அசைவம் தேடி ஒரு பயணம்
ஞாயிற்றுக்கிழமை என்றாலே நாவுக்கு ருசியாய் அசைவம் சாப்பிடுவது என்பது வழக்கமாகி விட்டது.இன்றும் அப்படித்தான்.நாமக்கல்லில் அசைவம் தேடி பயணித்தோம்.மாலை வேளைகளில் பரமத்தி ரோடு, திருச்சி ரோடு, சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, மோகனூர் ரோடு, சேந்தமங்கலம் ரோடு என பல ரோடுகளிலும் பீஃப் என்பது கொடிகட்டிப் பறக்கும்.ஆனால் காலை வேளைகளில் எங்கும் இருப்பதில்லை.இன்று ஞாயிறு என்பதால் பீஃப் தவிர்த்து ஆட்டின் இறைச்சி வகைகளை தேடி அலைந்தோம்.மேற்சொன்ன எந்த ரோடுகளிலும் குடலும் மட்டனும் இல்லை.சிக்கன், காடை வகைகள் மட்டும் ஒரு சில ஹோட்டல்களில் இருந்தன.
ஞாயிற்றுக்கிழமை இட்லியும் குடற்கறியும் இருந்தால் செமயாக இருக்கும் என்பதால் அதை தேடியே ஓடினோம்.இறுதியில் எப்போதோ நம் பங்காளிகளில் ஒருவர் பலபட்டறை மாரியம்மன் கோவில் பின்புறம் இருக்கும் ஒரு ஹோட்டலில் அனைத்தும் கிடைக்கும் என சொன்னது ஞாபகம் வர, அடுத்த சில நிமிடங்களில் ஆஜரானோம்.போர்டு என்பதே இல்லை கடைக்கு.கடை விஸ்தாரமாக இருக்கிறது.
புரோட்டாக்கள் சுடச் சுட கல்லில் வெந்து கொண்டிருக்கின்றன.டேபிள்கள் அனைத்திலும் ஒவ்வொருவரின் இலையிலும் ஏதோ ஒரு அசைவம் இடம் பெற்றிருக்கிறது.நாங்களும் உள் நுழைகையிலே என்ன இருக்கிறது என்றே கேட்டு விட்டு போனோம்.வாழை இலை வைத்தவுடன் ரத்தப்பொரியலை வந்து சேர்ந்து.சின்ன சின்ன வெங்காயத்துடன், பச்சை மிளகாய் நறுக்கி போட்டு, தேங்காய் துருவலுடன் ரத்தப்பொரியல் உதிரி உதிரியாக இருக்க, கொஞ்சம் எடுத்து வாயில் போட சுவை அப்படியே நரம்புகளில் பாய்ந்தது.
மிக நன்றாகவே இருக்கிறது.அடுத்து குடல்..தோசைக்கல்லில் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி அதனுடன் குடல் கறியை குழம்போடு சேர்த்து பிரட்ட, அப்பொழுது ஒரு வாசனை வருமே..அது இன்னும் நம் பசியை அதிகரிக்கும்..நன்கு குழம்பு சுண்ட, கொஞ்சம் மிளகுத்தூளைத் தூவி, கல்லில் இருந்து எடுத்து சுடச் சுட இலையில் வைக்கும் போது அதன் ஆவி அப்படியே முகத்தில் அடிக்குமே, அந்த வாசனை நம்மை சொர்க்கத்திற்கு இழுத்துச் செல்லும்.கொஞ்சம் எடுத்து வாயில் இட அப்படியே கரையும் பாருங்க..ஆஹா..
சுவையோ சுவை.கொஞ்சம் தோசையோடு குடல்கறியை சேர்த்து சாப்பிட பக்கத்திலேயே சொர்க்கம் அமர்ந்திருக்கும்.நல்ல சுவை.அடர்த்தியும் அதிகம்.விலையோ குறைவு..80 ரூபாய் தான்.சாப்பிட சுவையாக இருக்கிறது.ரத்தம் 40 ரூபாய்.அதுவும் செம டேஸ்ட் தான்.சூடான இட்லிக்கு ரத்தப்பொரியல் செம காம்பினேசன் எப்பொழுதும்..கொஞ்சம் லேட்டாய் போனதால் இட்லி இல்லாமல் போய்விட்டது.கடையில் இன்னும் கொஞ்சம் விசாரித்ததில் முயல் கறியும், காடையும் மாலை நேர ஸ்பெஷல்களாம்.இரத்தப்பொரியல் மட்டும் ஞாயிற்றுக் கிழமை கிடைக்கும்.மற்ற நாட்களில் காலை 7.30 க்கு குடல் மற்றும் அசைவ உணவுகள் தயாராக இருக்குமாம்.நாமக்கல் மாவட்டத்தில் கலக்கி மிகவும் பிரபலம்.அதுவும் குழம்பு கலக்கி மிக டேஸ்டாக இருக்கும்..கொஞ்சம் இளகிய பதத்தில் கலக்கி சாப்பிட்டால் செம டேஸ்ட் ஆக இருக்கும்.
லேட்டஸ்ட்
அப்டேட்:
முயல் கறி ஆசையை தூண்டிவிட்டதால் அடுத்த
நாள் மாலையே அங்கு மீண்டும் ஆஜரானோம்.இரண்டு இட்லிகளை மட்டும் வாங்கி கொண்டு முயல்
கறியை ஃபிரை செய்ய சொன்னோம்.இட்லிக்கு கொஞ்சம் முயல் கறி குழம்பை ஊற்றிவிட்டு போக,
அதில் இட்லியை தொட்டு சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில், தோசைக்கல்லில் வெங்காயம் கறிவேப்பிலை
வதங்கும் வாசனையில் பசி நரம்புகள் இன்னும் அதிகமாக துடிக்க ஆரம்பித்தன.முயல் கறியை
போட்டு வதங்கிய வெங்காயத்துடன் ஃபிரை செய்யும் போது அதன் வாசனை, எப்போது முயல் கறி
நம் இலைக்கு வரும் என எதிர்பார்க்க ஆரம்பித்தது.கொஞ்ச நேரம் தான், முயல் வந்து சேர்ந்தது.இலையில்
வைக்க, ஆவி பறந்தது.கொஞ்சம் இட்லி பிய்த்து கறியோடு சேர்ந்து சாப்பிட நாவிற்கு புது
சுவை உண்டானது.முயல் கறி கொஞ்சம் ரப்பர் போன்று தான் இருக்கும்,ஆனால் சுவையாக இருக்கும்.நன்றாக
மென்று முழுங்க சுவையாக இருக்கும்.எலும்புகள் கொஞ்சம் கடினமாக வே இருக்கும்.காட்டு
முயல் அல்லவா…இட்லிக்கு தோசைக்கு, இவர்கள் வைக்கும் அடர்த்தியான குழம்பு மிக சுவையாக
இருக்கிறது.முயல் கறியின் விலை ரூ 110.தினமும் கிடைக்க வாய்ப்பில்லை.
எப்பொழுதெல்லாம்
முயல் சந்தைக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் கிடைக்கும்.வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம்
கிடைக்கும்.அந்தப் பக்கம் போனால் நல்ல கார சாரமாக சாப்பிட்டு விட்டு வாருங்கள்
கடை அமைவிடம் :
பலபட்டறை மாரியம்மன் கோவில் பின்னாடியே இருக்கிறது இந்த ஹோட்டல்.இதன் எதிர்ப்புறம் அண்ணாமலை ஹோட்டல் ஒன்றும் இருக்கிறது அங்கும் சூடான புரோட்டா, அசைவ குழம்பு வகைகள் சுடச்சுட கிடைக்கும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்.