போன வாரம் மதுரைக்கு போயிருந்த போது அந்த ஊர்ல இருக்கிற முக்காவாசி ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் ஏதாவது புது ஹோட்டலில் ட்ரை பண்ணுவோமே அப்படின்னு நைட் ஷிப்ட் போய்ட்டு வந்து குப்புறபடுத்து தூங்கிட்டு இருந்த மதுரை புகழ் தமிழ்வாசி அவர்களை தட்டி எழுப்பி விசாரித்த போது, இருப்பா நானே வர்றேன் என ஒரு பத்து நிமிடத்தில் வந்தார்.
அவர், ” காளவாசல் வழியாக போகும் போது வம்சாவளி என்கிற ஹோட்டல் பார்த்து இருக்கேன், அங்க கூட்டம் அள்ளுது.நானும் அங்க போகனும்னு நினைச்சிகிட்டே இருக்கேன்...அதனால் அங்க போலாமா என கேட்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் அங்கு இருந்தோம்.ஏனெனில் நாங்க சந்தித்த இடமே அந்த ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் தான்.அப்புறம் என்ன....அடுத்து ஹோட்டலுக்குள்தான்....
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என உள்ளே நுழைந்தோம்.கடையின்
வாசலிலேயே ஆளுயுரத்திற்கு மிகப்பெரிய போர்டு வரிசை கட்டிய மெனுக்களோடு வரவேற்கிறது.ஆட்டின் அத்தனை ஸ்பேர் பார்ட்ஸும், சிக்கனின் சின்ன சின்ன மெனுக்களும் அதில் இருக்கின்றன.படித்து முடிக்கவே மூச்சு வாங்குகிறது...சின்ன கடைதான்.ஆனால் கொஞ்சம் விசாலமாக இருக்கிறது.நம் முஸ்லீம் அன்பர்கள் நடத்துகின்ற கடை.ஆனால் பெயர் வித்தியாசமாக இருக்கிறது.
கடையில் மொத்தமே ஐந்து டேபிள்கள் தான்.அதில் இரண்டு ஏசிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.அந்த இரண்டு டேபிள்களில் ஒன்று ஒரு பேமிலியால் இடம் பிடிக்கப்பட்டு களை கட்டிக்கொண்டு இருந்தது.நாங்கள் இருவரும் அடுத்த டேபிளில் அமர்ந்து அவர்களின் மெனுக்களை காதில் வாங்கிக் கொண்டிருந்த போது சர்வர் எங்களிடம் வர என்ன இருக்கிறது என கேட்க, அவருக்கு மனப்பாடமாய் இருந்த மெனுக்கள் வெளியே வர ஆரம்பித்தன...
அவரை பேச விட்டு, பிறகு உங்க கடையின் ஸ்பெசல் என்னவென்று கேட்க, பிரியாணி என்றார்,,,சரி..ஆளுக்கு ஒரு கால் பிளேட் அப்புறம் என்ன சைட் டிஷ் கேட்கலாம் என நினைக்கையில் குடல்பிரை, மூளை பிரை, ஈரல் பிரை இருக்கு என சொல்ல, அனைத்தையும் கொண்டு வர சொன்னோம்.மதுரையில் அடித்த வெயிலுக்கு சிக்கன் செம சூடு என்பதால் அதை சாப்பிடவே இல்லை.
முதலில் வந்தது பிரியாணிதான்.பிரியாணி நல்ல டேஸ்டாக இருக்கிறது.சீரக சம்பா அரிசியில் நன்கு மசாலா பிடித்து செம டேஸ்டாக இருந்தது.மட்டன் கறியும் நன்றாக வெந்து இருந்தது,முஸல்மான் வீட்டு பிரியாணி எப்படி இருக்குமோ அப்படி இருந்தது,நல்ல சுவை...கால் பிளேட் என்பதால் குறைவாகத்தான் இருக்கிறது.எங்கிருந்துதான் இந்த மாதிரி சின்ன கப் பிளேட்லாம் கண்டுபிடிக்கிறாங்களோ....
அடுத்து வந்தது குடல் பிரை..கொஞ்சம் கிரேவியோடு வர , பிரை பண்ணித்தர சொல்லி திருப்பி அனுப்பினோம்..அதுவும் வந்தது..பிரை பண்ணியதால் நல்ல சுவை இருந்தது.என்ன...குடல்கறியை விட வெங்காயம் தான் அதிகமாக இருக்கிறது,ஏதோ வாசத்திற்காக குடல்கறி போட்டு இருப்பார்கள் போல....ஆனால் சுவை ஓகே...
மூளை பிரை நல்ல சுவையாக இருந்தது.வெங்காயம் போட்டு வறுத்து இருந்த மூளை செம டேஸ்டாக இருந்தது.பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள குடல் வறுவலும், மூளை பிரையும் சூப்பராக இருந்தது.
தமிழ்வாசியின் விருப்பத்திற்கு ஏற்ப ஈரல் பிரை வந்தது,அதுவும் செம டேஸ்ட்,.என்ன..... வாங்கின அனைத்து சைட் டிஷ்சும் கொஞ்சம் கூட எலும்பு இல்லாததால் பல்லுக்கு அதிகம் வேலை இல்லாமல் போய்விட்டது. அனைத்தும் சூப்பராக இருந்தது.
சிக்கன் வகைகளில் புது வித மெனுக்கள் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. சிக்கன் 777 மற்றும் சிக்கன் ஆர் டி எக்ஸ்... இப்படி... என்னங்க....சிக்கன் வெடிக்குமா என கேட்க..அவர் கொஞ்சம் புன்னகை செய்துவிட்டு, நம்மூர் பள்ளிபாளையம் சிக்கனைத்தான் அப்படி போட்டு இருக்கிறோம் என்றார்.
எல்லாம் திருப்தியாய் சாப்பிட்டு இருக்க, இருங்க சார்,,,சாதம் வச்சி ரசம் ஊத்திக்கிங்க என அன்போடு ஒரு பிளேட் சாதம் வைக்க அதை இருவரும் பகிர்ந்து கொண்டு ரசம் ஊற்றி சாப்பிட மிக சுவையாக இருந்தது.நான்வெஜ் சாப்பிட்ட பின் கொஞ்சம் ரசம் சாப்பிட்டு பாருங்கள்...அதை விட இன்பம் வேறு எதுவும் இருக்காது....நான்வெஜ் சாப்பிட்ட வயிற்றின் ஜீரணத்திற்கு ரசம் சூப்பராக இருக்கும்...
நன்றாய் திருப்தியாக சாப்பிட்டு வெளியே வர வெயில் சுள்ளென்று அடித்தது..வெயிலுக்கு இதமாக ஏதாவது குடிக்கலாமே என்று கிளம்பி விளக்குத்தூண் சென்று பேமஸ் ஜிகர்தண்டாவில் ஒரு கை சாரி...ஒரு வாய் பார்த்தோம் இருவரும்.....
ஜீவானந்தம்