அருள்மிகு தன்னாசி ஈசர் சித்தர் கோவில்
நம்ம
நண்பர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது எதேச்சையா கடவுள் பக்கம் பேச்சு திசை மாறுச்சி..உங்க
குரு யாருன்னு கேட்டாப்ல…எந்த சாமியை கும்பிடுவீங்கன்னு கேட்டாரு.ஒரு காலத்துல சாய்பாபாவை
கும்பிட்டேன்.அப்புறம் இப்போ சிவபக்தனா ஆகிட்டேன். சிவனைத்தான் கும்பிட்டுகிட்டு இருக்கேன்னு
சொன்னேன்..ஆனா அவரு குரு இல்லையே…அவரு கடவுள், அவரை கும்பிட்டு சித்தர் ஆனவங்க குரு..அவர்களை
வழிபட்டால் மிகவும் நல்லது அதுவும் ஜீவ சமாதி அடைந்த சித்தர்களோட அருள் ரொம்ப பலம்
நம்ம தொழில், வம்சம் விருத்திக்கு அவர்களின் ஆசிர்வாதம் நல்லா செட்டாகும் அப்படின்னு
சொல்ல, பேச்சு சித்தர்களைப் பற்றி போனது.பழனி பக்கம் தான் நிறைய சித்தர்கள் ஜீவசமாதி
ஆகி இருக்காங்க, ஒரு சில ஊர்களில் இன்னும் உயிருடனும் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை பகுதி மலைகளில் சித்தர்கள் இன்னமும் இருக்கிறார்கள் 100 க்கும் மேற்பட்ட
சித்தர்கள் இருக்கிறார்கள் தமிழகம் முழுக்க என பேச்சு சுவாரஸ்யமாக திரும்பியது.
நம்மூர்ல
பக்கத்துல யார் இருக்கானு கேட்க, தன்னாசி ஈசர்னு ஒரு சித்தர் இருக்கார்,அவரு ஜீவ சமாதி அடைந்த
இடம் பாலமலை பக்கத்துல செல்வபுரம் என்கிற ஊரில்.அவருக்கு பெரிய கோவிலே இருக்கு.1000
வருடம் பழமை வாய்ந்த ஆலமரமும் காராட்சி மரமும் இருக்கு என சொல்லி என் ஆர்வத்தினை தூண்டினார்..அதுமட்டுமல்ல
அவரது சமாதியில் நீங்கள் வேண்டிய பலனை நினைத்து, இரு கைகளை தள்ளி வைத்து, சித்தரை மனமுருக
வேண்டினால் உங்கள் கை தானாக நெருங்கி வரும் அப்படி வந்தால் நீங்கள் வேண்டிக்கொண்ட காரியங்கள்
கண்டிப்பாய் நிறைவேறும் என கூறி ஆச்சரியமூட்டினார்.
இது
குறித்து கூகுளில் தேடினால் ஒரு சில வீடியோ பதிவுகள், தினமலர் ஆன்மீகம் போன்றவைகளில்
இந்த கோவிலை பற்றி இருக்கிறது,
நாமும்
அந்த சித்தரின் ஆசியைப் பெறுவோம் இன்று கிளம்பி விட்டேன். பெரியநாயக்கன் பாளையத்தில்
இருந்து பாலமலை செல்லும் வழியில் இருபுறமும் பசுமை கண்களை ஈர்க்க, மேற்குத் தொடர்ச்சி
மலைகள் சிறு தொலைவில் பசுமையாக காட்சியளிக்க, செல்வபுரம் என்கிற ஊரில் ஆலமரம் சூழ்ந்த
கோவிலில் ஜீவசமாதி அடைந்த தன்னாசி ஈசர் என்று அழைக்கப் படும் புண்ணாக்கீசர் இங்கே அருள்பாலிக்கிறார்.
கோவிலில் உள்ளே ப்ரவேசித்தவுடன் அப்படி ஒரு அமைதி நிலவுகிறது.பரந்து விரிந்த ஆலமரத்தின் பிரமாண்ட விழுதுகள் கோவிலின் பின்புறத்தில் தூண்களை போல் கிளைகளைத் தாங்கி நிற்கிறது.காராட்சி மரமும், ஆலமரமும் பின்னிப் பிணைந்து கிளிகள், மயில்கள், குருவிகளின் புகலிடமாய் ஆகி, அவைகளின் ரீங்காரம் ஒலிக்க மிக ரம்யமாக இருக்கிறது.
கொடிமரத்துடன் கூடிய கோவிலின்
கருவறையில் தன்னாசி ஈசர் அருள்பாலிக்கிறார்.ஆஞ்சனேயர் சன்னதி, முருகன் சன்னதி, விநாயகர்
சன்னதி, மாரியம்மன் சன்னதி, நவக்கிரக சன்னதி என தனித்தனியாக இருக்கிறது,தியானம் செய்வதற்கென்றே
தனி மண்டபம் இருக்கிறது. இவை அனைத்தும் பக்தர்களின் நன்கொடையில் மண்டபம், கருவறை, கொடிமரம்,
கோபுரம் என எல்லாம் புதிதாய் கட்டப்பட்டிருக்கிறது.சிவலிங்கமும் நந்தியும் ஆலமரத்தின் அடியில் வீற்றிருப்பது அழகு..
இதற்குமுன்
பலவருடங்களுக்கு முன்னால் ஆள் அரவமற்ற இந்த மலைப்பகுதியில், ஒரு ஆலமரத்தின் அடியில்
தவம் புரிந்து கொண்டிருந்த இந்த சித்தர் வருவோர் போவோர்க்கு நோய்களை நீக்கி, அருள்பாலித்துக்
கொண்டிருந்தாராம்.ஒரு நாள் அங்கிருக்கும் குகையில் அப்படியே ஜீவசமாதி ஆகிவிட்டாராம்.அவரை
வணங்கியவர்கள் அந்த ஆலமரத்தின் அடியில் அவரது சிலையை வைத்து வணங்கி வழிபட ஆரம்பித்து
இன்று பெரும் கோவிலாக ஆகி இருக்கிறது.
சித்தர்களுக்கு
என்று தனி சன்னதி அமைக்கப்பட்டு அதில் அகஸ்தியர், திருமழிசை சிவவாக்கிய சித்தர், அழகண்ணர்
சித்தர், கோரக்கர் சித்தர், சுந்தரானந்தர் சித்தர், புலிப்பாணி சித்தர், மச்சமுனி சித்தர்,
கருவூரார் சித்தர், போகர் சித்தர், தன்னாசி ஈசர் சித்தர், பாம்பாட்டி சித்தர், சட்டைநாதர்
சித்தர், கொங்கணர் சித்தர், இடைக்காடர் சித்தர், திருமூலர் சித்தர், காளாங்கி சித்தர்,
குதம்பை சித்தர், கமலமுனி சித்தர் என அனைவருக்கும் தனித்தனியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டு
தினமும் பூஜை நடக்கிறது.
இந்த
கோவிலின் அதிசயம் என்னவெனில் நீங்கள் நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டிக்கொண்டு, ஆலமரத்தின்
அடியில் ஜீவசமாதி அடைந்த தன்னாசி ஈசரின் அருளை பெற, அவரது சிலைக்கு முன் அமர்ந்து தியானித்து,
இரு கைகளை தூரமாக வைத்து வேண்டிக்கொள்ளும் போது, இரு கைகளும் இணையும்.அப்படி இணைந்தால்
நீங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது உண்மை.
இந்த
கோவிலில் ஒரு சில வியாதிகளுக்கு சிகிச்சை இலவசமாக அளிக்கின்றனர்,அங்கேயே தங்கி சிகிச்சை பெறும்
வசதியும் இருக்கிறது.
தன்னாசி
ஈசரின் அருளைப் பெற ஒரு தடவையாவது அங்கே செல்லுங்கள்.
பெரியநாயக்கன்
பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் வழியில் செல்வபுரம் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது
இந்த கோவில்.
கோவிலின்
அருகே யுனைட்டடு இஞ்சினியரிங் கல்லூரியும், அதன் பள்ளியும் இருக்கிறது,
நடை
திறக்கும் நேரம் – காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, பேருந்து வசதி இல்லை.கோவையில்
இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த தன்னாசி ஈசர் சித்தர் கோவில்.
ஓம்
நமச்சிவாய…...
நேசங்களுடன்
ஜீவானந்தம்