Monday, April 18, 2016

ஏர்டெல் - தொடரும் கொள்ளை

ஏர்டெல்லின் தொடரும் கொள்ளை.
ஏர்டெல் இப்போதெல்லாம் சர்வீஸ் சரியில்லை.நெட்வொர்க்கும் சரியாய் கிடைப்பதில்லை.ஆனால் பணம் மட்டும் பிடுங்குவதில் நம்பர் ஒன்.போஸ்ட் பெய்டு கனெக்சன் வச்சிருந்தேன்.பில் கட்டி மாள முடியவில்லை. இஷ்டத்துக்கு மாதா மாதம் பில் வந்து கொண்டிருந்தது.அதனால் சமீபத்தில் பிரிபெய்டாக மாற்றிக்கொண்டேன்.இப்போது தேவைப்படும் போது ரீ சார்ஜ் செய்து கொள்கிறேன்.இரண்டு மாதங்கள் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.அதுக்கப்புறம் தான் ஆரம்பித்தது வினை.

ஏர்டெல் ஆப் ஒன்றை டவுன்லோட் பண்ணி அதில் உள்ள ஆபர்களை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.1ஜிபிக்கு மேல் வாங்கினால் 250 MB ஃபிரீ என்கிற ஆபரில் 3G யை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.போன மாதம் 1GB ஆப் மூலம் வாங்கியபோது 250 எம்பி தரவேயில்லை.கஸ்டமர் கேரில் விசாரித்தால் அதுமாதிரி எந்த ஒரு ஆபரும் இல்லை என்கிறார்கள்.நானும் மை ஏர்டெல் ஆப் பில் இருக்கிறது என்கிறேன்.நம்பமாட்டேன் என்கிறார்கள் கஸ்டமர் கேரில்.கடுப்பில் திட்டிவிட்டு போனை வைத்து விட்டேன்.
பிறகு ஆப்பில் உள்ள ஆபர்களை ஸ்கீரின்ஷாட் எடுத்து ஏர்டெல் 121 க்கு மெயில் அனுப்பினேன்.எனது பேலன்ஸ் நெட் உபயோகத்தினையும் ஸ்கீரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன்.



அடுத்த நாள் மெயில் வந்தது.அந்த 250 எம்பிக்காக ரூ 100 எனது அக்கௌண்டில் வரவு வைத்து உள்ளதாக சொல்லி இருந்தார்கள்.மெசேஜ் கூட அனுப்பி வைத்து இருந்தார்கள்.ஓ கே மிக்க சந்தோசம் என மெயில் அனுப்பிவிட்டேன்.
இந்த மாதம் அதே பஞ்சாயத்து.மை ஏர்டெல் ஆப் மூலம் ஆபரை தெரிந்து கொண்டு 1 ஜிபி பிளஸ் 250 எம்பி தேர்வு செய்து ஓகே பண்ண, எனது மெயின் பேலன்ஸில் இருந்து பணத்தினை வரவு வைத்துக்கொண்டார்கள்.எவ்ளோ என்று பார்த்தால் ரூ 530 எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து எந்த ஒரு மெசேஜ் மற்றும் லேட்டஸ்ட் டிரான்ஸாக்சன் என்று எதுவும் இல்லை.நெட் பேக்கும் ஆட் ஆகவில்லை.ஆனால் பணம் மட்டும் கழிந்துவிட்டிருக்கிறது.

உடனே கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால் மீண்டும் அதே விளக்கெண்ணைய் நியாயம் தான் பேசுகிறார்கள்.உங்களுக்கு 265 எடுத்துக்கொண்டார்கள்.மேலும் டேட்டா யூஸ் பண்ணியதால் மெயின் பேலன்ஸில் இருந்து அமெளண்டை எடுத்து இருக்கிறோம் என சொல்ல இன்னும் செம கடுப்பாகி விட்டது.நானே டேட்டா லிமிட் செட் செய்துவிட்டுத்தான் நெட் உபயோகப்படுத்துவேன்.இதில் எப்படி ஐந்து நிமிடத்திற்குள் 265 செலவாகும்.அந்த கஸ்டமர் கேர் ஆளை ஒரு வழி ஆக்கிவிட்டுத்தான் போனை கட் செய்தேன்.

ஏர்டெல்லில் ஃப்ராடுத்தனம் ஏற்கனவே அறிந்திருந்தபடியால் எல்லாத்தையும் முன்பே ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்திருந்தேன்.அதை அப்படியே 121க்கு மெயில் அனுப்பி கொஞ்சம் கன்னாபின்னாவென்று திட்டி அனுப்பியிருந்தேன்.
கஸ்டமர்கேரும் மிக வேஸ்ட் என்று சொல்லியிருந்தேன்.
அப்புறம் எங்கிருந்தோ ஒரு கால் வந்தது.டெக்னிக்கல் மிஸ்டேக் என்று சொல்லி, அந்த பணத்தினை ரீபண்ட் பண்ணியிருப்பதாக சொல்லி முற்றுப்புள்ளி வைத்தனர்.
நாம் மெயில் ஆண்ட்ராய்டு என எல்லாம் அறிந்திருந்தும் நம்மிடம் ஆட்டையை போடுகிறார்கள்.ஒன்றும் தெரியாத எத்தனையோ பேரிடம் எப்படியெல்லாம் ஏமாத்தியிருப்பார்கள்.ஒரு பைசா, இரண்டு பைசா என கொள்ளைஅடிக்கிறார்கள்.இந்தியா முழுக்க இப்படி கொள்ளை அடித்தால் எவ்வளவு சம்பாதிப்பார்கள்.
இனி ஏர்டெல்லில் எந்த ஒரு ஆபரையும் பெறுவதற்கு முன்னால், ரீசார்ஜ் செய்வதற்கு முன்னால் உங்களின் அத்தனை பேலன்ஸ்களையும் ஸ்கீரின்சாட் எடுத்துக்கொள்ளுங்கள்.அப்படி எடுக்க முடியவில்லை எனில் மற்றொரு போன் மூலம் போட்டோ எடுத்துக்கொண்டு ரீசார்ஜ் செய்யுங்கள்..
நாம் நினைப்போம் ஒரு ரூபாய் தானே என்று...ஆனால் இந்தியாவில் உள்ள எத்தனை கோடி ஏர்டெல் கனெக்சனில் இருந்து எடுத்தால் எவ்வளவு கிடைக்கும் அவர்களுக்கு...
பிரிபெய்டில் ஜோஸ்யம், கேம்ஸ், கிரிக்கெட், பாட்டு, என எல்லாத்துக்கும் கொள்ளை அடிக்கின்றனர்.தெரியாத்தனமாய் நம்பரை அழுத்திவிட்டாலும் காசு உடனடியாக பிடுங்குகின்றனர்.ஏர்டெல் எனில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.3 ஜி 4ஜி என சொல்கிறார்கள் ஆனால் நெட்வொர்க் என்பது சுத்தமாய் இல்லை.டுபாக்கூர் விளம்பரங்களை போட்டு மக்களை ஏமாத்துகின்றனர்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 5, 2016

கோவை மெஸ் – ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை

                       நேற்றைய மதிய வேளை.நண்பரின் கார சாரமான சாப்பாடு வேண்டுகோளுக்கிணங்க சென்ற இடம் ஸ்ரீகெளரி மெஸ்.செந்தில் குமரன் தியேட்டர் பின்பக்கம் உள்ள சந்தில் இந்த ஹோட்டல் இருக்கிறது.சின்ன கடை தான்.நீளமான அமைப்பில் இருக்கிறது.ஒரே நேரத்தில் இருபது, இருபத்தைந்து நபர்கள் உணவருந்தக்கூடிய வசதி இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பார்சல் கிடையாது என்கிற அறிவிப்பு போர்டு கண்ணில் மாட்டுகிறது.கடை ஓனர் உற்சாகமாய் வரவேற்க, உள்ளே தயாராய் மடித்து வைக்கப்பட்ட இலைக்கு முன்னே அமர வைக்கின்றனர் கடை ஊழியர்கள்.உட்கார்ந்து இலையை விரித்து, தண்ணீர் தெளித்த உடனே, ஒருவர் தட்டை எடுத்து கொண்டு வந்து நம்முன் நீட்டுகிறார்.மீனின் வகைகளில் வெவ்வேறு சைஸ்களில் மூன்றும், சிக்கன் வகையில் ஒன்றும் இருக்கிறது.ஒவ்வொரு நாளுக்கும் மீனின் வகை மற்றும் சைஸ் மாறுபடுமாம் அதே மாதிரி விலையிலும்.நேற்று கிழங்கா மீனும், கெளி என்கிற மீனும், கட்லா மீனும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

             அடிக்கிற வெயிலுக்கு இன்னும் காரமா வேற சாப்பிடனுமா என்கிற யோசனை இருந்தாலும், டேஸ்ட்க்காக வாங்கித்தானே ஆகனும் என்கிற கொள்கையின் அடிப்படையில், கட்லா மீனும், சிக்கன் கிரேவியும் ஆர்டர் செய்தோம்.இலையில் பொரியல், கூட்டு, ஊறுகாய் என முதல் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாக, சுடச்சுட சாப்பாட்டை ஒருவர் கொட்டியபடி…(அள்ளி வைப்பதெல்லாம் வேற ஸ்டைல் போல…)போக, இன்னொருவர், மீன் குழம்பா, சிக்கன் குழம்பா என கேட்டபடியே வர, மீன் குழம்பினை கேட்க, கொஞ்சம் தாராளமாகவே ஊற்றினார்.சுடச்சுடச் சாதத்துடன் மீன்குழம்பினை பிசைந்து சாப்பிட ஆஹா..மீன் குழம்பு அபாரம்.கொஞ்சம் புளிப்பும், காரமும், மீனின் வாசனையும் சேர்ந்து தூக்க, சாப்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் ..இல்லை இல்லை அதிக அதிகமாய் உள்ளிறங்கியது.கடை ஊழியர்கள் இலையில் சாப்பாடு எப்படா குறையும் என்று காத்துக்கிடப்பார்கள் போல, கொஞ்சம் குறைந்தாலும் உடனே வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர்.
                    அடுத்து ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த சிக்கன் கிரேவியை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து  ஒரு கவளம் வாயில் போட ..செம டேஸ்ட்..கெட்டியான பதத்தில் தக்காளி,வெங்காயம் நன்கு வெந்து மசாலாவோடு மணந்து சிக்கனின் சாறும் சேர்ந்து இருக்க, அதை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட சுவையோ சுவை.சிக்கன் துண்டுகளோ நன்றாக மசாலாவில் ஊறி பஞ்சு போன்று இருக்க, பிய்த்து சாப்பிட மிக மென்மையாய் இருக்கிறது.சாதம் குறைந்தவுடன் மீண்டும் சாப்பாட்டை கொட்டிவிட்டு செல்கின்றனர்.சாப்பாடு ஒவ்வொரு முறையும் சூடாக இருப்பது ஆச்சர்யமே. அதற்குள் மீன் வரவே, கொஞ்சம் கருகியபடி இருந்தாலும் மீனின் சுவையில் ஒன்றும் மாற்றமில்லை.
                     சிக்கன் கிரேவிக்கு அடுத்ததாய் சிக்கன் குழம்பினை சாதத்தின் மேல் ஊற்ற, மிக திக்காய் இருக்கிறது குழம்பு.மசாலா, தேங்காய் சேர்த்து அரைத்து வைத்த குழம்புதான்.மிக சுவையாக இருக்கிறது.காரம் உப்பு, மசாலா என எல்லாம் அளவுடனே இருக்க, சாப்பாடும் வஞ்சகம் இன்றி உள்ளே இறங்குகிறது. வயிறு நிறைவது  கூட தெரியாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் போதும்னு நினைக்கிறேன் என நண்பரிடம் சொல்லியபோது, அவரிடமிருந்து ஒரு பெரிய ஏப்பமே பதிலாய் வந்தது.மோரும் ரசமும் இன்னும் பாக்கி இருப்பது தெரிய இன்னும் கொஞ்சம் அளவாய் சாப்பிடலாம் என்று ரசத்துக்கு கொஞ்சம் வாங்கி சாப்பிட, ரசம் அருமையோ அருமை.தக்காளி, புளி காம்பினேசனில் ரசம் இன்னும் சாப்பிட தூண்ட, இதற்கு மேல் முடியாது என்று எண்ணி இலையை மூடிவைத்துவிட்டு மெதுவாய் நகர்ந்தபடி வெளியேறினோம்.நல்லா காரஞ்சாரமா சாப்பிடனும்னா கண்டிப்பா போகலாம்.
                சாப்பாடு ரூ 70.மிக திருப்தியான சாப்பாடு சாப்பிடனும்னா கண்டிப்பா போகலாம்.சைட் டிஷ் வாங்கியே ஆகணும்கிறது இல்ல.
காந்திபுரம் பஸ்ஸ்டாண்டு செந்தில் குமரன் தியேட்டர் பின்புறம் இருக்கிறது இந்த மெஸ்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...

Saturday, April 2, 2016

கரம் - 21

பட்டர் காராஸ்
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்றாலே மைசூர்பா தான் ஞாபகத்திற்கு வரும்.கெட்டியா கல்லுமாதிரி கடிச்சு தின்னுகிட்டு இருந்த மைசூர்பாவை பார்த்தாலே கரையுறமாதிரி மாத்தின பெருமை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்க்கு உண்டு.
                      மைசூர்பா நெய் மணத்துடன் இளஞ்சூடாய் இருக்கும் போது கொஞ்சமாய் பிய்த்து எடுத்து வாயில் போட்டாலே போதும்.நாவின் சுவை நரம்புகள் அத்தனையும் உடனடி நிமிர்ந்து நின்று உமிழ்நீர் சுரந்து மைசூர்பாவை கரையச் செய்து அதன் மணத்துடனும் சுவையுடனும் தித்திப்பை தரும்.அவ்வளவு சுவை தரும் மைசூர்பா. இப்பொழுது அவர்களின் அடுத்த படைப்பாக பாக்கெட்களில் கார வகை உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.

                             பட்டர் காராஸ் (BUTTER KARAS) என்கிற பெயரில் அவல் மிக்சர், பாம்பே மிக்சர்,பாதாம் மிக்சர், தேன்குழல், முள்ளு முறுக்கு, கடலை மிக்சர்,பெப்பர் சீடை, ஓட்டுபக்கோடா,காராசேவ், முறுக்கு ஸ்டிக்ஸ் போன்ற பத்து வகை கார உணவுகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.பாக்கெட் ஹன்சிகா மாதிரி கும்மென்று இருக்கிறது.டேஸ்டும் சூப்பராய் இருக்கிறது.பாக்கெட்டில் காற்று மட்டும் அதிகமாய் இருக்கிறது மிக்சரை விட.ஆனால் சுவை அதிகமாய் இருக்கிறது.

தனி பாக்கெட்விலை பத்து ரூபாய்.அனைத்தும் சேர்ந்து ஒரு கார காம்போ ரூபாய் 100 என விற்கின்றனர்.
நம்ம பங்காளிகளுக்கு ஸ்நேக்ஸ் அயிட்டத்திற்கு இந்த ஒரு பண்டல் வாங்கினால் போதும்.செமயா பிச்சிக்கும்...
                         ********************************************

சிட்டுக்குருவி தினம் - மார்ச் 20
                      30 வருஷம் முன்னாடி எங்க ஊர்ல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு குருவிக்காரர் வருவார்.மூங்கிலால் பின்னப்பட்ட ஒரு கூண்டை வண்டியில் வச்சு கட்டிக்கொண்டு வருவார்.அந்த குருவி கூண்டு வட்டவடிவத்துல 3 அடி விட்டத்துல ஒரு அடி உயரத்துல இருக்கும்.ஒரு கை போற அளவுக்கு திறப்பு இருக்கும்.எங்க ஊர் முச்சந்தியில் ஒரு ஓரமான இடத்துல கூண்டோட உட்காரும் போது அவரைச்சுத்தி எங்க ஊர்க்காரங்க கூடிடுவாங்க.விலையை கேட்பாங்க.டஜன் பத்தோ இருவதோ சொல்லுவாரு. ஆளாளுக்கு டஜன் கணக்குல சொன்னவுடன், கூண்டின் ஓட்டைக்குள் கைவிட்டு அள்ளுவாரு.கை நிறைய சிட்டுக்குருவிகள் இருக்கும்.ஓங்கி தரையில ஒரே அடி.எல்லாம் செத்துடும்.ஏதோ அதிர்ஷ்டம் இருக்குறது பறந்து போயிடும்.
                                           ஒவ்வொரு குருவியா எடுத்து கருப்பா இருக்கிற அலகை அரிவாளால் அரிஞ்சு போடுவார்.அவர் கால் பெருவிரலுக்குள் லாவகமா அரிவாளோட பிடியை வச்சிருப்பாரு.அதுல ஒரே அரி.அவ்ளோதான்.அப்புறம் இறக்கையோடு தோலை ஒரு இழுப்பு இழுப்பாரு.வழுக்கிகிட்டு வரும் சிட்டுக்குருவி உடல்.வயிற்றை ஒரு பிதுக்கு பிதுக்கினா குடல் வந்துடும்.அவ்ளோ தான் கிளினீங் முடிஞ்சது.அப்போலாம் பாலீத்தின் பை இல்ல.கொண்டுட்டு வந்த பாத்திரத்துல வாங்கிட்டு போவோம்.
                                வீட்டுல எங்க அம்மா மசாலாவை நல்லா அம்மில அரைச்சு சிட்டுக்குருவியை பதமா வேகவச்சி தேங்காய் அரைச்சி ஊத்தி நல்லா வதக்கி வறுவலா தருவாங்க...ஒண்ணை எடுத்து வாயில போட்டா அம்புட்டு டேஸ்டா இருக்கும்.மொறு மொறுன்னு எலும்பு வாயில அரைபடும்.சதையும் மசாலாவோட இருக்கிறதால் பஞ்சு மாதிரி சுவையா உள்ளே போகும்.குருவி தலை அம்புட்டு டேஸ்டா இருக்கும்.வீட்டுல இருக்கிற எண்ணிக்கையை பொறுத்து ஆளுக்கு இத்தனை குருவின்னு வாங்கி செஞ்சு பிரிச்சு குடுத்துடுவாங்க.ஒவ்வொண்ணா சாப்பிட்டுகிட்டே கையை நக்கிட்டு இருப்போம்.அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

                                     வயல்வெளிகள் அப்போ அதிகமா இருந்துச்சு.நெல்லு கம்பு சோளம்னு எங்க பார்த்தாலும் தானியப்பயிர்களா இருந்துச்சு.மரங்கள் நிறைய இருந்துச்சு.அதனால சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் அதிகமா இருந்துச்சு.நாங்களும் வாரா வாரம் டஜன் கணக்குல சாப்பிட்டுகிட்டு இருந்தோம்.
வருசம் ஆக ஆக வயல்வெளிகள் கான்கிரீட் காடுகள் ஆகிடுச்சு.மரங்கள் இல்ல.விவசாயம் இல்ல.புதுசா செல்போன் டவர் வந்ததினால் குருவிகள் அழிஞ்சு போச்சு.இனப்பெருக்கம் எதுவும் இல்ல.அதனால அரிய வகையில் சேர்ந்துவிட்டது.
இப்போ புதுசா சிட்டுக்குருவி வளர்ப்போம்னுட்டு ஒரு பிஸினஸா ஆக்கி ஒரு சில பேரு கிளம்பிட்டாங்க...விவசாய நிலங்களை அழிக்காமல் இருந்தால் சிட்டுக்குருவி ஒரு அபூர்வ பறவை ஆகி இருக்காது...

இனி இருக்குற ஒண்ணு ரெண்டு சிட்டுக்குருவிகளை சாப்பிடாம பாதுகாப்போம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...