கல்பனா தியேட்டர்
எங்கள் ஏரியாவான
கவுண்டம்பாளையத்தில் இருக்கிற ஒரே ஒரு தியேட்டர்.நகரின் வெளியே இருப்பதால் புது படங்கள்
வெளியாகாத கால கட்டம்.நகரில் ஓடி முடித்த புதுப்படங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்
கழித்து செகன்ட் ரிலீஸாக இங்கே படம் வரும்.ரீல்
முறையில் தான் புரொஜக்டர் இயங்கி கொண்டிருந்தது.நான்கு ரீல் முடிந்தவுடன் மீண்டும்
மற்றொரு ரீலை பொருத்தி படம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த கால கட்டம்.
அதற்கு
அப்புறம் இடைவேளை வரை ரீல் அந்து போகாமல் ஒரே ஒரு இடைவேளை விட்ட காலகட்டம் டிக்கெட்
விலையும் மிக குறைவாக இருந்த நேரம்.சேர் 4 ரூபாய்,பால்கனி 8 ரூபாய் என இருந்த காலகட்டம்.
இரவு காட்சிகளில் கதவை மூடாமல், இயற்கை காற்றை சுவாசித்தபடி பார்த்த காலகட்டம்…சனி
ஞாயிறுகளில் கவுண்டம்பாளையத்தினை சுற்றி இருக்கிற மக்கள் ஹவுஸ்புல்லாகி பார்த்துக்கொண்டிருந்த
காலகட்டம்… பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் புதுப்படங்களை இறக்குமதி செய்தார்கள்.பின் மீண்டும்
க்யூப் தொழில்நுட்ப முறைக்கு மாறி முதல் நாள் ரீலீஸாக ரஜினி, விஜய் அஜித் படங்களை வெளியிட்டார்கள்.ஓடின
படங்கள் சீக்கிரமே அரங்கினை விட்டு ஓட தடுமாறித்தான் போனார்கள்.
அப்புறம் திரைப்படங்களில்
அதிகம் லாபம் எடுக்க முடியாமல் திணறிப்போய் திரையரங்கினை மூடி விட்டனர்.அதற்கு பின்
ஒரு கார் கம்பெனிக்கு லீஸுக்கு விட்டனர்.ஒரு வருடத்திற்கு மேல் இருந்தது.இப்பொழுது
அந்த கார் சர்வீஸ் கம்பெனியும் காலி செய்து விட்டது.கடந்த மூன்று நான்கு மாதமாக திரையரங்கினுள்
ஏதோ இண்டீரியர் வேலை நடந்து கொண்டு இருந்தது.இப்பொழுது வெளிப்புற வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.என்னவென்று
விசாரித்ததில் திரையங்கம் நவீனப்படுத்தப்பட்டு இரண்டு ஸ்கீரீன்கள் கொண்ட அரங்கமாக மெருகேற்றப்பட்டு
கொண்டு இருக்கிறது என்றார்கள்.நல்ல ஒலி ஒளி அமைப்புடன் புது திரைப்படங்களை கண்டு களிக்க
முடியும் என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.எப்பொழுது திறப்பு விழா என்று
தெரியவில்லை.திறப்பிற்க்காக காத்திருக்கிறோம்.
இதையெல்லாம் விட இந்த கல்பனா திரையரங்கில்
பெரிய அம்சம் என்னவெனில் கேண்டீனில் 2ரூபாய்க்கு கிடைக்கும் வெங்காய சமோசாதான்.சமோசா
வந்து சேர்ந்து அதன் வாசனை பரவினாலே போதும், இடைவேளைக்கான அறிகுறி என்று அர்த்தம்.கை
நிறைய வாங்கிக்கொண்டு அரங்கினுள் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் சமோசாவினை சாப்பிட்டு
கொண்டே பொறுமையாய் படத்தினை ரசிக்கும் மனநிலை இருக்கிறதே…ஆஹா…படம் சரியில்லை என்றாலும்,
சமோசா மட்டும் எப்போதும் நன்றாகவே இருக்கும்.வதக்கிய வெங்காயத்தின் மணமும் சுவையும்
எந்த திரைப்படமும் தந்ததில்லை.இந்த தடவை நவீனமயமாக்கப்பட்ட கேண்டீனில் சமோசாவுக்கான
இடம் இருக்குமா என்பது கேள்விக்குறியே….
அரங்கம் ரெடியாகட்டும் போட்டோ அப்லோடுகிறேன்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்