Monday, January 2, 2017

கோவை மெஸ் - தேங்காய்ப்பால்- நெல்லை விநாயகா பலகாரக்கடை, ஒண்டிப்புதூர், கோவை

                          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்                               ***********************************************
                      சமீபத்தில் ஒரு வேலை விசயமாக ஒண்டிப்புதூர் சென்றிருந்த போது நேரமோ மதியத்தை தொட இருக்க, லேசாய் பசிக்க ஆரம்பித்தது.கூட வந்த நண்பரிடம் ஏதாவது சினேக்ஸ் மாதிரி சாப்பிடலாமான்னு கேட்க, அவரோ இங்க ஒரு கடையில் தேங்காய்ப்பால், வடை, போண்டா நல்லா இருக்கும் சாப்பிடலாமா என கேட்க, சரி என்று சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கடைக்கு முன்னாடி வண்டியை பார்க் பண்ணியிருந்தோம்.
                              ஒண்டிப்புதூர் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த நெல்லை விநாயகா பலகார ஸ்டால்.ஆஸ்பெஸ்டால் கூரை வேயப்பட்டு, பழைய கால கட்டிடம் போல் இருக்கிறது.கடையினுள் பிளாஸ்டிக் டேபிள்கள் சேர்கள் போடப்பட்டு இருக்கின்றன.வாடிக்கையாளர்கள் பலகாரங்களை ருசித்துக் கொண்டிருக்க,உள்ளே தேங்காய்ப்பால் ஒரு பெரிய போவணியில் சுடுதண்ணீர் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.கடையின் உட்புறமே வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்க கடைக்காரர் பலகாரங்களை சுட்டுக் கொண்டிருந்தார்.
                கடையின் ஷோகேசில் இருந்த பலகாரங்கள் வடை, போண்டா பஜ்ஜி என பல வெரைட்டிகள் பல வாடிக்கையாளர்களின் பசியை தீர்த்துக்கொண்டிருக்க, அவ்வப்போது காலியாகிக் கொண்டிருக்கும் ஷோகேசில் சுடச்சுட சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார் கடைக்காரர்.
                     நண்பருக்கு கடைக்காரர் தெரிந்தபடியால்  நலம் விசாரித்து விட்டு சூடாக வடை, பஜ்ஜியை பேப்பரில் மடித்து கொடுக்க, டேபிளில் அமர்ந்து சுவைக்க ஆரம்பித்தோம்.சிறிது நேரத்தில்  சூடாய்  ஆவி பறக்க தேங்காய்ப்பால் டேபிளுக்கு வர, எடுத்து சுவைத்ததில் தேங்காய்ப்பாலின் டேஸ்ட், நாவின் நரம்புகளை சுடச்சுட மீட்டி எடுத்தது.



        இன்னொரு மிடக்கு குடித்ததில் சின்னம்மாவுக்கு அடிமையாகிப்போன தொண்டர்களைப்போல் நாக்கு வளைந்து கொடுத்தது.பாலின் இடையிடையிடையே வரும் தேங்காய்த்துருவலும், உளுந்தம்பருப்பும் இன்னும் சுவையை அதிகப்படுத்தியது.
ஒரு கடி வடை மற்றும் கொஞ்சம் தேங்காய்ப்பால் என இரண்டும் கலந்து சாப்பிட டேஸ்ட் இன்னும் அதிகமானது.சுடச்சுட தேங்காய்ப்பாலும் வடையும் சாப்பிட்டு முடிக்க வயிறும் மனதும் நிறைந்தது.

பலகாரங்களை செய்தி பேப்பரில் தான் கொடுக்கிறார்கள்.பலகாரங்களில் உள்ள எண்ணைய் பில்டர் செய்ய பயன்பட்டாலும் இது கெடுதல் என்றும், பேப்பருக்கு பதில் சில்வர் தட்டுகளை  தரும்படியும் சொல்லிவிட்டு பலகாரங்களுக்கு உண்டான தொகையை கொடுத்து விட்டு வெளியேறினோம்.
அந்தப்பக்கம் போனா தேங்காய்ப்பாலை ருசிக்க மறந்து விடாதீர்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...