Monday, April 23, 2018

விபத்து

                 பொதுவாக விபத்துக்கள் அதிகரிக்கும் மாதங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் தான்.ஏனெனில் இந்த மாதங்களில் தான் குடும்பத்தோடு சுற்றுலா செல்பவர்கள், பள்ளி விடுமுறையை கழிக்க வெளியூர்க்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் என அதிகமாக இருக்கிறார்கள்.
                           இவர்களே அதிகம் விபத்துக்கு உள்ளாகின்றனர்.காரணம் சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் நகரத்தில் மட்டுமே ஓட்டி இருப்பார்கள்.தொலைதூர பயணங்களை மேற்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும் காரணத்தினால் வாகனங்களை அதிவேகமாக இயக்குவார்கள்.வேகக்கட்டுப்பாடு இன்றி செல்வதால் விபத்துக்குள்ளாகின்றனர்.அதுமட்டுமல்ல வாகனப் போக்குவரத்து அதிகமாகி விட்டதாலும், சாலை விதிகளை மீறுவதாலும் விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.
                   வாகனங்களால் விபத்து என்பது பத்து பர்சன்ட்க்கும் குறைவுதான்.வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையினால் தான் அதிகம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.கடந்த வாரத்தில் மட்டும் மதுரை அருகே குடும்பத்தோடு விபத்தில் சிக்கி பல பேர் இறந்துவிட்டனர்.சேலம் ஓசூர் நெடுஞ்சாலையில் பல பேர் விபத்தில் இறந்திருக்கின்றனர்.இன்று கூட பஸ் கவிழ்ந்து பலர் மரணம் என்று செய்திகள் வருகின்றன.கோவை ஆழியாறில் குளிக்கப் போய் நான்கு இளைஞர்கள் இறந்து இருக்கின்றனர்.திருப்பூரில் ஐந்து பேர் குளத்தில் மூழ்கி இறந்திருக்கின்றனர்.இது எனக்கு தெரிந்த விபத்துக்கள்.தெரியாத விபத்துக்கள் தினமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் மரணங்கள் போலவே ஆறு, குளங்கள், கடல்களில் இறப்பவர்களும் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர்.
                             காரில் பயணிப்பவர்கள் அதுவும் குடும்பத்தோடு பயணிப்பவர்கள் அளவான வேகத்துடன் பயணிப்பது நல்லது.இரவு நேரங்களில உங்கள் பயணங்களை ஒத்திப் போடுங்கள்.அதிகாலை நேரங்களில் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.தூக்க கலக்கத்தில் தான் அதிகம் அதிகாலை விபத்துகள் உண்டாகின்றன.ட்ரைவர் வைத்திருந்தால் அவருக்கு ஓய்வு கொடுங்கள்.பணம் தருகிறோம் என்கிற எண்ணத்தில் அவரை வாட்டி வதைக்காதீர்கள்.இரவு நேரங்களில் தங்கும் போது அவர்க்கும் தனி அறையை ஒதுக்குங்கள்.சிலபேர் காரிலேயே ட்ரைவரை படுக்கச் சொல்லிவிடுவர் அப்படி செய்து விடாதீர்கள்.அவரின் ஓய்வில் தான் உங்களின் உயிர் இருக்கிறது.அதே போல் செல்ப் ட்ரைவிங் செல்பவர்கள் மிதமான வேகத்தில் செல்லுங்கள்.சாலை விதிகளை மதியுங்கள்.பாதசாரிகளை, இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்தும்படி ஓட்டாதீர்கள்.உங்கள் குடும்பத்தினரை வைத்துக்கொண்டு சாலையில் சாகசம் காட்டாதீர்கள்.மொபைல் போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டாதீர்கள்.குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.
                                  தொலைதூரம் செல்பவர்கள் வண்டியை மெக்கானிக்கிடம் விட்டு செக் செய்து விட்டு வண்டியை எடுங்கள்.ஸ்டெப்னி, பஞ்சர் பொருட்கள், ஜாக்கி, டூல்ஸ் மற்றும் முதலுதவி பொருட்களை வைத்திருங்கள்.வாகனத்தினை எப்பொழுதும் இடதுபுறமே இயக்குங்கள்.நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் போது உங்களுக்குண்டான வேகத்தில் குறிப்பிட்ட லேனில் பயணியுங்கள்.முன்னே செல்லும் வாகனத்திற்கும் உங்களுக்கும் 10 மீட்டர் தூரம் இருக்கட்டும்.
                     சாலையில் கட் அடித்து அடித்து ஓட்டாதீர்கள்.வளைவுகளில் முந்தாதீர்கள்.அரைமணி நேரம் தாமதமாக செல்வதால் ஒன்றும் குடி முழுகி போகாது.அதற்கேற்ப முன்கூட்டியே புறப்படுங்கள்.
சிக்னல்களை மதித்து செல்லுங்கள்.
                 டாஸ்மாக்கிலும், திரையரங்குகளிலும் நிற்பதை போல் சிக்னல்களிலும் சில நிமிடங்கள் நில்லுங்கள்.இல்லையேல் ஒரு நிமிடம் இரு நிமிடங்களில் உங்கள் வாழ்க்கையே முடிந்து போனாலும் போகும்
       மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் ஒரே வேண்டுகோள்.ஹெல்மெட் அணியுங்கள்.சாலையில் சாகசம் வேண்டாம்.இரண்டு பேர் செல்லக் கூடிய வாகனத்தில் குடும்பத்தினையே ஏற்றிச் செல்லாதீர்கள்.
பாதுகாப்பாய் பயணங்களை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கை உங்கள் கால்களில்..
ஆம்..சரியாய் ப்ரேக் பிடியுங்கள்...
வேகத்தை குறையுங்கள்.
வாழ்நாட்களை அதிகரியுங்கள்.
உங்களின் இழப்பு வீட்டிற்கு மட்டுமல்ல..நாட்டிற்கும் தான்.
விபத்தில்லாத பயணங்களை மேற்கொள்ளுங்கள்.
                              
எவ்வளவுதான் பாதுகாப்பாய் நாம் பயணித்தாலும் எதிர் வரும் வாகனங்களினால் ஏற்படும் விபத்திற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது.நம் இவ்வுலகில் வாழ தகுதி முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, April 18, 2018

கோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, தடாகம் ரோடு, இடையர்பாளையம், கோவை


                       மாலை மங்கிய நேரம்...பசி கிள்ள ஆரம்பித்தது...தடாகம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எப்போதோ யாரோ சொன்னது ஸ்டார் பிரியாணியில் டேஸ்ட் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று.ஹோட்டலை தேடியதில் கிருத்திகா தியேட்டர் அருகே இருப்பது தெரிந்தது.அடுத்த ஐந்தாவது நிமிடம் ஆஜர் அங்கே.ஸ்டார் பிரியாணி..ஆம்பூர் பேமஸ் ஸ்டார் அல்ல.இது கோவை ஸ்டார்..சின்ன ஹோட்டல்தான்.மிகவும் நீட்டாக இருக்கிறது.ஏசியின் குளிரில் மெல்லிசை பரவிக் கொண்டிருக்க, டேபிள்கள் துடைத்து வைக்கப்பட்டு பளபளவென இருந்தது.இண்ட்ரீயர் மிகவும் சிம்பிளாக, சிகப்பும் வெண்மையும் மிகுந்த காம்பினேசனில் கலர்புல்லாக இருந்தது..ஆர்டராய் பாப்கார்ன் சிக்கன், சிக்கன் விங்ஸ், சிக்கன் பிரியாணி, நூடுல்ஸ் என கொடுத்தோம்..

                   முதலில் வந்தது பாப்கார்ன் சிக்கனும், விங்ஸ் ம்..இரண்டும் கேஎஃப்சி ஸ்டைலில் பொன்னிறமாக, மொறுமொறுவென இருக்கிறது.பாப்கார்ன் சிக்கன் உருண்டையில் பெரிதாய் இருக்கிறது.உள்ளே சிக்கன் மிகவும் மென்மையாய் வெந்திருக்கிறது.குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் காரம் குறைவாக இருக்கிறது.


       சிக்கனை நன்கு காரசாரமாக சாப்பிட்டால்தான் பலருக்கு பிடிக்கும்.ஆனால் கேஎஃப்சி வந்ததில் இருந்து சிக்கனை பக்கோடா ஸ்டைலில் சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்து இருக்கிறது.அது மட்டுமல்ல சாஸ் தொட்டு சாப்பிடுவது சுவையாக இருக்கிறது.இந்த ஹோட்டலில் அந்த மாதிரி சிக்கன் மிக சுவையாக இருக்கிறது.விங்ஸ் அதே மாதிரிதான்..சிக்கன் கறிக்குண்டான மணம் இல்லை.பக்கோடா போன்றே இதுவும்.சாப்பிட சுவையாக இருக்கிறது.
                அடுத்து சிக்கன் பிரியாணி..அதிசயமாய் பாசுமதி அரிசியில்.நீளமான அரிசி சற்றே சுவையாக இருக்கிறது.சிக்கன் துண்டுகள் அளவான காரம் உப்புடன் மென்மையாய் வெந்திருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது.பாசுமதி அரிசி சாப்பிடுவதே தெரிவதில்லை.அந்தளவுக்கு உள்ளிழுக்குகிறது.
தயிர் பச்சடி செம..நன்கு கெட்டித்தயிரில் வெங்காயம் ஊறி, புளிப்பின்றி மிக சுவையாய் இருக்கிறது.




                        மெனுக்கள் விலை கொஞ்சம் குறைவாக இருக்கிறது.கோவில்மேடு கணுவாய் சாலையில் நான்வெஜ் ஹோட்டல் பெரிதாய் ஒன்றுமில்லை.இந்த ஸ்டார் பிரியாணி மிக டீசன்ட் ஆக இருக்கிறது.



                       நல்லா லோக்கலா இறங்கி சாப்பிடனும் என்றால் அருகிலேயே அஜ்மீர் பிரியாணி இருக்கிறது.பீஃப் வெரைட்டிகள் நிறைய கிடைக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, April 17, 2018

கரம் - 31

இனிய வணக்கங்கள்
இந்த வார நிகழ்வுகளின் தொகுப்புகள் :

டக்கரு டக்கரு : வீடியோ 
விளம்பர விமர்சனம் :
                      சரவணா ஸ்டோர் சூப்பர் ஸ்டாரான அண்ணாச்சியின் சமீபத்திய விளம்பர வீடியோ கொஞ்சம் கலர்புல்லாகவே இருக்கிறது.டக்கரு டக்கரு எனத் தொடங்கும் பாடல் கொஞ்சம் வசீகரிக்கிறது.குழந்தைகள் மற்றும் ஃபாரின் அம்மணிகளுடன் இவர் ஆடும் ஆட்டம் ( நடை ) நம்மை ஈர்க்கிறது.ஒரு பள்ளி டீச்சர் குழந்தைகள் உயிர் மெய் எழுத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள கண்டறிந்த ஒரு ட்யூனை இதில் அழகாய் பொருத்தி இருப்பது நன்றாக இருக்கிறது.
              குழந்தைகள் இதை அதிகம் உச்சரிப்பார்கள் என்பது நிச்சயம்.அந்த வரிகள் வரும் இடத்தில் அழகான வயது முதிர்ந்த குழந்தைகளை கொண்டு காட்சி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
                        அதுமட்டுமின்றி அண்ணாச்சி இரண்டு எளிய ஸ்டெப் களை போட்டு அசத்தியிருக்கிறார்..
                   வெளிநாட்டு கவர்ச்சிக்கன்னிகள் சுற்றிலும் நடனமாட இவர் தல நடை நடப்பது சிறப்பு...அதிலும் மெயின் ஸ்டெப் ஆனது போட்டிருக்கும் உடையினை பிடித்து கொண்டு கைகளை அசைப்பது ஆண்களின் பேச்சுலர் வாழ்வில் அரங்கேறி கைரேகை அழிந்து போன ஒரு சிறப்பான மூவ்மென்டை காப்பி அடித்திருப்பதும் தெரிகிறது.. மொத்தத்தில் இந்த விளம்பர உலகில் அண்ணாச்சியின் இடத்தை யாராலும் அசைக்க முடியாது.பார்க்க நன்றாகவே இருக்கிறது..எனிவே இந்த கோடை விடுமுறையை சரவணா ஸ்டோரில் கொண்டாடுவோம்.. வெயிலில் இருந்து நம்மை காப்போம்..


ஆசிஃபா :
மனித மிருகங்கள் உலாவும் காட்டில் பெண்ணாய் பிறந்து விட்டாயே.உன் ஆத்மா சாந்தியடையட்டும்..
கோவையில் பலவருடங்களுக்கு முன்னர் பள்ளிக்குழந்தைகளை கடத்தி கற்பழித்து கொலை செய்தவர்களில் ஒருவரை சைலேந்திரபாபு என்கவுண்டர் செய்ததை போல் இந்த மாதிரி குழந்தைகளை பாலியல் குற்றத்திற்கு ஆளாக்கும் நபர்களை உடனடியாக என்கவுண்டர் செய்தால் மீண்டும் தலையெடுக்க மாட்டார்கள்.குழந்தைக்கெதிரான குற்றச்செயல்களும் குறையும்.

விமர்சனம்: 
பத்மாவத் - தமிழ் டப்பிங்
இப்பதான் பார்க்க முடிந்தது.வரலாற்று காவியம்.அப்படி ஒண்ணும் பெரிதாய் ஈர்க்கவில்லை.தமிழ் டப்பிங்கில் பார்க்கும் போது பொறுமையை பெரிதும் சோதிக்கிறார்கள்.ஒவ்வொரு டயலாக்கையும்இ...ழு...த்..து...இ...ழு...த்...து பேசும் போது எரிச்சல் தான் வருகிறது.தீபிகா படுகோன் செம அழகு..படம் முழுக்க போர்த்திக் கொண்டே வருவது போரடிக்கிறது.கில்ஜி யாய் ரண்வீர் சிங்..மிரட்டல்..
பத்மாவதியின் அழகை கேள்விப்பட்டு கில்ஜி அவளை கைப்பற்ற நடக்கும் யுத்தக்கதை தான் இந்தப்படம்..
ஒளிப்பதிவு சூப்பர்..படத்தில் வரும் போர்க்காட்சிகள் பாகுபலியில் பிரமாண்டத்தை பார்த்துவிட்டபடியால் இங்கே செல்ப் எடுக்கவில்லை.
பார்க்கலாம் ரகமே.

உணவகம் : 
வெகுவிரைவில் கவுண்டம்பாளையத்தில் உதயமாக இருக்கிறது கொக்கரக்கோ உணவகம்.கவுண்டம்பாளையத்தில் பல வருடங்களுக்கு முன்னால் கொக்கரக்கோ உணவகம் இருந்தது.
இடையில் பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கொக்கரக்கோ இடம் மாறியது.அந்த இடத்தில் வினோத் சிக்கன் ஸ்பாட் என ஆரம்பித்தனர்.கொக்கரக்கோவின் பழைய செட்டப்பில் புது ஆட்களுடன் இயங்க ஆரம்பித்தது.கவுண்டம்பாளையத்தில் இருக்கும் ஒரே தந்தூரி, கிரில் சிக்கன் உணவகம் இது தான்.விலையும் தாறுமாறாய் இருந்தாலும் கூட்டம் அங்கு கும்மும்.
காரணம் கொக்கரக்கோ வின் பழைய வாடிக்கையாளர்கள்.
இப்போது கொக்கரக்கோ புதிய கிளையினை கவுண்டம்பாளையத்தில் பஸ் ஸ்டாப் அருகில் ஆரம்பிக்கவிருக்கிறது.ஓரிரு தினங்களில் வெற்றி நடை போடும் என எதிர்பார்க்கலாம்..



நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...