கேரளா சென்றுவிட்டு
தமிழ்நாட்டுக்குள் களியக்காவிளை வழியாக உள்நுழைந்தோம்.அங்கிருந்து மார்த்தாண்டம் வழியாக
நாகர்கோவில் சென்றுகொண்டிருக்கும் போது தான் குழித்துறை அருகில் தேங்காய்பட்டிணம் என்கிற
ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி துறைமுகத்தினை பார்த்துவிட்டு வருகையில் மதியம்
ஆகி இருக்க, அங்கேயே புதுக்கடை என்கிற இடத்தில் ஒரு ஹோட்டலில் பிரியாணி நன்றாக இருக்கும்
என சொல்ல, அருகிலிருந்த உள்ளூர்க்கார நண்பர் கருங்கல் என்கிற ஊரில் பிரியாணி நன்றாக
இருக்கும் அங்கே செல்லுங்கள் என வழியனுப்பி வைத்தார்.
புதுக்கடையில்
இருந்து ஒரு பத்து நிமிட பயணத்தில் கருங்கல் என்கிற ஊரை அடைந்தோம்.சின்ன ஊர்தான்.நாகர்கோவிலில்
இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நின்று செல்லக்கூடிய ஒரு பேருந்து நிலையம் அருகில்
இந்த ஹோட்டலைக் கண்டோம்.முகப்பில் ஒரு சின்ன ஸ்வீட் ஸ்டால் போல இருக்கிறது.ஆனால் கடைக்கு
உள்ளே நுழைந்தால் மிக நீண்டு பரந்து இருக்கிறது. யூனிபார்ம் போட்ட சர்வர்கள் நிறைய
பேர்கள் இருக்க, ஒவ்வொரு டேபிளிலும் குடும்பம் குடும்பமாய் நிறைந்திருந்தனர்.இண்டீரியர் மிக மெலிதாய் கண்ணை கவரும் வகையில் இருக்க, ஒருபுறத்தில் பிரியாணி
அண்டாக்கள் சுடச்சுட இருக்க, அதிலிருந்து ஆவிபறக்க சூடாய் பிரியாணியை தட்டுக்களில்
நிரப்பி டேபிளுக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
நாங்கள் உள்நுழைந்ததும்
வரவேற்ற சர்வர் டேபிளில் அமரவைத்து ஆர்டரை கேட்க, இங்கு என்ன ஸ்பெசலோ அதை கொண்டு வாருங்கள்
என சொல்ல, பிரியாணியில் சிக்கன், மட்டன் இருக்கிறது, எது வேண்டும் என கேட்க, மட்டனை
சொன்னோம்.
மட்டன் பிரியாணி பின்னே வர மணம் முன்னே வந்து ஆளைத்தூக்கியது.கூடவே மட்டன் கிரேவியும் சில பல துண்டுகளுடன் வந்தது.கேரள தமிழ்நாடு
கூட்டு பிரியாணிபோல் வெள்ளை நிற பாசிமதி அரிசியுடன், கொஞ்சம் பொரித்த வெங்காயம் துண்டுகள்
மேலே பரவியும், ஓரிரு கலர்களுடன் பாசுமதி அரிசி மணம் மிகுந்து இருக்க, அவித்த முட்டை ஒன்றும் பிரியாணியில் ஒளிந்திருக்க, பிரியாணியின்
மத்தியில் மறைந்திருந்த மட்டன் துண்டுகள் எங்கள் கைவிரல்களை எதிர்பார்த்து காத்திருக்க, மணம் நாசியை
துளைக்க, நாவின் சுவை மொட்டுகள் விரிய ஆரம்பித்தன.
நாங்கள் எங்கள்
வேட்டையை தொடர ஆரம்பித்தோம்.கொஞ்சம் விள்ளல் எடுத்து வாயில் போட, அப்படியே பிரியாணியின் மணம்
சுவை நம்மை ஆட்கொண்டது.கைகளில் அதன் மணம் ஏற ஆரம்பித்தது.நாவின் சுவை நரம்புகள் நாட்டியம்
ஆட ஆரம்பித்தது.ஐநா சபையில் ஆடிய ஐஸ்வர்யா வின் நடனம் போல் இல்லாமல் மேடை முழுக்க பரவி
ஆடும் நம்ம ஊர் குத்தாட்டம் போல் ஆடத்துவங்கின.
பஞ்சு போல் வெந்திருந்த
மட்டன் துண்டுகள் இன்னும் சுவையை கூட்டி நாவின் நரம்புகளின் ஆட்டத்தினை உசுப்பேத்தியது.
கைகளில் மட்டன்
சுவையின் மணமும், பிரியாணியின் மசாலா மணமும் மிகவும் ஏறி இருந்தது.பரபரவென கையும் வாயும்
இயங்க, தட்டிலிருந்த பிரியாணி மளமளவென காலியாகிக் கொண்டிருந்தது.அவ்வப்போது பிரியாணியின்
இலவச இணைப்பாய் வந்த மட்டன் கிரேவி, கொழுப்பு மிகுந்த கறியுடன் நன்கு சுவையாய் இருக்க,
அதுவும் ஒரு சேர காலியாகிக் கொண்டிருந்தது.
கை கழுவிய பின்னரும்,
கைகளில் வாசம் இருக்க, சுவையான பிரியாணியை சுவைத்த திருப்தி ஏற்பட்டது.
குடும்பம் குடும்பமாய்
மக்கள் உள்ளே நுழைவதும், திருப்தியாய் உண்ட பின் வெளியேறுவதும் இயல்பாய் நடந்து கொண்டிருந்தது.
ஞாயிறு ஆதலால்
செம கூட்டம் வேறு.பக்கத்திலுள்ள ஊர்க்காரர்கள் சமைக்க மாட்டார்கள் போல, மலையாளம் கலந்த
தமிழில் சம்சாரித்தபடியே குடும்பம் குடும்பமாய் வந்து கொண்டிருந்தனர்.
நாங்கள் திருப்தியாய்
உண்டு முடித்து பில்லை செட்டில் செய்து விட்டு மனதிருப்தியுடன் வெளியேறினோம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்