Friday, December 16, 2016

தகவல் - ஆன்லைனில் பணம் ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி - ONLINE TRANSFER

பழைய ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாதவை ஆகிவிட்டதாலும், நமது அக்கவுண்டில் உள்ள பணத்தினை வங்கியில் இருந்து எடுப்பதற்க்கும் சில கட்டுப்பாடுகளை RBI விதித்து இருப்பதாலும் பணத்தினை கைகளில் கொண்டு வராமலே ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்யும் முறையினை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.ஆன்லைன் மூலம் நமது எல்லாத் தேவைகளுக்கும் பணத்தினை செலுத்தி விடலாம்.ஏடிஎம் கார்டு, கிரடிட் கார்டு இருப்பின் அதை பயன்படுத்தி கடைகளில் உள்ள ஸ்வைப்பிங் மெசின் உதவி கொண்டு பொருட்களைப் பெறலாம்.மளிகைப்பொருட்கள், துணிமணிகள், பர்னிச்சர், சினிமா, என எல்லாவிதமான தேவைகளையும் பெறமுடியும்.பணம் செலுத்தக்கூடிய சிறு சிறு அத்தியாவசிய இடங்களில் வங்கியில் இருந்து பெறப்படும் பணத்தினை கொண்டு செலவு செய்யலாம்.செக் எனப்படும் காசோலை மூலமும் ஒரு சில இடங்களில் கொடுத்து பரிவர்த்தனை பண்ணலாம்.
ஒருவரின் அக்கவுண்ட்க்கு நமது அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும் முறையை இப்போது பார்க்கலாம்.
ஆன்லைன் ட்ரான்ஸ்பர்  என்பது நெட் பேங்கிங் என்பதாகும்.இந்த வசதி தனியார் வங்கிகளில் தற்போது அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது.மக்கள் அதிகம் புழக்கம் உள்ள  ஸ்டேட் பேங்க், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ், இந்தியன் பேங்க் போன்ற வங்கிகளில் ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இண்டர்நெட் மற்றும் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் இந்த வசதியினை உபயோகப்படுத்தினால் மட்டுமே இந்தியா டிஜிட்டல் இந்தியாவாகும்.

நான் தனியார் வங்கியினை உபயோகப்படுத்தி வருவதால் அந்த முறையினை இப்போது பார்க்கலாம்.
தனியார் வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தபின், உங்களுக்கு ஒரு கஸ்டமர் ஐடி தருவார்கள்.அந்த ஐடிக்கு ஏற்றபடி பாஸ்வேர்ட் டும் தருவார்கள்.அந்த பாஸ்வேர்டை உங்களுக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ள முடியும்.வங்கியின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் நுழைந்து நெட்பாங்கின் ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்கள் அக்கவுண்ட்டின் கஸ்டமர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும்.

நுழைந்தபின் உங்கள் அக்கவுண்டின் பொதுவான மெனுக்கள் தோன்றும்.ACCOUNT SUMMARY, TRANSACT, ENQUIRE, REQUEST  போன்ற மெனுக்கள் தோன்றும்.மேலும் FUND TRANSFER, BILL PAY, CARDS மற்றும் இன்னபிற மெனுக்கள் தோன்றும்.ஒவ்வொன்றாய் கிளிக் பண்ணி தாங்களாகவே எதற்கு இந்த ஆப்சன் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

நாம் இப்பொழுது பணம் அனுப்பும் முறையினை பார்ப்போம்.FUND TRANSFER எனும் மெனுவினை கிளிக் பண்ணினால், கீழ்க்கண்ட மெனுக்கள் தோன்றும்.WITH IN BANK, INSTANT TRANSFER, NEFT, RTGS,  என இருக்கும்.

மேலும் இடது பக்கத்தில் இருக்கும் மெனுவில் REQUEST என்கிற மெனுவில் ADD BENEFICIARY என்கிற மெனுவினை கிளிக் செய்து  நமக்கு தேவையான மெனுவான NEFT ஐ கிளிக் பண்ணினால் இன்னொரு பக்கம் தோன்றும்.அதில் நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டியிருக்கிறதோ அவரின் அக்கவுண்ட் எண், பெயர், IFSC CODE, மெயில் ஐடி போன்றவற்றை எண்ட்ரி செய்யவேண்டும்.



மேற்கண்ட தகவல்களை எண்ட்ரி செய்து ஒகே செய்தவுடன், உங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) வரும்.அதை மீண்டும் எண்ட்ரி செய்தவுடன் உங்களின் அக்கவுண்ட்டில் பெயர் சேர்த்துக்கொள்ளப்படும்.வெரிஃபிகேசன் ஆன அரைமணி நேரம் கழித்துத்தான் அந்த அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்ப முடியும்.
பின் மீண்டும் மேற்சொன்ன வழிமுறைகளை கடந்து உங்களின் அக்கவுண்டை திறந்து FUND TRANSFER இல் TRANSACT என்கிற மெனுவை கிளிக் செய்தால் ஒரு மெனு உண்டாகும்.அதில் உங்கள் அக்கவுண்ட் எண், மற்றும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் பெயர் லிஸ்ட் வரும்.அதை செலக்ட் செய்து விட்டு, என்ன காரணம், எவ்வளவு தொகை, மொபைல் எண் போன்றவற்றை செலக்ட் செய்து ஓகே செய்தால் மீண்டும் ஒரு OTP பாஸ்வேர்டு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.அதை எண்டர் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து இன்னொரு அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பப்பட்டு விடும்.உங்கள் மொபைல் எண்ணுக்கு பணம் செலுத்திய விவரம் குறுஞ்செய்தியாக வந்து சேரும்.

இப்படி பல பேருக்கு சில நிமிடங்களில் பணம் அனுப்ப முடியும்.தொகைக்கு ஏற்றார்போல NEFT அல்லது RTGS ஐ தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.கிட்டத்தட்ட நூறு அக்கவுண்ட் எண்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
மேலும் வங்கி கொடுத்துள்ள வசதிகளைக் கொண்டு கிரடிட் கார்டு, டெலிபோன் பில், லைப் இன்சூரன்ஸ், ரீசார்ஜ் என எல்லா சர்வீஸ்களுக்கும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.
உங்கள் அக்கவுண்ட்டின் ஸ்டேட்மெண்ட், செக் புக் போன்றவற்றை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.வங்கி கொடுத்துள்ள அத்தனை வசதிகளையும் ஆன்லைன் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது வங்கிகள் மொபைல் அப்ளிகேசன் தருகின்றன.ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இந்த வசதியை தரவிறக்கம் செய்துகொண்டு, மொபைல் மூலமும் பணத்தினை அனுப்பலாம்.
இந்த வசதிக்கு கண்டிப்பாக இண்டர்னெட் வசதி தேவை.இப்போது அனைத்து இடங்களிலும் பிராட்பேண்ட் சேவை, வை பை போன்றவை கிடைக்கின்றன.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதால் நமக்கு நேரம் மிச்சம் ஆகிறது.அதுமட்டுமல்ல பணமும் பாதுகாப்பாய் சென்று சேர்கிறது.உங்களின் ரகசிய பாஸ்வேர்டு மற்றும் பின் நம்பரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.அதன் மூலம் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் கொள்ளை போக வாய்ப்புண்டு.

புதிய டிஜிட்டல் இந்தியாவிற்காக என்னால் ஆன சிறு முயற்சி இந்த பதிவு.

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Wednesday, November 30, 2016

சாணை பிடிக்கலையோ...சாணை...பேஸ்புக் பதிவு

சாணை பிடிக்கலையோ..சாணை...



                     காலையில் இந்தக்குரலை கேட்டு ஓடோடி வெளியே வந்தேன்.பல நாட்களாகவே வீட்டில் நிறைய கத்திகள் பதமின்றி இருக்க, இந்தமுறை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று சாணை பிடிக்கும் பையனை நிறுத்தினேன். எப்பவாது ஒரு முறை எங்கள் தெருப்பக்கம் வரும் சாணை பிடிப்பவர்கள் குரல் கேட்டு, அவர்களை நிறுத்தி, இருக்கும் ஓரிரண்டு கத்திகளை காட்டி சாணை பிடித்து தர விலை கேட்டால், புதிய கத்திகளே வாங்குமளவுக்கு விலை சொல்வார்கள்.வேண்டாம் என்று சொல்லி மீண்டும் பழைய கத்திகளோடு சமையலறையில்போராட்டம் தொடரும்.
                                        அவ்வப்போது இரண்டு கத்திகளை ஒன்றோடொன்று தேய்த்து உரைத்து பயன்படுத்தி கொண்டிருப்போம்...இப்படியே நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதங்கள் ஆகின.மாதங்கள் வருடங்கள் ஆகிவிடக்கூடாது என்கிற கட்டாயம்.நாளை ஞாயிறு வேறு.கண்டிப்பாய் மட்டனோடு போராட வேண்டியிருக்கும்.ஊரிலிருந்து வாரா வாரம் வரும் ஜிலேபி மீனை வெட்ட வேண்டியிருக்கும்.சிக்கனும் பீஃப் பும் வேறு வரிசை கட்டி காத்திருக்கும்.
                                  அதனால் இம்முறை சாணை பிடித்தே ஆகவேண்டும் என பையனை நிறுத்தி விலை கேட்டேன்.எப்பவும் போலவே புதிய கத்திகள் வாங்குமளவுக்கு சொன்னான்..இப்பொழுது இருக்கும் நாட்டின் நிலைமையில் பணம் செலவழிப்பது வேறு ஒரு பிரச்சினை.இருந்தாலும் சா. பையனிடம் பேச்சு கொடுத்து பேரத்தில் இறங்கினேன்.கத்திக்கு பத்து ரூபாய் கொடுங்க பண்ணித்தரேன் என சொல்ல, சரி இன்றைய இவனது உழைப்பு என்னிடத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும் என்று கத்திகளை கொடுத்தேன்.
                                          சைக்கிள் வீலில் பெல்ட்ஐ மாற்றி பெடல் பண்ண ஆரம்பிக்க, சாணைச்சக்கரம் வேகமாய் சுழல ஆரம்பித்தது.கத்தியை அதில் வைத்து லாவகமாய் இருபுறமும் பிடித்து நெருப்பு பொறி சிதற கத்தியை கூர் தீட்டிக்கொண்டிருந்தான்.காலும் கையும் ஒரு சேர இயங்கிக்கொண்டிருக்க, அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
                    எங்கிருந்து வர்றீங்க, எங்க இருக்கீங்க, என கேள்விகளை கேட்கவும், சொந்த ஊர் ராம்நாடு, இங்கு காந்திபுரத்தில் தங்கியிருக்கிறோம்.வீடா, இல்லை லாட்ஜா என கேட்க, இல்லை ஆம்னி பஸ்ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில்தான் எனவும் கிட்டத்தட்ட 25 பேர் இப்படி தங்கியிருக்கிறோம்.ஒரு நாள் வருமானம் ரூ 250 க்குள் தான் வரும், எங்காவது திருட்டு நடந்து விட்டால் சந்தேக லிஸ்ட்லில் கொண்டு போவார்கள்,அட்ரஸ் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவார்கள் என்றும் தினமும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று தெருத்தெருவாய் கூவிக் கூவி கிடைக்கும் பணத்தை சேர்த்து ஊருக்கு போவோம்.
                                   இது எங்கள் குலத்தொழில் இதை விட எங்களுக்கு மனசில்லை எனவும் ஊரில் ஏகப்பட்ட நிலபுலன்கள் இருக்கின்றன ஆனால் வறட்சி காரணமாக எந்த வேலையும் கிடைப்பதில்லை என சொல்லிமுடிக்கையில் சாணைக்கல்லும் சுத்துவதை நிறுத்தியிருந்தது.முடிவில் அவனது உழைப்புக்கான ஊதியத்தை இருமடங்காய் தந்தபோது அவனின் முகம் கொஞ்சம் பளபளத்தது கூர் தீட்டப்பட்ட கத்தியை போல..பதம் பார்த்த கத்தியை வாங்கியதில் அவனது உழைப்பின் சூடு என் கைகளில் ஏறியிருந்தது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, October 5, 2016

அனுபவம் - ஓலா (OLA) டாக்ஸி - கட்டணக்கொள்ளை - OLA TAXI

ஓலா(OLA)வின் கட்டணக்கொள்ளை

கடந்த சனிக்கிழமை அன்று கோவை காந்திபுரம் கணபதி சில்க்ஸ் நிறுத்தத்திலிருந்து கொடிசியா விற்கு ஓலா வில் பயணித்தேன்.
சில்லறைத்தட்டுப்பாடு மற்றும் ட்ரைவர் பேட்டா இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக ஓலா மணி ( OLA MONEY) யில் வரவு செலவு வைத்து இருப்பதால் அன்று சென்ற கட்டணத்தினை உடனடியாக கழித்துக்கொண்டனர். அன்று போன கிலோ மீட்டர் தூரம் 9 கிலோமீட்டருக்குள் இருக்கும்.ரூ 154 எடுத்துக்கொண்டனர்.
பிறகு கொடிசியாவில் எனது வேலை முடிந்தவுடன் திரும்பவும் ஓலா வில் புக் பண்ணி வண்டி ஏறினேன்.மீண்டும் புறப்பட்ட இடமேதான்.அதே தூரம்.அதே வழித்தடம்.ஆனால் வந்த தொகையோ ரூ.255.எப்படி என்று ட்ரைவரிடம் வினவ, உங்களுக்கு 1 .6 டைம்ஸ் பீக் சார்ஜ் போட்டு இருக்கின்றனர் என்றார்.எனக்கு எதுவும் புக் பண்ணும்போது பீக் சார்ஜ் காட்டவில்லை என்றேன்.புக் பண்ணுவதற்கு முன்னாடி காட்டிட்டா எப்படி புக் பண்ணுவீங்க, புக் பண்ணியவுடன் மெசேஜ் வந்திருக்கும் பாருங்கள் என்றார்.அப்பொழுது தான் கவனித்தேன். அவர்கள் அனுப்பிய மெசேஜில் 1.6 டைம்ஸ் சார்ஜ் செய்யப்படும் என இருக்கிறது.








சனிக்கிழமை அதுவும் மதியம் ஒரு மணிக்கு மேல் மாலை நான்கு வரை அவினாசி சாலையில் அதிகம் வாகன நெரிசல் இருக்காது.இதற்கு எதற்கு பீக் அவர்ஸ் சார்ஜ் போட்டு இருக்கின்றனர்?
ஓலா அப்ளிகேசனில் புக் பண்ணும் போது இந்த மாதிரி பீக் அவர்ஸ் காட்டப்படவில்லை.ஆனால் புக் பண்ணியவுடன் மெசேஜ் அனுப்பி இப்படி கஸ்டமருக்கு தெரியாமலே கொள்ளை அடிக்கின்றனர்.புக் பண்ணுவதற்கு முன்னால் தெரிந்தால் புக் பண்ணாமலே இருப்போம்.அதனால் புக் பண்ணியவுடன் கன்பர்மேசன் மெசேஜில் இந்தமாதிரி பீக் சார்ஜ் போட்டுவிடுகின்றனர்.நாமும் எப்பவும் வரும் ஓலா மெசேஜ் தானே என்று படிக்காமல் விட்டு விடுகிறோம். 
பிறகு ட்ரிப் கேன்சல் பண்ணிவிட்டால் நமது அக்கவுண்ட்டில் இருந்து கேன்சல் சார்ஜ் தொகையை ஆட்டோமேட்டிக்காக எடுத்துவிடுவர் ஓலா மணியில் இருந்து.
வாடிக்கையாளரிடம் ஓலா மணி இல்லை என்றால் எப்போதாவது அவர் பயணிக்கும்போது அது ஒரு மாதமோ அல்லது ஆறு மாதமோ கழித்து இருந்தாலும் அவர் கேன்சல் பண்ண சார்ஜை மீண்டும் பயணிக்கும்போது பில் பண்ணி விடுவர்.பக்கா அப்டேட் சாப்ட்வேர்.
நீங்கள் பயணிக்கும் தூரத்தில் சிக்னலில் காத்திருக்கும் ஒவ்வொரு நொடிக்கும் வெயிட்டிங் சார்ஜ் போடப்படுகிறது.சாரி கொள்ளையடிக்கப்படுகிறது.
ஓலாவின் பெயரில் வண்டி ஓட்டும் வாடகை மற்றும் சொந்த கார்களை வைத்திருப்பவர்களுக்கு பர்சன்டேஜ் அடிப்படையில் பணம் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அதிக பர்சன்டேஜ் எடுத்து கொள்ளை அடிக்கின்றனர்.
ரேட் கார்டில் ஒரு தொகை இருக்கிறது.ஆனால் பில் பண்ணுவதோ வேறு மாதிரி இருக்கிறது.
ஓலா ட்ரைவர்கள் யாராவது தப்பு செய்து காவல் துறை வசம் மாட்டினால், உடனடியாக அவர்களை டெர்மினேட் பண்ணி எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை விட்டுவிடுவார்கள்.எதற்கும் கோர்ட் கேஸ் என்று அலைவதில்லை.சமீபத்தில் நடந்த சென்னை சம்பவம் இதற்கு உதாரணம்.
ஆட்டோக்காரன் கொள்ளை அடிக்கிறான்னு இவங்ககிட்ட வந்தால் இவனுங்க டெக்னாலஜியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்.
எளிதில் புக் பண்ணும் முறை, சரியான நேரத்தில் வருவது, ட்ரைவர் ரெஸ்பான்ஸ், துல்லியமான பில் என எல்லாம் இருந்தாலும் ஒரே தூரத்திற்கு, ஒரே வழித்தடத்திற்கு மாறுபட்ட பில் பண்ணுவதில் ஓலாவிற்கு நிகர் ஓலா தான்.கிட்டத்தட்ட கொடிசியாவிற்கு நிறைய முறை போய் வந்து இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் ஒரு தொகை.
என்னதான் டெக்னாலஜியை பயன்படுத்தி எளிது படுத்தினாலும் கொள்ளை அடிப்பதில் ஏதாவது சந்துபொந்தை கண்டுபிடித்து விடுகின்றனர்.
இனி கொஞ்சம் கொஞ்சமாய் ஓலாவை புறக்கணித்து வேறொரு கால்டாக்ஸிக்கு மாறிவிட வேண்டும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...