Monday, December 21, 2020

பயணம் - கொச்சின், கேரளா TRAVEL - COCHIN, KERALA

கொச்சின் – பயணம்

              கொரோனோ என்கிற நோய் உலக மக்களை எல்லாம் வாட்டி வதைத்து பின் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அதை முதன்முதலில் வரவேற்றது கேரளம் தான்.நோய்த் தொற்றினை தடுக்க மிகுந்த கட்டுபாடுகளை விதித்து கேரள மாநிலம் முன்மாதிரி மாநிலமாக இருந்தது.ஆனால் போக போக கேரளாவிலும் நோய் பீடித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி போனது.அதனால் மாநிலம் முழுக்க பலத்த கட்டுப்பாடுகள்.கேரளா எப்பவும் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது.இந்த கொரோனோவினால் சுற்றுலாத்துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கிறது.

            சுற்றுலாவினை நம்பி இருந்த அத்தனை தொழில்களும் முடங்கி விட்டன.இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்வுகள் விடப்படுகின்றன.இருந்தாலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றது கேரள கடற்கரையோர தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அனைத்தும்.

            ஒரு வேலை விசயமாக கொச்சின் வரை சென்றிருந்தேன்.ரயில் பயணம் தான்.(கொரோனோவினால் நாமளும் தான் பாதிக்கப்பட்டு இருக்கோம்.கார்ல போனா பர்ஸ் பழுத்திரும்.அதனால் ரயில் பயணம்.) எப்பவும் ரயில் நிலையங்களில் கூட்டம் அள்ளும்.ஆனால் எர்ணாகுளம் ஸ்டேசன் மிகுந்த பாதுகாப்புடன் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கிறது.காவல்துறையும் ரயில்வே துறையும் பலத்த பாதுகாப்பில் பயணிகளை வரவேற்கின்றனர்.


            ரயிலில் பயணித்து வருபவர்களில் உள் மாநில மக்கள் என்றால் விட்டு விடுகிறார்கள்.வெளிமாநிலம் என்றால் ஏதாவது ஐடி காண்பித்து, மொபைல் எண் கேட்டு, எங்கு செல்கிறீர்கள் என்கிற விவரம் வரை வாங்கி கொண்டுதான் ஸ்டேசனை விட்டு அனுப்புகிறார்கள்.கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும்.கேரளாவில் எங்கு சென்றாலும் மாஸ்க்கோடு தான் திரியவேண்டும்.

           ஸ்டேசனை விட்டு வெளியே வந்தால் ரோடும் வெறிச்சோடியே இருக்கிறது.ஆட்டோக்கள் குறைந்தளவே இருக்கிறது.முன்பெல்லாம் ஆட்டோவில் ஏறினாலே மீட்டர் போட்டு மீட்டருக்கு உண்டான காசை வாங்குவார்கள்.இப்பொழுது அவர்கள் இஷ்டத்திற்கு ரேட் வாங்குகிறார்கள்.எல்லாம் ரவுண்ட் ஃபிகர் தொகைதான்.சில்லறை என்பதே இல்லை.ஆட்டோ மற்றும் கார்களில் டிரைவர் சீட் பின்னாடி பாலீதீன் கவர்களால் பார்ட்டிசன் பண்ணி வைத்திருக்கிறார்கள்.காரில் ஏசி போடும் போது பின்னாடி இருப்பவர்களுக்கு ஏசி காற்றே வருவதில்லை.கொச்சின் வேறு கடும் வெயிலில் சிக்கித் தவிக்கிறது,கொச்சின் முழுக்க கான்கீரிட் காடுகளாக ஆகிவிட்டதால் வெய்யில் சற்றே தூக்கலாகவே இருக்கிறது.

            கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் சென்று மாலை நேர சூரியன் மறையும் அஸ்தமன காட்சியை காணலாம் என்று அங்கு போனால் ஆட்கள் ஆரவாரமின்றி இருக்கிறது.கண்குளிர சூரிய அஸ்தமனத்தை மட்டும் கண்டேன்.அந்த பகுதி எப்பவும் மக்கள் நெருக்கமாக இருக்கும்.கடை கண்ணிகள் நிறைய இருக்கும்.இப்பொழுது மருந்துக்கு கூட கடை இல்லை.நிறைய பிளாட்பார கடைகள் இருக்கும்.அவை அனைத்தும் காணாமல் இருக்கின்றன.


            கடற்கரையை ஒட்டி மீன்கடைகளும் நிறைய இருக்கும்.உயிரோடு மீன்களை பிடித்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.அதன் அருகிலேயே மீன் சமைத்து தரும் இடங்களும் நிறைய இருக்கும்.இப்போது அவைகளும் இல்லை.

        ஒன்றிரண்டு உப்பு மாங்காய் கடைகள், பட்டம் விற்பனையாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.கூட்டம் மிகக்குறைவாகவே இருக்கிறது.அந்த மாலை வேளையில் சூரியன் எப்படி தனித்து இருக்கிறதோ அதேபோல் மக்கள் கூட்டமும் இருக்கிறது. எப்பவும் வழி நெடுக நிறைய பிளாட்பார கடைகள் இருந்த சுவட்டையே காணவில்லை.

            களையிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது கடற்கரை பீச்.தாராள மனம் கொண்ட கேரள அம்மணிகளும் அதிகம் காணமுடிவதில்லை.முன்பெல்லாம் சென்றால் திரும்ப மனமின்றி வருவோம்.இப்பொழுதோ ஏன் தான் இங்கே வந்தோம் என்றிருக்கிறது.

        கொச்சினில் புதிதாய் ஓட ஆரம்பித்து இருக்கும் மெட்ரோ ட்ரெயினிலும் ஏக கட்டுப்பாடுகள்.அங்கும் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.மெட்ரோ ட்ரெயினில் பயணிக்கையிலும் உள்ளே ஒரு செக்யூரிட்டி அனைவரையும் கண்காணித்து கொண்டே வருவதும் போவதுமாக இருக்கிறார்.முக்கியமாக மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்துகிறார்கள்.



            மாஸ்க் அணிவது பிரச்சினை இல்லை.ஆனால் காதுகளில் மாட்டி மாட்டி காது வலி தாங்க முடிவதில்லை. அவதார் படத்தில் வரும் உயிரனங்களின் காது போல் ஆகிவிடும் போல மாஸ்க் அணிந்து அணிந்து.அதே போல் மூக்கும் சைனாக்காரன் மூக்கை போல சப்பை ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

            கொச்சினின் பிரபலமான லுலு மால் சென்றால் அங்கும் இதே நிலைமைதான்.பரந்து விரிந்த மாலில் கூட்டம் மிக மிக சொற்பமே.லுலு மால் மிக பிரம்மாண்டமாய் ஜொலிஜொலிக்கிறது.இண்டீரியரில் அசத்தி இருக்கிறார்கள்.வெளிநாட்டில் உள்ள மால்களை போன்ற கட்டமைப்பு.மிக நன்றாக இருக்கிறது.என்ன….மக்கள் கூட்டம் மட்டும் இல்லை.மால்களில் அம்மணிகள் அதிகமாக இருப்பார்கள்.பொழுதும் போகும்.ஆனால் இங்கோ தலைகீழ்….




            நல்ல நான்வெஜ் சாப்பிடுவதற்கு ஏற்ற இடம் கேரளா தான்.கடல் உணவுகள் தாராளமாக கிடைக்கும்.அதே போல் கேரளாவின் பாரம்பரிய உணவுகளும் நிறைய கிடைக்கும்,ஆனால் இந்த முறை ஒவ்வொன்றையும் ருசித்துப்பார்க்க பகீரத முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கிறது.நிறைய கடைகள் கொரோனோவினால் பூட்டியே கிடக்கின்றன.மேலும் நான் சென்ற தினமன்று உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் நடப்பதால் அன்றும் நிறைய கடைகள் மூடப்பட்டு இருந்தன.

            முக்கியமாய் நம்ம கள்ளுகடை ஷாப்பும், பெவரேஜ் கடைகளும் நான்கு நாளைக்கு மூடப்பட்டிருக்கிறதாம்.அதிசயமாய் திறந்து வைத்திருந்த ஹோட்டல்களில் கிடைத்த உணவினை சாப்பிட்டுவிட்டு வந்தேன்.பீஃப் கறியும் புரோட்டாவும் சிக்கவில்லை கண்ணுக்கு.ஒரு கடையில் மலபார் பிரியாணி கிடைத்தது.ஆனால் அதிக சுவையில்லை.அப்பம் செம்மீன் கறி ஒரு கடையில் கிடைத்தது.இப்படி தேடி தேடி சாப்பிட வேண்டியதாகி இருந்தது.சோடா, கொளுக்கட்டை உருண்டை இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடமாக தேட வேண்டியதாகிப்போனது.




            இந்த கொரோனாவினால் நிறைய பேர் வேலைகளை இழந்து இருக்கின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.லாட்டரி சீட்டு விற்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக ஆகி இருக்கிறது.எங்கு பார்த்தாலும் அவர்கள் தான்.கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசாங்கம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறது.தமிழகத்தினை போல் தட்டி அடித்து வீட்டை தனிமை படுத்துவதில்லை.நோயாளிகள் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதில்லை.கொரோனோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ரேசன் பொருட்களை தந்துவருகிறது.தனியார் மருத்துவமனைக்கு யாரும் செல்வதில்லை.முழுக்க முழுக்க அரசாங்கமே நல்ல மருத்துவ சிகிச்சையை அளிக்கிறது.

            தமிழக பாலங்களைப் போலவே கேரளாவிலும் பாலங்கள் கட்டுமானப்பணி நடக்கிறது.இங்கு அம்மா ஆட்சி என்பதால் பச்சை கலர் தான் பாலங்கள் முழுக்க.அதே போல் அங்கே சிவப்பு வர்ணங்களை நீல கலரோடு சேர்த்து கம்யூனிஸ்ட் கலர் என்பது தெரியாத அளவுக்கு வர்ணம் பூசி இருக்கின்றனர்.

            இந்த பயணத்தினை பொறுத்தவரை முழுமையான திருப்தி இப்பொழுது கிடைக்கவே இல்லை.100 சதவீதம் கடைகளும், மக்களும் எப்பொழுது இயல்புநிலைக்கு திரும்புகிறார்களோ அப்பொழுது தான் கேரளா பழைய நிலைமைக்கு மாறும்.

இயல்பு நிலை அடைந்தவுடன் மீண்டும் கேரளா பயணப்படவேண்டும்.கேரள உணவுவகைகளை ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

எண்டே கேரளா....இப்போல் நன்னாயிட்டு இல்லா...

நேசங்களுடன்

ஜீவானந்தம்


 

 

 

 

இன்னும் கொஞ்சம்...

Friday, December 11, 2020

இரங்கல் - சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் உயர்திரு.சுப்பிரமணி

 கோவையின் அன்னதான பிரபு சாந்தி கேண்டின்  உயர்திரு.சுப்பிரமணியன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.

சாந்தி சோசியல் சர்வீஸஸ் என்கிற பெயரில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.முகம் காட்டாது பல லட்ச மக்களுக்கு

பசியாற்றிய இவர் கோவை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.


இன்னும் கொஞ்சம்...

Saturday, November 14, 2020

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வின் எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துக்கள்.


நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 18, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

 ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

        ஒரு வேலை விசயமா தேனியில் இருந்து சின்னமனூர் வந்தோம்.நேரத்துலயே போனதால் காலை சாப்பாடு சாப்பிடாம போய்ட்டோம்.பத்துமணி வேற ஆயிடுச்சி.சரி. ஏதாவது இருப்பதை சாப்பிடுவோம்னு பிரபல ஹோட்டலான கர்ணா வுக்கு போய் கேட்டா, பிரியாணியே ரெடியா இருக்குண்ணே..அப்படின்னு சொல்ல, சரி மதிய சாப்பாட்டையே இப்பவே ஆரம்பிப்போம்னு கை கழுவிவிட்டு டேபிளில் அமர்ந்தோம்.


                    பளபளன்னு ஃப்ரஷான வாழை இலை போட, பிரியாணி வெண்கல சிறு குண்டாவில் கொண்டு வைத்து வைக்க, பிரியாணி அதன் நிறத்தோடு மிக்க வாசனையோடு, சீரகசம்பா அரிசியோடு மட்டன் துண்டுகளோடு, இலையில் சூடாய் வைக்க, ஆவி பறக்கும் வாசனையில் மூக்கை துளைத்தது பிரியாணியின் மணம்.ஆஹா..இதுவல்லவோ பிரியாணி...ஒரு விள்ளல் எடுத்து சுவைத்ததும் நாக்கின் நரம்பு மண்டலங்கள் இயந்திரகதியில் இயங்க ஆரம்பித்தன..
நல்ல சுவை.மணம்.நிறம் என அனைத்தும்.





மட்டன் துண்டுகள் அதன் வாசனையில் நன்கு வெந்திருக்கிறது..சாப்பிட சுவையுமாக இருக்கிறது.அரிசியும் நல்ல உதிரி உதிரியாக, பிரியாணிக்கே உண்டான நிறத்துடன் சூப்பராக இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் இந்த ஹோட்டல் பத்துக்கு பத்து ரூம் சைசில் இருந்ததாம்.இன்று பிரம்மிக்கத் தக்க வளர்ச்சி என்பதன் காரணம் அதன் ருசியே..

                        மட்டன் சுக்கா அடுத்த ஆர்டராய் இருக்க, அது ஏனோ என்னை கவரவில்லை.இன்னும் கொஞ்சம் பதமாக வெந்திருக்க வேண்டிய நிலையில் அது இருக்கிறது.ஒருவேளை நாங்கள் நேரத்திலேயே சென்றுவிட்டதால், வெந்து கொண்டிருக்கும் போதே எடுத்து வந்து விட்டார்களோ என நினைக்கிறேன்.



பிரியாணி நல்ல சுவை.மணம், சுவை, திடம் திரீ ரோசஸ் போல பிரியாணி சூப்பரோ சூப்பர்.

                சின்னமனூர் போனீங்கன்னா தாராளமாக சுவைக்கலாம்..பத்து மணிக்கே தயாராகிவிடுகிறது பிரியாணி..ஆற அமர ருசிக்கலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 16, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் ரோடுசைட், பாண்டமங்கலம், வேலூர் - ROADSIDE HOTEL, PANDAMANGALAM, VELUR, NAMAKKAL

 ROADSIDE HOTEL, PANDAMANGALAM, VELUR

                         நம்ம மாப்ள விவசாயி பாலு தோட்டத்திற்கு போன போது ஒரு கடையை பத்தி சொன்னாப்ல.நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு ஹோட்டல் நடத்துவதாகவும், அந்த ஏரியாவில் கொஞ்சம் டேஸ்ட்ல பிரபலம் ஆகிட்டு இருக்குன்னு சொன்னாப்ல..

                சரி..சொல்லு மாப்ள.. அந்தப்பக்கம் போலாமுனு சொன்னேன்.

            சரி.கிளம்பு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்னு சொல்ல போன இடம் வேலூர் பக்கத்துல இருக்கிற பாண்ட மங்கலம்.

                இந்த ஏரியாவுல ஆட்டுக்கறி ரொம்ப பேமஸா இருந்தது.600 ரூபாய்க்கு விற்ற காலத்தில் 265 க்கு விற்ற ஊர்.ஆனா இப்பொழுது நார்மல் ரேட்டுக்கு வந்த ஊர்.பக்கத்தில் இருக்கும் ஜேடர்பாளையம் என்கிற ஊர் காட்டன் சேலைகளுக்கு பிரபலம். அந்த ஊர் செல்லும் வழியில் பாண்டமங்கலம்.

            அங்கே ரோட்சைடு ஹோட்டல் என்கிற பெயரில் புளிய மரத்தின் அடியிலே..(புஷ்பலதா மடியிலே).புளியமரம்னு சொன்னாலே நம்ம விஜய் டிவி தங்கதுரை ஞாபகம்தான் வருகிறது.


            கீற்று கொட்டகையில் மூங்கில் தட்டிகளை வைத்து மூன்று டேபிள்கள், இரண்டு கிச்சன்கள் என அமைத்து கொஞ்சம் விசாலமாக இந்த ஹோட்டலை அமைத்திருக்கின்றனர்.சீரியல் லைட் வெளிச்சத்தில் ஹோட்டல் மின்னிக் கொண்டிருக்க உள் நுழைந்தோம்.

                கஸ்டமர்கள் பார்சலுக்கு வெயிட் பண்ணி கொண்டிருக்க, அப்பொழுது தான் காலியான டேபிளில் அமர்ந்தோம்.கல்லில் வெந்து கொண்டிருந்த பொன்னிற புரோட்டோக்களை பார்க்க ஆசை அதிகமானது.புரோட்டாவையே சாப்பிடுவோம் என இலையை போட சொல்லி கொண்டு வரச்சொன்னோம்.


                            சுடச்சுட புரோட்டோ லேயர் லேயராய் பொன்னிறமாய் கல்லில் வெந்து, முறுகலான வாசனையில் பார்க்கவே பசியை தூண்டும் விதத்தில் இருந்த புரோட்டாவை பிய்த்து போட சொன்னோம்.


                            சூடான குருமாவை அதன்மேல் ஊத்தி பிசைந்து குழைந்து, ஒரு விள்ளலை எடுத்து வாயில் போட்டால் சொர்க்கம் பக்கத்தில் தெரிந்த நிலையை அடைந்தோம்.


            வாவ்..புரோட்டாவும் குருமாவும் ஒன்று சேர்ந்து செம சுவையை தந்தது.

                    பன் பரோட்டாவினை மாஸ்டர் நல்ல டேஸ்டியாக போடுவார் என சொல்ல அதில் இரண்டை ஆர்டர் செய்தோம்.குட்டியாய் அழகாய் வட்ட வடிவத்துடன் மொறுமொறுவுடன், பொன்னிறமாக புரோட்டா லேயர் லேயராக வர, அதில் சிக்கன் குருமாவினை ஊற்ற, அது அதனுடன் ஓபிஎஸ் இபிஎஸ் போல இணைந்து நல்ல சுவையை தந்தது.



                        புரோட்டா எப்பொழுது சாப்பிட்டாலும், அதனுடன் ஜோடி சேரும் குருமாவினை பொருத்தே அதன் சுவை தெரியவருகிறது.சிக்கன் குழம்பில் ஊற வைத்த புரோட்டா அப்படியே தொண்டையில் வழுக்கி கொண்டு போவது செம..சிக்கன் துண்டுகளும் நன்கு வெந்து அதன் சுவையை அதிகரிக்கிறது.

                        இந்த கடையில் வாத்து வறுவல், குடல், சிக்கன் வறுவல் என அனைத்தும் கிடைக்கிறது. இன்னொரு சமயத்தில் அந்தபக்கம் போனால் அனைத்தையும் சுவைக்க வேண்டும் என்கிற ஆவலை தருகிறது.

                கடையில் புரோட்டாவிற்காக கூடும் கஸ்டமர்களே இதற்கு சாட்சி. அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க.

                புரோட்டா ஏ ஒன்..மாஸ்டர் வேற காரைக்குடியை சேர்ந்தவராம்.பின்னி பிடல் எடுக்கிறார் சுவையில்..

                புரோட்டா ரூ.12ம், சிக்கன் வறுவல் ரூ.60 க்கும் கிடைக்கிறது.ஆர்டரின் பேரில் சைவம் அசைவம் இரண்டும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

                        நண்பர்களில் ஒருவர் கேட்டரிங் முடித்து இருப்பதால் சுவையில் பல மாற்றங்களை அவ்வப்போது செய்கிறாராம்.கிராமம் போன்ற ஊரில் துணிந்து ஹோட்டலை ஆரம்பித்த அந்த நால்வருக்கு வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, September 13, 2020

ஜெய் கொரோனோ

ஜெய் கொரோனோ

                        சாலைகளின் இருபக்கமும் நடைபாதை வியாபாரிகளை அதிகம் உருவாக்கி இருக்கிறது.பெரும்பாலும் காய்கறி வண்டிகள் தான்.புதிதாய் பல தொழில் முனைவோர்களையும், ஏற்கனவே தொழிலதிபர்களாய் இருந்தவர்களை சாமானியனாவும், கடன்காரனாகவும் மாற்றி இருக்கிறது.கடை உரிமையாளர்கள் நிறைய பேர் கடையையே காலி செய்து போய்விட்டனர்.எந்த தெருவை எடுத்தாலும் அதிகம் டூலெட் போர்டுகளே காணப்படுகின்றன.பல லட்சம் மதிப்புள்ள இன்னோவா காரிலும், மாருதி டிசையர் காரிலும் சாலையோரத்தில் மாஸ்க் மற்றும் வாழைப்பழம் விற்று கொண்டிருக்கின்றனர்.ஒரு சிலபேர் சைக்கிளிலும், டூவீலர்களிலும் டீக்கடை, மாஸ்க், பூ, காய்கறி, இறைச்சி என தங்களின் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கின்றனர்.
                
                    மாணவர்கள் தங்கள் கல்வியையும் இழந்து விட்டனர்.அரசுப்பணியில் இருப்பவர்களை தவிர தனியாரில் உள்ள அனைவர்களுக்கும் பலத்த பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது.கொரோனோவுக்கு முன் காண்ட்ராக்டர், இண்டீரியர், எஞ்சினீயர் என இருந்தவனையும் இப்பொழுது ஆடு, வாத்து, கோழி மேய்ப்பவனாகவும், தேங்காய் வியாபாரியாகவும் ஆக்கி இருக்கிறது.    

                                      உலகம் தழுவிய இந்த கொரோனோவில் அனைவருக்கும் மிகப்பெரும் பாதிப்புதான்.இந்திய வரைபடத்தில் அத்திப்பட்டி என்கிற கிராமமே இல்லாமல் போனதை போல இந்த காலண்டரில் 2020 என்கிற ஆண்டே இல்லாமல் ஆக்கி இருக்கிறது.
            
                ஐந்து மாதங்களுக்கும் மேலாக லாக்டவுன் லாக்டவுன் என நீட்டித்து அம்மணிகளை வெளிவர விடாமல் செய்து, அவர்களையும் கொழுக் மொழுக் என மிகப்பருமனாய் குண்டாக்கி விட்டதும் இந்த கொரோனா தான்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 11, 2020

கரம் - 39 - ஆன்லைன் கிளாஸ் பரிதாபங்கள்

"வீடியோ ஆஃப் பண்ணுங்க "

"ஓகே மிஸ்"

"எல்லாரும் ஒரே டைம்ல பேசாதீங்க "

"பவன்..லைன்ல இருக்கியா "

"எஸ்.மிஸ்"

"ஹலோ "

" லைன்ல இருக்கீங்களா "

"எஸ் மிஸ் "

"இப்ப வேற யாரு ஜாய்ன் பண்ணது"

"சந்தோஷ் மிஸ்"

"வேற யாரு இருக்கா "

"மனிஷா இருக்கீங்களா."

"வீடியோ எல்லாம் கட் பண்ணிக்கோங்க "

"லிசன்..லிசன்..யாரும் பேச வேணாம்"

                    இப்படித்தான் ஆன்லைன் கிளாஸ் இன்று ஆரம்பமாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும் என மகனுக்கு இன்று தான் ஆரம்பம். அனைத்து குழந்தைகளையும் ஒருங்குபடுத்தவே அரைமணி நேரம் ஆகிறது.

                        வீடியோவை ஒரு சில குழந்தைகள் ஆன் பண்ணுவதால் அவர்கள் அங்கே வளைந்தும் நெளிந்தும் அமர்ந்து கொண்டிருக்கின்றனர்.கூடவே பெற்றோர்கள்...

                                    என் பையனோ வீடியோவை ஆஃப் பண்ணிவிட்டு ஓடி ஆடி கொண்டிருக்கிறான்.இடையிலேயே இரண்டு மூன்று தோசையை சாப்பிட்டு விட்டு தெம்பாக உலாவிக் கொண்டிருக்கிறான்.போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு அங்குமிங்கும் திரிகிறான்.ஒரு சில குழந்தைகள் மட்டும் கண்ணும் கருத்துமாய் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இடையிடையே வீட்டில் ஏதாவது ஒரு சத்தம்.மிஸ் சொல்லுவதும் குழந்தைகள் சொல்லுவதும் இடையிடையே கிராஸ் ஆகி மாறி மாறி பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

கோரஸாய் ஒலிக்கிறது.

இப்படித்தான் போகிறது..

ஆன்லைன் அலப்பறைகள்
இன்னும் கொஞ்சம்...

கரம் - 38 கொரோனோ பாதிப்புகள்

இப்ப இருக்கின்ற வேலை இல்லாத நிலைமையில், தத்தம் பொருளாதார பாதிப்பின் சுமையினை ஈடுகட்ட நிறைய பேர் உணவுத்தொழிலாக திடீர் ஹோட்டல்கள், வீட்டு சமையல்கள், ஹோம்மேட் டெலிவரி என ஆரம்பித்திருக்கின்றனர்.நல்ல விசயம் தான்.ஆனால் எதை செய்து கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்று நினைத்து விட்டார்கள் போல..

நம் ஆபீசுக்கு பக்கத்து தெருவில் ஒரு கடைக்காரர் பிட் நோட்டிஸ் கொடுத்து ஆரம்ப சலுகை விலையாக சிக்கன் பிரியாணி, பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன் என எது வாங்கினாலும் ரூ.50 என விளம்பர படுத்தினார். முக்கியமாய் முஸ்லீம் அன்பரோட கடை அது.கொரோனோ பரவல் காரணமாக இப்பொழுது நான் எங்கும் வெளியே செல்வதில்லை. வீட்டிலிருந்தே மதிய உணவையும் கொண்டு வந்து விடுகிறேன்.அந்த நாளன்று அந்த பக்கமாய் போன நம் சூப்பர்வைசர் இந்த பிட் நோட்டிசை கண்டதும் போன் அடிக்க, சரி டேஸ்ட் பார்க்கலாம், நாமும் எவ்வளவு நாள்தான் வீட்டுச்சோறையே சாப்பிடுவது கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்ககலாமே என பெப்பர் சிக்கன் வாங்கி வா என சொல்ல, பையனும் வாங்கி வந்தான்.

                        பிளாஸ்டிக் டப்பாவில் பேக் பண்ணி கொடுத்திருந்தார்கள்.ஓபன் பண்ணி பார்த்தால் எந்த வித மணமும் இல்லை.சிக்கனை வேக வைத்து மிளகு பொடி என்கிற பெயரில் காரமில்லாத ஏதோ ஒரு தூளில் பிரட்டி வைத்திருக்கின்றனர்.சிக்கனும் ஏதோ கடமைக்கு வெந்திருக்கும் போல.

                                    உப்பு உரைப்பு இல்லை.மசாலா வாசனை இல்லை.மிளகுப்பொடியும் மரத்தூளை போல இருக்க, வாயில் வைத்தவுடன் துப்பத்தான் தோன்றியது.அப்படியே எடுத்து வெளியே கொட்டிவிடு தம்பி என்று சொல்ல அது உடனே குப்பைக்கு தான் போனது.பாய் வீட்டு கடை சரி டேஸ்ட் நல்லா இருக்கும்னு வாங்கியது தப்பாக போய்விட்டது.நல்லவேளை பிரியாணி, இன்னும் மற்ற அயிட்டங்கள் எதுவும் வாங்க வில்லை.இந்த மகா மோசமான உணவுக்கு பிட் நோட்டிஸ் வேறு.அதிலும் வீட்டு விசேசங்களுக்கு ஆர்டரின் பேரில் சமைத்து தரப்படுமாம்...

பிட் நோட்டிசை பார்த்து எத்தனை பேர் வாங்கி இருப்பார்கள்..முதலில் நன்கு சுவையாக சமைக்க கற்றுக் கொண்டு இந்த மாதிரி கடைகளை ஆரம்பியுங்கள்.சமைக்கும் போதாவது கொஞ்சம் டேஸ்ட் பாருங்கள்.ஏனோ தானோ என்று சமைத்து வாடிக்கையாளர்களின் உடலை கெடுக்காதீர்கள்.காசையும் கொடுத்து வியாதியையும் வாங்க வேண்டியிருக்கிறது.நம்ம சூப்பரிடமும் சொன்னேன்.. போய் கடைக்காரரிடமே சொல்..மிக மட்டமான சுவை என்று.. அவனும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறான்...ரெடிமேட் பதில் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.

            இந்த கொரோனோவை விட இவர்கள் தயாரிக்கும் உணவு மிக மோசமாக இருக்கிறது..

இன்னும் கொஞ்சம்...

Friday, May 29, 2020

ஊரடங்கு - மது (சுய) புராணம்

ஊரடங்கு - மது (சுய) புராணம்

தமிழக மதுபானங்களை அடியோடு நிறுத்தி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.அதற்காக குடியை விட்டுவிட்டேன் என்பது அர்த்தமல்ல.தமிழகத்தினை தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாட்டு மதுவகைகளையே உண்டு வருகிறேன்.காரணம் கல்லீரல் மேல் கொண்ட அதீத பற்று தான்.

ஏர்போர்ட்டில் நண்பர் ஒருவர் இருக்கிறார்.அவரின் தயவின் காரணமாக மாதம் எனது கோட்டாவினை பெற்று கொள்கிறேன்.கடந்த முறை கர்நாடகா சென்றிருந்த போது நிறைய மதுவகைகளை அள்ளிப் போட்டு கொண்டு வந்தேன்.அங்கே யுனைட்டடு டிஸ்டில்லரீஸ் தான் உற்பத்தி.பெங்களூரிலேயே உற்பத்தி மையம் இருப்பதால் விலையும் குறைவு.அதே போல் ஆரோக்கியமான மதுவாகவும் இருக்கிறது.அதே போல் கோவையிலிருந்து பாலக்காடு செல்வதும் பக்கம் என்பதால் கஞ்சிக்கோட்டில் உள்ள பெவரேஜ் கடையில் வேண்டிய மது வகைகளை வாங்கி வர முடிகிறது.நம் நண்பர் பாண்டியில் இருந்து வந்த போது அவரும் தன் பங்கிற்கு தானமளித்து விட்டு போனார்.மேலும் எனது மைத்துனர் மனைவி பாண்டியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிவதால் அவரும் தன் பங்கிற்கு இந்த அண்ணனிற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்.

எமது பணியாட்கள் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் போது எனக்காக மது வகைகளை வாங்கி வருவது என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.அதே போல் பேஸ்புக் நண்பர்களும், தொழில் முறை நண்பர்களும் அவ்வப்போது மது பாட்டில்களை அன்பளிப்பர்.வெளிநாட்டு நண்பர்களும் இதில் அடக்கம்.

அதனால் தான் இந்த பாழாய் போன தமிழகத்தில் மட்டும் எதையும் வாங்குவதில்லை.ஒரு காலத்தில் தமிழகத்தில் அளவான மது உற்பத்தி மையங்கள் இருந்தபோது நல்ல தரமும் ஆரோக்கியமும் இருந்தது.ஆனால் இப்போது போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு தயாரிக்கின்றனர்.அதனால் தரமும் இல்லை உறுதியும் இல்லை.மேலும் இந்த தமிழகம் மட்டும்தான் குடிகாரனை மிகவும் கேவலமாக நடத்தி வருகிறது.ஆனால் தமிழகத்தில் பெரும் விற்பனை வருவாயை இந்த கேவலமான குடிகாரர்கள் தான் அளித்து வருகின்றனர்.அந்த மனசாட்சி இன்றி டாஸ்மாக் பாரில் இருந்து, கேவலமான பூச்சி கொல்லி மதுவகைகளை உற்பத்தி செய்வதில் வரை இந்த தமிழகம் மிகவும் நாசமாய் போய் விட்டது.அதனாலாயே தமிழக மதுவகைகளை தொடுவதில்லை.

பக்கத்து மாநிலங்களோடு நட்புறவு பேணுவதால் எப்போதும்
மது பிரச்சினை இல்லை.மதுவை அருந்துவதும் அளவாகத்தான். அதனால் கையிருப்பு எப்பவும் இருக்கிறது.இந்த லாக்டவுன் என்னை பொருளாதார ரீதியாக மட்டும் தான் பாதிக்க வைத்துள்ளது.மது ரீதியாக இல்லை.

மேலும் இதைப் படித்து விட்டு என்னிடம் ஏதாவது தேற்றலாம் என்றால் அதற்கு மிகப்பெரிய வருத்தங்களுடன் கூடிய வணக்கங்கள்..
இந்த கொரோனோ முடிந்தவுடன் தாரளமாய் தங்களோடு மதுவருந்த வருகிறேன்.செலவுகளிலும் பங்கெடுத்து கொள்கிறேன்...

எச்சரிக்கை : மது உடலுக்கு தீது


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 26, 2020

TIKTOK பரிதாபங்கள்

TIKTOK பரிதாபங்கள்

Blog எழுதின காலங்கள் போய் அப்புறம் பேஸ்புக் கில் எழுதிக் கொண்டிருக்கும் காலங்கள் தவிர இப்பொழுது அதிகம் விரும்பி பார்ப்பது டிக்டாக் தான்.பேஸ்புக் கில் ஒரு காலத்தில் முகம் தெரியாத பெண்களுடன் சேட் செய்வது, அவர்களை நட்பு பட்டியலில் சேர்த்துவது என ரொம்ப கடினமாக இருந்தது.அப்படியே முகம் தெரிந்த அம்மணியாக இருந்தால் போதும் அங்கே ஏற்கனவே துண்டு போட்டு கொண்டு நிறைய இருப்பர்.நாமும் பத்தோடு பதினொன்றாக இருக்க வேண்டி இருக்கிறது.அவர்கள் எழுதும் பதிவுக்கு லைக்கிட்டு கமெண்ட் இட்டாலும் நம்மை திரும்பி பார்ப்பது இல்லை.அப்படியே நம்ம ப்ரோபைலுக்கு வந்தாலும் மூஞ்சியை சுளிக்கும் படியான மதுவகைகள், அசைவ உணவு போட்டோக்கள், என எங்கும் நிரம்பி இருக்கும்.இதைப் பார்த்தாலும் இவன் செம மொடா குடிகாரன் போல என்று ஒதுங்கி விடுகின்றனர்.
அதனாலாயே நமக்கு அம்மணிகள் வட்டம் குறைவு.எனவே பிளாக் காலத்தில் எழுதிய அம்மணிகள் மட்டுமே நமது பிரண்ட் லிஸ்டில் இருக்கின்றனர்.ஆனால் டிக்டாக் அப்படி இல்லை.யாரை வேண்டுமானாலும் பிரண்டாக பாலோ செய்யலாம்.ஆடல் பாடல் நடிப்பு கவர்ச்சி திறமை, உணவு, பயணம் என அனைத்தும் இங்கே கொட்டி கிடக்கிறது.
அழகழகான அம்மணிகளின் திறமை வியக்க வைக்கிறது.எவ்வளவு பெண்கள்......நாடு வாரியாக, மாநில வாரியாக, மாவட்ட வாரியாக வயது வித்தியாசமின்றி அனைவரையும் ரசிக்க முடிகிறது.அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அவர்களை பாலோ செய்து கொண்டு அவர்களின் திறமையினை அழகினை ரசிக்க முடிகிறது.ஆடல், பாடல் நளினங்களோடு ஒரு பெண் ஆடுவதை கண்டால் எவ்வளவு ஈர்ப்பு ஏற்படுகின்றது.விதவிதமாய், வித்தியமாசமாய் பெண்களை காண.......

பெண்கள் அழகாய் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் அந்த டிக்டாக் கேமரா மட்டும் அவர்களை இன்னும் அழகழகாய் காட்டி விடுகிறது.அழகாய் இருந்தால் இன்னும் அழகாக, சுமாராக இருந்தால் கொஞ்சம் அழகாக என காட்டிவிடுகிறது.நேரில் பார்க்கும் மிக சப்பையான பிகர்கள் கூட இந்த டிக்டாக் வீடியோவில் மிக அழகாய் இருக்கின்றனர்.வீடியோ பில்டர், எபக்ட்ஸ் உடன் இந்த பெண்களும் பார்க்க மிக அழகாய் தோன்றுகின்றனர்.அனைத்து பெண்களையும் அழகாக காட்டிவிடுவதில்லை..சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்..ஆனாலும் அப்படிப்பட்ட பெண்களும் அழகை புறந்தள்ளி திறமையினால் வெளியே தெரிகின்றனர்.அவர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அழகழகான அம்மணிகளை அவர்களின் நடிப்போடு இசையோடு பாடலோடு கூடவே திறமையோடு பார்க்க நன்றாகவே இருக்கிறது.ஒரு அம்மணி டிக்டாக் வீடியோவில் மிக அழகாய் தோன்றுவார்.விதவிதமான காஸ்ட்யூம்களில் கலக்குவார்.அவரின் ஹேர்ஸ்டைல், மூக்கு கண்கள் எப்போதும் ஒரு வித போதையை தரும்.வீடியோவில் எபக்ட்ஸோடு பார்க்கையில் தேவதை மாதிரி ஒரு சினிமா ஸ்டார் மாதிரி மின்னுவார்.அவளின் அழகில் மயங்கி அவளது வீடியோவிற்கு தினமும் கமெண்ட், லைக் குகளை அள்ளி வீசினேன்.
கமெண்டில் பேசுவதோடு சரி.என்னைப் போலவே என் நண்பணும் அதே பெண்ணின் வீடியோவிற்கு லைக் இடுவதும், கமெண்டுவதுமாக இருந்தான்.ஒரு நாள் இருவரும் சந்தித்து இந்த பெண்ணின் வீடியோக்களை ரசித்த நிலவரங்களை பேசிக் கொண்டிருந்தோம்.

தினமும் அவளின் அழகு பிரதாபங்களை பற்றி பேசிக் கொண்டிருப்போம்.நாட்கள் கடந்தன.ஒரு நாள் என் நண்பன் அழைத்தான்."மச்சி... அந்த பொண்ணு நம்ம ஏரியா தான்..கண்டு பிடிச்சிட்டேன்.ஆனா பொண்ணு சப்பை பிகரு..செம கருப்பு என்றான்" ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி..வீடியோவில் இவ்வளவு அழகாக இருக்கிறாளே..நேரில் ஏன் இப்படி என்ற யோசனை. அதற்கப்புறம் என் நண்பன் அவளை அடிக்கடி பார்த்திருக்கிறான்.

அவளின் வீடு, வண்டி எண், கடைக்கு வரும் நேரம் வரை தெரிந்து வைத்திருக்கிறான்.எனக்கும் அவளை பார்க்க வேண்டிய ஆவல் ஏற்பட்டது.ஒரு நாள் மாலை நண்பன் திடீரென அழைத்தான்.
"மச்சி..உடனே வா..கடைக்கு வந்திருக்காங்க " என்று.

அரக்க பரக்க வீட்டிலிருந்து கடைக்கு கிளம்பி சென்றேன்.அங்கு நண்பன் காத்திருக்க, இவளோ கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தாள்.நானும் அவனும் பேசிக் கொண்டிருந்த போது வெளியில் வந்தாள்.அவளும் நோக்கினாள்..நானும் நோக்கினேன்..
பலத்த ஆச்சர்யம்..அவளா இவள் என்று..

வீடியோவில் இருந்தமைக்கும் நேரிலும் சம்பந்தமே இல்லை. மாநிறத்திற்கும் குறைவு.உயரமோ குறைவு.ஆனால் அவளது ஹேர்ஸ்டைல் மூக்கு கண் அப்படியே இருந்தது.அது மட்டும் தான் ஒற்றுமை.யோசனையோடு அவளது வண்டியில் தான் ஒரு சைடாய் உட்கார்ந்திருந்தேன்.அருகில் வந்தாள்.என்னை பார்த்ததும் அவளுக்கும் ஒரு திடுக்கிடல் இருந்தது.அவளாய் பேச ஆரம்பித்தாள்.ஏனெனில் ஏற்கனவே கமெண்ட்களில் பேசியவர்கள் தானே..அப்புறம் நாட்டு நடப்பை எல்லாம் பேசிவிட்டு வந்ததில் நண்பன் முகம் சிவக்க காத்திருந்தான்..
"என்னடா..நடக்குது இப்படி பேசிகிட்டு இருக்கே..தெரிஞ்ச மாதிரி என்றான்."
"இல்லை மச்சி..
என் வீடியோவும் பார்த்திருக்கா இல்ல.அதான்.

ஆனால் ஒரே ஏரியா தான் இருவரும்.நேரில் இதுவரைக்கும் பார்த்தது இல்லை.வீடியோவில் தான் அறிமுகம்.அதற்கப்புறம் அவளது வீடியோவிற்கு நானும் போவதில்லை.அவளும் வருவது இல்லை.ஆனால் என் பாலோயிங் லிஸ்ட் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

டிக்டாக் வீடியோவில் அழகாய் இருப்பது ஒரு சிலர் மட்டும் தான் என்பது தெரிகிறது.ஆனால் நிறைய பேர் டிக்டாக்கின் ப்யூட்டி கேமராவினாலும், எபக்ட்ஸ்னாலும் மிக அழகாய் தெரிகின்றனர்.
அவர்கள் எப்படி இருந்தாலும் ரசிப்பது நம் கடமையல்லவா..

"கோழி குருடா இருந்தா என்ன..குழம்பு ருசியா இருக்கானு பாரு.." அப்படின்னு கவுண்டமணி சொல்றது தான் நமக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, February 17, 2020

கரம் - 37 - காதலர் தின வாழ்த்துக்கள்

                        நண்பர் ஒருத்தர் குன்னூர்ல ரிசார்ட் ஒண்ணை லீசுக்கு எடுத்து நடத்திட்டு வர்றாரு. வந்தாரு..இப்போ இன்னொரு ரிசார்ட்டோட (ஹோம் ஸ்டே) மாடல் ஐ ப்ரமோட் பண்ணிட்டு இருக்காரு...எனக்கு சந்தோசம் கலந்த ஆச்சர்யம்..
பரவாயில்லையே..பிசினஸ் டெவலப்மென்ட் போல... ஒரே வருசத்துல இரண்டு ரிசார்ட் நடத்துராறேன்னு அவருக்கு வாழ்த்து சொல்ல போன் பண்ணேன்..ஒரு சில நலம், குசல விசாரிப்புகளுடன் பேச்சு தொடங்கியது..
" என்ன தலைவரே..பயங்கர பிக்கப் பண்ணிட்டீங்க போல.."
"அட .இல்லைங்க..அந்த ரிசார்ட்டை கொடுத்துட்டேன்..இப்போ இதை பிடிச்சிருக்கேன் " னாரு.
"ஏன். பாஸ் என்னாச்சு..?"
"அட..போங்க..வர்றவன்லாம் தள்ளிட்டுதான் வர்றானுங்க.."
"எனக்கு என் தொழில் மாறிப் போயிருமோனு பயம்" ன்னாரு..

எனக்கு ஒரே சிரிப்பு...

"அந்த ரிசார்ட்ல ரூம் ரூமா இருந்துச்சு..இப்போ இதுல வீடு மாதிரி..
கிச்சன் அட்டாச்டு பெட்ரூம்..பேமிலிக்கு தகுந்த மாதிரி மொத்தமே மூணு வீடு தான்..இதுல கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கலாம் " னாரு..

அடப்பாவி..ன்னு மனதில் நினைத்துக் கொண்டு..

" யோவ்...லாட்ஜ், ரிசார்ட் னா அப்படித்தான்யா இருக்கும்..
90% ஆளுங்க தள்ளிட்டு தான் வருவானுங்க..10% தான் குடும்பம் குழந்தை குட்டியோட வருவான்..
மற்றவன் குட்டியோட தான் வருவான்."
"எவனாது சொந்த பொண்டாட்டிக்கு ரூம் போடுவானா வெளியூர் வந்து..?"
"ஜாலியா இருக்கனும்னு நினைக்குறவன் கூடவே சங்கடத்தை தூக்கிட்டு வருவானுங்களா..? "
"ஊட்ல இருக்குற பிக்கல் பிடுங்கல் தாங்காமத் தான் வெளியூர் வந்து எஞ்சாய் பண்றானுங்க..."
"ஜோடியா வந்தா ரேட்டை ஏத்துய்யா..சம்பாதிக்கப் பாருய்யா.."
"எத்தனையோ பேர் தனிமை வேண்டி இடம் இல்லாம சுத்திட்டு இருக்கான்..
எவ்ளோ பொண்ணுங்க சேஃபா இடம் இல்லைன்னு தவிக்குதுங்க..
தண்ணியடிக்க, பசங்க கூட ஜாலியா இருக்க இடம் இல்லாம இருக்காங்க.."
அதுமட்டுமல்ல..
"வர்றவன்லாம் எல்லாம் டீசன்ட் ஆளுங்க தான்..வீட்டுக்கு தெரியாம வருவானுங்க..
வருவாளுங்க..அவ்ளோதான்...
இலைமறைகாயா எல்லாம் நடக்கும்..நாமளும் கண்டுக்க கூடாது...அவங்க பிரைவசியை நாமளும் கெடுக்காம நடந்துகிட்டா போதும்."
"OYO காரனே இப்போ பேமிலி தவிர எல்லாரும் வரலாம் தங்கலாம்னு போட்டு இருக்கான்.."
"Make my Trip லயும் couples allowed ன்னு போடறான்.."
"சிட்டில இருக்குற எல்லா ஹோட்டல்லயும் பண்றவன் பண்ணிட்டு தான் இருக்கான்"
"நாமளும் இந்த சமூகத்திற்கு ஆதரவளிப்போம் யா..பாவம்..தனிமைல வாடுற ஆண் பெண் சமூகத்திற்கு தோள் கொடுப்போம் யா.."

அப்படின்னு மூச்சு முட்ட பேசிட்டு அப்புறம் சொன்னேன்..

" மச்சி..நானும் உன் ரிசார்ட்ல வந்து தங்கனும்..நாமளும் கேர்ள் பிரண்ட்டோட பகார்டி சாப்பிடணும்...
குளிருக்கு இதமா இருக்கும்...என்னிக்கு வரட்டும்னு கேட்டேன்..."
"சீக்கிரம் வாங்க..இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு..அதுக்குள்ள வந்திருங்க.."
அப்படின்னு சொல்லிட்டாரு .
அய்யயோ..ஆஃபர் முடிய போகுதே..
இப்போ உடனடி தீர்வுக்கு நம்ம கேர்ள் ப்ர்ண்ட்ஸை உஷார் பண்ணியாகனுமே...

அன்போடு சேர்த்து அனைத்தையும் பரிமாறும் அத்துணை உள்ளங்களுக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.
(காதல்னாலே அது காதல்தான்..அதுல என்ன நல்லது கள்ளது..)


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...