Sunday, September 23, 2018

கோவை மெஸ் : சரவணா ஸ்டோர்ஸ் உணவகம், பாடி, சென்னை KOVAI MESS, SARAVANA STORES, PADI, CHENNAI,


                சென்னையின் அடையாளமாகிப் போய்விட்ட சரவணா ஸ்டோர்ஸ் இன் ஒரு கிளை அமைந்துள்ள பாடி க்கு சென்றோம்.பத்து மாடி கட்டிடம் பார்க்கவே பிரம்மாண்டமாய் பளபளவென்று வரவேற்கிறது.வரவேற்பறையே படு பிரம்மாண்டமாக இருக்கிறது.அதை விட பிரம்மாண்டம் 32 டீவிக்கள் சுவரில் பொருத்தப்பட்டு, அதில் சரவணா ஸ்டோர்ஸ் ஹீரோவும் ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடித்த விளம்பரங்கள் நாள் முழுக்க ஓடுகின்றன.ஹன்சிகாவை ரசித்தபடியே வந்தால் வரவேற்பு அம்மணிகள் அழகாய் இருக்கிறார்கள்.இங்கு வரும் அம்மணிகளும் மிக அழகாய் இருக்கிறார்கள்.இதைவிட அதிசயம் என்னவென்றால் வீட்டிற்கு தேவையான எல்லாப் பொருட்களையும் இங்கே கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல், கடைக்கு பர்ச்சேஸ் செய்ய வருபவர்கள் பசி போக்க உள்ளேயே சின்ன (?) உணவகம் அமைத்து இருப்பதுதான்.           ஒவ்வொரு தளத்திலும் விதவிதமான வீட்டு உபயோகப்பொருட்கள்.எல்லா தளங்களிலும் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி இருக்கிறது.ஒவ்வொரு தளமாய் பார்த்து வரவே பசியாகி விடும்.அவ்வளவு பொருட்கள் இருக்கின்றன.அப்படித்தான் ஒவ்வொரு தளமாய் பார்த்து விட்டு வரவே இன்னும் பசி அதிகமாக எடுக்க, உணவகம் இருக்கும் ஒன்பதாவது தளத்தில் உள் நுழைந்தோம்.பிரியாணி வாசனையோடு மற்ற உணவுகளின் வாசங்களும் வரவேற்றது.வாடிக்கையாளர்கள் உள் நுழைவதும் வெளியேறுவதுமாய்.


              நாங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமானோம்.உணவகத்தின் நீளம் நம்மை பிரமிக்க வைக்கிறது.கன்ணைக் கவரும் மிக அழகான இண்டீரியர் அமைப்பில், உணவுகள் அலங்காரப் பெட்டியில் சுத்தமாய் வைத்து வெஜ் மற்றும் நான்வெஜ், சாண்ட்விச், பப்ஸ், ஜுஸ் வகைகள், ரொட்டி பிஸ்கட்கள் என அனைத்தும் வரிசையாய் வைத்திருக்கின்றனர்.
            
                ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே போவதிலேயே இன்னும் பசி அதிகமாகிறது.கூட்டம் கூடுகிறது.வருவதும் போவதுமாக வாடிக்கையாளர்கள்.


                  குடும்பம் குடும்பமாய் வந்து அமர்கின்றனர்.அதிலும் அம்மணிகள் அதிகம் அழகாய் இருக்கிறார்கள். செல்ப் சர்வீஸ் தான்.பில் வாங்கி விட்டு வேண்டி உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செம டேஸ்டாக இருக்கும் என சொன்னதால் பிரியாணியை வாங்கினோம்.பிரியாணி விலை மிகக் குறைவே.ஆனால் சுவை செம டேஸ்ட்.பாசுமதி அரிசிதான்.சிக்கன் துண்டுகள் பெரிதாகவே இருக்கின்றன.நன்கு வெந்து இருக்கின்றன.சாப்பிட சுவையாக இருக்கிறது.பாசிமதி அரிசியும் செம சுவையே.மசாலாக்கள் நன்கு சேர்ந்து நல்ல சுவையைக் கொடுக்கிறது.


                  சிக்கன் பிரியாணி விலை ரூ 70 தான்.மட்டன் பிரியாணி ரூ.95 தான்..அளவும் அதிகமாக இருக்கிறது.சுவையும் சூப்பராக இருக்கிறது.அருகருகே அம்மணிகள் சூழ இந்த பிரியாணிகள் சாப்பிடலாம்.வருவதும் போவதுமாக அம்மணிகள் இருக்கின்றனர்.
              ரசித்துக்கொண்டே ருசிக்கலாம்.அதே போல் அம்மணிகளும் ரசிக்கலாம் ஆடவர்களை..அந்தளவுக்கு அவர்கள் கூட்டமும் இருக்கிறது.
தயிர் சாதம் முதல் பிரியாணி வரை வெரைட்டி ரைஸ் கிடைக்கிறது.நல்ல தண்ணீர், சுத்தமான இடம், ஏசி ஹால் என பிரம்மாண்டமாக இருக்கிறது இந்த உணவகம்.
              வாடிக்கையாளர் மனமறிந்து செயல்படுவது தான் ஒரு கடைக்காரரின் குறிக்கோள்.அந்த வகையில் இந்த உணவகம் மிகச்சிறப்பே.பாடியில் இந்த கடை அமைந்துள்ள இடத்தில் கடை கண்ணிகள் எதுவும் இல்லை.எதிரில் டிவிஎஸ் கம்பெனி மட்டுமே இருக்கிறது.குழந்தை குட்டிகளோடு வருபவர்கள் ரோட்டில் அவர்களை இழுத்துக்கொண்டு சென்று சாப்பிட முடியாது.கடைக்குள்ளே இந்த வசதிகள் இருந்தால் ஷாப்பிங்கும் செய்யலாம்…களைப்பானால் சாப்பிடவும் செய்யலாம்.
           ஒன்பதாவது மாடியில் இந்த உணவகம் செயல்படுகிறது.மிகுந்த கூட்டம் கூடுவதால் இந்த உணவகத்தினை பத்தாவது மாடிக்கு மாற்றப்போவதாக அங்கே ஒருவர் கூறினார்.கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்.ஏனெனில் மிக குறைந்த விலையில் சுவையான உணவினை யார் தரமுடியும்…..
             சாப்பிட்டு விட்டு பொறுமையாய் கீழிறங்கினோம்.நல்லவேளை லிஃப்ட் வசதிகள் இருக்கிறது.இல்லை எனில் கீழிறங்குவதற்குள் சாப்பிட்டது செரித்து இருக்கும்….
             சாப்பிட்டு விட்டு அங்கே இருக்கும் கண்ணாடிகள் வழியாக பார்த்தால் பாடி பகுதிகள் மிக சிறியதாக தெரிகின்றன.
           ஷாப்பிங் பண்ணலைனா கூட போய் சாப்பிட்டு பாருங்க…நல்ல சுவையாகவே இருக்கிறது அனைத்து உணவுகளும்…

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, September 22, 2018

பயணம் - சென்னை - சிறு உலாவல்


                 சென்னை செல்வதென்றாலே மனதுக்குள் கொஞ்சம் குதூகலம் அதிகமாகவே இருக்கும்.என்னதான் வெயில், டிராஃபிக் என அசெளரியங்கள் இருந்தாலும் தமிழகத்தின் தலைநகரை பார்க்கப் போவதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும்.காரணம் கடல்.மெரினா பீச்சில் கால்கள் மண்ணில் புதைய புதைய நடந்து, கடலில் அலைகள் மோத நீரில் கால் வைத்தவுடன் ஏற்படுகிற ஜில்லிப்பு இருக்கிறதே…அது அங்கு மட்டும் தான் கிடைக்கும்.ஈர நிலப்பரப்பில் கடல் அலைகள் பெரும் ரீங்காரத்துடன் வந்து சேருவதை பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கும்.
               பீச் மணற்பரப்பில் சுனாமியே வந்தாலும் கவலைப்படாமல் காதல் கொள்ளும் ஜோடிகள் பார்க்க அழகு.தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் என விற்றுவரும் பொடிப் பையன்கள் அழகு.பொரித்த மீன் வாசம் வரும் மீன் கடைகள் அழகு.கடல் நீரில் கால்கள் நனைத்து விளையாடும் அம்மணிகள் அழகு.பீச் ஓரங்களில் கல்லா கட்டும் சிறு சிறு கடைகள் பார்க்க அழகு.

               திராவிட ஆட்சியின் முதுகெலும்புகளான அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் சமாதிகள் பார்க்க அழகு.சமீபத்தில் காலமாகி அங்கே இளைப்பாறிக் கொண்டு இருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் சமாதியும் அழகு.இந்த நால்வரையும் பார்க்க வந்து குவியும் உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்கள், பொதுமக்கள் என தினமும் இங்கே கூட்டம் கூடுகிறது.புரட்சித் தலைவியின் சமாதி இப்போது பொலிவு படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் அங்கே தொலைதூரமாக பார்த்து விட்டு வரும்படி இருக்கிறது.இந்த நினைவகங்களை பார்த்து வரும் மக்களிடம் விற்பனை செய்யவே வழியெங்கும் கடைவீதி போல கடைகள்.கடல் பாசி, சங்கு, கிளிஞ்சல்கள் கடைகள். ஐஸ்கீரிம் கடைகள்., உணவங்கள், மீன் கடைகள் என பலதும் வரவேற்கின்றன.                 இந்த முறை சென்னை சென்றதில் திராவிட ஆட்சியாளர்கள் அனைவரின் சமாதிகளையும் கண்ட திருப்தி ஏற்பட்டது.அதற்கு பின் பிரியாணி கடைகளை தேடி தேடி சுவைத்ததில் ஒரு இன்பம்.அதையும் ஒவ்வொண்ணா எழுத ஆரம்பிக்கணும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, September 15, 2018

கோவை மெஸ் - யா முஹைய்யதீன் பிரியாணி, பல்லாவரம், சென்னை KOVAI MESS, YAA.MOHAIDEEN BIRIYANI, PALLAVARAM, CHENNAI


யா முஹைய்யதீன் பிரியாணி
YAA.MOHAIDEEN BIRIYANI
                சென்னைக்கு வந்திருப்பதால் கொஞ்சம் பிரபலமான கடைக்கு செல்வோம் என முடிவெடுத்து சென்றது முதலில் சுக்குபாய் பிரியாணி கடைக்கு.அங்கு சென்றபின் தான் தெரிந்தது பாரத் பந்திற்கு ஆதரவு தந்து கடையை மூடி இருப்பது.வெறும் கடையை மட்டும் போட்டோ எடுத்து விட்டு, அடுத்து பல்லாவரத்தில் பேமஸான யா முகைதீன் பிரியாணிக்கு செல்லலாம் என முடிவெடுத்து விட்டு, முதலில் போன் செய்துவிட்டு கடை இருக்கிறதா என்பதை கன்பார்ம் பண்ணிவிட்டு போலாம் என்று போன் போட்டதில் கடை இருக்கிறது என பதில் வந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் அட்ரஸைக் கண்டுபிடித்து பிரியாணி கடையை அடைந்தோம்.


             உழவர் சந்தை அருகில் இருக்கிறது இந்த கடை.கார்கள், டூவீலர்கள் என நிறைய வழியெங்கும் நின்று கொண்டிருந்தன.நாங்களும் காரை பார்க் பண்ணிவிட்டு வருகையில் ஆங்காங்கே கையில் தட்டுக்களை வைத்தபடி நின்று கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.ஒரு சிலர் கைகளில் ஏந்தியபடி காரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.ஒவ்வொருத்தர் கையிலும் பாக்கு மட்டை தட்டில் பிரியாணியை சுவைத்துக் கொண்டிருந்தனர்.பார்சல்கள் நிறைய போய்க்கொண்டிருந்தன.வாளிகள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்தால் பயங்கரமாக பேமிலி பார்சல் செல்லும் என தெரிகிறது.


               விலைப்பட்டியல் எங்களை வரவேற்றது.மொத்தம் நான்கு கடைகள் வரிசையாய் இருக்கிறது.முதலில் பில் செக்சன்.அடுத்தடுத்த இரு கடைகள் சாப்பிடும் இடம், கடைசி கடையில் பிரியாணி அண்டாக்களில் இருந்து டெலிவரி செய்யும் இடம்.உள்ளே உற்றுப்பார்த்ததில் அண்டா அண்டாக்களாய் பிரியாணிகள்.யூனிபார்ம் இட்ட பணியாட்கள் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.வரிசையில் ஒவ்வொருவராய் கடந்து கடைசியில் பிரியாணி வாங்கி நாங்களும் ரோட்டில் ஓரங்கட்டினோம்.

                 மட்டன் பிரியாணி தான்.பாசுமதி அரிசியின் சுவை நன்றாக இருக்கிறது.கறி நன்றாக வெந்து இருக்கிறது.அரிசியின் உதிரித்தன்மை கொஞ்சம் குறைவு தான்.மசாலாக்கள் நன்கு சேர்ந்து இருக்கின்றன.பிரியாணியின் அளவு ரொம்ப அதிகம் தான்.ஒரே ஒரு முட்டையோடு மட்டன் துண்டுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன.பிரியாணியை பார்த்தாலே நன்கு கலர்புல்லாக இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை சூப்பராக இருக்கிறது. ஒரே ஒரு குறைதான்.தக்காளி துண்டுகள் நிறைய மென்மையாய் வதங்காமல் அப்படியே இருக்கின்றன.தக்காளியினால் பிரியாணியின் சுவை ஒன்றும்  குறைந்து விடவில்லை.தயிர் பச்சடி புளிப்பில்லாமல் சுவையாகவே இருக்கிறது.கத்திரிக்காய் தால்ச்சா இருந்தது.ஆனாலும் அதன் துணையில்லாமலே பிரியாணியை காலி பண்ணினோம்.

அங்கு கூடும் கூட்டத்தினை பார்த்தாலே போதும் பிரியாணியின் சுவை எப்படி பட்டதென்று...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 5, 2018

கரம் - 33

                        சமீபத்தில் கரூர் சென்றிருந்தேன்.முன்பெல்லாம் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் தான் கரம் கடை இருக்கும்.ஆனால் இப்பொழுதோ எல்லா சந்து பொந்துகளிலும் ஆரம்பித்து இருக்கின்றனர்.ஒரு தெருவை எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் மூன்று நான்கு கடைகள் இருக்கின்றன.எந்தக் கடையில் சாப்பிடுவது, எந்த கடையை விடுவது என்கிற குழப்பம் ஏற்படுகிறது.அப்படியே தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் சுவை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.ஐந்து ரோடு மக்கள் கரம் கடையில் சட்னி வகைகள் மட்டும் நான்கு வெரைட்டிக்கும் மேல் வைத்திருப்பார்.வித விதமாய் செட் கரம் சாப்பிடலாம்.மற்ற பக்கம் ஒரே ஒரு சட்னியை வைத்துக் கொண்டு கரம் கடையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
                                    கரம் என்பது பொரி, கேரட் பீட்ரூட், கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு,சட்னி சேர்ந்தது தான்.இதனுடன் முட்டை, சமோசா, குடல் அப்பளம் சேர்த்தால் தனித்தனி கரம் வகைகள்.
முட்டை கரம் எப்பவும் ஸ்பெஷல் தான் எனக்கு.சாப்பிட சுவையாக இருக்கும்.இதை சாப்பிட்டு விட்டு ஒரு செட்டு ஒன்று சாப்பிட வேண்டும்.தட்டுவடையோடு கேரட் பீட்ரூட் கலந்து சட்னியும் சேர்த்து நம் பல்லில் அரைபடும் போது ஏற்படும் சுவை இருக்கிறதே ஆஹா....செம...நான் சாப்பிட்ட கரம் கடையில் உருண்டை வகைகள் வைத்திருந்தனர்.கம்பு, கொள்ளு, ராகி, எள், கோதுமை, பாசிப்பருப்பு என பலவகைகள்.ஒவ்வொன்றும் செம டேஸ்ட்.விலை ரூ 7.

ஜிலேபி மீன்: 
காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்திருப்பதால் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்று பார்த்தால் மீன் வரத்தே இல்லை.ஒரு சில பேர் தான் ஆற்றில்  மீன் பிடிக்கின்றனர்.அப்படித்தான் கடந்த வெள்ளியன்று எங்கள் ஊரில் மீன் பிடித்து கொண்டு வந்திருந்தனர்.அனைத்தும் ஜிலேபி மீன்.வாங்கி நன்கு சுத்தம் செய்து மசாலாவில் ஊறவைத்து தோசைக்கல்லில் சுட்டு சாப்பிட்டால் செம டேஸ்ட்.

கொஞ்சம் மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொஞ்சம் உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் கழித்து தோசைக்கல்லில் போட்டு பொரித்து சாப்பிட்டால் சுவையான மீன் வறுவல் ரெடி...கடையில் விற்கிற மசாலாக்களை ஊருக்கு போனால் மட்டும் உபயோகிக்கவே மாட்டோம்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

கோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்


சண்முகா மெஸ், கரூர்.
                மார்க்கெட் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இந்த உணவகம் இருக்கிறது.பழைமை வாய்ந்த கட்டிடம்.அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் நுழைந்தது போல அமைப்பு.சுவரெங்கும் பக்தி மணம் கமழும் சாமி புகைப்படங்கள்.கடவுளின் வாகனங்களாக அறியப்படும் உயிரனங்கள் இங்கே சுவையாக கிடைக்கின்றன.அலுமினிய தகரம் பதித்த டேபிள்கள்.அதற்கு தோதாய் ஸ்டூல்கள்.
                    இலை போட்டவுடன் மெனுக்கள் வரிசையாய் உச்சரித்தபடி சர்வர் வர, சிக்கன் பிரியாணியும், சாப்பாடும், மட்டன் வறுவலும் நாட்டுக்கோழி குழம்பும் ஆர்டர் செய்தோம் குழம்பு வகைகள் அத்தனையும் நல்ல சுவை.பிரியாணிக்கு கொடுத்த குழம்பாகட்டும், சாதத்திற்கு கொடுத்த கறிக் குழம்பாகட்டும் மிக நன்றாகவே இருந்தது.பிரியாணியில் கறி தனியாகவும், பிரியாணி தனியாகவும் தருகின்றனர்.


                  பிரியாணியில் கறியை பொதிந்து தருவதில்லை.சாதம் நன்கு மென்மையாக வெந்திருக்கிறது.உதிரி உதிரியாக இல்லை. பிரியாணிக்குண்டான வாசம் கொஞ்சம் குறைவுதான்.குழம்போடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கிறது.தயிர்பச்சடி நீராகாரமாய் இருக்கிறது வெங்காயம் சேர்த்ததோடு.கோழிக்கறி சக்கை சக்கையாய் இருக்கிறது.பிரியாணியில் வெந்த மென்மை தன்மை இல்லை.கடினமாக இருக்கிறது.சுவையும் இல்லை கறியில்.நாட்டுக்கோழி வறுவல் குழம்பு நல்லசுவை.ஆனால் கறியை பார்த்தால் மென்மையாக இருக்கிறது பிராய்லர் போல.கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டுவோம்.மீன் குழம்பு சுவை இல்லை.ரசமும் சுமார்தான்.இரண்டு சாப்பாடு, ஒரு பிரியாணி, மட்டன், நா.கோழி அனைத்தும் சேர்த்து ரூ.460 ஆனது.
                                  சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது எதிரில் இதே போல ஒரு சண்முகா மெஸ் இருக்கிறது.சுவை நன்றாக இருந்தால் தானே டூப்ளிகேட் போடனும்..சுமாரான சுவைக்கெல்லாம் எதுக்கு டூப்ளிகேட்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...