கடந்த வாரம் முழுக்க திருச்சியில் டேரா போட்டு இருந்தேன்.திருச்சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனது ஊர் கரூர் என்பதாலும், அதிக சொந்தங்கள் இருப்பதாலும் திருச்சி எனக்கு எப்பவும் பிடித்த ஊர்.கரூரில் இருந்து இரண்டு மணி நேரம் என்பதால், அடிக்கடி படம் பார்க்க திருச்சியில் உள்ள கலையரங்கம், மாரீஸ், சோனா தியேட்டர்களுக்கு வந்து சென்றிருக்கிறோம்.இப்போது எனது அண்ணன் இங்கு இருப்பதால் அவர் வீட்டில் தங்கியிருந்தேன்.ஒரு பகார்டி நேரத்தில் எனது அண்ணன் சாப்பாட்டு விசயத்தை ஆரம்பிக்க, திருச்சியில் உள்ள ஒரு பிரியாணி கடையைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
அதிகாலை மூன்று மணிக்கு ஆட்கள் வருவார்களாம் பிரியாணி தயார் பண்ண.காலை பத்து மணிக்கு சிக்கன் பிரியாணி ரெடியாகி விடுமாம்.மட்டன் பிரியாணி 11 மணிக்கு ரெடியாகிவிடுமாம்.இரண்டு டூ மூன்று மணிக்குள் எல்லாம் தீர்ந்து விடுமாம்.பிறகு கடையை பூட்டிவிட்டு சென்று விடுவார்களாம்.பிரியாணி சுடச்சுட கிடைக்கும்.அதில் இருக்கும் மட்டன் துண்டுகள் குறைந்தது 12க்கும் மேல் இருக்கும்.தால்ச்சா அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.சீரகசம்பா அரிசியில் பிரியாணி செம டேஸ்டாக இருக்கும்.விலையும் குறைவு தான் என சொல்லி எனக்கு ஹைப் ஏத்திக்கொண்டிருந்தார்.கேட்க கேட்க பகார்டியின் சுவை குறைய ஆரம்பிக்க, அவ்வப்போது ரீசார்ஜ் ஏத்திக்கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் காலை எப்பவும் போல விடிந்தது.மிச்சமிருந்த பகார்டியை காலி செய்து விட்டு கரெக்டாக பத்து மணிக்கு கடையை அடைந்தோம்.காரை விட்டு இறங்கியவுடன் பிரியாணியின் வாசம் மூக்கைத் துளைத்தது.அப்பொழுதே கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது.கடைக்கு சின்னதாய் ஒரு போர்டு.திண்டுக்கல் பிரியாணி என்று.கடை என்றால் ஒரு கடை அல்ல.கிட்டத்தட்ட பத்து கடைகள் வரிசையாய் சேர்ந்த இடம். ஒவ்வொரு கடையும் சின்ன இடம் தான்.முதல் கடையில் தயிர் பச்சடி ரெடியாகிக் கொண்டிருந்தது. அடுத்தக் கடையில் பிரியாணி பார்சல், இன்னொரு கடையில் பிரியாணி வெந்துகொண்டிருந்தது, அதே மாதிரி சில்லி சிக்கன் பொரிப்பது, விறகு அடுக்கிவைத்து இருப்பது, இஞ்சி பூண்டு உரிப்பது என ஒவ்வொரு கடையிலும் ஏதோ ஒன்று நடை பெற்றுக்கொண்டிருந்தது.
மக்கள் பிரியாணியை சுடச்சுட வாங்கி ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
நாங்களும் எங்கள் பங்குக்கு பிரியாணியை வாங்க, இளம் சூட்டுடன் வாழை இலையில் மணம் பரப்பி சீரகசம்பா பிரியாணி எங்கள் கை வைப்பதற்காக காத்துக்கிடந்தது.
பிரியாணியை ஒரு விள்ளல் எடுத்து சாப்பிட,ஆஹா..என்ன சுவை.,.சம்பா அரிசியில் மட்டன் மணமும், பிரியாணி மசாலாவின் சுவையும் கலந்து இருக்க, கை தன்னிச்சையாய் எடுத்து வாய்க்கு கொடுக்க, பிரியாணி யானது நாவின் சுவை நரம்புகளை மீட்டிக்கொண்டிருந்தது.மட்டன் துண்டுகள் பிரியாணியில் பாதி இருக்கும் போல.அவ்வளவு துண்டுகள்.ஒரு விள்ளல் பிரியாணி எடுத்தால் அதில் ஒரு துண்டு மட்டன் இருக்கும்.மசாலாவில் வதக்கிய எலும்பே இல்லாத மட்டன் துண்டுகள் பஞ்சு போல் இருக்க, சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.
தால்ச்சா செம.எலும்புத்துண்டுகளை வாயில் போட்டு மென்றால் நன்கு மாவு மாதிரி கரைகிறது.அந்தளவுக்கு நன்று வெந்திருக்கிறது.எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜையை உறிஞ்சியும், கடித்தும் மென்னும் சாப்பிடும் போது நாமும் ஒரு ராஜ்கிரண் ஆகிறோம்.தால்ச்சா குண்டாவில் தீரத்தீர ஒருவர் வாளி வாளியாய் மொண்டு ஊற்றுகிறார்.
ஒவ்வொரு அரிசியிலும் பிரியாணி மசாலா கலந்து இருக்கிறது. தனித்தனியாய் உதிர்ந்து இருக்கிறது சம்பா அரிசி.சாப்பிட சாப்பிட சுவை அதிகமாகிக்கொண்டே போகிறது.சீக்கிரம் தட்டும் காலியாகிவிட, மீண்டும் இன்னொரு பிரியாணி வாங்கி அதையும் பொறுமையாய் ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு கை கழுவ பிரியாணியின் மணமும் சுவையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.நேரம் ஆக ஆக கூட்டம் கூடுகிறது. பிரியாணியும் சீக்கிரம் தீர்ந்துகொண்டு இருக்கிறது.
பிரியாணியின் விலை ரூ 80 தான்.இவ்வளவு விலை குறைவாய், மிக டேஸ்டியாய் யாராலும் தரமுடியாது.சுவை என்பது 100 % உத்திரவாதம்.அதே போல் சில்லி சிக்கன் ரூ 20 மட்டும்.அதிகம் துண்டுகள் இருக்கின்றன.ஒரு பிரியாணி ஒரு சில்லி வாங்கினால் மிக திருப்தியாக இருக்கும்.
இந்த கடையைப்பற்றி நிறைய வதந்திகள் உலா வருகின்றன.மாட்டிறைச்சி கலக்கிறார்கள் என்று.நிச்சயமாய் இல்லை.எங்கள் பிரியாணியில் இருக்கும் இறைச்சியை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று அடித்து கூறிவிட்டாராம் கடை ஓனர்.இந்தக்கடையில் சுவை காரணமாக, நிறைய கடைகள் தங்கள் லாபத்தினை இழந்து விட்டன.மேலும் இந்தக்கடையை காலி பண்ண வைப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார்களாம்.ஆனால் முடியவில்லை.எங்கு நல்ல சுவை இருந்தாலும் அதை ஆதரிப்பார்கள் உணவுப்பிரியர்கள்.
இந்தக்கடையில் உள்ள ஒரே ஒரு குறை பார்சல் மட்டும் பிளாஸ்டிக் பேப்பரில் கட்டி தருகிறார்கள்.
கடை சின்னதாக இருப்பதால் உட்கார்ந்து சாப்பிட முடியாது.நின்று கொண்டு தான் சாப்பிடவேண்டும்.
திருச்சி போனால் கண்டிப்பாக டேஸ்ட் பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.ரயில்வே ஸ்டேசனில் இருந்து வெளியே வரும் போது இடது பக்கத்தில் இருக்கிறது இந்தக்கடை.
பிரியாணி ரசிகர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய பிரியாணி திண்டுக்கல் பிரியாணி.
நேசங்களுடன்
ஜீவானந்தம்