Thursday, February 27, 2014

கோவை மெஸ் - பாவ் ஆம்லெட் குருமா, மட்கான்(MADGOAN), கோவா (GOA)

கோவாவின் மட்கான் நகராட்சி ஆபிஸ் பகுதியில் ஒரு சாயந்திர வேளை சுற்றிக்கொண்டிருந்த போது, கோவாவின் அம்மணிகளை அரைகுறை ஆடையில் பார்த்த ரசித்த களைப்பில் கண்கள் மட்டுமே பசியாறிக்கொண்டிருந்தது.அங்குமிங்கும் நடந்த களைப்பில் எங்காவது சாப்பிட கிடைக்குமா என்று தேடியலைந்ததில் ஒரு தள்ளுவண்டி கடை சுற்றி ஒரே கூட்டம்.எட்டிப்பார்த்ததில் ஒரே ஒரு ஆள் மிக வேக வேகமாக முட்டை உடைத்து வெங்காயம் போட்டு கலக்கி ஆம்லெட் போட்டு அதை இரண்டாக கட் பண்ணி  ஒன்றை தட்டில் வைத்து அதில் சிக்கன் குருமாவை ஆம்லெட் மூழ்குமளவுக்கு ஊற்றி வெங்காயம் தூவி கையில் ஒரு பாவ்(பன்) கொடுத்து கொண்டிருந்தார்....நிமிட நேர இடைவெளியில் பலஆம்லெட்டுகள் தட்டுக்களை நிறைத்துக்கொண்டிருந்தது கூடவே வாடிக்கையாளர்களின் வயிற்றையும் மனத்தையும்...

கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி நிற்க, சுற்றுப்புறத்தினை வாசனையால் நனைத்துக்கொண்டிருந்த ஆம்லெட்டும், சிக்கன் குருமாவும் நமது மூக்கைத்துளைக்கவே நமக்கொன்று சொல்ல உடனடியாக சூடாக வந்தது.சூடான ஆம்லெட், சுவையான சிக்கன் குருமா, தூவிய வெங்காயம், தொட்டுக்கொள்ள பாவ்.....கொஞ்சம் பாவினை பிய்த்து, ஆம்லெட்டில் கொஞ்சம் எடுத்து குருமாவில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்.....இப்படியே ஒவ்வொரு விள்ளலுமாக எடுத்து தோய்த்து தோய்த்து சாப்பிட உலகம் மறந்து போனது.எங்களைப்போலவே பலரும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.




கிடைத்த இடைவெளியில் இது என்னவென்று கேட்க இந்தியில் ஏதோ கடி என்று சொன்னார்..அப்புறம் திரும்ப கேட்க, ஆங்கிலத்தில் ப்ரெட் குருமா ஆம்லெட் என்று சொன்னார்.பேரு என்னமோ இருக்கட்டும்...ஆனா சுவையாக இருக்கிறது.மீண்டும் இன்னொன்றினை கேட்டு வாங்கி அதுவும் விள்ளலும் தோய்த்தலுமாக வயிற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.

கோவா மட்கான் பக்கம் போனிங்கன்னா, முனிசுபல் ஆபிஸ் பக்கத்துல இருக்கிற பெட்ரோல் பங்க் எதிரில் இவரைக்காணலாம்.விலை 40 ரூபாய்.தள்ளுவண்டிக்கடை என்றாலும் மிக சுத்தமாக இருக்கிறது.

கிசுகிசு : சாப்பிட்டு முடித்தவுடன் இந்தக்கடைக்கு எதிரில் இருக்கிற அழகிய பூங்காவில் அமர்ந்து கொண்டு மீண்டும் விட்ட வேலையை ஆரம்பித்தோம் சிறிது நேரம்.....(மட்கான் பஸ்ஸ்டாண்டு அருகில் இருப்பதால் அரைகுறை அம்மணிகளை ரசிக்கமுடியும்....)

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, February 20, 2014

கோவை மெஸ் - LFC சிக்கன், டவுன்ஹால், கோவை

நேற்று சாயந்திரமா டவுன்ஹால் பக்கம் போய்ட்டு ஒரு சில பர்ச்சேஸ்களை முடிச்சிட்டு, அப்படியே போற வர்ற அம்மணிகளை பார்த்துட்டு பொடி நடையா வந்திட்டு இருக்கும் போது பளிச்சின்னு சிகப்பு கலர்ல ஒரு போர்டு கண்ல பட்டது, கூடவே விதவிதமா சிக்கன் படங்களை போட்டு....மொறுகலான கலர்புல் சிக்கனைப் பார்த்தாலே நமக்கு கேஎஃப்சி தான் ஞாபகத்திற்கு வரும்.ஆனா இங்க அதே மாதிரியே இருக்க, ஏதோ புதுசா இருக்கும் போல, அப்படின்னு நினைச்சிகிட்டே கடைக்குள்ள போனோம்...

கடை பூரா ஏகப்பட்ட மெனுக்களுடன், வெரைட்டியான சிக்கன் படங்களுடன் கண்ணுக்கு கவர்ச்சியா இருக்க, நம் பசியின் ஆர்வத்தினை தூண்டியது.ஏற்கனவே கேஎஃப்சி சாப்பிட்டு இருப்பதால், அதே மாதிரி சுவை இங்கு இருக்குமா என்று ஒரு வித சந்தேகத்துடன் தான் உள்ளே சென்றோம்.கேஎஃப்சி என்னென்ன மெனுக்கள் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது.அதே சமயம் விலை மிகக்குறைவாக இருக்கிறது. டேஸ்ட்க்காக ஒரு சிக்கன் போன்ஷாட் ஆர்டர் செய்தோம்..இரண்டு நிமிடத்தில் ஆர்டர் ரெடி என்கவும் ஆச்சர்யத்துடன் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம்.


இளம் சூட்டில் மிகவும் பொன்னிறமாக மொறு மொறுவென்று இருந்தது.எடுத்து கொஞ்சம் சாப்பிடவே அதே சுவை...மிகவும் அருமையாக இருக்கிறது.ஜாஸ் உடன் தொட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட செம டேஸ்ட்.கேஎஃப்சியில் இருக்கிற அதே சுவை இங்கேயும் இருக்கிறது.சாப்பிட்டு பார்த்துவிட்டு மீண்டும் அதே ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.சிக்கன் பாப் ஷாட் ஒன்றும் ஆர்டர் செய்து சாப்பிட்டோம்...இரண்டும் செம டேஸ்ட்.
அப்புறம் ஒரு ஐஸ்கிரீம்....அதுவும் நல்லாத்தான் இருக்கு.... 


கடையோட செட்டப், கலர் காம்பினேசன், எல்லாம் அசப்புல பார்த்தா கேஎஃப்சி மாதிரியே எல்லாம் இருக்கு.கேஎஃப்சியில் உள்ள உருவப்படத்தில் கண்ணாடி போட்டு குறுந்தாடி வச்சி இருப்பார்....இதுல கண்ணாடியை கழட்டிவிட்டு குல்லா போட்டு, முழுத்தாடி வச்சி இருக்கார்...யாரு எது வச்சி இருக்காங்கன்னு முக்கியமில்ல..ஆனா டேஸ்ட் எப்டி இருக்குன்னுதான் பார்க்கணும்.இங்க டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு.விலையும் குறைவா இருக்கு.நடுத்தர மக்களை குறி வச்சி இது ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.ஏசி இல்லை.பகட்டான வார்த்தைகள் இல்லை.ரொம்ப சுகாதாரமாக இருக்கிறது.சர்வீஸ் நன்றாக இருக்கிறது.உடனுக்குடன் கிளீன் செய்து விடுகின்றனர்.


கடையில் இருந்தவரிடம் கேட்டபோது இது கோவையில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், ஒரு சில கிளைகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன என்றார்.
சுவை எப்படி இருக்கும் என்ற அச்சத்திலேயே கடைக்கு போனது, சாப்பிட்டு பார்த்ததில் மீண்டும் செல்லக்கூடிய ஆர்வத்தினை உண்டாக்கி இருக்கிறது.கண்டிப்பா இன்னொரு முறை போகவேண்டும்.

டவுன்ஹால், ஜிபி சிக்னல் அருகில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.பார்க்கிங் எங்கயும் இருக்காது.

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, February 17, 2014

அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில், குச்சனூர், தேனி மாவட்டம்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்
தேனில இருந்து சின்னமனூர் நோக்கி மெயின் ரோட்டில் போயிட்டு இருந்தபோது வலது புறம் ஒரு ரோடு பிரிய, அருகே இருந்த போர்டு குச்சனூர் சனீஸ்வரன் கோவில் 15 கி.மீ என காட்ட, பார்த்துட்டு போலாமா என்று மனது அலைபாய, இவ்ளோ தூரம் வந்திருக்கோம் இனி எப்போ வருவோமோ இந்தப்பக்கம் என நினைத்தபடி இருக்க, அட...இன்னிக்கு சனிக்கிழமை வேற.பகவானுக்கு உகந்த நாள்.....ஆதலால் சனிபகவானுக்கு ஒரு அட்டண்டன்ஸ் போடுவோமே என எண்ணி அங்கே செல்ல ஆயத்தமானோம்....




இருபுறமும் பச்சை பசேலென்ற வயல்வெளிகள்...கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பசுமை...சுத்தமான காற்று, அமைதியான நெரிசலற்ற ரோட்டில் இருபுறமும் பார்த்து வியந்தவாறே உப்புக்கோட்டை, பாலார்பட்டி போன்ற சிற்றூர்களைத்தாண்டி குச்சனூர் எங்களை வரவேற்றது.
கோவிலுக்கு முன்பாக அரைகிலோமீட்டர் தூரத்திலேயே கார்கள், டூவீலர்கள், பக்தர்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டது.சனிக்கிழமை ஆதலால் ஏகப்பட்ட கூட்டம்.கோவில் நுழைவு வாயில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்க, வண்டி மெதுவாய் ஊர்ந்து உள்ளே சென்றது.தோதான இடத்தில் நிறுத்திவிட்டு ஜனத்திரளுக்குள் நாங்களும் ஐக்கியமானோம்.
சுருளி ஆறிலிருந்து பிரிந்து கிளை நதியாக வந்து கோவில் அருகே ஓடிக்கொண்டிருக்கிற வாய்க்கால் போன்ற சிறு ஆற்றில் கை, கால்களை நனைத்துக்கொண்டு படியேறினோம்.ஆற்றின் ஓரங்களில் குடும்ப குடும்பமாய் மக்கள், கூடவே புரோகிதர்கள்.....அவர்களின் மந்திரம் பரிகாரங்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்க, குடும்பத்தார்களின் சனி தோஷங்கள் நிவர்த்தியாகிக்கொண்டிருந்தன.

சனி தோஷம் நிவர்த்தி செய்வதற்கான பொருட்கள் உப்பும், பொரியும், எள்ளும் மண்காகமும் திரி விளக்குமாய் கடை பரப்பி இருக்கின்றன. கோவில் முன்புறம் இருக்கிற இடங்கள் பெரும் விசாலமாய் இருப்பதால் க்யூ கட்டி பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.வரிசையில் நாங்களும் அடைந்து கொண்டோம்....

பக்தர்கள் வழிபடும் முறை என்று பிளக்ஸ் பேனரில் ஒட்டப்பட்டிருக்கின்றன.அதன்படி ஒவ்வொருத்தரும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அவ்வாறே நாங்களும் செய்து கொண்டிருந்தோம். .கொடிமரத்தினை கும்பிட்டு பொரியும், உப்புத்தொட்டியில் உப்பும் போட்டோம்.மண்காகத்தினை தலையில் வைத்து ஒரு சுற்று சுற்றி காகம் பீடத்தில் வைத்தோம்.காகத்தின் மேல் காசுகளை வைத்து கும்பிட்டு, பின் எள் விளக்கினை தீப இடத்தில் வைத்து வேண்டிக்கொண்டோம்.பின் கொஞ்ச நேரம் காத்திருந்து சுயம்புவாக அருள் பாலிக்கும் சனி பகவானை பக்தியோடு வேண்டிக்கொண்டு வெளியேறினோம்.






இங்கே தல விருத்தமாக விடத்தலை மரம் இருக்கிறது.இந்த மரத்தினை சுற்றி பக்தர்களின் வேண்டுகோள் மஞ்சள் கயிறாக நிறைந்து இருக்கிறது.தனி சன்னதியில் திருமலைக்குமரன் வீற்றி இருக்கிறார்.



இந்தியாவிலேயே சனிபகவான் சுயம்புவாக தோன்றிய ஒரே ஸ்தலம் இது தான்.சனிபகவானுக்கே பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கின வரலாறு பெற்ற தலம்.சனி தோஷம் பெற்றவர்கள் இங்கு வந்து வழிபடுதல் சிறப்பு.
தேனியில் இருந்து 23 கி மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்தக்கோவிலைப்பத்தி வரலாறு இது தான்.

கிசுகிசு : இங்க செம அம்மணிங்க கூட்டம்....சனி தோசம் நிவர்த்தி ஆகனும்னு போனா நமக்கு வேற தோஷம் பிடிப்பது உறுதி...ஹிஹிஹி....

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 12, 2014

பயணம் – மாஹி (புதுச்சேரி) கேரளா, ( MAHE ), மாஹே....ஒரு பார்வை

மாஹி (புதுச்சேரி) ( MAHE ), மாஹே....ஒரு பார்வை
கேரளாவில் தலச்சேரி போனபோது பக்கத்துல இருக்கிற மாஹே (புதுச்சேரி) யூனியன் பிரதேசத்திற்கும் போய்ட்டு வந்திடலாமே அப்படின்னு அங்க போனோம்.அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு அழகிய குட்டி பிரதேசம்.எங்க பார்த்தாலும் தண்ணீர் தண்ணீர்...கடல் மற்றும் ஆறுகளால் அப்புறம் நம்ம கடைகளால்....மாஹிக்குள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது நம்ம கடைகள் தான்.வித விதமாய் மதுபானங்கள் வியக்கவைக்கின்றன.நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.(போதும்னு நினைக்கிறேன்..இல்லைன்னா நம்ம பேவரைட் எச்சரிக்கை வாசகம் போடனும்....குடி குடியை கெடுக்கும்னு....)



மய்யாழிப்புழா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இந்த குட்டி நகரம் அமைந்து இருக்கிறது.மொத்த பரப்பளவே 9 சதுர கிமீ தான்.நம்ம புதுச்சேரியோட முதல்வர்தான் இங்கயும்.பிரெஞ்ச் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி என்பதால் ஒரு சில பிரெஞ்ச் கட்டிடங்களைக் காணலாம்.
மாஹியில் அதிகம் சுற்றிப்பார்க்க எந்த ஒரு இடங்களும் இல்லை.ஒரு பார்க், ஒரு தேவாலயம் , ஒரே ஒரு போட் ஹவுஸ்... மஞ்சக்கல் என்கிற இடத்தில் இருக்கிற போட் ஹவுஸ்.அதிலும் ஒரே ஒரு போட் மட்டும் தான் இருக்கிறது..வாடிக்கையாளர் வருகைக்காக தவம் கிடக்கும் காட்சியினை காணலாம்.படகில் கடலிலும், புழாவிலும் கொஞ்ச தூரம் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்தால் அவ்ளோதான்.




கடற்கரை ஓரம் என்பதால் பீச் இருக்கிறது.ஆனால் அங்கு செல்ல வசதியில்லை.கேரளா அருகில் இருப்பதால் கேரள வாசம் தான் வீசுகிறது.ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலான வீடுகள் என்பது மிகக்குறைவே.கடலில் ஆறு கலக்கும் இடத்தில் ஒரு நீண்ட நடைப்பயண பாதை இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல ஏற்ற இடம்.அது தான் பொழுது போக்கும் இடமாக இருக்கிறது. இந்த பார்க்கில் சுதந்திர தின போராட்டகாரர்களின் நினைவாக இரண்டு கல்தூண்கள் இருக்கின்றன. சாயந்திர நேரம் அம்மணிகளுடன் கைகோர்த்து பவனி வர மிக அம்சமாய் இருக்கிறது.பகல் பொழுதுகளில் பார்க் பென்ச்களில் படுத்துறங்கும் சுகவாசிகளைக் காணலாம்.


மாஹி முழுவதும் பெரும்பான்மையான கடைகள் நம்ம கடைகளாகவே இருப்பதால் நம்ம பங்காளிகள் அதிகம் இருக்கின்றனர்.கேரளாவை விட ரேட் குறைவாக இருப்பதால் தலச்சேரி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மாஹி பார்டருக்கு வந்து விடுகின்றனர்.விலையும் குறைவு...மனமும் நிறைவு.....பங்காளிகளுக்கு ஏற்ற இடம்....




மாஹி / மாஹே எப்படி செல்வது....? கேரளா தலச்சேரி அருகில் இருக்கிறது.தலச்சேரியில் இருந்து ஆட்டோ, பஸ் மூலம் மாஹி / மாஹே வந்தடையலாம்.

தலச்சேரி பேமஸ் - கல்லுமக்காய்

நேசங்களுடன்

ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Sunday, February 9, 2014

கர்னல் ஜான் பென்னி குயிக் (Colonel John Pennycuick) - நினைவு மணிமண்டபம்

கர்னல் ஜான் பென்னி குயிக்....
இவர் தான் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர்.இவரோட நினைவு மணி மண்டபம் சமீபத்தில் தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் எனப்படும் இடத்தில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறப்புவிழா கண்டது.இந்த செய்தியை பேப்பரில் படித்ததோடு சரி.அங்கெல்லாம் போகப்போகிறோமா என்று எண்ணியிருந்தேன்.ஆனால் கடந்த வாரம் தேனி போயிருந்தபோது கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.ஒரு ஞாயிறு காலையில் தேனியில் இருந்து குமுளி செல்லும் பாதையில் கூடலூர் என்கிற ஊரை அடுத்து இருக்கிற லோயர்கேம்ப் இடத்திற்கு சென்றோம்.
இயற்கை சூழ்ந்த மலைகளின் பிண்ணனியில் மிக அம்சமாய் கட்டப்பட்டு இருக்கிறது.மணி மண்டபம் மிகுந்த பொருட்செலவில் பளபளக்கும் கிரானைட் கற்களால் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது.மண்டபத்தினை சுற்றி புல் தரைகள் பதிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது.மினி பூங்கா போன்று இருக்கிறது இம்மண்டபம் பசும்புல் தரைகளால்.


படுசுத்தமாய் பாதுகாக்கப்பட்டிருக்கும் மண்டபத்தினுள்ளே கர்னல் பென்னி குயிக் அவர்களின் திருவுருவ சிலை வெண்கலத்தினால் அமைக்கப் பட்டிருக்கிறது.ஒரு கையினால் தொப்பியை பிடித்தவாறும், இன்னொரு கையினை தன் கோட் பாக்கெட்டினுள் விட்டு இருக்கும் திருவுருவ சிலை பார்க்க மிக கம்பீரமாய் இருக்கிறது.


 
இரவு நேரத்தில் உட்புறமும் வெளிப்புறமும் ஒளி வெள்ளத்தில் நீந்தும் படி மிக சிறப்பாய் இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.நன்கு விசாலமாக கட்டப்பட்டு இருக்கிறது.முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.மேலும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி வரைபடம் வைக்கப்பட்டிருக்கிறது

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் தென்மாவட்டங்களுக்கு பாசன வசதி, மற்றும் குடிநீ வசதி ஏற்படுத்துவதற்காகவும் 1895 ல் இவர் கட்டிய அணைதான் முல்லைப்பெரியாறு அணை.இந்த அணையின் மூலம் தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீரும், அம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது.
பென்னிகுயிக்கின் கடுமையான முயற்சியினாலும், பெரும் தியாகத்தினாலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அணை உருவாகி இருக்கிறது.அவரின் தியாகத்தினை போற்றும் வகையில் தமிழக அரசு அமைத்துள்ள மணி மண்டபம்தான் இது.கண்டிப்பாய் அனைவரும் காண வேண்டிய.....போற்றப்பட வேண்டிய இடம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...