Sunday, September 13, 2015

கரம் – 19 ( 13.9.2015)

கரம் - பல்சுவை செய்திகளின் தொகுப்பு
பார்த்த படம்:
ரகஸ்யா.ஹிந்தி திரைப்படம்.
செம திரில்லர்.படம் ஆரம்பித்ததில் இருந்து கடைசி வரை நம்மால் யூகிக்க முடியாதபடி செம திரில்லர் மூவி.ஒரு டாக்டர் தம்பதிகளின் ஒரே மகள் ஆயிஷா.அவர்களின் வீட்டில் ஒரு இரவில் கொலையுண்டு கிடக்கிறாள்.சாட்சிகள் அடிப்படையில் அவளது தந்தையை கைது செய்கின்றனர்.சிபிஐ அதிகாரி வசம் இந்த வழக்கு வர, இந்த கொலையை  செய்தவர் யார், எதற்காக, ஏன் என்பதை மிக விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் படம்.டாக்டராக ஆசிஷ் வித்யார்த்தி, சிபிஐ அதிகாரியாக கே.கே மேனன், ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.சூப்பர் படம்..கண்டிப்பா பாருங்க..உங்களுக்கும் பிடிக்கும்....
************************
படித்த பு(து)த்தகம்:
குற்றப்பரம்பரை.
நமக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறதால் படிக்க அதிகம் நேரம் கிடைப்பதில்லை.இருந்தாலும் ஒரு நாவலை எடுத்தால் குறைந்தபட்சம் அது படித்து முடிக்க ஒரு மாதம் மேல் ஆகிவிடும்.ஒரு சில நாவல்கள் மட்டுமே விதிவிலக்கு.அப்படித்தான் இந்த குற்றப்பரம்பரை நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.நாவலின் விறுவிறுப்பு காரணமாக சென்னை டூ திருப்பத்தூர் பயணத்தில், அந்த நேரத்தில் அதை முடித்து விட்டேன். அதற்கு காரணம் நாவலின் விறுவிறுப்புதான்.காதல் அன்பு, வீரம், துரோகம் என எல்லாமுமாக இருந்தது தான் நாவலின் சுவாரஸ்யமே.
அவ்வப்போது காவல் கோட்டம் நாவலை ஞாபகப்படுத்தினாலும், நாவலின் தனித்தன்மையால் வேறுபட்ட அனுபவத்தினை தருகிறது. நாவலில் அயர்ச்சியைத் தரக்கூடிய பகுதியான ஹசார்தினார், நாகமுனி, வஜ்ராயினி, மான், வைரம் என்கிற அமானுஷ்ய பகுதியை தூக்கியிருந்தால் அசைக்க இயலாத இடத்தினை பெற்றிருக்கும்.அந்த பகுதிக்குப் பதில் கொம்பூதிகளின் இன்னுமொரு களவுத்திறமையை சொல்லியிருக்கலாம்.அல்லது வேயன்னாவின் திறமைகளில், நற்குணங்களில், வீர தீரங்களில் ஏதாவது சொல்லியிருக்கலாம்.சேது மற்றும் ஆங்கிலேய பெற்றோர்களும் மனதில் ஒட்டவில்லை.மற்றபடி நாவலின் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.
ஆசிரியர் – வேல ராமமூர்த்தி, விலை – ரூ.400 பக்கம் - 448 பதிப்பகம் – டிஸ்கவரி புக் பேலஸ்
******************************
காட்சி:

திருப்பத்தூர் பஸ்ஸ்டாண்டு பக்கத்துல நின்னுகிட்டு இருக்கும் போது ஒருவர் தன் தலையில் அவரைவிட உயரமான அளவிற்கு காலி பிளாஸ்டிக் பாக்ஸ்களை அடுக்கி சுமந்து கொண்டதைப் பார்க்கும் போது எப்படி அதை இறக்கி வைப்பார் என்கிற ஆச்சர்யம் வந்து செல்கிறது.
*****************************
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...