Tuesday, October 28, 2014

கோவை மெஸ் - முட்டை பப்ஸ், ஸ்ரீ லட்சுமி ஐயங்கார் கேக் ஷாப், கவுண்டம்பாளையம், கோவை

நம்ம ஏரியா கவுண்டம்பாளையம்.நம்ம அக்கவுண்ட் இருக்கிற  பேங்க மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கிறது.பேங்க் பக்கத்துல ஒரு பேக்கரி இருக்கு.நமக்கு அடிக்கடி பேங்க் போற வேலை இருக்கிறதால் அந்த பேக்கரி தாண்டிதான் போக வேண்டி இருக்கும்.காலையில் 10 மணிக்கு மேல போனா அந்த பேக்கரில இருந்து செம வாசம் வரும்.பப்ஸ் சூடா வேகற வாசனை.ஆளையே தூக்கும்.ரொம்ப நாளா இப்படி வாசனை வந்து வந்து நம்ம மோனத்தை கலைத்துவிட ஒரு நாள் ஆஜராகிவிட்டேன்.
அன்னிக்கு ஆரம்பிச்சதுதான்...முட்டைபப்ஸ்க்கு அடிமை ஆயிட்டேன்.எப்பலாம் பேங்க் போறேனோ அப்பலாம் ஒரு பப்ஸ் வாங்கி சாப்பிட்டு விட்டுதான் போறது.அப்புறம் அடிக்கடி வீட்டுக்கு பார்சல் வாங்கிட்டு போறது.நண்பர்களுக்கு வாங்கித்தர்றது  என இப்படியே போயிட்டு இருந்தது.ஒரு நாள் கடைக்காரரிடம் கேட்டேன், உங்க கடை பப்ஸ் பத்தி நம்ம பிளாக்ல எழுதனுமே அப்படின்னு...அவரும் பப்ஸ் செய்யும் போது கூப்பிடறேன் வாங்க அப்படின்னார்...ஒருநாள் காலையில் பேங்க் போகும்போது கூப்பிட்டார்...வாங்க...பப்ஸ் ரெடியாக போகுதுன்னு...
கடைக்குள் நுழைந்தேன்..ஒரு சின்ன அறைதான்.10 க்கு 16 தான்.அதில் தான் முன்புறம் ஷோகேசாகவும், பின்புறம் கேக், பிஸ்கட், பப்ஸ் செய்யக்கூடிய இடமாகவும் இருக்கிறது.பேக்கிங் செய்யக்கூடிய ஓவன் மெசின் உள்ளேயே பொருத்தப்பட்டிருக்கிறது.பப்ஸ் செய்யக்கூடிய டேபிளில் மாவு சதுரம் சதுரமாக வைக்கப்பட்டு அதில் வதக்கப்பட்ட வெங்காயம் மசாலாவுடன் சேர்த்து வைக்கப்படுகிறது.அப்புறம் வேகவைத்த முட்டை பாதியாய் வெட்டப்பட்டு ஒவ்வொரு சதுர மாவில் வைக்கப்பட்டு மடிக்கப்படுகிறது. மொத்தமாய் ஒரு பிளேட்டில் வைக்கப்பட்டு ஓவனில் இருபது நிமிடம் வைக்கப்படுகிறது.பப்ஸ் வேக வேக மசாலா வாசனை நம் மூக்கினை அடையச்செய்து பசி நரம்பினை மீட்டுகிறது.சூடாய் மொறு மொறுவென வெளிவருகிறது முட்டை பப்ஸ்.லேயர் லேயராய் உதிர்கிறது வெந்த பப்ஸ்.கொஞ்சமாய் பிய்த்து வாயில் வைக்க செம டேஸ்ட்.முட்டை பப்ஸ், காளான் பப்ஸ், வெஜ் பப்ஸ் என எல்லாம் ஒரே நேரத்தில் ரெடியாகிறது.
பப்ஸ் மட்டுமின்றி பன், பிஸ்கட், கேக் என அனைத்தும் இங்கேயே தயார் ஆகிறது.சூடான பப்ஸ் வெளிவந்து ஷோகேஸில் இடம்பிடித்து சீக்கிரம் விற்றுத்தீர்ந்து விடுகிறது.விலை பத்து ரூபாய் தான்.சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது...இந்தப்பக்கம் வந்தீங்கன்னா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க...செமயா இருக்கும்...
கவுண்டம்பாளையம் பயர் சர்வீஸ் எதிரில், கனரா பேங்க் அருகில்...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Friday, October 10, 2014

தானம்

சமீபத்தில் ஜோலார்பேட்டை வரை  செல்லவேண்டியிருந்ததால் நடுநிசியில் பயணப்பட்டு காலை வேளையில் ஜோலார்ப்பேட்டை ஜங்சனில் கால் பதித்தேன்.எப்பவும் போல அந்த காலை வேளையில் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது.ஏறுவதும் இறங்குவதுமாக பயணிகள்... தூக்க கலக்கத்துடனும் எந்த ஸ்டேசன் என்று எட்டிப்பார்த்து மீண்டும் தன் தூக்கத்தினை தொடர்கின்ற பயணிகள், இருக்கின்ற மிச்ச மீதி தூக்கத்தினையும் கலைக்கும் விதமாக காபி....டீ....காபி...டீ  என ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக சூடான டீ காபி வாளியினை தூக்கிக்கொண்டு சேவலுக்குப்பதிலாய் கூவி கூவி எழுப்பி தங்கள் விற்பனையை ஆரம்பித்துக்கொண்டிருந்தனர்...
வழி அனுப்புவர்களும், வரவேற்க வந்தவர்களுமாய் ஒரு கூட்டம் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.எனக்கான பிளாட்பார்மில் இறங்கி ஸ்டேசனை விட்டு வெளியேற ஆரம்பித்தேன்.காலைப்பொழுது நல்ல இதமானதாக இருக்கவே நடந்து சென்றால் ஒரு சில கலோரிகளை இழந்து கொஞ்சம் அழகுறலாமே என்ற எண்ணத்தில் நடை போட ஆரம்பித்தேன்...இழுத்துப்போர்த்தியபடி கடைகளும், கடை ஓரங்களில் ஆதரவற்றவர்களும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றவுடன் கிளைமேட் கொஞ்சம் மங்கலாக இருக்க, குளிர் காற்று வீசத்தொடங்கியது.குளிருக்கு இதமாக இருக்குமே என்று அருகிலிருந்த ஒரு ஹோட்டலோடு இணைந்த டீக்கடை கண்ணுக்கு தெரிய ஒதுங்கினேன்.நம்பார்வையை படித்த டீமாஸ்டர், காபியா டீயா ? என கேட்க, டீதான் என சொல்ல சூடாய் டீ வந்தது.கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருந்த ஏலகிரி மலையில் தவழ்ந்து சென்ற மேகங்களை ரசித்தபடி சுற்றிலும் திரும்ப, டீக்கடையில் ஏகப்பட்ட பிளக்ஸ் போர்டுகள், சிலேட்டு அறிவுப்புகள் என என் கவனத்தினை ஈர்த்தது...
ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.கடை ஓனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டுமே என்று டீ மாஸ்டரை கேட்டதில் அருகில் காலை விற்பனைக்காக மும்முரத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது மனிதரை  கை காட்டினார்.முண்டாசு பனியனுடன் தீவிரமாக இருந்த அவரை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு குடித்த டீக்காக பணத்தினை கொடுத்துவிட்டு மனநிறைவோடு கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்தேன்...சில அடி தூரம் தான்..மெல்லமாய் தூறல்கள் எட்டிப்பார்த்தன...பிறகு கொட்டென கொட்டித் தீர்த்தது மழை....

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...