Thursday, May 16, 2019

இரங்கல்


தர்மா
                            

                        வட இந்திய தொழிலாளி.எங்களிடம் பல வருடங்களாக கார்பெண்டராக பணி புரிந்தவன்.நல்ல வேலைக்காரன்.ஆனால் தாமதம் செய்பவன்.உடனே வாடா என்றால் இரண்டு மணி நேரம் கழித்து தான் வருவான்.சொன்னபடி வேலையை தரமாய் செய்வான்.சின்ன வயது தான்.இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது.வருடத்திற்கு இரு தடவை உ.பி சென்று வருவான்.ரத்தினபுரியில் வாடகைக்கு இருக்கிறான்.இந்த முறையும் ஊருக்கு சென்று வந்து விட்டு வேலை கேட்டான்.
                           சென்னையில் நண்பரின் வீட்டு இன்டீரியர் ஒர்க் அப்பொழுது தான் வந்தது.அன்று புதன் கிழமை.நானும் இவனை அலுவலகத்திற்கு வரச் சொல்லி சென்னை நண்பரின் முகவரி மற்றும் மொபைல் எண்ணினை தந்து நல்லபடியாக அவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தந்து விட்டு வா என சொல்லி, உடனே கிளம்பு இன்றே ரயிலை பிடித்து நாளை சென்னை போனதும் கூப்பிடு என்று அனுப்பி வைத்தேன்.
                     இரு நாட்களாக போன் வரவில்லை.ஆனால் சென்னையில் இருந்து என் நண்பர் கூப்பிட்டிருந்தார், கார்பென்டர் வரவே இல்லை என.சரி நானும் விசாரித்து விட்டு வருகிறேன் என சொல்லி தர்மாவினை அழைத்தேன்.மொபைல் சுவிட்ச் ஆஃப்.இன்னொரு எண்ணை அழைத்ததில் அது உ.பி க்கு போனது.ஹிந்தியில் பாத் கர்த்ததும் பேசி விட்டு வைத்துவிட்டேன்.புதனன்று ஆபிசுக்கு வந்த போது கூட அவனது நண்பனும் வந்திருந்தான்.அவனை தொடர்பு கொண்டதும் "சார்..தர்மா கேஸ் பத்திகிச்சி " என அரை குறை தமிழில் சொல்ல அதிர்ச்சியானது.
             அப்புறம் முழுக்க விசாரித்ததில், வியாழன் அன்று மாலை சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பத்த வைத்ததில் அது வெடித்து இருக்கிறது. பலத்த தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.அவனே ஆட்டோ பிடித்து கங்கா ஆஸ்பத்திரிக்கு வந்து அட்மிட் ஆயிருக்கிறான்.90% அவனது உயிருக்கு ஆபத்து என சொல்லி விட்டனர்.ஒரு நாள் வைத்திருந்து மருத்துவம் பார்த்திருக்கின்றனர்.மருத்துவ செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் கங்காவில் இருந்து உ.பிக்கு செல்ல ஏற்பாடு செய்து விட்டனர்.
                              சனிக்கிழமை அவனது தம்பி மற்றும் நண்பர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் பேசி உ.பி க்கு அவனை அழைத்து சென்றிருக்கின்றனர்.திங்கட்கிழமை மதியம் நம்ம நண்பர் கெளசிக் ஆபிசுக்கு வந்தார்.ஆம்புலன்ஸ் சேவை நடத்தி கொண்டு வருபவர்.கோவையின் ரட்சகன் எனலாம்.பேச்சு வாக்கில் அவரும் இந்த விசயத்தை சொல்ல, அவரது வண்டி தான் அவனை கொண்டு சென்றிருக்கிறது என்றார்.இவர் நேரடியாக அவனை பார்த்திருக்கிறார்.நெருப்பில் அவனது உடம்பு இரு மடங்காக ஊதியிருக்கிறது.உருவமே தெரியவில்லையாம்.கண்கள் மட்டும் தான் தெரிகின்றன என சொல்ல சொல்ல பரிதாபம் ஏற்பட்டது.இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு ஒரு போன் கால்.ஆம்புலன்ஸ் ட்ரைவர் தான்..இறந்து விட்டான் என..கோரக்பூர் எட்ட இன்னும் பத்திருவது கிலோமீட்டர் இருக்கையில் அவனது உயிர் பிரிந்திருக்கிறது.மூன்று நாட்களுக்கு முன் உயிரோடு பார்த்தவன் இன்று இல்லை.அவன் அன்று வந்து சென்ற வீடியோ காட்சிகளை கெளசிக் க்கு காட்ட., அவர் ஆச்சர்யப்பட்டு போனார்..என்ன இவன் இவ்ளோ அழகா சிகப்பா ஒல்லியா இருக்கான் என்று..
                  கிட்டத்தட்ட பத்து வருடங்களாய் அவன் வந்து போயிருக்கிறான் என்னிடம் வேலைக்காக.கடைசியாய் நான் சொன்னபடி சென்னை சென்றிருந்தால் அவன் ஒருவேளை பிழைத்திருப்பானோ.. ஒரு நாள் தாமதிக்காமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்குமோ..
விதி வலியது.
ஆழ்ந்த இரங்கல்கள்


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 7, 2019

அனுபவம் - இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - கோவை

இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - கோவை
  
                ஒரு மாதத்திற்கு முன் நம்மிடம் வேலை செய்யும் ஒருவரின் வண்டியை கவுண்டம்பாளையத்தில் இருக்கும் போது திருடி விட்டனர்.நமக்கு தெரிந்த சோர்ஸ் மூலம் விசாரித்த போது எங்காவது பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருப்பர்.
                          ஓரிரு நாட்கள் கழிந்த பின் அவ்வண்டியை எடுப்பர் எனவும் குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிகளில் சென்று பாருங்கள் என சொல்ல, அந்த பார்க்கிங் ஏரியாக்களில் சோதனை இட வண்டி கிடைக்கவில்லை.ஏற்கனவே நண்பர் ஒருவரின் வண்டி திருடு போய் அது வடகோவை பார்க்கிங்கில் அனாமத்தாய் நிற்க, அதை மீட்டுக் கொண்டு வந்தனர்.
                      அதைப் போலவே வடகோவை ரயில்வே பார்க்கிங்கில் போய் தேடிவிட்டு வந்தனர் வண்டி அங்கேயும் இல்லை.இதற்கிடையில் கவுண்டம்பாளையம் ஏரியா துடியலூர் சர்க்கிளில் வருவதால் அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து விட்டு வந்தனர்.ஒரு வாரத்திற்குள் கோவையில் இருசக்கர வாகன திருடர்கள் இருவரை பிடித்து அவர்களிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட வண்டிகளை மேட்டுப்பாளையத்தில் வைத்து மீட்டனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து தகவல் வர அங்கு இருந்த வண்டிகளில் நம் தொழிலாளியின் வண்டியும் இல்லை.வண்டி கிடைக்காது இனி என்ற மனநிலையில் இருந்தார்.
                             தினமும் வேலைக்கு சென்று வர வண்டி இல்லாததால் மிக சல்லிசான விலையில் ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி வாங்கி அதில் போய்க்கொண்டிருந்தார்.ஒரு மாதம் கழிந்தது.
               நேற்று மாலை அவருக்கு ஒரு போன் அழைப்பு புது எண்ணிடமிருந்து.ரயில்வே ஜங்சன் பார்க்கிங்கில் இருந்து அந்த உரிமையாளர் அழைத்திருந்தார், வண்டி ஒரு மாத காலமாக எடுக்காமல் இருக்கிறீர்கள் என்று.இவருக்கோ சந்தோசத்திலே ஒரு சந்தேகம்.எப்படி என் நம்பர் என்று..வண்டி பதிவு எண்ணை போட்டு உரிமையாளர் மொபைல் எண்ணை எடுத்து இவரை அழைத்திருக்கிறார்.
                            இவரும் உள்ளதை சொல்லி, புகார் கடிதம், ஆர்சி புக், மற்றொரு சாவி இவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கிங் போய் இருக்கிறார்.வண்டியை கண்டவுடன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.முதல் போன் எனக்கு பண்ணிவிட்டு, பின் துடியலூர் காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு, பார்க்கிங் உரிமையாளரிடம் பேசி வண்டியை எடுத்து கொண்டு வந்து விட்டார்.வண்டி கிடைத்த சந்தோசத்தில் பார்ட்டி வைப்பதாக சொல்லி விட்டார்.அநேகமாக இந்த வாரம் கனத்த பார்ட்டியை எதிர்பார்க்கலாம்.
                         வண்டி தொலைந்து விட்டாலோ, இல்லை திருடு போனாலோ உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளுங்கள்.பின் கோவையில் உள்ள அத்துணை பார்க்கிங்கிலும் வண்டியை தேடுங்கள்.பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் தான் வண்டியை நிறுத்தி வைப்பர் திருடர்கள்.இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஆற அமர வண்டியை கடத்துவார்கள்.எப்படியும் வண்டி மேட்டுப்பாளையம் தான் போகும்.அந்த ஊர்தான் கோவையின் புதுப்பேட்டை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, May 6, 2019

கரம்- 35


கரம் - 35
JUNE - மலையாளம்
இளம்பிராயத்தில் பள்ளியில் ஏற்படும் காதலை, நட்பை மிக அழகாய் சொல்லி இருக்கும் திரைப்படம்.செம இண்ட்ரஸ்டிங்.ஒவ்வொரு காட்சியும் நம்மை ரசிக்கவைக்கிறது.
பள்ளியில் ஆரம்பித்து, கல்லூரியிலும் தொடங்கி. பின் வேலைக்கு வந்த பின்னும் தொடரும் காதல் என மூன்று காலகட்டத்தையும் கவிதையாய் காட்சிப்படுத்தி இருக்கிறது.இறுதியில் கண்கலங்க வைக்கிறது.ஜூன் ஆக நடித்த பெண் காட்சிகளில் மிளிர்கிறார்.
நடித்த அனைவருமே சிறப்பாய் நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கேரக்டரும் படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கின்றனர்.பள்ளியில் பிரிந்த அனைவரும் இறுதியில் ஒன்று சேரும் போது நம்மை கண்கலங்க வைக்கின்றனர்.இந்தப் படம் மலரும் நினைவுகளை கொண்டு வரும்.
பார்க்க வேண்டிய படம்.


கரூர் ஸ்பெசல்:
திருவிழா, கிடாவெட்டு மற்றும் இன்னபிற நிகழ்வுகளில் ஆட்டுக் கறிக்குழம்பு வைப்பாங்களே தண்ணி மாதிரி...சாதக்குவியலில் குழம்பை ஊத்தினா அப்படியே ஓடும் பாருங்க சாதத்துல ஒட்டாம அந்த மாதிரி..குழம்புல தேங்காய் துருவல்கள் மிதந்தும், சுத்துக் கொழுப்பும் மிதந்தும் இருக்குமே..அந்த மாதிரி....எலும்பு குழம்பு ரசம் மாதிரி..
நல்ல காரசாரமா மிகுந்த சுவையோடு இருக்கிறது இங்கே ஒரு ஹோட்டலில்.சாப்பாட்டை போட்டு குழம்பை ஊத்தி பிசைஞ்சு அடிச்சா அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கு..
தொண்டைக் குழி வரைக்கும் தின்னு முடிச்சப்புறம் தான் தெரியுது, அய்யயோ..பேண்ட் பட்டன், சட்டை பட்டன்லாம் தெறிச்சிடும் போல..
குழம்பு அவ்வளவு டேஸ்ட்.இலையில் தெறித்து ஓடினாலும் சோற்றில் பாத்திகட்டி பிசைந்து அள்ளி சாப்பிடும் போது கைவிரல்களில் ஒழுகுமே..வாவ் வாட் ஏ ருசி...
ரொம்ப சின்ன கடைதான்.அடிக்கிற வெயிலில் அனல் காத்து தான்.ஆனாலும் அங்க காரசாரமா சாப்பிட்டா வேர்த்து ஒழுகும் பாருங்க...


அம்மன் மெஸ், சிக்னல் ரவுண்டானா டெல்லி ஸ்வீட்ஸ் அருகில் கரூர்


ஸ்வீட்ஸ்டால்:
ஒரு போர்டு இல்ல.ஒரு விளம்பரம் இல்ல..ஏன் ஒரு ஷோகேஷ் கூட இல்ல..ஆனாலும் இங்க தயாரிக்கிற இனிப்புகளுக்கு மவுசே தனி.ஒரு சின்ன டீக்கடை தான்.ஆனால் ஜிலேபி, மைசூர்பா, பால்கோவா, மிக்சர் என அனைத்து வகைகளும் சுவைபட கிடைக்கும்.ஜிலேபி இருக்கே..அப்படியே பிய்ச்சி வாயில் வைத்தால் போதும்.
ஜீராவோடு வாயில் கரையும்.மைசூர்பா இருக்கே..பொன்னிறமா இருக்கும்.
மொறுமொறுவென இருப்பதை கடித்தால் சுவைபட கரையும்..

போலீஸ் ஸ்டேசன் அருகில், சிஎஸ்ஐ பள்ளி எதிரில்.. கரூர்



கரூர் பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய்ட்டு வாங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...