Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, January 4, 2021

கரம் – 40

ஆச்சரியம்:

        சமீபத்தில் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது வரும் வழியில் திருச்செங்கோட்டில் நம்ம வண்டி மக்கர் செய்ய ஆரம்பித்து விட்டது.பேட்டரிக்கு திடீரென்று பவர் செல்லாததால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது.கரெக்டாக திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் பேட்டரி கடைக்கு அருகிலேயே நின்றுவிட்டது.நல்லவேளை.பக்கத்திலேயே இருந்ததால் கவனிக்க வசதியாக இருந்தது.மெக்கானிக்கிடம் சொல்லி பேட்டரியை சரி பண்ண சொல்லி விட்டு அருகில் இருந்த கார் பட்டறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.அப்பொழுது டாடா நானோ கார் ஒன்று சர்வீஸுக்காக நின்று கொண்டிருந்தது.எதேச்சையாய் பார்த்ததில் அதன் பின்பக்க கதவில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.பார்த்ததில் ஆச்சர்யமும் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆனோம்.வீட்டு கதவுக்கு தாழ்ப்பாள் மாட்டி பார்த்திருப்போம்.ஆனா காருக்கு தாழ்ப்பாள் போட்டதை இப்போதான் பார்க்கிறோம்.நல்லவேளை டாடா ஓனர் பார்க்கல…பார்த்து இருந்தா இந்நேரம் இந்த கார் தயாரிக்கிற பிசினஸையே விட்டுட்டு ஓடி இருப்பார்.


         நம்மூர்ல தான் இப்படி பட்ட அறிவாளிங்க இருக்காங்க.எதையாவது எடக்கு மடக்கா செய்யுறது, ஒரு பொருளோட மதிப்பு தெரியாம அதை சேதாரம் பண்றது இப்படி….இப்படி பட்ட ஆளுங்க இருக்கிறதால தான் நமக்கும் நல்ல கண்டெண்ட் கிடைக்குது.

வாவ்…..வாட் எ ஐடியா சேட்ஜி…..

அதிசயம் :

கோவை  கவுண்டம்பாளையத்தில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.ஹவுசிங் யூனிட்டில் ஆரம்பித்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வரைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பாலம் பணி கொஞ்சம் ஆமை வேகத்தில் நடந்தது.இப்பொழுது மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தூண்கள் அமைக்கும்  பணி அனைத்தும் முடிந்து இப்பொழுது இரு தூண்களுக்கு இடையில் செண்ட்ரிங்க் அடித்து உத்திரம் (BEAM ) அமைப்பதற்காக கான்கீரீட் வேலை நடக்கிறது.இப்பொழுது வரை 6 பில்லர்கள் வரை பீம் வேலை முடிந்து விட்டது.மற்றவை ஒவ்வொன்றாக போய்க்கொண்டிருக்கிறது.பாலம் கட்டுமான பணி முடிய எப்படியும் இன்னும் ஆறு மாதங்கள் ஆகிவிடும்.அதற்குள் ஏதாவது ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்து விடும்.அதனால் தான் என்னவோ சீக்கிரம் பில் பாசாக வேண்டி கட்டிக்கொண்டிருக்கும் பாலத்திற்கு அம்மா பெயிண்ட் ...சாரி...பச்சை கலர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கின்றனர்.




பாலமே இன்னும் முடியாத நிலையில் அவசர அவசரமாக பெயிண்ட் அடித்து அரசாங்கத்திடம் பணம் பெறும் முயற்சியில் இருக்கின்றனர் காண்ட்டிராக்ட் காரர்கள்.பாலம் கான்கிரீட் போட்டு சரியான நாட்கள் வரை கியூரிங் விடுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.அதற்குள் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்

நடப்பு ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் உடனடியாக காந்திபுரம் முதல் ஏர்போர்ட் வரை மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து இப்பொழுது அங்கும் வேலை பிசியாக போய்க்கொண்டிருக்கிறது.

கோவையில் ஏகப்பட்ட பாலங்கள் முடிவுறாமல் இன்னமும் இழுத்துகொண்டிருக்கிறது.கவுண்டர்மில்ஸ் பாலம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.இத்தனைக்கும் கவுண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ் இரண்டும் ஒரே சமயத்தில் ஆரம்பித்தனர்.கவுண்டம்பாளையம் பகுதியில் 30% பணிகள் முடித்து விட்டனர்.ஆனால் அங்கோ போட்டது போட்டபடி இருக்கின்றது.உக்கடம் மற்றும் ராமநாதபுரம் பாலமும் இன்னமும் முடிவுறாமல் இருக்கிறது.

முழுதாய் ஒவ்வொரு பாலத்தையும் முடித்துவிட்டு பின் புதிய பாலங்களை ஆரம்பிக்கலாம்.ஆனால் எதையும் முடிக்காமல் கோவை முழுவதும் தோண்டி வைத்து நகருக்குள் மாபெரும் வாகன நெரிசலை உருவாக்கிவிட்டிருக்கின்றனர்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை வாட்டி வதைக்கின்றனர்.இன்னும் மெட்ரோ ஆரம்பிக்க வில்லை.அது வந்தால் இன்னும் கந்தரகோலம் தான் கோவை....

சீக்கிரம் அனைத்து பாலங்களும் முடிந்து அழகான கோவையை பார்க்க வேண்டும்.

அனுபவம் :

                      கரூர் செல்லும் போது வெள்ளக்கோவில் பகுதியில் ஒரு டீக்கடையில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினோம்.கடைக்காரரிடம் டீ சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால் கோலி சோடா..உடனே டீ யை கேன்சல் செய்து விட்டு கோலி சோடாவினை எடுத்து பெருவிரலை உள்ளே விட்டு ஒரு அழுத்து அழுத்தினால் கேஸ் பீச்சி அடிக்க,கோலி குண்டு உள்ளே போக, பாட்டிலில் இருந்த கலரின் வாசம் வெளிவந்து மூக்கை துளைக்க, எடுத்து வாயில் வைத்து குடிக்க, சிறுவயதில் கோலி சோடா குடித்த ஞாபகங்கள் வந்து போனது.கலரின் இனிப்பும், கேஸ் நிறைந்த தண்ணீரும் நாவினை நனைத்து சுவை நரம்புகளை நடனமாட வைத்து தொண்டைக்குள் இறங்கி வயிற்றினை நிரப்பியது.சிறிது நேரத்திலேயே கலரின் வாசத்தோடு பெரிய ஏப்பத்தினை கொடுக்க மனம் ஆனந்தமானது.கோலி சோடா குடிக்கும் போது சீக்கிரம் தீராமல் இருக்க பாட்டிலை திருப்பி, கோலிக்குண்டினை பாட்டிலில் உள்ள அந்த அடைப்பினில் குண்டினை வைக்காது, குண்டுடன் கலரை உறிஞ்சி குடிக்கும் போது இருக்கிற ஆனந்தம் இருக்கே  அதை அனுபவித்தால் தான் தெரியும்.அவ்வப்போது கோலி குண்டு பாட்டிலில் உரசி உரசி ஒரு சத்தம் வரும் பாருங்க...கேட்க அது அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.



                    இப்பொழுது விலையும் ரூ 10. என இருக்கிறது.ஒரு ரூபாய் இருந்த போது குடித்தது.பன்னீர் சோடா மற்றும் ஜிஞ்சர் என வெரைட்டியாக இருந்தது.வயிற்று வலியா...ஜிஞ்சரை குடித்தால் போதும் .விருந்தாளிகள் வருகிறார்களா, கலர் இருந்தால் போதும்.இப்படித்தான் ஒருகாலத்தில் கோலோச்சியது கோலி சோடா.பன்னாட்டு கம்பெனிகளின் வருகையில் இப்போது தொலைந்து விட்டது.ஆனாலும் ஒரு சில பேர் இன்னும் இதை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்

 


இன்னும் கொஞ்சம்...

Thursday, May 16, 2019

இரங்கல்


தர்மா
                            

                        வட இந்திய தொழிலாளி.எங்களிடம் பல வருடங்களாக கார்பெண்டராக பணி புரிந்தவன்.நல்ல வேலைக்காரன்.ஆனால் தாமதம் செய்பவன்.உடனே வாடா என்றால் இரண்டு மணி நேரம் கழித்து தான் வருவான்.சொன்னபடி வேலையை தரமாய் செய்வான்.சின்ன வயது தான்.இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது.வருடத்திற்கு இரு தடவை உ.பி சென்று வருவான்.ரத்தினபுரியில் வாடகைக்கு இருக்கிறான்.இந்த முறையும் ஊருக்கு சென்று வந்து விட்டு வேலை கேட்டான்.
                           சென்னையில் நண்பரின் வீட்டு இன்டீரியர் ஒர்க் அப்பொழுது தான் வந்தது.அன்று புதன் கிழமை.நானும் இவனை அலுவலகத்திற்கு வரச் சொல்லி சென்னை நண்பரின் முகவரி மற்றும் மொபைல் எண்ணினை தந்து நல்லபடியாக அவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தந்து விட்டு வா என சொல்லி, உடனே கிளம்பு இன்றே ரயிலை பிடித்து நாளை சென்னை போனதும் கூப்பிடு என்று அனுப்பி வைத்தேன்.
                     இரு நாட்களாக போன் வரவில்லை.ஆனால் சென்னையில் இருந்து என் நண்பர் கூப்பிட்டிருந்தார், கார்பென்டர் வரவே இல்லை என.சரி நானும் விசாரித்து விட்டு வருகிறேன் என சொல்லி தர்மாவினை அழைத்தேன்.மொபைல் சுவிட்ச் ஆஃப்.இன்னொரு எண்ணை அழைத்ததில் அது உ.பி க்கு போனது.ஹிந்தியில் பாத் கர்த்ததும் பேசி விட்டு வைத்துவிட்டேன்.புதனன்று ஆபிசுக்கு வந்த போது கூட அவனது நண்பனும் வந்திருந்தான்.அவனை தொடர்பு கொண்டதும் "சார்..தர்மா கேஸ் பத்திகிச்சி " என அரை குறை தமிழில் சொல்ல அதிர்ச்சியானது.
             அப்புறம் முழுக்க விசாரித்ததில், வியாழன் அன்று மாலை சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பத்த வைத்ததில் அது வெடித்து இருக்கிறது. பலத்த தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.அவனே ஆட்டோ பிடித்து கங்கா ஆஸ்பத்திரிக்கு வந்து அட்மிட் ஆயிருக்கிறான்.90% அவனது உயிருக்கு ஆபத்து என சொல்லி விட்டனர்.ஒரு நாள் வைத்திருந்து மருத்துவம் பார்த்திருக்கின்றனர்.மருத்துவ செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் கங்காவில் இருந்து உ.பிக்கு செல்ல ஏற்பாடு செய்து விட்டனர்.
                              சனிக்கிழமை அவனது தம்பி மற்றும் நண்பர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் பேசி உ.பி க்கு அவனை அழைத்து சென்றிருக்கின்றனர்.திங்கட்கிழமை மதியம் நம்ம நண்பர் கெளசிக் ஆபிசுக்கு வந்தார்.ஆம்புலன்ஸ் சேவை நடத்தி கொண்டு வருபவர்.கோவையின் ரட்சகன் எனலாம்.பேச்சு வாக்கில் அவரும் இந்த விசயத்தை சொல்ல, அவரது வண்டி தான் அவனை கொண்டு சென்றிருக்கிறது என்றார்.இவர் நேரடியாக அவனை பார்த்திருக்கிறார்.நெருப்பில் அவனது உடம்பு இரு மடங்காக ஊதியிருக்கிறது.உருவமே தெரியவில்லையாம்.கண்கள் மட்டும் தான் தெரிகின்றன என சொல்ல சொல்ல பரிதாபம் ஏற்பட்டது.இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு ஒரு போன் கால்.ஆம்புலன்ஸ் ட்ரைவர் தான்..இறந்து விட்டான் என..கோரக்பூர் எட்ட இன்னும் பத்திருவது கிலோமீட்டர் இருக்கையில் அவனது உயிர் பிரிந்திருக்கிறது.மூன்று நாட்களுக்கு முன் உயிரோடு பார்த்தவன் இன்று இல்லை.அவன் அன்று வந்து சென்ற வீடியோ காட்சிகளை கெளசிக் க்கு காட்ட., அவர் ஆச்சர்யப்பட்டு போனார்..என்ன இவன் இவ்ளோ அழகா சிகப்பா ஒல்லியா இருக்கான் என்று..
                  கிட்டத்தட்ட பத்து வருடங்களாய் அவன் வந்து போயிருக்கிறான் என்னிடம் வேலைக்காக.கடைசியாய் நான் சொன்னபடி சென்னை சென்றிருந்தால் அவன் ஒருவேளை பிழைத்திருப்பானோ.. ஒரு நாள் தாமதிக்காமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்குமோ..
விதி வலியது.
ஆழ்ந்த இரங்கல்கள்


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 7, 2019

அனுபவம் - இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - கோவை

இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - கோவை
  
                ஒரு மாதத்திற்கு முன் நம்மிடம் வேலை செய்யும் ஒருவரின் வண்டியை கவுண்டம்பாளையத்தில் இருக்கும் போது திருடி விட்டனர்.நமக்கு தெரிந்த சோர்ஸ் மூலம் விசாரித்த போது எங்காவது பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருப்பர்.
                          ஓரிரு நாட்கள் கழிந்த பின் அவ்வண்டியை எடுப்பர் எனவும் குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிகளில் சென்று பாருங்கள் என சொல்ல, அந்த பார்க்கிங் ஏரியாக்களில் சோதனை இட வண்டி கிடைக்கவில்லை.ஏற்கனவே நண்பர் ஒருவரின் வண்டி திருடு போய் அது வடகோவை பார்க்கிங்கில் அனாமத்தாய் நிற்க, அதை மீட்டுக் கொண்டு வந்தனர்.
                      அதைப் போலவே வடகோவை ரயில்வே பார்க்கிங்கில் போய் தேடிவிட்டு வந்தனர் வண்டி அங்கேயும் இல்லை.இதற்கிடையில் கவுண்டம்பாளையம் ஏரியா துடியலூர் சர்க்கிளில் வருவதால் அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து விட்டு வந்தனர்.ஒரு வாரத்திற்குள் கோவையில் இருசக்கர வாகன திருடர்கள் இருவரை பிடித்து அவர்களிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட வண்டிகளை மேட்டுப்பாளையத்தில் வைத்து மீட்டனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து தகவல் வர அங்கு இருந்த வண்டிகளில் நம் தொழிலாளியின் வண்டியும் இல்லை.வண்டி கிடைக்காது இனி என்ற மனநிலையில் இருந்தார்.
                             தினமும் வேலைக்கு சென்று வர வண்டி இல்லாததால் மிக சல்லிசான விலையில் ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி வாங்கி அதில் போய்க்கொண்டிருந்தார்.ஒரு மாதம் கழிந்தது.
               நேற்று மாலை அவருக்கு ஒரு போன் அழைப்பு புது எண்ணிடமிருந்து.ரயில்வே ஜங்சன் பார்க்கிங்கில் இருந்து அந்த உரிமையாளர் அழைத்திருந்தார், வண்டி ஒரு மாத காலமாக எடுக்காமல் இருக்கிறீர்கள் என்று.இவருக்கோ சந்தோசத்திலே ஒரு சந்தேகம்.எப்படி என் நம்பர் என்று..வண்டி பதிவு எண்ணை போட்டு உரிமையாளர் மொபைல் எண்ணை எடுத்து இவரை அழைத்திருக்கிறார்.
                            இவரும் உள்ளதை சொல்லி, புகார் கடிதம், ஆர்சி புக், மற்றொரு சாவி இவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கிங் போய் இருக்கிறார்.வண்டியை கண்டவுடன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.முதல் போன் எனக்கு பண்ணிவிட்டு, பின் துடியலூர் காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு, பார்க்கிங் உரிமையாளரிடம் பேசி வண்டியை எடுத்து கொண்டு வந்து விட்டார்.வண்டி கிடைத்த சந்தோசத்தில் பார்ட்டி வைப்பதாக சொல்லி விட்டார்.அநேகமாக இந்த வாரம் கனத்த பார்ட்டியை எதிர்பார்க்கலாம்.
                         வண்டி தொலைந்து விட்டாலோ, இல்லை திருடு போனாலோ உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளுங்கள்.பின் கோவையில் உள்ள அத்துணை பார்க்கிங்கிலும் வண்டியை தேடுங்கள்.பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் தான் வண்டியை நிறுத்தி வைப்பர் திருடர்கள்.இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஆற அமர வண்டியை கடத்துவார்கள்.எப்படியும் வண்டி மேட்டுப்பாளையம் தான் போகும்.அந்த ஊர்தான் கோவையின் புதுப்பேட்டை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, May 4, 2017

அனுபவம் - விபத்து

                 விடுமுறையை கழி(ளி)ப்பதற்காகவும் முருகனின் அருள் பெறுவதற்காகவும் கரூரில் இருந்து திருச்செந்தூர் கிளம்பினோம்.குட்டி சுட்டீஸ்களுடன் பெற்றோருடன் உடன்பிறந்தோர் உறவுகளுடன் சுவராஸ்யமாய் ஆரம்பித்தது எங்கள் பயணம்.எப்பவும் போல ஸ்கார்பியோவை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டு இன்றைய வருடத்தின் இனிய பாடல்களை கேட்டபடியே மதுரையை நோக்கி நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தோம்.
                மதுரைக்கு அருகில் வந்த போது வண்டியில் இருந்து ஒரு சத்தம் கேட்டபடி இருக்க, ஓரிடத்தில் நிறுத்தி வண்டியை சுற்றும் முற்றும் பார்த்து எங்கிருந்து வருகிறது என்று பார்த்ததில் எதுவும் புலப்படவில்லை.மீண்டும் வண்டியை ஸ்டார்ட் பண்ணி அங்கிருந்து கிளம்பினோம்.
                வண்டி எப்பவும் போல 110 / 120 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.மீண்டும் அதே சத்தம் வேகமாய் கேட்கிறது.டயரில் தான் ஏதாவது பிரச்சினையோ, இல்லை அருகில் உள்ள டயர் மேட் உரசுகிறதா என்றும் பேசிக்கொண்டு விரைந்து கொண்டிருக்கிறோம்.இருள் சூழ ஆரம்பித்து விட்டது.
            மென் விளக்கை போட்டு விட்டு விரைந்து கொண்டிருக்கிறோம், சப்தம் மட்டும் நின்றிருக்க வில்லை.மதுரை தாண்டி விருது நகர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி காரின் டயரினை செக் செய்கிறேன்.டயர் மேட் தான் பிரச்சினை போல என்று நினைத்து டயல் மேட்டை பார்த்தால் அது தான் பிராபளம் போல தெரிகிறது.அதனை ஒழுங்கு படுத்தி விட்டு திருப்தியாய் கிளம்புகிறோம்.
                கொஞ்ச தூரம் தான் மீண்டும் அதே சப்தம்.
சரி..ஊருக்கு சென்று விட்டு அங்கு பார்த்து கொள்ளலாம் என்ற படி வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறேன்.சாத்தூர், கோவில் பட்டி தாண்டி வந்து கொண்டிருக்கிறோம் கூடவே சத்தத்துடனும்.
            நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மோட்டலில் டீ சாப்பிடுவதற்காக வண்டியை ஓரங்கட்டுகிறோம்.அப்பொழுதும் சந்தேகத்திற்காக ஒரு முறை டயரினை செக் செய்கிறேன்.அப்பொழுதும் புலப்படவில்லை.டீ சாப்பிட்டு விட்டு கிளம்புகிறோம் அங்கிருந்து.மீண்டும் அதே சத்தம்.இனி காலையில்தான் செக் பண்ண முடியும் முதலில் ஊர் போய் சேருவோம் என்றபடி அங்கிருந்து கிளம்புகிறோம்.
                 வண்டி எப்பவும் போல 120 ல் செல்கிறது.திருநெல்வேலி க்கு இன்னும் 30 கிலோமீட்டர் என அறிவிப்பு போர்டு காட்டுகிறது.அருகில் இன்னும் சில கிலோமீட்டர்களில் கயத்தாறு எனும் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடம் வரப்போகிறது..அதைப்பற்றி பேசிக்கொண்டு வருகிறோம்.டோல்கேட் வருகிறது.அதில் பணத்தை செலுத்தி விட்டு ஒரு சில மீட்டர்கள் நகர்ந்திருப்போம்.வண்டி 20 கிமீ வேகத்தில் இரண்டு வேகத்தடை தாண்டி நகர்ந்த பொழுது டொம் என சத்தம்.
                வண்டி அப்படியே ஒரு பக்கமாய் சாய்ந்து டயர் கழண்டு வண்டியின் ஆங்கிள் தார்ரோட்டில் இழுத்தபடி செல்கிறது.வண்டிக்குள் இருந்தவர்கள் அனைவரும் ஒரு சேர கத்துகிறார்கள்.வண்டியை உடனே நிறுத்தி இறங்கி பார்த்தால் டயர் தனியாய் கிடக்கிறது.நவீன வண்டி குடை சாய்ந்து கிடக்கிறது..
             வண்டியிலிருந்து அனைவரும் இறங்கி நின்று வேடிக்கை பார்க்கிறோம், கூடவே டோல்கேட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ள கடையில் இருந்தவர்கள் என அனைவரும் வேடிக்கை பார்க்கிறோம்.
கரகாட்டக்காரன் படத்திற்கு அப்புறம் நம்ம வண்டிதான் டயர் கழண்டு ஓடியிருக்கிறது என்று சொல்லிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஆயத்தமானோம்.டயரில் உள்ள அத்தனை நட்டுகளும் கழண்டு வருகிற வழியிலே விழுந்து விட்டிருக்கிறது.இப்பொழுது நட்டுகள் கூட இல்லை.முதலில் வண்டியை ஜாக்கி வைத்து தூக்குவோம் என்று சொல்லிவிட்டு ஜாக்கி வைக்கிறோம்.அதற்குள் ஒருவர் உதவிக்கு வந்தார்.இன்னொருவர் டோல்கேட் தாண்டி சென்றவர் தனது காரினை நிறுத்திவிட்டு அவரும் உதவிக்கு வந்தார்.மூவரும் சேர்ந்து வண்டியை தூக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
       வண்டியின் டயர் பஞ்சர் ஆகியிருந்தால் ஜாக்கி வைக்க ஏதுவாக இருக்கும்.ஆனால் டயர் கழண்டு வெளியே வந்து விட்டதால் தரையை தொட்டுவிட்ட ஆங்கிளை தூக்க ஜாக்கி வைக்க முடியவில்லை.காரில் வந்தவர் அவருடைய ஜாக்கியை கொண்டு வந்தார்.இன்னொருவர் அவருடைய லாரியில் இருந்து பலகை கொண்டு வந்தார்.நான் வேலையினூடே அவரிடம் கேட்கிறேன்.எங்க இருந்து வருகிறீர் கன்னடமா என்று?, ஏனெனில் தமிழை கொஞ்சம் கொஞ்சமாய் உச்சரிக்கிறார்.இல்லை கன்னியாகுமரி என்று.அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.மலையாளம் கலந்த தமிழை அப்படித்தானே பேசுவார்கள் என்று.வண்டி எங்கே என்று கேட்டதற்கு, அதோ டோல்கேட்ல நிற்குது பாருங்க, வேகத்தடை ஏறும் போது ஸ்பிரிங் கட்டாகி விட்டது.அதனால் அங்கேயே நிறுத்தி விட்டேன்.ஒரு லேனை குளோஸ் பண்ணி வைத்து இருக்கிறார்கள்.இனி ரெடியானதுக்கு அப்புறம் தான் கிளம்பனும் என்று சொல்லியபடி எங்கள் வண்டியின் ஜாக்கி வைப்பதற்கு ஆயத்தமாகினார்.
                 நட்டுகள் இல்லாததால் மற்ற டயர்களில் இருந்து ஒவ்வொரு நட்டை மட்டும் கழட்டி இந்த டயருக்கு மாட்டினோம்.
மொத்தம் மூன்று நட்டுகளில் டயரை மாட்டிவிட்டு, ஒரு வழியாய் வண்டியை சரி செய்து விட்டோம்.டயர் மாட்டி விட்டு, உதவி செய்தவரின் பெயரை கேட்க, மோஷாக் என்று சொல்ல, நாங்கள் அனைவரும் ஒருமித்த நன்றியை சொல்ல, புன்னகையுடன் அவரும் பதில் சொல்லி விட்டு கிளம்பினார்.பிறகு லாரி ட்ரைவர் அவரிடமும் நன்றி உரைத்து விட்டு கிளம்பினோம்.
                 எப்பவும் வெகு வேகமாய் செல்லும் எங்கள் சிங்கம் முதல் முறையாய் பாதுகாப்பிற்காய் 60 கி மி வேகத்தில் கிளம்பினோம்.வண்டியில் இருந்து சத்தம் வருவது நின்று இருந்தது, ஆனால எங்களிடம் இருந்து பயமும் படபடப்பும் இன்னமும் இருந்து கொண்டிருந்தது.ஒரு மணி நேரத்தில் அடைய வேண்டிய தூரத்தை இருமடங்கின் நேரத்தில் அடைந்தோம்.வரும் வழியில் இரவு இன்னும் முழுமையாகிருந்தது.திருச்செந்தூர் தமிழ்நாடு ஓட்டலை அடைந்து ரூமில் அடைய மணி 12.20 ஆகியிருந்தது.முருகனின் அருள் பெற காலை வரை நேரம் இருப்பதால் வந்த அலுப்பிற்கு வெகு வேகமாய் உறங்க ஆரம்பித்தோம்…



நேசங்களுடன்
ஜீவானந்தம்.

இன்னும் கொஞ்சம்...

Wednesday, November 30, 2016

சாணை பிடிக்கலையோ...சாணை...பேஸ்புக் பதிவு

சாணை பிடிக்கலையோ..சாணை...



                     காலையில் இந்தக்குரலை கேட்டு ஓடோடி வெளியே வந்தேன்.பல நாட்களாகவே வீட்டில் நிறைய கத்திகள் பதமின்றி இருக்க, இந்தமுறை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று சாணை பிடிக்கும் பையனை நிறுத்தினேன். எப்பவாது ஒரு முறை எங்கள் தெருப்பக்கம் வரும் சாணை பிடிப்பவர்கள் குரல் கேட்டு, அவர்களை நிறுத்தி, இருக்கும் ஓரிரண்டு கத்திகளை காட்டி சாணை பிடித்து தர விலை கேட்டால், புதிய கத்திகளே வாங்குமளவுக்கு விலை சொல்வார்கள்.வேண்டாம் என்று சொல்லி மீண்டும் பழைய கத்திகளோடு சமையலறையில்போராட்டம் தொடரும்.
                                        அவ்வப்போது இரண்டு கத்திகளை ஒன்றோடொன்று தேய்த்து உரைத்து பயன்படுத்தி கொண்டிருப்போம்...இப்படியே நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதங்கள் ஆகின.மாதங்கள் வருடங்கள் ஆகிவிடக்கூடாது என்கிற கட்டாயம்.நாளை ஞாயிறு வேறு.கண்டிப்பாய் மட்டனோடு போராட வேண்டியிருக்கும்.ஊரிலிருந்து வாரா வாரம் வரும் ஜிலேபி மீனை வெட்ட வேண்டியிருக்கும்.சிக்கனும் பீஃப் பும் வேறு வரிசை கட்டி காத்திருக்கும்.
                                  அதனால் இம்முறை சாணை பிடித்தே ஆகவேண்டும் என பையனை நிறுத்தி விலை கேட்டேன்.எப்பவும் போலவே புதிய கத்திகள் வாங்குமளவுக்கு சொன்னான்..இப்பொழுது இருக்கும் நாட்டின் நிலைமையில் பணம் செலவழிப்பது வேறு ஒரு பிரச்சினை.இருந்தாலும் சா. பையனிடம் பேச்சு கொடுத்து பேரத்தில் இறங்கினேன்.கத்திக்கு பத்து ரூபாய் கொடுங்க பண்ணித்தரேன் என சொல்ல, சரி இன்றைய இவனது உழைப்பு என்னிடத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும் என்று கத்திகளை கொடுத்தேன்.
                                          சைக்கிள் வீலில் பெல்ட்ஐ மாற்றி பெடல் பண்ண ஆரம்பிக்க, சாணைச்சக்கரம் வேகமாய் சுழல ஆரம்பித்தது.கத்தியை அதில் வைத்து லாவகமாய் இருபுறமும் பிடித்து நெருப்பு பொறி சிதற கத்தியை கூர் தீட்டிக்கொண்டிருந்தான்.காலும் கையும் ஒரு சேர இயங்கிக்கொண்டிருக்க, அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
                    எங்கிருந்து வர்றீங்க, எங்க இருக்கீங்க, என கேள்விகளை கேட்கவும், சொந்த ஊர் ராம்நாடு, இங்கு காந்திபுரத்தில் தங்கியிருக்கிறோம்.வீடா, இல்லை லாட்ஜா என கேட்க, இல்லை ஆம்னி பஸ்ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில்தான் எனவும் கிட்டத்தட்ட 25 பேர் இப்படி தங்கியிருக்கிறோம்.ஒரு நாள் வருமானம் ரூ 250 க்குள் தான் வரும், எங்காவது திருட்டு நடந்து விட்டால் சந்தேக லிஸ்ட்லில் கொண்டு போவார்கள்,அட்ரஸ் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவார்கள் என்றும் தினமும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று தெருத்தெருவாய் கூவிக் கூவி கிடைக்கும் பணத்தை சேர்த்து ஊருக்கு போவோம்.
                                   இது எங்கள் குலத்தொழில் இதை விட எங்களுக்கு மனசில்லை எனவும் ஊரில் ஏகப்பட்ட நிலபுலன்கள் இருக்கின்றன ஆனால் வறட்சி காரணமாக எந்த வேலையும் கிடைப்பதில்லை என சொல்லிமுடிக்கையில் சாணைக்கல்லும் சுத்துவதை நிறுத்தியிருந்தது.முடிவில் அவனது உழைப்புக்கான ஊதியத்தை இருமடங்காய் தந்தபோது அவனின் முகம் கொஞ்சம் பளபளத்தது கூர் தீட்டப்பட்ட கத்தியை போல..பதம் பார்த்த கத்தியை வாங்கியதில் அவனது உழைப்பின் சூடு என் கைகளில் ஏறியிருந்தது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...