Friday, March 23, 2018

கோவை மெஸ் – ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர், தெற்கு ரத வீதி, திண்டுக்கல், Sri Kamatchi tiffen centre, Dindigul


                    சமீபத்தில் திண்டுக்கல் சென்றிருந்த போது காலை வேளை அப்பொழுதுதான் விடிய தொடங்கி இருந்தது.எங்கு நான் வெஜ் சாப்பிடலாம் என தேடல் தொடங்கியது.காலையில் எந்த கடையில் கிடைக்கும் என ஒரு கட்ட தேடலுக்கு பின் மாரியம்மன் கோவில் அருகில், தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள தெற்கு ரதவீதியில் இருக்கும் ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டரை அருகில் உள்ளவர்கள் பரிந்துரைத்தனர்.


        8.30 மணி சுமாருக்கு அந்த ஹோட்டலை அடைந்துவிட்டேன்.பிச்சை மொய்தீன் சந்தில் இந்த கடை இருக்கிறது.
அக்ரஹாரத்தில் நுழைந்த மாதிரி இருக்கிறது,கடையின் அமைப்பும் அப்படித்தான் இருக்கிறது,பழங்கால கட்டிடம்.உள்ளே இடவசதி தாராளமாக இருக்கிறது.கடைக்குள் நுழைந்ததும் இங்கு கறிக்குழம்பெல்லாம் கிடைக்குமா என்கிற சந்தேகத்துடனே சுற்றும் முற்றும் பார்த்தேன்.தெய்வ மணம் கமழும் வகையில் கடையில் சாமி புகைப்படங்கள், சாம்பிராணி வாசம் என நம்மை வரவேற்றது.உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும், பொங்கல் இட்லி, மசால் தோசை என சாப்பிடவும், மருந்துக்கு கூட கறியின் வாசமோ, கறிக்குழம்போ கண்ணுக்கு தெரியவில்லை.எதற்கும் சந்தேகத்துடனே அமர்ந்தேன், குடலும், கறியும் சாப்பிடலாம்னு வந்ததுக்கு, நம்மளை சைவத்தை சாப்பிட வச்சிட்டாங்களே என்ற ஆதங்கத்துடனே அமர்ந்தேன்.

                      இலை போட வந்தவரிடம், நான்வெஜ் ஹோட்டல் தானே இது என்று கேட்க, ஆமாம் என வயிற்றில் பால் வார்த்தார்.பச்சை பசேலென்ற வாழையிலை போட்டு, தண்ணீர் தெளித்து விட்டு, இரண்டு இட்லியை வைக்க, கூடவே இரண்டு வகை சட்னியை வைத்துவிட்டு நகர்ந்தார் சர்வர்.தேங்காய் சட்னிதான் அதில் ஒன்று கார தேங்காய் சட்னியும்.இரண்டும் செம டேஸ்ட்.தேங்காய் சட்னியை இவ்ளோ சுவையாக செய்ய முடியுமா என்பதே ஆச்சரியம் தான்.கெட்டிச் சட்னிதான் இரண்டும்.இரண்டும் செம டேஸ்ட்.சுடச் சுட இட்லிக்கு தோதாக இருக்கிறது இந்த சட்னிகள்.


                   அடுத்து மட்டன் குழம்பினை கொண்டு வர, அது சப்பாத்திக்கு செய்யும் குருமா மாதிரி வெள்ளை வெளேரென்று இருக்கிறது.கொஞ்சம் கூட மசாலா சேர்க்காமல், அவர்கள் சொந்த தயாரிப்பில் செய்யும் மசாலாக்களை உபயோகித்து செய்கின்றனர்.சுவையும் மிக நன்றாகவே இருக்கிறது.இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கிறது.தேங்காய் சட்னி, கொஞ்சம் குழம்பு என்று கலந்து கட்டி அடிக்க, அது பாட்டுக்கு இட்லி இறங்கி கொண்டு செல்கிறது.சங்ககிரி ஏரியா பக்கம் இந்த மாதிரி மட்டன் குழம்பினை செய்வார்கள்.அடுத்து மட்டன் சாப்ஸ் ஆர்டர் செய்ய, அதுவும் மசாலாக்கள் இன்றி வெள்ளை வெளேரென்று வருகிறது.நன்கு பஞ்சு மாதிரி வெந்து இருக்கிறது.காரத்திற்கு மிளகும் அரைத்துவிட்ட பச்சை மிளகாயும் சேர்த்திருக்கிறார்கள்.காரமும் அளவாய் இருக்கிறது.                   எலும்பு நன்றாக வெந்து இருக்கிறது.சாப்பிடும் போது பச்சைக்கறியினை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது.ஆனால் சுவையும் மணமும் செமயாக இருக்கிறது.அடுத்து அவர்களின் ஸ்பெசலான சின்ன வெங்காய ஊத்தாப்பம் ஆர்டர் செய்ய, அதுவும் அடுத்த கண நேரத்தில் வந்து சேர்ந்தது.சின்ன வெங்காயத்தினை அழகாய் ரவுண்ட் ரவுண்டாய் கட் பண்ணி, மெலிதாய் ஊத்தாப்பத்தில் தூவி பொன்னிறமாய் வேக வைத்து சுட சுட இலையில் வைக்கின்றனர்,இதற்கும் அந்த தேங்காய் சட்னி செம காம்பினேசன்.கார சட்னியும் செமயாக இருக்கிறது.பிறகு அந்த வெள்ளை மட்டன் குருமா…அதுவும் இதற்கு செம மேட்ச் ஆகிறது.
                      காலை வேளையில் மட்டன் சாப்ஸ் மட்டும் கிடைக்கிறது.பிறகு மீண்டும் மாலையில் தான்.நிறைய நான்வெஜ் மெனுக்கள் கிடைக்கின்றன.மாலை வேளையில் செல்லுங்கள் உங்களுக்கு நிறைய அசைவ வகைகளை உண்டுவிட்டு வரலாம்.


                       திண்டுக்கல்லில் கிட்டத்தட்ட இருவது வருடங்களுக்கும் மேலாக இந்த உணவகத்தினை நடத்தி வருகின்றனர்,திண்டுக்கல்லின் முக்கிய பிரமுகர்களான எம் எல் ஏ, எம்பி, கலெக்டர் போன்றவர்களின் பேவரைட்டாக இருக்கிறது இந்த உணவகம்.
அந்தப்பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.சுவை நன்றாகவே இருக்கிறது.விலையும் குறைவாகவே இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்.இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 20, 2018

கோவை நேரம் - வீடியோ சேனல் அறிமுகம்

வணக்கம்..
சமீபகாலங்களில் யூ டூயூப் சேனல்கள் பெருவாரியாக வெற்றி பெற்று கொண்டு வருகின்றன.எல்லாவிதமான தேவைக்கும் இந்த சேனல்கள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன.நாமளும் எவ்வளவு நாளைக்கு தான் பிளாக், பேஸ்புக் என்று அங்கேயே சுற்றிக் கொண்டு வருவது.அதான் கோவை நேரம் என்கிற பெயரிலேயே ஒரு வீடியோ சேனல் ஆரம்பித்து இருக்கின்றேன்.

   இப்போதைக்கு ஒன்றிரண்டு வீடீயோக்கள் அப்லோடிருக்கின்றேன்.இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.மிகவும் முழுமையான வீடியோக்கள் மிக விரைவில் பதிவேற்றப்படும்.
ஊர் ஊராய் சுற்றுவது, சாப்பிடுவது, குடிப்பது, சமையல் செய்வது, கோவில் அனுபவம், பயண அனுபவம் என அனைத்தும் பதிவேற்றப்படும்.அதுவரை அவ்வப்போது நமது வீடியோக்களை கண்டுகளிக்கு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வீடியோ லிங்க் இணைத்திருக்கின்றேன்.கோவை நேரம்
அப்பப்ப ஷேர் பண்ணுங்க, லைக் பண்ணுங்க..வீடியோ பதிவுகள் பிடிச்சிருந்தா....

ரொம்ப மொக்கையா இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க,குறைகளை சொல்லுங்க, நிவர்த்தி செய்துவிடுகிறேன்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்.
இன்னும் கொஞ்சம்...

Sunday, March 11, 2018

சமையல் - துப்பதிட்டு அல்லது எண்ணெயிட்டு.. படுகர் இன இனிப்பு வகை. நீலகிரி மாவட்டம்.DHUPPATHITTU - SWEET - PADUGAR SPECIAL


இனிப்பு பலகாரம்-துப்பதிட்டு அல்லது எண்ணெயிட்டு:
                 சமீபத்தில் நீலகிரியின் மலைப்பிரதேசங்களில் ஒன்றான கோத்தகிரிக்கு சென்றிருந்தேன்.அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொதுமுடி என்கிற ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு நண்பரின் அழைப்பின் பேரில் அங்கு போய் இருந்தேன்.சுற்றிலும் தேயிலைக்காடுகள்.இயற்கை அன்னை பசுமை போர்வை போர்த்தியிருந்தாலும், ஆங்காங்கே மழை இன்மை காரணமாக போர்வையில் கிழிந்து இருக்கும் பொத்தல்கள் போல காடுகள் வறண்டு கிடந்தன கான்கீரீட் காடுகள் நிறைய ஆக்கிரமித்து இருக்கின்றன.
         இருந்தாலும் நீலகிரிக்கே உண்டான மிதமான குளிரும், கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாகவே வெப்பநிலையும் இருக்கின்றன.
            படுகர் இன கோவில் திருவிழாவானது ஒவ்வொரு ஊருக்கும் பிப்ரவரி இறுதியில் இருந்து ஆரம்பிக்கிறது.மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை ஒவ்வொரு ஊரிலும்  மிக சிறப்பாக நடைபெறுகிறது.
           படுகர் இன விசேசங்களில் மிகவும் தவறாமல் இடம்பிடிப்பது உருளை மற்றும் மொச்சை கொட்டை குழம்பும், இனிப்பு வகைகளில் துப்பதிட்டு அல்லது எண்ணையிட்டு என அழைக்கப்படும் ஒரு வகை இனிப்பு பலகாரம்.இவை இரண்டும் இல்லாத விழாக்கள், விசேஷங்கள் நடைபெறுவதில்லை.


         மைதா மாவு மற்றும் சர்க்கரை  கொஞ்சம் சோடா உப்பு சேர்த்து இந்த பலகாரம் தயாரிக்கப்படுகிறது. துப்பம் என்றால் நெய்.நெய்யில் பொரித்து எடுப்பதால் துப்பதிட்டு என்று பெயர்.இப்பொழுது நெய்க்கு பதிலாக எண்ணையில் பொரிப்பதால் எண்ணையிட்டு என்றும் அழைக்கின்றனர்.
               மூன்று பங்கு மைதா மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து, கூட கொஞ்சம் சோடா உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து பூரி மாவு பதத்தில் பிசைகின்றனர்.இந்த மாவு பிசையும் பதத்தில் தான் இந்த பலகாரத்தின் மென்மை இருக்கிறது.நன்கு பிசைந்து ஊறவைக்கின்றனர்.பின்னர் தேவையான அளவில் உருண்டை பிடித்து கையினாலே தட்டி அகலமாக்கி அப்படியே எண்ணையில் பொரிக்கின்றனர்.பூரி போல் உப்பி வருகிறது,இருபுறமும் பதமாய் வெந்தபின் எடுத்து தட்டில் போடுகின்றனர்.               இந்த பலகாரத்தினை சுட சுட பிய்க்கும் போது பறக்கும் ஆவியில் ஒளிந்திருக்கும் வெந்த மாவின் வாசம் நம் நாசியை தொடுகிறது.உள்ளே மென்மையாய் இருக்கிறது.சுவைக்கும் போது இனிப்பு சுவையோடு மிக சாப்ட்டாய் உள்ளிறங்குகிறது.மைதாவிற்கே உண்டான இழுவைத் தன்மை இந்த பலகாரத்தில் குறைவாக இருக்கிறது.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கிறது.மொச்சை கொட்டை குழம்போடு இதனை சேர்த்து சாப்பிடும் போது கூடுதலாக இன்னொரு சுவை கிடைக்கிறது.இனிப்பும் காரமும் இணைந்து புதியதொரு சுவையை தருகிறது.ஊருக்கு வரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் இந்த பலகாரத்தினை தந்து உபசரிக்கின்றனர்.
                வேறு எங்கும் கிடைக்காத இந்த இனிப்பு வகை படுகர் இன மக்களிடையே மிக பிரசித்தம்.இந்த முறை  எங்களுக்கு சுவைக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...