திருடன் மணியன்பிள்ளை
திருப்பூர்ல நடந்த புத்தக கண்காட்சிக்கு போயிருந்தபோது வரிசையா ஒவ்வொரு
ஸ்டால்களா பார்த்துட்டு வந்திட்டு இருந்தேன்.காலச்சுவடு அரங்கில் இருந்த திருடன்
மணியன்பிள்ளை புத்தகம் என் கண்களை ஈர்த்தது.எடுத்து ஓரிரண்டு பக்கங்கள் புரட்டவே
மிக சுவாரஸ்யமாக இருக்க, வாங்கிக்கொள்ளலாம் என மனது தீர்மானித்தது.ஆனால்
புத்தகத்தின் சைஸ் கொஞ்சம் மிரட்டவே, எப்படி இவ்ளோ எடையோடு தூக்கிக்கொண்டு இன்னும்
பல ஸ்டால்களை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்குமே என நினைத்து மணியன்பிள்ளையை
கடைசியாய் சந்திக்கலாம் என்றெண்ணி விட்டு கிரிவலம் சுத்துவது போல் அனைத்து
ஸ்டால்களையும் சுத்திவிட்டு வந்தால் மணியம்பிள்ளை புத்தகம் காணவில்லை.அதற்குள்
யாரோ ஆட்டையை போட்டுவிட்டார்கள்.....சாரி..... வாங்கிக்கொண்டு
விட்டார்கள்.... காலச்சுவடு ஆட்களிடம் கேட்டபோது புத்தகம் இனி சென்னையில்
இருந்துதான் வரும், ஓரிரு நாட்களாகிவிடும் என சொல்லிவிட்டனர். மீண்டும் திருப்பூர்
வந்து வாங்க வேண்டுமா என யோசித்து விட்டு வெளியேறிவிட்டேன்.ஒரு நல்ல புத்தகத்தை
தவறவிட்டுவிட்டோமோ என்று மனது கிடந்து துடித்தது. ஆனாலும் இந்தப்புத்தகத்தினை
எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று வீட்டிற்கு வந்தவுடன் ஆன்லைனில் தேடியபோது நம்மபுக்ஸ்
தளத்தில் கிடைத்தது.உடனே ஆர்டர் போடவும்,
அடுத்த அரைமணி நேரத்தில் கன்பர்மேசனுக்காக ஒரு போன் கால் பொள்ளாச்சியில்
இருந்து.பிறகு தான் தெரிந்தது நம்ம புக்ஸ் பொள்ளாச்சியில் இருப்பது என்று..அடுத்த
நாளே புரபஷனல் கொரியரில் வீடு தேடி வந்தார் திருடன் மணியன்பிள்ளை.
புரட்ட ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.மொத்தம் 590 பக்கங்கள்.ஒவ்வொரு
நாளும் கிடைக்கிற நேரத்தில் படிக்க ஆரம்பித்து மொத்தமாய் தீர்ந்து போனது.பிறகு
சமயம் கிடைக்கும்போதெல்லாம் இன்னும் புரட்ட ஆரம்பித்தேன்...புரியாத ஓரிரு
விசயங்களும் இன்னும் ஆழமாய் புரிந்து போனது.எப்பொழுது படித்தாலும் சுவாரஸ்யங்கள்
அகலாமல் இருப்பதே இந்த புத்தகத்தின் சிறப்பு.ஒரு திருடன் தன் வரலாறாக வாழ்க்கையில்
நடந்த அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி விவரித்து இருப்பதால் அந்த திருடன்
மேல் மதிப்பையும் அனுதாபத்தினையும் அளிக்கிறது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வாழ்த்துங்கல் என்கிற ஊரில் கொடுந்தற என்கிற
பிரபல குடும்பத்தில் பிறந்த ஒரு திருடனின் கதை தான் இந்த புத்தகம்.சிறுவயதில்
தந்தையை இழந்தவுடன் மொத்தமும் மாறிப்போன ஒரு வளர்ந்த பையனின் வரலாறு.படிக்கின்ற
காலத்தில் குடும்பச்சூழல் மாறிவிட்டதால் சிறு திருட்டில் ஆரம்பித்து பின்
கேரளாவில் புகழ்பெற்ற பிரபல திருடனாக மாறி, மைசூரில் மிகப்பெரும் கோடிஸ்வரனாகி,
கர்நாடக முதல்வரோடு ஒரே ஹெலிகாப்டரில் பயணித்து, அமைச்சராவதற்கு முன்னால்
போலீஸிடம் பிடிபட்டு, ஒரே நொடியில் கோடிஸ்வரனாகி இருந்த சலீம்பாஷா என்கிற மணியன்பிள்ளை
ஏழ்மையாகி, தண்டனை பெற்று, இப்போது திருந்தி வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கை
வரலாறுதான் இந்த புத்தகம்.
இந்த புத்தகத்தில் இவர் விவரித்து இருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக சுவாரஸ்மானவை.ஒரு
வீட்டில் திருடச்சென்று மாட்டிக்கொண்டது, திருடிய பொருட்களை போலிஸ்காரர்களிடமே
கொடுத்தது, கூட இருக்கும் நண்பர்களுக்காக திருடி உதவி செய்தது, தன்னைப்பழிவாங்கிய
போலீஸ், நீதிபதி வீடுகளில் ஆபரேசன் நடத்தியது என அனைத்தும் மிக சுவாராஸ்யமே....
இந்தப்புத்தகம் ஒரு திருடனின் இயல்பை, சமூகத்தினால், நீதிமன்றத்தால்,
காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒருவனது வாழ்க்கையை விவரிக்கிறது.மற்றபடி திருட்டை
ஊக்கப்படுத்தியோ, குற்றம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகயோ இல்லை.தன்
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பொதிந்து கிடக்கிற உண்மைகளை காலங்கெட்டு உணர்ந்து
பார்த்து இப்போது நம்மை உணர வைக்கிற எழுத்துக்களை இந்த புத்தகத்தில் காணலாம்.
ஒவ்வொரு திருடனுக்கும் ஒவ்வொரு குணாதியசங்கள் உண்டு.பல திருடன்கள்
மணியன்பிள்ளைக்கு நண்பர்களாக இருக்கின்றனர்.(திருடனுக்கு திருடன் தானே நண்பன்).இப்படி
ஒவ்வொருவரும் திருடச்செல்லும் வீட்டில் திருடியபின்பு நன்கு சாப்பிட்டுவிட்டு பண்ட
பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வருவது, நன்றாக குளித்துவிட்டு பவுடர்லாம் பூசி உடைகளை
மாற்றி ஒரு ஜெண்டில்மேனாக வெளிவருவது,பிடிக்காத நபர்களின் வீட்டில் நடுக்கூடத்தில்
மலம் கழித்துவிட்டு வருவது என ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் அதை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது,
நீதிமன்றத்தில் தன் தாயை அவமானப்படுத்தி, வேண்டுமென்றே தனக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதித்த நீதிபதி வீட்டில் திருட முயற்சித்து முடியாமல் போக தன் நண்பனை விட்டு அவர்க்கு
உடல் நலம் குன்றச்சொன்னது என ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காட்சியைப்போல மனக்கண்களில்
விரிகிறது.
இந்தப்புத்தகம் முழுவதும் ஒரு குடும்பத்தின் வறுமை, அதன் காரணமாக திருட்டு
வாழ்க்கைக்கு நுழைந்தது, திருடனின் சாகசங்கள், அவன் வாழ்ந்தவிதம், போலீசில்
துன்பப்பட்டது, தன் வழக்கில் தானே ஆஜராகி வாதிட்டது, கல்யாணம், நட்பு,
விபச்சாரிகளுடன் தொடர்பு, பக்கத்து மாநிலத்தில் ஏழைப்பங்காளன் ஆனது, கோடிஸ்வரன்
ஆகி ஏழையானது, சிறைத்தண்டனை, நன்னடத்தை
காரணமாக போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றியது என அனைத்து நிகழ்வுகளும் ஒரு திரைப்படம்
போல கண்முன் தெரிகிறது.
திருடச்சென்ற வீட்டில் ஏற்பட்ட அனுபவம், மாட்டிக்கொண்ட அனுபவம் எனப்பலவும் விரவிக்கிடக்கிறது....வெகு நேரம் நீண்ட சண்டையில் கெட்டியாக
பிடித்த ஒரு வாலிபனை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து, அடுத்தநாள் அவன்
உயிரோடிருக்கிறானா என்பதை அறியும் பொருட்டு விசாரித்ததில், அவன் மிஸ்டர் பாத்திமா
காலேஜ் என்றும், அவனுடைய மாமா கொல்லம் சர்க்கிள் என்பதும், பிற்காலத்தில் அவர் ஒரு ஐபிஎஸ்
ஆகி தன்னைச் சந்தித்தது என எல்லாம் விரிவாய் சொல்லியிருக்கிறார். திருடச்சென்ற
இடத்தில் தற்கொலை செய்யவிருந்த ஆளைக்காப்பாற்றியது, திருடிய பணத்தில் பிறர்க்கு
உதவியது, திருடிய பணத்தில் ஆடம்பரமாய் வாழ்ந்தது என அனைத்தும் படிக்க படிக்க
சுவாரஸ்யமே....
ஒவ்வொரு திருட்டு அனுபவத்திலும் ஒரு பாடம்..ஒரு தத்துவம் என நன்றாகவே
உணர்ந்திருக்கிறார் நமக்கும் உணர்த்தியிருக்கிறார் எழுத்தாளர். இந்தப்புத்தகம் முழுக்க முழுக்க
சுவாரஸ்யமான சம்பவங்கள், மனதைப்பிழியும் சோகங்கள் என எல்லாம் இருக்கிறது.மலையாளிகளுக்கு
இயல்பாகவே பேசும்போது ஒரு நக்கல் தொனி, காமெடி வெளிப்படும்.அதுதான்
இந்தப்புத்தகத்திலும் நிறைய இருக்கிறது.பேச்சும் தொனியினை எழுத்தினில்
நகைச்சுவையாக கொண்டிருப்பதில் இந்தப்புத்தகம் படிப்பதற்கு சுவையாக இருக்கிறது.
இந்தப்புத்தகத்தினை பற்றி இன்னும் எழுதலாம்.அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.காலச்சுவடு
வெளியீட்டில் வந்திருக்கும் இந்தப்புத்தகம் ஜி.ஆர் இந்துகோபன் எழுதி, தமிழில்
குளச்சல் மு யூசுப் மொழிபெயர்த்துள்ளார்.விலை 450.00, மொத்தப்பக்கங்கள் 590
இந்த தன்வரலாறு படித்ததில் இருந்து அந்த திருடன்(ர்) மணியன்பிள்ளையை சந்திக்க
ஆவல் ஏற்பட்டிருக்கிறது...விரைவில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில்.....
நேசங்களுடன்
ஜீவானந்தம்