Sunday, April 19, 2015

கோவை மெஸ் – ஆட்டுக்கால் பாயா, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்

              திருப்பத்தூரில் ஒரு ஹோட்டலில் மட்டும் ஆட்டுக்கால் பாயா கிடைக்கும், அதுவும் ஞாயிறு மட்டும் தான், அதுவும் காலைல 7.30ல இருந்து 9.30 மணி வரைதான்…மொத்தமா ஒரு ரெண்டு மணி நேரம் தான்…இல்லேனா தீர்ந்துடும்  என சொல்ல அந்த காலை ஞாயிறுக்காக காத்திருந்த நாளும் இன்று வந்தது.
                        என் நண்பர் இங்கு வக்கீலாக இருப்பதால் அவர் தான் திருப்பத்தூரில் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்.ஒரு நாள் என் விருப்பம் அறிந்து சொன்னது தான் மேலே இருக்கிற வரிகள். மேலும் அவர் காலேஜ் படித்தபோது அதிகாலை 5 மணிக்கே ஹாஸ்டலில் இருந்து கும்பலாய் வந்து விடுவார்களாம்.பக்கத்திலுள்ள வீட்டினைத் தட்டி பல் விளக்க பேஸ்ட் கேட்டு எழுப்புவார்களாம்..காலாங்காத்தாலேயே கூட்டமும் அள்ள ஆரம்பித்துவிடுமாம்…..ஆட்டுக்கால் பாயா அம்புட்டு டேஸ்ட் ……என அப்படி அவர் சொல்ல சொல்ல எனக்கும் எச்சில் ஊறியது…சும்மா இருக்க முடியுமா...... ஞாயிறு காலை எப்பவும் போல விடிய, முதல் போன் அவருக்குத்தான்….இன்னிக்கு சண்டே….போலாம் வாங்க…என சொல்ல, 7.30 மணிக்குத்தான்பா….அதுக்குள்ள கூப்பிட்டுட்ட என்றார் வக்கீல்..இல்ல…சும்மா ரிமைண்ட் பண்ணேன்..என சொல்லிவிட்டு ஆயத்தமானேன்..

                7 மணி வாக்கில் இருவரும் டூவீலரில் திருப்பத்தூர் எனும் சிறு நகரத்திற்குள் பயணமானோம்.ஞாயிற்றுக்கிழமை ஆதலால் ஊரே கொஞ்சம் வெறிச்சோடிக் கிடக்க, பேக்கரி கடைகளில் மட்டும் கொஞ்சம் கூட்டமிருந்தது. உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரையின் அளவை குறைக்கவும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதர்களை கண்டதும் இன்னும் பத்து வருசத்துல நாமும் இப்படித்தான் நடை போட வேண்டி இருக்குமோ என எண்ணிக்கொண்டே அவர்களை கடந்து சென்றோம்.
                      திருப்பத்தூரில் கச்சேரி வீதி என்ற தெருவுக்குள் நுழைந்து ராஜன் சாலையில் சென்றபோது தொட்டி எனப்படும் ஆடு வெட்டும் இடம் இருந்தது.ஞாயிறு மதிய வேளையை மட்டன் மணத்தினால் வீட்டினையும் மட்டனால் வயிற்றையும்  நிறைக்க வேண்டும் என்கிற காரணத்தினால் அங்கு மட்டும் கொஞ்சம் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது காலிப்பைகளை கைகளில் ஏந்தியபடி…
                              ராஜன் சாலையின் இருபுறமும் இன்னமும் கடைகள் திறக்கப்படவே இல்லை..ஒருவேளை ஞாயிறு தினமாக கூட இருக்கலாம்.ராஜன் சாலையில் இருந்து இடது பக்கம் ஒரு சின்ன சந்தினுள் நுழைந்தோம்…சிறு சிறு கடைகள் மிக அதிகமாகவும் மிக நெருக்கமாகவும் இருந்தது..அந்த சின்ன சந்தின் பெயர் குப்பையர் வீதி.தங்க வெள்ளி பட்டறைகள் அதிகம் இருக்க கூடிய ஏரியாவில் ஒரு கடை முன்பாக செம கூட்டம்….எல்லா கடைகளும் பூட்டி இருக்க, இந்த ஒரு கடையில் தான் இவ்வளவு கூட்டம்.கூட்டம் என்றால் ஒரு பத்து பதினைந்து பேர்.வருவதும் போவதும் என நிறைய பேர்.கடைக்கு பெயரில்லை.இருட்டடைந்து இருக்கிற மாதிரி தோற்றம்.வண்டியை ஓரங்கட்டிவிட்டு உள்ளே நுழைய ஆரம்பித்தோம்.

                          கடைக்கு போர்டு இல்லை.கடை பெரிதாகவும் இல்லை.ஆனால் நுழையக்கூட இடமின்றி  ஆட்களால் நிரம்பி இருந்தது ஹோட்டல்…
                மாஸ்டர் பரபரப்பாக தோசைக்கல்லில் புரோட்டா போட்டுக்கொண்டிருக்க, அவர் அருகில் ஒருவர் புரோட்டா மாவை விசிறிக் கொண்டிருந்தார்.கடைக்குள் நுழையும் முன்பே இடது புறம் ஒரு பிரியாணி குண்டா…அதில் மட்டன் மணம் முழுவதும் வெளியேறி அந்த இடத்தையே மணக்கச் செய்ய, ஒருவர் கிளறிக்கொண்டும் உள்ளே இருப்பவர்களுக்கு பிரியாணியை பிளேட்டில் போட்டும் அனுப்பிக் கொண்டிருந்தார்.கூடவே ஒருவர் பார்சலுக்கு……..உள்ளே இருந்த அத்தனை டேபிளும் ஆட்களால் நிரம்பி இருந்தது.சாப்பிட்ட ஆட்கள் வெளியேறவும், சாப்பிட ஆட்கள் உட்புகவும் ரொம்ப பிஸியாக இருந்தது.
                   எங்களுக்கு இடம் கிடைத்து அமர வக்கீல் நண்பர் உடனே அந்தக்கடையின் ஸ்பெசலான முட்டை ரொட்டியும் ஆட்டுக்கால் பாயாவும் ஆர்டர் செய்ய, கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாகிப் போனது.காத்திருந்த நேரத்தினை பயனுள்ளதாய் ஆக்க சுற்றும் முற்றும் பராக் பார்க்க, காலையிலேயே மட்டன் பிரியாணியையும் பாயாவையும் வெளுத்துக்கொண்டிருந்தனர் நம்மவர்கள். பார்சல் ஆர்டர்கள் பலதும் வெளியேறிக் கொண்டிருந்தது.அவ்வப்போது கேசியரிடமிருந்தும் பார்சல் கட்டிக்கொடுப்பவரிடமிருந்தும் பில்களின் பெரிய தொகை  சொல்லி சொல்லி ஏலம் போல் நீண்டு கொண்டிருந்தது.ஒவ்வொரு பில்லும் 450, 600, 800, 400 என ஏறியும் இறங்கியும் இருந்தது.குறைந்த பட்சத்தொகை என்று நூறுக்கும் கீழ் எதுவுமில்லை.எல்லா பார்சலும் பாயாவிற்குத்தான் என்பதால் எல்லாம் அதைத் தாண்டித்தான் போய்க்கொண்டிருந்தது.
                    கொஞ்ச நேரம்தான்..பிரியாணி வாசத்திலும் முட்டை ரொட்டியின் வாசத்திலும் மனம் வறுபட ஆரம்பிக்க, லேசாய் பசிக்க ஆரம்பித்தது.முதலில் சேமியா கொடுங்க, முட்டை ரொட்டியை அப்புறம் கொண்டு வாங்க….என சொல்லவும் இடியாப்பம் பாயா உடனே வந்தது.

இடியாப்பம் பூப்போல் மென்மையாய் இருக்க, அதன் மேல் பாயாவினை ஊற்ற மெதுவாய் இறங்கியது அந்த இடியாப்ப சிக்கலுக்குள்….ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட அமிர்தமாய் கரைந்து ஓடியது…ஆட்டுக்கால் பாயாவின் தேங்காய் மணம் மெல்லியதாய் நம் சுவையை ஆக்கிரமித்துக் கொள்ள, இடியாப்பம் சிக்கலின்றி காலியானது.பாயாவில் மிதக்கும் காரமிகுந்த எண்ணைய் ஒரு வித சுவையைக் கொடுக்க இதமாய் பதமாய் உள்ளிறங்கியது இடியாப்பம்..
                 ஆட்டுக்கால்…..ஒரு முழுக்காலே மொத்தமாய் வெந்து இருந்தது.பிய்க்க அப்படியே உரிந்து வந்தது.மென்மையாய் கறி இருக்க, கடினமாய் மெல்லுவதற்கு வாய்ப்பின்றி உள்ளே வழுவழுவென இறங்கியது.ஐந்து இன்ச்க்கும் மேலே இருந்த ஆட்டுக்காலின் எலும்பினை கடித்து உறிஞ்சி இழுக்க, உள்ளே இருந்த ஊனும் நன்றாய் உப்பு காரம் பிடித்து செமயாக இருக்க, சூப்பராய் இருந்தது.ரப்பர் போல இருக்கும் சதைப்பகுதி சாப்பிட டேஸ்டாக இருந்தது.

                வாயில் கவ்விய எலும்போடு சற்றே திரும்ப, எல்லா டேபிள்களிலும் யாராவது ஒருத்தர் ஆட்டுக்கால் எலும்போடு போட்டியிட்டுக் கொண்டிருக்க, நமக்குத் துணையாகவும் ஆட்கள் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் மனம் உற்சாகமடைந்து இன்னும் அதிகமாய் எலும்பை உறிஞ்ச ஆரம்பித்தேன்.
                    முழுக்காலையும் முடித்தபின் பெரிதாய் ஒன்றும் ஏப்பம் வரவில்லை.பின் முட்டை ரொட்டி சூடாய் தட்டில் போடவும், அதைப்பார்த்த போது ஒரு பக்கத்தில் முட்டையும் அதன் மறு பக்கத்தில் புரோட்டோவுமாக இருக்கிறது, அதன் இருபுறமும் இப்படியும் அப்படியும் திருப்பி பாயா என்று சொல்லக்கூடிய சேர்வையை ஊற்றி ஊற வைக்க, அது சிறிது நேரத்தில் ஊறி விட்டது.கொஞ்சமாய் பிய்த்து வாயில் வைக்க செம டேஸ்டாக கரைந்தது.முட்டையும் புரோட்டாவும் சேர்வையும் மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரு தேவாமிர்தத்தை தந்தது.ஒவ்வொன்றின் சுவையும் நாக்கின் நரம்புகளை உசுப்பேற்றிவிட்டு வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தது.


      கேட்க கேட்க சேர்வையை வந்து ஊற்றுகிறார்கள்.கெட்டியாக இல்லாமல் நீர்த்துப்போய் தான் இருக்கிறது ஆனால் சுவை.
கொஞ்சம் கொஞ்சமாய் வயிறு நிறைய ஆரம்பிக்க, அடுத்த மெனுவாய் மட்டன் பிரியாணி வந்து சேர்ந்தது.அதிகமாய் சாப்பிட முடியாது என்பதால் ஆளுக்கொரு அரை பிளேட் மட்டும் சொன்னோம்.ஆனால் அதுவே புல் மீலாக இருந்தது எனலாம்.
                      சின்ன சின்ன அரிசியுடன் மட்டன் மணமும் சேர்ந்து மிக சுவையாக இருந்தது.பாசுமதி அரிசியில் தான் இந்த வேலூர் மாவட்டத்தில் பிரியாணி செய்வார்கள்.ஆனால் இங்கோ சின்ன அரிசியில் செய்திருந்தது மிக சுவையாக இருந்தது.சீரகசம்பா அரிசி இல்லை என்பது கூடுதல் தகவல்.ஆனால் அரிசியின் டேஸ்ட் சூப்பர்.சிறு சிறு துண்டுகளாக மட்டன் துண்டுகள்..நன்கு பஞ்சு போல் வெந்து இருந்தது.எலும்பும் கடிக்க மிருதுவாக இருந்தது.மட்டன் சுவையோடு பிரியாணியும் மிக அற்புதமாக இருந்தது.ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டமுடித்தபின் தான் பேசாமல் புல் பிளேட் பிரியாணியே வாங்கியிருக்கலாமோ என எண்ண தோன்றியது.


                   அப்பாடா….இப்பொழுது தான் வயிறு நிறைந்த ஞாபகம் வர, கூடவே ஏப்பமும் வர திருப்தியாய் கை கழுவ வந்தோம்…இன்னமும் கூட்டம் கூடிக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை..
எங்களின் பில்லாக ரூ 400 வர அதுவும் இருவர் மூலமாய் ஏலமாய் சொல்லித்தான் வாங்கி கல்லாவில் போட மீதி சில்லரையை வாங்கிவிட்டு கூட்டத்தினை ஒதுக்கிக் கொண்டு வெளியேறினோம்..



                    கடைக்கு முன் இருந்து திரும்ப ஒரு முறை பார்க்க எப்பவும் போல சலிக்காமல் புரோட்டா போட்டபடி மாஸ்டரும், உதவியாளரும் இருக்க, பெரிய குண்டாவிலே பிரியாணியை கிளறிவிட்டு பார்சல் பண்ணிக் கொண்டிருப்பவரும் தத்தம் வேலையிலே பிசியாக இருக்க, உள்ளேயிருந்து “ஆட்டுக்கால் பாயா ஒரு பிளேட்” என்ற சத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது.……..

கடை பற்றிய சிறு குறிப்புகள்…
இந்தக்கடை கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.கடையின் ஓனர் பெயர் அன்சார்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் இதன் ஸ்பெசலான ஆட்டுக்கால் பாயாவும் முட்டை ரொட்டியும்..மற்றநாட்களில் இல்லை.
காலை 7 மணிக்கே பிரியாணி தயாராகிவிடும்
கடைக்கு போர்டு இல்லை
ஒரே ஒரு குறை மட்டுமே...இலைக்குப்பதில் பிளாஸ்டிக் பேப்பரை உபயோகப்படுத்தி வருகிறார்கள்.

முகவரி : குப்பையர் தெரு, ராஜன் சாலை

திருப்பத்தூர் வந்தீங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு போங்க…..

நேசங்களுடன்
ஜீவானந்தம் 





இன்னும் கொஞ்சம்...

Friday, April 10, 2015

மலரும் நினைவுகள் - சிம்னி விளக்கு

சிம்னி விளக்கு
            நாமக்கல் அருகே ஒரு கிராமத்திலுள்ள கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கே கடைவிரிக்கப்பட்டிருந்த பல பொருட்களில் இந்த சிம்னி விளக்கும் அடக்கம்.எப்பொழுதோ அடக்கமாகிவிட்ட சிம்னி விளக்கு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பார்த்தவுடன் பயங்கர ஆச்சர்யம்....இந்த விளக்கு இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று...அந்த ஆச்சர்யம் முடிவதற்குள் ஒரு வயதான பாட்டி இந்த விளக்கின் விலை கேட்டு வர தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் இன்னும் இருண்ட பகுதியாகவும் மின்வெட்டின் துணை கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தெரியவருகிறது.
              சிம்னி விளக்கு.....பார்க்கவே மிக சின்னதாகவும், அதில் பொருத்தப்பட்டு இருக்கிற கண்ணாடி குடுவையானது மேலும் கீழும் சிறுத்து நடுவில் கொஞ்சம் பெரிதாய் அகண்டும் ஒரு அழகான அம்மணியின் மேனியழகை ஒப்ப இருக்கும் இந்த குடுவை, அதில் மிக சரியாய் பொருத்தப்பட்டும், ஒரு சின்ன தூண்டுகோல் திரியை ஏற்றுவதற்கும், அடிப்பாகத்தில் எண்ணைய் ஊற்ற உருண்டைப்பகுதியும் இவற்றையெல்லாம் தாங்க ஒரு சின்ன அடிப்பகுதியும் இருக்கிறது.மேலும் அதிக கனமில்லாமல் இருக்கிற ஒரு அற்புத விளக்கு இது.
           முன்பொரு காலத்தில் இரவு நேரத்தில் வீடானது மிகவும் இருட்டாக இருப்பதை தவிர்க்க ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு போல உபயோகப்படுத்தப்பட்ட விளக்கு இது.200 மில்லி சீமண்ணைய் இருந்தால் போதும் விடிய விடிய எரியும்.மின் வசதி இல்லாத காலத்தில் இந்த விளக்கும் அரிக்கேன் விளக்கும் தான் துணை.இந்த விளக்கின் துணை கொண்டு எத்தனையோ பேர் படித்து இருக்கின்றனர்.நானும் சிறு வயதில் இந்தவிளக்கில் தான் படித்திருக்கிறேன். இருட்டின் பயத்தை போக்க தலைமாட்டுக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கியிருக்கிறேன்.அருகில் உள்ள அடுத்த அறைக்கு செல்லும் போது இந்த விளக்குதான் துணையாய் இருந்திருக்கிறது.
                   பள்ளி முடிந்து வந்தபின் இந்த விளக்கின் கண்ணாடியை எடுத்து விபூதி போட்டு பளிச்சென துடைத்து எண்ணைய் ஊற்றி வைப்பது தினமும் வழக்கப்படியாயிருந்தது.கரண்ட் வசதி வந்தபின்னும் இந்த விளக்கு சின்ன சின்ன உபயோகத்திற்கு பயன்பட்டு வந்தது.இரவு நேரங்களில் திடீரென்று மின்சாரம் போய்விட்டால் உடனடியாக பொருத்தி வைக்கிற விளக்கு இது தான்.கொசுவர்த்தி மேட் வந்தபின்பு இந்த சிம்னி விளக்கின் கண்ணாடியின் மேல் ஒரு பிளேடு வைத்து அதில் கொசு மேட் வைத்து சிறிதாக திரியை வைத்து மெலிதாய் எரியும் படி செய்து கொசுவிரட்டியாக பயன்படுத்தியது ஞாபகத்தில் இருக்கிறது.
                 மண்ணெண்ணைய் அதிகம் புழக்கத்தில் இருந்தபோது இந்த விளக்கு அத்தியாவசியமானதொன்றாக இருந்தது.எப்பொழுது மண்ணெண்னணெய் க்கு தட்டுப்பாடு வந்ததோ அதில் இருந்து இந்த அற்புத விளக்கு மறைய ஆரம்பித்தது.கரண்ட் வசதியும் வர சுத்தமாய் ஒழிந்து விட்டது.ஆனாலும் இன்னும் கரண்ட் வசதியில்லாத  எத்தனையோ வீடுகளில் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதேச்சையாய் இதை எங்காவது காணும்போது நம் ஞாபகத்திலும்....

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Sunday, April 5, 2015

தீக்குச்சி - தயாரிப்பு ஒரு பார்வை

தீக்குச்சி...
இது ஒரு அத்தியாவசியப்பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆண்கள் முதல் பெண்கள் வரை தினமும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்.பீடி, சிகரெட் பத்தவைப்பது என்றாலும், வீட்டில் அடுப்பு பத்தவைப்பது என்றாலும் இல்லை அடுத்தவன் வீட்டை கொளுத்துவது என்றாலும் எல்லாரும் உபயோகப்படுத்துவது தீப்பெட்டியும் அதனுள்ளே இருக்கின்ற தீக்குச்சியும் தான்.என்னதான் சிகரெட் லைட்டர் கேஸ் லைட்டர் வந்தாலும் இன்னமும் பயன்பாட்டில் இருக்கிறது இந்த தீக்குச்சி..இப்பொழுது மெழுகில் குச்சி வந்தாலும் இன்னமும் இதன் புழக்கம் குறையவில்லை.

தீக்குச்சி தயாரிக்கும் மரத்தின் பெயர்  பெரு மரம், பீமரம், பீநாரி அல்லது பீதனக்கன்.இதன் அறிவியல் பெயர் அய்லாந்தல் எக்செல்ஸா(Ailanthus excelsa).இது ஒரு இலையுதிர் மரமாகும்.இந்தியாவில் இதன் உற்பத்தியில் தமிழகத்தில் முதலாவது இடமும் கேரளா இரண்டாவது இடமும் வகிக்கிறது

தீக்குச்சி எப்படி தயாராகிறது:
தீக்குச்சி மரத்தினை துண்டு துண்டாக ஒரு அடிக்கும் மேலான அளவில் வெட்டிக் கொள்கின்றனர்.அதன் பட்டையை உளித்து இருபுறமும் அதன் மத்தியில் பிடிக்ககூடிய மாதிரி ஒரு உலோக கருவியில் மாட்டி அதற்கென்று இருக்கும் மெசினில் பொருத்தி விடுகின்றனர்.மெசின் வேகமாய் உருளும் போது அதன் அருகே இருக்கிற பிளேடு உருளை வடிவ மரத்தினை பட்டை போல் வெட்டுகிறது. வேக வேகமாக சுத்தும் போது பிளேடு தேவையான அடர்த்தியில் மற்றும் அகலத்தில் ஒரு பெல்ட் போன்று நீளமாக அறுத்து வெளியே தள்ளுகிறது. இப்படி ஒவ்வொரு துண்டு மரமும் இப்படி நீளமாக வருகிறது.அதை தேவையான நீளத்திற்கு கட் பண்ணி வைத்துக் கொள்கின்றனர்






இப்படி அனைத்து துண்டுகளும் நீளமான பெல்ட் போன்று கட் பண்ணிய உடன் அதை இன்னொரு பலகையில் அடுக்குகின்றனர்.அனைத்தும் அடுக்கி முடிந்த பின்னர் வெட்டு மெஷினில் வைத்து அடுக்கி சரியான அளவு வைக்கின்றனர்.பின் மெஷின் ஓடும் போது வெட்டும் கத்தி சீராக வெட்டி தீக்குச்சியை வெளியே தள்ளுகிறது.ஒரு நிமிட நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தீக்குச்சிகள் வெட்டப்படுகின்றன.அதை எடுத்து வெயிலில் உலர வைக்கின்றனர்.உலர்ந்தபின் மூட்டையாய் கட்டி அனுப்புகின்றனர்.






இப்படி தீக்குச்சி ரெடியாகி முனையில் மருந்து வைப்பதற்காக சிவகாசி, குட்டி சிவகாசி (குடியாத்தம்) போன்ற ஊர்களுக்கு அனுப்புகின்றனர்.அங்கு தீக்குச்சியுடன் மருந்து வைக்கப்பட்டு பெட்டியில் உரச ரெடியாகிறது.

தீக்குச்சி மரத்தில் ஈரப்பதம் இருப்பதால் அது உளிப்பதற்கு ஏற்றவாறு பட்டை இருக்கிறது.மரம் உலர்ந்து விட்டால் அதில் தீக்குச்சி தயாரிக்க முடியாது.
4 டன் எடையுள்ள பச்சை மரம் ஒரு டன் எடையுள்ள தீக்குச்சிகளை தருகிறது.
சாதாரண தீக்குச்சி என்று தான் நாம் நினைக்கிறோம் ஆனால் அது தயாரிக்க ஏகப்பட்ட  உழைப்பு வேண்டியிருக்கிறது.

நன்றி
குப்புசாமி தீக்குச்சி தொழிற்சாலை, திருப்பத்தூர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, April 2, 2015

சமையல் – இனிப்பு - பப்பாளி அல்வா (PAPAYA HALWA)

                         இப்போ பப்பாளி சீசன் போல...எங்க பார்த்தாலும் பப்பாளி பழங்களா தெரியுது.எங்க கிராமத்துல ஒவ்வொரு வீட்டின் புழக்கடையிலும் ஒண்ணு ரெண்டு பப்பாளி மரங்கள் இருக்கும்.காசு கொடுத்து வாங்கி தின்ற பழக்கம் இல்லை இதுவரைக்கும்.வீட்டு மரங்களில் பழுக்கின்ற பழங்களை எங்கள் தேவைக்கு போக மீதி அக்கம்பக்கத்து வீட்டினருக்கு கொடுத்து விடுவோம். மரத்திலேயே பழுத்து இருப்பதால் நல்ல ருசியும் மணமும் இருக்கும் ஆனால் இப்போது நகரத்தில் விற்கிற காய்கள் அனைத்தும் கல் வைத்து பழுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றதால் சாப்பிட பிடிப்பதில்லை.

                         அப்படி ஊருக்கு சென்றிருந்த போது கொண்டு வந்திருந்த பழங்களில் செய்த பதார்த்தம் தான் இந்த அல்வா. இதுவரைக்கும் எங்கேயும் சாப்பிட்டதில்லை.புதிதாய் முயற்சித்து பார்ப்போமே என்றதில் நல்ல ரிசல்ட்.நம்ம அம்மணிக்கும் சந்தோசம்... சுவை நன்றாக வந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:
பப்பாளி  - 1 பழம்
சர்க்கரை – கால்கிலோ
நெய் – 200 மிலி
முந்திரி – சிறிதளவு
பாதாம் – சிறிதளவு
ஏலப்பொடி - சிறிதளவு

செய்முறை:
ப்ப்பாளி பழத்தினை தோல் சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
அடுப்பினை பற்றவைத்து வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரைத்த பப்பாளி விழுதினை விட்டு வதக்க வேண்டும்.
பச்சை வாசம் போகும்போது சர்க்கரையை கொட்டி கிளறவேண்டும்.
ஏலக்காய் பொடி தூவவேண்டும்
நன்கு வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு வதக்கி நன்கு வெந்தபின் வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது கொஞ்சம் நெய்யில் முந்திரி பாதாம் பருப்புகளை வறுத்து அல்வாவுடன் சேர்த்து கிளறவும்.







 

சுவையான சூப்பரான அல்வா ரெடி....
சூடாகவோ ஆறவைத்தோ சாப்பிட செமையாக இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...