Thursday, July 28, 2016

கோவில் குளம் - அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலம் திருவண்ணாமலை

      சமீபத்துல திருவண்ணாமலை போயிருந்தேன்.அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலமும் சென்று வந்திருந்தேன். திருவண்ணாமலையில் கோபுரங்கள், ஆலயங்கள், கருவறைகள் அனைத்தும் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றன.அதனால் பரந்து விரிந்த அண்ணாமலையார் கோவில் எங்கும் சாரம் கட்டப்பட்டு தீவிரமாய் பணி நடந்து கொண்டிருக்கிறது.அதே சமயம் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஆண்டவனின் தரிசனமும் கிடைக்கிறது. பிரம்மாண்ட கோவில் கோபுரம் முன்பு கடை கண்ணிகள் எப்பவும் போல நிறைந்திருக்கின்றன.



கிரிவலம்:
மொத்த கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் இருக்கும்.மலையைச்சுற்றி ஒவ்வொரு திசையிலும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன.கிரிவலம் வருபவர்கள் இந்த அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்து பின் அண்ணாமலையாரை வேண்டினால் பாவங்கள் போய் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும்  அஷ்டலிங்கங்கள்:
இந்திரலிங்கம்  
அக்னி லிங்கம்
எம லிங்கம்
நிருதிலிங்கம்
வருண லிங்கம்
வாயு லிங்கம்
குபேரலிங்கம்
ஈசானிய லிங்கம்
இதன் சிறப்பு என்னவெனில்
            பிரம்மலோகத்தில் பிரம்ம தேவனால் சாபம் பெற்ற அஷ்டதிக் பாலகர்கள் தம் சாபம் நிவர்த்தி பெற இந்த மலையைச் சுற்றி எட்டுத்திக்கில் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து கடும் தவம் இயற்றி வழிபாடு செய்தார்கள்.இவர்கள் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன், ஈசானன் ஆவார்கள்.இந்த அஷ்டதிக் பாலகர்கள் தங்கள் சாபம் நிவர்த்தி பெற இத்தலத்தில் எட்டுத்திக்கில் அமர்ந்து இம்மலையை நோக்கி கடும் தவம் புரிந்தனர்,இவர்களின் கடும் தவத்தால் இந்த மலை அவர்களுக்கு எட்டு முகமாக காட்சியளித்து, அவர்களின் சாபத்தினை நிவர்த்தி செய்து, இந்த அஷ்டதிக் பாலகர்கள் அஷ்டதிக்கில் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அந்த லிங்கங்கள் அவரவர் பெயரிலேயே வழிபடப்பட்டு வருகிறது.
இந்த அஷ்டலிங்கங்களை நடந்து தரிசனம் செய்தால் கர்மவினை அகலும்.




கிரிவலம் வர ஏற்ற நாட்கள்:
அனைத்து மாதத்திலும் கிரிவலம் வரலாம். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். அனைத்து விசேச தினங்களிலும் கிரிவலம் வரலாம்.
அதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அ‌த்தனை ‌சிற‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று மு‌‌ற்ற‌ம் உண‌ர்‌ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்‌கி‌ன்றன‌ர்.
                   ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.


ஓம் நமச்சிவாய….ஓம் நமச்சிவாய….

                கிரிவலப்பாதையில் ஏழாவது லிங்கமான குபேரலிங்கத்தினை வழிபட்டவுடன் அடுத்து ஒரு கோவில் இருக்கிறது.இடுக்கு பிள்ளையார் கோவில்.ஒரு சின்ன இடுக்கு மூலம் உள்ளே நுழைந்து வெளியே வரவேண்டும்.கைகால் வலி, இடுப்பு வலி, போன்றவை தீரும் என்பது ஐதீகம்.கிரிவலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு கால் வலி, இடுப்பு வலி ஆகியன வந்திருக்கும். இந்த இடுக்கு பிள்ளையாரை தரிசித்தால் நிச்சயம் நிவாரணம் பெறலாம். எனக்கு கடைசியாக நடக்க முடியவில்லை.இந்த இடுக்குபிள்ளையாரை தரிசித்தவுடன் இன்னும் ஒரு சுற்று போய் வரலாம் என்கிற நம்பிக்கையை தந்தது.

ஓம் நமச்சிவாய….ஓம் நமச்சிவாய….

இன்னும் ஒரு ஆறு மாதங்கள் கழித்து சென்றால் கோவில் புதுப்பொலிவுடன் இருக்கும்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....