கூட நன்றாக இருக்கும்.
ஓவனில் வைத்து கிரில் செய்தும் சாப்பிடலாம்..மிக சுவையாக இருக்கும்.முழு வெண்டைக்காயை அப்படியே சாப்பிட செம டேஸ்டாக இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...