Friday, May 30, 2014

நன்றிவணக்கம்.....
ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் (அதெல்லாம் ஒண்ணுமில்லை...எல்லாம் ரினிவல் பிராபளம் தான்....டெபிட் கார்ட் ஒத்துழைக்க மாட்டேன்கிறது)
எனது தளம் இன்னும் சில நாட்களில் இழுத்து மூடப்படும் என நினைக்கிறேன்.

அதனால்.....

இது வரையில் எனக்கு ஆதரவளித்து பதிவுகளுக்கு கமெண்டிட்ட கோடான கோடி (?) நல்ல உள்ளங்களுக்கும்  ரசிகர்களுக்கும் நன்றி....

பதிவுகளின் மூலம் கிடைத்த எண்ணற்ற நண்பர்களுக்கும் நன்றி.....நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...

Monday, May 26, 2014

The King of Indian Roads - அம்பாஸிடர் கார்

அம்பாஸிடர் கார்.

பிளசர் கார் என்றாலே அம்பாசிடர்தான் ஞாபகம் வரும்.முன்னும் பின்னும் ஒரே வடிவமைப்பில் பார்க்கவே அம்சமாய் இருக்கும்.வெள்ளை வெளேரென்ற காரின் நிறம் தான் உடனடி ஞாபகத்திற்கு வரும்.அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் முதல் மந்திரிகளின் செல்லப்பிள்ளையாக இருந்த அம்பாசிடர் கார் சொகுசுக்கார்களின் வருகையில் ஓரங்கட்டப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகில் உத்தர்பாரா என்கிற இடத்தில் சி.கே பிர்லா குழுமத்தின்  ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவன தயாரிப்பாக வெளிவந்து வெகு காலத்திற்கு இந்திய ரோடுகளை அலங்கரித்த ஓரே கார் அம்பாசிடர் தான்..

70 ஆண்டுகளாக இந்தியாவில் தன்னந்தனியாய் கோலோச்சிக்கொண்டிருந்த அம்பாசிடர் கார் தற்போது தன் ஓட்டத்தை நிறுத்தியுள்ளது. வெளிநாட்டுக்கார்களின் சொகுசுத்தன்மையில் போட்டி போட முடியாமல் இந்த காரின் ஓட்டம் சுத்தமாய் நின்று போய்விட்டது.

சிறுவயதில் எங்கள் ஊருக்கு வரும் அம்பாசிடர் கார்களின் பின்னால் ஓடி அதனை வேடிக்கைப்பார்த்ததும், பின் சொந்தமாய் சித்தப்பா வாங்கியதும் சும்மா நிற்கும் காரில் ஏறி சீன் போட்டதும், அவ்வப்போது அவர்க்கு பெண்பார்க்கும் படலமாக திருச்சி, முசிறி குளித்தலை, முக்கொம்பு, கரூர் என குடும்பத்தோடு பயணம் செய்ததும் இனி ஞாபகங்களே...

இனி பழைய திரைப்படங்களிலும், எங்காவது டாக்சி ஸ்டேண்ட்களிலும் கண்டால் தான் உண்டு....

படிக்காதவன் படத்தில் தலைவர் சொல்வாரே ....லட்சுமி ஸ்டார்ட் ஆயிடு......

அதுமாதிரி இனி என்ன சொன்னால் இந்த கார் எடுபடும் ?

நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...

Wednesday, May 21, 2014

கோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை

நல்ல டேஸ்டியா ஃபீப் பிரியாணி சாப்பிடனும்னா முஸ்லீம் அன்பர்கள் வசிக்கிற உக்கடம் கோட்டைமேடு தான் போகனும்.ஆனா சாய்பாபா காலனியில மெயின்ரோட்டுலயே (ஒரு சின்ன சந்துக்குள்ள) ஒரு பிரியாணி கடை இருக்கு.அந்த வழியா போனாலே போதும் பிரியாணி வாசம் மூக்கைத்துளைக்கும்...அப்படியே நம்ம பசியைத்தூண்டும்.நம்ம பாய் கடைதான்...செம டேஸ்டியா இருக்குது.
அப்படித்தான் அன்னிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலையா போனபோது வாசனை ஜிவ்வுன்னு இழுக்கவே, வண்டியை ( டூ வீலர்தான் ) ஓரங்கட்டிட்டேன்.

ஏ ஓன் பிரியாணி கடைன்னு ஒரு சின்ன போர்டு நம்மளை வழி நடத்தும்.சின்ன கடைதான்.நாலு டேபிள்தான் இருக்கும்.காத்திருந்து தான் சாப்பிடனும்.அங்க வெயிட் பண்ற நேரத்தில் சுத்தி சுத்தி அடிக்கிற பிரியாணி வாசனை நம்ம பசியை தூண்டிகிட்டே இருக்கும், எப்படா இடம் கிடைக்கும்னு தோணும்.


அன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற...செம கூட்டம்..கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி சாப்பிட உட்கார்ந்தோம்.நமக்கு எப்பவும் போல பிரியாணியும் ஃபீப் சுக்காவும்..சிக்கன் பிரியாணியும் கிடைக்குது..ஆனா நமக்கு இண்ட்ரஸ்ட் இல்ல.
வாழையிலையில் சூடா பிரியாணி வைக்கும்போது ஏற்படற மணம் இருக்கே....ஆஹா...அப்படியே சூட்டோடு சூடா கொஞ்சமா எடுத்து சாப்பிட்டா என்னா டேஸ்ட்....ப்ரியாணி ஒரு வித சுவையுடன் செம டேஸ்டாக இருக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாய் சூடாக ரசித்து ருசித்து சாப்பிட அமிர்தம் போல் இருந்தது.பீப் இறைச்சியும் நன்றாக வெந்து மெது மெதுவென்று இருக்க, பஞ்சாய் உள்ளிறங்கியது.கூட ஆர்டர் செய்தது சுக்கா...இது சொல்லவே தேவையில்லை...பீப் சுக்கா எப்பவும் டேஸ்ட் தான்.கொஞ்சம் பீப் உடன் பிரியாணி எடுத்து சாப்பிட செம டேஸ்ட்....


பிரியாணி சீக்கிரம் காலியானதால் மீண்டும் ஒரு பிரியாணி சொல்லி ஆளுக்கு பாதியாய் காலி செய்து கொண்டோம்...
பக்கத்து டேபிளில் ஒரு ஜிம் பாடி ஆத்மி செம கட்டு கட்டிக்கொண்டிருந்தார்.பிரியாணியும் சுக்காவும் தூள் பறத்திக்கொண்டிருக்க, நாங்கள் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வெளியேறினோம்..விலையும் மிகக்குறைவே..நல்ல டேஸ்ட்டுடன் இருக்கிறது.பீப் பிரியாணி சாப்பிடனும்னா தைரியமா போலாம்...

இதே ரோட்டுல நூராணின்னு ஒரு கடை இருக்கு.அங்க போனா சூடா புரோட்டா கிடைக்கும் கூட பீப் கறியோட....


சாய்பாபாகாலனியில் காதிகிராப்ட் அருகில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...

Monday, May 19, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 2

கோவை R.Sபுரத்தில் இருக்கிற பிரபல மருத்துவமனை.சளித்தொல்லை காரணமாக  ஒரு விசிட் போட்டேன்.ரிசப்சன் அம்மணி டாக்டரை விட அதிகமாய் கேள்வி கேட்டு பார்மை பூர்த்தி செய்து அமரச்சொன்னது..சும்மா இருந்த கண்கள் சுத்தியும் முத்தியும் மேய ஆரம்பித்தது.....பளிச்சிடும் மார்பிள்....கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சுவர்....கண் கவரும் இண்டீரியர்..எப்பவும் போலவே தனியார் மருத்துவமனை என்கிற பிரமிப்பை ஊட்டி பயங்காட்டியது.
எங்கே ரமணாவாகி விடுவோமோ என்கிற அச்சத்துடனே அமர்ந்திருந்தேன்.காத்திருப்பின் சுகம் அங்கு நடமாடும் கேரள நர்ஸ்களால் புண்ணியமாகிறது.அதுமட்டுமின்றி வந்து செல்லும் அம்மணிகளாலும்...ஒரு மணி நேரம்...ஒரு சில நிமிடங்களாகிப் போனது..அதற்குள் ஒரு நர்ஸ் சேச்சி என் பெயரினை ஏலமிட...கேரள கடற்கரையோரம் ஒய்யாரமாய் இருந்த நான் உடனடி நிகழ்வுக்கு வர டாக்டரின் கேபினுக்குள் நுழைந்தேன்....நம்ம ராசி கன்னி ராசி போல...உள்ளே டாக்டர் அம்மணி...மத்திம வயதில் சுடிதார் போட்ட கடவுளாய்....


எதுவும் கேட்கவில்லை...அமரச்சொன்னது ஒரு நர்ஸ், டாக்டரோ ஒரு குச்சி போன்ற சாதனத்தை காதிலும் மூக்கிலும் விட்டு லைட் அடித்துப் பார்த்த பின் அவரின் பச்சை நிற வாய்க்கவசம் மெதுவாய் அசைந்து வார்த்தைகள் விழுந்தன ஓரிரண்டு...அப்போதுதான் தெரிந்தது ஏன் ரிசப்சனில் அத்தனை கேள்வி கேட்டார்கள் என்று..ஆனால் ரிசப்னிஸ்ட் சொல்லாத அந்த ரெண்டு வார்த்தையை இவர் சொன்னார்....
எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட் யூரின் டெஸ்ட்.எடுக்கனும் என்று..

அவ்வளவுதான்..மீண்டும் அதே காத்திருப்பு..கேரள கரையோரம் எல்லாம்...கொஞ்ச நேரம் தான்..அதற்குள் ஏலம்விட ஆரம்பித்தது நம்ம பெயரை ரிசப்சன் அம்மணி...
டாக்டர் பீஸ், யூரின் டெஸ்ட் பிளட் டெஸ்ட் என எல்லாம் சேர்த்து 1050 க்கு நம் பீஸை உருவியது...உள்ளே போய் ரைட் திரும்பி 3ம் நம்பர் ரூம் .....எக்ஸ்ரே எடுத்துட்டு பக்கத்துல பிளட் குடுத்திட்டு வாங்க என்று சொல்லி அடுத்த அம்மணியிடம் தள்ளியது..

எக்ஸ்ரே ரூம்...சசிகுமார் படங்களில் குத்துப்பாட்டு ஆடும் ஆண்ட்டி கணக்கில் ஒரு அம்மணி....எதுவுமே பேசவில்லை...காரியத்திலேயே கண்ணாய் இருந்தது....குப்புற படுக்கவைத்து கபாலத்தை அமுக்கி எக்ஸ்ரே எடுத்து துரத்திவிட்டனர் அடுத்த ரூமுக்கு....கேரள அம்மணிக்கு போட்டியாய் வனப்பிலும் அழகிலும் இருந்த நம்மூர் அம்மணியிடம் சாதுவாய் கை நீட்ட, பஞ்சை டெட்டாலில் முக்கி மணிக்கட்டு பச்சை நரம்பை தேட , நமக்கோ சுகமாய் இருக்க, அதற்குள் இரக்கமே இன்றி சிரிஞ்ச் ஊசியை எடுத்து ஒரு குத்து குத்தி..ரத்தம் வரலையே என்று அப்படி இப்படி ஒரு ஆட்டு ஆட்டி ரத்தத்தை எடுக்க உற்றுப்பார்த்ததில் காளியின் மறு உருவம் தெரிந்தது..

அப்போது தான் நினைவுக்கு வந்தது...அய்யயோ அடுத்து யூரின் டெஸ்ட் மாட்டிக்கிட்டோமே...இதற்கு சான்ஸ் தரக்கூடாது என்றெண்ணி டெஸ்ட் பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தேன் டாய்லட்டுக்கு....ஹிஹிஹி

அப்புறமென்ன..ரிசல்ட் வாங்கியவுடன் மீண்டும் டாக்டருடன் சிட்டிங்.இந்த முறை அம்மணியில்லை...நம்ம ஜாதிக்காரர்....பொசுக்கென்று போய்விட்டது...ஆனாலும் அவரைச்சுற்றி வட்டமிட்டு இருந்த அம்மணிகளால் ஏதோ மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.அதுவும் அதிக நேரம் நீடிக்கவில்லை...
எக்ஸ்ரே வைத்து படம் காட்டினர்....லேசர் சிகிச்சை பண்ணணுமாம்.. அரைலட்சத்தோடு ஏழாயிரமாம்...
இருங்க வரேன்னு வந்துவிட்டேன்...

கிராமத்து நினைவுகள்

நம்ம தோட்டத்துல இருக்கிற பனைமரத்துல நுங்கு குலைகள் இருக்குறத பார்த்தவுடனே மரம் ஏற ஆள் புடிச்சி ரெண்டு குலையை வெட்டி குடும்பமே சாப்பிட்டோம்..காலியான நொங்கு குடுக்கைல வாரிசுகளுக்கு வண்டி செஞ்சி கொடுக்க...சந்தோசமா ஊருக்குள்ள ஓட்டிக்கிட்டு இருக்குதுங்க...நம் பால்ய காலத்தில் இது போல எவ்ளோ விளையாண்டிருப்போம்...நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு இது போன்ற சந்தோசங்கள் கிட்டுமா என்பது சந்தேகமே....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, May 14, 2014

உன்...உன்
துறுதுறு கண்களும்
நிற்காத நடையும்
அதிவேகமாய் கணினியில்
விளையாடும் விரல்களும்
என்னை ஆச்சிரியப்படுத்தவில்லை
உன் திடீர் முத்தம் மட்டும்
என்னை கலங்கடித்துவிட்டது.... 

இன்னும் கொஞ்சம்...

Saturday, May 10, 2014

கோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி

அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி
கணபதியில் தேங்காய்ப்பாலுக்கு ரொம்ப பேமஸான கடை சிவவிலாஸ்.அந்த கடை இப்போது செயல்படுவதில்லை.ஆனால் அந்த சிவவிலாஸ் குரூப்பில் இருந்து வந்து அதே இடத்தில் ஷெட் போட்டு புதிதாய் ஆரம்பித்து இருக்கிற ஒரு பலகாரக்கடைதான் இந்த அபூர்வ விலாஸ்.

எப்பவும் இந்த கடை ஒரே கூட்டமாத்தான் இருக்கும்.கடை முன்னாடி வண்டி நிறுத்த இடம் இருக்காது.அந்த வழியா போனால் பலகார வாசனை நம்மை இழுத்து உள்ள விட்டுடும் அப்படி ஒரு வாசனை அடிக்கும்....அப்படித்தான் நேத்து அந்த வழியா போகும் போது நம்மளையும் உள்ளே இழுத்து விட,

கடைக்குள்ள போனா ஷோகேஸ்ல போண்டா, வடை, பஜ்ஜி, கேழ்வரகு பகோடா, மசால் போண்டா இப்படி எதெதெல்லாம் எண்ணையில் மிதக்குதோ அதெல்லாம் இங்க சுடச்சுட சூடா இருக்குது.அதை விட முக்கியம் தேங்காய்ப்பால் தான்.எப்போதும் அடுப்பில் மிதமான சூட்டில் இருக்க, பலவித கலர்கலர் டோக்கன்களில் தேங்காய்ப்பாலுக்கான டோக்கன் வாங்கி கொடுக்க, இளஞ்சூடாய் நம் கைகளில் வந்தது தேங்காய்ப்பால்.

கொஞ்சம் கொஞ்சமாய் ருசிக்க தேவாமிர்தமாய் இருந்தது.அளவான இனிப்பில் மிக அமிர்தமாய் இருந்தது.அந்த சூட்டிலும் ஊதி ஊதி குடிக்க ரொம்ப சுவையாக இருந்தது.ஏலக்காய் மணத்துடன் மிக அற்புதமாய் இருக்க ரசித்து குடித்ததில் சீக்கிரம் தீர்ந்து போக, இன்னொரு டோக்கன் வாங்கி உடனடியாக ரீசார்ஜ் செய்து ருசிக்க ஆரம்பித்தேன்...ஆஹா என்ன சுவை...
விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.கிளாஸ் 8 ரூபாய் தான்.டீ குடிக்கிற செலவில் இது எவ்வளவோ மேல்.தேங்காய்ப்பாலுக்கு காம்பினேசனாக அனைவரும் வடை, போண்டா என வெளுத்துக் கட்டுகின்றனர்.எப்பவாது அந்தப்பக்கம் போனா சாப்பிட்டுப் பாருங்க.


எத்தனையோ வருடங்களுக்கு முன் வீட்டில் சாப்பிட்டது.இப்போதெல்லாம் இந்த மாதிரி தேங்காய்ப்பால் யார் சமைக்கிறார்கள் வீட்டில்.மிக ஆரோக்கியமான ஒரு பானம் இது.உளுந்து போட்டு செய்திருக்கும் தேங்காய்ப்ப்பாலில் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றன.
டெக்ஸ்டூல் மேம்பாலம் முடியற இடத்தில் இந்த கடை இருக்கு.அருகில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கிறது.தேங்காய்ப்பால் தான் இந்த கடையின் ஃபேமஸ்...டீ, காபி, போண்டா வடை என எல்லாம் வேற இருக்கிறது....போனா சாப்பிட்டு பாருங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 6, 2014

பயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்

மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்
போன மாதம் ஓசூர் போயிருந்தபோது மூதறிஞர் இராஜாஜி பிறந்த வீடு இங்கு தான் இருக்கிறது என்று அறிந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவரைப்பற்றி அதிகம் தெரிந்ததில்லை, எப்போதோ வரலாறுகளில் படித்தது, அப்புறம் பொது அறிவுக்கேள்விகளில் மட்டுமே இராஜாஜி என்பவரை தெரிந்து வைத்து இருந்தேன்.ஓசூர் அருகிலேயே இருக்கும் அவரது இல்லத்தினை பார்க்க கிளம்பினோம்.ஓசூர் டூ கிருஷ்ணகிரி செல்லும் பெங்களூர் நெடுங்சாலையில் வலதுபுறம் தொரப்பள்ளி செல்லும் ஊரின் முன்பாக பெரிய வளைவு நம்மை வரவேற்கிறது.
தொரப்பள்ளி செல்லும் சாலையானது படுமோசம் என்பது அதில் செல்லும்போதே தெரிகிறது.ஆனால் சாலையின் இருமருங்கிலும் பசுமை தலைவிரித்தாடுகிறது.மாமர தோப்புகள், சிறு வயல்வெளிகள், அதில் காலிபிளவர் செடிகள், கொத்தமல்லி செடிகள் என விவசாயம் செழிப்பாய் நடந்து கொண்டிருக்கிறது.தென்பெண்ணை நதிதான் அதற்கு காரணம் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.இருபுறமும் பசுமையை ரசித்தபடி 4 கிலோமீட்டர் தொலைவு வந்தடைய தொரப்பள்ளி எனும் சிறு கிராமம் நம்மை வரவேற்கிறது.

இன்னமும் நகரவாழ்க்கைக்கு அடிபணியாமல் கிராமத்து இயல்பில் இருந்தாலும் பொட்டிக்கடை வரை குடியேறிவிட்ட கோகோ பெப்சி குளிர்பானங்களின் அத்தனை விளம்பர போர்டுகளிலும் தமிழும் கன்னடமும் சரிக்கு சமமாய்  இடம் பிடித்திருக்கின்றன. அங்கிருக்கிற ஒருவரிடம் விசாரித்தபோது பக்கத்தில் தான் இருக்கிறது என சொல்ல அந்த சின்ன கிராமத்தில் அடுத்த தெருவில் இன்னுமொரு பெரிய ஆர்ச்சு வரவேற்கிறது.நீண்ட தெரு...வீடுகள் அனைத்தும் வரிசையாய் இருபுறமும் இருக்கின்றன.அனைத்து வீடுகளிலும் ஆள் நடமாட்டம் இருக்க, மூதறிஞர் இராஜாஜி வீடு பூட்டிக்கிடந்தது.வீட்டினைப் பராமரிக்கும் வாட்ச்மேன் கூட இல்லை.பக்கத்தில் கேட்டபோது அவர் எங்கோ சென்றிருக்கிறார் என சொல்ல, பூட்டிய வீட்டிற்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

வரலாற்று சிறப்புமிக்க ஒரு தலைவரின் வீடு ஆள் அரவமின்றி இருக்க காரணம் முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பற்றி யாரும் அறிந்து கொள்ள விருப்பம் இல்லாததுதான் காரணம்.இதையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு என்று நினைக்க தோன்றுகிறது.அவரின் வீட்டிற்கு சென்ற பின் தான் அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.அவர் பிறந்த ஆண்டின் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பின் நான் பிறந்திருக்கிறேன் என்பதும், நான் பிறப்பதற்கு முன்பே காலமானதும் மலைக்கவைக்கும் ஆச்சர்யம்.1878ல் பிறந்து பல்வேறு சாதனைகள் செய்த மூதறிஞர் பற்றி தெரிஞ்சுக்க கிளிக்

இந்த கோடைவிடுமுறையில் கொஞ்சம் பயனுள்ளதாக கழியனும்னா இந்தமாதிரி இடங்களுக்கு சுற்றுலா கூட்டிட்டு போங்க...வரலாற்றில் இருக்கிற உண்மைகள் கொஞ்சமாவது தெரிய வரும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...