Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Saturday, January 25, 2020

கோவில் குளம் : ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருப்பட்டூர், திருச்சி


திருப்பட்டூர் –
         பொங்கல் முடிந்தவுடன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து போனது திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பட்டூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபிரம்ம சம்பத்கெளரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர் ஆலயம்.

         கோவிலின் ஆலயம் பழமை வாய்ந்ததாக இருக்கிறது.தூண்களில் சிற்பங்கள் மிக அருமையாய் செதுக்கப்பட்டிருக்கின்றன.


கோவில் தல வரலாறு : 
             கர்வம் கொண்ட பிரம்மன், சிவனுக்கு நிகராய் நானே என கர்வம் கொண்டதால், சிவபெருமான் புத்தி புகட்ட வேண்டி பிரம்மனது ஐந்து தலையில் ஒன்றை கொய்து, பின் அவரது படைப்புத் தொழிலையும் பிடிங்கி கொண்டார்.இதனால் பிரம்மனது அகங்காரம் ஒழிந்து, பிராயச்சித்தம் வேண்டி சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்.இதனால் மீண்டும் இழந்ததை பெற்றார் பிரம்மன்.
            பிரம்மாவிற்கு சாபவிமோசனம் தரும் போது சிவன் தன் பக்தர்களுக்காக, தன் அடியவர்களுக்காக பிரம்மனிடம், இங்கே வருபவர்களுக்கு விதி கூட்டி அருள்வாயாக என சொல்லி அருளினார்.
                  பக்தி சிரத்தையாக திருப்பட்டூர் வந்து எவரொருவர் சிவ தரிசனம் செய்து, ப்ரம்மா சன்னதியில் மனமுருக வேண்டுதல் செய்கிறார்களோ அவர்களின் தலையெழுத்தினை திருத்தம் செய்து அருள்கிறார் ஸ்ரீபிரம்மா.
ஸ்ரீபிரம்மன் உருவாக்கிய பிரம்மதீர்த்த கிணறு மற்றும் அவர் ப்ரதிஷ்டை செய்து வழிபட்ட 12 லிங்கங்கள் இங்கே தனித்தனி சன்னதிகளாக இருக்கின்றன.ஸ்தல விருட்சமாக மகிழமரம் இருக்கிறது.


             திருப்பட்டூர் வந்தால் நல்லதொரு திருப்பம் நிகழும்.தேக நலம் கூடும்.ஆயுள் பலம் அதிகரிக்கும்.நடப்பவற்றுக்கெல்லாம் தானும் ஒரு சாட்சியாய் இருந்து அருளையும் பொருளையும் அள்ளித்தந்து வாழவைக்கிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்.
                   பிரம்மன் பிரதிஷ்டை செய்த 12 லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்ய உருவாக்கிய கிணறுதான் பிரம்மதீர்த்த கிணறு.நான்கு பக்கமும் படித்துறைகள் உள்ள கிணறு இது.பிரகாரத்திலும், மேற்புறத்திலும் விழும் மழை நீரானது குளத்தில் சேருமாறு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.அந்தக்காலத்திலேயே மழை நீர் சேகரிப்பு முறையை செய்திருக்கின்றனர்.

                 12 சன்னதிகளில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.இந்த ஒவ்வொரு சன்னதியும் ஒரு புண்ணிய ஸ்தலமாகும்.பாதாள ஈஸ்வரர், சுத்தரத்தினேஸ்வரர், தாயுமானவர், கயிலாசநாதர், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர், லால்குடி சப்தரிஷீஸ்வரர், திருவண்ணாமலை அண்ணாமலையார், பழமலைநாதர், பிரம்மபுரீஸ்வரர், காளத்தி நாதர், ஏகாம்பரேஸ்வரர், மண்டுநாதர் என 12 சிவலிங்கங்கள் சன்னதி இருக்கின்றன.
             ஒவ்வொன்றையும் நிதானமாக தரிசியுங்கள்.கயிலாசநாதர் கோவில் மட்டுமே பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு சொல்லுகிறது.எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரிகிறது.கயிலாச நாதர் சன்னதிக்கு எதிரில் பிரம்மாண்ட நந்தி சிலை இருக்கிறது.




               இந்த ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
                  இந்த ஆலயத்தில் யோகம் மற்றும் தியானங்களை அருளிய பதஞ்சலி முனிவருக்கு என்று திருச்சமாதி இருக்கிறது.அங்கே அமர்ந்து தியானம் செய்தால் உங்கள் பிரச்சினைகள் அகலும்.பிரம்மபுரீஸ்வரையும், பிரம்மனையும் தரிசித்தபின் பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானத்தை தரிசிக்க வேண்டும்.
              அம்பாள் ஆன ஸ்ரீபிரம்மசம்பத்கெளரி க்கென்றே தனி சன்னதி இருக்கிறது.சிவனை வழிபட்டபின் அம்பாளை வணங்கி முறையிட்டால் வேண்டுவன நடக்கும்.
                  ப்ரணவத்தின் பொருள் கேட்டு பிரம்மாவுக்கும் தந்தை சிவனுக்கும், குருவாகி பொருள் சொன்ன முருகப்பெருமான் அற்புதமாக காட்சி அளிக்கிறார்.அவரையும் வணங்கி ஞானமும் செல்வமும் பெறலாம்.
சிவபெருமானையும், அம்பாளையும் பக்கவாட்டில் நின்று தரிசியுங்கள்.
              ஆனால் ஸ்ரீபிரம்மாவை நேருக்கு நேராக நின்று தரிசியுங்கள்.உங்கள் பாவம் பறந்தோடி விடும்.துக்கம் தூரப்போகும்.
கவலைகள் கரைந்துபோகும்.
இந்த கோவிலில் பிரதோஷ நாளில் இங்கு வந்து பிரதோஷை பூஜையை தரிசியுங்கள்.பங்குனி தேர் விசேசம் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும்.திருவீதியுலாக்கள் இங்கே பிரசித்தி பெற்றவை.ஜாதக தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகார தலம்.

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை
                           மாலை 4 மணி முதல் 8 மணி வரை
                     திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சிறுகனூர் என்கிற ஊரில் இருந்து இடப்பக்கம் சாலை பிரிகிறது.அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பட்டூர் இருக்கிறது.அங்கே நடு நாயகமாக வீற்றிருக்கிறது ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.
நன்றி : திருப்பட்டூர் ஸ்தல மகிமை – வி.ராம்ஜி


நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Saturday, May 7, 2016

கோவை மெஸ் - திண்டுக்கல் பிரியாணி, இரயில் நிலையம் அருகில், திருச்சி

                      கடந்த வாரம் முழுக்க திருச்சியில் டேரா போட்டு இருந்தேன்.திருச்சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனது ஊர் கரூர் என்பதாலும், அதிக சொந்தங்கள் இருப்பதாலும் திருச்சி எனக்கு எப்பவும் பிடித்த ஊர்.கரூரில் இருந்து இரண்டு மணி நேரம் என்பதால், அடிக்கடி படம் பார்க்க திருச்சியில் உள்ள கலையரங்கம், மாரீஸ், சோனா தியேட்டர்களுக்கு வந்து சென்றிருக்கிறோம்.இப்போது எனது அண்ணன் இங்கு இருப்பதால் அவர் வீட்டில் தங்கியிருந்தேன்.ஒரு பகார்டி நேரத்தில் எனது அண்ணன் சாப்பாட்டு விசயத்தை ஆரம்பிக்க, திருச்சியில் உள்ள ஒரு பிரியாணி கடையைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
                        அதிகாலை மூன்று மணிக்கு ஆட்கள் வருவார்களாம் பிரியாணி தயார் பண்ண.காலை பத்து மணிக்கு சிக்கன் பிரியாணி ரெடியாகி விடுமாம்.மட்டன் பிரியாணி 11 மணிக்கு ரெடியாகிவிடுமாம்.இரண்டு டூ மூன்று மணிக்குள் எல்லாம் தீர்ந்து விடுமாம்.பிறகு கடையை பூட்டிவிட்டு சென்று விடுவார்களாம்.பிரியாணி சுடச்சுட கிடைக்கும்.அதில் இருக்கும் மட்டன் துண்டுகள் குறைந்தது 12க்கும் மேல் இருக்கும்.தால்ச்சா அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.சீரகசம்பா அரிசியில் பிரியாணி செம டேஸ்டாக இருக்கும்.விலையும் குறைவு தான் என சொல்லி எனக்கு ஹைப் ஏத்திக்கொண்டிருந்தார்.கேட்க கேட்க பகார்டியின் சுவை குறைய ஆரம்பிக்க, அவ்வப்போது ரீசார்ஜ் ஏத்திக்கொண்டிருந்தேன்.
                        அடுத்த நாள் காலை எப்பவும் போல விடிந்தது.மிச்சமிருந்த பகார்டியை காலி செய்து விட்டு கரெக்டாக பத்து மணிக்கு கடையை அடைந்தோம்.காரை விட்டு இறங்கியவுடன் பிரியாணியின் வாசம் மூக்கைத் துளைத்தது.அப்பொழுதே கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது.கடைக்கு சின்னதாய் ஒரு போர்டு.திண்டுக்கல் பிரியாணி என்று.கடை என்றால் ஒரு கடை அல்ல.கிட்டத்தட்ட பத்து கடைகள் வரிசையாய் சேர்ந்த இடம். ஒவ்வொரு கடையும் சின்ன இடம் தான்.முதல் கடையில் தயிர் பச்சடி ரெடியாகிக் கொண்டிருந்தது. அடுத்தக் கடையில் பிரியாணி பார்சல், இன்னொரு கடையில் பிரியாணி வெந்துகொண்டிருந்தது, அதே மாதிரி சில்லி சிக்கன் பொரிப்பது, விறகு அடுக்கிவைத்து இருப்பது, இஞ்சி பூண்டு உரிப்பது என ஒவ்வொரு கடையிலும் ஏதோ ஒன்று நடை பெற்றுக்கொண்டிருந்தது.
                        மக்கள் பிரியாணியை சுடச்சுட வாங்கி ஓரமாய் ஒதுங்கி  நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
நாங்களும் எங்கள் பங்குக்கு பிரியாணியை வாங்க, இளம் சூட்டுடன் வாழை இலையில் மணம் பரப்பி சீரகசம்பா பிரியாணி எங்கள் கை வைப்பதற்காக காத்துக்கிடந்தது.
                    பிரியாணியை ஒரு விள்ளல் எடுத்து சாப்பிட,ஆஹா..என்ன சுவை.,.சம்பா அரிசியில் மட்டன் மணமும், பிரியாணி மசாலாவின் சுவையும் கலந்து இருக்க, கை தன்னிச்சையாய் எடுத்து வாய்க்கு கொடுக்க, பிரியாணி யானது நாவின் சுவை நரம்புகளை மீட்டிக்கொண்டிருந்தது.மட்டன் துண்டுகள் பிரியாணியில் பாதி இருக்கும் போல.அவ்வளவு துண்டுகள்.ஒரு விள்ளல் பிரியாணி எடுத்தால் அதில் ஒரு துண்டு மட்டன் இருக்கும்.மசாலாவில் வதக்கிய எலும்பே இல்லாத மட்டன் துண்டுகள் பஞ்சு போல் இருக்க, சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.
                      தால்ச்சா செம.எலும்புத்துண்டுகளை வாயில் போட்டு மென்றால் நன்கு மாவு மாதிரி கரைகிறது.அந்தளவுக்கு நன்று வெந்திருக்கிறது.எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜையை உறிஞ்சியும், கடித்தும் மென்னும் சாப்பிடும் போது நாமும் ஒரு ராஜ்கிரண் ஆகிறோம்.தால்ச்சா குண்டாவில் தீரத்தீர ஒருவர் வாளி வாளியாய் மொண்டு ஊற்றுகிறார்.
                    ஒவ்வொரு அரிசியிலும் பிரியாணி மசாலா கலந்து இருக்கிறது. தனித்தனியாய் உதிர்ந்து இருக்கிறது சம்பா அரிசி.சாப்பிட சாப்பிட சுவை அதிகமாகிக்கொண்டே போகிறது.சீக்கிரம் தட்டும் காலியாகிவிட, மீண்டும் இன்னொரு பிரியாணி வாங்கி அதையும் பொறுமையாய் ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு கை கழுவ பிரியாணியின் மணமும் சுவையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.நேரம் ஆக ஆக கூட்டம் கூடுகிறது. பிரியாணியும் சீக்கிரம் தீர்ந்துகொண்டு இருக்கிறது.
                            பிரியாணியின் விலை ரூ 80 தான்.இவ்வளவு விலை குறைவாய், மிக டேஸ்டியாய் யாராலும் தரமுடியாது.சுவை என்பது 100 % உத்திரவாதம்.அதே போல் சில்லி சிக்கன் ரூ 20 மட்டும்.அதிகம் துண்டுகள் இருக்கின்றன.ஒரு பிரியாணி ஒரு சில்லி வாங்கினால் மிக திருப்தியாக இருக்கும்.
        இந்த கடையைப்பற்றி நிறைய வதந்திகள் உலா வருகின்றன.மாட்டிறைச்சி கலக்கிறார்கள் என்று.நிச்சயமாய் இல்லை.எங்கள் பிரியாணியில் இருக்கும் இறைச்சியை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று அடித்து கூறிவிட்டாராம் கடை ஓனர்.இந்தக்கடையில் சுவை காரணமாக, நிறைய கடைகள் தங்கள் லாபத்தினை இழந்து விட்டன.மேலும் இந்தக்கடையை காலி பண்ண வைப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார்களாம்.ஆனால் முடியவில்லை.எங்கு நல்ல சுவை இருந்தாலும் அதை ஆதரிப்பார்கள் உணவுப்பிரியர்கள்.
                இந்தக்கடையில் உள்ள ஒரே ஒரு குறை பார்சல் மட்டும் பிளாஸ்டிக் பேப்பரில் கட்டி தருகிறார்கள்.
                        கடை சின்னதாக இருப்பதால் உட்கார்ந்து சாப்பிட முடியாது.நின்று கொண்டு தான் சாப்பிடவேண்டும்.
                             திருச்சி போனால் கண்டிப்பாக டேஸ்ட் பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.ரயில்வே ஸ்டேசனில் இருந்து வெளியே வரும் போது இடது பக்கத்தில் இருக்கிறது இந்தக்கடை.
                    பிரியாணி ரசிகர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய பிரியாணி திண்டுக்கல் பிரியாணி.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Friday, August 9, 2013

சந்தையில் ஒரு நாள் - பொன்மலை , திருச்சி

திருச்சி, பொன்மலை, ஒரு ஞாயிற்றுக்கிழமை வேளை...ரொம்ப சிறப்பா கொண்டாடணும்னு காலையிலேயே ஆரம்பிச்சுட்டு ஒரு 7 மணி வாக்கில் கிளம்பினோம் சந்தைக்கு.கூட்டம் கூட ஆரம்பித்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே அம்மணிகள் தெரிய ஆரம்பித்தனர்.நிறைய பேர் தத்தம் குடும்பத்துடன் வந்திருந்தனர்.குழந்தைகளும் ஆர்வத்துடன் அனைத்தையும் அறியும் பொருட்டு வந்திருந்தனர்.எல்லாத்தையும் நோட்டம் விட்ட படியே மீன் வாங்கும் இடத்திற்கு சென்றோம்.வகை வகையான மீன்கள் வாடிக்கையாளர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது.இன்னிக்கு யார் வீட்டுல எந்த மீன் குழம்போ என யோசித்துக்கொண்டே கூட்டத்தில் ஐக்கியமானோம்.


ஒரு வேனில் உயிரோடு மீன்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தனர் ஆற்றில் பிடித்தது மட்டுமில்லாமல் இங்கு வேனிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.நம்ம காவிரி ஆத்து ஜிலேபி மீன் தான்.உயிரோட கிலோ 160.( செத்த மீன்களை யாரும் வாங்க மாட்டாங்க போல..)அதுக்கும் கூட்டம் அலை மோதுது.


பொறுமையா முதலில் ஒரு ரவுண்ட் வந்தோம் ஏற்கனவே ரவுண்ட் கட்டி இருப்பதால்...என்னென்ன மீன்கள் எவ்ளோ விலை என்பதை எல்லா கடையிலும் விசாரித்து கொண்டு எந்த கடையில் விலை குறைவாக இருக்கிறதோ அங்கு குவிந்தோம்.பாறை, வஞ்சிரம், நெய்மீன், நண்டு, இறால், வாவல், சங்கரா, ஜிலேபி, விரால், கெண்டை, என ஏகப்பட்ட வகைகள். வாழை இலையில் கும்பலாய் குவித்து வைக்கப்பட்டிருந்தன.



நெய் மீன் வாங்கினோம்.ஃபிங்கர் ஃபிஷ் ஃபிரை செய்வதற்காக...(அந்த செய்முறை யை போட்டோ எடுக்க மறந்துட்டேன் )



பொறிப்பதற்கு கிழங்கா மீன் வாங்கினோம்.விலை ரொம்ப சல்லிசாக இருக்கிறது.ஒன்னரை கிலோ 100 மட்டுமே.அப்புறம் சங்கரா மீன்.குழம்பு வைப்பதற்காக.அதுவும் விலை குறைவே..



மூன்று மீன்களையும் வாங்கி அங்கேயே ஒரு பையனிடம்  கொடுத்து சுத்தம் செய்து வாங்கினோம்.(கிலோவிற்கு 10/15 வாங்குகிறார்கள்.பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்) அப்புறம் அம்மணிகள் ஏரியாவான காய்கறி விற்கும் இடத்தில் சமையலுக்கு தேவையான மற்ற பொருட்களையும் வாங்கிவிட்டு நேரம் பார்க்க இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தது நம்ம கடை திறக்க.இப்போ கிளம்பினால் பார்சல் வாங்கிகொண்டு போக சரியாக இருக்கும் என்றெண்ணி கிளம்பினோம்.
அதுக்கப்புறம் என்ன..மீன் வேக வேக நாங்களும் வெந்து கொண்டிருந்தோம்.ஒரே மஜா தான்.


பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, July 25, 2013

கோவை மெஸ் - மைக்கேல் & சன்ஸ், ஐஸ்கிரீம், மலைக்கோட்டை, திருச்சி

                  சமீபத்தில திருச்சி போயிருந்தேன்.சாயந்திர நேரம் ஊர் சுத்தி பார்க்கலாமே அப்படின்னு கிளம்பி போன இடம் மலைக்கோட்டை பஜார் வீதி.வண்டியை ஓரமா ஓரங்கட்டிட்டு பொடி நடையா நடந்து போனதுல எவ்ளோ கலோரிகள் மனசுக்கும் உடம்புக்கும் கம்மியாகி போனது.பஜாரின் இருபுறங்களிலும் பேன்சி ஸ்டோர்கள் மற்றும் இன்ன பிற கடைகள்.கடையில் இருக்கிற பொருட்களை விட அதை வாங்க குவியும் அம்மணிகள் அதிகமாக இருக்கிறார்கள்.ஒட்டு மொத்த திருச்சியுமே இங்குதான் குவியும் போல அவ்ளோ கூட்டம்.

              ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் இருந்தாலும் சாரதாஸ் துணிக்கடையில் அம்புட்டு கூட்டம்.ஒரு பொதுக்கூட்டமே நடத்தலாம் போல...அவ்ளோ மக்கள்.பரந்து விரிந்த கடையினுள் எங்கும் மனித தலைகளே.அதிலும் அம்மணிகள் அதிகம்...குடும்பத்தோடு மூட்டை மூட்டையாய் வாங்கி வெளியேறிக்கொண்டிருந்தனர்.பார்த்து பிரமித்து போய் ஒரு டிரஸ் கூட எடுக்காமல் வெளியேறினேன்.(துணி எடுக்கவா உள்ளே போனது...?ஹிஹிஹி..).மனம் அடைந்த அயர்ச்சியில் உடல் கொண்ட தளர்ச்சியில் எதாவது உள்ளே தள்ளியாக வேண்டும் என்கிற ஆவலில் போன இடம் தான் நம்ம மைக்கேல் அண்ட் சன்ஸ்.
சின்ன கடைதான்.ஆடம்பரம் எதுவும் இல்லை.பழங்கால கட்டிடம் போலத்தான் இருக்கிறது.ஆனால் எப்பவும் போல உள்ளே கூட்டம் நிறைந்து இருக்கிறது.காத்திருந்து ஒரு டேபிளை ஆக்ரமித்தேன்.சுற்றும் முற்றும் பார்த்ததில் அம்மணிகள் அதிகமாகவே இருக்கின்றனர்.மனம் லேசானதை உணர்ந்த போது பேரர் வந்து நிற்க கடையின் பிரபலமான புரூட் சாலட் ஐஸ்கிரிமினை ஆர்டர் செய்தேன்.ஒரு சில்வர் கப்பினுள் சிவந்திருந்த புரூட்ஸ்களுடன் வெண்ணிலா ஐஸ்கிரிம் சேர்ந்து வர மிக சுவையாக இருந்தது.புரூட் சாலட்டில் நிறைய பழவகைகள் இருந்தாலும் அதிகம் தென்படுவது வாழைப்பழம் தான்.

ஆனால் மிக சுவையாக இருக்கிறது.மற்ற முண்ணனி பிராண்டுகளில் இருக்கிற சுவை இருக்காது.ஆனால் எப்பவும் போல ஒரே சுவையுடன் கிட்டதட்ட 30 வருடங்களுக்கும் மேலாக நடத்திக்கொண்டிருக்கிற ஒரே கடை இதுதான்.மிக குறைந்த விலையில் இன்னமும் தந்து கொண்டிருக்கின்றனர்.அவ்வப்போது ஒரு ரூபாய் ஏற்றுவார்கள் போல.1995 யில் 2.50 இருந்த புரூட் சாலட் இப்போது 7.00 யாக இருக்கிறது.ஆனால் அதே சுவை.வேறு எந்த பிராண்ட் ஐஸ்கிரீம்களும் இங்கு கிடைக்காது.அனைத்தும் சொந்த தயாரிப்பே..

         இந்த கடை அருகிலேயே நிறைய கடைகள் இருக்கின்றன.ஆனால் இங்கு மட்டுமே சுவையும் அதிகம்.கூட்டமும் அதிகம்.திருச்சி போனால் மறக்காமல் இங்கு ஒரு வருகையை போடுவது வாடிக்கையாகிவிட்டது.மலைக்கோட்டை பஜார் வாயில் எதிரே உள்ள போஸ்ட் ஆபிஸ் அருகில் இந்த கடை இருக்கிறது.பஜாரில் பர்ச்சேஸ்களை முடித்துவிட்டு களைத்து வரும் நபர்கள் அதிலும் அம்மணிகள் அதிகமாய் கூடும் இடமாக இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, May 28, 2012

முக்கொம்பு - சுற்றுலா தளம் - திருச்சி


முக்கொம்பு

திருச்சி அருகில் இருக்கிற ஒரு சுற்றுலா தளம் தான் இது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறாக இங்கு பிரிந்து செல்வதால் முக்கொம்பு என்று பெயர்.காவிரி ஆற்றின் குறுக்கே மேலணை என்ற அணை கட்டப்பட்டு இருக்கிறது. நீர் நிலையுடன் கூடிய ஒரு பொழுது போக்கு இடம்.காசு செலவில்லாமல் பொழுது போக்க கூடிய இடம்.அதனால தான் என்னவோ அதிக காதலர்கள் (இவங்க மட்டுமா...) கூடும் இடமா இருக்கு போல.சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் இடமாக இது இருக்கிறது.இரண்டு ஆறுகளுக்கு இடையில் பூங்கா வேற இருக்கிறது. இந்த பூங்காவில் இளவட்ட கல் ஒன்று இருக்கின்றது என நினைக்கிறேன். சிறுவயதில் கண்டு இருக்கிறேன்.இப்போ எங்கேனு தெரியல.அணையின் மறுபக்கம் வாத்தலை என்ற ஊர் இருக்கிறது. ஓடும் ஆற்றின் அழகை அணையில் நடந்து செல்லும் போது ரசிக்கலாம்.

நிறைய மரங்கள் பசுமையுடன் ..அதுவும் நம்ம முன்னோர்களுடன்.நம்மள விட இவங்க தான் அதிகமா இருக்காங்க.அப்புறம் கட்டுசோறு கட்டி இங்க வந்து சாப்பிடற ஆளுகளை இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு..ஆனாலும் இதுவும் ஒரு அனுபவமே..



திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முக்கொம்பு இருக்கிறது இருபது கிலோமீட்டர் இருக்கும்.நல்ல அருமையான சுற்றுலா தளம்..

கிசுகிசு: எங்க குலதெய்வ கோவில் முக்கொம்பு பக்கத்துல தான் இருக்கு.எப்போலாம் கோவிலுக்கு போறோமோ அப்போலாம் கண்டிப்பா போய்ட்டு வருவோம்.அப்புறம் திருச்சில இருந்த போது நண்பர்களுடன் வந்து சென்றது எல்லாம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.போன வாரம் திருச்சி செல்லுபோது ஒரு விசிட் விட்டேன் எதுக்குன்னா...ஒரு பதிவு தேத்த...
ஏன்னா.....இன்னிக்கு நான் ஒரு பதிவர் (.....?) ஹி..ஹி ஹி ......அதான் ஒரு பதிவ போட்டுட்டேன்...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 







இன்னும் கொஞ்சம்...

Friday, July 8, 2011

மலைக்கோட்டை - திருச்சி

நம்ம விஷால் நடிச்ச படத்தோட விமர்சனம், இந்த படம் எப்போவோ ரிலீஸ் ஆச்சே..இப்போ போய் பதிவா அப்படின்னு நினைச்சி விடாதீங்க ..திருச்சி யில் உள்ள மலைக்கோட்டை...எப்பவும் பரபர காணப்படும் பர்மா பஜார் இங்குதான் உள்ளது.பெண்கள் குறிப்பா கல்லூரி மங்கைகளின் வேடந்தாங்கலாக இந்த பர்மா பஜார் இருக்கிறது.அவர்களுக்கு தேவையான வளையல் , தோடு , ஹேர் கிளிப் இது மாதிரி லேட்டஸ்ட் பொருட்கள் அனைத்தும் குவிந்து கிடக்கின்றன.(சும்மா கிடைக்காது ..விலைக்குத்தான் )அலைமோதும் கூட்டம், பரபரப்பான விற்பனை என களை கட்டுகிறது.அப்புறம் இந்தியாவிலேயே மிக பெரிய ஜவுளி மாளிகை என சொல்லப்படுகின்ற சாரதா சில்க்ஸ் இங்கு தான் உள்ளது.மலைகோட்டை அடிவாரத்தில் மிகவும் விஸ்தாரமாய் அமைந்துள்ளது.வெளிநாட்டு பொருட்கள் அனைத்தும் இந்த பர்மா பஜாரில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.அருகிலேயே தெப்பக்குளம் இருக்கிறது.சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மற்றும் புகழ் வாய்ந்த சர்ச் ஒன்றும் உள்ளது.


இன்னும் கொஞ்சம்...

Sunday, July 3, 2011

கோவை மெஸ் - மைக்கேல் அண்ட் சன்ஸ் - ஐஸ் க்ரீம் கடை - திருச்சி

 மைக்கேல் அண்ட் சன்ஸ் - நாவிற்கு இனிய ஐஸ் க்ரீம்
திருச்சி மாநகரின் மலைக்கோட்டை நுழை வாயிலின் எதிரே அமைந்துள்ள ஒரு ஐஸ்கிரீம் கடை.ஆனால் மிகவும் பாரம்பரியம் மிக்க கடை.30 வருடங்களுக்கு மேல் நடை பெற்று கொண்டு வரும் கடை..மிகவும் சுவையுடன் இங்கு அனைத்து வகை ஐஸ் கிரீம் களும் கிடைக்கும்.விலை மிகவும் குறைவு.இந்த கடையில் புருட் சாலட் ஐஸ் கிரீம் மிகவும் பேமஸ்.எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.



நான் 1995 திருச்சி யில் படிக்கும் போது ஐஸ் கிரீம் விலை 2 .50 இப்போ 6 .00 .மிகவும் குறைந்த விலை.தரமோ அதிகம்.சொந்த தயாரிப்பில் இவர்கள் இந்த விலையில் தருகின்றனர்.வேறு எந்த பிராண்ட் வகைகளும் இவர்களிடத்தில் இல்லை..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Monday, March 7, 2011

சந்தைக்கு வந்த கிளி - பொன்மலை திருச்சி

நம்ம தலைவர் பாட்டு பத்தின பதிவு இல்ல .திருச்சி பொன்மலை ல நடந்த சந்தைக்கு போனேன்

.நம்ம கிராமத்து நினைவுகளை கிள்ளி பார்த்து விட்டது .அப்புறம் நிறைய உள்ளூர் வியாபாரிகள் கடை பரப்பியிருந்தனர்.அதிலும் ஏகப்பட்ட உயிரினங்களோட விற்பனைதான் அதிகம் இருந்தது .வாத்து, கோழி , புறா, கிளி, முயல்,காடை, கௌதாரி அப்படின்னு ...நல்ல கூட்டம் ( மக்களும்தான் )





மீன் கடை நிறைய இருந்தது.நல்ல வகை வகையான மீன்கள், வாவல், திருக்கை , விரால், இறால், நண்டு, ஆரான், அப்படின்னு நிறைய ....விலையும் கம்மியா தான் இருந்தது.


நாங்களும் எங்க பங்குக்கு ஒரு சில மீன்களை வாங்கி வந்தோம் ..வீட்டுல ஒரே மீன் வாசம்...நல்ல சுவையா சாப்பிட்டோம் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...