Friday, August 18, 2017

கரம் - 29

படித்தது :
இப்போதெல்லாம் கவிதை, இலக்கியம் நாவல், வரலாறு இப்படி இருக்கிற புத்தகங்களை படிச்சா செம போர் அடிக்குது.ரசனை மாறி விட்டது என்று நினைக்கிறேன்.சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் வாங்கின கொலை, கொள்ளை, மனதை பதைபதைக்க செய்யும் கொடூர செயல்கள் நிறைந்த வழக்குகளின் புத்தகம் படிச்சேன். செம விறுவிறுப்பு, திரில்லிங், ஆச்சர்யம், வியப்பு, பயம், கொஞ்சம் அசூயை  என எல்லா உணர்வுகளும் கலந்து கட்டி நாடி நரம்புகளை அசைக்கின்றன.கிரைம் மன்னன் ராஜேஷ்குமார் நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்ததைப் போல் இருக்கிறது இந்த புத்தகம்.வைதேகி பாலாஜி எழுதின கொடூரக் கொலை வழக்குகள்.

பிடித்தது:
அதிகம் அசைவம் சாப்பிட்டாலும் அவ்வப்போது ஏதோ ஒரு இனிப்பு நம்மை ஆட்கொண்டுவிடும்.ஆனால் எப்போதும் என்னை வசீகரிக்க கூடிய இனிப்பு என்றால் அது ரவா கேசரி தான்.மாதத்திற்கு இரு தடவை வீட்டில் இடம் பெற்று விடும்.செய்வதும் எளிது என்பதால் உடனடி இனிப்பு பலகாரம் அதுதான்.கேசரியில் தூவப்பட்டிருக்கும் நெய்யில் வறுத்த முந்திரிகள் வாயில் கடிபடும் போது அதன் சுவை இருக்கிறதே.ஆஹா ..அற்புதம்
தித்திப்பு...கேசரியின் நிறமும், நெய்யின் மணமும் நிச்சயம் மனதை உருக்கும்.வாயில் உமிழ்நீரை சுரக்கும்.கேசரியின் ஒவ்வொரு ரவையும் உதிரி உதிரியாக சாப்பிட சாப்பிட சுவையாக இருக்கும்.ஏர்செல் ஆபிஸ் பக்கத்தில் இருக்கிற சாய்ராம் பவனில் கேசரியின் சுவை மிக டேஸ்டாக இருக்கும்.

சமோசா :
மாலை வேளைகளில் சுடச்சுட சமோசா சாப்பிட எப்பொழுதும் பிடிக்கும்.மெலிதான் மைதா பேப்பரை முக்கோண வடிவில் மடித்து அதில்
காரமிட்டு வதக்கிய வெங்காயம் மட்டும் வைத்து எண்ணையில் பொறித்து தரப்படும் சமோசாதான் எங்கள் ஏரியாவில் கிடைக்கும்.நன்கு பொறிந்தவுடன்
மொறுமொறுப்பாலும் வெங்காயம் வெந்ததினாலும்  ஏற்படும் மணத்திலேயே நம்முடைய பசியை அதிகரிக்க செய்யும்.வாங்கி ஒரு கடி கடித்தால் போதும்
ஆவியுடன் மணமும் சுவையும் வெளிவரும்.ஒரு காலத்தில் கல்பனா தியேட்டர் இடைவேளையின் போது வாங்கி சாப்பிடுவோம்.இப்போது ஞாயிறு தோறும் கூடும் சந்தையில் சுடச் சுடச் சமோசா சுட்டுக்கொண்டிருப்பார்கள் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகும் போது மூக்கை துளைக்கும்.எப்பவாது ஒரு முறை வாங்கி சாப்பிடுவோம்.இப்பொழுது கவுண்டம்பாளையத்தில் டிவிஎஸ் நகர் செல்லும் வழியில் பாலம் தாண்டி இடது புறம் ஒருவர் சின்னதாய் கடை ஆரம்பித்து இருக்கிறார்.மாலை வேளைகளில் சுடச்சுட சமோசா போட்டுக்கொண்டிருப்பார்.உருளைக்கிழங்கு மசாலா, வெஜிடபிள் சமோசா மற்றும் மட்டன் கைமா சமோசா என மூன்று வெரைட்டிகளில் போட்டுக்கொண்டிருப்பார்.எப்பவும் போல சமோசாவிற்கென்று உள்ள சுவை இங்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.அளவும் பெரிதாகவே இருக்கிறது.சாப்பிடவும் நன்றாக இருக்கிறது,விலை 7 ரூபாய் மட்டன் 10 ரூபாய்.பீஃப் இறைச்சி இல்லை.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, August 11, 2017

கோவை மெஸ் - செல்லப்பா ஹோட்டல், பரமத்தி ரோடு, நாமக்கல்.

                 பகல்வேளையில் பகார்டியின் துணை கொண்டு சுற்றித் திரிந்ததாலும், மதிய வேளை முடிகின்ற தருவாயில் இருந்ததாலும், வயிற்றுக்கு உணவிட வேண்டுமே என்கிற அக்கறையினாலும், சாப்பிடுகின்ற உணவு நல்ல காரஞ்சாரமாக இருக்க வேண்டும், அதுவும் பகார்டிக்கு இன்னும் சாதகமாய் அமைய வேண்டும் என தெளிவாய் சொல்லிவிட்டதால் நம் சகலபாடிகள் செல்லப்பா ஹோட்டலுக்கு செல்லலாம், அங்கு செமயாக இருக்கும் என்று முடிவெடுத்ததால் பரமத்தி சாலையில் உள்ள செல்லப்பா ஹோட்டலுக்கு சென்றோம்.
                       ஹோட்டலானது மதிய நேர பரபரப்பில் இருந்து விலகி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதே சமயத்தில் மாலை நேரத்திற்கான தயாரிப்புகள் பலமாய் இருக்கவும், அந்த நேரத்தில் நாங்கள் அங்கே உட்புகுந்தோம்.சின்ன ஹோட்டல் தான்.ஒரு சிறு ஊரில் வைக்கப்பட்டிருக்கும் ஹோட்டல் போலதான் எந்தவித ஆடம்பர விசயங்களும் இல்லாமல், ஒரே ஒரு பிளக்ஸ் போர்டு மட்டும் தான் இந்த ஹோட்டலின் அடையாளம்.
 ஓரிருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, நாங்களும் அங்கே ஆஜரானோம்.அனைத்து கறிக்குழம்புகளும் குண்டாக்களில் வைக்கப்பட்டு நம்மை வரவேற்றன, கூடவே மணமும்.புரோட்டாக்களும் ரெடியாகிக் கொண்டிருந்தன.


           கூட வந்தவர்கள் கொஞ்சம் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் என்னவோ அங்கே வழக்கம் போலவே கொஞ்சம்  கூடுதல் கவனிப்பு ஏற்பட்டது எங்களுக்கு.வந்து கேட்ட பணியாளரிடம் என்ன இருக்கு என்று வினவவும், வழக்கம் போலவே ஒப்புவித்தார்.சுடச்சுட தயாராகி இருக்கும் நாட்டுக்கோழி வறுவல், காடை வறுவல், புறா வறுவல் என அடுக்கவும், அனைத்திலும் ஒவ்வொரு பிளேட் என சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து சேர்ந்தது.
                      மிளகு தூவி, நன்கு தோசைக்கல்லில் பிரட்டி சூடாய் வாழை இலையில் வைத்தபோது இலை பொசுங்கி நல் மணத்தினை தந்தது. ஒவ்வொன்றும் செம டேஸ்ட்.புறா மற்றும் காடைகளில் எலும்புதான் இருக்கும்.எங்காவது எலும்புகளில் கொஞ்சம் புஷ்டியாய் சதை இருக்கும்.ஆனால் நன்கு மசாலாவில் வெந்து, உப்பு, காரம் என அளவாய் இருக்கும் போதும், பின் தனியாய் தோசைக்கல்லில் வெங்காயம், கறிவேப்பிலை, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய்யோடு பிரட்டப்பட்டிருக்கும் போது அதன் சுவை தனித்து தெரியும்.எலும்போடு சதையை சுவைக்கும் போது செம ருசியாய் இருக்கும்.மெலிதான எலும்புகள் பற்களில் கடிபடும் போது ஏற்படுகிற சுவை இருக்கிறதே…ஆஹா அது தனி இன்பம்.

              காடை, புறா, நாட்டுக்கோழி என எதையும் மிச்சம் வைக்கவில்லை.அனைத்தின் ருசியும் எங்களை மயக்கி இருந்ததால் மீண்டுமொருமுறை வரிசையாய் ஆர்டர் செய்து காலி செய்தோம்.
புரோட்டா..நன்கு மொறுகலாக வேண்டும் என்று சொல்லிவிட்டதால், மொறு மொறு வென்று கொண்டு வைத்தனர்.செம டேஸ்ட்.அந்த புரோட்டாவுக்கு கொடுத்த திக்கான குழம்பு செம காம்பினேசன்.தேங்காய் போட்டு வைக்கப்பட்டிருந்த மட்டன் குழம்பு செம அருமை.புரோட்டாவை பிச்சி போட்டு, குழம்பை நிறைய ஊத்தி பிரட்டி, ஊறவைத்து சாப்பிடுவது ஒரு வகை.மொறுகலான புரோட்டா துண்டை கெட்டியான குழம்பில் தொட்டு மொறு மொறுவென சாப்பிடுவது இன்னொரு வகை.இரண்டுமே செம தான்.

                   செல்லப்பா ஹோட்டலில் மொறுகலான புரோட்டாவுக்கு திக்கான குழம்பு செம டேஸ்ட்.இரண்டு மொறு மொறு புரோட்டாக்களும், குழம்பும் ஆசை தீர உள்ளே சென்றன.திருப்தியாய் வெளிவந்தோம்.விலையும் குறைவுதான்.டேஸ்ட் மிக மிக அதிகம்.
சேலம் பகுதிகளில் கொஞ்சம் காரம் அதிகமாகவே இருக்கும்.ஆனால்                   டேஸ்ட் செமயாக இருக்கும்.நாமக்கல்லில் செல்லப்பா நன்கு  ருசியுடன், அளவான காரத்துடன் இருப்பது செம.
                கண்டிப்பா அந்தப்பக்கம் போனீங்கன்னா காடை புறா, நாட்டுக்கோழி, மொறுகலான புரோட்டா, திக்கான மட்டன் குழம்பினை மிஸ் பண்ணிடாதீங்க.
               நாமக்கல் டூ பரமத்தி ரோட்டில் மின்வாரியத்தினை தாண்டி இடது புறம் இருக்கிறது

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, August 7, 2017

கோவை மெஸ் - ஹைதராபாத் உணவுகள் – ஒரு பார்வை - பகுதி 2


மசாலா தோசை
ஹைதராபாத்தில் எங்கு திரும்பினாலும் சாலை ஓர கடைகளே..பானி பூரி முதல் தோசைக்கடை வரை நிறைய இருக்கின்றன.ஹைதையின் இன்னுமொரு சிறப்பு வாய்ந்த உணவு மசாலா தோசை.பெரும்பாலான கடைகளில் இந்த மசாலா தோசைக்கென்றே கூட்டம் கூடுகிறது. சூடான கல்லில், தோசை மாவினை ஊற்றி, அதில் ரவா கிச்சடியை வைத்து பின் ஒரு வித தக்காளி சட்னி ஊற்றி, பொடியாய் நறுக்கப்பட்ட வெங்காயத்தினை தூவி பின் தோசையில் அனைத்தும் தடவி பின் உருளைக்கிழங்கு மசாலா போட்டு அதையும் தடவி பின் பொடி போட்டு  அவ்வப்போது நெய் ஊற்றி, தோசையை முறுகலாய் பொன்னிறமாய் திருப்பி மடித்து,  அதை இரண்டாய் கட் பண்ணி சுடச்சுடச் தட்டில் வைத்து தருகின்றனர்.அதனுடன் தேங்காய் சட்னியும், தக்காளி சட்னியும் ஊற்றி தருகின்றன.சூடான தோசையை ஒரு விள்ளல் பிய்த்து தேங்காய் சட்னியில் கொஞ்சமாய் நனைத்து வாயில் போட்டால் அதன் சுவை அப்படியே அள்ளுகிறது.நாவின் நரம்புகள் புதுவித சுவையை உணர்ந்த சந்தோசம் நம் முகத்தில் தெரிகிறது.தோசையின் முறுகலும், உள்ளே தடவப்பட்ட மசாலாவும் மிகுந்த மணத்தினையும் சுவையையும் தருகிறது.சட்னியின் சுவையோடு தோசையும் இணைந்து இரண்டும் செம காம்பினேஷனை தருகிறது.


ஹைதராபாத் போனால் இந்த மசாலா தோசையை மறந்து விடாதீர்கள்.இரவு நேரக்கடைகளிலும், காலை கையேந்திபவன்களிலும் சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள்.அதன் சுவையை உணர்வீர்கள்...

ஜுன்னு ( JUNNU ) - பால் புட்டிங்  
பாலில் செய்யக்கூடிய ஒரு உணவுப்பொருள் இந்த ஜுன்னு எனப்படும் பால் புட்டிங்.கன்னடாவில் ஜுன்னு எனவும், வட இந்தியாவில் கார்வாஸ் எனவும் அழைக்கப்படுகிறது.ஹைதையில் இந்த உணவுப்பொருளும் பிரசித்தம். ஹைதையில் மனிகொண்டா என்கிற இடத்தில் இந்த ஜுன்னுவை வாங்கி சாப்பிட்டேன்.பாலில் மிளகு ஏலக்காய், வெல்லம் போட்டு நன்கு வேகவைக்கப்பட்டு மென்மையாய் சுவைபட செய்யப்பட்டிருக்கும் இந்த ஜுன்னு சாப்பிட நல்ல சுவையை தந்தது.சீம்பாலின் சுவை இதில் இல்லை.ஆனாலும் மிக நன்றாக இருக்கிறது.மேலே தூவப்பட்டிருக்கும் ஏலக்காயின் மறுமணத்துடன் வெல்லத்தின் சுவையுடனும், மிளகின் காரத்துடனும் ஒரு வித சுவையைத்  தருகிறது.


தெலுங்கானா சிக்கன்
பிரியாணிக்கு அடுத்தபடியாய் அசைவங்களில் அதிகம் இடம்பிடிப்பது தெலுங்கானா சிக்கன் தான்.ஏற்கனவே ஆந்திரா என்றால் காரம்.இந்த சிக்கன் காரமோ காரம்.செம...ஒவ்வொரு சிக்கன் துண்டுகளும் நன்றாய் மசாலாவில் பிரட்டப்பட்டு  நன்கு வேகவைக்கப்பட்டிருப்பதால் சுவை சூப்பராய் இருக்கிறது.
சைட் டிஷ் க்கு ஏற்ற செம காம்பினேசன்.இதை ருசிக்க ருசிக்க ஒவ்வொரு பெக்கின் எண்ணிக்கை கூடுவதோடு மட்டுமல்லாமல் அதன் சுவையை இதனோடு ரசிக்க வைக்கிறது.நாவிற்கு சுருக் கென்று இதன் காரம் இருந்தாலும் அதன் சுவை நம்மை ஈர்க்கிறது.
ஹைதராபாத் போனீங்கன்னா இதையும் மறந்திடாதீங்க...செம டேஸ்ட்.. நல்ல ருசி...நல்ல மணம்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, August 5, 2017

கரம் - 29

புத்தக கண்காட்சி ஒரு பார்வை.
விசாலாமான ஹாலில் மிகுந்த இடவசதியுடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.நிறைய பதிப்பகங்கள் இடம் பெறவில்லை.வரலாறு, காமிக்ஸ், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள், தமிழ் நாவல்கள் என எப்பவும் போல..கவிதைப்புத்தகங்கள் நல்லவேளை கண்ணில் படவே இல்லை.சுஜாதா பேனர்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்..வாசகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவே.பிரபல பதிப்பகங்களில் முக்கியமாய் கார்டு ஸ்வைப்பிங் மெசின் இல்லை.கேட்டால் சென்னை புக் ஃபேரில் இருக்காம்..வேறு என்ன பண்ணலாம் என்று கேட்டால் 2% அதிகம் கொடுத்தால் பக்கத்து ஸ்டாலில் ஸ்வைப் பண்ணிக்கொள்ளலாமாம்.
புக் வாங்கும் ஆர்வம் இதனால் கூட மங்கிப்போகலாம்.நானும் எந்த ஸ்டாலில் ஸ்வைப்பிங் மெசின் இருக்கிறதோ அங்கு மட்டுமே வாங்க முடிந்தது.ஜெயமோகனுக்கென்றே தனி ஸ்டால் ஒன்றும் போட்டிருக்கிறார்கள்.புத்தக கண்காட்சிகளில் மதம் சம்பந்தபட்ட ஸ்டால்களும் தற்போது நிறைய இடம் பெற துவங்கியுள்ளன.


கூட்டத்தை காட்டுவதற்காக கல்லூரிகளை சேர்த்திருப்பர் போல.மாணவர்கள் கூட்டம் ஜோடி ஜோடியாக செல்பி க்களில் மூழ்கியிருக்கின்றனர்.புத்தகங்களின் விலை தாறுமாறு...இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல சம்பந்தமற்ற இரண்டு மூன்று ஸ்டால்கள்.
இந்த கண்காட்சியில் வரவேற்க தக்கது வாசகர் எழுத்தாளர் சந்திப்பு மையம் மற்றும் வாசகர் ஓய்வு மையம்.கால்கடுக்க சுற்றி வந்து அக்கடாவென்று உட்கார சேர்கள் போடப்பட்டிருக்கின்றன.கோவை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு என ஒரு ஸ்டாலும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.நாடகம், கலை விழாக்களுக்கு என தனி அரங்கம் அமைத்துள்ளனர்.மாலை நேரம் நிச்சயம் அறிவுப்பசி தீரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஃபுட் கோர்ட் இந்த தடவை முழுதும் வட இந்திய நபர்களே ஆக்ரமிப்பில் இருக்கின்றனர்.கரும்பு ஜூஸ், பானிபூரி, ஜிகர்தண்டா, கார்ன் என ஒரு சில அயிட்டங்களே இடம் பெற்றிருக்கின்றன.
வெரைட்டி ரைஸ், பிரியாணி, காபி போன்றவைகளும் இருக்கின்றன.சுவை எப்பொழுதுமே நன்றாக இருக்காது என்பதால் ரிஸ்க் எடுப்பதில்லை.

இந்த தடவை வி.மு வின் நீர் புத்தகம், கருந்தேளின் தி.எ.வாங்க புத்தகம், சரவணன் சந்திரன் அவர்களின் ஒரு சில புத்தகங்கள், என கொஞ்சம் வாங்கியிருக்கிறேன்.
இனி அடுத்த புத்தக கண்காட்சியில் சந்திப்போம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...