Wednesday, December 24, 2014

பயணம் – தனுஷ்கோடி, இராமேஸ்வரம்

          இராமேஸ்வரத்தில் நம்ம வேலை முடிந்ததும் எங்கு செல்வது என்று நினைக்கையில் உடனே ஞாபகம் வந்தது தனுஷ்கோடி தான்.புயலால் அழிந்த ஒரு கிராமம் என்று கேள்விப்பட்டிருப்பதாலும், இன்னும் அதன் நினைவுகளை தாங்கி ஒரு சில கட்டிடங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை அறிந்திருப்பதாலும் அங்கு செல்ல முடிவெடுத்தோம்.

           இராமேஸ்வரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தனுஷ்கோடி.சிறு தூறல் எங்களை வரவேற்றிருக்க தனுஷ்கோடி செல்லும் சாலையில் பயணித்தோம்.மழை பெய்து கொண்டிருந்தாலும், இருபுறமும் ஓங்கி தளைத்திருந்த மரங்கள் தன் பசுமை அழகை இழந்திருந்தன.சிறிது தூரத்தில் சாலையில் இருபுறமும் கடல் தென்பட ஆரம்பித்தது.கடல் நடுவே செல்லும் பாதையில் கடலை ரசித்துக்கொண்டே பயணித்தோம்.கொஞ்ச நேரத்தில் முகுந்தராயர்சத்திரம் என்னும் ஊரை அடைந்தோம்.
    கடலழகை கண்டு ரசிக்க ஒரு கண்காணிப்பு கோபுரம் ஒன்று இருக்க, ஏகப்பட்ட வேன்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தன.கார்பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வெளிவர, கூவி அழைத்துக்கொண்டிருந்தனர் வேன் வாசிகள்.தனுஷ்கோடிக்கு செல்ல அங்கிருக்கும் வேன் மூலம் மட்டுமே அழைத்து செல்லப்படுவர்.நமது வண்டிகள் அங்கே அனுமதி இல்லை.ஒவ்வொரு வேனும் 15 முதல் 25 பேர் வரை ஆட்களை ஏற்றி தனுஷ்கோடிக்கு சென்றுகொண்டிருந்தன. எங்களுக்கு தோதான ஒரு வேனில் ஏறிக்கொண்டு பயணித்தோம்.
              கடற்கரை மணலில் வேன் ஒரு படகு போல் வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருந்தது.மணலில் செல்லும் போது வேனாகவும், அவ்வப்போது கடலில் சிறிதளவு ஆழத்தில் படகாகவும் சென்றது.அரைமணி நேரப்பயணம்...கடலை ரசித்துக்கொண்டே தனுஷ்கோடி வந்திறங்கினோம்.
              சுற்றுலா இடத்திற்கே உண்டான சிறு கடைகள்...உப்பும் மிளகாயுமிட்ட மாங்காய் துண்டுகள், கிழங்குகள், என சிற்றுண்டி வகைகள்...கடற்கரை ஓரம் என்பதால் முத்துக்களும் சிப்பிகளும் பல்வேறு வடிவத்தில் உருமாறி அணிகலன்களாக வரவேற்றுக்கொண்டிருந்தன வாடிக்கையாளர்களை....



                மூன்று புறமும் கடல் இருப்பதால் எப்பவும் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.அவ்வப்போது மழை சிறு தூறலாய் வந்து கொண்டிருக்க புதையுண்ட வீடுகளையும், இன்னமும் நினைவுச் சின்னங்களாய் பழைய ஞாபங்கங்களை சுமந்து கொண்டிருக்கும் கட்டிடங்களை காண சென்றோம்.
                கடல்மணலில் கால் பொதிய நடக்க சிதறிக்கிடந்தன நிறைய செங்கற்கள்....இவையெல்லாம் இன்னும் மிச்சமிருக்கும் கட்டிடங்களின் ஞாபகங்களை சுமந்துகொண்டு கீழே கிடக்கின்றன.கடல் எப்பவும் போல அலையுடன் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க, ஆகாயமானது சிறு தூறலை உற்பத்தி செய்து, மண்ணில் புதையுண்ட நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தது.
              அரை நூற்றாண்டுக்கு முன்பு கம்பீரமாய் நின்றிருந்த சர்ச், கோவில், கட்டிடங்கள், வீடுகள் என அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்டு, பேரழிவின் சாட்சியாய் சிதிலமடைந்து இருப்பதை காண மனம் வேதனைக்குள்ளாகிறது.

               ஒரே ஒரு இரவில் ஒரு ஊரே தன் அடையாளத்தினை தொலைத்து இப்போது அதன் மிச்சங்களை நினைவுச் சின்னங்களாய் ஆக்கி இருப்பது வரலாற்றின் கோலம்.புயலால் பாதிக்கப்பட்டதால் இங்கு மக்கள் வாழ தடை செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் சில மீனவ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.பழைய நினைவுகளை சுமந்தபடி மீன்பிடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

                1964ம் வருடம் டிசம்பர் 22ம் நாள் ஏற்பட்ட கொடூர புயலின் தாக்கத்தால் தனுஷ்கோடி என்கிற ஊரே அழிந்து போனது. ஆனாலும் அதன் நினைவுகளை தாங்கி இன்னமும் மிச்சமிருக்கும் சின்னங்கள் ஒரு ஊரின் வரலாற்றை ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Sunday, December 21, 2014

கோவை மெஸ் – துதல் அல்வா, பணியம், கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்.

            நம்ம வேலை விசயமா இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ங்கிற ஊருக்கு போயிருந்தேன்.அங்க போனபோதுதான் தெரிஞ்சது பக்கத்துலேயே கடல் இருப்பது.சரி..ன்னு கடல் பார்க்க போலாமே அப்படின்னு போனதுதான் கீழக்கரை என்கிற கடலோர கிராமத்திற்கு....அங்க போனபோதுதான் கூட வந்த நம்ம நண்பர் சொன்னாரு இங்க ஒரு அல்வா கிடைக்கும்னு.பேரு என்னவோ நுதலோ லுதலோ சரியா தெரியல அப்படின்னாரு....
              உடனே நம்ம எட்டாம் அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது.சாப்பிட்டுப் பார்க்கனுமே என்று எண்ணம் தோன்றியதுமே நாக்கு நம நமக்க ஆரம்பித்தது.மேலும் கோவை மெஸ்க்கு சரியான தீனி கிடைச்சிடுச்சி என்கிற ஆவலில் அதை தேடி பயணித்தோம்.


                திருப்புல்லாணி என்கிற ஊரில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் கீழக்கரை இருக்கிறது.ஊரில் நுழைகையில் வள்ளல் சீதக்காதி அவர்களின் நினைவு நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. அதைத்தாண்டி செல்ல, நெருக்கமான கடைகள், வீடுகள் கொண்ட ஊருக்குள் நுழைந்தோம்.சின்ன ஊருக்குள் ஊர்ப்பட்ட கடைகள்.எங்கு பார்த்தாலும் முஸ்லீம் அன்பர்கள்....மழை வேறு மெலிதாய் பெய்து கொண்டிருக்க, மெதுவாய் நகர்ந்தபடியே நாங்கள் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தோம்.நடந்து போன ஒருவரிடம் லுதல் எங்கே கிடைக்கும் என விசாரிக்க, இன்னும் ஊருக்குள் எங்களை கிளப்பிவிட்டார்.
             குறுகிய தெருக்களில் நம்ம ஸ்கார்ப்பியோ ரோட்டை அடைத்தபடி செல்ல, ஒவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு ஒரு இடத்தினை அடைந்தோம்.ஒரு மளிகைக்கடையில் விசாரிக்க, எங்களையும், எங்களின் கார் அளவையும் பார்த்துவிட்டு பல்க் காக வாங்க வந்திருப்போம் என்றெண்ணி வீட்டில் செய்து தரும் ஒரு பெண்மணியிடம் அழைத்து சென்றார் அந்த கடைக்கார அம்மணி.

            காரை ஓரங்கட்டிவிட்டு இன்னும் குறுகிய சந்துகள், தெருக்களில் நடை போட்டோம்.பெத்திரி தெரு என்ற பெயர்ப்பலகை ஒன்று அடையாளமாய் நின்று கொண்டிருக்க,  அதன் அருகில் உள்ள ஒரு வீட்டில் பெயர் சொல்லி கூப்பிட்டு எங்களை அறிமுகப்படுத்திவிட்டு அந்த மளிகைக்கடை அம்மணி சென்று விட்டார்.
லுதல் இருக்குங்களா என்று கேட்க, அது துதல் என்று சொல்லியபடி டேஸ்ட் பார்க்க கொஞ்சம் கொடுத்தார் அந்த வீட்டு வயதான பெண்மணி.

இவர் வீட்டிலேயே துதல் செய்து கடைகளுக்கு தருபவராய் இருக்கிறார்.கொண்டு வந்து கொடுத்தவுடனே அந்த வாசம் பரவி நம்மை சுவைக்க தூண்டுகிறது.ஒரு வித இனிப்புடன் கூடிய தேங்காய் மணம் நம்மைச்சுற்றிப்பரவுகிறது.மைதா மாவு, பனங்கருப்பட்டி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணைய், முந்திரிப்பருப்பு சேர்த்து செய்யும் ஒரு அல்வா தான் இது.அல்வா போன்று  வழவழப்பு இல்லாமல் கொஞ்சம் மிருதுவாக இருக்கிறது.சாப்பிட்டு பார்க்கையில் பன்ங்கருப்பட்டியின் சுவையுடன் மெதுவாய் கரைந்து ஒரு புதுவித சுவையத்தருகிறது.நாக்கின் சுவை நரம்புகள் இன்னும் மீட்டப்படுகின்றன.அதன் சுவை நல்ல தேங்காய் எண்ணைய் மணத்துடன் ஒரு வித்தியாசமான சுவையைத் தருகிறது.சாப்பிட சாப்பிட அதன் சுவையில் நாம் சிக்குண்டு போகிறோம்.கைகளில் எண்ணைய் வாசம் இன்னும் அகலவே இல்லை.
ஆளுக்கு அரைக்கிலோ துதல் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றோம்.அந்த வீட்டில் இருந்து காருக்கு வருவதற்குள் ஒரு பாக்கெட் அல்வா எங்களை தின்று விட்டிருந்தது.

            குறுகிய தெருவினில் எப்படியோ கஷ்டப்பட்டு வந்ததுக்கு ஒரு இனிய அனுபவத்தினை பெற்றிருந்தோம்.அந்த வீட்டில் வாங்கிக்கொண்டு வெளியேறி அந்த ஊரிலேயே உள்ள இன்னொரு கடையினை கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.அந்தக்கடைக்கு சென்றவுடன் தான் தெரிந்தது இது எம்ஜியார் ருசித்த அல்வா என்று அந்த கடையில் ஒட்டியிருந்த விளம்பர பலகையில் இருந்து....அவரிடம் இன்னும் டீடெயிலாக விசாரித்தபோது 103 வருடங்களாக துதல் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் என்றும் வெளிநாடு மற்றும் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற தகவலையும் சொன்னார்.
              
          துதல் போலவே பணியமும் பேமஸ் என்றார்.நம்மூரில் கிடைக்காத பணியாரமா இங்கு கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தினை உடனடியாக காலி பண்ணினார் கடைக்காரர்.பணியாரம் என்று சொன்னது ஒரு கார பலகாரத்தினை.அது பணியாரம் இல்லை பணியம் என்று...ஒருவித உருளை வடிவத்தில் இருக்கிறது.சாப்பிட மொறு மொறுவென்று வித்தியாசமான சுவையில் காரத்துடன் இருக்கிறது.முறுக்கு சுவை என்பது கொஞ்சம் கூட இல்லை.அதுவும் நன்றாக இருக்கிறது.அதையும் ஆளுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு வெளியேறினோம்..
          துதல் அல்வா வீட்டில் வாங்கியது கிலோ 180 ரூபாய்..கடையில் வாங்கினது 200ரூபாய்.
வீட்டில் சுவைத்த துதலும், கடையில் சுவைத்த துதலும் சுவை ஒன்றுதான்..ஆனால் நிறம் மட்டுமே கொஞ்சம் மாறியிருக்கிறது.
எப்பவாவது இராமநாதபுரம் போனால் கீழக்கரை சென்று துதல் சாப்பிட்டுப்பாருங்கள்...உடலுக்கு ஆரோக்கியமான ஒரு இனிப்பு பலகாரம்....

கீழக்கரை பற்றி சிறு குறிப்பு: செத்துங்கொடுத்தான் சீதக்காதி என்ற பெயர் தாங்கிய வள்ளல் சீதக்காதி பிறந்த ஊர்.வரலாற்று சிறப்பு மிக்க பழம் பெரும் கடற்கரை நகரம்.கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இடம்.



நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Saturday, November 29, 2014

கோவை மெஸ் - இராமசாமி உணவகம், (Ramasamy Canteen ) கவுண்டம்பாளையம், கோவை

              ஒரு மாலை நேரம்...மணி 3.30 இருக்கும்.மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையத்துல இருக்கிற இராமசாமி மெட்ரிகுலேசன் ஸ்கூல் பக்கத்துல போயிட்டு இருந்தபோது அந்த ஸ்கூல் நிர்வாகமே ஒரு கேண்டீன் நடத்திட்டு வர்ற விஷயம் ஞாபகத்திற்கு வர அப்படியே யூ டர்ன் அடிச்சு உள்ளே நுழைந்தேன்.மணி 3.30 ஆச்சே, சாப்பாடு இருக்குமா இருக்காதா என்ற எண்ணத்திலேயும், பதிவு ஒண்ணு தேத்தமுடியுமா என்ற எண்ணத்திலேயும் அவசர அவசரமாக வண்டியை நிறுத்தவும், காவலாளி ஒருவர் வாங்க வாங்க என அழைக்கவும், நமக்கான சாப்பாடு கன்பார்ம் ஆகிவிட்ட சந்தோசத்தில் உள்நுழைந்தேன்.
        
           பரந்து விரிந்த பெரிய சாப்பாட்டு ஹால் நம்மை வரவேற்கிறது.டோக்கன் வாங்கிகொண்டு கை கழுவும் இடத்திற்கு சென்றபோது சாப்பிட்டவர்களின் தட்டுகள் நிறைந்து கிடந்தன.ஹாலோ காலியாகி கிடந்தது.லேட்டாய் வந்தால் இப்படித்தான் வெறும் டேபிள் சேர்களை பார்த்துக்கொண்டு உண்ணவேண்டியது தான் என மனதுக்குள் நொந்தபடியே டோக்கன் கொடுத்து அதை சாப்பாடாக மாற்றி, கையில் ஏந்தி காலியான டேபிள்களில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.
           நான் போன அன்று முள்ளங்கி சாம்பாருடன் கூடிய சாதம்.ஒவ்வொரு நாளும் வேறு வேறு காய்களுடன் சாம்பார். பொரியலும் தினம் தினம் வெவ்வேறு காய்களுடன்.நன்றாகவே இருக்கிறது.அளவு சாதம் தான்.ஆனால் அதுவே நிறைவாக இருக்கிறது.இன்னும் நிறைய அயிட்டங்கள் சேர்க்கப்படுவதாகவும் அங்கிருந்த ஊழியர் தெரிவித்தார்.

          ஏழைகள் மற்றும் வசதி குறைந்தோர் மிக திருப்தியாக சாப்பிடுவதற்காக ஏற்படுத்திய கேண்டின் இது.குறைந்த விலையில் தரமான சாப்பாடு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது இராமசாமி உணவகம்.காலையில் இட்லி, தோசை, ரவாகிச்சடி, என ஆரம்பித்து நிறைய வெரைட்டிகள் தருகின்றார்கள்.பத்து ரூபாயில் ஆரம்பித்து 30 வரை இருக்கிறது.அதே போல் இரவு சிற்றுண்டியும் நிறைய வெரைட்டிகளில் இருக்கிறது.
            வெளி ஹோட்டல்களில் அறுபது ரூபாயில் இருந்து கிடைக்கின்ற சாப்பாடு இங்கே 30 ரூபாய் மட்டுமே.இந்த நிறுவனமும் மற்றவர்களிடமிருந்து நிதி வாங்காமல் இந்த கேண்டீனை நடத்தி வருகிறது.லாப நோக்கமின்றி செயல்பட துவங்கி இருக்கும் இந்த இராமசாமி நிறுவனம் இன்னும் பல சிறப்பான சேவைகளை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த கேண்டீன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருப்பதால் இன்னும் நிறைய பேரை சென்றடையவில்லை.ஆனாலும் மாலை நேரம் கணிசமான கூட்டம் வந்து சேர்கிறது.
           இந்த சேவையினை செயல்படுத்தி வரும் திரு ஹரி அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
கோவை டூ திருச்சி ரோட்டில் சாந்தி கேண்டீன் இருக்கிறதோ அதே மாதிரி கோவை டூ மேட்டுப்பாளையம் ரோட்டில் இராமசாமி கேண்டீன் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, November 12, 2014

கோவில் குளம்:அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் - ஆயா கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம், நாமக்கல்.

அருள்மிகு அழியா இலங்கை அம்மன் கோவில் - ஆயா கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம், நாமக்கல்.

             கோவில் திருவிழாவானது இரவு முழுக்க ஒரே ஒரு நாள் மட்டும் மிக விமரிசையாக பூஜைகள் நடக்கும் கோவில் ஆயா கோவில் என்கிற அழியா இலங்கை அம்மன் கோவில்.சமீபத்தில் இந்தக்கோவிலுக்கு சென்று வந்திருந்தேன்.இரவு நேரம் தான்..கோவில் களை கட்டியிருந்தது அலங்கார விளக்குகளாலும், திடீர்க் கடைகளாலும் மற்றும் எப்பவும் போல இரவென்றாலும் பகலென்றாலும் அம்மன் அருள் பெற விரும்பும் பக்த கோடிகளாலும்…. 
                                   ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
            

            பக்தகோடிகளை வரவேற்கும் பேனர் பிரியர்களின் போட்டோக்கள் நிரம்பிய பேனர்கள் கோவிலுக்கு செல்லும் வழி பூராவும் இருபுறமும் வரவேற்றுக் கொண்டிருந்தன.கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கிற கடைகளில் எப்பவும் போல மக்களாகிய பக்தர்கள் கூட்டம். சட்டி பானை முதல் தட்டு முட்டு சாமான் வரை அனைத்தும் கடை பரப்பியிருந்தன.பொங்கல் அன்று காணப்படும் செங்கரும்பு கூட இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோடி எண்பது ரூபாய்க்கு விற்பனையாகிக்கொண்டிருந்தது.இந்த கோவில் அம்மனுக்கு பிடித்த பழங்களான விளாம்பழமும் கொழுஞ்சிக்காயும் நிறைய குவிந்து கிடந்தன பக்தர்களின் வருகைக்காக.அம்மனுக்கு படைக்கப்படும் வாழைப்பழங்கள் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப சீப்பு சீப்பாக விலை குறைவின்றி விற்பனையாகிக் கொண்டிருந்தன. அதுமட்டுமின்றி அவ்வப்போது தார் தாராக வெளியேறிக் கொண்டிருந்தது வசதி படைத்த பக்தர்களால்...






ராட்டினம், ட்ரெயின் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல் என பக்தர்கள் கூட்டம் நன்றாக திருவிழாவினை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.அகால வேளையிலும் அயர்வின்றி உழைத்துக்கொண்டிருந்தனர் கடைக்காரர்கள். குக்கிராமத்திலும் எட்டிவிட்ட சைனா தயாரிப்பு பொருட்கள் நிறைந்த கடைகளில் ரிகார்ட் செய்யப்பட்ட ஒலியானது உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது எந்தப்பொருள் எடுத்தாலும் இருபது ரூபாய் என்று.எல்லாக்கடைகளிலும் விற்பனை மும்முரமாகிக் கொண்டிருக்க ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்தனர் திடீர்க் கடை ஓனர்கள்.எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு ஜோடி செங்கரும்பினை வாங்கி தின்று கொண்டிருந்தோம் நேரம் போக்க....அதிகாலை மூன்று மணியளவில் அம்மனை தரிசிக்க சென்றோம்.

              ஒளி வெள்ளத்திலும் ஒலி வெள்ளத்திலும் நீந்திக்கொண்டே அம்மனிடம் அருள் பெற சென்றோம்.அம்மன் அருள் பெற்றவர்கள் வெளியேறிக்கொண்டிருக்க, நாங்கள் உள்புகுந்தோம்.புதிதாய் கும்பாபிசேகம் செய்ததாலும் இந்த விழாவினாலும் புதிய பொலிவுடன் காட்சியளித்தது கோவிலின் தோற்றம்.அம்மன் குடிகொண்டுள்ள மண்டபத்தின் பதினாறு தூண்களும் மண்டபமும் அழகுற கனிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.கருவறைக்கு எதிரே நிறுவப்பட்டுள்ள ஊஞ்சலானது அம்மனை வைத்து பாட்டுப்பாடி ஆட்டுவதற்கு இருக்கிறது.இந்த மண்டபத்தின் கருவறையில் புற்று வடிவத்தில் அம்மன் எழுந்தருளியுள்ளார்.அம்மனின் பாதங்கள் மட்டுமே இங்கு வழிபட படுகின்றன.அத்தனூர் அம்மனின் தமக்கையாக கருதப்படும் இந்த அம்மனின் துணை தெய்வங்களாக அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகம் ஆகியோர் தனித்தனி சன்னதியில் இருக்கின்றனர்.முனியப்பன் மிகப்பெரும் உருவமாக மூன்று வித முனிகளாக அமர்ந்திருக்கிறார்.பசு ஒன்று பால் சொரியும் நிலையில் இருக்கிறது.ஒரு நந்தி ஒன்றும் முனியப்பன் அருகே அமைக்கப்பட்டு இருக்கிறது.அம்மனின் குழந்தைகள் என்று கருதப்படும் 27 நட்சத்திரங்கள் உருவங்களாக அமைக்கப்பட்டு தனி சன்னதியில் குடிகொண்டுள்ளனர்.மங்கல வாத்தியத்தின் நாதத்திலும், கோவில் மணி ஓசையிலும் அம்மனை ஆற அமர தரிசித்து விட்டு அதன் துணை தெய்வங்களையும் தரிசித்துவிட்டு வெளியேறினோம்.



                                  ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )

இந்தக்கோவிலின் தல வரலாறு என்னவெனில்
              சீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீச, அங்கிருந்து கூனவேலம்பட்டி புதூராகிய இங்கு வந்து தலைகீழாக விழுந்தாளாம்.அதனால் இங்கு இத்தெய்வத்தின் பாதங்களையே வழிபடுகிறார்கள்.இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியாத இலங்கை அம்மன் என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது.இதனால் அழகிய லிங்க(வடிவமான) அம்மன் என அழைக்கப்பட்டு, அதுவே மருவி அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆக, இரு வகையில் பெயர்க்காரணம்.ஆரம்பத்தில் புதரும் புல்வெளியுமாக மண்டிக் கிடந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் சொரிந்துவிட்டு சென்றதாம்.மாடு சரியாகப் பால் கறக்கவில்லையே என சந்தேகப்பட்ட முதலாளி, மாட்டைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்துகொண்டார். அவர் கனவில் அம்மன் தோன்றி தன் வரலாறைக் கூற, இங்கே பந்தல் போடப்பட்டு தொடங்கிய வழிபாடு வழிவழியாக வளர்ந்துள்ளது.
         மேலும் முனியப்பனை வேண்டினால் பெண்களின் கர்ப்பக்கோளாறு தீர்ந்து விடும் என்பதும், பேய் பிசாசுகளும் அண்டாது என்பதும் பிள்ளைப்பேறும் வாய்க்கிறது என்பது நம்பிக்கை.அதன் தொடர்ச்சியாய் வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.வீட்டிலுள்ள பசுக்கள் நலமாக இருக்கவும் நோய் நெருங்காமல் இருக்கவும் மண் உருவங்களை செய்து வழிபடுகின்றனர்.
 ( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
( கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த படம் )
இந்த தலத்தின் தலவிருட்சம் வில்வ மரமாக இருக்கிறது.

கோவிலுக்கு செல்ல வழி: ராசி புரம் ஆண்டலூர் கேட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.


கிசு கிசு : எப்பவும் போல பளிச்சென்ற தாவணிகளில் பளபளக்கும் கிராமத்து அம்மணிகளும், வெளியூரிலிருந்து வந்திருக்கும் நவநாகரீக அம்மணிகளும் கண நேரம் நம்மை பக்தியிலிருந்து வெளிக்கொணர்வதென்னவோ உண்மைதான்….ஹிஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...