Saturday, June 29, 2013

கரம் - 7 - 29.6.2013


திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியில் ஆண்டலூர்கேட் என்கிற ஊருக்கு முன்பாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஊரின் பெயரினைப்பார்த்தேன்.பார்த்தவுடன் கொஞ்சம் ஆச்சர்யத்துடன் சிரிப்பும் வந்தது.ரொம்ப வித்தியாசமாக இருந்த ஊரின் பெயர் கரையான் தின்னிப்புதூர்.இந்த ஊர்ப்பெயருக்கான காரணம் என்னவாக இருக்கும் என்கிற யோசனையோடவே தொடர்ந்து பயணித்தேன்.

***************************
கோவையில் சாயந்திரம் கிராஸ்கட் ரோட்டில் கண்ணன் டிபார்ட்மெண்ட் அருகே ஒரு போளி வண்டி வரும்.தேங்காய் போளி, பருப்பு போளி என இரண்டு சுவைகளில் செய்து சுட சுட இருக்கும்.மிக சுவையாக இருக்கும்.விலையும் குறைவு தான்.இரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மாவை எடுத்து உள்ளே பருப்போ தேங்காயோ நிரப்பி தேய்த்து கல்லில் போட்டு சுட சுட எடுத்து தருவதில் பையன் ரொம்ப பாஸ்ட்.ரொம்ப நேரம் பேசியதில் அந்த பையன் ஒரு பிரபல கல்லூரியில் படித்துக்கொண்டு பார்ட் டைமாக இந்த வேலை செய்துகொண்டு இருப்பதை தெரிந்து கொண்டேன்.வாழ்த்துக்கள் தம்பி...

***************************
அப்புறம் நம்ம கிட்ட ஒரு நல்ல (?) பழக்கம் இருக்கு.எப்ப பழைய சாதம் சாப்பிட்டாலும் அதில் ஒரு பெக் வோட்கா கலந்து சாப்பிடுவது.செம டேஸ்டா இருக்கு.புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு இனி பேடண்ட் வாங்கணும்.

************************


கண்ணீர் அஞ்சலி
இயக்குனர் மணிவண்ணனின் ஆத்மா சாந்தியடைட்டும்.


விமர்சனம்
அப்படியே அன்னக் கொடிக்கும் கண்ணீர் அஞ்சலி.

 *************************
 காசு... பணம்... துட்டு.... மணி...மணி...யம்மாடி எவ்ளோ பணம்..இது மட்டும் இருந்தா இன்னும் எப்படியெல்லாம் செலவு பண்ணலாம்.கொடுப்பினை இல்லையே.....ஹிஹிஹி...இதெல்லாம் டம்மி நோட்டுகள்.சினிமாவில் பயன்படுத்தப்படும் டூப்ளிகேட் வகையறாக்கள்...சென்னையில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் சுட்டது.
 *******************************
கொஞ்ச நாள் முன்னாடி ஓசூர்ல இருக்கிற என் நண்பனோட வீட்டிற்கு போய் இருந்தேன்.வீடு முழுக்க அவன் குடித்துவிட்டு போட்டிருந்த காலி பாட்டில்கள் ஒரே குப்பையாய்....சரி என்ன பண்ணலாம் அப்படின்னு யோசித்ததில் வீடு முழுக்க நிறைந்திருந்த காலி பாட்டில்களை விற்று ஒரு ஃபுல் தேத்தி அந்த நாளை ரொம்ப ஜாலியா கொண்டாடினோம்.வீடும் சுத்தமாயிற்று...மனசும் குப்பையாச்சு....ஹிஹிஹி
 **************************

கிசுகிசு : மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு.இதை பார்த்துவிட்டு உங்கள் கை அரித்தாலே நடுங்கினாலோ கம்பெனி பொறுப்பில்லை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, June 22, 2013

சினிமா - DIAMOND NECKLACE - மலையாளம் - டயமண்ட் நெக்லஸ் - விமர்சனம்

சமீபத்துல இரண்டு மலையாளப்படங்கள் பார்த்தேன். இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள்.ஒண்ணு 22 ஃபீமேல் கோட்டயம், இன்னொன்ணு டயமண்ட் நெக்லஸ் .
முதலில் டயமண்ட் நெக்லஸ் பத்தி பார்ப்போம்
டைரக்டர் - லால் ஜோஸ்
எழுத்து - இக்பால்
இசை - வித்யாசாகர்
நடிப்பு - ஃபாசில், சம்விருதா,அனுஸ்ரீ,
 

துபாயில் டாக்டராக பணிபுரியும் ஃபஹாத் ஃபாசில் கிரடிட் கார்டுகளின் துணையோடு, வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கேரக்டர்.(ஜல்சா பார்ட்டி) கூட பணிபுரியும் நர்சினை காதலிக்கிறார். தன் தாயின் லட்சியத்திற்காக துபாய் வந்து நர்ஸ் வேலை பார்க்கும் தமிழ்ப் பெண் கெளதமி நாயர் ஒரு கேரக்டர்.ஃபாசிலின் உயர் டாக்டராக வேலை செய்யும் ரோகினியின் உறவுக்கார பெண் சம்விருதா  கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் இருக்கிற ஒரு கேரக்டர்.

கிரடிட் கார்ட் லிமிட் தாண்டியதால் பணம் கட்ட வேண்டி நெருக்கடி கொடுக்கின்றன கார்ட் கம்பெனிகள்.மேலும் தாய்நாடு செல்ல முடியாத படி ஸ்டே வாங்கிவிடுகின்றனர்.கேரளாவில் அம்மாவின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கேரளா செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட லேபர் ஆபிசரின் உதவியால் வீட்டிற்கு செல்கிறார்.அம்மாவின் கட்டாயத்தால் கேரள பெண்ணை (துபாயில் உதவி செய்த லேபர் ஆபிசரின் உறவுக்கார பெண் ) மணக்கிறார்.அந்த பெண் அனுஸ்ரீ ஒரு வெகுளி கிராமத்து பெண்.வசதி இல்லாத இவர் ஒரு கேரக்டர்.

டாக்டர் மீண்டும் துபாய் வர அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது.பணம் இல்லாததால் இருக்கிற இடம், கார் எல்லாம் போய் நடுத்தெருவில் நிற்கிறார்.ஊர்க்காரரான சீனிவாசன் அவருக்கு உதவி செய்து அவருடைய லேபர் கேம்பில் தங்குகிறார்.இந்நிலையில் ஆஸ்பத்திரியில் இவருக்கு கல்யாணம் ஆன விவரம் தெரிந்து நர்ஸ் விலகுகிறார்.பின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிற பெண்ணின் உதவியால் அவரின் அபார்ட்மெண்டில் தங்குகிறார்.அவர்களுக்குள் கசமுசா ஏற்படுவதற்குள் ரோகிணி தடுத்து டாக்டரின் மனைவியை துபாய் வரவழைக்கிறார்.

தன் கடன்களை அடைக்க கேன்சர் பெண்ணிடமிருந்து வைர நெக்லஸ் திருட டாக்டர் மயக்க மருந்து கொடுப்பதால் பின் விளைவு ஏற்பட்டு அப்போது பணியில் இருந்த நர்ஸ் கவனக்குறைவினால் தான் ஏற்பட்டது என அவரை டிஸ்மிஸ் செய்ய, ஒவர் டோஸ் மருந்தினால் பாதிக்கப்பட்ட கேன்சர் பெண் வேறு ஊருக்கு செல்ல நெக்லஸை டாக்டரிடம் அன்பளிப்பாய் கொடுக்க, மனம் திருந்தி டாக்டர் அதை தன் லட்சியம் நிறைவேறாமல் பாதியில் ஊர் திரும்புகிற நர்ஸ் க்கு கொடுத்துவிட்டு ஒரிஜினல் என்று போலியை மாட்டிக்கொண்டிருக்கிற மனைவியிடம் இருந்து எப்படி மீட்கிறார் பின் இருவரும் ஒன்று சேர்ந்தனரா என்பதுதான் கதை..
துபாயில் நடக்கிற கதை என்பதாலோ படம் படு ரிச்சாக இருக்கிறது.ஹீரோ தங்கி இருக்கும் புர்ஜ் கலிபா பில்டிங்  , பெல்லி டான்ஸ் நடக்கும் பாலைவனம், மருத்துவமனை என ஆலுக்காஸின் கைங்கர்யத்தால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது.மிக அற்புதமான கதை.மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் பார்க்க படம் சுவாராசியமாக செல்கிறது.இவர்களுடன் ஒரு வைர நெக்லஸ் நடித்திருக்கிறது.ஜோய் ஆலுக்காஸ் ஓனரும் கூட ஒரு காட்சியில் வந்து செல்கிறார்.
லால் ஜோஸ் என்பவரின் இயக்கத்தில் மிக அருமையான படம்.ரொம்ப எதார்த்தமான படம்.
முழுசா சொல்லிட்டனா....என்ன பண்றது இந்த நெளிவு சுளிவு தெரிய மாட்டிங்குது.ஒரே கோவில் குளம், ஹோட்டல்ன்னு சுத்தி இப்போ சினிமா விமர்சனம் எழுத வரமாட்டேன்குது.இன்னும் நல்லா ட்ரை பண்றேன்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 

இன்னும் கொஞ்சம்...

Wednesday, June 19, 2013

கோவை மெஸ் - நூராணி பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை

நூராணி பிரியாணி ஹோட்டல்.
பீப் சாப்பிடணும் அப்படின்னா உக்கடம், கோட்டை மேடு அப்புறம் முஸ்லிம் அன்பர்கள் வசிக்கிற இடத்துக்குத்தான் போகனும் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு.ஆனா நம்ம ஏரியாவான சாய்பாபா காலனியில் மெயின் ரோட்டிலேயே இரண்டு கடைகள் இருக்கின்றன.அதில் ஒன்று தான் இந்த நூராணி.இன்னொரு கடையிலும் சுவை நன்றாக இருக்கும்.அதைப்பற்றின விவரங்கள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.இப்போ நூராணி.
இந்த பேரைப் பார்த்தாலே நம்ம முஸ்லிம் அன்பர்களோட ஹோட்டல் என்பது தெரியவரும்.இந்த கடைக்கு எப்போ போனாலும் சூடான சுவையான புரோட்டா கிடைக்கும்.அப்புறம் நான் வெஜ் அயிட்டத்துல பீஃப் சில்லி, பீஃப் சுக்கா, மற்றும் பிரியாணி, காடை வறுவல், சிக்கன், மட்டன் என்ன மற்றவைகளும் இருக்கிறது.

சின்ன கடைதான்.இப்போது கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது.கடைக்கு உள்ளே நுழையும் முன்பே நம்மை வாசம் உள்ளே இழுத்துக்கொண்டு செல்வது உறுதி.சுடச்சுட புரோட்டா சதுரவடிவில் போட்டுக்கொண்டு இருப்பர்.மிக சுவையாக இருக்கும்.அந்த புரோட்டாவிற்கு சிக்கன் குருமா ஊற்றி சாப்பிட்டால் செமயாக இருக்கிறது.இல்லை எனில் பீப் வறுவலோடு சாப்பிட இன்னும் டேஸ்டாக இருக்கிறது.


பிரியாணி அப்படி ஒன்றும் சுவை இல்லை.மட்டன் மட்டும் நன்றாக வெந்து இருக்கிறது.பாய்கடை பிரியாணி போல இல்லை.பீப் சுக்கா நன்றாக இருக்கிறது.நம்மளை மாதிரி ஆட்களுக்கு இந்த கடை பெஸ்ட்.பார்சல் வாங்கிட்டு போய் சாப்பிடற ஆட்களும் இருக்கிறார்கள்.
கடைக்கு உள்ளே நுழையும் போது சூடான கல்லில் இருந்து எடுத்துப்போட்ட புரோட்டாக்கள் உடனடியாக வாடிக்கையாளர்களின் இலைக்கு சென்று சீக்கிரம் காலியாகிக்கொண்டே இருக்கின்றன.புத்தம் புது புரோட்டாக்கள் ரெடியாகிக்கொண்டே இருக்கின்றன.

விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.சுட சுட புரோட்டா சாப்பிட போகனும் என்றால் கண்டிப்பாக போகலாம்.சாய்பாபா காலனியில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, June 14, 2013

பேஸ்புக் கவிதைகள் - 5

எவ்வளவோ  வேலைப் பளு இருந்தாலும் அவளின் நினைவுகளில் நனைவது சுகம்.அவளின் இடைவிடாத நினைவுகளில் நலிந்து போனதால் வந்த கவிதைகள்.பேஸ் புக்கில் கிறுக்கியவை... 

உறக்கம்
தொலைத்துவிட்டு
தவிக்கிறேன்..
உயிர்ப்பித்துவிட்ட
காதலால்.


இதயத்தின் வலிகள்
இன்னும் அதிகமாகிக்
கொண்டே போகிறது..
இனியவளின்
இடைவிடாத நினைவுகளால்..


மனதில்
விழுந்த விதையாய்
மங்கையுன் பார்வை
முளைத்தது என்னுள்
காதல் எனும்
செடியாய்.....
 

ஒவ்வொரு நாளும்
விடிகிறது..
ஓயாத உன்
ஞாபகங்களுடன்...


இதயத்தின் இருட்டில்
வெளிச்சமூட்டும்
தீபங்களாய்
இனியவளின் ஞாபகங்கள்.


வறண்டு போய் கிடக்கிறது
வஞ்சியவளின்
வருகையின்றி
வார்த்தைகளின்
வடிவம்....

நிம்மதியற்று
இருக்கும்
நேரங்களில்
உன்
நினைவுகளே
மருந்தாய்...
மறக்க முடியவில்லை
மனதில் பதிந்த
கல்வெட்டுக்களாய்.
மங்கை உன்
நினைவுகள்..
னக்குள்   இருக்கும்

கவிஞனின்  உறக்கம்

கலைத்த  பெருமை

உனக்கே  வாய்க்கட்டும்    ............நன்றி.....அவளுக்கு........   கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..


ேசங்குடன்
ீவானந்தம்
  
இன்னும் கொஞ்சம்...

Tuesday, June 11, 2013

கோவை மெஸ் - ஹோட்டல் முத்து ராவுத்தர் பிரியாணி, கோட்டைமேடு, கோவை

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வீட்ல இருக்கும் போது நம்ம உலகசினிமா ரசிகன் அவர்கிட்ட இருந்து ஒரு போன்.ஆலாந்துறை வரைக்கும் ஒரு ரைடு போலாம் அப்படின்னு..சரின்னு ரெடியாகி நம்ம சிங்கத்துல கிளம்பினோம்.போய்ட்டு ரிடர்ன் வரும் போது பசி வயித்தைக்கிள்ள அடடே அப்படின்னு மணி பார்க்க இரண்டை தொட சில நிமிடங்களே இருந்தன.எப்படி மறந்தோம் அப்படின்னு பேசிகிட்டே உக்கடம் வந்து சேர்ந்தோம்.உக்கடம் பஸ்ஸ்டாண்ட் பின்னாடி இருக்கிற குடியிருப்புக்கு அருகில் வண்டியை நிறுத்த பிரியாணி மணம் நம்மை வரவேற்றது.வாசனையை நுகர்ந்து கொண்டே  போய் நின்ன இடம் முத்து ராவுத்தர் பிரியாணி கடை.கோட்டைமேடு.
ஞாயிற்றுக்கிழமை வேற...உள்ளே ஏகப்பட்ட கூட்டம்.பார்சல் வாங்கவும் அமர்ந்து சாப்பிடவும் வரிசையாய் நிற்கிறார்கள்.கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானோம்.காலியான டேபிளில் இடம் பிடித்துக்கொண்டோம்.நாம எப்பவும் விரும்பி சாப்பிடுவது பீப் பிரியாணி தான்.அதையே தான் ஆர்டர் பண்ணினேன்.ஆனா நம்ம உலக சினிமா ரசிகரு ஹைதராபாத் பிரியாணி சிக்கன் ஆர்டர் பண்ணினாரு...எனக்கு கொஞ்சம் சீக்கிரமாவே கொடுத்திட்டாங்க.....அவருக்கு கொஞ்சம் லேட்தான்...இலையில் போட்ட பிரியாணியை காக்க வைக்க கூடாதுன்னு கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்தேன்...சுடச்சுட....ஆஹா சூப்பர்.கொஞ்சம் கூட சுவை குறையல.போன மாசம் சாப்பிட்ட போது இருந்த அதே டேஸ்ட்.அதுக்குள்ள உ.சி.ரசிகனுக்கு வரவே அவரும் பூந்து விளையாட ஆரம்பிச்சார்.பாசுமதி அரிசியில் சிக்கன் துண்டுகள் இரண்டினை வைத்து மிக சுவையாய் செய்திருந்தனர்.நம்ம பிரியாணியில் பீப் இறைச்சியும் சீரகசம்பா அரிசியும் மிக சுவையாய் இருந்தது.உள்ளே போவதே தெரியாமல் காலியாகிக்கொண்டிருந்தது.


பக்கத்து டேபிளில் பார்த்தபோது ஒரு சிறுமி உள்பட அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.பீப்சில்லி, பீப் சுக்கா, சிக்கன் சில்லி, முட்டை, காடை, நண்டு , குடல் வறுவல் என எல்லா வெரைட்டியும் இருக்கிறது.ஆனால் அதிகம் பின்னி பெடல் எடுப்பது பீப் பிரியாணிதான்.அப்புறம் கூடவே சுக்கா ஆர்டர் பண்ணினேன்.பெப்பர் போட்டு நல்ல கரு கரு நிறத்தில் வந்தது.இதுவும் நல்ல டேஸ்ட்தான்.
 
விலை குறைவுதான்.பிரியாணி 50, ஹைதராபாத் பிரியாணி 75 சுக்கா 30..முன்னை விட இப்போது பிரியாணி விலை தற்போது கூடி இருக்கிறது.
பிரியாணியைப்பொறுத்த வரையில் சுவை நன்றாக இருக்கிறது.ஆனால் தயிர் பச்சடி எப்போ போனாலும் புளிப்பாகவே இருக்கிறது.அதை மட்டும் சரி செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.அதுபோலவே கடையில் போடப்பட்டிருக்கிற டேபிள் சேர்கள் அனைத்தும் மிக நெருக்கமாக இருக்கின்றது.உட்கார்ந்தால் அடுத்தவர் முதுகு இடிக்கிறது.ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டு செல்கின்றனர் இந்த கடையின் வாடிக்கையாளர்கள்.கீழ் தளம் மட்டுமல்ல மேல் தளத்திலும் சர்வீஸ் நடக்கிறது.
அசைவ உணவு பிரியர்கள் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய இடம்.
இங்க போகனும்னா டவுன்ஹாலில் இருந்து கோட்டை மேடு வரலாம். உக்கடத்திலிருந்தும் நடந்தே வரலாம்.தொலைவு குறைவுதான்.
இந்த கடைக்கு அருகிலேயே ஆபிதா பிரியாணி கடை இருக்கிறது.இங்கும் சுவை நன்றாக இருக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, June 9, 2013

கரம் - 6 -09.06.2013

கரம் - பல்சுவை
 -----------------------------------------------------------------------
கடந்த முறை ஊட்டி போயிருந்த போது ஒரு வகையான பழம் வாங்கி சாப்பிட்டேன்.வீட்டுக்கும் வாங்கி வந்தேன்.உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியம் என்றும் ஒரு சில சீசன்களில் தான் கிடைக்கும் என்று சொன்னார்கள்.நிறைய பேர் இந்த பழத்தினை விரும்பமாட்டார்கள் என்றும் ஒரு கூடுதல் தகவல்.ஒருவகை புளிப்பு மற்றும் இனிப்பு சுவைகளுடன் விதையுடன் கூடிய ஒரு ஜெல் மாதிரி இருக்கிறது.அந்த பழத்தின் பெயர் மறந்து விட்டபடியால் ரொம்ப நாளுக்கு அப்புறம் ஊட்டியில் இருக்கும் நம்ம நண்பருக்கு அந்த படத்தினை மெயில் அனுப்பி பின் விவரம் கேட்டு இந்த பதிவினில் எழுதுகிறேன்.பேசன் புரூட் (passion fruit ) என்கிற இந்த பழத்தினைப் பற்றி விக்கிபீடியாவில் அறிந்து கொள்ளலாம்.நம்ம ஊருல அதாவது எங்க கிராமத்துல வேலியோரம் ஒரு செடி படர்ந்து இருக்கும்.நல்ல மொசு மொசுன்னு பழத்தினை சுத்தி இருக்கும்.பூனை புடுக்கு பழம் என்று கிராமத்தில் சொல்வார்கள்..ஆங்கிலத்தில் என்னவென்று தெரியவில்லை. அந்த பழத்தின் சுவையினை ஒத்திருக்கிறது.விதைகளும் அப்படியே...
 
 ----------------------------------------------------------------------- 

அப்படியே இன்னொரு சாப்பாட்டு அயிட்டம்.நாமக்கல்லில் இருந்த போது ஒரு பாட்டி கூடையில புட்டு வித்துட்டு இருந்தாங்க.கேரட் புட்டு, கேழ்வரகு புட்டு, அரிசி புட்டு இப்படி...ரோட்டுல கூவிக்கிட்டு போயிட்டிருந்த பாட்டியை கூப்பிட்டு இந்த புட்டுகளை வாங்கினோம்.குடிசைத் தொழிலாக செய்கிறார்களாம்.விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.6 ரூபாய் மட்டுமே..இதில் கேரட் புட்டு மட்டும் இனிப்பு சேர்த்து செய்யப்பட்டு இருக்கிறது.அனைத்தும் சுவையாக இருக்கிறது.
------------------------------------------------------------------------

மீண்டும் இன்னொரு சுவையான அயிட்டம்.கேரட் அல்வா.இது கரூர்ல ரொம்ப ஃபேமஸ்.எல்லா ஸ்வீட் கடைகளிலும் கிடைக்கும்.நான் எப்பவும் கரூர்ல இருக்கிற டெல்லி ஸ்வீட்ஸ் கடையில் தான் வாங்குவேன்.அவ்ளோ சுவையா இருக்கும்.இந்த கடையை விட இன்னும் நிறைய கடைகளில் இதைவிட டேஸ்டாக இருக்கிற கேரட் அல்வாக்களும் உண்டு.கரூர்ல கரம் என்கிற உணவுப்பொருளுக்கு அடுத்து இது தான் டேஸ்ட்.
 ---------------------------------------------------------------------------

நான் பல ஊருகளுக்கு பயணம் செய்யிறதால் ஏகப்பட்ட விபத்துக்களை பார்த்து மனம் வருந்தி இருக்கேன்.அதைப்பத்தி ஏற்கனவே பதிவா போட்டிருக்கேன்.இப்போ சமீபத்துல சேலம் செல்லும் போது கூட ஒரு லாரி கவிழ்ந்து கிடந்தது.டிரைவர்களின் அலட்சிய போக்கினால் அதிகம் விபத்துகள் ஏற்படுகின்றன.கடுமையான சட்டத்தின் மூலமும் தனி மனித அக்கறையும் இருந்தால் கண்டிப்பாக தவிர்க்க முடியும்.

--------------------------------------------------------------------------------

இந்த வண்டி நிக்கிற ஸ்டாண்டு பாருங்க..தண்ணி மட்டுமல்ல வண்டியையும் தூக்குவோம்.

பழைய கரம் - 1

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, June 4, 2013

கள்ளு, பீச் - சாவக்காடு, குருவாயூர், கேரளா


 
  எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.
 


குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன். 

குருவாயூரில் இருந்த போது சாவக்காடு பக்கத்துல பீச் இருக்கு அப்படின்னு நம்ம நண்பர் சொல்லவும் உடனே அங்கே போக ஆயத்தமானேன்.கோவில் அருகே வந்துட்டிருந்த ஒரு ஆட்டோவை மடக்கி பீச் போகனும் அதுக்கு முன்னாடி கள்ளுக்கடை போகனும்னு சொல்லவும் சந்தோசமா ஆட்டோ டிரைவர் நம்மளை ஏத்திகிட்டாரு.மூணு கிலோ மீட்டர் தொலைவில் எங்கோ ஒரு முட்டுச்சந்துக்கு கூட்டிட்டு போனாரு.கள்ளு என்கிற போர்டினை பார்க்கவும் அப்பவே கொஞ்சம் சுதி ஏறின மாதிரி இருந்தது.
உள்ளே நுழைய ஆள் அரவமில்லாமல் இருந்தது.நான் தான் முதல் போணி போல..... பொறித்துக்கொண்டிருந்த மத்தி மீனின் வாசம் நம்மை அடக்கமாய் அங்கே போட பட்டிருந்த பெஞ்சில் அமர வைத்தது.சாக்கனா கடை ஆயா போல இருந்த ஒரு பெண்மணி வந்து எவ்ளோ வேணும்னு கேட்க ஒரு குப்பி ஆர்டர் செய்தேன்.நல்ல மணமுடன் கள்ளு வந்து சேர என் மனம் எங்கோ சிறகடிக்க ஆரம்பித்தது. அப்படியே பொறித்துக் கொண்டிருந்த மத்தி மீனையும் கொண்டு வர சொன்னேன்.
காலை நேரத்தில் இதமாய் இறங்க மிக தேவாமிர்தமாய் இனித்தது.ஒரு குப்பி காலி செய்துவிட்டு ஆர்டர் செய்த அடுத்த புட்டிக்கு ஏங்க ஆரம்பித்தேன்.கள்ளும் மத்தியும் போட்டி போட்டுக்கொண்டு உள்ளே இறங்கின..இரண்டையும் சுகமாய் சாப்பிட்டவுடன் பீச் ஞாபகம் வரவே அங்க போலாம் என டிரைவரை கூப்பிட அவரும் வந்து தன் தாகத்தினை தீர்த்துக்கொண்டு புறப்பட்டார்.
எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவக்காடு என்கிற ஊரினை அடைந்த பின் சிறிது தூரத்தில் பீச் இருக்கிறது.

 
 
உள் நுழைகையில் காய வைக்கப்பட்டிருக்கிற கருவாட்டு வாசம் நம் நாசியினை துளைக்கிறது.ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி வெறும் படகுகளுடன் இருக்கிறது இந்த பீச்.மிக அழகாய் எவ்வித கூட்டமும் இன்றி கடலில் குளிக்கும் ஒரு சில நபர்களுடன் அமைதியாய் இருக்கிறது.ஒரே ஒரு ஐஸ் வண்டிக்காரர் மட்டும் வாடிக்கையாளர்களின் வருகையை நோக்கி அந்த வேகாத வெயிலிலும் காத்துக் கொண்டிருந்தார்.கொஞ்ச நேரம் கடலின் அழகையும் அலைகளின் ஆரவாரத்தையும் ரசித்துக்கொண்டு (அம்மணிகள் கூட இல்லை அப்புறம் எவ்ளோ நேரம் அங்க இருக்கிறது என) குருவாயூர் திரும்பினேன்.
சாவக்காடு ஒரு குட்டி வளைகுடா நாடு போல.இங்குள்ள மக்களில் முக்காவாசி பேர் அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர்.அதனால் தான் அதிகமாய் பெரும் பெரும் கட்டிடங்கள் இங்கே இருக்கின்றன. வெளிநாட்டுப்பொருட்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்குமிடம் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.
 
குருவாயூர் செல்பவர்கள் அப்படியே பீச் பார்த்து விட்டு வரலாம்.ஆனைக்கொட்டில் என்கிற இடமும் பார்த்துவிட்டு வரலாம்.

கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்ம்ம்ம்ம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி  இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....
 
நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
 இன்னும் கொஞ்சம்...

Sunday, June 2, 2013

சமையல் - அசைவம் - பால் சுறா - கருவாட்டுக்குழம்பு

வாரா வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான். (அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்) இந்த வாரம் கருவாட்டுக் குழம்பு வைத்தேன்..செம டேஸ்ட்.சாப்பாட்டிற்கு இது செம மேட்ச்.அதுவும் அடுத்த நாள் பழைய சாதத்திற்கு இந்த குழம்பை தொட்டு சாப்பிட்டா இன்னும் செம டேஸ்ட்....
கருவாட்டுக்குழம்பு..
கனக்கச்சிதமா யாரு வச்சது..

நம்ம நண்பர் நாகர்கோவிலில் இருந்து போனை போட்டு நான் கோவை வர்றேன் அப்படின்னு சொல்லி பால் சுறா கருவாடு ஒரு ஐந்து கிலோ பக்கம் வாங்கி வந்துட்டாரு.இப்போ வீடு முழுக்க ஒரே கருவாட்டு வாசம்...ஆனா செம டேஸ்டா இருக்கு அதை செஞ்சு சாப்பிடும் போது.....

செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
பால்சுறா கருவாடு - 250கிராம்
சி - வெங்காயம் - 100 கிராம்
கத்தரிக்காய் - 3
தக்காளி - 3
பூண்டு - 20 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
இஞ்சி - சிறிதளவு
பட்டை, கிராம்பு, - கொஞ்சம்
கடுகு - தாளிக்க
சீரகம் - தாளிக்க
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி - தேவையான அளவு

 

செய்முறை :
முதலில் கருவாட்டினை தேவையான அளவு சைசுக்கு நறுக்கிக்கொண்டு உப்பு போக வெந்நீரில் ஊறவைத்து அலசிக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் புளி கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும்.வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு ,கடுகு ,சீரகம்   வெந்தயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்க வேண்டும்.பின் அரிந்த பூண்டு, நறுக்கிய இஞ்சி போட்டு வதக்க வேண்டும்.பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.பின் தக்காளி சேர்க்க வேண்டும்.வதங்கிய பின் அரிந்து வைத்து இருக்கிற கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.அதில் மஞ்சள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து (கருவாட்டில்  உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை) சேர்த்து வதக்க வேண்டும்.பின் கரைத்து வைத்திருக்கிற புளி தக்காளி கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்தவுடன் அலசி வைத்துள்ள கருவாட்டினை போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து நிறுத்திவிடவும்.(தேங்காய் சேர்க்க விருப்பம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம் )
பின் கொத்தமல்லி தழை போட்டு மூடிவிடவும்.சுவையான கருவாட்டு மீன் குழம்பு தயார்...

சுடச்சுட சாதம் போட்டு இந்த குழம்பை ஊத்தி பிசைந்து சாப்பிட்டா ஆஹா...அருமை....அப்படியே சுறா கருவாட்டினை கொஞ்சம் கொஞ்சமா பிச்சி சாதத்துல வச்சி சாப்பிட்டா ஆஹா...என்ன சுகம்...என்ன டேஸ்ட்.....சான்ஸே இல்ல....

இந்த பால் சுறா கருவாட்டு குழம்பு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஏற்றது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...