வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை. - 2
கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் மலை ஏற ஆரம்பித்தோம்...கரடு முரடாய் இருந்த பாதை இப்போது வழுக்குப் பாதையாய் ஆனது.பாறைகளில் படி போன்று வெட்டி வைத்திருக்கின்றனர்.இருபுறமும் மூங்கில் காடுகள் இருக்கின்றன.அந்த இருட்டிலும் கண்கள் பழகி இருந்தன நடப்பதற்கு...கொண்டு வந்த சோடாவினை மூடி அளவில் குடித்து தாகத்தை தணித்துக்கொண்டோம்....
இரண்டாவது மலையில் ஒரு இடத்தில் சுனை இருக்கிறது.அதில் குளிர்ச்சியாய் தண்ணீர் மெல்லியதாக ஒழுகிறது.உள்ளங்கையில் பிடித்து குடிக்க குடிக்க மிகுந்த சுவையுடன் இருக்கிறது.கொஞ்சம் வாட்டர் பாட்டிலிலும் நிரப்பிக்கொண்டு பயணித்தோம்...ஒரு அரை மணி நேரம் கழித்து அடுத்த மலையின் ஆரம்பத்தை அடைந்தோம்...அங்கே இன்னொரு சுனை இருக்கிறது..அருகிலேயே சங்கினால் செய்யப்பட்ட சிவன் சிலை இருக்கிறது.பாறைகளுக்கு இடையில் வரும் நீரினை ஒரு மூங்கில் தப்பையில் வரும்படி உள்ளே சொருகி இருக்கின்றனர்.இங்கேயும் நாவினை கொஞ்சம் நனைத்துவிட்டு ரெஸ்ட் எடுத்தோம்...
மீண்டும் பொறுமையாய் மலை ஏற ஆரம்பித்தோம்...மூன்றாவது மலை தாண்டவும் குளிர் எடுக்க ஆரம்பித்தது.மீண்டும் உடைகளை போட்டுக்கொண்டு அங்கே இருந்த பாறைகளில் ஓய்வெடுத்தோம்... அருகிலேயே இருந்த கடையில் சூடாய் சுக்கு காபி குடிக்கவும் கொஞ்சம் குளிருக்கு இதமாக இருந்தது....அரைமணி நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்...இப்போது கொஞ்சம் சமதளம் போன்று இருந்தது....போகிற வழியில் இருந்த பீமன் களி உருண்டை பிரமாண்டமாய் பயமுறுத்தியது....
போகிற வழியில் ஆங்காங்கே சிறு சிறு காவல் தெய்வங்கள்.....அனைவருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்....மெல்ல மெல்ல நடந்து விபூதி மலை எனப்படும் மலை அடைந்தோம்...இந்த விபூதி மலை வழியின் இருமருங்கிலும் விபூதிக்காக குடைந்து வைத்து இருக்கின்றனர்.
இந்த மலை வழியே செல்லும்போது கால்கள் மிகவும் களைப்படைந்து போயின.ஆயினும் வெகு தூரத்தில்
நமக்கு முன்னே வெளிச்ச புள்ளி இட்டு செல்லும் பக்தர்களின் பயணம் நம்மை இன்னும் முன்னேற
தூண்டியது....
இந்த மலை தாண்டியதும் ஆண்டி சுனை என்னும் காட்டாறு இருக்கிறது.மிக குறைவாக நீர்வரத்து இருந்தாலும் குளிர் மிக அதிகமாக இருக்கிறது. கைகால்களை கொஞ்சம் நனைத்துவிட்டு மேலேறே ஆரம்பித்தோம்....
கடைசி மலையை ஏற ஆரம்பிக்கும்போது அதிக பாறைகள்..தத்தியும் தவழ்ந்தும்
ஏறினோம்.அவ்வப்போது இளைப்பாறிக்கொண்டோம் முடிவில் அதிகாலை 3.55 மணிக்கு மலையை
அடைந்து விட்டோம்..
அங்கே இருந்து பார்க்கையில் நம்மை நோக்கி வெளிச்சப்புள்ளிகளுடன்
பக்தர்கள் வந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது நாம் மலையை அடைந்து விட்டோம்
என்கிற பெருமை எங்களின் வலியை போக்கியிருந்த்து.
உடனடியாக தரிசனம் பெற
உள்நுழைந்தோம்.முதலில் ஒரு பாறை சந்தினுள் எழுந்தருளியுள்ள அம்மனை தரிசனம் செய்து
விட்டு பின்னர் சிவபெருமானின் உருவத்தினை தேடி சென்றோம்...இரு பாறைகளுக்கு இடையே
எழுந்தருளியுள்ள சிவபெருமானின் வடிவமான லிங்கத்தினை மனமுருக வேண்டிவிட்டு பின்னர் ஓய்வெடுக்க
இடம் தேடினோம்..
அப்போது அடித்த பனியில் பற்கள் அனைத்தும் தப்பாட்டம் போட்டன.இருக்கிற அனைத்து
உடைகளையும் எடுத்தி உடுத்திக்கொண்டோம் ஒதுங்க இடம் தேடியதில் அனைத்து பாறை சந்து
பொந்துகளும் பக்தர்களின் பெட்ரூமாய் மாறி இருந்தது.எங்களுக்கென்று ஒரு இடத்தினை தேர்வு
செய்து விடிய காத்திருந்தோம்...அதிகாலை சூரியனின் உதயத்தை காண காத்திருந்தோம்...அதிகாலை
பூஜை 6 மணிக்கு ஆரம்பிக்க மீண்டும் மனமுருக வேண்டிக்கொண்டோம்....பக்தர்களின்
வேண்டுதலாய் அந்த பாறை எங்கும் வேல்களால் நிரம்பி இருந்தது.
மெல்ல மெல்ல இருள்
விலக....... மேகங்களால் போர்த்தி இருந்த இயற்கையை காண ஆரம்பித்தோம்...நந்தி போன்ற வடிவில் ஒரு
பாறையைப் பார்க்க அதிசயத்துப்போனோம்..பனி மேகம் வெள்ளையாய் நம்மை தொட்டு விட்டு
செல்ல...சூரியன் தெரிய ஆரம்பித்தான்..இளம் சிவப்பாய் ஒரு புள்ளியாய் மேல் எழும்பிய
சூரியன் மேக கூட்ட்த்திற்குள் அழகாய் தெரிய ஆரம்பித்தான்.. இந்த காட்சியைக் காண
கண்டிப்பாய் ஆயிரம் கண் வேண்டும்...
அந்த மலையைச்சுற்றிலும் பாறைகள்...பசுமை
மரங்கள் என இரண்டும் பின்னி பிணைந்திருப்பதைக்கண்டு அதிசயத்து போனோம்.6400 அடி
உயரத்தில் இருக்கிற ஏழாவது மலையில் மேகம் தவழ்ந்து நம்மை உராய்ந்து
தொட்டுச்செல்லும் அனுபவம் இனி வாய்ப்பது என்பது அபூர்வம் தான்...மிக ரம்மியமான
காட்சி....மலை முழுவதும் இயற்கை அன்னை பசுமையை போர்த்தி இருப்பது கண்
கொள்ளாக்காட்சியாகும்...
இரவு நேரத்தில் எதுவும் தெரியவில்லை.ஆனால் பகலில் திரும்பிவரும்போது தான் ஏகப்பட்ட ஆச்சரியங்கள்....திரும்பி வருகையில்
தெரிந்த மலைகளை பார்த்தபோது வியப்பும் அதிசயமும் ஒரு சேர தோன்றுகிறது. மேலும் பகலில்
நாங்கள் வந்த பாதைகளை பார்க்கும் போது இன்னும் அதிசயத்திற்கு ஆளானோம்..எவ்ளோ கரடு
முரடான பாதை, செங்குத்தாக இருக்கிற பாறைகளின் ஊடே பாதைகள், முட்கள் போன்ற
பாறைகளின் படிகள்...இவைகளை எல்லாம் பார்க்கும்போது இன்னும் மலைப்பு அதிகமானது... எப்படி
இவ்ளோ தூரம் பயணித்தோம் என்பதை நினைக்கையில் இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இத்தனை கஷ்டங்களுக்கும்
மத்தியில் இறைவனை தரிசனம் கண்டது மிகுந்த அதிசயமே...
கண்டிப்பாய் காண வேண்டிய தரிசனம்..இயற்கையின் வழியே இறைவனை காண நல்ல வாய்ப்பு....
முதல் பயணம் - வெள்ளியங்கிரி
முதல் பயணம் - வெள்ளியங்கிரி
நேசங்களுடன்
ஜீவானந்தம்..