Saturday, November 30, 2013

KOVAI BLOGGERS ASSOCIATION - I ST ANNIVERSARY

கோவையில் இருக்கின்ற ஒரு சில பதிவர்களின் முயற்சியால் KOVAI BLOGGERS ASSOCIATION ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு ஒரு வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.இந்த ஒரு வருட காலத்தில் எங்களால் முடிந்த அளவிற்கு சில சேவைகளை செய்து இருக்கின்றோம்.

உலக புவி ஈர்ப்பு தினத்தில் புவி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ROBERT BOSCH நிறுவனம் மற்றும் ப்ரூக்பீல்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 வயது முதல்  10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளோம்.
இந்த  நிகழ்வில் தேசியவிருது பெற்ற ஓவியர் திரு ஜீவானந்தம் அவர்கள் நடுவராக பங்கேற்று பரிசினை வழங்கினார்.தோழி சரளா அவர்கள் பல விழிப்புணர்வு கருத்துக்களை கவிதையாக  வழங்கினார்.தோழி எழில் அவர்களும் தன் கருத்துக்களை பட்டியலிட்டார்.



கோவை உக்கடம் டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் உள்ள 150 ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரவு உணவு வழங்கி சிறப்பித்தோம்.இந்நிகழ்வில் எழில் (நிகழ்காலம்), கோவை மு சரளா (பெண் எனும் புதுமை), அகிலா (சின்ன சின்ன சிதறல்கள் ), உலகசினிமா ரசிகன்,  கலாகுமரன் (இனியவை கூறல் ), ஆனந்த் (கோவை ஆவி ), வெண்பா சுஜாதா, பேஸ்புக் நண்பர் பிரசாந்த், மற்றும் திருச்சியில் பணிபுரியும் தலைமைக்காவலர் திரு முருகானந்தம் அவர்கள் தலைமையிலும் டான் பாஸ்கோ இல்ல நிர்வாகி தலைமையிலும் திருநங்கை சங்கீதா அவர்கள் தயாரித்த சுவைமிகுந்த இரவு நேர உணவை வழங்கி சிறப்பித்தோம். 

கோவை குப்பக்கோனாம்புதூரைச் சார்ந்த திரு மகேஸ்வரன் என்பவர் பிப்ரவரி மாதம்  பேருந்து விபத்தில் சிக்கி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவரின் மருத்துவ செலவுக்காக மாதா மாதம் சிறுதொகை அளிக்கப்பட்டது.

நம் அமைப்பு ஈரநெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆதரவற்றோர்க்கான மனநோய் காப்பகத்தில் அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கோவைப்பதிவர்கள் அமைப்பைச் சார்ந்த கலாகுமரன், அகிலா மற்றும், சரளா ஆகியோர் கலந்து கொண்டனர்.




கோவை உக்கடம் சரகத்திற்குட்டப்பட்ட முஸ்லீம் மஜீத் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இஸ்மாயில் என்பவரின் மூலம் அவர்கள் சமூகத்தில் இருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு திருமண நிதியுதவி அளிக்கப்பட்டது.

அதே போல் டெல்லி தமிழ்க்குடில் அமைப்பால் அரியலூர் மாவட்டம் சிலம்பூரில் தோற்றுவிக்கப்பட்ட பொது நூலக கட்டுமான பணிக்கு நம் அமைப்பின் மூலம் நன்கொடை அளிக்கப்பட்டது.


அதே போல் இன்று கோவை PSG  மருத்துவமனையில் இருதய வால்வு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தினம் என்கிற 65 வயது பெண்மணிக்கு A + ரத்தம்  4 யூனிட்  ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மிக நலமாக இருக்கிறார்.

மேற்கொண்ட நிகழ்வுகள் அனைத்திலும் பங்கேற்று, போதுமான செயல்திறனையும், நிதியுதவியையும் அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி...

இனி வரும் வருடமும் இது போன்று எங்களால் முடிந்த சேவைகளை தொடர்வோம் என்ற நம்பிக்கையில்

ஜீவானந்தம்
கலாகுமரன்
கோவை மு.சரளா
எழில் அருள்
அகிலா
பாஸ்கரன்
ஆனந்த் விஜயராகவன்
லக்‌ஷ்மணன் ஃபேஸ்புக்
ஜெகதீஸ்குமார் ஃபேஸ்புக்
பிரசாந்த் ஃபேஸ்புக்
அன்பழகன் ஃபேஸ்புக்
வெண்பா சுஜாதா ஃபேஸ்புக்

KOVAI BLOGGERS ASSOCIATION - Regd No :370/2012 . இந்தியாவின் முதல் வலைப்பதிவர்களுக்கான சங்கம் தோற்றுவித்தது  நம் கோவையில் தான்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Friday, November 22, 2013

பயணம் – சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம் ( SIRUMALAI, DINDIGUL )

      திண்டுக்கல்லில் இருந்த போது சிறுமலை என்கிற கோடைவாசஸ்தலத்தினை பற்றி கேட்டறிந்தபோது என்றாவது ஒரு நாள் அங்கு போகவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.திண்டுக்கல்லில் இருந்து 25 கிமீ தொலைவில் இருக்கிற ஒரு மலைகிராமம் தான் சிறுமலை. அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாத ஒரு கோடை வாசஸ்தலம்.மூலிகைக்கும், முக்கனிகளுள் முக்கியத்துவம் பெற்ற பலா, வாழை இவைகள் அதிகம் விளையக்கூடிய இடம்.ஆனால் மூலிகைகளின் பயன்பாடு பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத ஊர்.காட்டெருமை மற்றும் பலவித உயிரினங்கள் வாழ்கின்ற ஒரு காடு.ஆரம்பத்தில் இலங்கையில் இருந்து வந்த விடுதலைப்புலிகள் இங்கு ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட இடம் என்றும் கேள்விப்பட்டதினால் சிறுமலை மீது மோகம் வந்தது.சென்றுதான் பார்ப்போமே என்று........ அப்படித்தான் அந்த திருநாள் வந்தது.திண்டுக்கல்லில் அடித்த வெயில் காரணமாக ஒரு பகல் வேளை சிங்கம் சீறிப்பாய்ந்தது சிறுமலை ரோட்டில்...

        வனத்துறை செக்போஸ்ட் தாண்டி சிறிது தூரம் செல்கையில் மலைப்பாதை ஆரம்பிக்கின்றன.வளைந்து வளைந்து செல்லும் பாதை, இருபுறமும் இயற்கை பச்சைப்பசேலென்று...மொத்தம் பதினெட்டு ஹேர்பின் பெண்டுகள் இருக்கின்றன.ஒவ்வொன்றையும் கடக்கும் போது கொஞ்சம் திகிலிடுகிறது.சற்றே குறுகலான ஒரு வழிப்பாதை.எதிரில் வண்டிகள் வந்துவிட்டால் கொஞ்சம் சிரமம் தான்.ஆனாலும் அதிக வாகன நெருக்கடி இல்லாமல் மலைப்பாதை கொஞ்சம் ஃபிரியாகத்தான் இருக்கிறது.






           பதினெட்டு ஹேர்பின் வளைவுகளை கடந்தபின் சிறுமலை என்கிற சிற்றூர் நம்மை வரவேற்கிறது.பசுமையும் கொஞ்சம் இதமான குளிரும் நம்மைப்பரவுகிறது.இங்கே சுற்றிப்பார்க்க எதுவும் இல்லை என்பதே இதன் சிறப்பம்சம்.ஒரே ஒரு போட் ஹவுஸ் இருக்கிறது.அதுவும் ஆள் அரவமின்றி படகுகள் தரையிலே நீந்திக்கொண்டிருக்கின்றன.
பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது படகுகள்..ஒருவேளை கோடை விடுமுறையில் செயல்படுமோ என்று தெரியவில்லை.


             கொஞ்ச  நேரம் அங்கும் இங்கும் உலாவியதில் கண்டுகொண்ட விஷயம் என்னவெனில் அருகே உள்ள தோட்டத்தில் வாழைமரங்களும் பலா மரங்களும் அதிகமாய் இருக்கின்றன.சுற்றியதில் ஏற்பட்ட களைப்பை நீக்க டீ சாப்பிட சென்றோம்.ஒரே ஒரு நீண்ட தெரு இருக்கிறது.இருபுறமும் கிராமத்திற்கே உண்டான வகையில் கடைகள்.மொத்தம் இரண்டோ அல்லது மூன்று ஓட்டல்கள் மட்டுமே இருக்கின்றன.இரவு உணவு வேண்டும் என்றால் முன்பே சொல்லிவைத்தால் தான் ஏற்பாடு செய்வார்கள்.இல்லையேல் 7.30 மணிக்குள் இழுத்து பூட்டிவிடுவார்கள்.விவரங்களை கேட்டப்படியே சூடாய் டீ குடிக்க குளிருக்கு இதமாய் இருந்தது.

           சிறுமலையில் மிகப்பிரசித்தம் சிறுமலைப்பழம் எனப்படும் வாழை.அந்த பழம் மிக டேஸ்டாக இருக்கும் என்பதினால் அந்த பழம் வாங்கி சாப்பிட்டோம்.ஒரு தார் போட இரண்டு வருடம் எடுக்குமாம்.அதனால்தான் இந்த டேஸ்ட் என்றனர் வியாபாரிகள்.அதுபோலவே ஒரு பழத்தின் விலையும் அதிகமாகவே இருக்கிறது.
           தங்க விடுதிகள் என்பது சுத்தமாக இல்லை.பெரும் பெரும் முதலாளிகள் இங்கே தங்குவதற்காக தன் சொந்த இடத்தில் கெஸ்ட் ஹவுஸ் கட்டி வைத்திருக்கின்றனர்.தெரிந்தவர்கள் என்றால் அவர்களிடம் சொல்லி முன்கூட்டியே அனுமதி வாங்கி அவர்களின் விடுதிகளில் தங்கலாம்.அங்கே சென்றபின் தங்க இடம் தேடினால் கிடைப்பது குதிரைக்கொம்பே.அப்படியும் இருக்கிற ஓரிரு கெஸ்ட் ஹவுஸில் தங்க இடம் கிடைத்தால் பாக்கியமே.
              ஐந்து மணி நேரம் அங்கு செலவிட்டபின் மலைப்பாதையில் திரும்பி வரும் போது ஏகப்பட்ட காட்டெருமைகள், குடியிருப்புக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.ஒரு வளைவினுள் திரும்பிய போது ஒரு பெரிய காட்டெருமை பள்ளத்தில் இருந்து ரோட்டிற்கு வர கொஞ்சம் பயந்தே போனோம்..ஆனால் அது அழகாய் என் கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு தன் வேலையைப்பார்க்க ஆரம்பித்தது.

சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாததால் சோர்ந்து இருக்கிறது இந்த சிறுமலை. இயற்கையை ரசிப்பவர்கள் கண்டிப்பாய் விரும்புவர்.ஒரு நாள் பயணத்திற்கு ஏற்றது.
திண்டுக்கல்லில் இருந்து மினிபஸ் செல்கிறது.சிறுமலைப்பழம் வாங்க வேண்டுமெனில் திண்டுக்கல்லில் தனி மார்க்கெட்டே இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Saturday, November 16, 2013

கோவை மெஸ் - டில்லி ஹோட்டல்,தலைமை தபால் நிலையம் ரோடு, கோவை

         நம்ம கிட்ட வேலை செய்யுற பசங்க எல்லாருமே வட இந்தியர்கள் என்பதால் அவங்க எப்பவும் சப்பாத்திதான் செஞ்சு சாப்பிடுவாங்க.அந்த சப்பாத்தி பார்க்க கொஞ்சம் முரட்டுத்தனமா இருந்தாலும் சாப்பிட அவ்ளோ சாஃப்டா இருக்கும்.(கொஞ்சம் கூட எண்ணையே இருக்காது ரொம்ப மொத்தமா இருக்கும் ஆனா செம சாஃப்டா இருக்கும்) எப்பவாது வெளியூர்ல வேலை நடக்கும் போது அப்படி நிறைய சாப்பிட்டு இருக்கேன்.கடைல இதுமாதிரி வட இந்திய சப்பாத்தி எங்க கிடைக்கும்னு கேட்டபோது போஸ்ட் ஆபிஸ்கிட்ட ஒரு கடை இருக்கு..ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்ல, அப்போதான் ஞாபகம் வந்தது, அட.....அந்தக்கடையில ரொம்ப வருசத்துக்கு முன்னமே சாப்பிட்டு இருக்கேனே என்று......சரி நம்ம வெப்சைட்ல ஏத்திட வேண்டியதுதான் என அடுத்த நாளே கிளம்பிட்டேன்.
             அந்த கடை பேரு டில்லி ஹோட்டல்..கடை ரொம்ப சின்ன கடைதான்.நான்கு டேபிள்கள் மட்டுமே போடப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு டேபிள்லயும் பச்சைமிளகாயும் உப்பும் வச்சி இருக்காங்க.இது சாதம் வாங்கி சாப்பிடும் போது ஊறுகாய் மாதிரி பச்சைமிளகாயை உப்புல தொட்டு சாப்பிடுறதுக்காக..கடையைப்பார்த்தா ரொம்ப பழசா ஓட்டையும் உடைசலுமா இருக்குது.ஆனா உள்ளே இருக்குற டிவில அக்சய்குமாரும் ஐஸ்வர்யாராயும் ஆடிப்பாடிகிட்டு இருக்காங்க.பாட்டைக்கேட்டுக்கிட்டே உள்ளே இருக்கிற ரெண்டு பசங்க சப்பாத்தி செஞ்சிட்டு இருக்காங்க.
               நாங்க உள்ளே போய் உட்கார்ந்ததும் கியா சாஹியே அப்படின்னு ஹிந்தில கேட்காம தமிழ்ல என்னவேணும்னு கேட்க, பரவாயில்லையே தமிழைக் கத்துக்கிட்டாங்களே அப்படின்னு சந்தோசப்பட்டுக்கொண்டு சப்பாத்தியும் டால் ஃபிரையும் சொல்ல, உடனடியாக சூடாக சப்பாத்தி வந்து தட்டில் விழுந்தது.டால் ஃபிரையும் ஒரு கிண்ணத்தில் சூடா வந்தது.சப்பாத்தி நம்ம பசங்க செய்யுற மாதிரியே இருக்குது.அதை அப்படியே பிச்சி பருப்புல தொட்டு வாய்ல வச்சா செம டேஸ்ட்.வெறும் பருப்புதான்.ஆனா அது இம்புட்டு டேஸ்டா இருக்குறது செய்யறவங்க கைப்பக்குவத்துல தான் இருக்கு.பருப்பும் சப்பாத்தியும் போட்டி போட்டுக்கொண்டு இறங்குது.


ரொம்ப ரொம்ப டேஸ்ட்.அப்புறம் வேற என்ன இருக்குன்னு கேட்க ஆலுகோபி இருக்கு அப்படின்னு சொல்ல, அதைக்குடுங்க என்று சொல்லவும் அதுவும் கொஞ்சம் சூடா வந்தது.உருளையும் காலிபிளவரும் சேர்ந்த சுவையான கலவை.ரொம்ப நல்லா இருக்கு.சப்பாத்தியை டேஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம் ஜீரா ரைஸ் சொல்ல, உடனடியாக தவாவில் சாதம் சீரகம் போட்டு ஃபிரை பண்ணி கொத்தமல்லிலாம் தூவி மணக்க மணக்க சூடாக வந்தது.அப்படியே பப்படம் ஒண்ணு கொடுங்க என்று சொல்லவும் அவங்க ஊரு பப்படம் பெரிய சைசுல வர, கொஞ்சம் சாதத்தை எடுத்து ஆலுகோபில கொஞ்சம் பப்படத்துல கொஞ்சம் என எல்லாம் சேர்த்து அப்படியே வாய்ல போட ஆஹா....செம காம்பினேசன்....சீக்கிரம் காலியானதே தெரியல.


சாப்பிட்டுக்கிட்டே கடைக்காரர்கிட்டே பேச்சுக்கொடுக்க, தினமும் ஒவ்வொரு வகை செய்வோம்.சாயந்திர நேரம் இன்னும் வெரைட்டி அதிகமாக இருக்கும், ஒன்லி வெஜ் மட்டும் தான்.பார்ட்டி ஆர்டரும் எடுக்கறோம் என சொல்லி முடிக்கவும் நாங்களும் முடித்திருந்தோம் அனைத்தையும்.
விலை மிக மிக குறைவு..ஆனால் ருசியோ ரொம்ப அதிகம்.அந்தப்பக்கம் போனால் கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க..

தலைமை தபால் நிலையம், குட் ஷெட் ரோடு அருகே இருக்கிறது.V.H ரோட்டில் இருந்து போஸ்ட் ஆபிஸ் வரும் வழியில் இடது புறம் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, November 11, 2013

பயணம் - வைகை அணை, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம்

வைகை அணை, தேனி மாவட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன் வடுகப்பட்டி வரைக்கும் போய்ட்டு வந்தேன்.அப்போ வடுகப்பட்டியில் இருந்து வைகை அணை 9 கி.மீ அப்படின்னு நெடுஞ்சாலைத்துறை போர்டு சொல்லவே, அங்கிருந்து வைகை அணை நோக்கி நம்ம சிங்கம் சீறிட்டது.

வைகை அணை செல்லும் வழியில் ஒரு சர்க்கரை ஆலை கண்ணில் தென்பட்டது. ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை. தற்போது பராமரிப்பு பணியில் அது இருப்பதால் அதிக கரும்பு வண்டிகளின் நெருக்கடி இல்லாமல் ரோடும் ஆலையும் அமைதியாக இருக்கிறது.

கொஞ்சதூரத்தில் வைகை அணையின் மீன் பண்ணை வரவேற்றது.மீன் பண்ணையினை பார்வையிட கால அவகாசம் குறைவாக இருந்ததால், வைகை அணையினை மட்டுமே பார்ப்போம் என்றெண்ணி சிங்கத்தினை ஓரம் கட்டிவிட்டு வைகை அணை நோக்கி சென்றோம்.வண்டி நிறுத்தும் இடத்தில் தேனிமாவட்ட சுற்றுலாத்தளங்கள் பற்றின ஒரு போர்டு இருக்கிறது.அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு எத்தனிக்கையில் வைகை அணையில் தற்போது குறைவாகத்தான் நீர் இருக்கிறது என்று சொல்லி வருத்தப்பட்ட நண்பரின் முகம் உடனே பிரகாசமடைந்தது அருகில் இருந்த கல்லூரி பஸ் ஒன்று பக்கத்தில் நிற்கவே.... உள்ளேதான் சுற்றிப்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என மனம் ஆசுவாசமடைந்தது. நுழைவு டிக்கட் 4 ரூபாய் தான்.அதைப்பெற்றுக்கொண்டு உள் நுழைந்தோம்.

முதலிலேயே டைனோசர் ஒன்று ஒய்யாரமாக நின்றுகொண்டு கரையின் இருபுறமும் மிரட்டிக்கொண்டிருந்தது.அணையின் சிறு மதகிலிருந்து வெளிவரும் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.பெரிய மதகினில் இருந்து தண்ணீர் வந்தால் அவ்வளவுதான்..அருகிருக்கும் ஊர்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி இருக்கும்.





அருகிலேயே பார்க் ஒன்று இருக்கிறது மிகப்பசுமையாய். சிறுவர்களுக்கென்று ஒரு ரயில் ஓடாமல் இருக்கிறது .அதை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.விரைவில் ரெடியாகிவிடும் என்றனர்.
கொஞ்ச நேரம் தண்ணீரின் அழகை ரசித்தபடியே அணை மேலே செல்ல ஆரம்பித்தோம்.மிகப்பிரம்மாண்டமான அணை சுவர்கள் வறண்டு கிடந்தது.ஆனால் தண்ணீர் வரும் வரத்து மிக பசுமையாக இருந்தது.அணையின் மேற்பரப்புக்கு சென்றவுடன் மிக அழகாக இருக்கிறது வைகை அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் பசுமை. இருபுறங்களிலும் இருக்கிற பசுமை மரங்கள் அனைத்தும் பார்க்க பரவசமா இருக்கின்றன.



தற்போது அணையில் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் நீரின் அளவு குறைவாகத்தான் இருக்கிறது.ஆனால் வெளியேறும் நீரின் வேகம் அதிகமாக இருக்கிறது.அணையின் நாற்புறங்களும் காண நன்றாகவே இருக்கின்றன.
அப்புறம் அணை மேலே எப்பவும் போல தனிமை வேண்டி காதல் பறவைகள்.பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.கீழிறங்கி வந்தால் பார்க்கிலும் பறவைகள்...மரத்திலும்....தரையிலும்...
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அக்கம் பக்கம், சுற்று வட்டார மக்கள் என கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.சுற்றுலாவாசிகளுக்கு ஏற்ற இடம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பாயும் வைகை நதியில் இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது.மதுரை மற்றும் சுற்றுப்புற மக்களுக்காக குடிநீர், விவசாயத்திற்காக கட்டப்பட்டது..வரலாறை சொல்லணும்ல...
எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வருகையில் அங்கே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு அம்மணியிடம் இருக்கிற மீன்களை ஜிலேபியும் உளுவையும் (ஒரு ஒண்ணரை கிலோ தேறும்)  குறைவான விலையில் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Friday, November 1, 2013

பயணம் - வடுகப்பட்டி, தேனி மாவட்டம் - ஒரு பார்வை

வடுகப்பட்டி - கவிஞர் வைரமுத்து                
          நண்பரோட ஒரு வேலை விசயமா வடுகப்பட்டி வரைக்கும் போக நேர்ந்தது.அப்போ நம்ம வண்டியில இளையராஜாவின் இசையில் வைரமுத்துவோட வரிகளில் இருக்கிற பாட்டை கேட்டுக்கிட்டே போய்ட்டு இருந்தோம்.அந்த ஊர்ல நுழையற வரைக்கும் வடுகப்பட்டி ஒரு சாதாரண ஊராத்தான் நினைச்சிருந்தேன்.அப்பத்தான் நம்ம நண்பர் சொன்னாரு ...டேய்.....இது தாண்டா கவிஞர் வைரமுத்து ஊர் என்று....
அப்போதான் உரைச்சது எனக்கு....அட........ஆமால்ல....என்றபடியே மிகப்பெரிய ஆச்சர்யத்தினை அடைந்தேன் , கவிஞரோட ஊர்லயே அவரோட பாட்டைக் கேட்டுகிட்டு போய்ட்டு இருக்கேனே என்று....


                   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் இருக்கிற வடுகப்பட்டி ஒரு சிறு கிராமம் தான்.ஆறு, கோவில், வெறிச்சோடிக்கிடக்கும் தெருக்கள், ஒரு சில கடைகள், அருகிலேயே வயல்வெளிகள் என கொஞ்சமும் மாறாமல் இருக்கிறது.

              ஊரின் உள்ளே நுழைய தள்ளுவண்டியில் மூட்டை மூட்டையாய் வைத்து குப்பையில் கொட்ட வெளியேறிக்கொண்டிருந்தனர் ஒரு சிலர்.என்னவென்று கேட்க, பூண்டு தொரளி என்றனர்.இங்கு பூண்டு மண்டி ரொம்ப பேமஸ். அதனால் தரம் பிரிக்கும் போது உதிரும் பூண்டின் தோல்கள் என்று சொல்ல அப்போதுதான் தெரிந்தது வடுகப்பட்டி வைரமுத்துக்கு மட்டுமல்ல பூண்டுக்கும் பேமஸ் என்று......வழிநெடுக ஊரின் இருபக்கமும் பூண்டு மூட்டை ஏற்றப்பட்ட வண்டிகள் லோடு இறங்கியும் ஏற்றிக்கொண்டும் நின்று கொண்டிருக்கின்றன.




ஒரு குடோனில் மகளிர் அணிக்கள் பூண்டுகளை தரம்பிரித்துக் கொண்டிருந்தன.எப்பவும் போல கிராமத்திற்கே உண்டான பெட்டிக்கடைகள். அதில் ஒரு நாலு பேர் நாலுவிதமாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
                  அங்கிருந்த ஒரு பெரியவரிடம் கவிஞர் வைரமுத்து வீடு எங்க இருக்குன்னு கேட்க, கொஞ்ச தூரம் உள்ளே போனீங்கன்னா வலது புறம் பூ டிசைன் போட்ட வீடு இருக்கும், ரெண்டு வேப்ப மரத்துக்கு நடுவுல இருக்கும், வீட்டினை ஒட்டி ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அதுதான் என்று சொல்லவும், உடனே அங்க கிளம்பினோம்.ரோட்டின் அருகிலேயே இருக்கிறது கவிஞர் வீடு.. ஒரு மாடி வீடுதான்.
சாதாரணமாகத்தான் இருக்கிறது. (சென்னையில மிகப்பிரம்மாண்டமா கட்டி இருப்பாருன்னு நினைக்கிறேன்...). 

        விசாரித்த பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எந்தவித உணர்வும் தெரியவில்லை.நம்மைத்தான் ஆச்சர்யமாக பார்த்தார்கள். அவர்களுக்கெங்கே தெரியப்போகிறது ஒரு ரசிகனின் ஆர்வ மனப்பான்மை.
பிறந்ததில் முதல் இடுகாட்டுக்கு போற வரையிலும் பாடல்கள் நம்மோடு இணைந்து இருக்கிறது.இப்போலாம் கார்ல போகும் போதோ, பஸ்ல போகும் போதோ பாட்டு கேட்காம போறதே இல்ல.என்னிக்கு ரேடியோவில் பாட்டு கேட்க ஆரம்பிச்சோமோ அன்னில இருந்து டிவி, ஆடியோ கேசட், இப்போ ஐபாட், செல்போன், கம்ப்யூட்டர் இணையம் வரை எல்லாத்துலயும் கேட்டுட்டு இருக்கோம்.பிடிச்ச பாடல்களை கேசட்ல ரிகார்ட் பண்ணி கேட்ட காலம் போய் இப்போ மெமரிகார்ட், பென் டிரைவ், ஐபேட் இப்படி இதுல கேட்டுட்டு இருக்கோம்.
      யார் எழுதினாங்களோ, யார் பாடினாங்களோ, யார் இசை அமைச்சாங்களோ..இதெல்லாம் தெரியாது.ஆனா மனதுக்கு இதம் அளிக்கும் பாடல்களை கேட்கும் ஒரு வர்க்கத்தினர் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். சந்தோசம், சோகம், இல்லே தனிமை இப்படி இருக்கும் போதோ ஏதோ ஒரு பாடல் நம்ம மனத்தினை லேசாக்குது.நமக்காகவே எழுதப்பட்டதா நினைச்சி உருகி உருகி கேட்கிறோம்.அப்படி கேட்ட பாடல்களில் வைரமுத்துவோட பாடல்களும் நிறைய இருக்கு. 

             அப்படித்தான் அவரோட எத்தனையோ பாடல்களை  நேரங்காலமின்றி கேட்டிருப்போம், நமக்கென்று பிடித்ததை திரும்ப திரும்ப எவ்வளவு முறை கேட்டிருப்போம், அதே போல எத்தனை முறை முணுமுணுத்திருப்போம்.இன்னும் எத்தனையோ பேர் தங்களோட காதலை சொல்ல இவரோட பாடல் வரிகளை சுட்டு இருப்பாங்க.காதலியை கவர் பண்ண எவ்ளோ காதல் வரிகளை சொல்லிருப்பாங்க.அவர் எழுதுன கவிதைத் தொகுப்பினை பரிசா கொடுத்து தங்கள் காதலை டெவலப் பண்ணியிருப்பாங்க.பிறந்ததில் இருந்து இன்றைய வரையிலும் ஏதோ ஒரு வகையில் அவரின் பாடல் வரிகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
          இப்போது வரைக்கும் அவரின் வரிகளை இசையோடு சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நம் காலத்தில் வாழ்ந்து வரும் ஒரு புகழ்பெற்ற கவிஞரும், காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ பாடல்களைத் தந்தவரின் வீட்டினைக் காண ஆர்வமிகுதி இருக்காதா ஒரு சராசரி ரசிகனுக்கு.... அவரைத்தான் இதுவரைக்கும் நேரில் கூட கண்டதில்லை.புகைப்படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் மட்டுமே பார்த்த எனக்கு அவரது வீட்டினையாவது காணும் பாக்கியம் கிடைத்ததே என்கின்ற போது மனம் மிக்க மகிழ்ச்சியடைந்தது.
                  இது ஒரு பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்று வரை மிகச்சிறந்த பாடல்களை இயற்றிவரும் கவிஞர் அவர்களின் ஊரில் என் காலடி பட்டதே மிகப்பெரிய சந்தோசம்.
     அவரை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜாவிற்கும், தன் இசை மூலம் அவரது வரிகளை முணுமுணுக்க வைத்த இசைஞானி இளையராஜாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆறு தேசிய விருதுகள் பெற்ற கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகளில் மனம் கவிழாதவர் யாருமில்லை.இனி வரப்போகும் சந்ததியினர் கூட அவரின் பாடல்களை விரும்புவர் என்பது நிச்சயமே.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...