Friday, September 18, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

 ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

        ஒரு வேலை விசயமா தேனியில் இருந்து சின்னமனூர் வந்தோம்.நேரத்துலயே போனதால் காலை சாப்பாடு சாப்பிடாம போய்ட்டோம்.பத்துமணி வேற ஆயிடுச்சி.சரி. ஏதாவது இருப்பதை சாப்பிடுவோம்னு பிரபல ஹோட்டலான கர்ணா வுக்கு போய் கேட்டா, பிரியாணியே ரெடியா இருக்குண்ணே..அப்படின்னு சொல்ல, சரி மதிய சாப்பாட்டையே இப்பவே ஆரம்பிப்போம்னு கை கழுவிவிட்டு டேபிளில் அமர்ந்தோம்.


                    பளபளன்னு ஃப்ரஷான வாழை இலை போட, பிரியாணி வெண்கல சிறு குண்டாவில் கொண்டு வைத்து வைக்க, பிரியாணி அதன் நிறத்தோடு மிக்க வாசனையோடு, சீரகசம்பா அரிசியோடு மட்டன் துண்டுகளோடு, இலையில் சூடாய் வைக்க, ஆவி பறக்கும் வாசனையில் மூக்கை துளைத்தது பிரியாணியின் மணம்.ஆஹா..இதுவல்லவோ பிரியாணி...ஒரு விள்ளல் எடுத்து சுவைத்ததும் நாக்கின் நரம்பு மண்டலங்கள் இயந்திரகதியில் இயங்க ஆரம்பித்தன..
நல்ல சுவை.மணம்.நிறம் என அனைத்தும்.





மட்டன் துண்டுகள் அதன் வாசனையில் நன்கு வெந்திருக்கிறது..சாப்பிட சுவையுமாக இருக்கிறது.அரிசியும் நல்ல உதிரி உதிரியாக, பிரியாணிக்கே உண்டான நிறத்துடன் சூப்பராக இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் இந்த ஹோட்டல் பத்துக்கு பத்து ரூம் சைசில் இருந்ததாம்.இன்று பிரம்மிக்கத் தக்க வளர்ச்சி என்பதன் காரணம் அதன் ருசியே..

                        மட்டன் சுக்கா அடுத்த ஆர்டராய் இருக்க, அது ஏனோ என்னை கவரவில்லை.இன்னும் கொஞ்சம் பதமாக வெந்திருக்க வேண்டிய நிலையில் அது இருக்கிறது.ஒருவேளை நாங்கள் நேரத்திலேயே சென்றுவிட்டதால், வெந்து கொண்டிருக்கும் போதே எடுத்து வந்து விட்டார்களோ என நினைக்கிறேன்.



பிரியாணி நல்ல சுவை.மணம், சுவை, திடம் திரீ ரோசஸ் போல பிரியாணி சூப்பரோ சூப்பர்.

                சின்னமனூர் போனீங்கன்னா தாராளமாக சுவைக்கலாம்..பத்து மணிக்கே தயாராகிவிடுகிறது பிரியாணி..ஆற அமர ருசிக்கலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 16, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் ரோடுசைட், பாண்டமங்கலம், வேலூர் - ROADSIDE HOTEL, PANDAMANGALAM, VELUR, NAMAKKAL

 ROADSIDE HOTEL, PANDAMANGALAM, VELUR

                         நம்ம மாப்ள விவசாயி பாலு தோட்டத்திற்கு போன போது ஒரு கடையை பத்தி சொன்னாப்ல.நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு ஹோட்டல் நடத்துவதாகவும், அந்த ஏரியாவில் கொஞ்சம் டேஸ்ட்ல பிரபலம் ஆகிட்டு இருக்குன்னு சொன்னாப்ல..

                சரி..சொல்லு மாப்ள.. அந்தப்பக்கம் போலாமுனு சொன்னேன்.

            சரி.கிளம்பு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்னு சொல்ல போன இடம் வேலூர் பக்கத்துல இருக்கிற பாண்ட மங்கலம்.

                இந்த ஏரியாவுல ஆட்டுக்கறி ரொம்ப பேமஸா இருந்தது.600 ரூபாய்க்கு விற்ற காலத்தில் 265 க்கு விற்ற ஊர்.ஆனா இப்பொழுது நார்மல் ரேட்டுக்கு வந்த ஊர்.பக்கத்தில் இருக்கும் ஜேடர்பாளையம் என்கிற ஊர் காட்டன் சேலைகளுக்கு பிரபலம். அந்த ஊர் செல்லும் வழியில் பாண்டமங்கலம்.

            அங்கே ரோட்சைடு ஹோட்டல் என்கிற பெயரில் புளிய மரத்தின் அடியிலே..(புஷ்பலதா மடியிலே).புளியமரம்னு சொன்னாலே நம்ம விஜய் டிவி தங்கதுரை ஞாபகம்தான் வருகிறது.


            கீற்று கொட்டகையில் மூங்கில் தட்டிகளை வைத்து மூன்று டேபிள்கள், இரண்டு கிச்சன்கள் என அமைத்து கொஞ்சம் விசாலமாக இந்த ஹோட்டலை அமைத்திருக்கின்றனர்.சீரியல் லைட் வெளிச்சத்தில் ஹோட்டல் மின்னிக் கொண்டிருக்க உள் நுழைந்தோம்.

                கஸ்டமர்கள் பார்சலுக்கு வெயிட் பண்ணி கொண்டிருக்க, அப்பொழுது தான் காலியான டேபிளில் அமர்ந்தோம்.கல்லில் வெந்து கொண்டிருந்த பொன்னிற புரோட்டோக்களை பார்க்க ஆசை அதிகமானது.புரோட்டாவையே சாப்பிடுவோம் என இலையை போட சொல்லி கொண்டு வரச்சொன்னோம்.


                            சுடச்சுட புரோட்டோ லேயர் லேயராய் பொன்னிறமாய் கல்லில் வெந்து, முறுகலான வாசனையில் பார்க்கவே பசியை தூண்டும் விதத்தில் இருந்த புரோட்டாவை பிய்த்து போட சொன்னோம்.


                            சூடான குருமாவை அதன்மேல் ஊத்தி பிசைந்து குழைந்து, ஒரு விள்ளலை எடுத்து வாயில் போட்டால் சொர்க்கம் பக்கத்தில் தெரிந்த நிலையை அடைந்தோம்.


            வாவ்..புரோட்டாவும் குருமாவும் ஒன்று சேர்ந்து செம சுவையை தந்தது.

                    பன் பரோட்டாவினை மாஸ்டர் நல்ல டேஸ்டியாக போடுவார் என சொல்ல அதில் இரண்டை ஆர்டர் செய்தோம்.குட்டியாய் அழகாய் வட்ட வடிவத்துடன் மொறுமொறுவுடன், பொன்னிறமாக புரோட்டா லேயர் லேயராக வர, அதில் சிக்கன் குருமாவினை ஊற்ற, அது அதனுடன் ஓபிஎஸ் இபிஎஸ் போல இணைந்து நல்ல சுவையை தந்தது.



                        புரோட்டா எப்பொழுது சாப்பிட்டாலும், அதனுடன் ஜோடி சேரும் குருமாவினை பொருத்தே அதன் சுவை தெரியவருகிறது.சிக்கன் குழம்பில் ஊற வைத்த புரோட்டா அப்படியே தொண்டையில் வழுக்கி கொண்டு போவது செம..சிக்கன் துண்டுகளும் நன்கு வெந்து அதன் சுவையை அதிகரிக்கிறது.

                        இந்த கடையில் வாத்து வறுவல், குடல், சிக்கன் வறுவல் என அனைத்தும் கிடைக்கிறது. இன்னொரு சமயத்தில் அந்தபக்கம் போனால் அனைத்தையும் சுவைக்க வேண்டும் என்கிற ஆவலை தருகிறது.

                கடையில் புரோட்டாவிற்காக கூடும் கஸ்டமர்களே இதற்கு சாட்சி. அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க.

                புரோட்டா ஏ ஒன்..மாஸ்டர் வேற காரைக்குடியை சேர்ந்தவராம்.பின்னி பிடல் எடுக்கிறார் சுவையில்..

                புரோட்டா ரூ.12ம், சிக்கன் வறுவல் ரூ.60 க்கும் கிடைக்கிறது.ஆர்டரின் பேரில் சைவம் அசைவம் இரண்டும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

                        நண்பர்களில் ஒருவர் கேட்டரிங் முடித்து இருப்பதால் சுவையில் பல மாற்றங்களை அவ்வப்போது செய்கிறாராம்.கிராமம் போன்ற ஊரில் துணிந்து ஹோட்டலை ஆரம்பித்த அந்த நால்வருக்கு வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, September 13, 2020

ஜெய் கொரோனோ

ஜெய் கொரோனோ

                        சாலைகளின் இருபக்கமும் நடைபாதை வியாபாரிகளை அதிகம் உருவாக்கி இருக்கிறது.பெரும்பாலும் காய்கறி வண்டிகள் தான்.புதிதாய் பல தொழில் முனைவோர்களையும், ஏற்கனவே தொழிலதிபர்களாய் இருந்தவர்களை சாமானியனாவும், கடன்காரனாகவும் மாற்றி இருக்கிறது.கடை உரிமையாளர்கள் நிறைய பேர் கடையையே காலி செய்து போய்விட்டனர்.எந்த தெருவை எடுத்தாலும் அதிகம் டூலெட் போர்டுகளே காணப்படுகின்றன.பல லட்சம் மதிப்புள்ள இன்னோவா காரிலும், மாருதி டிசையர் காரிலும் சாலையோரத்தில் மாஸ்க் மற்றும் வாழைப்பழம் விற்று கொண்டிருக்கின்றனர்.ஒரு சிலபேர் சைக்கிளிலும், டூவீலர்களிலும் டீக்கடை, மாஸ்க், பூ, காய்கறி, இறைச்சி என தங்களின் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கின்றனர்.
                
                    மாணவர்கள் தங்கள் கல்வியையும் இழந்து விட்டனர்.அரசுப்பணியில் இருப்பவர்களை தவிர தனியாரில் உள்ள அனைவர்களுக்கும் பலத்த பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது.கொரோனோவுக்கு முன் காண்ட்ராக்டர், இண்டீரியர், எஞ்சினீயர் என இருந்தவனையும் இப்பொழுது ஆடு, வாத்து, கோழி மேய்ப்பவனாகவும், தேங்காய் வியாபாரியாகவும் ஆக்கி இருக்கிறது.    

                                      உலகம் தழுவிய இந்த கொரோனோவில் அனைவருக்கும் மிகப்பெரும் பாதிப்புதான்.இந்திய வரைபடத்தில் அத்திப்பட்டி என்கிற கிராமமே இல்லாமல் போனதை போல இந்த காலண்டரில் 2020 என்கிற ஆண்டே இல்லாமல் ஆக்கி இருக்கிறது.
            
                ஐந்து மாதங்களுக்கும் மேலாக லாக்டவுன் லாக்டவுன் என நீட்டித்து அம்மணிகளை வெளிவர விடாமல் செய்து, அவர்களையும் கொழுக் மொழுக் என மிகப்பருமனாய் குண்டாக்கி விட்டதும் இந்த கொரோனா தான்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 11, 2020

கரம் - 39 - ஆன்லைன் கிளாஸ் பரிதாபங்கள்

"வீடியோ ஆஃப் பண்ணுங்க "

"ஓகே மிஸ்"

"எல்லாரும் ஒரே டைம்ல பேசாதீங்க "

"பவன்..லைன்ல இருக்கியா "

"எஸ்.மிஸ்"

"ஹலோ "

" லைன்ல இருக்கீங்களா "

"எஸ் மிஸ் "

"இப்ப வேற யாரு ஜாய்ன் பண்ணது"

"சந்தோஷ் மிஸ்"

"வேற யாரு இருக்கா "

"மனிஷா இருக்கீங்களா."

"வீடியோ எல்லாம் கட் பண்ணிக்கோங்க "

"லிசன்..லிசன்..யாரும் பேச வேணாம்"

                    இப்படித்தான் ஆன்லைன் கிளாஸ் இன்று ஆரம்பமாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும் என மகனுக்கு இன்று தான் ஆரம்பம். அனைத்து குழந்தைகளையும் ஒருங்குபடுத்தவே அரைமணி நேரம் ஆகிறது.

                        வீடியோவை ஒரு சில குழந்தைகள் ஆன் பண்ணுவதால் அவர்கள் அங்கே வளைந்தும் நெளிந்தும் அமர்ந்து கொண்டிருக்கின்றனர்.கூடவே பெற்றோர்கள்...

                                    என் பையனோ வீடியோவை ஆஃப் பண்ணிவிட்டு ஓடி ஆடி கொண்டிருக்கிறான்.இடையிலேயே இரண்டு மூன்று தோசையை சாப்பிட்டு விட்டு தெம்பாக உலாவிக் கொண்டிருக்கிறான்.போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு அங்குமிங்கும் திரிகிறான்.ஒரு சில குழந்தைகள் மட்டும் கண்ணும் கருத்துமாய் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இடையிடையே வீட்டில் ஏதாவது ஒரு சத்தம்.மிஸ் சொல்லுவதும் குழந்தைகள் சொல்லுவதும் இடையிடையே கிராஸ் ஆகி மாறி மாறி பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

கோரஸாய் ஒலிக்கிறது.

இப்படித்தான் போகிறது..

ஆன்லைன் அலப்பறைகள்
இன்னும் கொஞ்சம்...

கரம் - 38 கொரோனோ பாதிப்புகள்

இப்ப இருக்கின்ற வேலை இல்லாத நிலைமையில், தத்தம் பொருளாதார பாதிப்பின் சுமையினை ஈடுகட்ட நிறைய பேர் உணவுத்தொழிலாக திடீர் ஹோட்டல்கள், வீட்டு சமையல்கள், ஹோம்மேட் டெலிவரி என ஆரம்பித்திருக்கின்றனர்.நல்ல விசயம் தான்.ஆனால் எதை செய்து கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்று நினைத்து விட்டார்கள் போல..

நம் ஆபீசுக்கு பக்கத்து தெருவில் ஒரு கடைக்காரர் பிட் நோட்டிஸ் கொடுத்து ஆரம்ப சலுகை விலையாக சிக்கன் பிரியாணி, பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன் என எது வாங்கினாலும் ரூ.50 என விளம்பர படுத்தினார். முக்கியமாய் முஸ்லீம் அன்பரோட கடை அது.கொரோனோ பரவல் காரணமாக இப்பொழுது நான் எங்கும் வெளியே செல்வதில்லை. வீட்டிலிருந்தே மதிய உணவையும் கொண்டு வந்து விடுகிறேன்.அந்த நாளன்று அந்த பக்கமாய் போன நம் சூப்பர்வைசர் இந்த பிட் நோட்டிசை கண்டதும் போன் அடிக்க, சரி டேஸ்ட் பார்க்கலாம், நாமும் எவ்வளவு நாள்தான் வீட்டுச்சோறையே சாப்பிடுவது கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்ககலாமே என பெப்பர் சிக்கன் வாங்கி வா என சொல்ல, பையனும் வாங்கி வந்தான்.

                        பிளாஸ்டிக் டப்பாவில் பேக் பண்ணி கொடுத்திருந்தார்கள்.ஓபன் பண்ணி பார்த்தால் எந்த வித மணமும் இல்லை.சிக்கனை வேக வைத்து மிளகு பொடி என்கிற பெயரில் காரமில்லாத ஏதோ ஒரு தூளில் பிரட்டி வைத்திருக்கின்றனர்.சிக்கனும் ஏதோ கடமைக்கு வெந்திருக்கும் போல.

                                    உப்பு உரைப்பு இல்லை.மசாலா வாசனை இல்லை.மிளகுப்பொடியும் மரத்தூளை போல இருக்க, வாயில் வைத்தவுடன் துப்பத்தான் தோன்றியது.அப்படியே எடுத்து வெளியே கொட்டிவிடு தம்பி என்று சொல்ல அது உடனே குப்பைக்கு தான் போனது.பாய் வீட்டு கடை சரி டேஸ்ட் நல்லா இருக்கும்னு வாங்கியது தப்பாக போய்விட்டது.நல்லவேளை பிரியாணி, இன்னும் மற்ற அயிட்டங்கள் எதுவும் வாங்க வில்லை.இந்த மகா மோசமான உணவுக்கு பிட் நோட்டிஸ் வேறு.அதிலும் வீட்டு விசேசங்களுக்கு ஆர்டரின் பேரில் சமைத்து தரப்படுமாம்...

பிட் நோட்டிசை பார்த்து எத்தனை பேர் வாங்கி இருப்பார்கள்..முதலில் நன்கு சுவையாக சமைக்க கற்றுக் கொண்டு இந்த மாதிரி கடைகளை ஆரம்பியுங்கள்.சமைக்கும் போதாவது கொஞ்சம் டேஸ்ட் பாருங்கள்.ஏனோ தானோ என்று சமைத்து வாடிக்கையாளர்களின் உடலை கெடுக்காதீர்கள்.காசையும் கொடுத்து வியாதியையும் வாங்க வேண்டியிருக்கிறது.நம்ம சூப்பரிடமும் சொன்னேன்.. போய் கடைக்காரரிடமே சொல்..மிக மட்டமான சுவை என்று.. அவனும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறான்...ரெடிமேட் பதில் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.

            இந்த கொரோனோவை விட இவர்கள் தயாரிக்கும் உணவு மிக மோசமாக இருக்கிறது..

இன்னும் கொஞ்சம்...