Thursday, January 11, 2018

கோவை மெஸ் - ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால்,. ராமசேரி இட்லி, கேரளா, SARASWATHY TEA STALL, RAMASERI IDLY, KERALA

ராமசேரி இட்லி, கேரளா   
             பாலக்காட்டில் உள்ள ராமசேரி இட்லியை சுவைத்துவிடலாம் என்றெண்ணி சமீபத்தில் ஒரு அதிகாலைப் பொழுதில் அங்கு கிளம்பினோம்.வாளையார் தாண்டி கஞ்சிக்கோடு என்னும் ஊரை அடைந்தவுடன் அங்கிருந்து சில பல கிலோமீட்டர்களில் ராமசேரி என்கிற ஊரை அடைந்தோம்.
           இட்லிக்கு மிகவும் பெயர்போன ராமசேரி மிகவும் அமைதியாக இருக்கிறது.ஊரின் ஒதுக்குபுறமாய் ஒரு கோவில் இருக்க அதன் அருகே நாங்கள் தேடி வந்த இட்லிக்கடை இருக்க, அக்கடைக்கு முன்னே சேட்டன்கள் அதிகாலைக் குளிருக்கு இதமாக பீடியையும், சூடாய் டீயையும் வலித்துக் கொண்டிருந்தனர். சரசுவதி டீ ஸ்டால் தான்..ஆனால் இட்லிக்கடையாய் உருவெடுத்து உலக பிரசித்து பெற்று இருக்கிறது.


                     கடைக்குள் முதல் ஆளாய் நுழைந்தோம் இட்லி சாப்பிட.இட்லி சாப்பிடவே கோவையில் இருந்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தோம்.சில்வர் தட்டில் இரண்டு இட்லிகளை கொண்டு வைத்துவிட்டு, பொடியையும் தேங்காய் எண்ணையும் ஊற்றிவிட்டு செல்ல, தேங்காய் எண்ணையின் மணம் நம் நாசியை துளைக்கிறது.இட்லி யின் வடிவம் நம்மை ஆச்சர்ய மூட்டுகிறது.இட்லியின் மேல் குறுக்கும் நெடுக்குமாய் வரிகள்...ஆப்பம் அளவிற்கு பெரிதாய் இருக்கிறது.இட்லி செம மென்மை..சிறிதாய் இட்லியை பிய்க்க, அலுங்காமல் குலுங்காமல் வருகிறது கையில்..கொஞ்சம் பிய்த்து பருப்பு பொடியில், எண்ணையுடன் சேர்த்து தொட்டு சாப்பிட செம டேஸ்ட்..அடுத்து காரச் சட்னி கொஞ்சம் ஊற்றிவிட்டு போக, அது இன்னும் பெஸ்ட் காம்பினேசன்.அதிகாலைக் குளிருக்கு செம காரமாய் இதமாய் சட்னி இருக்க, இட்லி உள்ளே போவது கூட தெரியாமல் போய்க்கொண்டிருந்தது..இட்லிக்கு  தேங்காய் சட்னியும் செம அருமை…சீக்கிரம் காலியான இட்லியை பார்த்துவிட்டு இன்னும் இரண்டு வைத்து விட்டு போக அதுவும் பரபரவென்று காலியானது.

                இந்த இட்லியை எப்படி தயாரிக்கிறார்கள் என்று அடுக்களை வரை எட்டிப்பார்த்ததும் இன்னும் கொஞ்சம் ஆச்சர்யமானது.மண் சட்டி பானையில் இட்லி தயார் ஆகிக் கொண்டிருந்தது.ஒரு இட்லிதான் வேக வைத்து எடுக்க முடியும்.நான்கு பானைகள் அடுப்பில் வெந்து கொண்டிருந்தன.பானையில் சணல் கட்டி அதில் துணி போட்டு பின் மாவு ஊற்றி மூடி வைத்து வேக வைக்கின்றனர்.ஒவ்வொரு இட்லியையும் கண்ணும் கருத்துமாக வேக வைத்து பரிமாறுகின்றனர்.
                இந்த இட்லி இரண்டு நாள்கள் கூட கெடாது எனவும், வெளிநாடுகளுக்கு பறந்து போகின்றன என்றும் ஆச்சர்யமான தகவல்களை அள்ளிக் கொட்டிக்கொண்டே இருக்க, நாங்களும் இட்லியை ஒரு கை சாரி…ஒரு வாய் பார்த்துக்கொண்டிருந்தோம்..பின் சுடச்சுட உளுந்து வடை ரெடியாக, அதையும் ரசித்து  ருசித்து விட்டு வெளியேறினோம்…

                  இட்லியின் விலை ஒரு செட் ரூ 14 மட்டுமே…மிகவும் விலை குறைவுதான்..ஆனால் சுவை மிக அதிகம்..


அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு விட்டு வாங்க..


நேசங்களுடன்
ஜீவானந்தம்

               அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இன்னும் கொஞ்சம்...

Monday, January 1, 2018

கோவை மெஸ் - கொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் பாளையம், கோவை KOVAI MESS - KONGU PANJU PAROTTA, PAPPANAICKAN PALAYAM, KOVAI

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் பாளையம், கோவை

லேட்டஸ்ட் அப்டேட் : கடை இப்போது அங்கு இல்லை.மூடப்பட்டு இருக்கிறது.

                 லட்சுமி மில்ஸ் ஜங்க்சன் ல் இருந்து காந்திபுரம் வரும் வழியில் மணீஸ் ஸ்கூல் சிக்னல் முன்பே புதிதாக ஒரு புரோட்டா கடை திறந்திருக்கின்றனர்.அவ்வழியே செல்லும் போதும் வரும் போதும் அந்தக்கடையின் போர்டு என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கும்.காரணம் அதில் இருந்த  பஞ்சு பரோட்டா மற்றும் பன் பரோட்டா என்று ஒரு வகை நம்மை ஆச்சர்யப்படுத்தியது.


               கோவையில் இது வரைக்கும் எந்த கடையிலும் பன் பரோட்டா பற்றி கேள்விப்பட்டதில்லை.அதே போல் தமிழகத்திலும் இதுவரை சாப்பிட்டதில்லை.என் நண்பன் வீட்டு விசேஷத்தில் காயின் புரோட்டா, பன் புரோட்டா சாப்பிட்டிருக்கிறேன்.அதற்கப்புறம் அந்த வாய்ப்பு எங்கேயும் கிட்டவில்லை.இந்தக்கடையின் போர்டில் பஞ்சு பரோட்டாவும், பன் பரோட்டாவும் ஈர்த்ததினால் அங்கு எப்பொழுது போவோம், ருசிப்போம் என்ற ஆவல் மட்டும் அவ்வழியே செல்லும் போதும் வரும் போதும் நிறைந்திருக்கும்.

              அப்படித்தான் அன்று இந்த கடையினுள் பார்சல் வாங்கிச் செல்லலாம் என்று இரண்டு பஞ்சு பரோட்டாக்களை ஆர்டர் செய்துவிட்டு, கடை ஓனரிடம் பன் புரோட்டா இருக்கிறதா என்று கேட்கவும், பத்து நிமிடங்கள் காத்திருந்தால் சுடச்சுட போட்டு தருகிறேன் என்றார்.காத்திருக்க டைம் இல்லாததால் இன்னிக்கு வேண்டாம், இன்னொரு நாள் வந்து இங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று பார்சலை வாங்கி வந்தேன்,
                   சுடச்சுட புரோட்டா சாப்பிட சுவையாகவே இருந்தது.சீக்கிரம் கடைக்கு சென்று பன் பரோட்டாவை ருசிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.
                     அந்த வாய்ப்பு புத்தாண்டுக்கு  முதல் தினத்தில் வாய்த்தது.கடை சின்ன கடைதான்.முப்பது பேர் தாராளமாய் அமரக் கூடிய இடம்.கடைக்கு நுழையும் இடத்தில் தோசைக்கல் இருக்கிறது.கல்லில் சூடாய் பரோட்டாக்கள் வெந்து கொண்டிருந்தன.பரோட்டா மாஸ்டர் தன் கைவரிசையை மைதா மாவுடன் காட்டிக்கொண்டிருந்தார்.கடைக்கு சென்றவுடன் புன்னகையுடன் வரவேற்ற கடை ஓனர், பன் பரோட்டா போட்டுடலாமா என கேட்க, தாராளமாய்  என சொல்ல, உள்ளே அமர சொன்னார்.அதற்கு முன் ஷோகேசில் இருந்த தலைக்கறி, மட்டன் குழம்பு, மீன் குழம்பு அனைத்தும் நம்மை வரவேற்றது.

                 புரோட்டா வரும் வரையில் என்ன செய்வது, அதற்குள் மீன் மற்றும் மட்டன் வகைகளை ஒரு பிடி பிடிப்போம் என்றெண்ணி, குழம்பு மீன் கொண்டு வரச்சொன்னேன்.அயிலை மற்றும் மத்தி மீன் சுடச்சுட குழம்பில் நீந்திக்கொண்டிருந்தது,அதில் மத்தியை கொண்டு வரச்சொன்னேன்.மத்தி எப்பவும் போல சுவைதான்.பொரித்த மீனின் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.குழம்பு மீனில் முட்களை சாப்பிட முடியாது.ஆனால் எண்ணெயில் பொரித்த மீனில் உள்ள முட்களை சுவைத்து சாப்பிடலாம்.மீன் குழம்பும் டேஸ்டாகவே இருந்தது.

               அடுத்து தலைக்கறி கொண்டு வந்து வைக்கவும், அதையும் டேஸ்ட் பார்த்ததில் அதுவும் நன்றாகவே இருந்தது.தலைக்கறி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும்.நன்கு வறுவலாக இருந்தால் தலைக்கறி செம டேஸ்டாக இருக்கும் எப்பவும்.தலைக்கறி வாங்கும் போது அதை ப்ரை பண்ணச் சொல்லி சாப்பிட்டால் செமயாக இருக்கும். தோசைக்கல்லில் வெங்காயம், சில பல மசாலாக்கள், தலைக்கறி போட்டு நன்கு பிரட்டி வாங்கினால் செம டேஸ்டாக இருக்கும்.

                   அதற்குள் பன் பரோட்டா வந்து விடவே அதை இலையில் வைக்க அந்த இலையே அழகாய் காட்சியளித்தது.பன் போன்று உருண்டையாய், மலர்களின் இதழ்கள் போல விரிந்தும் ,குவிந்தும் அழகாய் இருக்கிறது.சுடச்சுட வந்ததினால் அந்த புரோட்டாவின் மணம் நம் நாசியை துளைக்கிறது.பொன்னிற நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோசைக்கல்லில் எண்ணெயில் வெந்த புரோட்டாவின் மணமும் ருசியும் நம் பசியை அதிகப்படுத்துகிறது.மலர்ந்த ரோஜாக்களின் இதழ்களை ஒவ்வொன்றாய் பிய்த்து உண்பதை போல, இந்த பன் புரோட்டாவின் மெலிதான லேயர்களை பிய்த்து சாப்பிட, அதன் மென்மை நம்மை ஆட்கொள்கிறது.குருமாவே தேவைப்படவில்லை ஒரு பன் பரோட்டா சாப்பிடும் வரை.

                  வெறும் பரோட்டாவை சாப்பிட்டு பாருங்கள், அது ஒரு தனிச்சுவையை கொடுக்கும்,மொறு மொறுவென்று ஒரு பக்கம் வெந்து இருக்கும், இன்னொரு பக்கம் மிகவும் சாஃப்டாக வெந்து இருக்கும்,இரண்டும் தனிச்சுவையை கொடுக்கும்.அதே போல் மட்டன் குருமாவோ, சிக்கன் சால்னாவோ பிய்த்துப்போட்ட புரோட்டாவில் ஊற்றி, நன்கு ஊறவைத்து, பிசைந்து சாப்பிட்டால் அது வேற லெவல்..அதுவும் டேஸ்ட் பட்டைய கிளப்பும். அதேபோல் சுடச்சுட பிய்த்துப்போட்ட புரோட்டாவில் சுண்டல் கலந்த வெஜ் குருமாவுடன் தேங்காய் சட்னி கொஞ்சம் சேர்த்து பிசைந்து ஊறவைத்து குழைந்து சாப்பிட்டால் அதுவும் வேற லெவல்…புரோட்டாவிற்கு காம்பினேசனே நன்கு  டேஸ்டான குருமா தான்…புரோட்டா ஊற ஊற கொஞ்சம் கெட்டியாகும்,.பின் தீர தீர குருமா ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில் தான்….
                 சரி இந்த கடைக்கு வருவோம்..பன் புரோட்டாவை வெறும் புரோட்டாவாகவே சாப்பிட செமயாக இருக்கிறது.பின் இன்னொரு புரோட்டாவிற்கு தலைக்கறி குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிட அருமையோ அருமை.பின் சிக்கன் குருமாவை கொஞ்சம் ஊற்றி சாப்பிட அது சுவையில் குறைந்ததாக தெரிந்தது,இருப்பினும் புரோட்டா செம டேஸ்ட்.
விலையும் மிக குறைவுதான்.புரோட்டா ரூ.15, நான்வெஜ் அயிட்டங்கள் அனைத்தும் ரூ.60 மற்றும் ரூ70க்குள் அடங்கி விடுகின்றன.குடல் கறி, தலைக்கறி, நண்டு வறுவல், மூளை ப்ரை என பக்கா மதுரை ஹோட்டலாக இருக்கிறது.
                பன் புரோட்டாவை தாராளமாக ருசிக்க செல்லலாம்.அவ்வளவு ருசி…அதே போல் தயவு செய்து பன் புரோட்டாவை பார்சல் வாங்கி விடாதீர்கள்.அப்புறம் பன் வடிவம் தட்டையாய் போய்விடும்.பன் புரோட்டாவுக்கென்று பிரத்யோகமா ஒரு பார்சல் பாத்திரம் வச்சா செமையா இருக்கும்.சாதா புரோட்டாவும் பஞ்சு போலவே இருக்கிறது.கோவைக்கு வந்திருக்கும் மிக அருமையான புரோட்டா…இந்த பஞ்சு மற்றும் பரோட்டா…
நம்பிப் போகலாம்…திருப்தியாய் வரலாம்.
இடம் : லட்சுமி மில் பஸ் ஸ்டாப்பிலிருந்து மணீஸ் ஸ்கூல் சிக்னல் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது

நேசங்களுடன்
ஜீவானந்தம்….

அப்புறம் ஒரு சிறு குறிப்பு…இது வரைக்கும் கிட்டத்தட்ட ஏழு வருசமா என் சொந்தக்காசில் தான் எல்லா கடைகளிலும் சாப்பிட்டு கடையப் பத்தி எழுதறேன்.நான் சாப்பிட்ட கடைகளின் சுவையை மற்றவங்களுக்கு அறிமுகப்படுத்தறேன் அவ்வளவுதான்.ஒரு சில அடிப்பொடிகள், பன்னாடைகள் கேவலமா கமெண்ட் பண்ணுதுங்க…ஓசியா சாப்பிட்டுவிட்டு கடைக்கு விளம்பரம் போடறேன்னு….
அந்த மாதிரி எண்ணம் இதுவரைக்கும் வரல…அப்படி வந்தா என் சுவை நரம்புகள் காணாம போய்டும்..பல சுவை மிகுந்த கடைகளை கண்டுக்கப் படாமலே போய்விடும்…..
கூடிய சீக்கிரம் நானும் இந்த உணவுத்தொழிலில் இறங்க இருக்கிறேன்.இந்த வருடமாவது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

நன்றி…

லேட்டஸ்ட் அப்டேட் :
இந்த கடை இப்பொழுது மூடப்பட்டுள்ளது.எங்கு இடம் மாற்றம் செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம்...

HAPPY NEW YEAR 2018

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இந்த புத்தம் புதிய வருடத்தில்  எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.கடந்த கால வருடத்தின் அத்துணை இன்பமும் மகிழ்ச்சியும் இனிதே தொடர வாழ்த்துகிறேன்.கடந்த கால கசப்புகள் இந்த வருடம் இனிதாய் மாறி இன்பமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

இந்த வருடமாவது கனவுகளில் ஏதாவதொன்று நிறைவேறட்டும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...