COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE நாட்டுக்கோழி ஸ்பெஷல்
இன்று
புதிதாய் கோவையில் தன் கிளையை தொடங்கி இருக்கும் குற்றாலம் பார்டர் ரஹமத் கடைக்கு
சிறப்பு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.அழைப்பிற்கு காரணம் சென்னையின் பிரபல ஃபுட்
பிளாக்கர் நண்பர் ஷப்னம் அவர்கள்.காலை பதினொரு மணி சுமாருக்கு சென்றிருந்தேன்.ஹோட்டலின்
இண்டீரியர் அழகுற அமைக்கப்பட்டு மனதுக்கு இதமாய் இருக்கிறது.உள் நுழைந்ததும் குளிரூட்டப்பட்ட
டைனிங் ஹால் நம் மனதை ரம்மியமாக்குகிறது.எங்களுக்குண்டான டேபிளில் அமர்ந்தோம்.
பச்சை
பசேலென்ற வாழை இலையை டேபிளில் விரித்துவிட்டு, கொடுத்து விட்டு போன மெனுகார்டில் புரோட்டாவும்,
பிரியாணியும், நாட்டுக்கோழி வெரைட்டிகளும் வரிசை கட்டி இருக்க, அனைத்தையும் ஒவ்வொன்றாய்
பார்த்துக் கொண்டிருந்தோம். நாட்டுக்கோழியில் இத்தனை வகைகளா என ஆச்சர்யப்படுத்தும்
வகையில் மெனுக்கள் நிரம்பி வழிகின்றன.நல்ல கார சாரமா சாப்பிடறவங்களுக்கு ஏத்த மெனுக்கள்
நிறைய இருக்கின்றன.
யூனிபார்மிட்ட பணியாட்கள் நெல்லைத் தமிழில் என்ன சாப்டீறீங்க என
அழகாய் கேட்கும் போதே செங்கோட்டை பார்டர் கடை ஞாபகம் வருகிறது.
மட்டன் பிரியாணி, சிக்கன் கன் (CHICKEN GUN), சிக்கன் பொடிமாஸ், பிச்சிப்போட்ட நாட்டுக்கோழி
என ஆர்டரை அதிகப்படுத்தவும், ஒவ்வொன்றாய் எங்களைத்தேடி வந்தது.முதலில் வந்த மட்டன்
பிரியாணியின் மணம் மூக்கைத்துளைக்கிறது.நன்கு நீண்ட பாசுமதி அரிசியின் சுவையில் மசாலாக்கள்
ஒன்று சேர்ந்து மட்டனின் சுவையும் சேர்ந்து நம் பசி நரம்புகளை மீட்டி உடனடியாக சுவைக்க
செய்கிறது.கொஞ்சம் ஒரு விள்ளலை எடுத்து வாயில் இட்டபோது, நாவின் சுவை நரம்புகள் நாட்டியமாடுகின்றன.மட்டன்
துண்டுகள் பஞ்சு போன்று பெரிய பெரிய துண்டுகளாய் இருக்கின்றன.எலும்புகள் இருந்தாலும்
கடிப்பதற்கு கொஞ்சம் போராட வேண்டி இருக்கிறது.ஆனாலும் சுவையாக இருக்கிறது.தால்ச்சாவும், தயிர் ரைத்தாவும் நல்ல காம்பினேசனில் இருக்கிறது
அடுத்து வந்தது பிச்சிப்போட்ட கோழி….
நன்கு
வெந்து நல்ல மிளகு காரத்துடன் தோசைக்கல்லில் பிரட்டப்பட்ட நாட்டுக்கோழி சதைகள் தனித்தனியாய்
உதிரி உதிரியாய் இருக்கிறது.சிறிது சிறிதாய் எடுத்து சாப்பிடும் போது சுவையின் அளவு
அதிகரிக்கிறது.காரம் அளவாக இருக்கிறது.நாட்டுக்கோழியின் எலும்பும் நன்கு வெந்து கடித்து
சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.
சிக்கன்
கன் (CHICKEN GUN)
சிக்கன்
விங்க்ஸ் தான் துப்பாக்கி வடிவில்.இதுவும் செம டேஸ்ட்.நன்கு வேக வைத்து கல்லில் பிரட்டி மிளகு காரத்துடன் சாப்பிடநல்ல கார சாரமாக இருக்கிறது.கொஞ்சம்
கொஞ்சமாய் பிய்த்து சாப்பிடும் போது நாவின் நரம்புகள் நல்ல நாட்டியமாடுகின்றன.
சிக்கன்
பொடிமாஸ்
உதிர்த்த
நாட்டுக்கோழியுடன் கொஞ்சம் வெங்காயம், கறிவேப்பிலையுடன் முட்டை சேர்த்து கல்லில் நன்கு பிரட்டி பொரியல் பதத்தில் இருக்கிறது.இதுவும்
நல்ல சுவையே.அளவான காரத்துடன் சுவை மிகுந்து இருக்கிறது.
அடுத்து
கடையின் மிகப்பிரபலமான புரோட்டா..
வட்ட
வடிவில் அழகாய் வந்து சேர்கிறது பொன்னிறமாய் கல்லில் வேக வைத்த புரோட்டா.கூடவே சால்னாவும்.பரோட்டா மிருதுவாக இருக்கிறது.பரோட்டா
இலையில் வைத்தவுடனே அருகிலேயே வாளி நிறைய சால்னாவும் வைக்கப்படுகிறது.நாட்டுக்கோழி
சால்னாவில் நன்கு ஊற வைத்து சாப்பிட செம டேஸ்ட் தான்.
புரோட்டாவிற்கு தனியாய் சிக்கன்
65 கிரேவி என்று ஒன்று இருக்கிறது.கொஞ்சம் காரம், கொஞ்சம் உப்பு என சுருக்கென்று இதுவும்
புரோட்டாவுக்கு ஏத்த ஜோடி. எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் இலையில் மிஞ்சியிருப்பவை
மென்று தின்ற நாட்டுக்கோழி மற்றும் மட்டன் எலும்புகள் மட்டுமே.எல்லா டேபிள்களிலும் இதே தான்.அந்தளவுக்கு
சுவை ஆக்ரமித்து இருக்கிறது.
கடைக்கு
கூட்டம் அலை மோதுகிறது.டேபிள்கள் அனைத்தும் நிரம்பி இருக்கின்றன. கடை இன்று தான் ஆரம்பித்து
இருக்கிறார்கள்.கொங்கு மண்ணிற்கு புதிதான சுவை மிகுந்த வரவு.செங்கோட்டை பார்டர் போய்
சாப்பிட்டு விட்டு வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை இனி.ஒரு எட்டு போனால் இங்கேயே அந்த
சுவையுடன் சாப்பிட்டுக் கொள்ளலாம்.போக போக சுவை இன்னும் அதிகமாகும், காரணம் நம்மூரு
சிறுவாணி தண்ணீர்.
விலை
எப்பவும் போல கோவைக்கு ஏற்றார் போல இருக்கிறது.புரோட்டா மிகச் சிறியதாக இருக்கிறது,
விலை அதிகமானதாக தோன்றுகிறது.நாட்டுக்கோழி வகைகளை சுடச்சுட சுவைக்கனும்னா தாராளமா செங்கோட்டை
பார்டர் போறதுக்கு பதிலா இங்கேயே சுவைக்கலாம்…
சென்னையில்
கிட்டத்தட்ட நான்கு கிளைகளை கொண்டுள்ள இந்த நிறுவனம் கோவையிலும் பல்வேறு கிளைகளை நிறுவி
கோவை மக்களுக்கு மென்மேலும் ருசியினை அளிக்கட்டும்.கடையின் உரிமையாளர் முகமது ஹசன்
அவர்களைச் சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி..
நேரம் : காலை - 12 மணி முதல் 4 மணி வரை
மாலை – 6.30 முதல் இரவு 10 மணி வரை.
நேசங்களுடன்
ஜீவானந்தம்