Sunday, January 25, 2015

கோவை மெஸ் – நிப்பட் என்கிற தட்டுவடை, போச்சம்பள்ளி, தருமபுரி மாவட்டம்

கன்னையா எண்ணைய்ப் பலகாரக்கடை                   
               பல வருடங்களுக்கு முன்னால் தருமபுரியில் இருந்து ஜோலார் பேட் சென்றிருந்த போது பஸ் எப்பவும் போல போச்சம்பள்ளி என்கிற ஊரின் பேருந்து நிலையத்தில் நுழைய நிறைய பேர் தட்டுவடையை விற்பதற்காக பயணிகளோடு போட்டி போட்டுக்கொண்டு ஏறி விற்பனை செய்தனர்.அப்போது வாங்கிச் சாப்பிட்ட ஞாபகம் நேற்று ஜோலார்பேட்டில் இருந்து தருமபுரி வந்துட்டு இருக்கும் போது  வந்தது.அதே போச்சம் பள்ளி பஸ்ஸ்டாண்ட்.ஆனால் இந்தமுறை நம்ம சிங்கத்தில்...கண்கள் இருபுறமும் யாராவது தட்டுவடை வைத்து இருப்பார்களா என துழாவிக்கொண்டு வர, எங்கும் அகப்படவில்லை. பஸ்ஸ்டாண்ட் தாண்டி ஒரு தள்ளுவண்டி கடையில் ஏகப்பட்ட கூட்டம்.நின்றபடியே தின்று கொண்டிருந்தார்கள்.வடையோ பஜ்ஜியோ என்று தான் நினைத்தேன்.கொஞ்சம் உற்றுப்பார்த்ததில் பாலீதீன் கவரில் போட்டு மூடிவைத்தபடி தட்டு வடை இருக்க, அட நம்ம அயிட்டம் என்று வண்டியை ஓரங்கட்டி கடைக்கு சென்றேன்.



                அண்ணே...ரெண்டு தட்டுவடை என்று கேட்க, நாலு பத்து ரூபாய் தான் என்றும் இதுக்கு பேரு நிப்பட்..இங்க அப்படித்தான் சொல்வார்கள்..வேறு ஊர்களில் தட்டுவடை என்பார்கள் என்று சொல்லியபடியே பழைய தினத்தந்தி பேப்பரில் மடித்து கொடுத்தார்.
கொஞ்சம் கரடு முரடாய் கெட்டியாக இருக்கிறது பார்க்க..ஆனால் கொஞ்சம் உடைத்து சாப்பிட மொறுக் மொறுக்கென சூப்பராய் இருக்கிறது.அவ்வபோது பல்லில் கடிபடும் வேர்க்கடலையும் பொட்டுக்கடலையும், ஒரு சில வெங்காய துண்டுகளும் சுவையைக்கூட்டி நம் எச்சிலை உற்பத்தி செய்கின்றன.நன்றாக இருக்கிறது.சாப்பிட சாப்பிட அதன் சுவை அதிகரித்து மென்மையாய் கரைகிறது.மணமும் சூப்பராய் இருக்கிறது.


               ரசித்து ருசித்து கடித்து சாப்பிட எண்ணிக்கை நான்காகிப் போனது.கொஞ்சம் பெரிய சைசாக வேறு இருக்கிறது.அதிகமாய் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாததால் பயணத்தின் போது கொறித்துக்கொள்ளலாமே என அங்கு இருந்த அனைத்தும் பார்சல் ஆக்கிக்கொண்டேன்.ஐம்பதுக்கு இரண்டு குறைவாக இருந்தது.மொத்தமாய் வாங்கிக்கொண்டதில்அங்கு இருந்த பல பேருக்கு வருத்தம் அதிகமாகிப்போனது..
               நிப்பட் தீர்ந்ததால் என்னவோ கடைக்காரர் அடுத்த மெனுவாக உளுந்து வடை செய்ய ஆரம்பித்தார்.அரைமணிக்கும் மேலாகும் என்று சொல்ல, பக்கத்தில் இருந்த ஒருவர், இந்த வடையை சாப்பிட்டுப்பாருங்கள், சூப்பராய் இருக்கும் என சொல்ல, ஆசை அதிகமாகிப்போனது.சரி காத்திருக்கும் நேரத்தில் அவருக்கும் நமக்கும் பொழுது போகட்டுமே என்று பேச்சு கொடுக்க, மடை திறந்த வெள்ளமென கொட்டிவிட்டார். கடைக்காரர் பெயர் கன்னையா.45 வருடங்களாக நிப்பட் செய்து கொண்டிருக்கிறாராம்.ஐந்து பைசா காலத்தில் ஆரம்பித்த நிப்பட்.இப்போது 2.50 க்கு வந்து நிற்கிறது.உளுந்து மாவில் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு பிசைந்து எண்ணையில் போட, டவுட்டாகி அவரிடம் உளுந்து வடையில் மிளகு காணோம்..ஓட்டையை காணோம்..ஏன் என கேட்க, அது உங்க ஊர் உளுந்து வடை...நம்ம ஊர் வடையில் உளுந்து மாவு, கடலை மாவு, மைதா மாவு வெங்காயம் இருக்கும்.இந்த வடை செம டேஸ்டாக இருக்கும் சாப்பிட்டுப்பாருங்கள் அப்பொழுது புரியும் என சொல்ல, எண்ணைய் சட்டியில் வெந்து கொண்டிருக்கும் வடை எப்பொழுது மேலே வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

             என்னைப்போலவே பலரும் கடையை சுத்திக் காத்துக் கொண்டிருந்தனர்.வெந்த வடைகளை எடுத்து தட்டில் போட, எங்கள் பங்குக்கு நான்கு வந்தது.சுடச்சுட பிய்த்து வாயில் போட சுவை அப்படியே அசத்தியது.வெங்காயம் கொஞ்சம் இனிப்பாய் காரத்துடன் கலந்து கட்டி அடிக்க மணமும் சுவையும் எங்களை எங்கோ கொண்டு சேர்த்தது.சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கன்னையா அவர்கள், இன்னும் ஆறவிட்டு சாப்பிட்டால் அப்படியே பஞ்சுபோல் மென்மையாய் இருக்கும்.இன்னும் செம டேஸ்டாக இருக்கும் என்றார்.சரி என்று அந்த வடையிலும் 16 வாங்கிக்கொண்டோம் முன்னெச்சரிக்கையாக...


                தீர்ந்துவிட்டால் என்ன செய்வது...அதற்குள் கன்னையா அவர்கள் பிரேமிட்ட ஒரு சர்டிபிகேட் காட்டவும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனோம்.முறையாய் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார் அவரது கடையை...கன்னையா எண்ணைய் பலகார கடை என்று...ரோட்டோரத்தில் இருந்த கடையை ரோடு அகலப்படுத்துவதால் அகற்றி விட்டார்களாம்.அதனால் இப்போது வேறொரு கடையில் சாமான்களை வைத்துக்கொண்டு பிளாட்பார கடையாய் நடத்தி வருகிறார்.ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு இவரது கடை இருக்கிறது.

போச்சம்பள்ளி சென்றால் நிப்பட் சாப்பிட மறந்து விடாதீர்கள்..

நேசங்களுடன்

ஜீவான்ந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, January 17, 2015

வாட்ஸ் அப் தகவல்கள் - 2

                              வெளியூருக்கு பயணிப்பதற்காக ஸ்டேஷனில் மணிக்கணக்கில் நின்றிருக்கும் போது கடந்து செல்லும் மற்ற ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்..பிளாட்பார்மில் நெடுந்தொலைவு நடந்து சென்றிருக்கிறேன்...கண்ணுக்கு அகப்படுவதெல்லாம் அம்மணிகள் தான்...ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் விதவிதமாய் வந்து இறங்கிற அல்லது ஏறப்போகிற அம்மணிகளை மட்டும்....ஒரு சில அம்மணிகளை பார்க்கும் போது நம்ம எஞ்சின் நின்று விடுகிறது...அப்புறம் எங்கே ரயில் எஞ்சினை பார்ப்பது....ஹிஹிஹி

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A

முதல் எழுத்து:

முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2

இரண்டாம் எழுத்து:

இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.

YG

மூன்றாம் எழுத்து:

மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)

WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!

WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.

WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.


The first letter (gauge)
The second letter (motive power)
  • D – diesel
  • C – DC electric (can run under DC overhead line only)
  • A – AC electric (can run under AC overhead line only)
  • CA – both DC and AC (can run under both AC and DC overhead line); 'CA' is considered a single letter
  • B – Battery electric locomotive (rare)
The third letter (job type)
  • G – goods
  • P – passenger
  • M – mixed; both goods and passenger
  • S – shunting (also known as switching engines or switchers in the USA and some other countries)
  • U – electric multiple unit (used to carry commuters in city suburbs)
  • R – Railcars
For example, in "WDM 3A":
  • "W" means broad gauge
  • "D" means diesel motive power
  • "M" means suitable for both goods and passenger service
  • "3A" means the locomotive's power is 3,100 hp ('3' stands for 3000 hp, 'A' denotes 100 hp more)
Or, in "WAP 5":
  • "W" means broad gauge
  • "A" mean AC electric traction motive power
  • "P" means suitable for Passenger service
  • "5" denotes that this locomotive is chronologically the fifth electric locomotive model used by the railways for passenger service.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, January 12, 2015

மலரும் நினைவுகள் - பனங்கிழங்கு -


             
                   
             பனைமரத்தில் முற்றிய நுங்குகளை அப்படியே விட்டுவிட்டால் அது பழமாகிவிடும்.அதன் வாசம் ஊரையே தூக்கும்.நன்கு பழுத்த பனம்பழங்கள் தானே உதிர்ந்துவிடும்.சிறுவயதில்இந்த பனம்பழத்தினை பொறுக்க காலையிலேயே கிளம்பிவிடுவோம்.ஒவ்வொரு பனைமரமாய் தேடி எடுத்துவந்து நெருப்பில் சுட்டு சாப்பிடுவோம்.அதன் நெருப்பில் சுடும் மணம் எட்டுபட்டி கிராமத்தையும் தூக்கும்.அதன் சுவை ஆஹா...வாய் மூஞ்சியெல்லாம் பனம்பழத்தின் தடித்த சாறு வடவட வென ஒட்டிக்கொண்டிருக்கும்.பனங்கொட்டையை சப்பி சப்பி சாப்பிடும்போது அதன் நாறுகள் பல்லில் சிக்கி ஒரு சில இம்சையை கூட்டும்.அதை பல்லில் இருந்து எடுக்க கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருப்போம்.

                  சப்பிய கொட்டையை நன்றாய் கழுவி அதை ஒரு வித அழகுபொருளாய் செய்வோம்.பொம்மை போல் பனங்கொட்டையை ஆக்குவோம்.முடி உள்ள சாமியார் போலவும், பிசாசு போன்ற உருவம் கொண்டதுமாய் வரைவோம் அந்த பனங்கொட்டையை..வீட்டின் முகப்பில் மாட்டிவைத்து அழகுபடுத்துவோம்..


                      பனம்பழத்தினை எடுத்துவந்து பதியன்போட்டு ஒரு சில வாரங்களில் முளைத்ததும் பிடுங்கி எடுத்தால் பனங்கிழங்கு ரெடி..அந்த கிழங்குடன் கொட்டையும் இருக்கும்.அந்தகொட்டையை இரண்டாய் பிளக்கும்போது சீம்பு கிடைக்கும் அது இன்னமும் செம டேஸ்டாய் இருக்கும்.பனங்கொட்டையை வெட்டும்போது சீம்பு முகத்தில் எல்லாம் தெறிக்கும்.அதில் அழுகுன சீம்பு கூட அவ்வப்போது வரும்.அதையெல்லாம் துடைத்துவிட்டு கொட்டையை வெட்டுமிடத்தில் உட்கார்ந்திருப்போம்.பிறகு கிழங்கை எடுத்து வேகவைத்து திங்கும்போது நாறுகள் ஏகப்பட்டது வரும்.அதை லாவகமாய் பிய்த்து எறிந்து கிழங்கை சாப்பிடுவோம்.கிழங்கின் சுவை சூப்பராய் இருக்கும்.இப்போதெல்லாம் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.தென்மாவட்டங்களில் மட்டும் இருக்கின்றன.பனைமரத்தின் பயன்கள பலப்பல..ஆனால் அழிந்துவரும் இனத்தில் இப்போது பனைமரமும்...



மற்ற மலரும் நினைவுகள்  மருதாணி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, January 9, 2015

கோவை மெஸ் - Dr.Karumbu (டாக்டர்.கரும்பு ), கரும்புச்சாறு, சாய்பாபா காலனி, கோவை

               நான் சிறுவனாக இருந்த போது எங்கள் கிராமத்தில் ஒரு கரும்பு ஆலை இருந்தது.அந்த ஆலையை கடந்துதான் பள்ளிக்கூடம் போகணும்.போகும் போதும் வரும்போதும் வெல்லம் காய்ச்சிற மணம் ஆலையில் இருந்து வெளியேறி நம்ம நாசியை துளைக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த ஏரியாவையே தூக்கும்.அந்த ஆலையில் எப்பவும் கரும்பு பிழியற மெசின் இடைவிடாது ஓடிக் கொண்டிருக்கும். அதுல கரும்புச்சாறு குடிப்பதே பெரும் அலாதியா இருக்கும்.நம்ம தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்களா இல்லையான்னு  ஒரு எட்டு உள்ளே போயி பார்ப்போம்.அப்படி இருந்துட்டா அன்னிக்கு செம ஜாலிதான்.அனேகமா வாரத்துல ரெண்டு மூணு நாளு குடித்திருவோம். ஏன்னா கிராமங்களில் எல்லாரும் தெரிந்தவங்க தான்.
           ஓடிக்கிட்டு இருக்கிற மெசின் பக்கத்திலேயே எதாவது ஒரு சில்வர் லோட்டா இருக்கும்.அது அப்பப்ப வேலை செய்யறவங்க குடிப்பதற்காக வச்சி இருப்பாங்க.கூடவே ஒரு பண்ணாடை இருக்கும். நாங்க போனவுடன் அந்த பண்ணாடையை வச்சி கரும்புச்சாறை வடிகட்டி அந்த லோட்டாவுல தருவாங்க.எப்படியும் ரெண்டு கிளாஸ் புடிக்கும் அந்த லோட்டா.அப்படியே ஜில்லுன்னு இறங்கும் தொண்டைக்குள்ளயும் பின் வயிற்றுக்குள்ளயும்…. ரெண்டு லோட்டா குடிச்சிட்டு திம்ம்னு வெளியே வருவோம்.
                லீவ் நாட்களில் வீட்டுக்கு வேணும்னா ஒரு தூக்குவாளி எடுத்துக்கிட்டு கூடவே கொஞ்சம் இஞ்சி, எலுமிச்சையையும் எடுத்துகிட்டு வருவோம்.நல்ல கரும்புக்கட்டாக தேடி அதை எடுத்து அவர்களிடம் தருவோம்.அதை மெசினில் விட்டு சாறு பிழியும் போது கூடவே இஞ்சி வச்சிடுவோம்.அதுவும் நசுங்கி சாறாய் தூக்குவாளியில் சேரும்.கரும்பினை ஒரு முறை விட்டபின் அடுத்து அரைக்கும் பல் சக்கரத்தினை கொஞ்சம்  டைட்டாக திருக்கி இன்னொரு முறை விடுவார்கள். அவ்வளவு தான்.நம்மூரைப்போல் சக்கையாய் மடக்கி உருட்டி சாறு பிழிய மாட்டார்கள்.இரண்டாவது முறையிலேயே நன்கு சக்கையாய் ஆகி இருக்கும் கரும்பு.பின் நுரை பொங்க தூக்குவாளியில் பிடிச்சிட்டு வீட்டிற்கு வருவோம்.
                 இப்படித்தான் கரும்புச்சாறு குடித்த அனுபவம் இருக்கிறது.கால ஓட்டத்திற்குப் பின் இப்பொழுது ரோட்டில் எங்காவது கரும்பு ஜூஸ் கடை இருந்தால் காசு கொடுத்து குடிக்கிற நிலைமைக்கு ஆளாகி இருக்கிறேன். என்ன செய்வது எல்லாம் காலத்தின் விதி….

            சமீபத்தில் சாய்பாபா காலனியில் ஒரு மாலை நேரம் சென்றிருந்தபோது ஒரு கரும்பு ஜூஸ் கடையைக் கண்டேன்.ஆட்கள் வருவதும் போவதுமாக நல்ல கூட்டம்.மெயின் ரோட்டிலேயே வேறு இருக்கிறது.எனக்குள் இருந்த சிறுவயது ஞாபகம் எட்டிப்பார்க்க, நானும் கடைக்குள் நுழைந்தேன்.கடை மிக பிரமாதமாக இண்டீரியர் செய்யப்பட்டிருந்தது.கடை முழுதும் கரும்புச்சாறினால் உண்டாகும் நன்மைகள் ப்ரிண்ட் அவுட்டாய் தொங்கிக்கொண்டிருந்தன.கரும்புச்சாறில் இத்தனை வெரைட்டிகளா என்பதை அவர்கள் கொடுத்த மெனு கார்டு நம்மை ஆச்சர்யப்படுத்தியது.கரும்புச்சாறினை மையப்படுத்தி பலவித ஜூஸ்களும் விலைக்கேற்ப மெனுகார்டினை அலங்கரித்தன.


                எப்பவும் நம்ம பேவரைட் இஞ்சி கலந்த கரும்புச்சாறு தான்.அதை சொல்லவும் பிரிட்ஜ் இல் இருந்த கரும்புத்துண்டை எடுத்து நவீன ரக மிசினில் விட ஜூஸ் நமக்கான டம்ளரில் கொட்டியது.பின் ஏற்கனவே ரெடியாக இருக்கும் இஞ்சிச்சாறினை அதனுடன் கலந்து கொடுத்தனர்.எப்பவும் போல கரும்புச்சாறு டேஸ்ட் தான்.அப்புறம் பெப்பர் கலந்து ஒன்று கேட்கவும் முன்பு மாதிரியே ஜூஸ் பிழிந்து பெப்பர் கலந்து கொடுத்தனர்.


       இன்னும் நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன. அதையெல்லாம் ட்ரை பண்ண முடியாமல் வயிறு நிறைந்து விட்டது.
            கரும்புச்சாறினுள் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன என்பதை அங்கு இருக்கும் பிளக்ஸ் போர்டுகள் உணர்த்துகின்றன.அதை படித்துக்கொண்டே குடித்துவிட்டு வாருங்கள்.

சாய்பாபா காலனி கரூர் வைஸ்யா பேங்க் எதிரில் இருக்கிறது இந்த டாக்டர் கரும்பு.

கிசு கிசு : மாலை நேரமா போனிங்கன்னா கொஞ்சம் மனசும் இளமையாகும்...சாய்பாபா காலனியில் அம்மணிகள் கொஞ்சம் அழகாக இருப்பாங்க.........


நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 7, 2015

எலந்தை வடை - மலரும் நினைவுகள்


                    டவுசர் போட்ட காலத்தில் மிகவும் விரும்பிச்சுவைத்த ஒரு தின்பண்டம்.தாம்பாளத்தில் பாலிதீன் உறையில் மூடி பள்ளிக்கூட வாசலில் விற்றுக்கொண்டிருப்பார்கள் பாட்டிமார்கள்.கூடவே ஜவ்மிட்டாய், எலந்தை பழம் இப்படி...எலந்தை பழத்தை அளந்து போட ஒரு சிறு உழக்கு ஒண்ணு இருக்கும்.அதை வாங்கி அப்படியே சாப்பிடலாம்.ஒண்ணு ரெண்டுல புழு இருக்கும்.அதை பிதுக்கிவிட்டு சாப்பிடுவோம்.அப்புறம் எலந்தை பழத்தை ஒண்ணு ரெண்டாக அரைத்தோ இடித்தோ கொஞ்சம் இனிப்பு காரம் சேர்த்து வடை போல் தட்டி விற்பார்கள்.பத்து பைசாவிற்கு வாங்கித்தின்ற அனுபவம்.எலந்தை வடையை நன்கு சப்பிச் சுவைத்தபின் எஞ்சியிருக்கும் கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து சாப்பிட்ட அனுபவம் இன்னுமிருக்கிறது ஞாபகங்களாய்..


                     அப்புறம் வடையானது உருமாறி பாக்கெட்டில் எலந்தை ஜாம் ஆக வர அது இன்னும் டேஸ்டாக இருக்க அதிகம் சுவைக்க ஆரம்பித்த ஞாபகம் இன்னும் மிச்சமிருக்கிறது..இதன் கூடவே எலந்தைப் பொடியும் வர அதை கையில் கொட்டி நக்கிய அனுபவமும் உண்டு..பின் அதையே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி ருசித்ததும் உண்டு.எங்காவது பொட்டிக்கடை பக்கம் ஒதுங்கும் போது தொங்கிக்கொண்டிருக்கிற எலந்தை ஜாமை பார்க்கும்போது சிறுவயது ஞாபகங்கள் வர ஆட்டோமேடிக்காய் வாங்கி ருசிக்க தோன்றுகிறது.ரசித்து ருசிக்கையில் நிச்சயம்அதன் சுவை நம்மை பால்ய வயதிற்குள் கொண்டு செல்கிறது.
           
                    பழைய நினைவுகளை மீட்டித்தருகிறது. பள்ளி வகுப்பறைகளில் யார்க்கும் தெரியாமல் சாப்பிடுவதும், பின் கொட்டையை வாயிலிருந்து புயல் வேகத்தில் ஊதி ஜன்னலுக்கு வெளியே துப்புவதிலும், ஜன்னல் அருகிலில்லாத போது டவுசர் பாக்கெட்டில் போட்டு வைப்பதும், இல்லையேல் நம் எதிரியின் புத்தகப்பைக்குள் ஒளித்து வைப்பதுமான நினைவுகள் கண்டிப்பாய் எட்டிப்பார்க்கும்.இப்போது விலை ஒரு ரூபாய்.அதன் ருசியும் மணமும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை நம் பால்ய கால நினைவுகளைப்போல்...
எங்காவது கிடைத்தால் ருசித்துப்பாருங்கள் உங்களின் பால்ய வயது எட்டிப்பார்க்கும்....கொஞ்சமாவது...

மற்ற மலரும் நினைவுகள்  ஆடியோ கேசட் 

                                                   பாட்டுப்புத்தகம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, January 5, 2015

கோவில் குளம் - அருள்மிகு ஸ்ரீஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில், திருப்புல்லாணி, இராமநாதபுரம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


**************************************************************
     இராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி என்கிற ஊர்.இங்கு கோவில் இருப்பது எல்லாம் தெரியாத நிலையில் ஒரு வேலை விசயமாக அங்கு சென்றேன்.சிறு கிராமமாய் தோற்றமளிக்கும் ஊரில் பிரம்மாண்டமான கோவில் கோபுரமும்,மதில் சுவர்களும், கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளமும் இருக்கவும் ஆச்சர்யப்பட்டு விசாரித்தபோது இங்கு தான் ராமர் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட சீதையை மீட்டிட ஆலோசனை செய்த இடம் எனவும், கடல் ராஜன் ராமனிடம் மன்னிப்பு கேட்ட இடம் எனவும், தர்ப்பைப்புல்லில் சயன நிலையில் ராமர் தரிசனம் தரும் கோவில் என சொல்லவும் அதை அறியும் பொருட்டு  ஆவலுடனும், அதே சமயம் ராமபெருமானின் பக்தியைப் பெறவும் கோவிலுக்குள் நுழைந்தேன்.
          மிகப்பழங்காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் என்பதை அங்குள்ள தூண்களையும் சிற்பங்களை வைத்து கண்டுகொள்ளலாம்.பிரகார மண்படத்தில் நூறுக்கும் மேற்பட்ட தூண்கள் அழகிய வடிவமைப்புடன் காணப்படுகின்றன.வெளிப்பிரகார மண்டபத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகளின் அழகும் வண்ணமும் நம் கண்ணைக்கவரும்.இந்தக் கோவில் 72 சதுர்யுகங்களுக்கு முன்பு ஏற்பட்ட கோவில் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் இராமன் சயன நிலையில் உள்ள சிலையின் அமைப்பும் அழகும் நம்மை பரவசப்படுத்துகின்றன.இந்த கோவிலின் தலவிருட்சமாக அரசமரம் இருக்கிறது.பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த மரம் இன்னும் இருப்பது அதிசயம்.திருமாலின் அவதாரமான இராமபிரானே இத்தலத்துப்பெருமாளை ஆராதனம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது..




தலவரலாறு
72 சதுர்யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பைப்புல் நிரம்பிய . தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளை வேண்டி கடும் தவமிருந்தனர்.தவத்தின் பலனாக அகம் மகிழ்ந்த பெருமாள் அரசமரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார்.அதைக்கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்ட, அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆதி ஜெகந்நாதப்பெருமாளாக காட்சியளித்தார்.அத்திருத்தலமே இத்திருத்தலம்.



ஸ்ரீஆதி ஜெகந்நாதப் பெருமாள் ஸந்நிதி:

இந்த ஸந்நிதிக்கு எதிரில் பெரிய கருட மண்டபமும் கருடன் ஸந்நிதியும் உள்ளன.பெருமாள் ஸந்நிதி மண்டப வாசலில் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர்.உள்ளே அர்த்தமண்டபத்தில் ஸ்ரீஆதிஜெகந்நாதப்பெருமாள் ஸ்ரீபூமி நீளை என்ற தேவிமார்களுடன் வீற்றிருந்த திருக்கோலத்துடனும் பொற்கவசத்துடனும் பக்தர்களின் கண்களுக்கு காட்சி தருகிறார்.

ஸ்ரீதர்ப்பசயன ராமன் ஸந்நிதி :

வடக்கு பிரகாரத்தில் பெருமாள் ஸந்நிதிக்கு சற்று வடகிழக்கே இந்த ஸந்நிதி இருக்கிறது.இராமன் சீதையை தேடிக்கொண்டு வந்தபோது இங்கு மூன்று நாட்கள் புல்லில் இட்ட படுக்கையில் பள்ளி கொண்டு விபிஷணன் சொல்லுக்கிணங்க  கடல் ராஜன் சமுத்திராஜனிடம் வழிவிடவேண்டி அவரை சரணாகதி பண்ணினார்.அதனால்தான் இப்பெருமாளுக்கு தர்ப்பசயனராமன் என்ற திருநாமம் ஏற்பட்டது.இங்கு தான் ராமன் கடல் மேல் அணை கட்ட வானர வீரர்களுடன் ஆலோசனை பண்ணினார்.

ஸ்ரீபட்டாபி ராமன் ஸந்நிதி:-

துவாரபாலகர்களுடன் அர்த்தமண்டப கருவறையில் பட்டாபி ராமன் எழுந்தருளியுள்ளார்.இராமன் இலங்கையில் இராவணனை அழித்து வெற்றிபெற்று சீதையுடன் புஷ்பகவிமானத்தில் அயோத்திக்கு திரும்புகையில், பக்தர்களின் விருப்பத்திற்கிணங்கி இந்த இடத்தில் பட்டாபிஷேகம் செய்துகொண்டு இங்கு அமர்ந்துள்ளார்.இந்த பட்டாபி ராமனை தரிசிப்போருக்கு பலவகையிலும் புண்ணிய பலன் கிட்டும்.

ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணர் ஸந்நிதி:

தர்ப்பசயன ஸந்நிதிக்கு வடபால் வெளிமண்டபத்தில்  ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார்.இம்மண்டபத்திக்கு நாகர் மண்டபம் என்ற பெயரும் உண்டு.இங்கு எம்பெருமானை வேண்டிக்கொண்டு நாகப்பிரதிஷ்டை செய்தால் புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள் எனவும், ஏழு தலைமுறைக்கும் நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள் என்ற ஐதீகம் இருக்கிறது.இன்றும் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் இக்கண்ணன் முன்பு இம்மண்டபத்தில் ஸர்ப்பசாந்தி, ஸர்ப்பஹோமம் முதலான வைதிக சடங்குகளைச் செய்து நற்பயன் அடைந்து வருகிறார்கள்.இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நாகப்பாம்பு சிலைகள் தலவிருட்சமான அரசமரத்தில் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
  
முக்கிய உத்ஸவங்கள்
ஆதி ஜகந்நாதப்பெருமாள் பிரமோத்ஸவம்
பட்டாபிராமன் பிரமோத்ஸவம்
சூடிக்கொடுத்த நாச்சியார் உத்ஸவம்
திருப்பவித்திரோத்ஸவம்
பகல்பத்து இராப்பத்து
தாயார் நவராத்திரி உத்ஸவம்
விஜயதசமி
ஆகிய உத்ஸவங்கள் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
              திருப்புல்லாணி சங்ககாலத்துத்தும் பிற்காலத்தும் பெரும் புகழ்பெற்ற ஊர்.இத்தலம் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற முச்சிறப்புகளை உடையது.புராணப்புகழ் பெற்றும், சரித்திர புகழ் பெற்றும் சிறந்த திவ்யதேசமாக விளங்குகிறது.விஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் ஆதி ஜெகந்நாதப்பெருமாளை வணங்கி அவரால் கொடுக்கப்பெற்ற வில்லைக்கொண்டு இராவண ஸம்ஹாரம் செய்து, சீதா தேவியை மீட்டிட அனுக்கிரகிக்கப்பட்ட ஸ்தலம்.இராமபிரானை சரணமடைந்த இராவணனின் தம்பி விபீஷணன் இலங்கைக்கு அரசனாக முடிசூட்டப்பட்ட இடம்,கடற்ராஜன் தர்மபத்தினியுடன் இராமபிரானை சரணமடைந்து தன் குற்றத்தினை மன்னிக்கப்பெற்ற இடம். இப்படி பல்வேறு புராதன நிகழ்வுகளை கொண்ட சிறப்புகள் வாய்ந்த ஸ்தலத்தினை அடைந்து அருள் பெறுவீர்களாக.....

எப்பவும் போல கோவிலின் வெளிப்பகுதியில் சிறு சிறு கைவினை கலைஞர்கள்.பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள், தொப்பிகள் கிலுகிலுப்பை என நிறைய கைவினைப்பொருட்களை கடை பரப்பி விற்பனைக்காக வைத்திருந்தனர்.என்பங்குக்கு பனை விசிறியும் தொப்பியும் வாங்கிகொண்டேன்..வரப்போகும் கோடை காலத்திற்காக....



கோவிலுக்கு செல்ல வழி - இராமநாதபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.நிறைய பேருந்துகள் இருக்கின்றன.
நடை திறக்கும் காலம்- காலை 7 மணி முதல் 12.30 வரை; மாலை 3.30 மணி முதல் இரவு 8.30  வரை.

திருப்புல்லாணி அருகில் கீழக்கரை இருக்கிறது.இங்கே கிடைக்கும் துதல் அல்வா.

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...