கரம்:
மலரும் நினைவுகள்
போன வாரம் எங்க கிராமத்துக்கு போயிருந்தேன்.வேறென்ன ...கிடாவெட்டு தான்.மாரியம்மன் திருவிழா.ரெண்டு கிராமங்களுக்கு இடையில் இருந்த தகராறினால் இந்த வருடம் ரொம்பத்தள்ளி திருவிழா கொண்டாடினார்கள். சிறுவயதில் கொண்டாடிய திருவிழா போல் இல்லை.கோவில் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை.வீடே கதியென்று ஆகிவிட்டது.அதனால் நம்ம வீட்டு வாண்டுகளுக்கு ஏதாவது செஞ்சு தரணுமே அப்படின்னு ஒரு கிலுகிலுப்பை செஞ்சேன்.சின்ன வயதில் செய்து பார்த்தது.ஆனாலும் மறக்கவில்லை. சரியாய் செய்துவிட்டேன்.
தேங்காய் குரும்பியில் ஈர்க்குச்சியை சொருகி அதைச் சுத்தும் போது ஒருவித சத்தம் வரும்.அது கேட்க மிக இனிமையாய் இருக்கும்.அழுகிற குழந்தை கூட தன் அழுகையை நிறுத்தி விடும்.வேக வேகமாக சுத்தும் போது இன்னும் சத்தம் நன்றாக வரும்.நம்ம வாண்டுகளுக்கு ஒரே ஆச்சர்யம்..எங்க இருந்து சத்தம் வருதுன்னு...அதை விட ஆச்சர்யம்..நம்ம அம்மணி கூட அதை இன்னும் ஆச்சர்யமா பார்த்தது தான்..
கிராமங்களில் இது போன்ற சிறு சிறு விளையாட்டுகள் எப்பவும் இருப்பதுதான்.ஆனால் அது இப்போது மாறிக்கொண்டு வருகிறது என்பது வருத்தமே.
நுங்கு வண்டி, கிலுகிலுப்பை, சைக்கிள் ரிம் வண்டி, கில்லி, கோலிக்குண்டு, பனை காத்தாடி, பொன்வண்டு, வெட்டுக்கிளி ஜோஸ்யம் இப்படி எல்லாம் போய்விட்டது. சமீபத்தில் வந்த பூவரசம் பீப்பி படத்தில் கூட பொன்வண்டு காட்டியிருப்பார்கள்.அதைப்பார்த்ததும் இன்னும் ஞாபகம் அதிகமாகவிட்டது.
பொன்வண்டினை பிடித்து அதற்கு கோணக்கா இலையை தருவது, அது போட்ட முட்டையை பத்திரமாய் வைப்பது, கயிற்றில் கட்டி சுத்தும் போது அது பறப்பது, பொன்வண்டு தலைக்கு இடையில் கை நுழைத்து வெட்டுப்பட வைப்பது என எல்லாம் சிறு வயது ஞாபகங்கள்...
கிராமங்களில் இது போன்ற சிறு சிறு சந்தோசங்கள் குழந்தைகளை மகிழ்வித்தன.இப்போதெல்லாம் கிராமங்களில் கூட தொலைந்து விட்டன பால்ய கால விளையாட்டுகள்.நகரத்துக்குழந்தைகள் போல கிராமங்களிலும் வளர்வதுதான் இன்றைய ஆச்சர்யம்.
**********************************
சமீபத்தில் பார்த்த படம்:
ஒரு சில காட்சிகள் நெகிழ வைக்கின்றன
ஒரு சில காட்சிகள் நெளிய வைக்கின்றன..
தாத்தா ராஜ்கிரணின் நடிப்பில் நாம் கண்களை குளமாக்குகிறோம்.
கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும்.
”பாத்து பாத்து ” இந்தப்பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.அதிகம் கேட்கக்கூடிய பாடல்களில் இது இடம் பிடித்துவிட்டிருக்கிறது.
போன வாரம் கரூர் சென்றிருந்த போது திண்ணப்பா தியேட்டரில் ரொம்ப நாளைக்கப்புறம் செம க்யூ பார்த்தேன்...
நல்ல வசூலைத்தந்திருக்கிறது படம்..
மஞ்சப்பை ...கொஞ்சம் சாயம் போனாலும் உறுதியான தரமான பை......
பார்க்கலாம்....
******************************
நேசங்களுடன்
ஜீவானந்தம்