பிரியாணி :
இங்கு
கிடைக்க கூடிய உணவுகளிலே முதல் இடம் பிடிப்பது பிரியாணி தான்.நகரம் முழுக்க நிறைய உணவகங்களில்
பிரியாணி கிடைத்தாலும் அங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது பாரடைஸ் பிரியாணி தான்.
நாங்கள்
சென்ற போது இரவு வேறு நீண்டுவிட்டதால், கடும் வாகன நெரிசலில் மாட்டிக்கொள்வோம் என்பதினால்
பார்சல் வாங்கி கொண்டு சென்று விட்டோம்.அழகான பேக்கிங்கில் மட்டன் பிரியாணியை தருகின்றனர்.அளவும்
மிக அதிகமாகவே இருக்கிறது.விலை அதிகம் என்பது கொடுக்கிற பிரியாணிக்கு ஏற்றவாறே இருக்கிறது.
வீட்டில் சென்று பாக்கெட்டை பிரித்தவுடனே வீடு முழுவதும் பிரியாணியின் மணம் பரவ, பயங்கரமாய் பசி எடுக்க ஆரம்பித்தது.பரபரவென இயங்கி தட்டுக்களில் கொஞ்சம் போட்டுவிட்டு சாவகாசமாக அமர்ந்தோம். முதலில் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டால் போதும், நாவின் சுவை நரம்புகள் கொஞ்சம் தடுமாறித்தான் போகின்றன நீளமான பாசுமதி அரிசி வெள்ளையும் மஞ்சளுமாக, மசாலாவுடன் சேர்ந்து, ஒவ்வொரு பருக்கையும் ருசி கொண்டு இருக்கிறது.அதுபோலவே நன்கு வெந்த மிருதுவான மட்டன் துண்டுகள் இன்னும் சுவையை அதிகரிக்கின்றன.
மணமிகுந்த
பாசுமதி அரிசியின் சுவை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு பிடிபடுகிறது.கொஞ்சம் இனிப்பும், காரமும்
சேர்ந்து நம் நாவை வசப்படுத்துகிறது.பின் சத்தமே இல்லாமல் காரியமே கண்ணாகிறது.கை பாட்டுக்கு
பிரியாணியை எடுத்து உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறது.சுவை அந்தளவுக்கு நம்மை வசியம்
செய்கிறது.அதனால் தான் என்னவோ பாரடைஸ் பிரியாணிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நம்மூர்
போல பிரியாணி சீரக சம்பா மற்றும் மட்டனோடு சேர்த்து வேக வைப்பதில்லை.நம்ம ஊர் பிரியாணி
சுவை அது வேறு ஒரு லெவல்.ஆனால் ஹைதராபாத்தில் பிரியாணி செய்முறை வேறு.அரை வேக்காடு
பாசுமதி அரிசியுடன், மட்டன் மற்றும் மசாலா சேர்த்து ஒவ்வொரு லேயர் லேயராக வைத்து பின்
குங்குமப்பூ நீர் ஊற்றி, தம் வைத்து பிரியாணி
செய்கின்றனர்.
பாரடைஸ்
மட்டுமன்றி நிறைய ஹோட்டல்களில் பிரியாணி ருசி பார்த்தேன்.அத்தனையும் அருமை..ஆவ்சம்…ஒவ்வொன்றும்
ஒரு சுவை தந்து மனதையும் வயிற்றையும் நிரப்புகிறது.
ஹலீம் - Haleem
ஹைதையின்
மற்றுமொரு சிறப்பு வாய்ந்த உணவு ஹலீம்.ரம்ஜான் மாதம் மட்டும் இந்த ஹலீம் மிகப்பிரசித்தம்.நோன்பு
காலங்களில் மட்டுமே இது கிடைக்கும்.நல்லவேளையாக நாங்கள் சென்றிருந்த போது கோல்கொண்டா
கோட்டை அருகே ஹலீம் கென்றே ஒரு கடை இருப்பதைக் கண்டு அங்கே ஆஜரானோம்.
சிக்கன்,
மட்டன், பீஃப் போன்ற இறைச்சிகளில் இந்த ஹலீம் செய்யப்படுகிறது.மசாலா மற்றும் இறைச்சியை
மிகவும் மெதுவாய் எட்டுமணி நேரம் வேகவைத்து இந்த ஹலீம் தயாரிக்கப்படுகிறது.
கொஞ்சம் மிருதுவாய் களி போன்று இருக்கிறது.இதனை ஒரு பிளேட்டில் வைத்து நடுவே கொஞ்சம் மட்டன்
சாறு ஊற்றி, கொஞ்சம் வெங்காயம், புதினா, கொத்தமல்லி தூவி தருகின்றனர்.சாப்பிட்டு பார்த்ததில்
செம டேஸ்ட்.எலும்பில்லாத இறைச்சியும் மசாலாவும் சேர்ந்து நாவுக்கு ஒரு புதிய சுவையைத் தருவது செம டேஸ்ட்…
நேசங்களுடன்
ஜீவானந்தம்