Monday, July 7, 2014

ஏர்கன் (AIR GUN) துப்பாக்கி - மாஸ்டர் ஐ ( Dominant or Master Eye )

குறிப்பு : ஏர்கன் துப்பாக்கிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.ஒரு துப்பாக்கி வாங்க போனதோடு அந்த கடையின் சகவாசம் முடிந்தது,துப்பாக்கி வேண்டுபவர்கள் பதிவின் கீழே கொடுத்திருக்கும் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்து கொள்ளலாம்.பதிவு எழுதிய எனக்கு போன் செய்ய வேண்டாம்.நன்றி.                

கரூர் அருகே புகழூரில்  EID PARRY INDIA  லிமிடெட்டின் சர்க்கரை ஆலை இருக்கிறது.அருகிலிருக்கும் ஒரு ஊரின் பெயர் செம்படாபாளையம்.கிராமம்.என் அன்னையின் பிறந்த ஊர்.அங்கு என் தாத்தாவின் தோட்டம் இருக்கிறது.பால்யகால வயதில் எங்களது பள்ளி விடுமுறைகள் அனைத்தும் அங்கு தான் கழிந்திருக்கின்றன.சுற்றிலும் வேலியிடப்பட்ட தோட்டத்தின் அருகிலேயே ஓடும் வாங்கல் வாய்க்கால், தோட்டத்தில் இருக்கிற பெரிய கிணறும் ஒரு சில மீட்டர் தூரத்தில் பாய்கின்ற காவிரி ஆறும் எங்களுடைய மீன்பிடி வேட்கையை தணித்து கொண்டிருக்கும்.தோட்டத்தில் பறக்கிற பறவையினங்கள் எங்களின் கவட்டை வில்லுக்கு பலியாகி எங்களுக்கு விருந்தாகி இருக்கும். தென்னையில் கட்டப்பட்டிருக்கும் கள்ளு எங்களின் தாகத்தினை தீர்த்துக் கொண்டிருக்கும்.நெல் வயல் எலிகள் கள்ளுக்கு மேட்சாய் வறுக்கப்பட்டு தொட்டுக்கொள்ளப்பட்டிருக்கும்.அவ்வப்போது வயலுக்கு நீர்பாய்ச்சுவது, களை எடுப்பது, ஆடு மேய்ப்பது வேலிகளில் ஓணான் பிடிப்பது, மரம் ஏறுவது என சிறுவயதின் விடுமுறைக்காலங்களில் தோட்டமே சொர்க்கலோகமாக இருந்தது.
             காலம் உருண்டோட தொடர்புகள் சிறிது சிறிதாக விலகி எப்பவாவது விசேசங்களுக்கு மட்டும் அங்கு செல்வது வாடிக்கையாகிப் போனது.காலப்போக்கில் தாத்தா, அம்மாச்சி இருவரும் காலமாகிவிட தாய்மாமாவின் பராமரிப்பில் தோட்டம் இருந்து வந்தது.சமீபத்தில் அவரும் இறந்துவிட பொறுப்புகள் மாமனின் பையனிடம் வந்து சேர, சிறுவயதிலேயே வேட்டையில் ஈடுபட்டிருந்த என் மாப்பிள்ளை இப்போது முழு நேர விவசாயி ஆகிவிட்டான்.மேலும் தோட்டத்தில் புறா, கோழி, ஆடு, மாடு என வளர்த்தி ஒரு லாபமிக்க விவசாயியாக மாறிவிட்டான். சமீபத்தில் கோவை வந்திருந்தான்.எதற்காக என்றால் ஏர்கன் (AIRGUN) வாங்குவதற்காகவாம்.தோட்டத்தில் வளர்கிற புறாக்கள் அடிக்கடி கம்பி நீட்டிவிடுவதால் அதை அடிப்பதற்கு தேவைப்படும் என்பதற்காக.
             கோவை வந்த அவனை சுந்தராபுரத்தில் இருக்கிற FIRE ARMS என்கிற கடைக்கு கூட்டிச்சென்றேன்.கடையின் தோற்றமே மிக அழகாய் இருந்தது.அடுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் பில்லா படத்தினை ஞாபகப்படுத்தின.பழைய காலத்து துப்பாக்கிகள் பளபளப்புடன் போட்டோ பிரேமில் அழகாய் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.துப்பாக்கி குண்டுகள் ரகம் ரகமாய் ஷோகேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.              அப்போது ஒரு கனத்த நீண்டகுழல் துப்பாக்கியை தூக்கி வந்த ஒரு வாடிக்கையாளர் டேபிளின் மீது வைக்க எங்கள் முன்னால் அது பிரம்மாண்டமாய் இருந்தது.சின்ன பேட்டரி போன்ற குண்டினை போடக்கூடிய ரகம் அது.ராஜேஷ்குமார் நாவல்களிலும், சினிமாக்களிலும் மட்டுமே துப்பாக்கிகளை பார்த்து இருக்கிறேன்.மிக அருகில் இருக்க எடுத்து தூக்கிப்பார்க்கிறேன்...செம கனம்....தற்பாதுகாப்புக்காகவும் வேட்டைக்காகவும் வாங்கிய அதரபழசு வகையை சார்ந்தது.ஆனாலும் துப்பாக்கி அது.
              அதே போல் இன்னொருவர்...நூறாண்டு பழமை வாய்ந்த ரிவால்வர் அது.ஐந்து புல்லட் சேம்பர் கொண்ட ரகம்.சின்னது தான்.ஆனால் கனமோ அதிகம்.அதை வாங்கி ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.
              இப்பொழுது அரசாங்கம் துப்பாக்கிகளுக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. சாமானியன் எவரும் அதை வாங்கிட முடியாது.பெரும் கோடிஸ்வரர் கூட வாங்க விருப்பப்பட்டால் அதிக பிரயத்தனம் செய்யவேண்டி இருக்கும். அதனால்தான் இந்தக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான துப்பாக்கிகளை கொண்டு வருகிறார்கள்.
              ஏர்கன் துப்பாக்கிகள் ஆபத்தில்லாத லைசன்ஸ் தேவைப்படாத வகையைச் சேர்ந்தவை.துப்பாக்கி சுடும் பயிற்சி பெற இந்த வகை துப்பாக்கிகள் பயன்படுகின்றன.ஆனாலும் நம்ம ஆட்கள் வேட்டைக்காக இதனை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.மரம் மற்றும் ஃபைபரினால் ஆன துப்பாக்கிகள் தான் இருக்கின்றன.ஏர்கன் துப்பாக்கியை வாங்க முடிவு செய்து அதை பரிட்சித்துப்பார்க்க ஆரம்பித்தோம்.
              கடையின் உரிமையாளரான திரு வெங்கடேஷ் அவர்கள் துப்பாக்கியின் குண்டு செல்லும் தூரம், எவ்விதம் குண்டு போடுவது, எப்படி பராமரிப்பது போன்ற வழிமுறைகளையும் துப்பாக்கியை எவ்வாறு பிடிப்பது, பார்வையை எப்படி பொருளின் மீது குவிப்பது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியில் புல்லட்டை (pellet) நிரப்பி டர்ட்(DART) போர்டினை குறி பார்த்து சுட்டார்.ஒரு சில அட்ஜஸ்மெண்ட்கள் செய்து விட்டு மீண்டும் சுட்டார்.சரியான இடத்தினை துளைத்தது.
          அடுத்து எங்களின் முறை…. இதுவரைக்கும் துப்பாக்கியை தொட்டது கூட இல்லை. (ஏர்கன்னாக இருந்தாலும்) நரிக்குறவர் துப்பாக்கியில் குண்டு போடும் போது அருகில் இருந்து பார்த்தது. இப்போது தான் தூக்கி தோளில் வைக்கிறேன்.ஆப்ஜெக்டை(OBJECT) பாருங்கள் துப்பாக்கி குழல் வழியே என்கிறார்.நானும் பார்க்கிறேன் ஒன்றும் புலப்படவில்லை.எப்பவும் போல இடது கண்ணை மூடிவிட்டு குறி பார்க்கிறேன்.அந்த குழலில் பொருத்தப்பட்ட துளையில் ஆப்ஜெக்ட் அகப்படவே இல்லை.சார்...போர்ட் தெரியுது...ஆனா இலக்கு ஒண்ணுமே தெரியலை என்கிறேன்.


உடனே ஒரு கேள்வி கேட்டார்...
உங்களோட மாஸ்டர் ஐ எது என்று ?
இருவரும் பேந்த பேந்த முழித்தோம்.பின் அவரே விளக்க ஆரம்பித்தார்.ஒவ்வொருவருக்கும் ஒரு கண் மட்டுமே மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும்.அப்படிப்பட்ட கண் தான் மாஸ்டர் ஐ.(Dominant eye )
         ஒரு பொருளை துல்லியமாக குறிபார்த்து சுட மாஸ்டர் ஐ உதவி செய்கிறது.இடதுகண் மாஸ்டர் ஐ ஆக இருக்கும் பட்சத்தில் அவர் இடதுகை அவருக்கு நல்ல பலமுள்ளதாக இருக்கும்.இடது கை பழக்கம் அவருக்கு நல்ல பலனைத்தரும்.அதுபோலவே வலது கண் மாஸ்டர் ஐ யாக இருந்தால் வலது கை நல்ல பலனைத்தரும்.
எப்படி கண்டறிவது?
           உங்கள் ஆட்காட்டி விரலை தூரத்தில் ஏதாவது ஒரு பொருளின்மீது மையப்படுத்துங்கள்.இரண்டு கண்களாலும் பார்க்கும் போது ஆட்காட்டிவிரல் அந்தப்பொருளின் மீது மையமாக இருக்கும்.
இப்பொழுது வலது கண்ணை மூடிவிட்டு இடதுகண்ணால் பார்க்கவும்.பின் இடது கண்ணை மூடிவிட்டு வலதுகண்ணால் பார்க்கவும்.தொடர்ந்து செய்யவும்.எப்பொழுது அந்தப்பொருளின் மீது இருக்கிற ஆட்காட்டி விரல் நகராமல் இருக்கிறதோ அந்த கண் தான் மாஸ்டர் ஐ.

தெளிவா சொல்லணும்னா Master Eye  Dominant Eye இங்க பாருங்க

                 செய்து பார்த்ததில் எனக்கு இடது கண் தான் மாஸ்டர் ஐ.மீண்டும் துப்பாக்கியை ஏந்தினேன்.குண்டினை நிரப்பினேன்.கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது.இலக்கினை குறிபார்த்தேன்.போர்டில் இருந்த வட்டம் மட்டுமே தெரிந்தது.குழலில் இருக்கிற துளையில் இலக்கு தெளிவாக இருக்க, ட்ரிக்கரை அழுத்தினேன்.சிறு சத்தம் தான்.தோட்டா சீறிப்பாய்ந்தது.கணப்பொழுதில் இலக்கை விட்டுவிட்டு அருகில் குண்டுபாய்ந்தது.
முதல்முறைதான்...
இனி போகப்போக சரியாகிவிடும்.

ஏர்கன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
திரு.வெங்கடாசலம் : 0422 2674685; 2672251; 98422 22540

வாங்குறவங்க...அப்படியே நம்ம பேரை சொல்லுங்க....அப்பத்தான் நமக்கு வரவேண்டியது வந்து சேரும்.....ஹிஹிஹிஹி...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

12 comments:

 1. மாஸ்டர் ஐ கண்டுபிடித்து விட்டேன்...

  அடுத்தமுறை வரும் போது கொண்டு வாங்க... பார்ப்போம்...!

  ReplyDelete
 2. Crosman Air Gun Pistols is one of the best pistol. It's looks awesome and smart. IF you want to buy this pistol you can visit our website http://www.bestairriflereview.net/ and see more and choose the best air rifles from our website.

  ReplyDelete
 3. ஏர் கன்னின் விலை என்ன சகோதரா

  ReplyDelete
  Replies
  1. ரூ 5000 முதல் 1 லட்சத்திற்கும் மேல் இருக்கிறது

   Delete
  2. Pricihole vx 100 Spartan 7000 ரூபாய் அருமையான பட்ஜட் விலை துப்பாய்க்கி

   Delete
 4. Air gun வாங்க license தேவையா...?? எங்கே கிடைக்கும்..விலை..??

  ReplyDelete
  Replies
  1. ஏர்கன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
   திரு.வெங்கடாசலம் : 0422 2674685; 2672251; 98422 22540

   Delete
 5. ஏர் கன் குண்டு உங்களிடம் கிடைக்குமா சகோதரா

  ReplyDelete
 6. நானும் செம்படாபாளையம் தான் பா

  ReplyDelete
 7. Sdb 35 model என்ன விலை

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....