Showing posts with label பலகாரக்கடை. Show all posts
Showing posts with label பலகாரக்கடை. Show all posts

Monday, January 2, 2017

கோவை மெஸ் - தேங்காய்ப்பால்- நெல்லை விநாயகா பலகாரக்கடை, ஒண்டிப்புதூர், கோவை

                          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்                               ***********************************************
                      சமீபத்தில் ஒரு வேலை விசயமாக ஒண்டிப்புதூர் சென்றிருந்த போது நேரமோ மதியத்தை தொட இருக்க, லேசாய் பசிக்க ஆரம்பித்தது.கூட வந்த நண்பரிடம் ஏதாவது சினேக்ஸ் மாதிரி சாப்பிடலாமான்னு கேட்க, அவரோ இங்க ஒரு கடையில் தேங்காய்ப்பால், வடை, போண்டா நல்லா இருக்கும் சாப்பிடலாமா என கேட்க, சரி என்று சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கடைக்கு முன்னாடி வண்டியை பார்க் பண்ணியிருந்தோம்.
                              ஒண்டிப்புதூர் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த நெல்லை விநாயகா பலகார ஸ்டால்.ஆஸ்பெஸ்டால் கூரை வேயப்பட்டு, பழைய கால கட்டிடம் போல் இருக்கிறது.கடையினுள் பிளாஸ்டிக் டேபிள்கள் சேர்கள் போடப்பட்டு இருக்கின்றன.வாடிக்கையாளர்கள் பலகாரங்களை ருசித்துக் கொண்டிருக்க,உள்ளே தேங்காய்ப்பால் ஒரு பெரிய போவணியில் சுடுதண்ணீர் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.கடையின் உட்புறமே வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்க கடைக்காரர் பலகாரங்களை சுட்டுக் கொண்டிருந்தார்.
                கடையின் ஷோகேசில் இருந்த பலகாரங்கள் வடை, போண்டா பஜ்ஜி என பல வெரைட்டிகள் பல வாடிக்கையாளர்களின் பசியை தீர்த்துக்கொண்டிருக்க, அவ்வப்போது காலியாகிக் கொண்டிருக்கும் ஷோகேசில் சுடச்சுட சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார் கடைக்காரர்.
                     நண்பருக்கு கடைக்காரர் தெரிந்தபடியால்  நலம் விசாரித்து விட்டு சூடாக வடை, பஜ்ஜியை பேப்பரில் மடித்து கொடுக்க, டேபிளில் அமர்ந்து சுவைக்க ஆரம்பித்தோம்.சிறிது நேரத்தில்  சூடாய்  ஆவி பறக்க தேங்காய்ப்பால் டேபிளுக்கு வர, எடுத்து சுவைத்ததில் தேங்காய்ப்பாலின் டேஸ்ட், நாவின் நரம்புகளை சுடச்சுட மீட்டி எடுத்தது.



        இன்னொரு மிடக்கு குடித்ததில் சின்னம்மாவுக்கு அடிமையாகிப்போன தொண்டர்களைப்போல் நாக்கு வளைந்து கொடுத்தது.பாலின் இடையிடையிடையே வரும் தேங்காய்த்துருவலும், உளுந்தம்பருப்பும் இன்னும் சுவையை அதிகப்படுத்தியது.
ஒரு கடி வடை மற்றும் கொஞ்சம் தேங்காய்ப்பால் என இரண்டும் கலந்து சாப்பிட டேஸ்ட் இன்னும் அதிகமானது.சுடச்சுட தேங்காய்ப்பாலும் வடையும் சாப்பிட்டு முடிக்க வயிறும் மனதும் நிறைந்தது.

பலகாரங்களை செய்தி பேப்பரில் தான் கொடுக்கிறார்கள்.பலகாரங்களில் உள்ள எண்ணைய் பில்டர் செய்ய பயன்பட்டாலும் இது கெடுதல் என்றும், பேப்பருக்கு பதில் சில்வர் தட்டுகளை  தரும்படியும் சொல்லிவிட்டு பலகாரங்களுக்கு உண்டான தொகையை கொடுத்து விட்டு வெளியேறினோம்.
அந்தப்பக்கம் போனா தேங்காய்ப்பாலை ருசிக்க மறந்து விடாதீர்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 25, 2015

கோவை மெஸ் - பலகாரக்கடை, தள்ளுவண்டிக்கடை, காந்திபுரம், கோவை

             காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டுல இருந்து 100 அடி ரோட்டுக்கு செல்ல ஒன்றிலிருந்து 12 வரைக்கும் பல வீதிகள் இருக்கு.இதுல முதல் 7 வீதிகளில் செல்போன் கடைகளும், பிரிண்ட் பிரஸ்களும் இருக்கு.இந்த வீதிகளில் எண்ணிப்பார்த்தா ஐநூறுக்கும் மேற்பட்ட மொபைல் ஷாப்கள், பிரிண்ட் பிரஸ்கள் தான் இருக்கும்.பேக்கரி மொத்தம் பத்துலிருந்து 15க்குள்ள தான் இருக்கும்.ஒரு மாலை நேரத்தில் ஸ்னேக்ஸ் மாதிரி சாப்பிடனும்னா ஒண்ணும் இருக்காது.பேக்கரியில் தேங்காய்ப்பன்னும், எப்பவோ போட்ட முட்டை பப்ஸ்தான் இருக்கும்.அது நல்லாவே இருக்காது வேற....
                சாயங்கால நேரத்தில் மழை மெலிதா தூறும் போது சூடாய் ஏதாவது பலகாரம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்.அந்த மெல்லிய மண் வாசனையில், பலகாரங்களின் வாசனை மூக்கைத்துளைத்தால் எப்படி இருக்கும்...எண்ணெயில் பொரியும் கடலை மாவின் வாசனை, அதன் கூட வேகும் வெங்காயமோ, வாழைக்காயோ, அதன் சுவை எட்டுத்திக்கும் பரவி நம் மூக்கினை அடைந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட சுகானுபவத்தினை தருவது தான் இந்த தள்ளுவண்டிக்கடை... 



              காந்திபுரம் இரண்டாவது வீதிக்கும் மூணாவது வீதிக்கும் நடுவுல ஒரு ஜங்சன் இருக்கு.அந்த ஜங்சன் ரோட்டுல ஒரு வயதான பெண்மணி வடை போண்டா, பஜ்ஜி, முட்டைப்போண்டா என பலவித பலகாரங்கள் போட்டு விற்கின்றார்.நான் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்...எனக்கு அங்கு அதிகம் பிடித்த பலகாரம் என்னவெனில் முட்டை போண்டாதான்.வெந்த அரைமுட்டையை பஜ்ஜி மாவில் நன்கு தோய்த்து எண்ணையில் பொரித்து சுடச்சுட ஆவி பறக்க தட்டில் வைக்கும் போது அந்த போண்டாவின் கடலைமாவு சுவை நம் நாசியில் பரவும் பாருங்கள்.....அது சொர்க்கம்...
                             அந்த முட்டைப்போண்டாவை இரண்டாக பிளந்து சட்னி ஊற்றி தருவார்கள்...அந்த முட்டைப் போண்டாவை சுடச்சுட பிய்த்து அவர்கள் தரும் சட்னியில் தொட்டு சாப்பிட... ஆஹா....ஆஹா... அற்புதம்.ஒட்டுமொத்த நரம்புகளும் சுவை அரும்புகளை இன்னும் முளைக்கவிடும்..மீண்டும் இன்னொரு துண்டை சட்னியில் தொட்டு சாப்பிட இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பிக்கும் சுவை அரும்புகள்....
அப்புறம், வடை, போண்டா, பஜ்ஜி என ஒவ்வொரு அயிட்ட்த்திலும் ஒவ்வொன்றாய் டேஸ்ட் பண்ணி சாப்பிட்டுவிட்டு கை கழுவினால் மனமும் வயிறும் நிறைந்திருக்கும்...
                 அங்கு சாப்பிடும் நேரத்தில் பேச்சு கொடுப்பேன் அந்த பெண்மணியிடம்...கிட்டத்தட்ட 33 வருடங்கள் ஆகிவிட்டதாம் இந்தக்கடை போட்டு.....ஒரே இடத்தில் இன்று வரை தள்ளுவண்டிக்கடை தான் நடத்தி வருகிறார்கள்..சொந்த ஊர் மதுரையாம்..வேலை பிழைப்புக்காக இங்கு வந்தபோது கணவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடை போட ஆரம்பித்தவர், இன்று தன் மூன்று மகள்களுக்கு நல்ல இடத்தில் நகை நட்டு போட்டு கல்யாணம் செய்து வைத்து இருக்கிறாராம். இப்பொழுது தன் மகனுக்கு ஒரு பிரான்ச் ஒன்றை போட்டு கொடுத்து இருக்கிறார் கல்யாண் சில்க்ஸ் பின்புறம் கார்ப்பரேசன் கடைகள் உள்ள சந்தில்...
             விலை குறைவாகத்தான் இருக்கும் எப்பவும் அவரிடம்.இரண்டு வடை/ போண்டா ஐந்து ரூபாய்.டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்...
அந்தப்பக்கம் போனாலோ வந்தாலோ சாப்பிட்டு பாருங்கள்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...