Friday, March 28, 2014

சமையல் - சைவம் - வெண்டைக்காய் ஃப்ரை ( Lady Finger Fry )

வெண்டைக்காய் ஃப்ரை
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வெஜ் மெனு...வெண்டைக்காய் ன்னாலே நம்ம வீட்டுல அலர்ஜி...எப்பவாது மட்டுமே புளிக்குழம்புல வெண்டைக்காய் இடம்பிடிக்கும்.அதே மாதிரித்தான் பொரியலும்..... தீபாவளி பொங்கல் மாதிரிதான் எப்பவாவது.....அதிகமா செய்யமாட்டாங்க.....ஏன்னா அதுல இருக்குற வழவழப்புதான்.....ஒரு நாள் பக்கத்து வீட்டு அம்மணி நம்ம வாண்டுக்கு வெண்டைக்காய் ஃப்ரை கொடுத்துவிட்டாங்க.சைக்கிள் கேப்ல நானும் சாப்பிட்டுப்பார்த்தேன்...செம டேஸ்டா இருந்துச்சு...உடனே எப்படி செய்யறதுன்னு கேட்டு அடுத்த நாளே அதே மாதிரி பண்ணிப் பார்த்ததில் இன்னும் செம டேஸ்ட்.அடிக்கடி  ஃப்ரை செஞ்சு கொடுக்கிறதால் நம்ம வீட்டு வாண்டுக்கு ரொம்ப பிடித்த மெனு ஆகிப்போச்சு........வாரத்துல மூணு தடவை இது மாதிரி பண்ணித் தந்திடனும்.

எப்படி செய்வது ?
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 10
மிளகுத்தூள் - கொஞ்சம்
உப்பு – கொஞ்சம்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை
வெண்டைக்காயை கழுவி துணியில் துடைத்துக்கொள்ள வேண்டும்.பின் அதில் காம்புப்பகுதியை வெட்டிவிடவேண்டும்.வெண்டைக்காயின் அனைத்துப்பகுதிகளிலும்  நீளவாக்கில் கத்தியினால் கீறிக்கொள்ள வேண்டும்

உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கீறிய உள்பகுதிகளில் தடவ வேண்டும்.வெண்டைக்காயைச் சுற்றிலும் தடவ வேண்டும்.
பின்னர் வாணலியில் அனைத்து வெண்டைக்காயையும் வைத்து கொஞ்சம் எண்ணைய் தடவி வேக விடவேண்டும்.அவ்வப்போது திருப்பி விட வேண்டும்.வெண்டைக்காய் நன்கு வதங்கியவுடன் எடுத்துவிட வேண்டும்...
சுவையான வெண்டைக்காய் ஃப்ரை ரெடி....




உப்பு மிளகுடன், மிளகாய்ப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். (வெறும் மிளகு, உப்பு இருந்தாலே போதும் செம டேஸ்டாக இருக்கும்).நான் வெள்ளை மிளகு, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து இருக்கிறேன்) தோசைக்கல்லில் வதக்கினாலும் கூட நன்றாக இருக்கும்.
ஓவனில் வைத்து கிரில் செய்தும் சாப்பிடலாம்..மிக சுவையாக இருக்கும்.முழு வெண்டைக்காயை அப்படியே சாப்பிட செம டேஸ்டாக இருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 25, 2014

திராட்சைத்தோட்டங்கள், சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்

சுருளிப்பட்டி....
இயற்கை எழில் கொஞ்சும் அழகான சிற்றூர். ரோட்டின் இருபுறமும் நீண்ட நெடிய பசுமை வாய்ந்த வயல்வெளிகள், கொத்து கொத்தாய் தொங்கும் திராட்சை தோட்டங்கள், தென்னந்தோப்புகள், காய்கறித் தோட்டங்கள்,வாழைத்தோப்புகள், பருவகாலத்திற்கேற்ற சீதோஷ்ண நிலை, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கிளை நதியாய் பாய்ந்து ஊரைப் பசுமையாக்கும் சுருளி ஆறு, உள்ளூர் மட்டுமல்ல வெளியூர்களிலிருந்து மக்கள் வந்து ரசிக்கும் சுற்றுலாத்தளமாக சுருளி ஃபால்ஸ், என இயற்கையாய் இருக்கக்கூடிய ஒரு அழகான கிராமம் தான் சுருளி.

கம்பம் பள்ளத்தாக்கு எனப்படுகிற இப்பகுதியானது பெரும்பாலும் திராட்சை தோட்டங்களால் சூழ்ந்திருக்கிறது.அப்படித்தான் அன்று சுருளிப்பட்டியில் இருக்கிற நண்பனின் தோட்டத்திற்கு சென்ற போது அதிசயத்துவிட்டேன்.ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடந்திருந்த திராட்சைக்கொடிகள்.ஐந்தடி உயரத்தில் ஒரே சீராக பந்தலில் படர்ந்து கொண்டிருந்தன பசுங்கொடிகள்.....பழமுதிர் நிலையங்களிலும் ரோட்டோர பழக்கடைகளிலும் பார்த்த திராட்சைப்பழங்களின் உற்பத்தி நிலையத்திற்குள் நுழைந்திருந்தேன்.கொடி போல் படர்ந்திருந்த திராட்சைச் செடிகளையும் அதில் பழமும் காய்களுமாக காய்த்து தொங்கிய திராட்சைகளைப் பார்க்கும் போது வியப்பிலாழ்ந்து விட்டேன். அய்யோ.....எம்புட்டு பழம்.....


இன்னும் அதிகமாய் காண தோட்டத்திற்குள் நுழைய அடிமைப்பெண் எம்ஜியார் போல் தலையைக் குனிந்து கொஞ்ச தூரம் திராட்சைத் தோட்டத்திற்குள் சென்ற போது தலையில் மோதிய காய் பழக்கொத்துகளால் பரவசமடைந்தேன்.தோட்டம் முழுக்க மணம் வீசுகிறது ஒன்றிரண்டு நன்கு கனிந்த பழங்களின் வாசனையால்...அறுவடைக்கு இன்னும் சில மாதங்கள் இருக்க கவனிப்புகள் அதிகமாகி பாதுகாப்பு வளையத்திற்குள் அகப்பட்டு கொண்டிருந்தன திராட்சைக்கொத்துகள்.கருப்பு வகை பன்னீர் திராட்சைகள் தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.சுருளியில் இருக்கின்ற மண்வளம்,நீர்வளம். சீதோஷ்ண நிலை யாவும் நன்கு சுவையான திராட்சைப்பழங்கள் கிடைக்க ஏதுவாகிறது.இந்த தோட்டம் முழுக்க சொட்டு நீர்ப்பாசனத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.ஒவ்வொரு திராட்சைக்கொடிக்கும் தனித்தனியாக நீர்பாய்ந்து பசுமைக்குள்ளாக்குகிறது.



திராட்சைத்தோட்டத்தில் கொஞ்ச நேரம் கவனித்ததில் ஒரு வேலையாள் ஒரு டப்பாவினை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு திராட்சை கொத்துக்கும் சென்று அதை நனைத்துக் கொண்டிருந்தார்.என்னவென்று கேட்க மருந்து அடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.முன்பெல்லாம் திராட்சைப் பழங்களில் பூச்சி பிடிப்பதைத் தடுப்பதற்காக மருந்து தெளிப்பார்களாம்.ஆனால் இப்போதெல்லாம் மருந்தை மொத்தமாய் கலக்கி டப்பாவில் எடுத்து அந்த டப்பாவினுள் திராட்சைக்கொத்தினை மூழ்கடிக்கிறார்களாம்.வேலையும் ஈஸி ஆகிறது, மருந்தும் வேஸ்ட் ஆகுவதில்லையாம்...(ஆனால் நம் உயிர் வேஸ்ட் ஆகிடும் போல ) அதனால் திராட்சை பழங்களை எப்போதுமே அப்படியே சாப்பிடக்கூடாது.உப்பு போட்ட தண்ணீரில் கழுவி அப்புறம் தான் சாப்பிட வேண்டுமாம்...
ரொம்ப நேரமாய் தேடி அலைந்து கண்டுபிடித்த நன்கு விளைந்த ஒரே ஒரு பழத்தினை கொத்திலிருந்து பறித்து வாயில் போடும் முன்பு இதைக் கேட்டதால் அப்படியே பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன், எதற்கும் வீட்டில் போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று....


கொஞ்ச நேரம் அப்படி இப்படி குனிந்து சுற்றிப்பார்த்ததில் உடல் கொஞ்சம் வேதனையைக் கொடுக்கவே கிளம்ப ரெடியானோம்.மீண்டும் அதே அடிமைப்பெண் ஸ்டைல்...வெளியே வந்ததும் நிமிர்ந்து நின்றதில் என்ன ஒரு சுகம்....ஆஹா....மீண்டும் சுருளி பால்ஸ் செல்லலாமே என்று நினைத்தபடி அவவழியே செல்கையில் மற்றொரு தோட்டத்தில் விற்பனைக்கு  வைத்திருந்த திராட்சைப் பழங்களை வாங்கி வண்டியில் போட்டுக்கொண்டு கிளம்பினோம், அன்றைய இரவினை தமிழக அரசோடு கொண்டாட......

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 19, 2014

கரம் - 13 ( 19.3.2014)

வாசித்தவை :
திருடன் மணியன்பிள்ளை..
            சமீபத்தில் படித்த புத்தகம்.ஒரு திருடனின் தன் வரலாறு.மிக சுவாரசியமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தில் தான் செய்த திருட்டுக்கள், அதில் எப்படி மாட்டிக்காமல் தப்பித்தது, எப்படி போலீஸிடம் மாட்டியது என அனைத்தையும் சுவைபட கூறியிருக்கும் விதம் நம்மை புத்தகத்துக்குள் ஒன்றச் செய்கிறது.மைசூரில் ஒரு பெரிய கோடிஸ்வரனாக ஆனதும் கர்நாடக முதல்வருடன் ஹெலிகாப்டரில் பறந்ததும், மிக செல்வாக்காய் இருந்த சமயத்தில் ஒரே நிமிடத்தில் அனைத்தும் இழந்து ஓட்டாண்டி ஆனதையும் மிக சுவைபட சொல்லியிருக்கிறார்.திருடச்சென்ற இடத்தில் உயிரைக் காப்பாற்றிய விதம், திருடிய பணத்தில் மற்றவர்களுக்கு உதவிய விதம், திருடிக்கொண்டிருக்கும் போது மாட்டியவிதம் என படிக்க படிக்க செம திரில்லிங்காக இருக்கிறது.தன் வழக்கில் தானே வாதிட்டு வெற்றியடைவது, ஒரு திருடனாக இருந்தாலும் காவல் நிலையத்தில் பல வருடங்கள் பணியாற்றியது, விலைமாதர்களுடன் தொடர்பு, பல வீடுகளில் தான் செய்த திருட்டு ஆப்ரேசன்கள், இப்படி ஒவ்வொன்றையும் மிகவும் நகைச்சுவையாய் விவரித்து இருக்கிறார்.படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது.பெரிய புத்தகம் தான்.ஆனாலும் பக்கத்துக்கு பக்கம் படிக்க படிக்க இண்ட்ரஸ்டிங்.மொத்தப்பக்கங்கள் 592.மலையாளத்தில் ஜி ஆர் இந்துகோபன் எழுதியுள்ள இந்த புத்தகத்தினை குளச்சல் மு யூசுப் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.விலை 450.00

பார்த்தவை - 1
            நம்ம வீட்டுல 9 மணி ஆச்சுன்னா போதும் எல்லாரும் டிவி முன்னாடி ஆஜராகி விடுவாங்க.அந்த சீரியல் மியூசிக் சாங் போட்டாலே போதும் அப்படியே உருகிடுவாங்க.அப்பப்ப நடு நடுவுல அந்த புல்லாங்குழல் ஒலிக்குமே...சான்சே இல்ல....செம....நெஞ்சம் பேசுதே அப்படிங்கிற சீரியல்தான்.நல்ல ரொமாண்டிக் சீரியல்.ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டருக்கும், பக்கத்து வீட்டு விதவைப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல், அதைக் காண்பிக்கிற சுவாரஸ்யமான காட்சிகள் என நன்றாக இருக்கிறது.மொழி மாற்றம் செய்த சீரியலாக இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.நம்மூர் சீரியல் மாதிரி மாமியார் மருமகள் கொடுமை, நாத்தனார் கொடுமை, பொண்டாட்டி கொடுமை, அவன் பொண்டாட்டி கூட இவன் தொடர்பு, இவன் பொண்டாட்டிகிட்ட அவன் தொடர்புன்னு காண்பிக்கிற கள்ள காட்சிகள், தங்கச்சியே அக்கா புருசனை கரெக்ட் பண்றது, அப்புறம் விஷம் வைக்கிறது, ஆக்சிடெண்ட் பண்றதுன்னு ஏகப்பட்ட நீட்டி முழக்கிய காட்சிகள், அப்படின்னு எதுவும் இந்த சீரியல்ல இல்ல.ஆபாசமாகவோ வக்கிரமாகவோ எதுவும் இல்ல.நன்றாகவே இருக்கு.பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிற அனைத்து சீரியலும் நன்றாகவே இருக்கு.இந்த சீரியல் போலத்தான் உள்ளம் கொள்ளை போகுதடா....இதுவும் செம ஹிட்.....(நம்மளையும் சீரியல் பார்க்க வச்சிட்டாங்கப்பா....)

பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே ...
கண் பார்வை மெல்ல தூண்டில் வீசுதே ...

ஏ பூக்கள் எங்கு பூக்கும் போதும் காற்றில் வாசம் வீசுமே...
நான் பேச வந்த வார்த்தை யாவும் கண்கள் இன்று பேசுமே ...

சொல்லாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே ...
நில்லாமல் கண்கள் தூண்டில் வீசுதே ...

ஏ காலம் வந்து மாயம் செய்து நெஞ்சை மாற்றிப் போகுதே ...
என்னுள்ளே இன்று காதல் வந்து கொஞ்சி கொஞ்சிப் பேசுதே...

பேசுதே பேசுதே ஆஹாஹா நெஞ்சமே பேசுதே ஆஹாஹா
பேசுதே பேசுதே நெஞ்சம் பேசுதே ...........


பார்த்தவை - 2
நேற்று சன் டிவில கோயம்புத்தூர் மாப்ளே படம் போட்டிருந்தாங்க.நம்ம இளமைக்கால விஜய் தான் ஹீரோ (இப்பவும் அவரு இளமைதான்). ஹீரோயினா நம்ம தளபதி விஜயை முன்னேற்றுவதற்காக தொடர்ந்து பல படங்களில் தன் கவர்ச்சியை விநியோகம் பண்ணிய சங்கவி.அப்புறம் நம்ம கவுண்டர் கூட நடிச்சிருக்காரு கூடவே செந்திலும்...இதுல என்ன விசயம்னா நம்மகிட்ட ஏர்டெல் டிஷ் தான் இருக்கு.ரிமோட்ல இன்ஃபோ அப்படிங்கிற பட்டனை அமுக்கினா படத்தோட கதை, நடிச்சவங்க பேரு வரும்.அப்படித்தான் இந்த பட்டனை அமுக்கிய போது, நடிச்சவங்க லிஸ்ட்ல சில்க் ஸ்மிதா, செந்தில்னு வந்துச்சி.....அடப்பாவிகளா....ஒரே ஒரு பாட்டுக்கு ஆடின சில்க்கை ஞாபகம் இருக்கு, படம் புல்லா நடிச்ச(?) நம்ம விஜயையே மறந்துட்டாங்களே இந்த நார்த் இண்டியா பசங்க.....


ருசித்தவை :
கோணக்கா.....கோணப்புளியங்கா....
கொடுக்காபுளி....இப்போ வீட்டுக்கு போனபோது வயக்காட்டுல இருந்த மரத்தில் பறிச்சது இந்த கோணக்கா....சாப்பிட்ட போது ஞாபகங்கள் பின்னோக்கி...... சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம்.ஊரில் இருக்கிற அத்தனை மரங்களிலும் ஏறியும் கொக்கி போட்டு பறித்தும் சாப்பிட்டிருக்கிறேன். ஆட்டுக்கு தழை வெட்டணும்னா இந்த மரத்துலதான் ஏறுவோம்.அப்ப லட்டு லட்டா தொங்குற கோணக்காவை பறிச்சி டவுசர்ல போட்டுக்குவோம்.வீட்டுக்கு வந்து பொறுமையா சாப்பிடுவோம்.செம டேஸ்டா இருக்கும்.இளஞ்சிவப்பு கோணக்கா தான் செம டேஸ்ட்டா இருக்கும்.கோணக்கா கொட்டைய எடுத்து தோலை அதை காயம்படாம உளிக்கனும்.அதுலயும் போட்டி வைப்போம் யாரு அதிகமா உளிக்கிறாங்கன்னு.அப்படி உளிச்சு எடுத்து தலைகாணிக்கடியில வச்சி தூங்குவோம், அடுத்த நாள் எதுவாகவோ மாறியிருக்கும் என்கிற நம்பிக்கையில்... தாயக்கட்டை விளையாடும் போது இந்த கொட்டையை வச்சி விளையாடுவோம்..........ம்ம்...மலரும் நினைவுகள்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 12, 2014

பயணம் - தலச்சேரி கோட்டை (Thalassery Fort ), கண்ணூர், கேரளா

ரொம்ப நாள் முன்னாடி கேரளாவின் தலச்சேரிக்கு போயிருந்த போது பக்கத்துல சுத்திப்பார்க்க என்ன இருக்குன்னு கேரள சேட்டன்கிட்டே ச்சோதிக்கவும், கொறச்ச தூரத்துல ஃபோர்ட் ஒண்ணு உண்டு என்று பறைய, உடனடியாக ஆட்டோ தேடி ஏறி அமர்ந்தோம்..ஐந்து நிமிட பயணத்தில் கோட்டையை வந்தடைந்தோம்.


வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான கோட்டை மிக அமைதியாக ஆளரவமற்று இருக்கிறது.அந்த காலை நேரத்தில் சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்கள் கூட பலமின்றி இருக்க, அந்த பலம் வாய்ந்த பிரம்மாண்டமான கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்தோம்.மிக விசாலமான இடத்தில் கோட்டை அமைந்திருக்கிறது.இருபுறம் கொண்ட மாடிப்படிகள் மூலம் ஏறி கோட்டையின் சிறிய நுழைவாயில் அடைந்தோம்.உள் நுழைந்த்தும் மிக விசாலமான இடத்தில் பரந்து விரிந்து இருக்கிறது.நாற்புரமும் கோட்டையின் அரண் போன்ற சுவர்கள் பாதுகாப்பாய் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கிறது.கேரளாவின் இயற்கை செங்கற்களான பாறைக்கல்லில் கோட்டையின் அனைத்து சுவர்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.கோட்டையின் சுற்றுச்சுவரில் கண்காணிப்பு கோபுரங்கள், பீரங்கி வைக்கும் இடங்கள் என மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.சிறைச்சாலைகள் கூட இருக்கின்றன.ஒரு சுரங்கப்பாதையும் கோட்டையின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.







      கோட்டையின் மீது ஏறிப்பார்க்கும் போதுதான் இக்கோட்டை அரபிக்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது.அங்கிருந்து பார்க்கும் போது அரபிக்கடலின் அழகான தோற்றம் நம்மை வியக்கவைக்கிறது.
இந்த கோட்டையினுள் வரலாறு, புகைப்படங்கள் மற்றும் அரிய பொருட்கள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.இந்த கோட்டை தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று.
         இந்தக்கோட்டையானது 1708ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு இருக்கிறது.இதைப்பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சிக்கனும்னா விக்கிபீடியா பார்த்துங்க...

கண்ணூர் தலச்சேரி பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு பார்த்துட்டு வந்திருங்க...
காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரைக்கும் திறந்திருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, March 3, 2014

சமையல் - மத்தி மீன் வறுவல் - அசைவம்

நேற்று சண்டே வேற..எப்பவும் போல வீட்ல விசேசந்தான்....என்ன மெனு பண்ணலாம் இன்னிக்கு அப்படின்னு பெக்கிட்டுகிட்டே யோசித்துக் கொண்டிருக்கையில் வீட்டுக்கு வெளியே மீனு...மீனு....மீனு ...மீனோய்.... ன்னு ஆபந்தாபாந்தவனாய் மீன்காரர் சத்தம்....சரி...இன்னிக்கு பொரிச்சிட வேண்டியதுதான்.....
கொஞ்ச நேரம் முன்னாடிதான் உக்கடம் மீன் மார்க்கெட்டிலிருந்து கூடை ஏறி நம் வாசலுக்கு வந்துவிட்டிருந்த மீன்கள் ரொம்ப ஃப்ரெஷ்ஷாய் சில்லென இருக்க, கட்லா, நெய்மீன், மத்தி, ஜிலேபி என மீன்வகைகள் தங்களை எடுத்துச் செல்லும்படி ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருக்க, கட்லாவும் மத்தியும் என் விருப்பப்பட்டு படுசுத்தமாய் வீடேறின.கட்லா மீன் குழம்புக்கும், மத்தி மீன் பொரிப்பதற்காகவும் பிரிக்கப்பட்டு, ரெடிமேட் மசாலாவில் கொஞ்ச நேரம் நீந்திய மத்தி மீன் மீண்டும் எண்ணையில் நீந்துவதற்காக போடப்பட்டு, பின் பொரிக்கப்பட்டு சுவையாய எங்களின் வயிற்றுக்குள் நீந்த ஆரம்பித்தது.

மத்திமீன் பொரிக்கிறது எப்படின்னு பார்ப்போம்..
இப்போலாம் ரெடிமேட் மசாலா வந்திருக்கிறதால் வேளை கொஞ்சம் ஈஸியாவே முடிஞ்சிடுது.இல்லேனா, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், கார்ன் மாவு, கொஞ்சம் உப்பு இதெல்லாம் சேர்த்து பிரட்டனும்.கொஞ்ச நேரம் ஊறவச்சி எண்ணையில் பொரிச்சா...ஆஹா அம்புட்டு டேஸ்ட்....
நான் JB என்கிற மீன் வறுவல் மசாலாவை எடுத்துகிட்டேன்.கொஞ்சம் சாந்து போல கரைச்சிகிட்டு, அதை மீன்ல தடவி, அரைமணி நேரம் ஊறவச்சிட்டேன்..(மசாலாவிலே உப்பு உரைப்பு எல்லாம் சரியா இருக்கிறதால் எதுவும் கூடுதலா சேர்க்க தேவையில்லை)

அப்புறம் எண்ணையினை காயவச்சி அதில் மீனை பொரிச்சு எடுத்தா அப்படியே வாசனை ஊரைக்கூட்டும்..நல்லா மொறு மொறுன்னு எடுத்தா.....சுவையான மத்தி மீன் வறுவல் ரெடி..ஆகா....என்னா டேஸ்ட்..என்னா டேஸ்ட்...

மத்தி மீன்ல முள் இருக்கும்.ஆனா அதை அப்படியே மீனோட சேர்த்து சாப்பிட்டா செம டேஸ்டா இருக்கும்.இந்த மீன் கேரளாவுல ரொம்ப பேமஸ்.விலை குறைந்த மீன் இதுதான்..உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமான மீன் கூட....கேரளா கள்ளுக்கடையில் இந்த மீனும் கப்பாவும் கள்ளுக்கு செம காம்பினேசன்.....



நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...