Wednesday, September 21, 2016

சமையல் - அசைவம் - ஆட்டுத் தலைக்கறி குழம்பு

                  எங்க ஊர்ல ஏதாவது விசேசத்தின் போது கிடா வெட்டும் போது ஆட்டோட தலைய மட்டும் பொசுக்குற வேலை நம்மளுது.வாயில குச்சியை குத்தி தலைய நெருப்புல வாட்டி முடியை சுரண்டி கிளீன் பண்ணனும்.தலையை பொசுக்கிட்டு இருக்கும் போதே காது மடல் நல்லா வெந்து இருக்கும்.அதை பிய்த்து அப்படியே சாப்பிடுவது செம டேஸ்டாக இருக்கும்.நன்கு பொசுக்கின தலையை மஞ்சள் தடவி நன்றாக அலசி கொடுத்தால் போதும்.மிக பதுவுசாய் வெட்டி துண்டு போடுவாங்க.மூளைய மட்டும் நொங்கு வெட்டற மாதிரி சிந்தாம சிதறாம ஒரு இலைல தருவாங்க.அதை தோசைக்கல்லில் போட்டு உப்பும் மிளகும் போட்டு பிரட்டினால் சுவையான மூளை ஃப்ரை ரெடி...இப்போ தலைக்கறி குழம்பு எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தலைக்கறி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
தேங்காய் - ஒரு மூடி
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
மல்லித்தூள் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, கசகசா - சிறிதளவு
கொத்தமல்லி புதினா தழை - சிறிது
தேவையான உப்பு
கொஞ்சம் எண்ணைய்

செய்முறை :
முதலில் குக்கரில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி பின் தலைக்கறியை நன்கு வதக்கி  சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை விட்டு வேக வைத்துக்கொள்ளவும்

வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சீரகம் போட்டு வதக்கி, சின்ன வெங்காயம், தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பின் அரைக்கும் போது மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய்  கசகசா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் அரைத்த வைத்த மசாலா சேர்த்து கொஞ்சம் கொதி வந்தவுடன் வெந்த தலைக்கறியை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும், பின் தேங்காய்  விழுதினை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், கொத்தமல்லி புதினா தழை தூவி இறக்கவும்.
டேஸ்ட் கூடுதலாக வேண்டுமெனில் சிறிதளவு மட்டன் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.கெட்டியாக கெட்டியாக குழம்பு டேஸ்டாக இருக்கும்.
கொதிக்கிற குழம்பில் மூளையை போட்டு எடுத்தாலே மூளை வெந்து விடும்.அதுவும் மிக சுவையாக இருக்கும்..








இட்லிக்கு தலைக்கறி குழம்பு மிக அருமையாக இருக்கும்.குடல் குழம்பை போலவே டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

தலைக்கறி ஃப்ரை வேண்டுமென்றால்
வாணலியில் எண்ணைய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் குழம்பிலிருந்து தலைக்கறித் துண்டுகளை சேர்த்து கொஞ்சம் மிளகுப்பொடி தூவி நன்கு பிரட்டினால் போதும்.சுவையான தலைக்கறி ஃப்ரை ரெடி....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, September 19, 2016

கரம் - 26

பார்த்தது:
ஓணம் பண்டிகையை ஒட்டி ஏசியாநெட் டீவியில் மீண்டும் பத்தேமாரி பார்த்தேன்.எத்தனை முறை பார்த்தாலும் கண்கலங்க வைக்கிற படம்.வெளிநாட்டில் கஷ்டப்படும் தொழிலாளியின் உணர்ச்சிமிகுந்த கதை தான்.இந்தப்படத்தில் அவ்வப்போது மெலிதாய் ஒலிக்கும் பத்தேமாறி பாடல் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது...படம் முழுக்க மம்முட்டி வாழ்ந்திருக்கிறார்  தன் குடும்பத்திற்காக வாழ்க்கையை தொலைத்து......

படித்தது:
                    சமீபத்தில் புத்தககண்காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்கினேன்.அதில் ”கம்பிக்குள் வெளிச்சங்கள்”  தோழர் தியாகு எழுதின சிறை அனுபவங்களை பற்றின தொகுப்பு.படிக்க செம இண்ட்ரஸ்டிங்.நக்சலைட் இயக்கத்தில் இருந்தபோது செய்த போராட்டங்கள், கொலைக்குற்றங்கள், சிறைத்தண்டனை, மூலதனம் தமிழாக்கம் இயற்றியது, மற்றும் சிறைக்கைதிகளின் வாழ்க்கை, சிறையில் நடக்கும் கொடுமைகள் என சுவைபட சொல்லியிருக்கிறார்.தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கதையை சுவராஸ்யமாக சொல்லியிருப்பது படிக்க ஆவலைத் தூண்டுகிறது.அதிலும் பூ.கருப்பையா என்பவரின் கதை ஒரு நாவல் போல இருக்கிறது.பொய் வழக்கு புனையப்பட்டு தூக்குத்தண்டனை பெற்று சிறையில் தூக்குக்காக காத்திருக்கும் நேரத்தில், அதே சிறையில் இருக்கும் தியாகு அவர்களால் அவர் விடுதலை பெற்று, பின் பல வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் போது அந்த இடம் ஒரு திரைப்படத்தினை பார்த்த மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது.மனமும் கலங்குகிறது.அந்தளவுக்கு எழுத்துக்களில் வசீகரிக்கிறார். மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அத்தனை அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட கொடுமைகளை விவரிக்க, நமக்கே பதைபதைக்கிறது.அதிலும் ஸ்டாலின் சிறையில் பட்ட கொடுமைகளையும், அப்போதைய சிட்டிங் எம்பி திரு சிட்டிபாபு  அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் விவரிக்கும் போது மிசாவின் கொடுமையான சிறை வரலாற்றினை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.
காவல் துறையின் பொய் புனைவுகள்,  கொலையாளியை கண்டுபிடிக்கும் விதம் என சுவாரஸ்யமாக தேர்ந்த திரைக்கதை போல் தன் அனுபவத்தினை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
விலை : ரூ 350.
வெளியீடு - விஜயா பதிப்பகம்.


இன்னொரு புத்தகம் காட்டுக்குட்டி

தூப்புக்காரி என்ற நாவலைப் படைத்து சாகித்ய அகாடமி  விருது பெற்ற மலர்வதி எழுதிய நாவல் என்று வாங்கினேன்.முதல் முன்னுரையே ஏகப்பட்ட பிழைகளுடன் இருக்க,  கதைக்குள் நுழைந்தால்  பேச்சு வழக்கில் நாவல்.சாதாரணமான வார்த்தைகள் என்றால் பரவாயில்லை.நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட மலையாள வாசம் வீசும் தமிழ்.புரிந்து கொள்ளவே கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.இரண்டு அத்தியாயங்கள் தான் படித்து இருப்பேன்.செம போர்...ஒன்றும் புரியவில்லை.அப்படியே மூடி பத்திரமாய் வைத்து விட்டேன்.இனி அது பரணில் தூங்கும்.காசுக்கு கேடு...




நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 16, 2016

கரம் - 25

கலப்பட வெல்லம்

                 சாலையோரங்களில் விற்கும் கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லங்களை வாங்காதீர்கள்.அனைத்தும் கலப்படங்களே..

                   அதிகளவு ரேசன் கடை சர்க்கரையை கரும்புச்சாறு மற்றும் பதனீரில் கலந்து தயாரிக்கி்ன்றனர்.

     இவர்களின் விற்பனை இலக்கு சாலை ஓரங்கள் மட்டுமே.வண்டிஓட்டிகளின் கவனத்தை கவர்ந்து வியாபாரம் செய்கின்றனர்.பனை ஓலையில் செய்த பெட்டியில் கருப்பட்டி மற்றும் வெல்லங்களை அடுக்கி இயற்கை மணம் மாறாது போலியை விற்கின்றனர்.

            பெரியநாய்க்கன் பாளையம் செல்லும் வழியில் ஒரு கும்பல் இடமும் வலமும் நூறடி தூர இடைவெளியில் கடை பரப்பியிருந்தனர்.காரை விட்டு இறங்கியவுடன் உடனடி வியாபாரத்தை ஆரம்பிக்க, கிலோ 160 என்றனர் பிறகு 120 க்கு தருகிறோம் என்றனர்.உடன்குடி மற்றும் திருநெல்வேலியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என்றனர்.சேம்பிள் கொஞ்சம் உடைத்து தர வாயில் போட்டேன்.பனைக்கருப்பட்டியின் சுவையை விட சர்க்கரைப்பாகின் சுவை அதிகம் ஆக்ரமிக்கிறது.

               இன்னொரு கருப்பட்டி வெல்லம் கிலோ 200 .அதில் இஞ்சி மிளகு சுக்கு சேர்த்து செய்திருக்கிறார்களாம். இருமல் சளி கபம் போன்ற வியாதிகளுக்கு நல்லதாம்.தேர்ந்த நாட்டுப்புற சித்த மருத்துவரைப்போல் பேச, வாயில் இட்டிருந்த வெல்லக்கட்டி கரையவும் ,போய்ட்டு வந்து வாங்கிறேன் என சொல்ல, இன்னும் பத்து ரூபாய் குறைத்து தருகிறேன் என ஆரம்பிக்க, வேணாம் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்றபடி வண்டி ஏறினேன்.



என்னதான் பனை ஓலைப்பெட்டியில் வைத்து நல்லா மேக்கப் பண்ணி, அச்சு வெல்லம் மற்றும் கருப்பட்டியை கொடுத்தாலும் விஷம் விஷம் தானே.அது இனிக்கத்தான் செய்யும் அதில் எவ்வளவு கலப்படமிட்டிருந்தாலும்...


கரூர் அருகே உள்ள ஜேடர்பாளயத்தில் கரும்பு ஆலைகள் அதிகம்.அங்கு வெல்லப்பாகில் சர்க்கரையை கலந்து தான் வெல்லம் செய்கின்றனர்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, September 12, 2016

கோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை

                           ஃபேஸ்புக்ல MUDPOT அப்படிங்கிற ஹோட்டலோட அப்டேட்கள் ரொம்ப வந்துட்டு இருந்துச்சு.ஏரியா எங்க இருக்குன்னு பார்த்ததில் நம்ம காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட்ல இருக்குன்னு தெரிந்ததும் அங்க இன்னிக்கு ஆஜரானோம்
                    அன்னபூர்ணா கெளரிசங்கர் பக்கத்துல தான் இந்த ஹோட்டல்.சுத்தியும் பிளக்ஸ் பேனர் அதில் விதவிதமாய் மெனுக்களின் கலர்புல்லான படங்கள் என நம் நாவையும் கண்ணையும் பதம் பார்த்தன.கேரளா பாணியில் இண்டீரியர் பண்ணி இருக்காங்க.மூங்கில் தடுப்புகள் தொங்கவிட்டு ஒரு கேரள உணவகமாக அமைத்து இருக்காங்க.உள்ளே நுழைந்ததும், அப்படியே ஷாக்காகிப் போனோம். மொத்தமும் மூணே டேபிள் தான்…டேபிள் பார்க்க மிக அழகாய் மூங்கிலில் செய்யப்பட்டு இருந்தது.அமர்வதற்கு முன்னால் வாஷ் ரூம் எங்க என்று கேட்டதும், வெளியே இருக்கிறது என்று சொல்லவும், இன்னும் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டது..சரி..சமாளிப்போம் என்றெண்ணி வெளியே வந்து ஹோட்டலை அரை சுற்று சுற்றி, வந்து கை கழுவி விட்டு மீண்டும் உள்ளே வந்தமர்ந்தோம்.
என்ன ஸ்பெசல் என்று கேட்டதும், எல்லா பிரியாணியும் இருக்கிறது என மலையாளத்தில் பறைய, சிக்கன் மலபார் பிரியாணி ஆர்டர் பண்ணினோம்.அடுத்து மீன் பொழிச்சது என்ன இருக்கிறது என கேட்டதில் கரிமீன், அயிலை என பதில் வந்தது.மீன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என கேட்டதும், உறைந்து கிடந்த ஒரு கரிமீனை எடுத்து வந்து காட்டினார்.காவிரி ஆற்றில் ஃப்ரஷ் ஆக பிடித்து நன்றாய் உப்பு மிளகிட்டு சாப்பிட்ட ஜிலேபி மீனை இங்கு உறைந்து பனிக்கட்டியாக இருப்பதைப் பார்த்தவுடன் மீன் சாப்பிடும் ஆசையே போய்விட்டது. விலையை கேட்டவுடன், ரூ 550 என்று சொல்லவும், மீன் என்று உச்சரிக்க கூட மனமில்லை.இம்போர்ட்டடு மீன் என்று சொல்லிப்பார்த்தார்…சத்தியமாய் காது கேட்கவில்லை எனக்கு அப்போது. சரி மீன் வேண்டாம், சிக்கன்ல ஏதாவது கொடுங்க என்றதும், சிக்கன் 65 தருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.மெனு கார்டு என்பது இல்லை.ஐபேட்டை தூக்கிவந்து படம் காட்டுகிறார்கள்...

பாக்கு மட்டையில் அழகாய் வைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி வந்தது.கூடவே டாஸ்மாக் டம்ளரும்.பிளாஸ்டிக் டம்ளரில் நீர் ஊற்றி வைத்துவிட்டு, கொஞ்சம் ஊறுகாயும், ஆனியன் ரைத்தாவும் வைத்துவிட்டு சென்றார் சர்வர்.
நன்கு கலர்புல் சாதமாய், கிராம்பு ஏலக்காய் மணத்துடன் சாதம் இருக்க, இரு அரை முட்டையுடனும், ஒரு பீஸ் சிக்கன் துண்டு மற்றும் கொஞ்சம் கிரேவியானது கலர்புல் சாதத்தினுள் ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது.சாதம் சாப்பிட சுவையாகத்தான் இருந்தது அதில் இருந்த உலர் திராட்சைகளால்.ஆனால் மலபாருக்குண்டான டேஸ்ட் மிஸ் ஆகி இருந்தது. மேலும் அதில் இருந்த சிக்கன் துண்டோ மிகவும் கெட்டிப்பட்டு இருந்தது.மென்மையாய் இருக்கும் சிக்கன் கூட மெல்லக்கூட முடியாதபடி சவுக் சவுக்கென இருக்க, வெறும் சாப்பாட்டுடன் கிரேவி மட்டுமே ஒத்துழைத்தது.அவ்வப்போது ஊறுகாய் தொட்டுக்கொள்ள, சாதம் கொஞ்சம் காரமாய் தெரிந்தது.
அடுத்து வந்த சிக்கன் 65 தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சிக்கன் மிகவும் கரடு முரடாய், மென்மையாய் இருக்க கூடிய சிக்கன்,மிகவும் கெட்டியாய், பிய்க்க கூட முடியாமல், அப்படியே கஷ்டப்பட்டு பிய்த்து வாயில் போட்டு மெல்ல கடைவாய்ப்பற்கள் அனைத்தும் வலிக்கின்றன.அந்தளவுக்கு சிக்கன் மோசம்.சிக்கன் 65 என்று சொல்லிவிட்டு இரண்டு லெக்பீஸை தள்ளிவிட்டது எந்தவித சாப்பாட்டு நியாயம் என்று தெரியவில்லை.
சிக்கனை முடிந்தளவு உள்ளே தள்ள போராடினேன்..முடியவில்லை.பிறகு அப்படியே தட்டில் வைத்து விட்டு, பரிமாறியவரிடம் சிக்கனை காண்பித்து, பிய்க்க கூட முடியவில்லை, கறி கெட்டிப்பட்டு இருக்கிறது,  ரொம்ப நேரம் நன்றாக எண்ணையில் வச்சி  செஞ்சி (பொறிச்சி) இருக்கீங்க என்பது மட்டும் தெரிகிறது, அது மட்டுமல்ல சிக்கன் டேஸ்டே இல்லை என்று சொல்லிவிட்டு கை கழுவினேன்..
    பில் வந்த போது கடை நன்றாக அமைத்து இருக்கிறீர்கள், ஆனால் கை கழுவும் இடத்தினை மட்டும் வெளியில் அமைத்து இருக்கிறீர்கள் அதான் மிகப்பெரும் மைனஸ் பாய்ண்ட்.அது மட்டுமல்ல, நன்கு விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள் பேஸ்புக்கிலும், பேப்பரிலும்.ஆனால் அந்த அளவு வொர்த்தான டேஸ்ட் இல்லை என்று சொல்லிவிட்டு இனி எப்பொழுதும் இந்தக்கடையை திரும்பிப்பார்க்க கூடாது என்றெண்ணியபடியே வெளியேறினோம்.
           கடையின் இண்டீரியர் மற்றும் விளம்பரங்களில் மட்டும் தான் கவனத்தினை வைக்கிறார்கள்.டேஸ்ட்டில் சுத்தமாக கவனம் வைப்பது இல்லை.ஏதாவது ஹோட்டலில் வேலை செய்துவிட்டு உடனடியாக பணத்தினை புரட்டி எப்படியாவது ஹோட்டலை ஆரம்பித்து விடுகிறார்கள்.பிறகு கஸ்டமர் இல்லாமல் கடை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்…
ஃபேஸ்புக் கில் பகிர்வது நல்ல மார்க்கெட் டிரண்ட் என்பது மட்டும் தெரிகிறது.
உங்களுக்கும் இதே மாதிரி அனுபவம் வேண்டுமென்றால் தாராளமாக செல்லவும்..

              விலை மிக அதிகம்.பஸ்ஸ்டாண்ட்ல வாடகைக்கு இடம் பிடிச்சு கடை நடத்தினா கொஞ்சமாவா பில் பண்ணுவாங்க....
பேசாம வீட்டிலேயே ஒரு கிலோ கறியை வாங்கி பகார்டியோடு கொண்டாடி இருக்கலாம்…




நேசங்களுடன்
ஜீவானந்தம்.



இன்னும் கொஞ்சம்...

வீட்டுச்சமையல் - சும்மா ஒரு டைம்பாஸ் - 1

சும்மா ஒரு பொழுது போக்குக்காக வீட்டில் சமையல் பண்ண ஆரம்பித்தது, இப்போ நிரந்தரமாகி விட்டதுன்னு நினைக்கிறேன்.ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மட்டன், சிக்கன் , மீன் என வகை வகையாய் வாங்கி சமைக்க ஆரம்பித்து கூடவே நம்ம பகார்டியையும் மிக்ஸ் பண்ணியதால் இப்போது அதிகம் வெளி ஹோட்டலுக்கு செல்வதில்லை.ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்வதோடு அடங்கி விடுகிறது.இனி வாராவாரம் நமது பிளாக்கில் ஞாயிறு சமையல் இடம்பெறும்.சும்மா டைம்பாஸ் க்காக.....
கோவை நேர வாசகர்களுக்காக இனி புதிது புதிதாய் சமைத்து வெளியிடப்படும்..சாப்பிடுவது நான் மட்டுமே....

ஆட்டு நுரையீரல்
சிக்கன் லெக் பீஸ்


காவிரி ஆத்து வழுக்கான் கெண்டை.


நேசங்களுடன்
ஜீவானந்தம்..
இன்னும் கொஞ்சம்...

Thursday, September 1, 2016

கரம் - 24

பார்த்தது:
                மலையாளத்தில் நிறைய படங்கள் பார்த்தேன்.களி மற்றும் கம்மாட்டி பாடம் இந்த இரண்டும் ஓரளவுக்கு ரசிக்க வைத்தன.ஆக்சன் ஹீரோ பிஜு இன்னும் பயங்கரமா ரசிக்க வைத்தது.அதற்கப்புறம் மகேஷிண்ட பிரதிகாரம், டார்விண்டே பரிமாணம், ஜேக்கபிண்டே சொர்க்கராஜ்யம், லீலா இப்படி பல படங்கள் சுவாரஸியமற்று இருந்தன.மலையாள ரசனை நமக்கு ஒத்து போவதில்லை போல...


ருசித்தது:
வாங்க சாப்பிடலாம்

                  ஒரு மதிய நேரம்.கோவையின் வ உ சி பார்க், நேரு விளையாட்டு அரங்கத்தை சுற்றி வண்டியை ஓட்டிய போது கண்ணில் பட்டது "வாங்க சாப்பிடலாம்" என்கிற ஹோட்டல்.புதுசா ஆரம்பிச்சிருக்காங்க போலிருக்கு ஒரு கை ..சாரி ஒரு வாய் பார்க்கலாம்னு உள்ளே போனோம்.கீழே டேபிள் சேர் போட்டு இருக்காங்க, ஒரு ஈ. காக்கா காணோம்.பார்த்தா மாடிக்கு போற ஒரு படி இருக்கு.ஏறி உள்ள போனா பரந்து விரிந்து இருக்கு.நல்ல இண்டீரியர்.தாராளமான இடவசதியில் டேபிள்கள் போடப்பட்டிருக்கின்றன.

                  அங்கொன்றும் இங்கொன்றுமாய் டேபிள்கள் நிறைந்திருக்க, நாங்கள் ஒரு டேபிளை நிறைத்தோம்.சாப்பிட வந்தவர்களைவிட சர்வர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.அதில் நேபாளிகளும் அடக்கம்.இலையை விரித்தனர்..பெரிய மெனு புக்கை தந்துவிட்டு சென்றனர்.புதிதாய் எதுவுமில்லை.பொதுவாய் எல்லா ஹோட்டலிலும் அச்சடிக்கப்பட்டு இருக்கும் ஒரே மெனு தான்.சிறப்பு மெனு என்று எதுவும் இல்லை.

                    பிச்சிப்போட்ட கோழி என்கிற டிஷ் என்னை கவர்ந்தது.ஆர்டர் போட்டேன்.பின் தந்தூரி, லாலி பாப், பிரியாணி, நான் வெஜ் மீல்ஸ் , தயிர்சாதம் இப்படி அனைத்தும் ஆர்டரிட்டேன்.

                     ஒவ்வொன்றாய் வந்தது.பிச்சிப்போட்ட கோழி...இது எந்த வகையான மெனு என்றே தெரியவில்லை.முட்டையை மிக்ஸ் பண்ணி கோழியை போட்டு குருமா ஊத்தி கல்லில் ஃபிரை பண்ணி கொத்து புரோட்டா போல் இருந்தது.நன்றாகவே இல்லை.கோழிக்குன்டாண சுவை முட்டையில் அடங்கிப்போய் நம் நாவை அடக்கம் செய்து விட்டது..அடுத்து பிரியாணி..பேரு ஆம்பூர் பிரியாணி...ஆம்பூர் போய் சாப்பிட்டிருப்பாரா மாஸ்டர் என்று தெரியவில்லை.குழைந்த போன சாதம்.நிறமில்லை.மணமில்லை.சுவையும் சுத்தமாய் இல்லை..

அடுத்து தந்தூரி...கொஞ்சம் கூட உப்பு உரைப்பு காரம் என்று எதுவுமில்லை.தந்தூரிக்கான மணம் என்பதே இல்லை.கோழியை மசாலாவோடு நெருப்பில் வாட்டினால் ஒரு வித மணம் ஏற்படும்.அது ஆளையே தூக்கும்.நாவின் சுவை நரம்புகளை துடிக்க வைக்கும்.நாசியின் நரம்புகளை மிரளவைக்கும்.வயிற்றுக்குள் பசி நரம்புகள் நம்மை தூண்டவைக்கும். அந்தமாதிரி எதுவுமே ஏற்படவில்லை பக்கத்தில் வைத்த போதும், சாப்பிட்ட போதும்...மசாலாக்கள் அரைகுறையோடு தந்தூரியின் பாகங்களில் இருக்க, சுவை சுத்தமாய் இருந்தது.

              லாலிபாப்...வெள்ளிபேப்பர் சுத்தப்பட்டு கருஞ்சிவப்பாய் வந்தது.கோழிக்கறியின் மெது மெது தன்மை இல்லாது கெட்டிப்பட்டு இருந்தது.பஞ்சு போன்ற தன்மை இறுகிக்கிடந்தது.
தயிர் சாதம்...வெறும் மாதுளை முத்துக்களை நிரப்பி கலர்புல்லாய் கொண்டு வந்ததுதான் மிச்சம்..தயிர்சாதம் கூட டேஸ்டாய் செய்ய முடியாமல் ஒரு ஹோட்டல்...
                     நான் வெஜ் மீல்ஸ்.பேரில் மட்டும் தான்..ஒரு எலும்பைக்கூட காணவில்லை.வெரைட்டியான குழம்பும் இல்லை...
இந்த ஹோட்டல் நடத்துறவங்க தயவு செஞ்சு அக்கம் பக்கம் இருக்கிற ஹோட்டல்ல சாப்பிட்டு பாருங்க.சுவை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு மெனு போடுங்க.ஹோட்டலை நடத்துங்க.
பிச்சிப்போட்ட கோழி வளர்மதி மெஸ்ல சாப்பிடுங்க..செம டேஸ்டா இருக்கும்..தந்தூரி சிக்கனை கொக்கரக்கோல சாப்பிடுங்க ஏ ஒன்னா இருக்கும்..

விலை எப்பவும் போல அதிகம்தான்.இதில் 20% தள்ளுபடி வேற..
வாங்க சாப்பிடலாம்...சத்தியமா இன்னொரு வாட்டி போக மாட்டேன்..
நேரு அரங்கில் பர்மா பாய் ஓட்டல் அருகே இருக்கிறது.ஹோட்டல் அலங்கார் நடத்தும் இந்த வாங்க சாப்பிடலாம்...
போங்க உங்களுக்கு ஒரு அனுபவம் வேண்டுமென்றால் ....

படித்தது
கொடிசியாவில் புத்தக கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது.நானும் என் பங்குக்கு பல புத்தங்கங்களை வாங்கி வைத்துள்ளேன்.இனி தான் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்கனும்.கடந்த வருடங்களை விட இந்த தடவை கொடிசியாவில் செம கூட்டம்.தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை இருக்கவும், மக்கள் குடும்பத்தோடு குவிந்து விட்டனர்.
கூடின கூட்டமெல்லாம் புக் வாங்க அல்ல.தினமலர் ஷாப்பர்ஸ் ஷாப்பிங் கண்காட்சி போட்டு இருந்தாங்க.எல்லாரும் அங்க தான் போய்ட்டு எஞ்சாய் பண்ணிட்டு வருகிறார்கள்.
ஏதோ நம்மளை மாதிரி ஆட்கள் தான் புத்தக கண்காட்சிக்கு போய்ட்டு வருகிறார்கள்.சில பதிப்பகங்களை வாழ வைக்கிறார்கள்.எழுத்தாளர்களை வளர வைக்கிறார்கள்...



நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...