Wednesday, July 31, 2013

ரெடியாகிட்டோம்....பதிவர் சந்திப்பு சென்னைக்கு

ரெடியாகிட்டோம்...இன்ப சுற்றுலாவிற்கு நாங்க....அப்ப நீங்க.....
சென்னையில் நடக்கிற பதிவர் சந்திப்புக்கு வேன் சகிதம் எல்லாம் ரெடி..

காலையில கிளம்பினா சாயந்திரம் போயிடலாம்..
(மறக்காம மத்தியான சாப்பாட்டுக்கு கட்டுச்சோறு கட்டிட்டு வந்திடுங்க...எங்காவது வண்டிய நிறுத்தி சாப்பிட்டுவிட்டு போனா தெம்பா இருக்கும்.)
அப்படியே மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டு அப்படியே மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு
அங்க இருக்கிற அம்மணிகளை நோட்டம் விட்டுட்டு
கிளம்பி வந்து ரூமில தூக்கம் போட்டுட்டு 
ஞாயிற்றுக்கிழமை காலைல நல்ல ஒரு ஹோட்டலில சாப்பிட்டுட்டு (கோவை மெஸ்ஸுக்கு பதிவு தேத்தனும் வேற )


பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு ஒரு அட்டணன்ஸ் போட்டுட்டு
அங்க போடற மத்தியான சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு (பார்சல் இல்ல...)
இருக்கிற மிச்ச சொச்ச நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு
சாயங்காலம் கிளம்பினா அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவை வந்திடலாம்
அப்புறம் வழக்கம் போல வேலைக்கு போக வேண்டியது தான்...
வேலைக்கு போன இடத்துல பதிவர் சந்திப்பு சுவாரசியங்களை இணையத்துல போட்டு
ஒரு மாசம் பதிவர்களை கொன்னெடுக்கலாம்...

யாரெல்லாம் வரீங்க....

கை தூக்குங்க....

கோவை மு சரளா -  உள்ளேன் ஐயா...
அகிலா -  உள்ளேன் ஐயா.
நிகழ்காலம் எழில் -  உள்ளேன் ஐயா...
கலாகுமரன் -  உள்ளேன் ஐயா...
ஆவி -  உள்ளேன் ஐயா...
உலக சினிமா ரசிகன் -  உள்ளேன் ஐயா...
கோவை சதிஸ் -  உள்ளேன் ஐயா...
நிர்மல் குமார் - உள்ளேன் ஐயா...
சுட்டி மலர்  - உள்ளேன் ஐயா...
அப்புறம்
நானும் இருக்கேனுங்க....

இன்னும் யாராவது வரணும்னு நினைச்சீங்கன்னா சீக்கிரம் அட்டனன்ஸ் போட்டுடுங்க...அப்புறம் வேன்ல தொங்கிட்டு தான் வரணும்..இல்லே டாப்ல தான் உட்கோரணும்..
அப்புறம் முக்கிய விசயமுங்க...எல்லாரும் சேர்ந்து தாங்க செலவை பிரிச்சுக்கணும்..இல்லேனா வண்டி ஓடாதுங் சாமியோவ்......

கூப்பிடுங்க எங்களை ( கோவையில இருந்து பதிவு எழுதறவங்க, பிளாக் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவங்க  )

அகிலா - 94431 95561
கலாகுமரன் - 88700 25552
சரளா - 97891 89444


கிசுகிசு : 
கவிஞர்கள் நிறைய பேர் இருக்கிறதால் வண்டியில் போகும் போது யாரும் கவிதை சொல்லக்கூடாது...மீறி சொன்னா நான் வண்டியில இருந்து குதிச்சிடுவேன்..ஹிஹிஹி


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Friday, July 26, 2013

கோவை நேரம் - தி நியூ இண்டியன் எக்பிரஸ்,(The New Indian Express ), கோவை

வணக்கமுங்க...
தி நியூ இண்டியன் எக்பிரஸ்ல நம்ம கோவை நேரம் பேட்டி இன்னிக்கு வந்திருக்குங்க...இந்த பேட்டியில் நம்ம போட்டோ போடறதுக்காக என்னை வ உ சி பார்க் வரச்சொன்னாங்க.அங்க என்னை வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்தாங்க.பார்க் வந்திருந்த ஒரு சில பல நல்ல ஜோடிகளும் கள்ள ஜோடிகளும் வெறிக்க வெறிக்க பார்த்தாங்க.அப்புறம் அங்க இருந்து எஸ்கேப் ஆகி ரேஸ்கோர்ஸ் வர........ எடையை குறைக்க வாக்கிங் போன அம்மணிகளால் நம்ம மனசு ரொம்ப பாரமாகி போனதுங்க.....ஏக்கப் பெருமூச்சுடன் கிளம்பிட்டேனுங்க....
என்னை பேட்டி எடுத்த மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் என்னை புகைப்படம் எடுத்த கமலக்கண்ணன் அவர்களுக்கும் நன்றி...

இந்தியன் எக்ஸ்பிரஸ் லிங்க்  இங்க போனா படிக்கலாம்





என்னை பதிலுக்கு பதில் ...பழிக்குப்பழி வாங்க பேப்பரில் வந்த விவரத்தினை தன் பதிவில் போட்ட கவிதாயினி க்கு நன்றி

கிசுகிசு : யாராவது இதை ட்ரான்ஸ்லேட் பண்ணினா ரொம்ப புண்ணியமாக போகும்..ஹிஹிஹி...


நேசங்களுடன் 
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, July 25, 2013

கோவை மெஸ் - மைக்கேல் & சன்ஸ், ஐஸ்கிரீம், மலைக்கோட்டை, திருச்சி

                  சமீபத்தில திருச்சி போயிருந்தேன்.சாயந்திர நேரம் ஊர் சுத்தி பார்க்கலாமே அப்படின்னு கிளம்பி போன இடம் மலைக்கோட்டை பஜார் வீதி.வண்டியை ஓரமா ஓரங்கட்டிட்டு பொடி நடையா நடந்து போனதுல எவ்ளோ கலோரிகள் மனசுக்கும் உடம்புக்கும் கம்மியாகி போனது.பஜாரின் இருபுறங்களிலும் பேன்சி ஸ்டோர்கள் மற்றும் இன்ன பிற கடைகள்.கடையில் இருக்கிற பொருட்களை விட அதை வாங்க குவியும் அம்மணிகள் அதிகமாக இருக்கிறார்கள்.ஒட்டு மொத்த திருச்சியுமே இங்குதான் குவியும் போல அவ்ளோ கூட்டம்.

              ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் இருந்தாலும் சாரதாஸ் துணிக்கடையில் அம்புட்டு கூட்டம்.ஒரு பொதுக்கூட்டமே நடத்தலாம் போல...அவ்ளோ மக்கள்.பரந்து விரிந்த கடையினுள் எங்கும் மனித தலைகளே.அதிலும் அம்மணிகள் அதிகம்...குடும்பத்தோடு மூட்டை மூட்டையாய் வாங்கி வெளியேறிக்கொண்டிருந்தனர்.பார்த்து பிரமித்து போய் ஒரு டிரஸ் கூட எடுக்காமல் வெளியேறினேன்.(துணி எடுக்கவா உள்ளே போனது...?ஹிஹிஹி..).மனம் அடைந்த அயர்ச்சியில் உடல் கொண்ட தளர்ச்சியில் எதாவது உள்ளே தள்ளியாக வேண்டும் என்கிற ஆவலில் போன இடம் தான் நம்ம மைக்கேல் அண்ட் சன்ஸ்.
சின்ன கடைதான்.ஆடம்பரம் எதுவும் இல்லை.பழங்கால கட்டிடம் போலத்தான் இருக்கிறது.ஆனால் எப்பவும் போல உள்ளே கூட்டம் நிறைந்து இருக்கிறது.காத்திருந்து ஒரு டேபிளை ஆக்ரமித்தேன்.சுற்றும் முற்றும் பார்த்ததில் அம்மணிகள் அதிகமாகவே இருக்கின்றனர்.மனம் லேசானதை உணர்ந்த போது பேரர் வந்து நிற்க கடையின் பிரபலமான புரூட் சாலட் ஐஸ்கிரிமினை ஆர்டர் செய்தேன்.ஒரு சில்வர் கப்பினுள் சிவந்திருந்த புரூட்ஸ்களுடன் வெண்ணிலா ஐஸ்கிரிம் சேர்ந்து வர மிக சுவையாக இருந்தது.புரூட் சாலட்டில் நிறைய பழவகைகள் இருந்தாலும் அதிகம் தென்படுவது வாழைப்பழம் தான்.

ஆனால் மிக சுவையாக இருக்கிறது.மற்ற முண்ணனி பிராண்டுகளில் இருக்கிற சுவை இருக்காது.ஆனால் எப்பவும் போல ஒரே சுவையுடன் கிட்டதட்ட 30 வருடங்களுக்கும் மேலாக நடத்திக்கொண்டிருக்கிற ஒரே கடை இதுதான்.மிக குறைந்த விலையில் இன்னமும் தந்து கொண்டிருக்கின்றனர்.அவ்வப்போது ஒரு ரூபாய் ஏற்றுவார்கள் போல.1995 யில் 2.50 இருந்த புரூட் சாலட் இப்போது 7.00 யாக இருக்கிறது.ஆனால் அதே சுவை.வேறு எந்த பிராண்ட் ஐஸ்கிரீம்களும் இங்கு கிடைக்காது.அனைத்தும் சொந்த தயாரிப்பே..

         இந்த கடை அருகிலேயே நிறைய கடைகள் இருக்கின்றன.ஆனால் இங்கு மட்டுமே சுவையும் அதிகம்.கூட்டமும் அதிகம்.திருச்சி போனால் மறக்காமல் இங்கு ஒரு வருகையை போடுவது வாடிக்கையாகிவிட்டது.மலைக்கோட்டை பஜார் வாயில் எதிரே உள்ள போஸ்ட் ஆபிஸ் அருகில் இந்த கடை இருக்கிறது.பஜாரில் பர்ச்சேஸ்களை முடித்துவிட்டு களைத்து வரும் நபர்கள் அதிலும் அம்மணிகள் அதிகமாய் கூடும் இடமாக இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, July 22, 2013

கரம் - 8 - 22.7.2013 - ஆ(வி)பத்து - மினி பதிவர் சந்திப்பு

          எனது கல்லூரி நண்பனும், ஆவிப்பா எழுதி நம்மை கதிகலங்க வைக்கும் நண்பரும், பதிவுலகில் பேய், பிசாசு என அழைக்கும் கோவை ஆவியுமான, கோவை மாவட்ட நஸ்ரியா ரசிகர் மன்ற தலைவரும், உடல் பொருள் ஆவி என அனைத்தும் நஸ்ரியாவிற்கே என எழுதிக்கொடுத்திருக்கும் கோவை ஆவிஎன்கிற ஆனந்த் போன சனிக்கிழமை அன்னிக்கு பொள்ளாச்சி போகும் போது ஏதோ காத்து கருப்பு (ஆவிக்கேவா....) அடிச்சிருக்கும் போல....(அனேகமா மரியான் ன்னு நினைக்கிறேன் ) திடீர்னு பிரேக் பிடிச்சதால் வண்டியில இருந்து பறந்து போய் கீழே விழுந்து தன் இரண்டு கைகளிலும் விழுப்புண்ணை (விழுந்து + புண்ணை ) ஏந்தியிருக்கிறார்.நல்லவேளை ஹெல்மெட் அணிந்திருக்கிறார் இல்லை எனில்  மொட்டைத்தலை சிதறு(தலை)தேங்காய் ஆகிருக்கும்.(தயவு செய்து வண்டியில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியுங்கள்).அதனால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உடல் நலமின்றி இருக்கிறார்.
அவர் உடல் நலம் தேறி மீண்டும் ஆவிப்பா எழுத வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.மச்சி சீக்கிரம் வா ...உனக்கு சத்ரியன், பரதன், குமரன் S/o மஹாலட்சுமி, விஜய் நடிச்ச பத்ரி, இந்த படங்களில் இருந்து ஒரு பாட்டு அனுப்பறேன். அதை கேட்டு சீக்கிரம் குணமாகு..

மச்சி...ஆப்ரேஷன் லாம் பண்ற...எப்போ ட்ரீட்...ஹிஹிஹி  

*********************************
மினி பதிவர் சந்திப்பு..

நெல்லையின் ஆபிசர் என அழைக்கப்படும் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் போன மாதம் கோவைக்கு வந்திருந்தார்.அவரின் உடன்பிறப்புகளும் வந்திருந்தனர். ஆபிசர் பார்க்க இளைஞனாக இருக்கிறார்.(ஹேர்டை, டீ ஷர்ட் போட்டு ஒரு யூத்தாகவே இருக்கிறார் இன்னும் )அவரை அழைத்துக்கொண்டு ப்ரூக் பீல்ட்ஸ் மால் சென்றேன். அம்மணிகளின் வருகை குறைவாக இருந்தாலும் அவர் மிக மகிழ்ச்சியாக இருந்ததை கண்டு கொண்டேன்...அதற்குள் நண்பர் உலக சினிமா ரசிகனுக்கு ஒரு போன் போட அவரும்.ஜோதியில் ஐக்கியமானார். இந்த சந்திப்பில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நன்றி பதிவுலகம்..

*****************************

அது போலவே இன்னொரு திருநாளில் பெங்களூரில் இருந்து நண்பர் கடல்பயணங்கள் சுரேஷ் கோவை வருவதாக சொல்லி இருந்தார்.அவரை சந்திக்க ப்ளான் பண்ணியிருந்தோம்.ப்ரூக்பீல்ட்ஸ் மாலிற்கு முன்னதாகவே ஆவியும் உலக சினிமா ரசிகனும் வந்திருக்க அவர்களுடன் கலந்து கொண்டேன்.சுரேஷ் வரும்வரை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் கேஎஃப்சி யில்  கூட்டம் பின்னி எடுக்க அங்கே நகர்ந்தோம்.கோவை ஆவியின் கைங்கர்யத்தில் சிக்கன் பீஸ்களோடு அருகே இருந்த அம்மணிகளையும் விழுங்கிகொண்டிருக்க சுரேஷ் வந்து விட்டதாக சொல்ல வாஸ்துக்காக அருகில் இருந்த இட்லி கடைக்கு ஷிஃப்ட் ஆனோம்..சுரேஷ் பைஜாமா போட்டு சிக்கென வந்திருந்தார்.அவரிடம் ஊர் ஞானம், உலக ஞானம் லாம் பேசிக்கொண்டே காபி குடித்தோம்.அதற்குள் எழில் மேடமும் வர அனைவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நல்ல நண்பரை கொடுத்த பதிவுலகத்திற்கு நன்றி.


**************************


அதே மாதிரி இன்னொரு சந்திப்பு....இதை படிக்க
 உலகசினிமா ரசிகன், கவியாழி கண்ணதாசன், கோவை ஆவி மற்றும் நான்.

நிறைய நண்பர்களை கொடுக்கும் பதிவுலகிற்கு நன்றி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, July 18, 2013

கோவை மெஸ் – பர்மா பாய் கடை, நேரு ஸ்டேடியம், கோவை

நேத்து காந்திபுரத்துல இருந்த போது நஸ்ரியாவின் தீவிர ரசிகரும், கோவை மாவட்ட ரசிகர் மன்ற தலைவரும், அவ்வப்போது ஆவிப்பா எழுதி அடுத்தவங்களை குளிர் காய்ச்சல் பட வைக்கிறவருமான கோவை ஆவி அவர்களிடமிருந்து போன்.சென்னையில் இருந்து கவியாழி கண்ணதாசன் அவர்கள் வர்றார் அப்படின்னு...சரி எங்காவது மீட் பண்ணலாம் அப்படின்னு ப்ளான் போட்டு உலக சினிமாரசிகன் அவர்களையும் வரச்சொல்லி அழைப்பு விடுத்தேன்....அவரும் அனுஷ்காவில் பறந்தோடி வந்தார்.அதற்குள் ஆவியும் கவியும் வந்து விட கோவை வ.உ.சி பார்க்கில் சந்தித்தோம்.  
அவர் வந்திறங்கிய நேரம் பசி நேரம் ஆதலால் சாப்பிட்டுக்கொண்டே பேசலாமே என்று முடிவெடுத்து போன இடம் பர்மா பாய் கடை..இந்த கடை புரோட்டாவிற்கும் பிரியாணிக்கும் பேமசான கடை...எந்த நேரத்தில் போனாலும் சூடான புரோட்டா கிடைக்கும்...(அதுக்குன்னு நடுராத்திரி போயிடாதீங்க).அதுக்கு மேட்சான குருமா கிடைக்கும்..
கடையில் தற்போது வாஸ்து படி ஒரு சில மாற்றங்களை செய்து இருக்கிறார்கள்..முன்பு கடைக்குள் நுழையும் முன்பே சுட சுட புரோட்டா போட்டு கொண்டு இருப்பார்கள்.ஆவி அடிக்கும்...இது புரோட்டா ஆவி..அப்புறம் சூடான கல்லு ஆவி.....இப்போது அந்த இடத்தினை ஒரு சின்ன ரூமாக பார்டிசன் பண்ணி உள்ளே தீயா வேலை செய்து கொண்டிருக்கின்றனர் புரோட்டா மாஸ்டர்கள்...புரோட்டா சுடும் காட்சி தெய்வ தரிசனமாக ஆகிவிட்டது இப்போ...
சரி விசயத்திற்கு வருவோம்...நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓரிரு அம்மணிகளும் வெளியேறியது மிக வருத்தமாக இருந்தது.எனினும் மனதை சாந்தப்படுத்திக்கொண்டு தோதான இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்...
புரோட்டா மற்றும் பெப்பர் சிக்கன் ஆர்டர் பண்ணினோம்..ஒரு சில நிமிடங்களிலேயே ஆவி பறக்க புரோட்டா வந்தது..எடுத்து இலையில் வைக்க பூப்போல இருந்தது.மிக மிருதுவாக..பொல பொலவென்று...தட்டில் வைத்து குருமாவை ஊற்றி ஊறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து சாப்பிட...ஆகா...செம டேஸ்ட்...குருமாவும் புரோட்டாவும் உள்ளே போனதே தெரியவில்லை..ஒரு தட்டு முழுக்க வைத்திருந்த புரோட்டா சீக்கிரம் காலியாக, இன்னொரு பிளேட் ஆர்டர் செய்யப்பட்டது நஸ்ரியாவின் தங்க தலைவனால்.


அதற்குள் பெப்பர் சிக்கன் வரவே அதையும் ஒரு கை.... சாரி ....ஒரு வாய் பார்த்தோம். அதுவும் செம டேஸ்ட்..உதிர்த்து விடப்பட்ட சிக்கன் துண்டுகள் எலும்பில்லாமல் பெப்பர் மணத்துடன் நன்கு சுவையாக இருந்தது.டிரையாக இருந்தாலும் மிக நன்றாக இருந்தது..நான் இந்த பதிவு தேத்த போட்டோ எடுப்பதற்குள் பெப்பர் சிக்கன் காலியானதே தெரியவில்லை..
புரோட்டா பிரியர்கள் நிறைய குவியும் இடம்.அதுபோலவே அம்மணிகளும்.சனி ஞாயிறு கூட்டம் அள்ளும்.அருகிலேயே வ.உ.சி.பார்க் இருப்பதால் எப்பவும் ரஷ் ஆக இருக்கும்.புரோட்டா விலை 10 மற்றும் பெப்பர் சிக்கன் விலை 110.
குருமாவுக்கு பதில் இன்னும் நிறைய வெரைட்டி இருக்கிறது.அது எல்லாம் காசு...பணம் துட்டு மணி.மணி...குருமா மட்டும் புரோட்டாவிற்கு இலவசம்..சாரி விலையில்லா குருமா....
சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியேறி வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்து ஒரு மினி பதிவர் சந்திப்பினை அரங்கேற்றினோம்.அப்புறம் கைகுலுக்கலுடன் விடை பெற்றோம்.
பர்மா பாய் கடை என்பதால் என்னவோ அயல்நாட்டு பேரிச்சை பழம் வகைகள் கடை கவுண்டரில் கிடைக்கிறது.கடை இருக்கிற ஏரியா வ.உ.சி பார்க் ஸ்டேடியம்.இதுக்கு பக்கத்துலயே பூமாராங் ஐஸ்கிரீம் கடை இருக்கு..அங்க போனா சும்மா...ஜில்லுனு இருக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 10, 2013

கோவை மெஸ் - ஹோட்டல் ஆலியா (ALIYA Hotel, Thrissur), திருச்சூர், கேரளா

ஒரு தடவை நானும் நம்ம உலகசினிமா ரசிகனும் திருச்சூர் போயிருந்த போது ஒரு மத்தியான வேளை...வயிறு சும்மா கப கபன்னு  பத்தி எரியுது..ஏற்கனவே பெட்ரோல் (ஹிஹிஹி.....) போட்டு இருக்கிறதால் சீக்கிரம் சாப்பிடனும் இல்லேனா ரொம்ப மோசமா போயிடும்னு சொல்லி எங்காவது நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்கப்பா என்று சொல்ல டாக்ஸி சேட்டன் போன இடம் ஹோட்டல் ஆலியா.

புறவாசல் வழியாத்தான் கூட்டிட்டு போனாங்க..ஏன்னா கார் பார்க்கிங்லயே ஒரு வழி கொடுத்து இருக்காங்க.உள்ளே சென்றதும் பழைய கட்டிடம் என்றாலும் நன்றாக வைத்திருக்கிறார்கள்.நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்திருக்கின்றனர்.இது அந்த ஏரியாவில் ரொம்ப ஃபேமஸான ஹோட்டல்.நாங்க போன நேரத்தில ஒரு சில சேச்சிகள் சேட்டன்கள் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.கேரளாவோட பாரம்பரியமிக்க உணவுகள் புட்டு அப்பம் கடலைக்கறி, எல்லாம் காலைல மட்டும் தான் கிடைக்கும்னு சொல்லவும் சரி... மட்டை அரிசி சாப்பிடுவோம் அப்படின்னு சாப்பாடு ஆர்டர் பண்ணினோம்.
நம்மூர் மாதிரி தலை வாழை போட்டு கூட்டு பொரியல் எல்லாம் வைக்கல..எல்லாம் பீங்கான் பிளேட்.சாதம் சூடா...சும்மா பொல பொலன்னு....மல்லிகைப்பூ போல..... செம சூப்பரா இருந்துச்சு...


4 வித பொரியல் வச்சாங்க..கேரளாவுல நமக்கு பிடிக்காத ஒண்ணு இந்த பொரியல் தான்.அதிகமா விரும்பி சாப்பிடாத காய்களில் தான் பொரியல் கூட்டு பண்ணுவாங்க போல...அதனால அதிகம் அதை விரும்ப மாட்டேன்.
மீன் குழம்பு கொண்டு வரச்சொல்லி அந்த மட்டை சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட அட...என்னா டேஸ்ட்...என்னதான் சாம்பார், ரசம் மோர்ன்னு எதை ஊற்றி சாப்பிட்டாலும் அந்த மட்டை சாதத்திற்கு நல்லாவே இருக்காது.ஆனா மீன் குழம்பு மட்டும் வண்டி வண்டியா வயித்துக்குள்ள இறங்கும்.அவ்ளோ டேஸ்டியா செம காம்பினேசனா இருக்கும்.
அப்புறம் ஒரு ஃபிஷ் ஃபிரை கொண்டு வரச்சொன்னோம்.கேரளாவுல கரிமீன் தான் பேமஸ்.பெரிய ஹோட்டல்களில் மத்தி வைத்திருக்க மாட்டார்கள்.எண்ணையில பொரிச்ச மீன் அவ்ளோ டேஸ்ட்.கேரளாவுல எங்க வேணுமின்னாலும் மீன் தைரியமா சாப்பிடலாம்.அந்த கேரளா கைமணத்தோட நல்ல வாசத்தோட செமயா இருக்கும்.
சோறு உள்ளே போறது கூட தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.வயிறு நிரம்பியதும் போதும்ங்கிற அலாரம் அடிக்கவே ஏவ்...என்று ஏப்பம் விட்டுக்கொண்டே கை கழுவ சென்றோம்.
மட்டை சாதம், பிஷ் பிரை இருவருக்கும் சேர்த்து 280.00.தான்.மிக திருப்தியான சாப்பாடு.இன்னும் நிறைய மெனுக்கள் பீப் கறி, சிக்கன், மட்டன் அப்படின்னு இருக்கு.அதெல்லாம் வர்ற வழியிலேயே பெட்ரோல் போடும் போதே சாப்பிட்ட படியால் இங்கு சாப்பிடவில்லை.
திருச்சூர் சென்ரலில் இந்த ஹோட்டல் இருக்கிறது.ரயில்வே ஸ்டேசனில் இறங்கி ஏதாவது சேட்டன்கிட்டே கேட்டாலோ, இல்லை ஆட்டோ பிடித்தோ வந்து விடலாம்.ரொம்ப காலத்து ஃபேமசான ஹோட்டல்.நடந்தே வந்தாலும் நல்லா இருக்கும் கேரள வருங்கால நயன்தாரா, நஸ்ரியா, அமலாபால், அசின் அப்படின்னு ஏகப்பட்ட கேரள அம்மணிகளை பார்க்கலாம்.ஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, July 9, 2013

சினிமா - CHANTHUPOTTU - சாந்துபொட்டு - மலையாளம் - 2005 -விமர்சனம்

              எங்க கிராமத்துல பெண் தன்மையோட இருக்கிற ஆண்களை பொம்பளச்சட்டி அப்படின்னு தான் சொல்லுவாங்க.அப்போலாம் திருநங்கை, அரவாணி அப்படின்னு யாரும் கண்டுபிடிக்கல.அதுக்கப்புறம் அலி வருது போகுதுன்னு சொன்னாங்க.ஆனா பெரும்பான்மையோர் பொம்பளச்சட்டி தான் கூப்பிடுவாங்க.
         இவங்க எப்போதும் ஆண்கள் அணியிற சட்டையையும் லுங்கியையும் தான் கட்டிகிட்டு இருப்பாங்க.எப்ப பார்த்தாலும் பெண்கள் கூட தான் இருப்பாங்க.பெண்கள் செய்யுற வேலைகளான (மாதர்குல சங்கங்களே, பெண் சிங்கங்களே வம்புக்கு வந்திடாதீங்க) தண்ணி எடுப்பது, வாசல் பெருக்குவது, சமையல் செய்வது என இப்படித்தான் இருக்கும்.என்னதான் அழகா இருந்தாலும் குரல் மட்டும் கர்ண கொடூரமா இருக்கும்.பெண்களும் இவர்களை துணைக்கு எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்வார்கள்.பெண்களின் வீட்டிலும் கண்டு கொள்ளமாட்டார்கள்.(ஒண்ணும் நடக்காது என்கிற தைரியத்தில்..ஹிஹிஹி).
          ஆனால் ஆண்களிடம் இவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.முகத்தை திருப்பிக்கொண்டு செல்வார்கள்.என் கிராமத்தில் இப்படித்தான் ஒரு நபர் இருந்தார்.ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவமானப்படுத்தப்பட்டே அவர் தற்கொலை செய்து கொண்டார்.
            இப்போதிருக்கும் திருநங்கைகளுக்கு உண்டான விழிப்புணர்வு, சட்ட ஆலோசனைகள், அரசின் இலவச உதவிகள் என எல்லாம் கிடைத்திருந்தால் அவர் இன்னும் இருந்திருப்பார்.காலம் ஒரு நல்ல மருந்து என்பது தெரியாமல் போய்விட்டது.அப்படிப்பட்ட பெண் தன்மை இருக்கிற ஒரு நபரோட வாழ்க்கை கதைதான் இந்த சாந்து பொட்டு.

     மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சாந்துபொட்டு என்கிற படத்தினை அப்போ வெளியான போது கேரளாவில் கொச்சினில் பார்த்தேன்.அந்த படம் அப்போதிருந்து நேற்று வரை (ஏசியா நெட் சேனலில் ஞாயிறு ஒளிபரப்பானது) கிட்டதட்ட ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன் டிவிடியில்.அந்த படத்தில் வரும் ஒரு பாடலை எப்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்.செம ஹிட்டான பாடல் அது.
ஓமன புழ கடற்புரத்தின் ஓமனே...
நீ கரைஞ்ஞா இக்கரையில பாதிரா...
நீ சிரிச்சா இத்துறைக்கு சாகரா.... 
(எந்தா எண்ட...மலையாளம் கரக்டா....)

இந்த பாட்டை பாடினவர் சீனிவாசன் பையன் வினீத்.செம வாய்ஸ்.தட்டதின் மரையாது படத்தோட டைரக்டர் வேற..டிராபிக் படத்தின் ஒரு நாயகன்.

சரி கதைக்கு வருவோம்.
ஸ்டோரி – பெண் தன்மை இருக்கிற ஒரு ஆணின் கதை.

முழுக்கதை –
           பெண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கிற ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது.அந்த குடும்பத்தின் பாட்டி அந்த குழந்தையை பொட்டு வளையல் இட்டு பெண்ணாக பாவித்து வளர்க்கின்றனர். இதனால் பெண் தன்மையுடன் வளர்கிறது, ராதா கிருஷ்ணன் என்று பெயர் சூட்டிய குழந்தை ராதாவாக.ஒரு தகராறில் கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போய் விடுகிறார் ராதாவின் தந்தை.வளரும் குழந்தை வாலிப பருவம் அடைகிறான்.அப்பவும் பெண்களுடன் விளையாடுவது, பரதம் சொல்லி தருவது என ஒரு பெண் தன்மையுடன் இருக்கிறான்.

              ஒரு பிரச்சினையில் சிலர் அவனது துணியை அவிழ்த்து விட மிக வெட்கப்பட்டு அழ, அதனால் அவனது தாய் நீ ஒரு ஆண் என்பதை நிரூபிக்கவேண்டும் என்று சொல்லிவிடுவதால் தன்னுடன் பழகும் மாலு என்கிற பெண்ணிடம் காதல் கொள்கிறான்.கூடலும் கொள்கிறான்.அந்த சமயத்தில் கடலில் மீன் கிடைக்காததால் மக்கள் அவ்வூரின் சாமியாரான மாலுவின் அப்பாவிடம் குறி கேட்க அவர், ஆண் தன்மையும் பெண் தன்மையும் இருக்கிற அவனால் தான் இந்த ஊருக்கு சாபம் எனவும் அவனை துரத்த வேண்டும் என சொல்கிறார்.மாலுவை ஒரு தலையாக காதலிக்கும் முரட்டு ஆசாமியாக குமார், (கொலையானவரின் பையன்) மற்றும் மாலுவின் அப்பா சாமியாரின் சதி திட்டத்தின் படி ராதையை அடித்து கடலில் மூழ்கடித்து விடுகின்றனர்.

             கடலின் இன்னொரு மறுபக்கம் பிஜி மேனனால் காப்பாற்றப்பட்டு அங்கு தங்கி இருக்கிறான் ராதை.கோர்ட்டு, கேஸ் என கஷ்டத்தில் இருக்கும் பிஜுமேனன் மற்றும் தங்கை பாவனாவுக்கு இவன் அங்கு வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடுகிறது.முதலில் வெறுக்கும் பாவனா பின் ராதையை பிரதராக ஏற்றுக்கொள்கிறாள்.அங்கு ஏற்படும் ஒரு சின்ன தகராறில் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான்.
                  வழியில் சந்திக்கும் தன் ஊர்க்காரர் ஒருவர் ராதாவிடம் மாலு இன்னும் உனக்காக காத்திருக்கிறாள் என்றும் உனக்கு குழந்தை பிறந்திருக்கிறது, தன் பையனின் வாரிசு உரிமையை கேட்க சென்ற உன் தந்தையை கொன்று விட்டார்கள் என்றும் சொல்கிறான்.ஊர் திரும்பும் ராதை, தன் பெற்றோரை கொன்ற குமாரை பழிவாங்கி மாலுவுடன் எப்படி ஒன்று சேர்கிறான் என்பது தான் கதை...

         ஷ்ஷ்ஷ்....அப்பாடி...இப்பவே கண்ணக்கட்டுதே...
           
ராதையாக திலீப். படம்...படம் முழுக்க நிறைந்திருப்பது திலீப். திலீப் மட்டுமே...என்ன ஒரு நடிப்பு..வாய்ஸ் மாடுலேசன்..பாடி லாங்வேஜ் என எல்லாம்...செம...

             இன்னும் கண்களை விட்டு அகலாத பாத்திரம்.இப்படி ஒரு நடிகன் இனி நடிப்பது கஷ்டமே.(தமிழில் விக்ரம் நடிப்பதாக சொன்னார்கள்.என்னவாயிற்று என்று தெரியவில்லை.)வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பது திலீப்க்கு நிகர் அவரே தான்.

அறிமுக காட்சியில் பரதம் சொல்லித்தரும் நடிப்பு அற்புதம்..

மாங்காய் பறி....களை கொத்து......அப்புறம் மத்திக்கு கடல்ல வலைவீசு என ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் விளக்கம் சொல்லி பரதம் கற்று தருவது சூப்பர்..
கண்ணுக்கு மை, நெயில் பாலிஷ், ஹேர்ஸ்டைல் , நடை உடை பாவனை  என ஒரு திருநங்கை போல படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார்.கடைசியில் ஹேர்கட்லாம் பண்ணிட்டு பேண்ட் போட்டு வந்தாலும் நடையில் கொஞ்சமும் மாற்றமும் இல்லாமல் வரும் காட்சியில் சூப்பர்.

படம் முழுக்க சின்ன சின்ன சுவாரசியங்கள்.ராதையாக திலீப், மாலுவாக கோபிகா, குமாராக இந்திரஜித், மற்றும் பிஜி மேன்ன் பாவனா, லால், இன்னும் நிறைய...

படம் முழுக்க நகைச்சுவை, நல்ல கதை, பாடல், செண்டிமெண்ட் என எல்லா விதத்திலயும் சூப்பராக இருக்கிறது.

இந்த படத்தினை இயக்கியவர் லால் ஜோஸ், இவரின் சிறந்த இயக்குனர்.சமீபத்தில் டயமண்ட்நெக்லஸ் கொடுத்தவர்.இசை வித்யாசாகர்.

இது 2005ல வெளியானது.ஆனாலும் இப்போ பார்த்தாலும் படம் பிடிக்கும்.எங்காவது டிவிடி சிடி கிடைச்சா பாருங்க...கேரளா மண்வாசனையுடன் திலீப்பின் நடிப்புடன் சூப்பரா இருக்கும். 

எல்லாரும் மார்க் போடறாங்க...நாமும் போடுவோம்
10/10 ஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Friday, July 5, 2013

வாழ்த்துக்கள் - கோவை மு சரளா - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ( The new indian Express)

இன்னிக்கு காலங்காத்தால ஒரு மெசேஜ்.தோழி கோவை மு சரளா அவர்களிடமிருந்து...என்னன்னு பார்த்தா தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் அவரோட பேட்டி வந்திருக்குன்னு...

அட பரவாயில்லையே ....அப்படின்னு சந்தோசப்பட்டு ஒரு வாழ்த்து செய்தியைத் தட்டி விட்டேன்.எல்லாம் வேலையும் முடிஞ்ச பின்னாடி சரி பேப்பரை வாங்கிப் பார்த்துருவோம் அப்படின்னு காலைல பத்து மணிக்கு கடைக்குப் போனா கடை கண்ணியில ஒரு பேப்பரைக்கூட காணோம்.நல்ல நாளிலேயே இங்கிலீசு பேப்பரை பார்த்தாலே பத்தடி தூரம் பின்னுக்கு போவேன் இப்போ நமக்கு வந்த சோதனைய பாருடா ன்னு நினைச்சிகிட்டே கடையில பார்த்தா ஹிந்து பேப்பர் மட்டும் தான் இருக்கு....

என்னடா அதுக்குள்ள பேப்பர் எல்லாத்தையும் வாங்கிட்டு போயிட்டாங்களா அவங்க ரசிகர்கள் அப்படின்னு நினைச்சிகிட்டே கடைக்காரரிடம் கேட்க... இப்போலாம் யாரு தம்பி இந்த மாதிரி இங்கிலீஸ் பேப்பர்லாம் படிக்கிறா...ஏதோ ஹிந்து பத்திரிக்கை மட்டும் வச்சி வித்திட்டிருக்கேன் அப்படின்னு சொல்ல...
அடடா வடை போச்சே என்கிற ரீதியில் வேற எங்காவது தேடலாமே அப்படின்னு கவுண்டம் பாளையத்துல இருந்து சாய்பாபா கோவில் வரைக்கும் ஒரு கடையில கூட இல்ல.அப்புறம் சாய்பாபா காலனியில் இருந்த ஒரு கடையில் யாராவது வாங்க மாட்டாங்களான்னு தொங்கிட்டு இருந்த பேப்பரை ஓடோடி போய் வாங்கிப்பார்த்தா......சிட்டி எக்ஸ்பிரஸ் முதல்பக்கத்துலயே ஏகப்பட்ட அம்மணிகளோட போட்டோ.எங்கடா...அவங்களை காணோம்னு தேடினால் கவிதை புக் போட்டு ஒரு பெண்மணியோட போட்டோ.ஏதோ ஒரு தென்னமரத்து மட்டை பக்கத்துல ஈர்க்குச்சி உருவிகிட்டு இருக்கிற மாதிரி ஒரு போஸ்ல இருந்தாங்க...கொஞ்சம் உத்துப்பார்க்கவும் தான் தெரிஞ்சது....அட நம்ம கவிதாயினி....


வெறும் போட்டோ மட்டும் தான் பார்த்தேன்.ஒண்ணுமே விளங்கல.. என்னென்னவோ இங்கிலீசுல பேசியிருக்காங்க..என்னன்னு தான் தெரியல.அது அவங்க தான் சொல்லணும்.பேப்பர் கடைக்காரன் கூடவே ஒரு டிக்ஸ்னரி கொடுத்திருந்தானா பரவாயில்லை..அதுவும் இல்லை.எப்படி படிச்சு புரிஞ்சுகிறதுன்னு தெரியல.நல்ல நாளிலேயே அவங்க எழுதுற கவிதை விளங்காது நமக்கு.இதுல இங்கிலீசு வேற...சரின்னு வீட்டிற்கு வந்து கொஞ்சம் டிரை பண்ணலாமே அப்படின்னு டிக்ஸ்னரியைத் தேடினேன்.அப்போதான் தெரிஞ்சுது நாம என்னிக்கு வாங்கி இருக்கோம்னு....சரின்னு கொஞ்சம் அப்படி இப்படின்னு டிரை பண்ணினா.....தூக்கம் தூக்கமா வந்துச்சு...பரவாயில்லையே இந்த பேப்பரை தினமும் படிச்சா தூக்கம் சொல்லாம கொள்ளாம வரும் போலன்னு நினைச்சி பத்திரமா ஸ்கேன் பண்ணி வச்சிட்டேன்.ஹிஹிஹி

எப்படியோ நம்ம கோவைல இருந்து ஒரு பெண் எழுத்தாளரும் , சக பதிவருமான நம்ம தோழியின் பேட்டி ஆங்கில நாளிதழில் வந்திருப்பதில் மிக்க சந்தோசமே..இன்னும் அவர் மென்மேலும் புகழ் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.கோவை பதிவர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

இவர் எழுதிய நூல்கள் - மெளனத்தின் இரைச்சல்கள், காதலின் சாரல்
                          

கிசுகிசு : இதை மொழிப்பெயர்த்து சொல்பவருக்கு கோவை கவிதாயினி சரளாவின் கவிதை புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, July 4, 2013

கோவை மெஸ் - கீதா ஹோட்டல் ( கீதா கபே, நீர் தோசை ஸ்பெசல் ), ரயில்வே ஸ்டேசன், கோவை

சென்னையில் மிகப்பெரிய பதவி வகிக்கிறவர், நம்ம பிளாக்கோட தீவிர வாசகர் மற்றும் இப்போ நெருங்கிய நண்பராகி எப்பவும் நம்ம கூட தொடர்புல இருக்கிறவர்.எப்போ பதிவு போட்டாலும் அவரிடமிருந்து ஒரு பாராட்டு நிச்சயம் வந்திரும் போன்ல.இன்னும் சந்தித்தது இல்லை.ஒரு நாள் அவரிட மிருந்து போன் கால்.நான் கோவைல இருக்கேன் அப்படின்னாரு....காந்தி புரத்துல கொஞ்சம் வேலையா இருக்கேன்.கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும் உங்களை பார்க்கணுமே அப்படின்னு சொல்ல இதோ வர்றேன் அப்படின்னு சிங்கத்தை கிளப்பினேன்.முதல் முதலா அன்னிக்குத்தான் பார்க்கிறேன் அவரை.ரொம்ப பகிர்ந்து கொண்டோம் பல விசயங்களை.அன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற ...மருதமலை போகலாமா ன்னு கேட்க....ஓ தாராளமா போலாமே அப்படின்னு அம்மணிகளை தரிசிக்கும் ஆவலில் சரி என்று சொல்லி அவரை கோவிலுக்கு கூட்டிச்சென்றேன்.எனக்கு முருகனை தரிசிக்கும் ஆவல் இல்லாததால் அம்மணிகளின் தரிசனம் வேண்டி கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டேன்.(நல்ல வேளை யாரும் பிச்சை போடல..)அவர் மட்டும் மேலே சென்று முருகனை தரிசித்து விட்டு வருகிற வரைக்கும் இங்கே தாராளமாய் வேறு தரிசனம் பெற்றுக்கொண்டிருந்தேன்.

அவர் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினோம்.இரவு நீலகிரி எக்ஸ்பிரஸில் அவர் சென்னை பயணம்..அதற்கு முன் சாப்பிட போலாம் என்று முடிவு செய்து அசைவம் சுத்தமாய் வேண்டாம் என அவர் சொல்லிவிட கொஞ்சம் கலக்கமுற்றேன்.ஆனால் அவரோ காலையில் அங்கு தான் சாப்பிட்டேன் என்றும் எப்பொழுது கோவை வந்தாலும் இங்கு தான் தங்குவேன், சாப்பிடுவேன் என்றும் புகழ இன்னிக்கு நாமும் ஒரு கை பார்க்க வேண்டும் என்று அவர் தங்கியிருந்த கீதா ஹால் ஹோட்டலுக்கு சென்றோம்.
(இந்த போட்டோ இணையத்துல சுட்டது)
ஹோட்டல் ஒரு பழைய கட்டிடத்தில் இருப்பது போல தோன்றினாலும் உள்ளே நவீன வசதிகளுடன் இருக்கிறது.ஹோட்டலுக்கு முன்பாக புத்தகங்கள் விற்பனை படு ஜோராக போய்க்கொண்டிருந்தது.அங்கே எழுதப்பட்டிருந்த ஒரு போர்டினுள் நீர் தோசை என எழுதி இருக்கவே என்னவாக இருக்கும் எப்படி இருக்கும் என்ற யோசனையோடு  உள் நுழைந்ததும்  ஒரு கல்யாண பந்திக்குள் நுழைந்தது போல உணர்வு, பார்த்தால் அங்கே வரிசையாய் டேபிள் போடப்பட்டு ஒரே கூட்டம் கூட்டமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.அதற்கேற்றார் போல் பரிமாறுபவர்களும் பாய்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாங்களும் ஒரு வரிசையில் ஐக்கியமானோம்.வாழை இலை போட்டு என்ன வேண்டும் என கேட்பதற்கு முன்பே மனதினுள் குடைந்து கொண்டிருந்த நீர் தோசையை சொல்லி விட்டு அதைப்பற்றி கேட்க பச்சரிசியில் செய்வார்கள் என்ற சிறு குறிப்பை மட்டும் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் பாய்ந்தார்.
அக்கம் பக்கம் சுத்திப்பார்க்க அம்மணிகளின் கூட்டம் ரயில் பிடிக்கும் அவரசத்தில் ஒரு பிடி பிடித்துக்கொண்டு இருந்தது இலையில் இருந்தவைகளை.
சுட சுட நீர் தோசை வர கூடவே மூன்று சட்னிகளும் வர ரொம்ப அருமையாக இருந்தது.முதல் முதலாக இந்த நீர் தோசை சாப்பிடுகிறேன்.இந்த ஹோட்டல் ஸ்பெசல் என்பது அப்போது தான் தெரிந்தது.மிக நன்றாக இருக்கிறது.வயிற்றுக்கு கேடு இல்லாமல் இங்கு தயாரிக்கும் அனைத்து உணவுகளும் மிக சுவையுடன் இருக்கின்றன.

இந்த ஹோட்டலின் வரலாறு பத்தி அப்போது தான் கேள்விப்பட்டேன். சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே (1938 ) இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாகவும் இன்னும் அதே இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் சொன்னார்கள்.மேலும் இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி மாறிக்கொண்டு வருவதாகவும், அதே சுவை, தரம். சுகாதாரம் இன்னும் இருக்கிறது என்றும் சொன்னார்கள்.
இந்த ஹோட்டலில் குவியும் மக்களின் எண்ணிக்கையே அதன் சுவைக்கு அடிமையாக இருப்பதை காணலாம்.கொடுக்கும் பணத்திற்கு திருப்தியான உணவை உண்டு விட்டு வரலாம்.வீட்டு முறைப்படி அடை அவியல். நீர் தோசை, மசால் இட்லி, ரோஸ்ட் வகைகள், என சைவத்தில் ஆரோக்யமான உணவினை வழங்குகின்றனர்.பால் வகைகளில் நிறைய இருக்கின்றன.
இது ரோஸ்ட்.எப்படி மொறு மொறுன்னு...
கண்டிப்பாக சைவ உணவுப்பிரியர்கள் மட்டுமல்ல அசைவ விரும்பிகளும் விரும்பும் இடம்.இந்த ஹோட்டலிலேயே தங்கும் விடுதிகள் மிக குறைந்த விலையில் இருக்கின்றன.
திருப்தியா சாப்பிட்டு விட்டு அவரை வழியனுப்பி விட்டு வந்து சேர்ந்தேன்.நல்ல நண்பரை தந்த இந்த பதிவுலகத்திற்கு நன்றி.

கோவை ரயில்வே ஸ்டேசன் எதிர்ப்புறம் செல்லும் சாலையில் கொஞ்ச தூரம் வளைந்தும் நெளிந்தும் பயணித்தால் கீதா ஹால் மற்றும் ஹோட்டலை அடையலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, July 1, 2013

கோவை மெஸ் - தேங்காய் பன் , கோவை

தேங்காய் பன் : கோவையில இருக்கிற எல்லா பேக்கரியிலும் கிடைக்கிற ஒரு தின்பண்டம் தான் இது.இது முக்கோண வடிவில் இருக்கும்.தேங்காய் துருவலுடன் இனிப்பு சேர்த்து பன்னுக்குள் வைத்து ஸ்டஃப் செய்யப்பட்டிருக்கும்.ஏலக்காய் டூட்டி ஃப்ரூட்டி என கலர்புல்லா இருக்குற இந்த தேங்காய் பன் சாப்பிட்டா சூப்பரோ சூப்பர்.
 
ஒரு பெரிய வட்டமாகத்தான் செய்வார்கள்.ஆனால் பீஸ் போடும் போது முக்கோண வடிவில் கட் பண்ணி தருவார்கள்.மிக சுவையாக இருக்கும். டீ சாப்பிடும் போது இதை கூட சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.நான் பேச்சலரா இருக்கும் போது அதிக நாட்கள் பசி தீர்க்க உதவியது இந்த தேங்காய் பன் தான்.ஒரு பன் சாப்பிட்டாலும் சும்மா வயிறு நிறைஞ்சு கிண்ணுன்னு இருக்கும்.பசியே தோணாது.வேலை முடிந்து களைப்பா வரும் போது சூடா டீ யோடு சேர்த்து இதை கொஞ்சம் கொஞ்சமா புட்டு புட்டு சாப்பிடும் போது அப்படியே எனர்ஜி சேர்ந்து கூட வரும்.அதே மாதிரி வேலைல இருக்கும் போது சாயந்திரம் பயங்கரமா பசிக்கும் அப்போது கடைக்கு போய் டீ தேங்காய் பன் ரெண்டையும் சேர்த்து சாப்பிட்டா பசி கொஞ்சம் பறந்து போகும்.
1998ல கோவைல ஒரு கம்பெனியில் வேலை செய்யும் போது ஆப் நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு 1 மணிக்கு ரூமுக்கு நடந்து வருவோம்.ரொம்ப பசியா இருக்கும்.ஹோட்டல் லாம் இருக்காது.ஆனா பேக்கரி மட்டும் திறந்திருக்கும்.அப்போ வர்ற வழியில எங்களுக்காகவே தேங்காய் பன் வச்சி இருப்பாங்க.அதை மூணு நாலு வாங்கிட்டு சாப்பிட்டுகிட்டே தெம்பா வீடு போய் சேர்வோம்.பசியும் அடங்கின மாதிரி இருக்கும்.தூக்கமும் உடனே வரும்.அப்போ இருந்து இன்னமும் தேங்காய் பன் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.
இப்போ விக்கிற விலைவாசிக்கு தகுந்த படி விலையை ஏத்திட்டாங்க.ஒரு பீஸ் 7 ரூபாய்.ஆனாலும் செம ஓட்டம் ஓடிட்டு தான் இருக்கு.வாங்கி சாப்பிட்டு பாருங்க.அதன் டேஸ்ட் தெரியும்.சங்கனூர் நால்ரோட்டுல ஒரு போலிஸ் செக் போஸ்ட் இருக்கு.அதுக்கு எதிர்த்தாப்புல இருக்கிற பேக்கரில ரொம்ப டேஸ்டா இருக்கும்.அங்க தான் அடிக்கடி வாங்குறது ஒரு முழு ரவுண்ட் பன்.செம டேஸ்டா இருக்கும்.இதன் வாழ்நாள் இரண்டு நாள்தான்.இல்லேனா நல்லாருக்காது.கோவையில இருக்கிற எல்லா பேக்கரியிலயும் அவங்க அவங்களே தங்களுக்கு தேவையான ப்ரெட், கேக், பிஸ்கட், தேங்காய் பன் என எல்லாம் தயாரித்துவிடுகிறார்கள்.அதனாலே எப்பவும் பிரஷான தேங்காய் பன் தான் கிடைக்கும்.தாராளமா வாங்கி சாப்பிடலாம்.பன் என்றாலே மைதா மாவுதான்.இப்போ மைதாவுல என்னென்னமோ இருக்குன்னு சொல்றாங்க.ஆனாலும் இதற்கென ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் புரோட்டாவிற்கு இருப்பது போல.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

 

இன்னும் கொஞ்சம்...