Friday, April 26, 2013

கோவை மெஸ் - குளத்தூர் பிரியாணி ஹோட்டல், சூலூர்

ஒரு நாள் கோவை நோக்கி வந்துகிட்டு இருக்கும் போது சூலூர் வந்தபோது செம பசி. சிட்டிக்குள்ள போக எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேல  ஆகிடும்.பாவம் எப்படியும் பசி தாங்கமாட்டேன்னு....பக்கத்துல ஒரு ஆள் கிட்டே கேட்க ....சைவமா அசைவமா என எதிர்கேள்வி கேட்க...எப்பவும் போல அசைவம் தான் என சொல்ல....கலங்கல் ரோட்டுல ஒரு ஹோட்டல் இருக்கு போங்க என சொல்ல..சூலூரில் இருந்து கலங்கல் செல்லும் வழியில் தேடிகிட்டே செல்ல  வலது புறம் மரத்தடியில் அமைதியாய் இருக்கிறது...
 
வண்டியை ஓரங்கட்டிவிட்டு வர....பிரியாணி மணம் நம்மை இழுத்தது..கடைக்குள் நுழைய ஏகப்பட்ட பேர் பார்சல் வேண்டி காத்திருந்தனர்.ஒரு ஓரமாய் இடம்பிடித்து உட்கார சர்வர் இலையை போட்டு மெனுவினை அடுக்க ஆரம்பிக்க பசி இன்னும் அதிகமானது.பிரியாணி தலைக்கறி, குடல் கறி, சிக்கன் சாப்ஸ், மட்டன் சுக்கா என நிறைய வெரைட்டி சொல்ல சொல்ல எச்சில் ஊறியது..நான் மட்டும் தான் ஆதலால் அதிகம் ஆர்டர் பண்ணமுடியாது என்று பிரியாணி , தலைக்கறி மட்டும் சொன்னேன்.
இலை போட்டு சூடாய் பிரியாணி வைக்க மணம் பட்டையக் கிளப்பியது..சிக்கன் பீஸ்கள் நன்றாக வெந்து இருந்தன.சுவை பரவாயில்லை.ஆனால் தலைக்கறி மிக அற்புதம்.அந்த ஆட்டு மணத்துடன் அப்படி ஒரு சுவை..சாப்பிட சாப்பிட செமையாக இருந்தது.அதிக பீஸ்களும் கிரேவியும் அருமையோ அருமை.
விலையும் குறைவுதான்.இரண்டு பிரியாணி ஒரு தலைக்கறி இரண்டும் சேர்த்து 220 தான் ஆனது.
சூலூரில் இப்படி ஒரு ஹோட்டல் இருப்பதே இப்போது தான் தெரிகிறது.அந்த வழிப்போக்கனுக்கு நன்றி..
சூலூர் டூ கலங்கல் செல்லும் வழியில் இருக்கிறது.கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்கலாம்.தலைக்கறி அம்புட்டு டேஸ்ட்...

நேசங்களுடன் 
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, April 24, 2013

பயணம் - பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்

கடந்த ஒரு வாரமாவே நம்ம ஊருல செம வெயில்.எங்காவது தண்ணி இருக்கிற இடத்துக்கு போலாம்னு (சத்தியமா நம்ம கடைக்கு இல்ல...) பிளான் பண்ணி ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மேட்டுப்பாளையம் பிளாக் தண்டருக்கு கிளம்பினோம்.
அங்க போனா ஊர்ப்பட்ட பேரு...யம்மாடி.....இம்புட்டு பேரா..வாய் பிளந்தபடி வந்திருந்த அம்மணிகளை நோக்க.....குமட்டில குத்தி டிக்கட் எடுக்க சொன்னான் நண்பன்...ஞாயிறு வேற.. கூட்டம் மொய்க்கிறது...வகைவகையாய் அம்மணிகள்..காலேஜ் பஸ், வேன், கார் என குடும்பம் குடும்பமாய், தோழிகள் சகிதமாய், வகை வகையாய் வந்திறங்கிய அம்மணிகள்...கோடை விடுமுறையை கழிக்க வந்திருக்கும் கூட்டம் என கிட்டத்தட்ட 4000 க்கும் மேல இருக்கும்..இதுல பாதிக்கு பாதி அம்மணிகள்...ஹிஹிஹி....அப்புறம் குழந்தைகளோடு அம்மணிகளையும் சேர்த்து  பாதுகாக்கிற காவலனாய் நம்ம இனம்...


 
 டிக்கட் வாங்கிட்டு உள்ளே போனது தான் தெரியும்..ஜன நெரிசலில் சிக்கி தவிக்கிற மாதிரி ஆயிடுச்சு.ஆனாலும் சுகமாய் இருந்தது...ஹிஹிஹி...
லாக்கர் வாங்க ரொம்ப நேரம் கியுல நின்னாலும்  கொஞ்சம் கூட போரடிக்கவே இல்ல..ஏன்னா இந்த பக்கம் அந்த பக்கம் என எல்லாப்பக்கமும் அம்மணிகள்...ஹிஹிஹி..நின்னது லேடிஸ் கவுண்டர்ல...
தனித்தனி கவுண்டர் இருந்தாலும் லாக்கர் வேண்டி இங்கயும் அங்கயும் மாறி மாறி நிக்கிறார்கள்.
எப்படியோ லாக்கர் வாங்கி (என்னமோ பேங்க லாக்கர் வாங்குற மாதிரி...) போட்டு இருந்த ட்ரஸ், கொண்டு போன பேக், செப்பல், செல்போன், கேமரா இதெல்லாம் உள்ள வச்சி பூட்டிட்டு அரை டிராயரும் பனியனும் போட்டு கிளம்பினோம்.மணி 10.30 ஆகிவிட்டது...வெயில் முதுகை பதம் பார்க்கவே எங்காவது உடலை நனைப்போம் என்று உள்ளே நுழைந்தால்....லேடிஸ், கிட்ஸ் என்று இருக்கிற எல்லா குளங்களிலும் போர்டு தொங்கவிட்டு இருக்கின்றனர்.கிட்டதட்ட நிறைய நீச்சல்குளங்களில் இப்படியே தொங்க விட்டுருந்தனர்.நமக்கு தன்ணீர் ஆழமா இருக்கனும்...நல்லா நீச்சல் அடிக்கணும் அதுதான் ஆசை...ஆனா அங்க இருக்கிறது எல்லாமே வாட்டர் ரைடு....அதுல போய் மேலிருந்து கீழே வந்தா ஒரு வித பயம்...அதனாலேயே அந்தப்பக்கம் எட்டிக்கூட பார்க்கல.....சரி என்று வேவ் எனப்படும் செயற்கை  அலை வரும் குளத்திற்கு போனால் தண்ணீரை விட மனித தலைகளே அதிகம் இருக்கிறது..அலை வரும் நேரம் ஒரு போர்டில் குறிக்கப்பட்டு இருந்தது.சரி அதற்குள் எங்காவது போய் பாடியை நனைப்போம் என்று எண்ணி ஒரு குளத்திற்குள் குதித்தேன்...பார்த்தா அதுலயும் மேல இருந்து சறுக்கிட்டே வந்து நம்ம பக்கத்துல குதிக்கிறாங்க...விட்டா நம்மள முடிச்சிருவாங்க  அப்படின்னு ஒரு ஓரமா நீச்சல் அடிச்சிகிட்டு இருக்க...
கொஞ்ச நேரத்துல சங்கு ஊத..அலை வரும் முன்னெச்சரிக்கையாம்......உடனே அங்க கிளம்ப...
இன்னும் கூட்டம் கூடியது...சரின்னு  நாமளும் ஜலக்கிரீடை செய்வோம் அப்படின்னு  செயற்கை அலை குளத்தில் நீராடினேன்....ஒரு மணி நேரம் அதுக்குள்ளேயே கிடந்தேன்..
பசிக்க ஆரம்பித்தது.....பக்கத்தில் ஒரு சாரல் என பெயர் பொறித்த ஹோட்டல்...
பாடாவதி உணவு...விலை மிக அதிகம்...சுவை கேவலம்...ஆனாலும் கூட்டம்.....ரொம்ப நேரம் தண்ணீரில் ஆடி களைத்துவிட்டு வரும் நபர்கள் சுவையை பார்ப்பதில்லை போல...
ஒரு புரோட்டா 25, தயிர்சாதம் 50, வெஜ் பிரியாணி 70...இப்படி விலை இருக்கிறது...நானும் இரண்டு காஞ்சு போன புரோட்டாவையும் ஒரு பிரியாணியையும் வெட்டி விட்டு மீண்டும் குளத்தில் போய் படுத்துக்கொண்டேன்....அடிக்கிற வெயிலிலும் தண்ணீரில் இருப்பது சுகத்தினை தருகிறது...பக்கத்திலேயே பல்வேறு அம்மணிகள்...சொல்லவா வேணும்....
4 மணி ஆனது.....வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானோம்...உடை மாற்றும் அறைக்கு வந்து குளித்துவிட்டு லாக்கரில் இருந்த உடைகளை போட்டுக்கொண்டு வெளியேறினோம்... மொபைலை எடுத்து போட்டோ எடுக்க ஆரம்பித்தேன்...முதலில் அக்வேரியம்.மீன் தொட்டிகள்..நிறைய வகை வகையாய்...எதுவும் ஈர்க்கவில்லை.
காலையில் இருந்த கூட்டம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் வடிய ஆரம்பித்தது...பார்த்தபடியே நுழைவு வாயில் அருகில் ஒரு வீடியோ கேம்ஸ் இல் உள் நுழைந்தோம்...ஒரு சில கேம்ஸ்களை விளையாடிவிட்டு ஹாண்ட்டு ஹாஸ்பிடல் என்கிற போர்டு பார்த்து உள் நுழைந்தோம்...இருட்டு அறையில் பிணங்கள் போன்ற செட்டப்புகள்...கொஞ்சம் திகிலை வரவழைத்தது...பயந்தபடி வெளியேறினோம்.அதுபோலவே ஜூராசிக் ஜங்கிள்...ஆனால் டைனோசர் ஒன்று கூட நம்மை மிரட்டவில்லை.ஒரு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மறக்க முடியா நினைவுகளோடு பிளாக் தண்டர் அனுபவமும் சேர்ந்து கொண்டது..
டிக்கெட் விலை 500 ரூபாய்..உங்கள் அனைத்து பொருட்களையும் லாக்கரில் வைத்து விடுங்கள்.வீட்டில் இருந்தே டிராயர்/ பெர்முடா கொண்டு செல்லுங்கள்.அங்கு விலை அதிகம்.முதலில் டிரை கேம்ஸ் அனைத்தும் விளையாடி விடுங்கள்.பின் குளத்திற்கு செல்லுங்கள்.திரும்பி வருகையில் கண்டிப்பாக நல்ல தண்ணீரில் குளித்து விடுங்கள்.இல்லை எனில் அலர்ஜி தான்.பயங்கர குளோரின் கலப்பார்கள் போல...ஒரே குளோரின் வாசம்..
எங்கு என்னென்ன இருக்கிறது என்று கைடு பண்ண ஆள் இல்லை.தண்ணீர் சறுக்கல் விளையாட அந்த ரப்பர் ட்யூப்களை நாமே தான் மேலே கொண்டு செல்ல வேண்டும்.இந்த ரப்பர் ட்யூப்களை வாங்க முண்டியடிக்கிறது கூட்டம்.குளங்களில் மண் சேர்ந்து கிடக்கிறது.உடைந்த வளையல், பின், என நிறைய கிடக்கிறது.ஆனாலும் மக்கள் ரசிக்கிறார்கள்.விளையாடுகிறார்கள்..காரணம்  பொழுது போக்கு அம்சமாக இது ஒன்று மட்டுமே இருப்பதால்...
கண்டிப்பாக போக வேண்டிய அனுபவங்களை உணர வேண்டிய இடம்.மனமும் உடலும் நிச்சயமாய் இளைப்பாறும்.

 கிசுகிசு : எங்கடா அம்மணிகள் போட்டோ என்று யாரும் கேட்டு விடாதீர்கள்.அதற்கு பதிலாக எனது போட்டோ...( பேக்ரவுண்டில்....நல்லா ஜூம் பண்ணுங்க....ஹிஹிஹி... )அடிக்கிற வெயிலில் பிளாஷ் அடிச்சு தான் போட்டோ எடுத்தார் ஆனாலும் கருப்பாவே தெரிகிறேனே.....

உள்ளே புகைப்படக்காரர்கள் சுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.50,100,500 என பல்வேறு விலைகளில் பிரிண்ட் தருகிறார்கள்.(எனக்கு மெயில் அனுப்பமுடியுமான்னு கேட்டேன்...பயபுள்ள ஒரு பார்வை பார்த்துச்சு...அப்படியே பம்மிட்டேன்...ஹிஹிஹி)

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, April 19, 2013

எமரால்டு எஸ்டேட், ஊட்டி

நம்ம நண்பரோட எஸ்டேட்ல கொஞ்சம் வேலை இருப்பதால் போன வாரம் ஊட்டிக்கு பயணமானேன்.காலை 7மணிக்கெல்லாம் ரெடியாகி மாருதி ஜிப்சி வேனில் கிளம்பினோம்.கோத்தகிரி வழியே தான் பயணமானோம்.இந்த ரோடு கொடநாடு உபயோகத்தில் மிக நன்றாக இருக்கிறது.மேலும் மேலும் ரோட்டினை செப்பனிட ஜல்லி, தார் ஏற்றின டிப்பர் லாரிகள் எங்களுக்கு முன்னே வரிசை கட்டி சென்று கொண்டிருந்தன.கொடுத்த வைத்த மக்கள் கோத்தகிரியில் இருப்பவர்கள்...

மலைப்பாதை இருபுறமும் பசுமை அன்னை....பரந்து விரிந்து தேயிலைத் தோட்டங்களாக அமைந்து இருக்கிறாள்.இந்த தேயிலைத் தோட்டத்தினை காண பாலாவின் பரதேசிதான் ஞாபகத்திற்கு வந்தது.இருப்பினும் அழகு கொட்டிக்கிடக்கிறது இருபுறத்திலும்..

வேகமாய் சென்று கொண்டிருந்த வண்டி கொஞ்சம் பிரேக்கடிக்கவே என்ன ஏதுவென்று பார்க்க ஒரு காட்டெருமை உல்லாசம் வேண்டி ஒற்றை ஆளாய் வந்து தேயிலைத்தோட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. அய்யோ...எம்மாம் பெரிய சைசு....முதல் முதலாய் ஒரு காட்டெருமையை காட்டில்....ஜூவுல கூட இன்னும் பார்த்தது இல்ல. ஆனா இங்க எவ்வித பாதுகாப்புமின்றி பார்க்கிறேன்...மனதிற்குள் கருக்.....மெதுவாய் ஆடி அசைந்து இறங்கி எங்கள் பக்கத்தில் வர இன்னும் பயமாகிப்போனது முட்டித்தள்ளினால் முன்னூறு மீட்டருக்கும் கீழே விழ வேண்டியதுதான் எங்கள் காரை ஒட்டியே ஐந்தடி தூரத்தில் மெதுவாய் சென்றது.. நல்லவேளை ரொம்ப சமர்த்தாக இறங்கிப்போய்விட்டது.நாம் சமர்த்தாக இருந்தால் அதுவும் சமர்த்துதான்.ஹாரன் அடிப்பது , இறங்கி நின்று காட்டு விலங்குகளுக்கு ஹாய் சொல்வது என சேட்டை செய்யும் போதுதான் அவைகளும் நமக்கு ஆப்படிக்கின்றன.
 
 
 

ஒரு காட்டுவிலங்கை சந்தித்த மகிழ்ச்சியுடன் பயணத்தினை தொடர்ந்தோம்.கோத்தகிரி வந்து தொட்டபெட்டா அடையவும் இந்த ஊரின் ஒரு சிறந்த தத்துவ பாடலை 
 தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா..... 
முணுமுணுத்தபடியே.....இருக்க தொட்டபெட்டா சிகரம் காண அப்போதுதான் வந்து இறங்கிய அம்மணிகளை கண்டதும் மனம் இன்னும் ஊட்டியை விட குளிர்ச்சியானது. நாமளும் கொஞ்சம் சிகரம் பார்க்கலாமா என்று கேட்கவும் எஸ்டேட் போக நேரமாகிவிடும் பிறிதொரு நாளில் தரிசிக்கலாம் என்று சொல்லவும், மனசுக்குள் மத்தாப்பு மங்கிவிட்டிருந்தது.சரி ஒரு டீயாவது குளிருக்கு இதமாய் குடிப்பமே என்று தொட்டபெட்டா அருகில் ஒரு கடையில் ஒரு மசாலா டீ சாப்பிட்டு கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு பயணம் ஆரம்பிக்க சிறிது நேரத்தில் சேரிங்கிராஸ் வந்தடைந்தோம். பொட்டானிக்கல் கார்டன் வழியே செல்லவும் அங்கயும் ஏகப்பட்ட அம்மணிகள்..விதவிதமாய்...மாநிலம் வாரியாய்....இங்கயும் அதே நிலைமைதான்..பார்வை ஒன்றே போதுமே ....மனதின் ஏக்கம் கண்களில் விரிந்தது.மனசை அங்கேயே கழட்டி விட்டபடி எஸ்டேட்டுக்கு கிளம்பினோம்.
ஊட்டியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.இந்த எமரால்டு எஸ்டேட்.குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் கரடு முரடான பாதை.அப்போது தான் யோசித்தேன்...நண்பர் ஏன் ஜிப்ஸி வண்டியில் வருகிறார் என்று...
இருபுறமும் பசுமை...எமரால்டு ஏரி தண்ணீர் குறைவாக இருக்கிறது.பச்சை நிறத்தில் ரொம்ப ஆழத்தில் இருக்கிறது நீர்.இந்த ஏரிப்பகுதியில் தான் தெய்வத்திருமகள் படம் சூட்டிங் நடந்தது என்று உபரித்தகவல் ஒன்றையும் சொன்னார்.அதுபோலவே இன்னொன்றும் புரட்சித்தலைவருக்கு இந்த ஏரியில் இருந்து தான் மீன் போகுமாம்.அவ்ளோ ருசியான மீன் மற்றும் அந்த விசயத்திற்கு ஏற்றதாம்.. ஹி ஹி ஹி

ஒரு மணி நேர பயணத்திற்கு பின் எஸ்டேட்டை அடைந்தோம் ஆகா....கண்களுக்கு என்னா குளிர்ச்சி... தேயிலைத்தோட்டம் ...அழகாய் அற்புதமாய் பரந்து விரிந்து கிடந்தது... மலைகளின் நடுவே இப்படி ஒரு அழகான தோட்டம்... பசுமை..பசுமை...எங்கெங்கும்....மேலிருந்து பார்க்கும் போது ஏரியின் அட்டகாசமான காட்சி....
பொழுது உறைய ஆரம்பித்தது..மணி 2.30 தான் இருக்கும் கிளைமேட் மங்க ஆரம்பித்தது.கொஞ்சம் வெயிலும் கொஞ்சம் சாரலும் அந்த இடத்தினை மிக ரம்மியமாக்கி விட்டிருந்தது.
மிக அற்புதமான இயற்கைக்காட்சி...தேயிலைத்தோட்ட்த்தின் நடுவே ஓடிவரும் ஒரு சுனை...அதில் இருந்த சுவை, நீரின் குளிர்ச்சி  இன்னும் அகலவில்லை.
வந்த வேலையை முடித்துவிட்டு 4 மணி அளவில் அங்கிருந்து கிளம்பினோம்..இன்னும் பசுமையாய் இருக்கிறது மனதில் அந்த எஸ்டேட்டின் எழில் மிகு இயற்கை...
கூடிய விரைவில் இங்கு சுற்றுலா வரும் நபர்கள் இயற்கையோடு இணைந்து தங்குவதற்காக குடில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவிருக்கிறார்கள்.அதன் பின் தான் இந்த எஸ்டேட்டினை கண்டுகளிக்க முடியும்.அதுவரை பொறுத்தருள்க..இந்த எஸ்டேட் செல்லும் வழியில் நிறைய காட்டேஜ்கள் இருக்கின்றன.அங்கும் தங்கலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, April 12, 2013

கோவை மெஸ் - அப்பளம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை

அம்பா சமுத்திரம் போய்ட்டு திரும்பி வரும்போது கல்லிடைக்குறிச்சி என்கிற ஊர் தான் அப்பளத்திற்கு பேமஸ் என்ற ஞாபகம் வந்தவுடன் அந்த ஊரிலே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு போலாம் என்று நம்ம சிங்கத்தை ஓரங்கட்டினோம்.அருகில் இருந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்க எங்கு அப்பளம் தயாரிக்கிறார்கள், எங்கு சுவையாக கிடைக்கும் என்று கேட்க அவர் ஒரு அக்ரஹார வீதியை காட்டினார்.சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா அப்பளக்கடைதான் மிக சுவையாக இருக்கும் என்றும் வழி மொழிந்தார்.

நன்றி சொல்லிவிட்டு நடையைக்கட்டினோம்.இருபுறமும் ஒழுங்கே அமையப்பெற்ற வீடுகள்.ஒவ்வொரு வீட்டிலும் பழமை மாறாத திண்ணை அமைப்புகள்..மரத்திலான தூண்கள் கொண்ட வீடுகள் என மிக நேர்த்தியாக இருந்தன.மார்கழி மாசத்தில் இந்த வீதி வழியே சென்றால் மிக ரம்மியமாக இருக்கும் என நினைக்கிறேன்...அம்மணிகள் இருமருங்கிலும் கோலம் போட்டுக்கொண்டு இருப்பர். 

வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா....வச்சிப்புட்டா...
நேசத்திலே எம்மனசை தைச்சிப்புட்டா... தைச்சிப்புட்டா

 இப்படி பாடிக்கிட்டே அம்மணிகளை பார்த்துவிடலாம் என நினைக்கிறேன்,

அம்மணிகள் என்றவுடன் தான் இந்த ஊரைப்பற்றின விசேசம் ஞாபகத்திற்கு வருது.கல்லிடைக்குறிச்சியில் தான் ரொம்ப்ப ...ரொம்ப்ப...அழகான அம்மணிகள் இருப்பாங்களாம்..அம்பாசமுத்திரத்தில் இருந்து சைக்கிளில் வந்து சைட் அடிச்சிட்டு போவாங்களாம் அப்படின்னு ஒரு புண்ணியவான் சொன்னாரு..ஆனா இப்போ ரொம்ப வறண்டு கிடக்காம்...
இங்க அதிகமா சினிமா சூட்டிங் நடக்குமாம்.நம்ம பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்  தன்னோட எல்லா படத்திலயும் இங்கதான் ஒரு சில காட்சிகளை படப்பிடிப்பு செய்வாராம்....சரி...நம்ம விசயத்துக்கு வருவோம்...
கடைக்குள் நுழையும் போதே உளுந்தின் வாசனை நம்மை வரவேற்கிறது.இரண்டு பெண்மணிகள் அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.இதன் அருகிலேயே இன்னொரு ஆஞ்சனேயா கடை.பங்காளி போட்டி போல..இரண்டு கடைகளிலும் அப்பளத்தில் ஏகப்பட்ட வகைகள் வைத்து இருக்கின்றனர்.உளுந்து அப்பளம்,அரிசிஅப்பளம், கிழங்கு அப்பளம் என ஏகப்பட்ட...அப்புறம் முறுக்கு வகைகள் கூட தயாரிக்கிறார்கள்.உள்ளூர் மக்கள் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கு வாங்கிச்செல்வோருக்கும் இருக்கிறார்கள்.நான் நிறைய அப்பளக்கட்டுக்கள் (ஒன்று 40 ரூபாய் அடக்கத்தில்) வாங்கினேன். இன்னும் அதிக விலையுள்ள அப்பளங்கள் இருக்கின்றன.(நமக்கு சைடு டிஷ் மட்டை ஊறுகாயே போதும்...)


வீட்டிற்கு வந்தவுடன் அப்பளத்தினை பொறித்து டேஸ்ட் பார்க்க மிக சுவையாக இருந்தது.இப்போதெல்லாம் அதிகம் இடம் பெறுகிறது என் வீட்டு சமையலில் இந்த அப்பளம்.நல்ல சுவை..தாமிரபரணி தண்ணீரில் தயாரிப்பதால் இந்த அப்பளத்தின் சுவை கூடுகிறது போல..
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அப்பளம் தயாரிக்கின்றனர்.ஆனால் இந்த தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கிற கல்லிடைக்குறிச்சி அப்பளத்தின் சுவைக்கு ஈடாகுமா என்று தெரியவில்லை.
என்னதான் இருந்தாலும் கல்யாண விருந்திலே ஜவ்வரிசி பாயசத்துல அப்பளத்தை நொறுக்கிப்போட்டு சாப்பிடற சுவையே  சுவைதான்....அதை அடிச்சுக்க முடியாது. ம்ஹூம்...இப்போலாம் டம்ளர் ல வச்சிடறாங்க...டீசண்டாயிட்டாங்களாம்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, April 8, 2013

திருநங்கை சங்கீதா



ஏப்ரல் - 15, திருநங்கைகள் தினம்: 

                ரோட்டில் நாம் நடந்து செல்லும் போது கடந்து செல்லும் அரவாணிகளை கண்டால் அசூயை அடைவது உண்டு.காரணம் அவர்களை நாம் ஒரு மனித பிறப்பாக ஏற்றுக் கொள்வதில்லை.அவர்களின் நடை, பேச்சு, உடை செயல் என அனைத்தையும் கேலி செய்து அவர்களை காட்சிப் பொருள் ஆக்குகின்றோம்அப்படி புறக்கணிக்கப் பட்டதின் விளைவாகத்தான் அவர்கள் பாலியல் தொழில், பிச்சை எடுப்பது என தடம் மாறி விடுகின்றனர்.

சமூகம் புறக்கணிக்கப்பட்டதின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட அரவாணிகள் எத்தனையோ பேர். அப்படிப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு தைரியமிக்க திருநங்கைதான் இந்த சங்கீதா.மூன்றாவது பாலினமாக இருக்கிற இந்த அரவாணிகளின் வாழ்வில் ஒளியேற்ற கோவை மாவட்டத்தில் பிறந்தவர் தான் இந்த சங்கீதா.
 

கடைகளில் கைதட்டி பிச்சை எடுக்கும் பல்வேறு அரவாணிகளுக்கு மத்தியில் சொந்தமாய் சமையல் வேலை செய்து இந்த சமூகத்தில் தனக்கென ஒரு மதிப்பையும் மரியாதையும் கொண்டு இருக்கிறார்.
                   இவர் கோவை மாவட்ட தாய் விழுதுகள் அமைப்பின் அரவாணிகள் சங்க தலைவராக கடந்த வருடம் வரை இருந்தார்.இப்போது உறவுகள் என்னும் அமைப்பினை தோற்றுவித்து அரவாணிகள் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டு பெற்று தருவது, உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் அரவாணிகளுக்கு மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்வதும், அரசின் மக்கள் நலத்திட்ட உதவிகளை தகுதியான நபர்களிடம் கொண்டு சேர்ப்பதுஎன பல்வேறு சமூக உதவிகளையும் தன்னால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறார்.
                          எத்தனையோ அரவாணிகளுக்கு மத்தியில் இவர் ஒரு சாதனை மிக்க பெண்மணி என்பது ஆச்சரியமே..திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக தன்னலம் கருதாது சேவை செய்து வரும் சங்கீதா அவர்கள்  கோவையில் மார்ச் மாதம் மகளிர் தின விழாவில் சிறந்த சமூக சேவகி விருதினை பெற்று இருக்கிறார்.

              தற்போது சங்கீதா கேட்டரிங் சர்வீஸ் என ஆரம்பித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.இவரின் கைகளில் நள மகராஜனே குடி கொண்டுள்ளார்.இவர் செய்யும் பிரியாணியை சாப்பிட்டவர்கள் நிச்சயம் இவரை மறக்கமாட்டார்கள்..அந்த அளவுக்கு மிகுந்த சுவையுடன் செய்து தருவார்.அசைவத்தில் இவர் அனைத்து வகைகளும் மிக சிறப்பாய் செய்வார்.அதுபோலவே சைவத்திலும் மிக அற்புதமாக சமைக்கிறார்..
                               இவரின் கைமணம் உங்களின் வீட்டு விசேசத்தில்  இடம்பெற வேண்டுமா…அல்லது இவரை பாராட்டி வாழ்த்தணுமா…. அழையுங்கள்…. 
20 பேர் முதல் 2000 பேர் வரை சாப்பிடும் அளவிற்கு திறம்பட சமையல் பணி புரிவார்.







 (மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் )
(மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் )
 (மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் )
                                     திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15 அன்று இவர்களை வாழ்த்தி சமூகத்தில் இவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பினை உண்டாக்குவோம் என்று நாமும் உறுதி மொழி ஏற்க வேண்டும். சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனமான திருநங்கைகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்வோம்
                            இவர் கிட்டத்தட்ட எனக்கு அறிமுகம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது.எனது எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் இவரின் கைப்பக்குவம் இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள், வீட்டு விசேசங்கள், கிடாவெட்டு என எல்லா நிகழ்வுகளிலும் இவரே தான் சமையல் செய்து வருகிறார்.
இவரின் தொடர்பு எண் - 98947 71132
சங்கீதா கேட்டரிங் சர்வீஸ், சாய்பாபா கோவில், கோவை

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...