பசி
நேரம்...வடகோவை ரயில்வே ஸ்டேசன்.டாடாபாத் வருகிற வழி… பச்சை பசேல் என்கிற போர்டு கண்ணையும்
வயிற்றையும் ஈர்த்தது.ஹோட்டல் பெயரும் வித்தியாசமாக இருக்கவே உள்ளே நுழைந்தோம்.
சின்ன
கடைதான். சுவற்றின் இருபுறமும் சின்ன பலகை வைத்து டைனிங் டேபிளாக மாற்றியிருந்தனர்.நின்று
கொண்டு தான் சாப்பிட முடியும்.தொங்கிக்கொண்டிருந்த கருப்பு போர்டுகளில் விலைகளுடன்
மெனுக்கள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தன.அதில் ராகி களியும் கருவாட்டு குழம்பும் ஈர்த்தன.
கடை
உரிமையாளரிடன் பேச்சு கொடுத்தபடியே ராகி களி ஆர்டர் செய்தோம். பசுமையான வாழை இலையில்
கைக்கு அடங்காத ஒரு ராகி களி உருண்டை வைத்து, கருவாட்டு குழம்பை ஊத்திகிங்க என்று ஒரு
பெரிய குண்டாவை உள்ளிருந்து எடுத்து வைத்தார்.கரண்டி எடுத்து குழம்பை கலக்கியதில் நெத்திலி
கருவாடுகள் மசாலாவுடன் நீந்திக்கொண்டிருக்க, அலேக்காய் குழம்புடன் இரண்டு நெத்திலி
கருவாட்டை எடுத்து களி உருண்டை மேல் ஊற்ற குழம்பாபிசேகம் ஆனது.
களியின்
ஓரமாய் ஒரு விள்ளலை பிய்த்து குழம்போடு பிசைந்து உருட்டி, வாயில் வைத்தால் கருவாட்டுக்
குழம்பின் மணத்துடனும் மிக்க ருசியுடனும் உள்ளே இறங்கியது.கொஞ்சம் கொஞ்சமாய் கனத்த
உருண்டை கருவாட்டு குழம்போடு கரைந்து கொண்டிருந்தது.அது பாட்டுக்கு வயிற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.நெத்திலி
மீனின் சுவையும் நன்றாகவே இருந்தது. பாதி களி உருண்டைதான் சாப்பிட்டிருப்போம்…அதற்குள்
கடைக்காரரின் குரல்….இந்தாங்க…சிக்கன் குழம்பு ஊத்திக்குங்க என்று இன்னொரு குண்டாவினை
எடுத்து வைத்தார்….அரைத்த வைக்கப்பட்ட சிக்கன் குழம்பு நன்றாக இருந்தாலும், கருவாட்டுக்குழம்புக்கு
ஈடாக வில்லை.சிக்கன் குழம்பினை சிறிதளவு டேஸ்ட் பண்ணிவிட்டு, மீண்டும் பழைய குண்டாவிற்கே
திரும்பினோம்.களி உருண்டை காணாமல் போகும் வரைக்கும், கருவாட்டுக்குழம்பை ஊற்றி ஊற்றி
சாப்பிட்டோம்.
இன்னொரு
களி உருண்டை சாப்பிட சத்தியமாய் வயிற்றில் இடமில்லை,முழுவதும் கருவாட்டுக்குழம்பால்
நிரம்பியிருந்தது.வயிறும் மனசும் நிறைய பெரும் ஏப்பத்துடன் வெளிவந்தோம்.
நிறைய
வெரைட்டிகள் மெனுகார்டில் இருக்கின்றன.மிக குறைந்த அளவே தயாரிக்கப்படுகின்றன.கடை ஆரம்பித்து
மூன்று மாதங்கள் ஆகிறதாம்,கோவையில் முதல் களி உருண்டை ஹோட்டல் இதுதான்.களி உருண்டை
பெங்களூர் தள்ளுவண்டிகளில் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்.அங்கு முத்தா என்பார்கள்.பெரும்பாலான
ஹோட்டல்களில் களி கிடைக்காது.தள்ளுவண்டிதான்.கூட கோழிக்குழம்பினை ஊற்றுவார்கள்.செம
டேஸ்டாக இருக்கும்.
கோவையில் முதன் முதலாய் இங்கு ஆரம்பித்து இருக்கிறார்கள்.சின்ன கடைதான்.இடவசதி
நெருக்கடி கண்டிப்பாய் இருக்கும்.ஆனால் மிக்க சுகாதாரமாக இருக்கிறது.டேஸ்டாகவும் இருக்கிறது.
கடை
உரிமையாளர் பெயர் சீனிவாசன் என்றார், சொந்த வீட்டிலேயே ஹோட்டல் ஆரம்பித்து இருக்கிறார்.சுகாதாரமாகவும் சுத்தமாகவும் விலை குறைவாகவும் இருக்கிறது.
இளநீர் சர்பத்
இளநீர் சர்பத்தின் விலை ரூ 60.
நேசங்களுடன்
ஜீவானந்தம்.